ஜனுவரி 2021 - பெண்கள் பகுதி - தேவ செய்தி

                                                        கீழ்ப்படியுங்கள் 

                                         எது பிரயோஜனமுள்ளது?

 “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகைகயால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” 1தீமோத்.4:8 


     கர்த்தருக்குப் பிரியமானவர்களே, உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த வருடமும் பலவிதமான ஆசீர்வாத வசனங்களை வாக்குத்தத்தங்களாக பெற்றுக்கொண்டும் பெற்றுகொள்ளாமலும் இருக்கலாம். தேவன் நமக்கு வாக்குத்தத்தங்களாக கூறியிருப்பவைகள் அனைத்துமே பின்வரும் ஜீவனுக்குப் பிரயோஜனமானதாகவே காணப்படுகின்றது. ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் பிரயோஜனமுள்ளது எது? அப்பிரயோஜனமுள்ளது எது என்பதை அறிந்து உணராதவர்களாகவே கிறிஸ்தவர்கள் என்ற போர்வைக்குள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆகையால் நாம் எது பிரயோஜனமுள்ள வாக்குத்தத்தம் என்பதை அறிந்து உணர வேண்டிய கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

     2020ஆம் ஆண்டு உலகமெங்கிகலும் கொள்ளை நோய் பரவி பல லட்ச மக்கள் இந்த புத்தாண்டை காண முடியாமல் மாண்டு போனார்கள் ஆனாலும் கர்த்தர் தம்முடைய பெரிதான கிருபையினால் மகா கருணையால், அளவிடப்படாத இரக்கத்தினால், தயவினால் நம் அனைவரையும் இந்த புத்தாண்டையும் காண கிருபைச் செய்திருக்கின்றார். காரணம் என்ன நாம் சத்தியத்தை அறிய வேண்டிய பிரகாரம் அறிந்து உணர்ந்து நம்மை சீர்படுத்தி அவருடைய ஐக்கியத்தில் அவர் போதித்த வழிகளில் நடந்து இந்த ஜீவனுக்கும், இதற்குப் பின்வரும் மறுமையின் நித்திய ஜீவனுக்கும் உகந்தவர்களாக பிரயோஜனமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே நம்மை இந்த 2021-ம் ஆண்டில் பிரவேசிக்க செய்திருக்கின்றார். அவருக்கே எல்லா கனமும், மகிமையும், ஸ்தோத்திரங்களும் உண்டாகட்டும். நாம் சிந்திக்கப் போகின்ற வசனத்தில் தெளிவாக கூறுகின்றது. நம்முடைய சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது என்று. அப்படியானால் எது சரீர முயற்சி என்றும், இன்று நம்முடைய கிறிஸ்தவ மக்களுக்கிடையே நடந்து வருகின்ற காரியங்களில் எப்படி எல்லாம், சரீர முயற்சி முன் நிலமையை பெற்றுள்ளது என்பதைக் குறித்து சிந்திப்போம். 

எது சரீர முயற்சி :

 பேர், புகழ், பெருமை, பாராட்டு தங்கள் பலவிதமான திறமையை வெளிக்காட்டுவது, நான் வல்லமையுள்ளவன் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுவது இச்சை, ஆசை, இப்படிப்பட்டவைகளே சரீர முயற்சிகளாகும். இந்த சரீர முயற்சிகள் தேவனுடைய காரியங்களைச் செய்யும் போது முன் பந்தியில் நிற்கின்றதென்றால் அவைகள் அனைத்தும் அற்ப பிரயோஜனமுள்ளதாகவே காணப்படும். 

சரீர முயற்சி கிறிஸ்தவ மக்களின் செயல்களில் எப்படி காணப்படுகின்றது

 தேவாலயத்திற்கு செல்லும் போதும், ஆராதனைகளில் கலந்து கொள்ளுவதிலும், நற்செய்தி கூட்டங்களுக்கு செல்லுவதிலும், நற்செய்தி கூட்டங்கள் நடத்துவதிலும், உபவாச கூட்டங்களிலும், உபவாசம் இருப்பவர்களிலும், காணிக்கைகளையும், தான தர்மங்களை செய்வதிலும், ஜெபிப்பதிலும் ஆலய காரியங்களில் ஈடுபடுவதிலும் பதவிகளை வகிப்பதிலும், பலவிதமான ஊழியங்களைச் செய்வதிலும், ஊழியத்தின் பேரில் பலவிதமான திட்டங்களை உருவாக்குவதிலும், ஞானஸ்நானம் திருவிருந்து, பண்டிகைகள், வெள்ளை வஸ்திரம் அணிவது, நகை அணியாமலிருப்பது, ஆலயத்தைக் கட்டுவது, பலவிதமான ஸ்தாபனங்களை (ஆஸ்பத்திரி, கல்லி, தொண்டு நிறுவனங்கள்) எழுப்புவதிலும், பல நவீன ஊழியங்களிலும் பத்திரிக்கை ஊழியங்களிலும் இப்படியாக எல்லாவற்றிலும் இன்று சரீர முயற்சிகள் தான் மேலோங்கி நிற்கின்றது. ஆனபடியினால் இவைகள் அனைத்தும் அற்ப பிரயோஜனமானதா? என்று கூட நீங்கள் கேட்கலாம். 

      இவைகள் அனைத்தும் நம் கிறிஸ்தவ சமூகத்திற்கு தேவையானதாக கூட இருக்கலாம். ஆனால் அவைகளில் கிறிஸ்து பிரியப்படுகின்ற விதத்தில் காணமுடியவில்லையே. மேலே சொன்ன அனைத்து காரியங்களுக்கும் வேத வசனத்தின்படி எப்படி பிரயோஜனமுள்ளதாக செயல்படுத்த வேண்டுமென்று கூறப்பட்டுள்ளதே. நீ தேவாலயத்திற்கு செல்லும் போது உன் நடையைக் காத்துக்கொள் (பிர.5:1) என்று வேதம் கூறுகின்றது. ஆனால் நம்மையே சிந்தித்துப் பாருங்கள். உன் நடையை நம்முடைய நடையைக் காத்துக் கொள்ள முடிகின்றதா? அநேகர் ஆலயத்திற்கு செல்லுவதே தங்களுடைய செல்வ செழிப்பைக் காட்டிக் கொள்ளும் விதத்தில், ஆடை அணிவதும், நகை அணிவதும், தலைமுடியை சிங்காரித்துக் கொள்ளுவதும், விலையுயர்ந்த வாகனத்தில் செல்லுவதும், இப்படியாக காணப்படுவதிலெல்லாம் சரீர முயற்சியாகிய புகழ், மேன்மை , செழிப்பு, பெருமை, அங்கிகாரம் இப்படிப்பட்டவைகள் தானே மேலோங்கிக நிற்கின்றது. அப்படியானால் இவர்களால் எப்படி பிரயோஜனமுள்ளதாக என்ற வசனத்திற்குக் கீழ்ப்படிய முடியும். 

      இன்னும் சிலர் தேவாலயத்திற்குப் போவது பதவி, புகழ், மேன்மை , ஆசீர்வாதங்களுக்காகவே சிலர் தங்கள் சபையில் பதவி புகழ், மேன்மை பறிபோனால் மற்றொரு சபையை தேடி கொள்ளுவார்கள். சிலர் ஆராதனை பிரியர்களாகவே காணப்படுகின்றனர். எதற்கு என்றால் பலவிதமான இசைக்கருவிகளை இசைத்து பாடல்களைப் பாடும்போது அதினால் எல்லாவிதமான ஆசீர்வாதங்களும் கிடைக்குமென்று. ஆராதனை என்பது குறித்து வேதம் தெளிவாக ரோமர் 12:1ல் கூறப்பட்டுள்ளதே. நம் சரீரத்தை பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அது தான் ஆராதனை. ஆனால் பாடல் பாடுவர்களின் குரல் திறமையும், இசைக்கருவிகளை வாசிப்பவர்களின் திறமையும் வெளிகாட்டப்பட்டு அதில் இச்சையுள்ளவர்களாய் சரீரமுயற்சி மேலோங்கி நிற்க ஆராதிக்கின்றார்கள். இப்படியாகவே உபவாசம், நற்செய்தி கூட்டம், விடுதலை ஆராதனை, இவைகளிலும் சரீர சுகம், பணம், கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை, வீடு, கார் இப்படிப்பட்ட சரீர முயற்சிகள் தான் மேலோங்கி நிற்கின்றது. பாவங்களை கடிந்து கொண்டோ, உணர்த்தும் விதத்திலோ, சத்தியத்தை சொல்லும் நற்செய்தி கூட்டங்களோ உபவாச கூட்டங்களோ நடத்தப்பட்டால் ஜனங்கள் வரவேமாட்டார்கள். அது சரீரத்திற்கு தேவையானதாக காணப்படாது. மாறாக ஜீவனுக்கு பிரயோஜனமுள்ளதாக காணப்படும். 

     ஆசீர்வாதம் கிடைக்குமென்றால் ஊழியக்காரர்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் காணிக்கையென்ற பெயரில் கொடுப்பார்கள். அதிகமான காணிக்கைகளைக் கொடுப்பதால் சபையில் பெயர், புகழ், பதவி, மேன்மை கிடைக்குமென்றால் காணிக்கைக் கொடுப்பதில் அதிகம் உற்சாகம் காட்டுவார்கள். வேதம் கூறுகின்றது. அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயுமல்ல தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்று (11கொரி.9:7) இன்று ஜனங்களிடம் காணப்படும் உற்சாகம் சரீர முயற்சியே சிலர் கட்டாயத்தின் பேரிலும், விசனமாயும் காணிக்கைகளை கொடுக்கின்றார்கள். இது கொடுப்பவர்களுக்குள் மனகசப்பான சரீர முயற்சியும், வாங்குகின்றவர்கள் இச்சை, ஆசை என்ற சரீர முயற்சியோடும் தான் கட்டாயப்படுத்துகின்றார்கள்

    ஊழியக்காரர்களும், போதகர்களும் அதிகமாய்ப் பெருகி வருகின்ற காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். வேதம் கூறுகின்றது என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அநேகர் போதகராகாதிப்பீர்களாக என்று (யாக்.3:1) போதகராவதினால் அநேக கடமைகள் உண்டு. அதை மறந்து நாம் போதிக்கின்றவர்களாக ஊழியம் செய்கின்றவர்களாக நாம் காணப்படுவதினால் அதிகமான ஆக்கினையை அடைவோம் என்ற பயம் கூட இல்லாமல் போதகராவதும் ஊழியக்காரனாவதும் ஒரு உலக பிரகாரமான மேன்மை , பதவி, புகழ், அதிகம் பணம் சேர்க்கலாம். இப்படியே சரீர முயற்சிக்காகவே அநேகர் பரிசுத்தமில்லாத வாழ்க்கையோடு ஊழியம் செய்கின்றார்கள். சிலர் ஆரம்பத்தில் ஊழியத்தை தொடங்கினது ஆத்துமா ஆதாயத்திற்காகவே ஊழியர்களங்கள் உலக பிரகாரமாக வளர்ச்சியைக் கண்டபோது ஆத்துமா ஆதாயம் மாறி அவலட்சணமான ஆதாயத்திற்காகவே மாற்றி அமைத்து விடுகின்றார்கள். வேதம் கூறுகின்றது உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும் அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்புச் செய்யுங்கள் என்று (1பேதுரு 5:2,3) ஆனால் ஊழியங்கள் பெரும்பாலும் சரீர முயற்சிக்காகவே செய்யப்படுகின்றன. 

     வேதம் கூறுகின்றது எதை செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் என்று (கொலோ.3:24) ஆனால் இன்று ஜனங்கள் திருவிருந்து ஞானஸ்நானம்,  நகைபோடாமலிருப்பது, வெள்ளை வஸ்திரங்களை அணிவது, காணிக்கைகளைக் கொடுப்பது ஜெபம் பண்ணுவது ஊழியம் செய்வது பாடல் பாடுவது, இப்படியாக அநேக காரியங்களை மனுஷர் காணும்படியாகவே செய்கின்றார்கள். இன்னும் சில காரியங்களை சபை சடங்காச்சாரங்களுக்காகவே செய்கின்றார்கள். சிலர், ஞானஸ்நானம், திருவிருந்து எடுப்பது சபையில் சேர்த்துக் கொள்ளுவதற்கும், திருமணம், பதவி, இப்படிப்பட்டவைகளுக்காகவே சிலர் ஞானஸ்நானம் எடுப்பது மனுஷர் காணும்படியாக சபை சட்டத்திட்டங்களுக்கேற்ப நகையைக் கழற்றிவைத்துவிட்டு எடுப்பார்கள். பின்பு போட்டுக் கொள்ளுவார்கள். இப்படிப்பட்ட ஞானஸ்நானம் யாருக்கு வேண்டி எடுத்துக் கொள்ளுகிறீர்கள். நகையை கழற்றி ஸ்நானம் எடுத்தால் மட்டுமே நித்திய ராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சரீர முயற்சிக்கான போதனைகளை கூறி ஜனங்களை இந்த ஜீவனுக்கும், பின்வரும் ஜீவனுக்கும் பிரயோஜனமில்லாததாக மாற்றி விடுகின்றார்கள். வேதம் கூறுகிறது உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே என்று (கலா.3:27) அப்படியானால் ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவின் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து பிரயோஜனமுள்ளவர்களாய் நடந்து கொள்ளுவதுதான் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டதின் அடையாளம். 

        சிலர் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்தவர்களாக காணப்படுவார்கள். இந்த வேஷமும் சரீர முயற்சியே சிலர் தேவனை புகழ்ந்து பாடல்களை பாடுவார்கள். இசைக்காவும் தங்கள் திறமைக்கான பாராட்டுதலுக்குமே. ஒருநாள் கூட பாடலின் கருத்தை உணர்ந்து ஆவியோடு பாடுவது கிடையாது. பவுல் கூறுகின்றார் நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன் என்று (1கொரி.14:15) அப்படி பாடுவதுதான் ஜீவனுக்கு பிரயோஜனமுள்ளது என்று அறிவோமாக. 

      பிரசங்கி 6:11ல் கூறுகின்றார் மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விஷயங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன? என்று. ஆனால் ஜனங்கள் உணர்வில்லாமல் அறிவில்லாமல் மாயையைப்பெருகப்பண்ணுகிற பிரயோஜனமில்லாத காரியங்களுக்ககு செவி சாய்த்து சரீர முயற்சியிலே தள்ளப்பட்டு கிடக்கின்றார்கள். எப்பொழுதுதான் உணர்வடைவார்களோ! வேதத்தை தினந்தோறும் வாசித்தாலும் வேதம் கூறுவது போன்று அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும் புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும் சண்டைகளையும் நியாயப்பிரமாணத்தைக் குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் குறித்ததான காரியங்களிலே மேலோங்கி நிற்பார்கள். வேதம் கூறுகிறது அப்பிரயோஜனமும், வீணுமாயிருக்கும் வாக்குவாதங்களை விட்டு விலகு என்று தீத்து 3:9) 

      ஆகவே வேதம் வாசித்தாலும் தேவனுக்கென்று, எதைச் செய்தாலும் அற்ப பிரயோஜனமுள்ளதாக காணப்படும் காரியங்களை விட்டு விலகி; இந்த ஜீவனுக்கும் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமாக காணப்படும் தேவபக்தியை தரித்துக் கொண்டு பிரயோஜனமுள்ளவர்களாக வாழ தேவன் தாமே இந்த புதிய ஆண்டில் கிருபை புரிவாராக. அதுமட்டுமல்லாமல் வேதம் கூறுவது போன்று அவருடைய ராஜ்யத்திற்குரியவைகளை நாம் தேடும் போது அதோடு கூட கொடுக்கப்படும் எல்லா விதமான இம்மைக்குரிய ஆசீர்வாதங்களாலும் நம்மனைவரையும் நிரப்புவாராக. ஆமென்

. ஹெலன் ஷீன், கேரளா. Cell : 09947301633