தேவ செய்தி டிசம்பர் 2020 - What is the difference "Words of the LORD" & "GOD's Words"

 “அவனோ இரட்சிக்கப்படுவான், அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்” 

1 கொரி. 3:15 

He himself will he saved yet so as through fire 

     பரி. பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்திலே 2:5-12 வாசிக்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து நிறைவேற்றிய மிஷினெரி பணியினை முழுமையாய் அறிய முடிகிறது. பிதாவின் சித்தத்தை மட்டுமே நிறைவேற்றி அவற்றிலே அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அபூர்வமானவராகவே வாழ்ந்தும் காட்டினார். சர்வ அதிகாரங்களையும் தன்னிலே கொண்டவராக, தன்னையே தியாக பலியாக அளித்தவராக, பொல்லாப்பு பாவங்கள் நிறைந்த பூமியிலே மனுஷகுமாரனாக, பாவமற்றவராக வாழ்ந்தவராக, சகல மனுமக்களையும் பாவங்களிலிருந்து மீட்டு இரட்சிக்கின்றவராக, தேவகுமாரனாக மறுபடியும் பூமிக்கு வந்து தம் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் முன்னோடியாக, தம் மிஷனெரி பணியினை முடித்துள்ளார் என்று வாசித்து அறிகின்றோம். இவ்வாக்கியங்களிலே கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஆண்டவரின் இரண்டாம் வருகை யாவும் அடங்கியுள்ளது. அவர் அன்று ஒலிவமலையிலே தம் பாதங்களை பதித்து தங்கி ஒலிவமலையைச் சுற்றி தம் ஊழியங்களை நிறைவேற்றினார். (லூக். 21:37) மறுபடியும் அவர் அதே ஒலிவமலையிலே தம் பாதங்களைப் பதிக்க தம் இரண்டாம் வருகையாக வரவிருக்கின்றார். அப்பொழுது அந்த ஒலிவமலை இரண்டாய் பிளந்து போகும் (சகரி. 14:4) அங்கே நாம் யாவரும் ஆண்டவராகிய இயேசுவை நேரடியாக சந்திக்க இருக்கின்றோம். இந்த சந்திப்பை எவராலும் தவிர்க்க முடியாது, இயேசுவை சந்திக்காமல் தப்பிச் செல்ல எவராலும் கூடாது. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லையே அப். 4:12. 

     இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை தம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே இரட்சிக்கப்பட்டவர்களாகின்றனர். அந்நாள் பரியந்தம் அவர்கள் நடப்பித்த சகல பாவங்களையும் பாவ எண்ணங்களையும் 100% பூரணமாய் மன்னித்து அவர்களிலே தம் பரிசுத்தாவியையும் 100% பூரணமாய் வாசஞ்செய்யப் பண்ணுகிறார். அவர் நம்முடைய கடந்த கால சகல பாவங்களையும், அநியாயங்களையும் கிருபையாய் மன்னித்து நம்முடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று எபி. 8:12யில் வாக்கும் செய்துள்ளார். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் (infinity) நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கியுள்ளார் (சங். 103) நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டும் விடுகின்றார் (மீகா 7:19). எந்த கிரியையும் இல்லாமல் விசுவாசத்தினாலே நாம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக மாற்றப்பட்டாலும் இந்த மாறுதலிலே மனந்திரும்புதலின் கனிகளாகிய, களவாடியதை, தவறுதலாய் பெற்ற ஆஸ்தியை திரும்பச் செலுத்து தலும் பகைஞரோடும், எதிரிகளோடும் சமாதானமாய் ஒப்புரவாகுதலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டியது மிக மிக அவசியமே. 

     நாம் விசுவாசித்து இரட்சிக்கப்படும் போது நம்முடைய பாவங்கள் சிவேரென்றிருந்தாலும், இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் உறைந்த மழையைப் போன்று, பஞ்சைப் போன்று மாற்றி நம்மிலே தூய ஆவியானவர் தங்கும் பரிசுத்த ஆலயமாக நம் இருதயத்தை மாற்றிவிடுகின்றார். அதனால் இரட்சிக்கப்பட்ட நாம் நமக்குள்ளே வாசஞ் செய்யும் பரிசுத்தாவியானவரை துக்கப்படுத்திவிடாமல், நாம் செய்து வந்த நம் பழைய பாவங்களில் ஜெயம் பெறுகின்றவர்களாய் வாழ்ந்திட வேண்டுமே. நமக்குள்ளே இருக்கும் ஆவியானவர் நம்மை பாவத்தைக் குறித்தும். நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உடனுக்குடன் கண்டித்து உணர்த்துகின்றவராகவே இருக்கின்றார். அவர் பலமுறை உணர்த்தியும் ஆவியானவருக்கு கீழ்ப்படியாமல், இருளையும், பாவங்களையும் மறுபடியும் இருதயத்திலே துணிகரமாய் பேணிக் கொள்வோமானால் ஆவியானவரே நம் இருதயங்களிலிருந்து நிரந்தரமாய் வெளியேறிவிடுகின்றார். அந்த இடத்திலே சாத்தானே தன்னிலும் பொல்லாத அசுத்த வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு கூட்டிக் கொண்டு வந்து உட்புகுந்து அவனுக்கு அதிக கேடுண்டாகச் செய்திடுவானே. ஆனாலும் ஆண்டவர் நம்மிடத்தில் மறுபடியும் உண்மையாய் மனந்திரும்பி வருகின்றவர்களை ஏழு அல்ல ஏழு எழுபது முறையாகவும் தம்மோடு சேர்த்துக் கொள்ளவே விருப்பமுடையவராயிருக்கின்றார். இதுவே ஆண்டவர் நம்மீது கொண்ட தேவ அன்பாகும். 

     நாம் ஒரு கிரியையும் செய்யாமலும், ஒரு செலவும் இல்லாமலும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பினை இலவசமாய் பெற்றுவிட்டோம். இது பிதாவாகிய தேவன் நமக்கு அளித்த ஈவு. துதிகளின் மத்தியில் வாசஞ் செய்து வந்த இயேசு, தூதர்களையும் மகிமையான பரலோகத்தையும், பிதாவின் பிரசன்னத்தையும் விட்டு இறங்கி தம்முடைய கையின் கிரியைகளினாலே உருவாக்கப்பட்ட மரியாள் யோசேப்புக்கு மகனாக, சாதாரணமான மானிடருக்கு கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே மாம்சத்திலே இப்பூமியிலே பிறந்தார், வாழ்ந்து காட்டினார், சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தாமே அடிமையாக ஒப்புக் கொடுத்து இரத்தம் சிந்தி சம்பாதித்தளித்த இரட்சிப்பினையே நாம் கிருபையாய் அடைந்துள்ளோம். நமது பட்சத்திலே எந்த தியாகமும் இழப்பும் இல்லாதிருந்தும், சாதாரண ஒரு விசுவாசத்தினாலே பரலோகத்தின் பங்கினை இயேசுவோடு கூட அடைகின்றோம். இவ்வளவாய், ஒரு செலவும் இல்லாது பெற்ற இரட்சிப்பினை, பாவமன்னிப்பினைக் கொண்டு இன்று பெரும்பாலான ஊழியர்கள், விசுவாசிகள் தங்களுக்குத் தாமே பணம் சம்பாதிப்பினை மாத்திரமே கொண்டு வருகின்றார்கள். இலவசமான பாவ மன்னிப்பு, இலவசமாய் கிடைக்கும் அற்புதங்கள், சுகங்கள், இவற்றினையெல்லாம், தாங்கள் ஏதோ பாடுபட்டு, உபவாசித்து, ஜெபித்து மக்களுக்கு அளிப்பது போன்ற ஒரு பிரமையைக் மக்கள் முன்பாக காண்பித்து, தங்கள் ஊழியத்தை தாங்குங்கள், தங்கள் ஊழியங்களுக்கு இன்னென்ன வகைகளெல்லாம் தேவைகள் என்று மக்களை இரட்சிப்பினை மட்டும் கண்டடையச் செய்து விட்டு, அல்லது சில அற்புதங்களை மட்டும் அடையச் செய்து விட்டு தாங்களே அன்னார்களுக்கு ஒரு நிரந்தரமான தேவனின் தரகர்களாக காண்பித்து இவ்வகை ஊழியங்களினால் தாங்களும் வாழ்வதே இக்காலத்து ஆவிக்குரிய வாழ்வாக உள்ளது என்பதே உண்மையாகும். இதனால் இரட்சிப்பு சர்வ சாதாரணமானதாகவே கருதப்படுகிறது. விசுவாசித்தால் மட்டுமே போதும், இயேசு கிறிஸ்துவோடு கூட அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்து விடலாம். இது அவரவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையெனக் கூறி அனைத்து கிறிஸ்தவ சபைகளின் விசுவாசிகள் ஊழியர்கள், பாஸ்டர்மார்கள், போதகர்கள், பேராயர்கள், மாடரேட்டர்கள் யாவருமே சாதாரண உலக மனிதனைப் போன்றே வாழ்ந்து அநியாயம், அக்கிரமம், சுயம், ஆணவம், தற்பெருமை, சுயநீதி, பொய், கள்ள கணக்கு, களவு வேசித்தனம், குடி, பாகுபாடு, பாரபட்சம் ஜாதி வித்தியாசம் ஆகியவைகளில் சகஜமாக தங்களில் பேணிக்கொண்டு, ஆவிக்குரியவர்களாக ஞாயிற்றுகிழமை ஆராதனை வேளைகளில் தங்களை தேவர்களாக காண்பித்துக் கொண்டு சபை மன்றத்திலே தேவன் கூறினார், தேவன் வெளிப்படுத்தினார், தேவன் காண்பித்தார் என்று தங்களுடைய சுய வேத அறிவினாலே நாகரிகமான பண்டிதர் போன்று செய்திகளை தைரியமாய் கொடுத்து வருகின்றார்கள். கேட்கும் மக்களும் ஆட்டுமந்தையைப் போன்று ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடுகின்றவர்களாக மாறிவிடுகின்றனர். மேடை பிரசங்கிமார்களும் அபிஷேகம் இறங்கு வதாக, பெலமாய் இறங்குவதாக பலமாய் ஆசீர்வதிப்பாராக, என்று மக்களை கைவசப்படுத்தும் விதமாய் உரத்த குரலில் ஜெபித்தும் விடுகிறார்கள். மக்களை இன்னும் மாம்ச ரீதியாக உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபியுங்கள், ஸ்தோத்திரம் செய்யுங்கள், ஆராதியுங்கள் கையை அசையுங்கள் பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து கூறுங்கள் என்று கூறுவதெல்லாம் மூளைச் சலவை மட்டுமே என்று யார் அறிந்துணர்கின்றார்கள். மக்கள் அந்நிய பாஷையில் உளறிவிட்டால், ஆவியானவர் நிரப்பிவிட்டார் என்று மக்களை தவறுதலாய் வழிநடத்தியும் விடுகின்றார்கள். இதுவே இன்றைய ஆவிக்குரிய உலகமாகும்

     . மனந்திரும்புதல், இரட்சிப்பு என்பது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பம் மட்டுமே ஆகும். ஒரு கட்டிடத்தின் அஸ்திபாரம் மட்டுமே. வேதத்திலே கீழ்க்கண்ட 3 காரியங்ளை காணக் கூடுமே. 

  ஓட்டத்தை பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடி முடிக்க வேண்டுமே. 

  ஜெயம் பெற்றவர்களாக வாழ்வில் வாழ்ந்து முடித்திட வேண்டுமே.

   யாவற்றிற்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டுமே. 

   இவ்வகையான முடிவுகளை வெற்றிகரமாய் கொண்டிராதவர்கள் ஆக்கினைக்கு தப்ப முடியாதே. இதுவரையிலும் அன்னார்கள் பேசின அந்நிய பாஷை, கொண்டாடிய அபிஷேகம், ஆர்ப்பரித்த ஆராதனை அவர்களை அக்கரை கொண்டு போய் சேர்க்காதே. எச்சரிப்படைந்திடுவோமாக.

    மனந்திரும்பினவர்கள் இரட்சிப்பை பெற்றவர்கள் அனைவருமே, தங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தவர்கள் மாத்திரமே ஆவர். தேவன் ஆபிரகாமை அழைத்தபோது (இரட்சித்த போது) தன் தேசத்தை இனத்தார்களை விட்டு வரச் செய்தாரே. அவனும் கீழ்ப்படிதலாய் தனக்கானவற்றை இழந்து வந்தான். ஒன்றை இழக்கச் செய்தவர் இன்னும் பலவற்றை இழக்கவும், அவர்களை பரிசோதிக்கவும் தேவன் முற்பட்டாரே. பாலும் தேவனும் ஓடுகிற கானானை அளிப்பேன் என்று அழைத்தவர். முதலில் கல்தேயர் பட்டணத்தை விட்டு வரச் செய்தார், இழக்கச் செய்தார். பின்பு அவர் கொடுக்கும் தேசத்தை ஏறெடுத்துப் பார் என்றார். பின்பு எழுந்து தேசத்தின் நீளமும், அகலமும் எம்மட்டோ அம்மட்டும் நடந்து திரி. உனக்கு அதைத் தருவேன் என்றார் (ஆதி. 13:17) பின்பு நீ எனக்கு முன்பாக நடந்துக் கொண்டு உத்தமனாயிரு (ஆதி. 17:1) உன்னை மிகவும் திரளாய் பெருகப் பண்ணுவேன் என்றார். அவ்விடத்திலே ஆபிரகாமுக்கு, மரித்த தன் மனைவி சாராளை அடக்கம் செய்ய 6 அடி நிலம் கூட இல்லாதிருந்தது, தொடர்ந்து அவர் பிரியமாய் நேசித்த தன் ஏக புதல்வனை தகனபலியாக பலியிடு என்றார். அப்பொழுது தேவன் நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து வானத்து நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப்பண்ணுவேன் என்றார். பின்பும் தேவன் கூறியது ஆபிரகாம் என் சொல்லுக்கு கீழ்ப்படிந்தபடியினால், அவர் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். (26:4,5). 

     ஆனால் இந்நாட்களில் எந்த ஆவிக்குரிய தலைவர்களும் தங்கள் மந்தையை இவ்விதமாய் ஆவிக்குரிய பாதைகளில் வழிநடத்திடச் செய்வதில்லையே. பொறுமை, தியாகம், சகோதர அன்பு, சுயநீதியை அழித்தல், தாழ்மை, சகித்தல், பிறரை மன்னித்தல் போன்றவைகளை முக்கியப்படுத்துவதில்லையே. மாறாக அபிஷேகம், அந்நிய பாஷை, கிருபை ஆராதனை இவைகளை மட்டுமே கூறி மக்களை நோகப்பண்ணாது சுகபோக பிரியராய் வாழ்ந்து, தங்களையும் வாழச் செய்வதினையே மறைமுகமாய் தக்க வைத்து வருகின்றார்கள், என்பது தானே உண்மை 

    அருமையானவர்களே, நாம் மனந்திரும்புதலோடு நின்றுவிடாமல் ஆவிக்குரிய மாளிகையை கட்டி முடித்து ஓட்டத்தை ஓடி முடிக்கின்றேன் என்று கூறிட வேண்டுமே. நாம் கட்டிக் காத்து, உழைத்த ஆவிக்குரியவைகள் அக்கினியினால் பரிசோதிக்கப்படும் என்பதை அறிந்திடுவோமாக. சுத்த தங்கம், பொன் அக்கினிக்கு ஒருபோதும் பயப்படாது. அது அக்கினியினால் இன்னும் சுத்த பொன்னாகவே மாறும். ஆனால் நம்முடைய ஆவிக்குரிய செயல்பாடுகளோ எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும் என்றுதானே 1 கொரி. 3:13-15-யில் வாசிக்கின்றோம். நாம் உழைத்தது,  சாட்சியாய் வாழ்ந்தது அக்கினி பரிட்சையில் நிலைத்தால் நாம் அதன் கூலியை பரலோகில் பெறுவோம். அக்கினியில் வெந்துப் போனால் நாம் வாழ்ந்த வாழ்க்கை யாவும், செய்த ஊழியம் யாவும் நஷ்டமடையுமே. ஆனாலும் ஆண்டவர் கூறுகின்றார், நம்முடைய உழைப்பு, வாழ்வு உண்மையும் உத்தமமுமாயிருக்குமானால், அவன் மாத்திரமே சிலுவையில் கள்ளனைப் போன்று இறுதி வேளையில் இரட்சிக்கப்பட்டவனானான். அவன் மனைவி, பிள்ளைகளோ அவன் சபை மக்களோ கைவிடப்பட்டவர்களாவார்களே.  அதுவும் அவனோ அக்கினியில் அகப்பட்டு, எப்படியோ முழுமையாய் வெந்து போகாததினால் ஜீவன் மாத்திரம் தப்பி பிழைத்தது போன்று அவன் அக்கினியினின்று தப்பி, அலங்கோலமாய், அவமானமாய், தலைகுனிந்தவனாய் பரலோகம் நுழைவான் என்று எழுதப்பட்டுள்ளது உண்மையும் சத்தியமுமேயாகும். 

     ஆகையினால் இன்றே நாம், இரட்சிப்போடு நின்றுவிடாமல் போதகர்கள் கூறும், அபிஷேகம், அந்நியபாஷை ஆராதனை என்று அவைகளில் மயங்கி அழிந்து விடாமல், அக்கினி சோதனைகளில் ஜெயம் பெற்றவர்களாக, நாமும் நம் குடும்பமுமாக தேவனுடைய மோட்ச மாளிகைக்குள்ளே, தைரியமாய் நுழைந்திட இப்புத்தாண்டிலே நம்மை உண்மையாய் அர்ப்பணித்திடுவோமாக. புத்தாண்டு வாக்குத்தத்தம் எந்த சந்தையில் கிடைக்கும் என்று அலைந்திடாமல் நாமாகவே நம்மைத் தாழ்த்தி கீழ்ப்படிந்து ஜெபித்து கர்த்தருடைய வசனத்தை நம்மிலே உண்டாக பெற்றிடுவோமாக (Word of the Lord) போதகர்கள் கூறும் வார்த்தைகள் வாக்குத்தத்தங்கள் கர்த்தருடைய வசனங்கள் அல்ல. அவைகள் வேத வார்த்தைகள் மாத்திரமே. (God's word) அவைகள் வேதாகமத்தில் ஏராளமானவைகளாக இருக்கின்றன. கர்த்தருடைய வசனம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் உண்டாகக் கூடியது மாத்திரமே. ஆமோஸ் 8:11யின்படி இது கடைசி காலம். கர்த்தருடைய வசனம் கிடைக்கக் கூடாத காலம், உலகமெங்கிலும் அலைந்தும் கிடைக்கப்படாது. இது கர்த்தரால் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டாகக் கூடியது. அவைகள் மாத்திரமே நம்மை இறுதிவரை வழிநடத்திச் சென்று விடும். வேத வாக்குத்தத்தங்களை, மாதந்தோறும் வருடந்தோறும் மாறி மாறி கேட்டிடலாம். அவைகள் நம்மை வழிநடத்திடச் செய்யாது என்பதே உண்மை . ஆண்டவரின் 2 ஆம் வருகைக்கு பின்பாக, உலகிலே வேதபுத்தகமோ, வேத வசனங்களோ காணப்படாது என்று கூறுவது தவறு. தேவனுடைய வருகைக்கு பின்பு வேதபுத்தகங்கள் எங்கும் மறைந்திடாமல் காணப்படும். சட்டவாக்கியங்களும் சுவற்றிலே காணப்படும். ஆனால் கர்த்தருடைய வசனம் காணப்படாது. கர்த்தருடைய வசனங்களை கூறி அறிவிக்கும் பரிசுத்தர்கள் காணப்பட மாட்டார்கள். ஆனால் தேவ வசனங்களை கூறும் சாத்தானும் அலைந்து திரிவான் என்ற சத்தியத்தை அறிந்திடுவோமாக. ஆதி. 15:1, 1 சாமு. 15:10, IIசாமு. 7.4, 1 இராஜா. 18:1 ஆகிய வசனங்களில் போன்றவைகளாக நாமும் இப்புத்தாண்டிலே கர்த்தருடைய வசனம் நம்மிலே உண்டாகிட பெற்றிடுவோமாக. ஆமென். 

சகோ. பிலிப் ஜெயசிங். 

நாசரேதீ ஜெப ஐக்கியம், நாசரேத்