ஆசிரியர் மடல்....
2021 ஆம் புத்தாண்டு யாவருக்கும் எல்லாவற்றிலும் எவ்வித குறைவும் இல்லாத நிறைவான ஆண்டாக இருக்கும் என்பதாக ஜெபத்துடன் வாழ்த்துகின்றோம்.
அவருக்குப் பலந்தவர்களுக்குக் குறையில்லை (சங். 34:9,10).
கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு தன்மையுங் குறைவுபடாது.
கர்த்தர் என் மேல்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
Our God is, more than enough
கர்த்தருடைய தேவதூதன் மரியாளை நோக்கி, பயப்படாதே நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, என்று வாழ்த்து தலை கூறிவிட்டு அதே தூதன் பின்பு ஒரு நாள் வயல்வெளியில் தங்கி தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் சென்று இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார், சென்று பார்த்தால் காண்பீர்கள் என்ற நற்செய்தியையும் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
மரியாளிடம் ஒரு பாலகனை பெற்றிடச் செய்து அதற்கு இயேசு என்று பெயரிட கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மேய்ப்பர்களிடம் அவர்களுக்காக கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற செய்தி மாத்திரமே அளிக்கப்பட்டது ( A savior who is Christ the Lord) அவரை உடனே போய் கண்டு தரிசியுங்கள் என்று எந்த அறிவுரையும் வழங்கப்படவில்லை. ஆனால் மேய்ப்பர்களோ, தேவதூதர்கள் அவர்களைவிட்டு பரலோகம் சென்ற பின்பு இந்தக் காரியத்தைப் பார்ப்போம், வாருங்கள் என்று சொல்லி அனைவருமாய் உடன் தானே புறப்பட்டுப் போய் கண்டு பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள் என்றுதான் வாசிக்கின்றோம். மரியாள் தான் பெற்றெடுக்கப்போகும் குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுகின்றாள். ஆனால் மேய்ப்பர்களுக்கோ மரியாளைப் போன்று அல்ல. ஏற்கனவே முன் அறிவிக்கப்பட்டபடிக்கே கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் யாவருக்காகவும் வானத்திலிருந்து இறங்கி வந்து வீற்றிருக்கின்றவராயிருக்கின்றார். ஆகையினால் கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகரை எவரும் கிறிஸ்மஸ் நாளிலே உருவாக்கிடக் கூடாது என்பதேயாகும். அவர் ஏற்கனவே மரியாளின் கருவிலே 9 மாதங்களுக்கு முன் ஆண்டவராக வந்து விட்டாரே. ஆகையினால் மக்கள் யாராயினும் அவரை தங்கள் , தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளலாம். அல்லது ஏற்றுக்கொள்ளாமல் வேண்டாம் என அவரை நிராகரித்தும் விடலாம். இதுவே உண்மை . அதனால் தான் இந்த இயேசுவையே அன்று தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அறிந்திடாமல் அவரையே யாவருமாய் சிலுவையில் அறைந்தும் விட்டார்கள் (அப். 2:36). அன்னார்களைப் போன்றே இன்றும் அநேகர் ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமலும் அவரே ஆண்டவரும் கர்த்தருமானவர் என்றும் அறிந்திடாமல் கிறிஸ்மஸ் பண்டிகையை வருடம் தோறும் கொண்டாடி வருகின்றார்கள். ஆண்டவரை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவரை நிராகரித்தவர்களே ஆவர். இவர்களே இயேசு கிறிஸ்துவை இன்றும் சிலுவையில் அறையவும் காரணமுமாகி விடுகின்றார்கள் என்பதை அறிந்திடுவோமாக.
இந்த இயேசு என்னும் நாமத்திற்கு இன்னும் அநேக பெயர்கள் இருக்கின்றன. அவைகளே நமக்கு உறுதியான நித்திய நம்பிக்கையுமாயிருக்கின்றன. "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும்" ஏசா. 9:6).
எல்லாராலும் புறக்கணித்து வெறுக்கப்பட்டு கையும் களவுமாய் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவளுக்கு ஆக்கினை தீர்ப்பு அளிக்க இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வந்தார்கள். ஆனால் இயேசுவோ அன்னார்களின் கைக்கு அவளைத் தப்புவித்து, ஆக்கினை தீர்ப்பினை அவளுக்கு அளிக்காமல் "நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே" என்று அவளுக்கு தம் நித்திய ஜீவனை அளித்தாரே, இதினாலே இயேசுவின் நாமம், ஆலோசனை கர்த்தா என்றும், நித்திய பிதா என்றும் சமாதான பிரபு என்றும் விளங்கப்பண்ணிற்றே.
மாற். 4, 5 ஆம் அதிகாரங்களிலே இயேசு கிறிஸ்து எழுந்து காற்றை அதட்டி கடலைப் பார்த்து இரையாதே அமைதலாயிரு என்று அதற்கு கட்டளையிட்ட போது இயற்கையும் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து காற்று நின்றுபோய் மிகுந்த அமைதல் உண்டாயிற்று என்று வாசிக்கின்றோமே. இதனால் அவர் வல்லமை உள்ள தேவன் என்றும் அவர் அதிசயமானவர் என்றும் அறியப்பட்டாரே.
மேலும் அவர் அக்கரைக்கு வந்தபோது அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். இயேசு அவனை நோக்கி அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டு போ என்று கூறியபோது அவனுக்குள் இருந்த லேகியோனாகிய பிசாசுகள் அவனைவிட்டு நீங்கியது. அவனோ வஸ்திரம் தரித்து உட்கார்ந்து புத்தி தெளிந்தவன் ஆனானே. இதனால் இயேசுதாமே வல்லமையுள்ள தேவன் என்றும் விளங்கலாயிற்றே.
ஆகையினாலே இந்த இயேசு கிறிஸ்து தாமே, நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையுள்ள தேவனாயிருக்கின்றார் (எபே. 3:20).
மேலும் இவரோ, தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மை சிட்சிக்கிறவரு மாயிருக்கிறார் (எபி. 12:10) அதே சமயம் ஆக்கினைக்குட்ப்பட்டவனாய் சிலுவையில் அறையப்பட்டு மரணத்திற்கு ஆயத்தமாயிருந்த கள்ளன் ஒருவன் தான் நியாயப்படியே தண்டிக்கப்படுகின்றேன். அதன் பலனை அடைகின்றேன். ஆனால் இயேசுவோ தகாததொன்றும் நடப்பிக்காமல் சிலுவையில் அறையப்பட்டதை அறிந்து அவரை அவர் ராஜ்யத்தின் தேவன் என்று அறிந்து ஏற்று ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று தன்னை அர்ப்பணித்தபோது, ஆண்டவராகிய இயேசு இவ்வுலகின் தன் கடைசி இறுதி நிமிடத்திலே அவனை நோக்கி இன்றைக்கு நீ என்னோடு கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே கூறுகின்றேன் என்று அவனை இரட்சித்தது, கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கிறது என்பதை உலகம் அறியலாயிற்று.
ஆகையினால் அருமையானவர்களே, இந்த கிறிஸ்மஸ் பண்டிகை நாட்களிலாவது, ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்து ஏன் இப்பூமிக்கு வந்தார் என்றும் அவருடைய கர்த்தத்துவத்தையும் அறிந்தவர்களாய், மேய்ப்பர்களைப் போன்று இரட்சிப்பின் சுவிசேஷத்தை கேட்டவர்களாய் மட்டுமல்லாமல் இரட்சகரைத் தேடிச் சென்றதைப் போன்று நாம் யாவரும் அவரை ஏற்று தரிசித்து நாம் பெற்ற சங்கதியை, இரட்சிப்பை பிரசித்தம் பண்ணிடுவோமாக. இதனாலே அவர் நம் இரட்சகர் என்று அறியப்படுகின்றவராவார்.
ஆனால் இந்நாட்களில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் விசுவாசிகள் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றிடாமல், தங்களைத் தாங்களே ஊழியக்காரர்களாக, மிஷினெரிகளாக கூட்டத்தலைவர்களாக, ஆராதனையின் நாயகராக காண்பிப்பதையே தங்களின் ஆவிக்குரிய வாழ்வாக கொண்டு வருகின்றார்கள். சாத்தானே இவர்களின் மனக்கண்களை குருடாக்கி விடுகின்றான். இவர்கள் தங்களுக்கான பிரகாசமான மனக்கண்களை இழந்தவர்களாகிவிடுகின்றனர். அதனால்:
இவர்களுக்கு இயேசு கிறிஸ்துவோடு வாழும் வாழ்வைவிட அபிஷேகம், அந்நியபாஷை, இசை ஆராதனை போன்ற வெளியரங்கமான சடங்காச்சாரங்களிலே திருப்தி கொண்டவர்களாகிவிடுகின்றனர்.
இவர்களுக்கு நித்திய ஜீவனை பற்றிய விஷயம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கி விடுகின்றது.
இவர்களுக்கு தேவ சித்தத்தை விட ஊழியக்காரர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பதுவே மேலானதாகியுள்ளது. அவர்களின் ஆலோசனைகளே தேவ சித்தமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இவர்களுக்கு நித்திய நரகம், ஆக்கினை பற்றிய அறிவு இல்லவே இல்லை என்பதே உண்மை. இவர்களுக்கு இரட்சிப்பின் அனுபவ வாழ்வுக்கு மாற்றாக, தீமையான செயல்களில் ஈடுபடாது தாங்கள் செய்து வரும் பற்பல நல்ல நற்பணிகளே போதுமானது என்பதில் உறுதி கொண்டு விடுகின்றார்கள்.
இவர்கள் இரட்சிப்பின் செய்தியினை அவ்வப்போது அதிகமாய் கேட்டு வருவதினால் அதன் முக்கியத்துவத்தினை அறிந்துணரக் கூடாதவர்களாகி விடுகின்றனர்.
இவர்களுக்கு இரட்சிப்பின் வாழ்வு, சோம்பலானதும் அதிலே நடப்பது கடினமானதும் ஆகும் என எண்ணி அதற்காக உலக சிற்றின்பத்தை ஏன் இழக்க வேண்டும் என்பதாக கருதி தங்கள் இருதயத்தை கடினப்படுத்திக் கொண்டு விடுகின்றார்கள்.
இவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஊழியர்களை தங்களுக்கு தாங்களே உருவாக்கிக் கொண்டு அவர்களுக்கு கொத்தடிமைகளாகி விடுகின்றார்கள்.
"தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்" லூக். 12:47:48.
ஒருவனுடைய குணாதிசயமே அவனுக்கான சுதந்தரத் தன்மையை நிர்ணயம் செய்கின்றது. ஒருவனுடைய பொறுப்பு தன்மையினையும் அவனுடைய குணாதிசயத்தையும் தனித் தனியாய் பிரித்து விடக் கூடாதே.
உதாரணமாக ஒரு சிறு குழந்தைக்கு எந்த பொறுப்பும் கிடையாது. அதனால் அது எதற்காகவும் எதைக் குறித்தும் கவலைப்படவே செய்யாது. ஆனால் அதற்கு சுதந்தரமாய் ஓடித் திரிய முடியாது. அநேகர் அதனை கண்காணிக்கிறவர்களாய் சுற்றிலும் இருப்பார்கள். அக்குழந்தை வளரும் போது அவன் மீது பல பொறுப்புக்கள் சுமத்தப்படுகின்றன. அதனால் அவன் சுதந்தரமாகவும் நடந்து கொள்ள முடிகின்றது. ஒரு கார் (வாகனம்) ஒன்று அவனுக்காக வாங்கப்பட்டு அவனிடம் அதன் சாவியை கொடுத்து சுதந்தரமாய் அதனை ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், அவன் முறைகேடாய் பொறுப்பற்றவனாய் அதனை ஓட்டிச் செல்வானானால் அந்த வாகனத்தின் சாவியை எந்நேரமும் அவனிடமிருந்து திரும்ப பெறப்படும். அவ்வமையம் அவன் சுதந்தரம் தடுக்கப்படுகின்றது. தொடர்ந்து இன்னும் அதிகமாய் துணிகரமாய் பொறுப்பற்று நடந்து பிறருக்கு தீமை விளைவிப்பானேயானால் அவன் காவற் துறையினரால் தண்டிக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுவான். இதனைப் போன்றே எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுமோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும். தேவ சித்தத்தை அறிந்தும் தேவ சித்தத்தின்படி செய்யாத ஊழியக்காரன், விசுவாசி கிறிஸ்தவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
அருமையானவர்களே இது வரையிலும் அநேக கிறிஸ்மஸ் பண்டிகைகளை பொறுப்பற்றவர்களாய் ஆண்டவரின் சித்தத்தின்படி செய்யாமல் அவரவர்களின் சுதந்தரத்தின்படியே வாழ்ந்து வருகின்றோம். எத்தனை பேரின்ப பெருவிழாக்கள் எத்தனை செய்திகள், தேவசத்தத்திற்கு இதுவரையிலும் செவி சாய்க்கவில்லை. சுதந்தரமாய் குடித்து வெறித்து அநியாயம் அக்கிரமமான பாவங்களை செய்து வேசித்தனமும் புரிந்து தேவ ஊழியங்களையும் செய்து வருகின்றோமே. அதனால் தேவனுடைய நாளிலே அதிகம் கேட்கப்படுமே. அதிக அடிகளும் எதிர்கொள்ள வேண்டிவருமே.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த கிறிஸ்மஸ் நாளில் பிறந்தபோது அவருக்கு வசதியான இடம் கூட கிடைக்கவில்லை . சத்திரத்திலும் இடம் இல்லை. ஆனால் ஆண்டவரின் இரண்டாம் வருகையோ, இதுபோன்று தாழ்மையிலும், ஏழ்மையிலும் அல்ல, ராஜாதி ராஜாவாக, அதிகாரங்களோடும் நியாயாதிபதியாகவும் வருகின்றார். இந்த கிறிஸ்மஸ் நாளிலே ஆண்டவராகிய இயேசு பாவிகளாகிய நம்மனைவருக்காக, நம் பாவங்களுக்கான தண்டனையை தன்னிலே ஏற்று சிலுவையிலே மரிக்கவே பிறந்துள்ளார். ஆனால் அவருடைய இரண்டாம் வருகையோ, மனந்திரும்பின பாவிகளை தம்மோடு அழைத்துச் செல்லவே வருகின்றார். நம்மில் ஒருவரும் ஏமாற்றம் அடைந்திடவே மாட்டோம், அவர் நிச்சயமாய், சீக்கிரமாய் வருகின்றார். மாரநாதா.
ஆகவே இந்நன்நாளிலே :
நாம் விசுவாசத்தோடு அவரை பின்னோக்கிப் பார்ப்போம். அவரே நமக்காக சிலுவையில் மரித்த இரட்சகரே
நாம் அன்போடு அவரை மேல் நோக்கி பார்ப்போம் அவரே நமக்கான நீதியின் கீரிடம் சூட்டப்பட்ட இரட்சகரே
நாம் நம்பிக்கையோடு அவரை எதிர்பார்த்து முன்நோக்கி பார்ப்போம் அவரே தம் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரும் இரட்சகரே
ஆண்டவர் தாமே இந்த 2021ஆம் புத்தாண்டிலே நம்மனைவரையும் சம்பூரணமாய் சகல நன்மைகளினால் ஆசீர்வதித்து வழிநடத்திடுவாராக ஆமென்.
ஆசிரியர்
பிலிப்ஜெயசிங்