ஆசிரியர் உரை
கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த வாசகர்களுக்கு,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இனிய நல் வாழ்த்துக்கள். இந்த கொரோனா நாட்களிலே நாம் எங்கு சென்றாலும் நமக்கு காய்ச்சல் உள்ளதா என்று பலவிதங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் மூலம் நாம் தகுதியானவரா? ஆரோக்கியமானவரா? என்று கண்டறியப்படுகின்றோம். இந்த கொரோனா தொற்று நமக்குள்ளே தன்னில்தானே உருவாகிவிடுவதில்லை. பிறர் மூலமாகவே நாம் எதனையும் அறியாத நிலமையிலேயே இதிலே பாதிப்படைந்து விடுகின்றோம். இதனை ஆரம்பத்திலே கண்டறிய முடியாது. சில நாட்கள் கழித்து நம் உடலில் காணும் சில மாற்றங்கள் மூலமாகவே கண்டறியப்படுகின்றது. இந்த கொரோனா அநேகருக்கு மரணத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இஸ்ரவேல் மக்கள் அற்புதங்களோடும் அடையாளங்களோடும், இரவோடு இரவாக விலையேறப்பெற்ற பொன் ஆபரணங்களோடும், எல்லா உடமைகளோடும் எகிப்தை விட்டு மோசே தலைமையில் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களோடு கூட பல ஜாதிகளான அந்நிய ஜனங்களில் பலர் ஆண்டவர் நடப்பித்த அற்புத அடையாளங்களினால் ஈர்க்கப்பட்டவர்களாய் தாங்களும் எகிப்தினைவிட்டு புறப்பட முன்வந்து இஸ்ரவேல் மக்களோடு அவர்களுள் கலந்து வந்துவிட்டார்கள். (எண்.11:4) இதனை இஸ்ரவேல் மக்களோ, மோசேயோ, பொருட்படுத்தவில்லை. இந்த பல ஜாதிகளான அந்நிய ஜனங்களாலேயே இஸ்ரவேல் மக்களின் குணாதிசயம் பின் நாட்களில் பாதிப்படைய தொடங்கியது. இதனையும் மோசே அறிந்திடவில்லை. தூதர்களுடைய ஆகாரமாகிய பரலோக மன்னா, அதன் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது. இதனையே தேவன் இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் அவர்களுக்கு புசிக்கக் கொடுத்தார். ஆனால் இஸ்ரவேல் மக்களோடு கலந்துள்ள அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களாயிருந்ததினால் அவர்களின் தொற்றினால் இஸ்ரவேல் மக்களும் இச்சைகளுக்குள்ளாகி எகிப்திலே கிரயமில்லாமல் கிடைக்கப்பெற்ற மச்சங்கள், வெள்ளரிக்காய்கள், கொம்மட்டிகாய்கள், கீரைகள், வெங்காயம், வெள்ளைப்பூண்டுகளை நினைக்கச் செய்து அழுது மோசேயிடம் முறுமுறுப்பைக் காட்டிக் கொண்டார்கள். அந்நிய ஜனங்களின் சேர்க்கையினாலேயே அன்னார்களின் உபதேசத்தினாலே இஸ்ரவேல் மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களாய் மோசே ஆரோனுக்கு எதிராய் போராடத் தொடங்கினார்கள். தேவனால் நேரடியாக தம் மக்களுக்கு அளிக்கப்பட்ட தெய்வீக ஆகாரமாகிய மன்னா இஸ்ரவேல் மக்களுக்கு வெறுப்பாக்கப்பட்டது. அந்நியரின் போதனைகளே மேலோங்கத் தொடங்கியது
இதனைப்போன்றே ஆண்டவர் தாமே நேசித்து தம் சாயலினாலே உருவாக்கிய ஆதாம், ஏவாளின் ஆதி குடும்பத்திற்குள்ளும், தேவன் மாத்திரமே அவர்களோடு உலாவிக்கொண்டிருக்கையில் ஒருநாள், அந்நியனான சாத்தான், ஏவாளை சந்தித்து அவளிடம் ஒரு சில கொரோனா தொற்றை விதைத்ததினால் அவர்களும் இச்சைக்குள்ளானார்கள் என்று வாசித்தறிகின்றோம். அன்று முதல் பாவம் அவர்களை ஆளத்தொடங்கியது. தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் சாத்தானுக்கே கீழ்படியலானார்கள். அன்று சாத்தான், கொலை, விபசாரம் போன்ற காரியங்களை கூறி தவறு செய்யப்பண்ணவில்லையே. ஆவிக்குரியவைகளாக கருதப்படும் பாணியிலேயே ஆதி மக்களோடு பேசி அவர்களை வீழ்த்தியே விட்டானே. சாத்தான் கூறியது என்ன? நீங்கள் சாகவே சாவதில்லை என்ற ஆசீர்வாதத்தைதான் முதல் முதலில் கூறினான். உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றான். நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் அதனை தேவன் அறிவார் என்று தானே கூறினான். இது எத்தன்மையான ஆவிக்குரிய காரியங்களாக காணப்பட்டது. இவற்றிலே சாத்தானின் விஷமத்தன்மை எத்தனையாய் கலந்துள்ளது என்று எதனையும் ஆதாம், ஏவாளினால் அறிய முடியவில்லையே. ஆனால் இவைகள் மாத்திரமே ஆவிக்குரிய கொரோனாவாக ஆதி மக்களை தேவ சமுகத்திலிருந்து ஓடிட செய்து விட்டதே. இதுபோன்றே இந்நாட்களில் ஆசீர்வாத வாக்குத்தத்தங்களைத் தானே கொரோனா கிருமிகளாக பெரும்பாலானான போதகர்கள், ஊழியத்தலைவர்கள், விசுவாச தலைவிமார்கள், ஸ்தாபன தலைவர்கள் கூறி வருகின்றார்கள். பிரபலமான ஒரு பெரிய ஊழியத் தலைவர் 2020ஆம் ஆண்டு கோல்டன் ஆண்டு என்றும் தேவன் அதனை தன்னோடு பேசினதாக பல ஆயிரம் மக்களிடம் கூறியுள்ளாரே. இதுவே உண்மையான கொரோனா தொற்று என்று அறிந்திடுவோமாக.
வாக்குத்தத்தங்கள் என்பது பழைய ஏற்பாட்டின் காலத்திற்கே உரியது. அவைகள் பற்பல தீர்க்கத்தரிசிகளாலேயே உரைக்கப்பட்டு வந்தன. ஆனால் புதிய ஏற்பாட்டின் நாட்களிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு பேதுரு, யாக்கோபு, யோவான் போன்றோர் தாங்கள் ஸ்தாபித்த முதல் ஆதி திருச்சபைகளிலே அன்று முதலாய், அந்நிய பாஷை, அபிஷேகம், சுகமளித்தல், ஐசுவரியம், செழிப்பின் உபதேசம், இன்னும் கூட சுவிசேஷம் கூறுவது மட்டுமே என்றும் அவர்கள் எந்த சபைகளிலும் போதித்தது கிடையாது. ஆனால், இக்காலத்திலே, இவைகள் மாத்திரமே எங்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. இதுவே இக்காலத்து ஆவிக்குரிய கொரோனா தொற்று என்பதினை வாசகர்கள் தயவாய் புரிந்துக் கொள்ள அன்புடன் வேண்டுகின்றேன். ஒருவேளை இந்த செய்தி ஒரு சில வாசகர்களுக்கு வியப்பாக தோன்றலாம். கசப்பாகவும் அநேக ஊழியர்களுக்கு, தலைமையேற்று நடத்தி வரும் விசுவாசிகளுக்கு காணப்படலாம். இவர்கள் வெளியேயிருந்து வந்தவர்களாய் சபை மக்களை, தேவர்களை போல மாறுவதற்கான வழிமுறைகள் என்று சாத்தானின் போதனைகளையே விதைத்து வருகின்றார்கள் என்பதை அறிந்திடுவோமாக.
பரிசுத்த பவுல் தீமோத்தேயுக்கு எழுதும் போது 1தீமோ.4:13-16 இவ்வசனங்களிலே நீ, உன், உன்னை நீ தேறுகிறது உன்னைக்குறித்து என்று எழுதி நீ வாசித்து கற்றுக்கொண்டவைகளில் ஜாக்கிரதையாய் நிலைத்திருந்து உன் இளமையைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. இப்படி செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக் கொள்வாய் என்பதினையே உறுதிபட எழுதியுள்ளாரே. இதன் பொருள் யாதெனில் வேதவசனத்தின்படியே தன் சொந்த வாழ்க்கையை முதலாவதாக தன் சொந்த குடும்பத்திலே சாட்சியாக வாழ்ந்து கொண்டு தன் வாழ்க்கையினை மாத்திரமே உபதேசமாக பிறருக்கு போதிக்கையில் அதனால் பிரசங்கிக்கிறவனும் அவன் உபதேசத்தை கேட்பவர்களும் இரட்சிப்பை அடைவார்கள் என்பதே சத்தியமும் உண்மையும் ஆகும்.
ஆனால் இக்காலத்து ஊழியர்களோ தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து செயல்படாத நிலமையிலேயே தங்களுடைய வேத அறிவு, ஞானம், அனுபவத்தினால், தங்களைத் தாங்களை தேவர்களுக்கு மேலாக நிர்ணயம் செய்து கொண்டு எந்த தேவபயமுமில்லாமல் துணிச்சலாய் வேத வசனங்களை (தேவ வார்த்தைகளை அல்ல) போதிக்கின்றார்கள். ஸ்தாபன கிறிஸ்தவ சபைகளிலுள்ள 99.9% போதகர்கள், மனந்திரும்பின அடிப்படை அனுபவத்தை பெற்றிராதவர்களே ஆவர். இவர்கள் வேத கலாசாலையில் கற்றதினால், எந்த பொருளின் பேரிலும் போதிக்க திறமையும் தைரியமுள்ளவர்களே ஆவர். அன்னார்களின் வாழ்க்கையில் ஆவிக்குரிய அனுபவம் சாட்சி இல்லாததினால் அவற்றினை பேச அறியாதவர்களே ஆவர். அதனால் தானே தங்களை ஆவிக்குரிய ஊழியர்கள் என்று காண்பித்துக் கொள்ளவே பிரசங்கிக்கின்ற வேளைகளில் அல்லேலூயா ஆமென் என்று பலமுறை கூறிக் கொள்வார்கள். இதனைக் கேட்கும் பாமர மக்களும், இவர் எத்தனையான ஆவிக்குரியவர் என்று ஏமாற்றமடைந்து விடுகின்றார்கள். இதனைப்போன்றே ஆவிக்குரிய சபைகளில், அபிஷேகம், அந்நிய பாஷை என்று ஆதிசபைகளிலே இல்லாதவற்றையே நூதனமாக பிரசங்கித்து வருகின்றார்கள். இவைகளே வேற்று மனிதர்களால் உருவாக்கப்பட்ட கொரோனா தொற்றாக சபைகளை அழித்துக் கொண்டு வருகின்றது என்பதினை அறிந்திடுவோமாக.
இன்னும் சில கூட்டத்தலைவர்கள், பொறுப்பாளர்கள், ஆராதனை என்று மக்களை பலவந்தமாய் எழுந்திருக்கச் செய்து தாங்கள் கூறி கேட்டு காண்பிக்கின்றபடி சரீர அவயவங்களை அசைத்து நடிக்கச் செய்து இவற்றில்தான் தேவன் பிரியங்கொள்ளுகிறார் என்று மக்களை எளிதில் மாயையான ஆவிக்குரிய பாணியில் மயக்கி விடுகின்றார்கள். தன் சொந்த குடும்பத்தில் சாட்சி இல்லாதவனும், தன் சொந்த தாய் தந்தையரை கவனியாதவனும் சகோதரர்களிடையே அன்பு தாழ்ச்சி உள்ளவனாகவும் அநியாயம் பொய் பேசுகிறவர்களாக இருப்பவர்களே அதிகமாய் ஆராதனையை நடத்துகின் றவர்களாயிருக்கின்றார்கள். ஆராதனை நடத்த மனந்திரும்புதல் அவசியமல்ல நன்றாக பாடும் குரல் வேண்டும் அதோடு இசைகருவிகளும் வேண்டும்.
வேதத்திலே உள்ள முதல் ஆராதனையினை யோபு1:20,21யில் காண்கின்றோம். பக்தன் யோபு தன்னுடையவைகள் யாவற்றையும் இழந்த போது தேவரீர் நீர் நடப்பித்தவைகள் யாவும் சரியானதே என்று அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்று தேவனை ஆராதித்தாரே. இதுபோன்ற ஆராதனையை எங்கும் காண முடியவில்லையே. ஆகவே இக்காலத்து ஆராதனை, உபதேசங்கள், அக்கினி அபிஷேகங்கள், அந்நியபாஷை பேசுதல் யாவுமே மனிதர்களால் உருவாக்கப் பட்டவைகளே ஆகும். இதுவே உண்மை தேவ சபையை உருவாகிடச் செய்யாமல் ஆவிக்குரிய வாழ்வை அழித்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று மட்டுமே. இதனைப் புரிந்திடச் செய்யவே, இந்நாட்களில் எங்கும் உலகமெங்கிலும் கொரோனாவை தேவன் தாமே அனுமதித்துள்ளார் என்று அறிந்திடுவோமாக.
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்குள்ளே யூதனல்லாத ஒரே சீஷன். பரி. லூக்கா ஆவார். அவர் வேதத்திலே இரு புத்தகங்களை எழுதியுள்ளார்.
1. லூக்கா எழுதின சுவிசேஷம்
2. அப்போஸ்தலருடைய நடபடிகள்.
லூக்கா சுவிசேஷம் இயேசு கிறிஸ்து சரீர பிரகாரமாக இவ்வுலகில் இருந்த போது அவருடைய வாழ்க்கைப் பற்றிய செய்திகளாகும்.
ஆனால் அப்போஸ்தலருடைய நடபடிகள், இயேசு கிறிஸ்துவின் ஆவிக்குரிய வாழ்வு அதாவது ஆவிக்குரிய சபைகளைப் பற்றிய செய்திகளாகும்.
ஆகவே பரி. லூக்கா அப்போஸ்தலருடைய நடபடிக்கையை எழுதத் தொடங்கும் போது (அப்.1:2) ஆண்டவராகிய இயேசு எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்குமாக அவர் தன்னிலே வாழ்ந்து செயல்படுத்தியதையும் அதனை உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையும் குறித்து எழுதினேன் என்று குறிப்பிடுகின்றார். இவற்றினால், இயேசுவும் பரி. பவுலும் மற்றும் சீஷர்களும் தங்கள் வாழ்க்கையில் கற்று வாழ்ந்தவற்றையே உபதேசித்துள்ளார்கள் என்று அறிகின்றோம். ஆனால் இக்காலத்திலோ ஸ்தாப ஊழியர்கள் வேசிக்கள்ளர்களாய், பொய் பேசுகிறவர்களாய், அநியாயம் அக்கிரமம் செய்தவர்களாய் வாழ்ந்து கொண்டு ஆனால் தங்கள் உபதேசத்திலே அல்லேலூயா என்றும் கூறி, உரத்தசத்தமாய் அதிகாரத்தோடு அன்னார்களுக்கு அனுபவமாக இல்லாதவற்றினை தேவனுக்கு அடுத்ததாக கூறி ஒரு மாயையான ஆவிக்குரிய நிலமையை நிலை நாட்டிக் கொண்டிருப்பதையே இக்காலத்திலே எங்கும் காண்கின்றோம்.
மத்.13ம் அதிகாரத்திலே ஆண்டவர் தாமே திரளான ஜனங்களுக்கு முன்பாக 7 உவமைகள் மூலமாக தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து மாத்திரமே கூறி முடித்த பின்பு அதனைக் கேட்ட ஆசாரியர்கள், வேதபாரகர்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து இடறலடைந்தார்கள் என்று தான் வச.57யில் வாசிக்கின்றோம். ஏன்? அந்த ஆசாரியர்கள் வேதபாரகர்கள் யாவரும் போதகர்களும் வேதபண்டிதர்கள் மாத்திரமே ஆவர். அவர்களுக்கு தேவ ராஜ்யம் குறித்ததான செய்திகள் பேரில் விருப்பமே கிடையாது. அவர்களை தேவன், விரியன் பாம்பு குட்டிகள், வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள், உள்ளே அசுத்தம், பாவம், வெளித்தோற்றமோ பரிசுத்தம், பக்தி. இது போன்றவர்களே இக்காலத்து ஸ்தாபன போதகர்கள் ஆவர். இவர்களை பரிசேயர் கூட்டத்தார் என்றும் அழைத்திடலாம். தங்கள் சொந்த வாழ்க்கையில் ஒரு சீஷனுடைய அனுபவ வாழ்வை கொண்டிடாமல் மக்களால் பெரிதும் பாராட்டப்படும் சாட்சிகளையுடைய போதகர்களாக மட்டுமே காணப்படுவர். தேவனுடைய சீஷர்கள் எனப்படுபவர்கள் தேவனால் மாத்திரமே சாட்சிகள் பகரப்படுகின்றவர்களாவார்கள்.
யோபு பக்தன் கூறுகின்றார் 16:19 இப்போதும் இதோ என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்கு சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்
யாக்கோபு கூறுகின்றார் 3:1 அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக என்று.
மேலும் ஆண்டவராகிய இயேசு கூறிய இறுதி கட்டளையாவது (மத்.28:19) சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் அவர்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்பதே ஆகும். ஆகையினால் இக்காலத்திலே காணப்பட்டு வரும் போதகர்களைக் குறித்து ஜாக்கிரதை யாயிருப்போமாக. ஆண்டவர் கட்டளையிட்டவைகளை கைக்கொள்ளாதவர்கள் தேவனுடைய சீஷர்கள் எனப்படமாட்டார்களே. வசனங்களை போதிக்கும் ஆசிரியர்கள், போதகர்கள் என்று மாத்திரமே காணப்படுபவர்களாவர்
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆதி தேவ சபைகள் உருவாகி சுமார் 65 வருடங்களுக்குள்ளாகவே, தேவன் கட்டளையிட்டவைகளில் நிலைத்திருக்கக்கூடாமல் வீழ்ச்சியடைய தொடங்கிவிட்டதே. அப்படியானால் 2020 வருடங்கள் கடந்த நம் காலத்திலே நம் சபைகள் எத்தனை அதிகமாய் வீழ்ச்சி அடையப்பெற்றுள்ளது என்பதினை எவரும் உணரக்கூடாத காலத்தில் தானே நாம் வாழ்ந்து வருகின்றோம். நம் விருப்பங்களுக்கேற்ப போதகர்களை நாமே உருவாக்கிக் கொள்ளுகிறதாலும் நம் காலத்து போதகர்களும் இவ்வீழ்ச்சியை அறிந்துணர்ந்திட முடியவில்லையே. அன்று சீஷன் பேதுரு ஆரம்பித்த ஆதி திருச்சபை பின் நாட்களில் கத்தோலிக்க திருச்சபை என்று பெயர் பெற்றது.
கி.பி. 786 யில் சிலுவையை வணங்க வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது
கி.பி. 850 யில் பரிசுத்த தண்ணீ ர் அறிமுகப்படுத்தப்பட்டது
கி.பி. 890 யில் மரியாள், யோசேப்பு கடவுளாக வணங்க சட்டம் பிறப்பிக்கப்பட்டது
கி.பி.995 யில் மரித்தவர்களின் வார்த்தைகளையும் வேதவாக்குகளாக கருதப் படலாம்
கி.பி. 998 யில் வெள்ளிகிழமை உபவாசம் லெந்து நாட்களில் அசைவம் கூடாது
கி.பி. 1070 யில் போப் ஆண்டவர், பாவம் தவறு செய்யக்கூடாதவர் ஆவார்
கி.பி. 1184 யில் கத்தோலிக்கர்களுக்கு விரோதமாய் யாராவது பேசினால் கொலை செய்யப்பட வேண்டும்
கி.பி. 1190 யில் பணம் கொடுத்து பாவமன்னிப்பு சீட்டு பெற்றிடலாம்
கி.பி. 1229 யில் வேதாகமத்தை போதகர்கள் மட்டுமே வாசித்து போதிப்பர்
சபை மக்கள் வேதாகமத்தைவைத்திருக்கக்கூடாது இன்னும் பல. இவையனைத்துமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் போதிக்காதவைகளும், வேதத்திற்கு புறம்பானவைகளே ஆகும்.
இதனைப் போன்றே இந்நாட்களிலும் வேதத்திற்கு புறம்பாகவே ஸ்தாபன சபைகளில் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அன்று 1512 ஆம் ஆண்டில் மார்ட்டின் லூத்தர் எழுந்து கத்தோலிக்க உபதேசங்களை எதிர்த்து புராட்டஸ்டென்ட்டினை ஏற்படுத்தினார். அதுபோன்றே இன்றும் இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்க விரும்பும், சீஷர்கள் எழுந்து ஸ்தாபன சபை மக்களை பரலோக ராஜ்ய பாதையில் திசை திருப்பி விட எழும்பிட வேண்டுமே. அன்று மார்டின் லூத்தர் கத்தோலிக்கர்களால் சித்தரவதை செய்யப்பட்டார். அதுபோன்று இன்றும் உபத்திரவங்கள் நிச்சயமாய் எழுந்திடும். யூத போதகர்களே இயேசுவை சிலுவையில் அறைய காரணமானார்களே.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்து 70 ஆண்டுகளுக்குள்ளே சீஷர்களால் உருவாக்கப்பட்ட ஆதி 7 சபைகளுக்குள் ஐந்து சபைகள் வீழ்ச்சியடைந்ததைக் குறித்து எழுத ஆவியானவர் சீஷனாகிய யோவானுக்கு அவனுடைய 95வது வயதினிலே கட்டளையிட்டதாவது (வெளி. 2,3)
முதல் எபேசு சபையானது ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டபடியினால் மனந்திரும்பாத பட்சம் அதனை இருளுக்குள்ளாக்கிவிடுவேன் என்றும்
2ஆம் பெர்கமு சபையானது பிலேயாமின்போதனையை கைக்கொண்டு ஆசீர்வாத செழிப்பு உபதேசத்திற்குள் சென்றுவிட்டபடியால் மனந்திரும்பாத பட்சம் பட்டயத்தால் அழிக்கப்படுவார்கள் என்றும்
3ஆம் தியத்தீரா சபையானது ஸ்திரீகளின் ஆதிக்கத்திற்குள் தள்ளப்பட்டு விட்டார்கள், மனந்திரும்பாத பட்சம் மிகுந்த உபத்திரவங்களுக்குள் தள்ளப்படுவார்கள் என்றும்
4ஆம் சர்தை சபையானது பேர் பிரஸ்தாபத்திற்குள் பெருமையடைந்து கொண்டது அதனுடைய கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவாக காணப்படவில்லை. மனந்திரும்பாத பட்சம் ஆண்டவரின் வருகை அவர்களுக்கு திருடனைப் போல் காணப்படும். கொள்ளைபோவார்கள் என்றும்
5ஆம் லவோதிக்கேயா சபையானது அனலும் குளிரும் இல்லாது ஞாயிறு மட்டும் கிறிஸ்தவர்களாக இதர நாட்களில் பாவங்களை ஆட்க்கொண்டவர்களாக, ஊழியர்களும் பகுதி நேர ஊழியர்களாக வாழ்கின்றார்கள். மனந்திரும்பாத பட்சம் யாவருமே முழு நேர பாவிகளாகவே கருதப்பட்டு நித்திய ஆக்கினை அடைவார்கள் என்று எழுதி வெளிப்படுத்தி எச்சரிப்பின் செய்திகளோடு நம் வேதாகமம் நிறைவு பெறுகின்றதே. எச்சரிப்படைந்திடுவோமாக
இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் ஆரம்பித்த ஆதி சபைகளே, 70 ஆண்டுகளுக்குள்ளே இத்தனையான வீழ்ச்சியை அடைந்ததைப் போன்று 2020 வருடங்கள் கடந்த இந்நாட்களில் அதனைப் போன்று இன்னும் பல பொல்லாத வீழ்ச்சியினிலேயே நாம் காணப்பட்டுள்ளதை எந்த ஆவிக்குரிய தலைவர்களும், ஊழியர்களும் அறிந்திட முடியாத பரிதாபமான நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ளோமே.
அருமையான வாசகர்களே, இவற்றிலேயிருந்து நாம் எங்ஙனம் தப்பிப்பது? நம்மை வழிநடத்த ஆவியானவரை தவிர இவ்வுலகில் யாரும் இல்லை என்று அறிந்து எந்த ஊழியனையும் போதகரையும் நம்பி சார்ந்திடாமல் வேதாகமத்தையும், தேவனையும் மாத்திரமே சார்ந்து வாழ்ந்திடுவோமாக. நம்மால் கூடாது என்று உண்மையாய் அறிக்கை செய்து அதனை வாஞ்சிக்கின்றவர்களுக்கு மாத்திரமே ஆவியானவர் உதவி செய்ய ஆவலாய் காத்துக் கொண்டிருக்கின்றார்.
ஆவியானவரின் வழி நடத்துதலின்படிக்கே, ஆண்டவரின் அடிச்சுவட்டிலே தினமும் நடந்திடுவோமாக.
ஆண்டவரின் கட்டளைகளுக்கு முற்றிலுமாய் கீழ்ப்படிந்திடுவோமாக
முழுவதுமாய் ஆண்டவரை மாத்திரமே சார்ந்திடுவோமாக.
Walk with God daily
Obey God completely,
Trust God absolutely.
"I will never, no not ever, never leave you, nor forsake you” Heb.13:5
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. ஆமென்.
சகோ. பிலிப்ஜெயசிங்,
நாசரேத் ஜெப ஐக்கியம்,
நாசரேத். தூத்துக்குடி மாவட்டம்.