பெண்கள் பகுதி (தேவ செய்தி)

 கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்த குடும்பம்


(தேவ செய்தி :-        சகோதரி  ஹேலன் ஷீன், கேரளா )


 "நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.” ஆதி. 6:8


இன்று நாம் கிருபையின் காலத்தில் வாழ்கின்றோம் என்று சொல்லிக் கொள்ளுகின்றோம். அது தவறல்ல; ஆகவே தான் நாம் பாவம் செய்கின்ற, போதும் நம்மை தேவன் அவருடைய மகா கிருபையினால் காத்துக் கொண்டு வருகின்றார். நாம் ஒவ்வொரு நாளும் அன்றாட காரியங்களைச் செய்கின்ற போதும் அதாவது நமக்கு நல்ல நித்திரையை தந்து, மறுபடியும் ஒரு காலை பொழுதைக் கூட காணச் செய்வதும் நாம் சாப்பிடும் போதும் உணவினால் எந்த ஆபத்துக்கும் நம் சரீரத்தை ஒப்புக் கொடுக்காமலும் நாம் நடக்கும் போதும், நாம் வாகனத்தில் போகும் போதும் நாம் வாகனம் ஓட்டும் போதும் நமக்கு எந்த ஆபத்துகளும் வராமல் காத்துக் கொள்ளுவதும் கிருபையே. இப்படியாகவே நம்முடைய எல்லா காரியங்களிலும் கிருபையால் காத்துக் கொள்ளுகிறார். ஆனால் இந்த காரியங்கள் அனைத்தும் தேவனுடைய கிருபையே என்பதை மறந்தவர்களாக உணர்வில்லாதவர்களாக அநேகர் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் உண்மை . சிலர் நினைப்பது என்னிடம் அதிகமான பணம், மிகுந்த செல்வ செழிப்பும் காணப்படுவதினால் நான் நல்ல வீட்டில் மிகுந்த பாதுகாப்புடன் வாழ்கின்றேன். நல்ல கட்டில் மெத்தையுள்ளதால் நன்றாக நித்திரை செய்கின்றேன். நான் அதிகமாக சம்பாதிப்பதினால் தான் உலகத்தில் இப்படி மற்றவர்களுக்கு முன்பாக அந்தஸ்துடன் (பெயர் புகழுடன்) வாழ்கின்றேன். நான் படித்தவள். அழகுடையவள், செல்வ செழிப்புடையவள். ஆகையால் நான் இந்த உலகத்தில் மதிப்புடன் காணப்படுகிறேன். என்னிடத்திலுள்ள கார் உயர்ந்த விலைமதிப்புடையது . ஆகவே நன்றாக பாதுகாப்புடன் பயணம் செய்கின்றேன். எனக்கு நன்றாக வாகனம் ஓட்டத்தெரியும். ஆகவே நான் ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்ளப்படுகிறேன். இப்படியாகவே நினைத்து கொள்ளுகிறார்கள். ஆனால் இவைகள் அனைத்தும் தேவனுடைய கிருபையே என்பதை அவர்கள் நினைப்பதில்லை


இன்னும் சிலர் நினைப்பது நான் நன்றாக பாடி ஆவியில் நிறைந்து ஆராதிக்கின்றேன். அதிகமான காணிக்கைகளை கொடுக்கின்றேன். சபையில் உன்னத பதவிகளை வைக்கின்றேன். பல விதத்தில் ஊழியம்செய்கின்றேன். ஆகவே எனக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்து விடும் என்று. கிருபையை நாம் இலவசமாய் பெற்றுக் கொள்ளக் கூடியதே. ரோம.3:23,24ல் கூறுகிறது எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி என்றும் இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள் என்று. ஆகையால் பாவம் செய்தாலும் எனக்கு கிருபை கிடைத்து விடும். நான் இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டுள்ளேன். ஆகவே நான் நீதிமானாக்கப்பட்டுவிட்டேன் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். வேதம் கூறுகிறது தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி.28:13) அப்படியாக இரக்கம் பெறுகிறவர் அப்படியாக இரக்கம் பெறுகிறவர்கள் அவருடைய கிருபையினால் நித்திய ராஜ்யத்தை சுதந்தரிப்பார்கள் என்பது உண்மை


.யாருக்கு தேவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது


நோவாவைக் குறித்துப் பார்க்கும் போது நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும், உத்தமனுமாயிருந்தான் என்றும், அவன் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான் என்றும் (ஆதி.6:9) பார்க்கின்றோம். அப்படிப்பட்ட நீதிமானாகிய உத்தமனாகிய தேவனோடு தினந்தோறும் நடக்கின்ற மனுஷனாகிய நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவாவுக்கு கிடைத்தகிருபை என்பது உலகத்தில் வாழ்கின்ற எல்லாருக்கும் கிடைக்கும் கிருபையல்ல. அது தேவனுடைய வார்த்தைக்கு பூரணமாக கீழ்ப்படிகின்றவர்களுக்கு கிடைக்கும் கிருபையே. நோவாவின் காலத்தில் பூமியானது தேவனுக்கு முன்பாக சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. (ஆதி.6:11) அது மட்டுமல்ல மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும் அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். (ஆதி.6:5,7) என்று வாசித்து அறிகின்றோம்.


இன்று கிருபையின் காலத்தில் ஜனங்கள் பூமியை சீர்கெட்டதாக பல விதத்தில் கொடுமையால் நிறைய செய்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் பூமியிலே ஜனங்களுடைய அக்கிரமம் பெருகிக் கொண்டே போகின்றது. ஜனங்கள் தேவனை ஆராதிக்கின்றவர்களாக காணப்பட்டாலும் அவர்கள் இருதயத்தின் நினைவுகளெல்லாம் தினந்தோறும் பொல்லாததாகவே காணப்படுகின்றது. சத்தியத்தை விட்டு விலகி தங்களுடைய விருப்பத்தின்படி ஆராதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவனுடைய கட்டளையின்படி செய்ய தவறினவர்களாக காணப்படுகின்றார்கள். நிச்சயமாகவே நியாயந்தீர்ப்பு உண்டு என்பதை மறந்து போகின்றவர்களாகவும் மாம்சமான யாவரின் முடிவும் தேவனுக்கு முன்பாக இருக்கின்றது என்பதையும் அறிந்தும் மறந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.


நோவாவிற்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்ததினால் தான் கர்த்தர் அவனை காத்துக் கொள்ள அவனிடமே; உனக்கு ஒரு பேழையை உண்டு பண்ணு என்றார். அதோடு பேழையை எப்படி உண்டாக்க வேண்டும் என்பதற்கான வரைமுறைகளையும் (அளவு. உண்டு பண்ணும் விதம், பொருட்கள்) அவரே கட்டளையிடுகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த பேழையில் பிரவேசிக்க நோவாவின் மனைவிக்கு அவன் குமாரர்கள் மற்றும் குமாரர்களின் மனைவிகளுக்கும் கிருபை கிடைக்கச் செய்தார். அதோடு ஒருஜோடு சகலவிதமான மாம்சமான ஜீவன்களுக்கும் கிருபை கிடைத்தது. அந்த பேழையில் உண்டு பண்ணச் சொன்ன ஜன்னல், கதவு, மேல் தட்டு, கீழ்தட்டு எல்லாம் அர்த்தமுள்ளதாகவும் சரியான பயன்பாட்டிற்குரியதாகவும் அமைந்திருந்தது. நோவா பேழையை உண்டுபண்ணும் போது பூரணமாக தேவ சித்தத்தின்படியே செய்து முடித்தான். அதில் ஒரு இடத்தில் கூட தன்னுடைய சுய விருப்பத்தின்படி செய்யவில்லை. வசனம் கூறுகிறது நோவா அப்படியே செய்தான். தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். ஆதி.6:22. நோவாவைக் குறித்து சிந்திக்கும் போது நாம் அறிந்து கொள்ள வேண்டியது ஒரு மகத்தான அல்லது மகிமையான காரியத்தைச் செய்வதற்கு அல்லது ஒன்றை கட்டிமுடிப்பதற்கு புருஷனைத்தான் தெரிந்து கொள்ளுகிறார். அது மட்டுமல்லாமல் நோவாவின் மனைவிக்கோ குமாரர்களுக்கோ அவன் மனைவிகளுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைக்கவில்லை. நோவாவுக்குத்தான் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. தேவன் புருஷனுக்கு தான் மகிமையைக் கொடுக்கிறார். புருஷன் மூலம் தான் மனைவிக்கு பிள்ளைகளுக்கு மகிமை கிடைக்கும். மனைவி எப்பொழுதும் புருஷனோடு வாழும் போது தான் புருஷன் மூலம்தேவன் காத்துக் கொள்ளும் குடும்பமாக வாழவும் நித்திய ராஜ்யத்தின் மகிமையையும் பெற்றுக் கொள்ளச் செய்கின்றார். மனைவி புருஷனை விட்டு பிரிந்து வாழ்வது அவமானமும் கிருபையை பெற்றுக் கொள்ளுவது முடியாத காரியமாகும். ஆகவே அந்த சீர்கேட்டிலிருந்து அல்லது அந்த பொல்லாத இருதயத்தின் தோற்றத்திலிருந்து இன்றே மனந்திரும்பி புருஷனோடு கூட தேவனால் கிருபையை பெற்றுக் காக்கப்பட்ட குடும்பமாக காணப்படுங்கள்.


நோவாவின் மனைவி எந்தக்காரியத்திலும் கிழ்ப்படிந்திருந்தாள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. எப்படியென்றால் நோவா பேழையை உண்டு பண்ணும் போதும், பேழைக்குள் பிரவேசிக்க சொல்லும் போதோ ஏன்? எதற்கு என்று கேட்டதாகவோ எந்தவிதமான சம்பவங்களும் அங்கு நடந்ததாக அங்கு வாசிக்க முடியவில்லை . அதுபோன்று தான் குமாரர்களும் தகப்பனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததாகத்தான் உணர முடிகின்றது. அப்படியென்றால் குடும்பமாக தான் கர்த்தருடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்கள் நோவா காலத்து மக்களுக்கு நோவா நிச்சயமாக அவர்கள் அக்கிரமங்ளையும், பொல்லாப்புகளையும் உணர்த்தி நீங்கள் மனந்திரும்புங்கள். கர்த்தர் உங்களை பூமியோடுங்கூட அழிக்கப் போகிறார் என்று எச்சரிப்போடு சொல்லியிருந்தார். ஆனால் ஜனங்கள் சத்தியத்திற்கு கீழ்ப்படியாமல் தங்கள் மனம் போன போக்கிலே கர்த்தருக்கு ஆராதனை செய்கின்றவர்களாக வாழ்ந்தார்கள். ஆகவே தான் கர்த்தர் இவர்களை பெருவெள்ளத்தினால் அழித்தார்


இன்று கூட நாம் கிருபையின் காலத்தை தாண்டி நியாயத்தீர்ப்பின் காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை மறந்து விடாதீர்கள். கர்த்தர் நம்மை கிருபையால் காத்துக் கொண்டு வருகின்றார் உண்மை தான். ஆனாலும் அவர் நம்மிடத்தில் கனியைத்தேடுகின்றார். ஆகவே இந்தநாள் இருக்கட்டும் என்றும் இந்த வாரம் மட்டும் இருக்கட்டுமென்றும் அல்லது ஒரு மாதமட்டும் அல்லது ஒரு வருஷம் அல்லது இன்னும் பல வருஷம் இருக்கட்டும் இது கனி கொடுக்குமா? பார்ப்போம் என்று கிருபையால் வழி நடத்துகின்றார். அவர் கனியைத் தேடும் காலம் வரை நிறுத்துவார். பின்பு முழுமையாக அழித்துப் போடுவார் என்பதை நாம் உணர்ந்தவர்களாக ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கண்களில் கிருபை பெற்று காக்கப்படும் குடும்பமாக காணப்பட நம்மை ஆயத்தப்படுத்துவோம். தேவன் தாமே அதற்கு கிருபைபுரிவாராக ஆமென்.


ஹெலன் ஷீன், கேரளா. Cell: 09947301633