அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில் தானே புசித்தார்கள் (யோசு.5:12)
இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டு புறப்பட்ட பின், சிவந்த சமுத்திரத்திலும் பின், ஒவ்வொரு நாட்களிலும் அற்புதங்களை மட்டுமே அனுபவித்தார்கள். தூதர்களின் ஆகாரமாகிய மன்னா தினமும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. ஆசைப்பட்டு கேட்ட இறைச்சி, காடையாக ஏராளமாய் கிடைக்கப்பெற்றது. மேகஸ்தம்பத்தினாலும் அக்கினி ஸ்தம்பத்தினாலும் இரவிலும் பகலிலும் பாதுகாக்கப்பட்டு வழி நடத்தப்பட்டார்கள். கசப்பான தண்ணீர் மதுரமாக்கப்பட்டது, தண்ணீர் பஞ்சம் இல்லாமல் கன்மலை தண்ணீரை குடித்தார்கள். விஷ பாம்புகளினால் துன்பம் அடைகையில் வெண்கல சர்ப்பம் கண்டு மரணத்திலிருந்து மீட்கப்பட்டார்கள். வாக்கு பண்ணப்பட்ட கானான் போய் சேரும்வரையிலும் இத்தனையான அற்புதங்ககளையும் அனுபவித்தார்கள். ஆனால் கானாவில் தங்கள் கால்களை முதல் முதலாக பதித்தபோது, அத்தனை அற்புதங்களும் நின்று போயின. ஆனால் அவ்வருஷத்தில் தானே அவர்கள் கானான் தேசத்துப்பலனை புசித்தார்கள்.
பரி. பவுல் கூறுகின்றார் நான் அடைந்தாயிற்று என்றும் அல்லது முற்றும் தேறினவனானேன் என்றும் எண்ணாமல் கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய் தொடர்கிறேன். அதனால் ஒன்று செய்கிறேன் பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். ஆகையால் நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்த சிந்தையாயிருக்கக்கடவோம். மேலும் நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால் அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார் என்று. பிலி.3:12-15
அருமையானவர்களே, நாம் புதிய இவ்வருடத்திலே முதல் மாதத்திற்குள்ளே புகுந்தும் விட்டோம். பரி. பவுல் கூறியிருப்பது என்ன? பின்னானவைகளை மறந்து அதாவது 2020ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பாகவும் நாம் அடைந்த சகல துன்பங்களையும், இழப்புகளையும் அவமானங்களையும் முற்றிலுமாய் மறந்து மேலும் கடந்த நாட்களிலே நாம் பெற்று அனுபவித்த நல்ல நல்ல காரியங்களையும் மறந்தவர்களாகவும் கடந்து வந்து தேவன் தாமே நமக்கென்று ஆயத்தமாக்கி வைத்துள்ள 2021ஆம் வருடத்திற்கான கனிகளை மாத்திரமே புசித்திட நாம் ஜாக்கிரதையாயிருந்திடுவோமாக. யோசுவா 5:12 யில் வாசிக்கின்றோம். அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில் தானே புசித்தார்கள். பரி.பவுலும் சேர்ந்து கூறுகின்றோர் ஆசையாய் தானும் அதனையே தொடர்கிறேன் என்று.
ஆண்டவர் நம்மிலே விரும்புவது கடந்த வருடங்களில் அனுபவித்து வந்த துன்பங்களை நாம் இவ்வருடத்திலே அனுபவிக்ககூடாது. அதே சமயம் அவற்றினால் அறிந்து கொண்ட உண்மைகளை எச்சரிப்புக்களை கருத்தாய் அனுபவமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அது போன்றே கடந்த நாட்களில் நாம் பெற்ற நன்மைகளை இவ்வாண்டிலும் நடப்பித்திட முயற்சி செய்திட வேண்டாம் என்றும் இவ்வகை செயல்பாட்டில் தேறினவர்கள் யாவரும் இந்த சிந்தையாயிருக்கக்கடவோமாக என்று பரி. பவுல் தன்னையும் உட்படுத்தி கூறியுள்ளதை வாசிக்கின்றோம். ஆனால் நாமோ கடந்த வருடம் எந்த நன்மைகளை செய்தோமோ அவற்றினை மட்டுமே இப்புது ஆண்டிலும் செய்யப் பழகிவிட்டோம். அதே பாடல்கள் அதே பழமையான முறைமைகள் அதே கேக், அதே ஸ்டார் அதே வாண வேடிக்கை அதே குடில், அதே வண்ண விளக்கு, அதே விருந்து, அதே பழைய வருட புதிய வருட செய்திகள் இவைகள் யாவும் தேர்ச்சிக்கானவைகளாக கருதப்படாது. இதுவே நமது பாரம்பரியம் என்பது மட்டுமே. இவற்றினை கைக்கொள்பவர்கள் தேர்ச்சியடையாதவர்களே ஆவர். இவர்கள் எக்ககாலத்திலும் தேவன் இவர்களுக்கென்று புத்தாண்டிலே ஏற்படுத்தியுள்ள புதிய தேவ திட்டங்களை அறிந்திடவே மாட்டார்கள். இதற்கான விருப்பங்களும் இவர்களுள் இருந்திருக்கவே முடியாது. ஆனால் இவற்றிலே தேறினவர்கள் மாத்திரமே கிறிஸ்து இயேசுவின் சிந்தையை அறிந்திடுவார்கள் என்பதே உண்மையும் சத்தியமும் ஆகும்.
சங்கீதம் 137:3யில் வாசிக்கின்றோம். பாபிலோன் மக்கள் இஸ்ரவேலரின் தேவனை அறிய விரும்பவில்லை. தேவனைப் பற்றிய சத்தியங்களையும் அறிய விரும்பவில்லை. ஆனால் கிறிஸ்மஸ் கீத ஆராதனை பாடல்களை மட்டும் கேட்க விரும்புகின்றார்கள். இவைகளைத்தானே உலகமெங்கிலும் எல்லா டிவி சேனல்களிலும் ஆலய ஆராதனைகளிலும் கேட்டு பண்டிகையை கொண்டாடி முடித்துள்ளோம். இன்னும் அடுத்த ஆண்டிலும் இதே பாரம்பரியத்தை தானே நடப்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம். ஆனால் இவற்றிலே தேறி அடுத்தபடியான கிறிஸ்துவின் சிந்தையை அறியக்கூடாதவர் களாயிருக்கின்றோமே. இதனையே இவ்விதழிலே சற்று விரிவாய் அறிந்திட தேவன் தாமே கிருபை செய்திடுவாராக.
பாரம்பரியத்தை மட்டுமே சிறப்பாக கொண்டிருக்கும் சபைகளைக் குறித்து வேதத்திலே அறிகின்றதாவது: எசேக்.8:6 முதல் :- அந்த ஆலய பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்து இயேசு இல்லவேயில்லை. அவர் அதை விட்டு வெளியேறி தூரமாய் போய்விட்டார். ஆனால் இஸ்ரவேல் வம்சத்தாரின் போதகர் அங்கே அலங்காரமாய் காணப்படுகின்றார். சிலுவை சிறப்பாய் அரங்கேறியுள்ளது. சிறப்பான பாடல்கள், வாத்தியங்கள் உண்டு இவற்றினை ஆண்டவர் அருவருப்புக்கள் என்கின்றார். ஆலயத்திற்குள் நேர் வாசல் வழியாய் உட்சென்று பார்க்க விரும்பாமல் அவற்றில் துவாரமிட்டு பார்ப்போமானால் ஆலய அதிகாரிககள் துணிகரமாய் செய்து வரும் கொடிய அருவருப்புக்களை காணக்கூடும் என்கிறார். வசனம் 12யில் ஆசாரியர்கள் மூப்பர்கள் அந்தகாரத்திலே அநேக அருவருப்பான காரியங்களை செய்து வருகின்றதை அறியக்கூடும். சட்ட நியமங்களை மீறி, சுயவழிகளை சட்டங்களாக அறிவித்து ஆளுகையும் புரிகின்றார்கள்.
இன்னும் வசனம் 14யின் படிக்கு ஆலயத்திற்குள்ளே குழுமியிருக்கும் தாய்மார் கூடுகைகளை காணக்கூடும். உபவாச ஜெப கூடுகைகளையும் காணக்கூடும். கண்ணீரோடு ஜெபிக்கின்றவர்களையும் காணக்கூடும். இவர்கள் தம்மூசுக்காக (தங்கள் தங்கள் இச்சையின்படிக்கே வாழ்ந்து) அழுது ஜெபிக்கின்றவர்களாயிருக்கின்றார்கள். இவர்கள் கிறிஸ்து இயேசுவையல்ல (வசனம் 16) சூரியனை நமஸ்கரிகின்றவர்களாயிருக்கின்றார்கள். (வசனம் 18) இவர்களுக்கு நான் இரங்குவதில்லை, இவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்க கூப்பிட்டாலும், ஜெபித்தாலும் அவர்களுக்கு நான் செவி கொடுப்பதில்லை என்று ஆண்டவர் கூறுவதை வாசித்து அறிந்திடுவோமாக.
பரி. பேதுரு கூறுகின்றார் (11பேதுரு 1:4) வேதத்திலே உள்ள வாக்குத்தத்தங்கள் யாவுமே நாம் ஆண்டவருடைய திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது உலக செழிப்பிற்கானவைகள் அல்ல.
பரி.யோவான் கூறுகின்றார். இயேசு கிறிஸ்து இருந்த பிரகாரமாகவே நாமும் இவ்வுலகத்தில் இருக்க வேண்டும் என்றும் கிறிஸ்துவுக்குள் வாழ்கிறேன் என்று சொல்லுகிறவன் அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதை வாசிக்கின்றோம்.
ஏனெனில் இரண்டு வகையான இரட்சிப்பு உண்டு. சிவந்த சமுத்திரத்தை கடந்தது போன்று பாவ வாழ்க்கையிலிருந்து விசுவாசத்தினால் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படுவதாகும். இதில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை இரத்தத்தினாலே மீட்கப்படுகின்றோம். இந்த இரட்சிப்பை பெற்றவர்களுக்கு மரித்தவுடன் பரலோகம் தயாராகிவிட்டது. மரித்தவுடன் பரலோகம் செல்வேன் என்று எண்ணுவது தவறானதாகும். இது முதல் இரட்சிப்பு மட்டுமே ஆகும். ஆண்டவர் ஏற்படுத்திய இரண்டாம் இரட்சிப்பானது இயேசு கிறிஸ்துவைப் போன்று வாழ்கின்ற வாழ்வை கொண்டதாகும். இதனைத்தான் ரோமர் 5:10யில் வாசிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் மரணத்தினால் முதல் இரட்சிப்பும் பின் நாம் அவருடைய ஜீவனாலே (வாழ்வை கொண்டதினாலே) இரண்டாவதாக இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே என்று எழுதப்பட்ட வேத வார்த்தைகளை அறிந்திடுவோமாக. இதுவே இஸ்ரவேலரின் இரண்டாம் அனுபவமாக யோர்தானை கடந்து கானானுக்குள் பிரவேசிப்பதாகும். அவ்வயமே கானானில் அவ்வாண்டின் கனியை புசிப்பதே தேவனுடைய சித்தமும் விருப்பமுமாயிருக்கிறது. முதலாம் இரட்சிப்பினை மட்டும் பெற்று பாரம்பரிய வாழ்வையே பிரதானமாய் கொண்டு அற்புதங்களையும் ஏராளமாயும், தாராளமாயும் பெற்ற இஸ்ரவேலரில் ஒருவரும் கானானுக்குள் பிரவேசிக்கவில்லையே. இதனை வேறு விதமாய் அறிவோமானால், முதல் இரட்சிப்பினை பெற்றவர்கள் கீழ்க்கண்ட ஆயுதங்களை தரித்தவர்களாய் காணப்பட வேண்டும். எபே. 6:14-17 சத்தியம், நீதி, சமாதானம், விசுவாசம் இரட்சணியம் வசனமாகிய பட்டயம் ஆகியவைகளாகும். இரண்டாம் இரட்சிப்பினை அடையப்பெறுகின்றவர்கள் விசுவாசம், அன்பு நம்பிக்கைகயை (1தெச.5:8) யினை ஆயுதங்களாக தரித்தவர்களாய் காணப்படுகின்றார்கள். ரோமர்11:26யின் படிக்கு இந்த பிரகாரமாகவே இஸ்ரவேலர் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதே உண்மையும் சத்தியமும் ஆகும்.
எழுப்புதல் என்பது மக்களிடையே அல்ல நம்மிடையே அடையப்பெற வேண்டும். பழையவைகள் யாவும் ஒழிந்து புதியவைகளாக மாற்றமடைய வேண்டும். இருதயத்திலே எழுப்புதல் சங்கீதம் 51:10யின் படியும், மனதிலே எழுப்புதல் ரோமர் 12:2ன்படியும் ஆத்மாவில் எழுப்புதல் 1தீமோ.4:7-8யின் படிக்கே அடைந்திட வேண்டும். இதனை அடைத்திடாது எத்தனை பேரின்ப பெருவிழாக்களினாலும், அழுது உபவாச ஜெபத்தினாலும் தேவன் விரும்பும் எழுப்புதலை தேசத்தில் கண்டிட முடியவே முடியாது.
ஆண்டவரின் வருகை மிக மிக சமீபமாயிருக்கிறது. அதோடு கூட அந்திகிறிஸ்துவின் வருகையும் மிக சமீபமாயிருக்கிறது. நாம் யாரை சந்திக்க இருக்கின்றோம். இயேசுவின் வருகையை எதிர்பார்க்கின்ற நாம் இராத்திரியில் வெறி கொள்ளுகிறவர்களைப் போன்று அல்லது தெளிந்தவர்களாயிராமல் இரவில் தூங்குகிறவர்களாய் அதாவது தூக்கத்தில் நடப்பவர்களைப் (Sleep walking) போன்ற ஆவிக்குரிய வாழ்வைக் கொண்டவர்கள் வருகையிலே கிறிஸ்து இயேசுவையல்ல அந்தி கிறிஸ்துவையே சந்திக்கிறவர்களாய் காணப்படுவார்கள் என்பதே உண்மையும் சத்தியமும் ஆகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்வை கொண்டிராத விசுவாசிகள் போதகர்கள் தூக்கத்தில் நடக்கும் தூக்கத்தில் நடனமாடும், தூக்கத்தில் ஆராதிக்கும் கிறிஸ்தவர்களே ஆவர். இவர்கள் இடுக்கமான வாசல் வழியாய் பரலோகம் சென்றடைய கூடாதவர்களே ஆவர்.
யார் வருகையில் கைவிடப்படமாட்டார்கள் என்பதை இயேசு கிறிஸ்து தாமே தீர்க்கத்தரிசனமாய் லூக்.12:35-37யில் கூறியதை அறிந்திடுவோமாக. இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்த நிலமையில் அவரவர்களின் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் நிலமையில் மணவாளன் கலியாண விருந்திலிருந்து வந்து மணவாட்டியை அழைத்துச் செல்ல வருகையில் அவர் வருகையை எதிர் பார்த்து ஆயத்தமாய் தூக்கத்தில் நடவாதபடிக்கு விழிப்புள்ளவர்களாய் இரவு பகலாய் கையிலே தீவட்டிகளை எண்ணையோடு பிடித்து காத்திருப்பவர்களின் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்து முன் வருபவர்கள் மாத்திரமே மணவாளனால் கலியாணவிருந்து கொண்டாட்டத்திற்குள் அழைத்து கொண்டு போகப்படுவார்கள். இதுவே இரண்டாம் வருகை. இயேசுவின் இவ்வுலக நாட்களில் கலியாணத்திற்கான கன்னிகைள் யூதர்களின் அன்றைய வழக்கப்படிக்கு பல நாட்கள் மணவாளனின் வருகைக்காக காத்திருக்கின்றவர்களாயிருந்தார்கள்.. அன்று புத்தியில்லாத ஐந்து கன்னிகளைப் போன்று கைவிடப்பட்ட விசுவாசிகளாக இராதபடிக்கு நாம் ஜாக்கிரதையாயிருப்போமாக ஆயத்தப்படுவோமாக. மாறாக வசனம் 4: 6-8யின் படிக்கு மணவாளனின் சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவருடைய சித்தத்தின்படி செய்யாமல் ஊழியங்களை ஆராதனைகளை முன்னின்று நடத்தி வரும் போதகர்கள் ஊழியர்கள் விசுவாசிகள் அநேக அடிகள் அடிக்கப்படுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளதையும் அறிந்துணர்ந்திடுவோமாக.
ஆகையினால் இப்புத்தாண்டிலே அருமையானவர்களே, சோர்ந்திட வேண்டாம். ஏசா.63:1யின்படிக்கு நீதியாய் பேசி இரட்சிக்க வல்லவராகிய ஆண்டவர் நான் தானே என்றும் (வசனம் 4) நீதியை சரிக்கட்டும் நாள் என் மன திலிருக்கிறது. என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது என்று கூறுகின்ற ஆண்டவர் தாமே வனாந்தரத்திலுள்ள ஓர் முட்செடியின் நடுவிலிருந்து அக்கினியால் அதனை ஜுவாலித்து எரியச் செய்து, மோசே என்று பெயர் சொல்லி அழைத்த தேவன் இவ்வாண்டிலே அவர் தாமே மனதிரங்கி நம்மை முட்ச்செடியென்று தள்ளிடாமலும் நம் வாழ்வு வனாந்தரமான வாழ்க்கையென்றும் உதாசினப்படுத்திடாமலும் அற்புதமாய் நம்மை சந்தித்து கண்டு நமக்குள்ளே அக்கினியாய் எரிந்தும் நம் பெயரைச் சொல்லி நம்மை அழைத்தும், அவருடைய திவ்விய சுபாவத்தை நமக்கு அளித்தும் நம்மை கானானுக்குள் பிரவேசிக்கவும் கானானின் பலனை இவ்வாண்டில் தானே புசித்து அனுபவித்து வாழ்ந்திடவும் கிருபை செய்வாராக. ஆமென்.
யாவருக்கும் 2021 ஆம் வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிலிப்ஜெயசிங்,
நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்.