ஆசிரியர் மடல்.... . புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 ஜனுவரி
கிறிஸ்தவுக்குள் அருமையான வாசகர்களுக்கு அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2021ஆம் வருட புது வருடத்திலே, பற்பல வாக்குத்தத்தங்களை பற்பல இடங்களிலிருந்தும் பற்பல வகைகளிலும் பெற்றிருப்பீர்கள். யாவும் மிகவும் நல்லவைகளே. ஏனெனில் இவை யாவுமே வேத வசனங்களே. ஆண்டவர் தாமே மனுமக்களாகிய நமக்கு அளித்த சிறப்பு மிக்க பரிசு (Gift) வேதபுத்தகம் மாத்திரமே. “உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி” சங்கீதம் 119:77 இன்று நம்மில் அநேகர் தங்கள் வீடுகளிலும் வாகனங்களிலும் “God's Gift” என்று எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அன்னார்களுக்கு ஆண்டவர் அளித்த அதிலும் மேன்மையான பரிசு (Gift) தேவனானவர் தன் ஒரே பேரான குமாரனை இப்பூமிக்கு அனுப்பி, மனுமக்களுக்கான பாவமன்னிப்பின் இரட்சிப்பினை ஏற்படுத்த தம் இரத்தத்தை சிலுவையிலே சிந்தப்பண்ணினதே உண்மையான, நித்திய காலத்திற்கான பரிசாகும். இதன்மூலம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்திற்கு சொல்வது நான் உன்னை இவ்வளவாய் நேசிக்கிறேன். “I love you so that much” என்பது மட்டுமே.
ஆண்டவர் இப்புத்தாண்டுக்கு மட்டுமல்ல, எல்லா நாட்களுக்கும் நம் யாவருக்குமாக, நிரந்தரமாக அளிக்கும் ஒரே வாக்கு “நீ என் தாசன் இஸ்ரவேலே நான் உன்னில் மகிமைப்படுவேன்.” ஏசாயா 49:3 இதை விட சிறந்த எந்த வாக்குத்தத்தையும் ஒரு போதகரும், ஒரு சீனியர் பாஸ்டரும், எந்த சபைக்கும், யாருக்கும் அளிக்கவே முடியாது. ஆனால் வழக்கத்தின்படிக்கு, ஒவ்வொரு சபைகளிலும் அளிக்கப்படும் வருடாந்தர மாதாந்தர வாக்குத்தத்தங்கள் யாவுமே அந்தெந்த ஊழியர்களால் அல்லது அவ்வூழிய சங்கத்தினர்களால் தீர்மானிக்கப்படும் வாக்குத்தத்தங்கள் மட்டுமே ஆகும். இன்னும் உண்மையாய் கூற வேண்டுமானால், சகல ஊழியர்களும் ஆண்டவரிடம் ஜெபிப்பது ஆண்டவரே இப்புத்தாண்டிலே ஜனங்கள் யாவரும் விரும்பத்தக்கதான ஒரு நல்ல வாக்கை தனக்கு காண்பியும் என்று கெஞ்சி ஜெபித்து பெற்றிருக்கக்கூடும். இவை யாவுமே சுயமகிமைக்கானவைகளே. சபைகளை பெருமையாய் வெளிப்படுத்தி காண்பிப்பதற்காகவே இந்த உண்மையையே எங்கும் காணமுடிகின்றது. ஆண்டவர் தம் மக்களை அவ்வப்போது அளிக்கப்படும் வாக்குத்தத்தங்கள் மூலம் மட்டுமே ஆசீர்வதிக்கின்றார் என்பது தவறானதே.
இஸ்ரவேலே ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்டபோது அவன் முந்திச் செய்து வந்தது போல நிமித்தம் பார்க்கப் போகாமல் என்று தான் எண்.24:1யில் வாசிக்கின்றோம். இந்த உண்மையை எந்த ஊழியர்களும், ஜனங்களை பொதுவாக விளங்கச் செய்வதில்லை. இந்த உண்மையை அறிந்த ஒரு ஊழியர் இவ்விதமாய் தான் விரும்பிய வாக்கை தன் சபைக்கு கொடுக்க இவ்வாறாக கூறினார் Our God wants to add His promise. ஆசீர்வாதம் கூடகூடவே கொடுக்க விரும்பும் ஆண்டவர் நம் ஆண்டவர் என்று கூறினார். சந்தையில் ஒரு பொருளை (கடலையை) வாங்கும் போது கடைக்காரரிடம், கொஞ்சம் கூட்டி, கூடுதலாய் கொடுங்கள் என்று கேட்டு பெறுவதைப் போன்று நம் ஆண்டவர் கடலை வியாபாரி அல்ல. “கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்” சங்கீதம் 115:12 என்பதே உண்மை . ஆனால் ஆண்டவர் யாரை ஆசீர்வதிப்பார்? இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம். யார் இஸ்ரவேலர்? அந்நாட்களில் கர்த்தர் சகல உலக மக்களுக்குள் தனக்கென்று ஒரு ஜாதியினரை புறஜாதிமக்களிடையேயிருந்து பிரித்து எடுத்தார் அவர்களே இஸ்ரவேலர் அதுபோன்றே இந்நாட்களில் ஆண்டவருக்கென்று இவ்வுலகத்தினின்று பிரித்தெடுக்கப்பட்டவர்களாய் வாழ்ந்திடும் யாவரும் இஸ்ரவேலரே ஆவர். அவர்களை ஆசீர்வதிப்பதே ஆண்டவருக்கு என்றும் பிரியம்.
ஒரு தகப்பனுடைய ஆசீர்வாதம் அவன் பிள்ளைக்கு நிச்சயம் உண்டு. அதன்படிக்கு நாம் யாவரும் தேவனுடைய பிள்ளைகளா? அல்லவே அல்ல. தேவன் தானே மனிதனை சிருஷ்டித்தார். அதனால் யாவரும் தேவனுடைய பிள்ளைகளாகி விட கூடுமோ கூடாதே (There is difference between fatherhood and creation) தேவன் இவ்வுலகில் காணும் யாவற்றினையும் சிருஷ்டித்துள்ளார். சூரியன், பூமி, நட்சத்திரங்களும் உண்டு. இவற்றினை ஆண்டவர் தாமே ஆளுகையும் செய்கின்றார். ஆகையினால் ஆண்டவரால் சிருஷ்டிக்கப்பட்ட தாவரங்களும் மிருகங்களும் கர்த்தரை என் தகப்பனே என்று அழைத்திடக் கூடுமோ கூடாதே. அதுபோன்று அப்பா, பிதாவே என்று ஆண்டவரை அழைப்பவர்களும் தகப்பனே என்று மட்டுமே ஜெபிக்க உரிமைபெற்ற மக்களே ஆண்டவரின் சொந்தப்பிள்ளைகளாவார்கள். இயேசுவின் குடும்பத்திற்குள் ஒருவராய் உருவாகிட வேண்டுமே இவர்களே ஆண்டவரின் தாசர்கள் எனப்படுவார்கள். இவர்களை மட்டுமே ஆசீர்வதிப்பது ஆண்டவருக்கு பிரியம். தாசர்கள் அல்லாதவர்களை, போதகர்களின் வாக்குத்தத்தங்கள் ஆசீர்வதித்திடக்கூடவே கூடாது. கெட்ட குமாரன் சம்பவத்திலே, இளையவன் மனந்திரும்பி தகப்பனிடம் மகனாக வரும் போது அவன் கேட்காமலே கூடுதலான ஆசீர்வாதங்களாக, மோதிரம், பாதரட்சை, புது வஸ்திரம் ஆண்டவரே கொடுக்கின்றார். இதற்கு எந்த போதகரின் சிபாரிசும் தேவையில்லையே. காகத்தின் கூண்டில் பருந்து, கழுகு அல்லது மைனா ஒன்று தன் முட்டையையிட்டு அது பொரித்து குஞ்சாக வெளிவந்தாலும் அது காகத்தின் குஞ்சாகிட முடியாதே. ஆனால் இங்கே மூத்தகுமாரனோ, தன் தகப்பனிடம் (so called) கூடுதலான ஆசீர்வாதங்களை தனக்குத் தரவில்லையே என்று கேட்கையில் தகப்பன் கூறியது என்ன? “மகனே நீ எப்போதும் என்னோடிருக்கிறாய் எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.” (லூக்.15:31) என்றாரே. இதைவிட எந்த பெரிய ஆசீர்வாதங்களை, போதகர்கள் தம் சபை மக்களுக்கு கூடுதலாக அளித்திடக்கூடும்? ஆண்டவருடையதெல்லாம் என்பதினை இக்காலத்து போதகர்கள் எவரும் அறியவில்லையா? ஆண்டவருடையது என்பதெல்லாம் பரலோகமும் உள் அடங்குமே. இவையெல்லாம் யாருக்கு? ஆண்டவரால் மகனே என்று அழைக்கப்படுகிறவர்களுக்கு மட்டுமே. அந்த மகனே தன் தகப்பனோடு என்றும் இருக்கின்றான்.
ஆண்டவர் மக்களை சிருஷ்டித்ததினால் அவர்கள் ஆண்டவரின் பிள்ளைகளாக மாறிவிட முடியாது. எல்லா மக்களுக்கும் மிருகங்களுக்கும், சகல வானத்து கிரகங்களுக்கும் ஆண்டவர் சிருஷ்டிகரே. ஆனால் தாவீது கூறுகின்றார் சங்.119:73 “உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி என்னை உருவாக்கிற்று” என்று. ஆண்டவரால் சிருஷ்டிக்கப்படுவது வேறு உருவாக்கப்படுவது வேறு. சகலமும் ஆண்டவரால் சிருஷ்டிக்கப்பட்டது உண்மையே ஆனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களுள் சிலர் பேர் தானே குயவனால் அவருக்கேற்ற பாத்திரங்களாக உருவாக்கப்படுகிறார்கள். இவ்வாறாக உருவாக்கப்பட்டவர்கள் மாத்திரமே தேவனை தகப்பனே, அப்பா, பிதாவே என்று அழைக்க அந்த புத்திர சுவிகாரத்தைப் பெற்றவர்களாகின்றனர். (ரோமர் 8:15) இந்த தகப்பனை மெய்யாகவே அறிந்து அவரிடம் சேர்ந்தவர்களுக்கு வேதபுத்தகமே முழு சொத்து, பொக்கிஷம் ஆகும். தாவீது தொடர்ந்து கூறுகின்றார். சங்கீதம் 119:73 உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். (76) நீர் உமது அடியேனுக்கு கொடுத்த உமது வாக்கின்படி உமது கிருபை என்னைத் தேற்றுவதாக (77) நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்கு கிடைப்பதாக. வேதம் என் மனமகிழ்ச்சி. வாழ்நாள் முழுவதுக்கும் வேதம் அளிக்கும் மேன்மையான ஆசீர்வாதங்கள் கிருபையும் இரக்கங்களுமே. இதற்கு மிஞ்சினது இவ்வுலகில் எதுவுமே இல்லை என்பதே உண்மை. அதுபோன்று பெரிய, பெரிய ஆவிக்குரிய சபைகளில், பருந்தாக இருந்து கொண்டு, காகத்தின் கூட்டில், தான் ஒரு குஞ்சாக பிறந்திருந்தாலும் அது பருந்து மாத்திரமே, காகம் ஆகிடமுடியாது அதுபோன்று ஆவிக்குரிய சபையிலே அக்கினி அபிஷேகம் பெற்றிருந்தாலும், அந்நிய பாஷை வரம் பெற்றிருந்தாலும் ஒரு பருந்தின் குஞ்சு சுபாவம் உள்ளவனுக்கு காகம் குடும்பத்தில் ஒரு காகமாக மாறிடமுடியாது. அவன் தன்னை தேவனுடைய புத்திரன் என்று உரிமை கொண்டாடிட முடியாது.
மேலும் வேதத்திலே ஆண்டவர்தாமே தம் பிள்ளைகளுக்கு அளித்திருக்கும் (Motto, Logo) குறிப்பீடு வாக்கு யாதெனில் கொலோ.4:2 "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்”
ஆகையினால் இப்புத்தாண்டிலே நம்முடைய சகல செய்கைகளிலும், ஊழியங்களிலும் ஆண்டவரை மாத்திரமே மகிமைப்படுத்தி வாழ்ந்திருப்போமாக. பொதுவாக ஊழியர்கள் தங்கள் தங்கள் ஊழியங்களை முடித்தவுடனே, மக்கள் இது போன்று கூறிட வேண்டுமே என்று எண்ணினவர்களாய் எதி்ர் பார்க்கின்றபோது, மக்களும் உங்கள் ஊழியம் பிரயோஜனமாயிருந்தது, உங்கள் ஜெபம் மிக அருமையாயிருந்தது, உங்கள் பாடல் என்னை உற்சாகப்படுத்தினது என்று கூறும் கூற்றெல்லாம் ஊழியர்களை மாத்திரமே மகிமைப்படுத்திக் கொள்கின்றதால் இவற்றிலே தேவனை மகிமைப்படுத்தினதாக அறிந்திட முடியவில்லையே. நீ என் தாசன் இஸ்ரவேலே நான் உன்னில் மகிமைப்படுவேன் என்பதில் ஆண்டவரின் மகிமையை எவரும் களவாடிடக் கூடாதே. சகலவற்றிலும் நாம் ஆண்டவருக்கு மட்டுமே மகிமை செலுத்திட வாழ்ந்திடுவோமாக. ஆகையால் ஆண்டவருக்குள் நாம் திருப்தியாய் காணப்படும்போது இவ்வாண்டிலே ஆண்டவரை மாத்திரம் மகிமைப்படுத்திட தவறவே வேண்டாம்.
நாம் கடந்து வரும் சகல பிரச்சனைகளின் மத்தியிலும் ஆண்டவரின் சித்தத்தை மட்டுமே இவ்வாண்டிலே செய்து முடிப்பதே பெரிதாயிருப்பதாக
. நாம் மிகவும் அதிகமாய் பாதுகாக்கப்பட்டு வருவது நாம் ஆண்டவரை பற்றுதலாய் பிடித்திருப்பதினால் அல்ல அவர் நம்மை பற்றுதலாய் பிடித்திருப்பதாலேயே.
நாம் கடந்த ஆண்டிற்குள் சென்று நாம் ஆரம்பித்ததனை மாற்றிட முடியாது. ஆனால் இவ்வாண்டில் தானே புதியதாய் ஆரம்பித்து, நம் முடிவினை நன்மையாய் முடித்திடக்கூடுமே.
நம்முடைய நல்ல நல்ல செய்கைகளெல்லாம் ஆண்டவரின் சித்தமாக ஆகிடாது. ஆனால் ஆண்டவரின் சித்தம் மாத்திரமே நல்ல செய்கையாக என்றும் நிறைவேறிடும்.
இப்புத்தாண்டிலே ஆண்டவரின் பரிபூரண ஆசீர்வாதங்களினால் நாம் நிறைந்திடப்படவும் ஆண்டவரின் மகிமைக்காக உருவாகிடப்படவும் நம்மை அர்ப்பணித்திடுவோமாக. ஆமென்.
சகோ. பிலிப்ஜெயசிங்.
நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்