சத்திய வெளிச்சம் - நவம்பர் 2020 - ஆவியானவரின் வைராக்கிய வாஞ்சை அந்நிய பாஷை பேசுவதா

நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார்.     யாக்.4:5


     ஆதியிலே தேவன் தம் சாயலினாலே ஆதாம் ஏவாளை உருவாக்கின போது ஏதேனிலே, அவர்களோடு உலாவி அவர்களோடு வாசஞ்செய்கிறவராக காணப்பட்டார். ஆனால் தேவன் அவர்களை அடக்கி அடிமையாக்கி தம் கட்டுப்பாட்டிற்குள் வைக்காமல் சுதந்தரத்தையும் ஆதி மக்களுக்கு வழங்கியிருந்தார். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மற்றவை அனைத்துமே, சூரியன், நட்சத்திரங்கள் போன்றவைகள் சுதந்தரமற்றவைகளாகவே இன்று வரை தேவனின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இயங்கி வருகின்றன. ஆனால் ஆதாம் ஏவாளோ தமக்கு கொடுக்கப்பட்ட சுதந்தரத்தினை தவறுதலாக பயன்படுத்தி தேவனுக்கு கீழ்ப்படிவதைக் காட்டிலும் சாத்தானின் வார்த்தைகளுக்கு செவி சாய்த்ததினால் தேவனோடு வாசஞ்செய்யும் ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டு பூமியிலே சுற்றித்திரிய வீழ்த்தப்பட்டார்கள். ஆனாலும் மனுமக்கள் மீது தேவனுக்கு அன்பும் பாசமும், இரக்கமும், தயவும் வைராக்கிய வாஞ்சையாயிருந்தபடியினால், பூமியிலிருந்து மக்கள் கூப்பிடும் கூக்குரல் தேவனுடைய சமுகத்தில் வந்து எட்டும் போதெல்லாம் தேவன் அவ்வப்போது இறங்கி வந்து பார்க்கிறவராயிருந்தார்.


     (ஆதி. 18:21) சோதோம் கொமோராவின் கூக்குரல் தேவனின் சமுகம் எட்டின போது அதனை அறிய தேவன் இறங்கினார்.


     (யாத்.2:23) இஸ்ரவேல் புத்திரர் எகிப்தில் அடிமைத்தனத்தினால் தவித்து முறையிடும் சத்தம் தேவ சந்நிதியில் எட்டின போது தேவன் இறங்கினார்.


   பின்பும் கர்த்தர் தம் பிள்ளைகளை சந்திக்க அவ்வப்போது இறங்கினார் என்றும் அறிகின்றோம். மோசேயை சீனாய் மலையின் கொடுமுடியிலே வரவழைத்து அவனோடு பேச இறங்கி இஸ்ரவேல் மக்களுக்கு கற்பனைகளையும் நியாயப்பிரமாணங்களையும் வழங்கினார் என்றும் அறிகின்றோம்.


     பின்னும் இஸ்ரவேல் மக்கள் முறுமுறுத்தவர்களாய், மோசே ஆரோனுக்கு எதிராய் எழும்பின போதும், மோசே தனித்தவனாய் ஜனங்களின் பாரங்களை சுமக்கின்றதை அறிந்து மூப்பர்களில் 70 பேரை கூடச் செய்து மோசேயின் மேல் இருக்கிற ஆவியை மூப்பர்கள் மேலும் வைப்பேன் என்று இறங்கப்பண்ணினார் (எண்.11:17) மோசேயின் காலத்திற்கு பின்பும் இஸ்ரவேல் மக்களை வழி நடத்த நியமிக்கப்பட்ட தலைவர்களுள் மீதும் தேவ ஆவியானவர் அவ்வப்போது இறங்கி அவர்களுக்கும் பதிலளித்தார்.


    தேவனுடைய வைராக்கிய வாஞ்சையாவது, எதுவாயினும் இப்பூமியிலே மனுமக்களோடு தேவன் வாசஞ்செய்ய வேண்டும் என்பதும் பின்பு பூமியிலிருந்து மனுமக்கள் யாவரையும் பாவ வாழ்விலிருந்து மீட்டு பரலோக ராஜ்யத்திலே தம்மோடு வாசஞ் செய்யப் பண்ண வேண்டும் என்பதில் வைராக்கிய வாஞ்சையுள்ளவராகவே இருக்கின்றார். இதற்காகவே சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, பாவங்களில் சிக்குண்டு வாழ்பவர்களை சீர்திருத்தவே அநேக தீர்க்கத்தரிசிகளை அவ்வப்போது பூமியிலே ஏற்படுத்தினார். நியாதிபதிகளை ஏற்படுத்தினார், ராஜாக்களையும் ஏற்படுத்தினார் இவையெல்லாவற்றிலும் திருப்தியடையாத தேவன், தாம் முன் குறித்தபடிக்கே பிதாவின் சித்தப்படிக்கே மனுமக்களை பாவங்களிலிருந்தும் பாவதண்டனையிலிருந்தும் மீட்டு இரட்சிக்க தன்னையே மனுஷகுமாரனாக பூமியிலே பாலகனாக பிறக்க இறங்கி வந்தார். உலகத்தை நியாயந்தீர்க்கவராமல் உலகத்தை இரட்சிக்கவே இறங்கி வந்தார். மேலும் நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தார் இதுவே ஆண்டவரின் வைராக்கிய வாஞ்சையாகும். ஆனால் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்ட சந்ததியாரே ஆண்டவரை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்கள். அவர் மனுமக்களின் சகல பாவங்களையும் ஒரு பாவமும் அறியாத தன் சரீரத்திலே ஏற்றவராய், மனுமக்களின் பாவங்களுக்கான ஆக்கினையினையும் தன்னிலே சுமந்தவராய், மனுமக்களின் பாவ மன்னிப்புக்காக தன் முழு இரத்தத்தையும் சிந்துவதிலும் வைராக்கிய வாஞ்சையுள்ளவராய் தன்னையே சிலுவைக்கு ஒப்புக் கொடுத்தார். மேலும் தான் கூறியபடிக்கே மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தவராய் மறுபடியும் திரும்ப வருவேன் என்று கூறினவராய் பிதாவினிடத்திற்கே ஏறி சென்று விட்டார். ஆனாலும் தம் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடவே மாட்டேன் என்றும், உலகத்தின் முடிவுபரியந்தமும் நம்மோடு இருப்பேன் என்று கூறிய வாக்குபடிக்கே தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை பூமியிலே தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடையே வாசஞ்செய்ய அனுப்பினார். இதனாலேயே நம்மிலே வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார் எதிலிலே வைராக்கிய வாஞ்சை?, இனி எவ்விதத்திலும் சாத்தானான சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட தம் மக்களின் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயத்தோடு வைராக்கிய வாஞ்சையாகவே இருந்து வருகின்றார்.


     இந்த அனுபவத்தை பெற்றிடச் செய்யவே, இயேசு தம் சீஷர்களை பெந்தெகொஸ்தே நாளிலே ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடி வரச் சொன்னார். அப்பொழுது அவர் வாக்கு பண்ணின படிக்கே பரிசுத்த ஆவியானவர் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் இறங்கி அக்கினி நாவுகள் போல காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தார். பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்த விதத்திலேயே ஆண்டவரின் வைராக்கிய வாஞ்சையை காணமுடிகின்றது. இயேசுவின் சீஷர்களைத் தொடர்ந்து இந்த சத்தியத்தின்படிக்கே, தேவன் தாமே மனுமக்களுக்காக ஏற்படுத்திய பாவ மன்னிப்பின் திட்டத்தினை உண்மையாய் விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொண்டவர்களாய், தன் பாவங்களையெல்லாம் தன் வாயினாலே அறிக்கை செய்து மனந்திரும்புகிற ஒவ்வொருவருக்குள்ளும் அச்சணமே தேவனைப்பற்றிய பக்தியிலும், பரிசுத்தத்திலும் வைராக்கிய வாஞ்சையுள்ளவராய் ஆவியானவர் வாசஞ்செய்கிறவராய் இருந்து வருகின்றார். ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவருமே ஆண்டவரின் இரத்தத்தினாலே கிரையத்திற்கு கொள்ளப்பட்டவர்களாகின்றனர். இனி நாம் நமக்கு சொந்தமே இல்லை. தேவனை அப்பா, பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தையும் நாம் பெற்றவர்களாகின்றோம். மேலும் நமக்குள்ளே வாசஞ்செய்யும் ஆவியானவர் நாம் அறிந்தோ அறியாமலோ சில, சில பாவங்களில் விழும் போதும், உடன் தானே அவர் நமக்குள்ளேயிருந்து நம் பாவத்தை குறித்தும், நமக்கான நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துகின்றவராயிருக்கின்றார். உணர்த்தப்பட்ட பாவங்களை விட்டு உடனுக்குடன் மனந்திரும்பாதவர்களும், பாவ உணர்வுகளை தங்கள் தங்கள் மனசாட்சியில் மளுக்கி தொடர்ந்து பாவங்களை விரும்பி செய்து கொண்டிருப்பவர்களும் மனந்திரும்பாதவர்களே ஆவர். ஒருவேளை அவர்கள் மனந்திரும்பினவர்களைப் போல அந்நிய பாஷையை பேசுகிறவர்களாக காணப்படுவார்களானால் அவர்களுக்குள்ளே வைராக்கியமாய் வாசஞ்செய்கின்றவர் சாத்தானின் ஆவியே. பரிசுத்தாவியானவர் அல்லவே அல்ல. ஆகையினால், ஒருவர் பேசும் அந்நிய பாஷையை கேட்டு, கண்டு அவர்கள் விசுவாசிகளே என்று தவறுதலாய் எண்ணி ஏமாற்றம் அடைந்துவிடாதீர்கள். அவர்கள் கூறும் அல்லேலூயா சாத்தானுக்கே உரியதாகும்.


     தேவன் ஆதாமை சிருஷ்டித்த போது மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல அவனுக்கு ஏற்ற துணையை உண்டாக்குவேன் என்று அவனிலிருந்தே ஏவாளை உருவாக்கினார். அப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும் என் மாம்சத்திலே மாம்சமாய் இருக்கிறாள். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்பதே தேவன் விரும்பும் ஐக்கியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவன் தம் பிள்ளைகளோடு கொள்ளும் ஐக்கியமும்  ஒரே மாம்சமாய், புருஷன் மனைவியுமாக கூடி வாழும் ஐக்கியமே. ஒரே மாம்சமாய் இருப்பவர்களுக்குள்ளே வேறு மாம்சம் வரக்கூடாதே. புருஷன் மனைவிக்குள்ளே வேறு புருஷனோ, வேறு மனைவியோ எண்ணளவிலும் வரக்கூடாதே. வந்துவிடுமேயானால் அதுவே வேசித்தனமும், விபச்சாரமும் ஆகும். நம்மிலே வாசமாயிருக்கின்ற ஆவியானவர் நம்மிடத்தில் ஒரே மாம்சமாகவே நிரந்தரமாக ஐக்கியங்கொள்ள வைராக்கிய வாஞ்சையுள் ளவராயிருக்கின்றார் என்பதை அறிந்திடுவோமாக. விவாகம் யாவருக்கும் கனமுள் ளதாயும் விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும், விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று எபி.13:4யில் வாசிக்கின்றோம். அதுபோன்றே நமக்கும் நம்முள் வாசஞ்செய்யும் ஆவியானவருக்கும் இடையில் வேறு எந்த அந்நிய மாம்ச எண்ணமும் நுழைய அனுமதி கிடையாதே.


     ஆனால் இந்நாட்களில், அநேகர் விசுவாசிகள், ஊழியக்காரர்கள், போதகர்கள், விபசார எண்ணங்களோடு ஊழியங்களைச் செய்து வருகின்றார்களே. ரோட்டிலே ஒரு ஸ்திரி சென்றால் அவள் யார்? என்று அறிய விரும்புகின்றார்களே. நவீன உடையணிந்து செல்லும் பெண்களை உற்று நோக்குகின்றார்களே. கற்பனையில் அந்நிய ஸ்திரீயை தன் மனைவியாக எண்ணுகின்றார்களே. திடகாத்திரமான ஆணைக் காணும் போது இவர் போன்று என் கணவர் இல்லையே என்று புலம்புகிற அநேக ஊழியக்காரிகள் விசுவாசிகள் காணப்படுகின்றார்களே. தினசரி பத்திரிக்கையில் வரும் விபச்சாரம், கற்பழிப்பு செய்திகளை விரும்பி படிக்கின்ற விசுவாசிகள் உண்டே . பிறரோடு பேசும் போது பாலினம் சம்மந்தமாககவே அதிகமாய் பேசி வருகின்றார்களே. இப்பேர்பட்ட மக்களுக்குள் ஆவியானவர் வாசஞ்செய்யக் கூடுமோ? ஒரு காலும் கூடாதே. அப்படியானால் இந்நாட்கள் வரை இவருக்குள் இருந்த ஆவியானவர் யார்? இதுவரையிலும் இவர்கள் போதித்து வந்த இயேசு யார்? பரி. பவுல் கூறுகின்றார். அவர் அறிவிக்காத வேறொரு இயேசுவையும் அவர் பெற்றிராத வேறொரு ஆவியையுமே அவர்கள் கொண்டுள்ளார்கள். (11கொரி.11:4) என்றும் அவர்கள் பிரசங்கித்து வரும் சுவிசேஷம் வேறொரு சுவிசேஷமே (கலாத்தியர் 1:8) என்றும்  அங்ஙனம் பிரசங்கிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களாயிருக்கக்கடவர்கள் என்று கடுமையாய் எச்சரித்துள்ளாரே.


     ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடமிருந்து நமக்குள்ளே வாசஞ்செய்ய அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர் திருத்துவதேவரில் ஒருவராவார். அவர், பிதா, குமாரனைப் போன்றே வைராக்கிய வாஞ்சை கொண்டவரே. அந்நிய மாம்சத்தோடு எள்ளளவாகிலும் கலந்திருக்கக்கூடாதவரே. பாவிகளோடும் பாவ இருதயங்களிலும் வாசஞ்செய்யக் கூடாதவரே


        ஆனால் இக்காலத்திலே 99% விசுவாசிகள் ஊழியர்கள், போதகர்கள், பாவங்களிலே ஜீவித்துக் கொண்டு விபச்சாரக்காரர்களாய், பணப்பிரியராய், பொய் பேசுகிறவர்களாய், சுயநலவாதிகளய், தற் பிரியராய் பெருமைக்காரர்களாய், அநியாயங்களை தாராளமாய் செய்கின்றவர்களாய் இருந்துக் கொண்டே, அந்நிய பாஷைகளை பேசுகின்றார்களே. வார்த்தைக்கு வார்த்தை அல்லேலூயா என்று முழக்கமிடுகின்றார்களே. அற்புத அடையாளங்களை செய்கின்றார்களே. தீர்க்கத்தரிசனமும் உரைக்கின்றார்களே என்றால் தேவன் அவர்களை ஒருபோதும் அறியேன் என்றும் அவர் செய்து காண்பித்த அடையாளங்களெல்லாம் அக்கிர செய்கைகளே என்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே தம் வாயினாலேயே கூறியுள்ளாரே


       ஆனால் நமக்குள்ளே வாசஞ்செய்யும் ஆவியானவர் பரிசுத்ததிலும், தேவ பக்தியிலும், வைராக்கிய வாஞ்சையுள்ளவர் மாத்திரமே. ஒரு போதகரை அறிவேன் அவர் கூறுவார், ஆவியானவர் தினமும் அதிகாலையில் அவருக்கு தரிசனமாவார் என்று. நமக்குள்ளே வாசஞ்செய்கிற ஆவியானவரை அவ்வப்போது தரிசனமளிப்பவர் என்றால் அவருக்கு தரிசனமாகின்றவர் அவ்வப்போது வெளியே போய் வருகின்றவராயிருக்கின்றாரோ. இது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே. (11கொரி.11:14). இந்த போதகரின் துணிச்சலான பாவ வாழ்க்கை அப்பட்டமாய் வெளியரங்கமாயிருப்பதை யாவரும் அறிந்ததுண்டே.


     அநேகர் தங்களை இரட்சிக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டு, ஆண்டவர்  என் பாவங்களை எல்லாம் மன்னித்து விட்டார் என்று எங்கும் சாட்சி கூறுபவராயிருந்து, கண்களின் இச்சைக்கும் மாம்ச இச்சைக்கும் அடிமையாக காணப்படுவார்களானால் அவருடைய பாவங்களை மன்னித்தவரான இயேசுவால் ஏன் இச்சையில் ஜெயத்தை அளிக்கவில்லை. குடிப்பதில் ஏன் ஜெயத்தை அளிக்கவில்லை. பாவங்களில் ஜெயம் பெற உதவாத இயேசு, கல்வாரியில் இரத்தம் சிந்தி மரித்த இயேசுவே அல்ல என்பதே உண்மை அவர்கள் வேறொரு இயேசுவினாலேயே இரட்சிக்கப்பட்டவர்களாய் அந்நிய பாஷையினையும் பேசி வருகின்றார்கள்  என்பதை அறியாதிருக்கின்றார்கள். பாவ வாழ்க்கையில் ஜெயம் பெறாமலே  அற்புத அடையாளங்களை காண்பிக்கக்கூடும். தீர்க்கத்தரிசனமும் அறிவிக்கக் கூடும். முழுமையாய் மனந்திரும்பாமலும் பிடிவாதமாய் வேண்டுபவர்கள் அந்நிய பாஷை பேசும் வரங்களையும் பெற்றிடக்கூடும். ஆனால் அந்நிய பாஷை பேசுபவர்களுக்கு நிச்சயம் பரலோகம் என்று வேதத்தில் எழுதப்படவில்லை என்பதையும் அறிந்திடுவோமாக.


     வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற தேவனிடத்திலே பட்சபாதமே கிடையாது. சிறிய பாவி பெரிய பாவி என்று பாகுபாடே கிடையாது. எந்த பாவியாயினும் முழுமையாய் மனந்திரும்பாத பட்சம் அவன் ஆக்கினைக்கு தப்புவதில்லை. அவன் பேசும் அந்நிய பாஷை வரங்களும் அவன் செய்து வந்த சகல ஊழியங்களும் அவனை மனந்திரும்பினவர்களின் பட்டியலில் சேர தகுதியுள்ளவன் என்று ஆண்டவரின் தீர்ப்பினை மாற்றிடச் செய்யாது என்பதும் உண்மையிலும் உண்மையாகும். ஆனால் மனந்திரும்பி ஆண்டவரிடம் சேர ஓடி வருகிற பாவியினிடத்தில் மாத்திரமே மிகுந்த அன்புள்ளவராய் அவனை ஏற்றுக்கொள்வதோடு அவன் கேட்காத மோதிரத்தையும், பாதரட்சையினையும், புது வஸ்திரத்தையும், கொழுத்த விருந்தையும் கொடுக்க ஆவலாயிருக்கின்றார். ஆண்டவர் அளிக்கும் ஒரே வெகுவதி (God's Gift) அவரோடு வாசஞ்செய்யும் நித்திய ஜீவன் மாத்திரமே. கார்களிலும், வீடுகளிலும் "It is God's Gift” என்று எழுதி வரும் எந்த பொருளையும் அளிக்க தேவன் சிலுவைக்கு செல்லவில்லை


       ஒரு வீட்டிலே இரண்டு மணி கடிகாரங்கள் இருந்தன. ஒன்று 3 மணி நேரம் தாமதமாய் ஓடிக் கொண்டிருந்தது மற்றொன்று ஐந்து நிமிடம் மாத்திரமே தாமதமாய் ஓடினது. இவ்விரு கடிகாரத்தில் எது அதிக ஆபத்தானது? எந்த சிறு பையனும் கூறுவான், 3 மணி நேரம் தாமதிக்கும் கடிகாரம் என்று. ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் நன்றாகவே தெரியும் அந்த கடிகாரத்தை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதே இல்லை. ஆனால் ஐந்து நிமிடம் மாத்திரமே தாமதமாகும் கடிகாரமே மிகவும் ஆபத்தானதாகும். அந்த ஐந்து நிமிடதாமதத்தை பொருட்படுத்தாமல் அதனைச் சார்ந்து செயல்படுவோமானால் அந்த ஐந்து நிமிட தாமதத்தில் தானே தனக்கான ரயில் வண்டியையும் விமானத்தையும் விட்டு விடுகின்றவர்கள் ஆகின்றோம் நம் பயணம் தடைபட்டுவிடுகிறதே. இதுபோன்றே சிறிய பாவங்களில் ஜெயமில்லாதவனே மிகுந்த ஆபத்துக்குள்ளானவனாவான், அவன் அழிவதோடு. அவனால் அநேகர் இடறல் அடைவார்களே. இந்த சிறியரில் இடறலை உண்டாக்குகிறவன் கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி சமுத்திரத்தின் ஆழத்தில் அவனை அழிழ்த்துவது நலமாயிருக்கும் என்று ஆண்டவராகிய இயேசு தாமே கூறியுள்ளாரே. ஆகையினால் வைராக்கியத்தில் வாஞ்சையுள்ள ஆவியானவரை முழுமையாய் உண்மையாய் இருதயத்திலே நிரந்தரமாய் வாசஞ்செய்கிறவராய் ஏற்றுக்கொண்டவர்களாய் வைராக்கியமாய் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் ஆண்டவருக்காய் வாழ்ந்திடுவோமாக. அவர்கள் மாத்திரமே, தேவபிள்ளைகளும், விசுவாசிகளும் ஆண்டவரின் சீஷர்களும் ஆவர்.  பரலோக ராஜ்யமும் அவர்களுடையதே. ஆமென்.


 


பிலிப் ஜெயசிங்


நாசரேத் ஜெப ஐக்கியம.


நாசரேத், 628 617 ,  தூத்துக்குடி மாவட்டம்