"சத்திய வெளிச்சம்" - பரம வாசஸ்தலத்தை இவ்வுலகிலேயே எங்கனம் தரித்தல் கூடும்

இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ் தலத்தைத் தரித்துக் கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம். தரித் துக் கொண்டவர்களானால் நிர்வாணிகளாய்க் காணப்பட மாட்டோம்     11  கொரி. 5:2,3


    இந்தக் கூடாரமாகிய இவ்வுலகில் அல்லது நம்முடைய சரீரத்தில் அநேக பாடுகளினாலே யாவரும் தவிக்கின்றவர்களாகவே இருக்கின்றோம். மனுஷகுமாரனும் பலபாடுகள் பட்டு அவமதிக்கப்படுவாரென்று அவரைக்குறித்தும் எழுதியிருக்கிறதே (மாற்கு 9:12) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் யோவான் 16:33 யில் கூறியுள்ளார் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்ள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்பதே. ஆகையினால் இவ்வுலகிலே பாடுகள், உபத்திரவங்கள் இல்லாத வாழ்வு இல்லையென்பதே உண்மை. ஆனால் இந்த பாடுகளினால் எந்த தேவனுடைய பிள்ளைகளும் ஒருக்காலும் அமிழ்ந்து, அழிந்து போவதே இல்லை யென்பதும் உண்மையே.


     சரீரபிரகாரமான வியாதிகளை உலக வைத்தியர்கள் சுகமாக்குகின்றவர்களாக காணப்பட்டாலும் அவற்றினாலே தேவனுக்கு மாத்திரமே மகிமையும் கனமும் உடையதாயிருக்கிறது. ஏனெனில் அத்தகைய மருத்துவர்களுக்கு தேவன் தாமே ஞானத்தையும் அறிவையும் கொடுக்கின்றவராயிருக்கின்றார். ஆனால் ஆவிக்குரிய வியாதிகளுக்கு தேவன் மாத்திரமே பரம வைத்தியராவார். அவரே மனுமக்கள் யாவரையும் சிருஷ்டித்தவரும் ஆவார். ஆகையினால் அவர் அளிக்கும் ஆலோ சனையாவது பரம வாசஸ்தலத்தைத் தரித்துக் கொள்ள மிகவும் வாஞ்சையுள்ள வர்களாயிருக்க வேண்டும் என்பதே. அதனை தரித்துக் கொண்டவர்களானால், நாம் நிர்வாணிகளாக காணப்பட மாட்டோம். நிர்வாணம் மரணத்தையே குறிப்பிடுகிறதாகும்.


ஆதியிலே ஏதேன் ஒரு பரம வாசஸ்தலமாகவேயிருந்தது. அதிலே ஆதிமக்கள் தேவ மகிமையை தரித்தவர்களாகவே காணப்பட்டார்கள். ஆனால் எப்பொழுது அவர்கள் தேவனுக்கு விரோதமாக எழும்பினார்களோ பிசாசின் ஆலோசனையை தேவனுக்கும் மேலாக கருதினார்களோ அவ்வமயமே அவர்கள் நிர்வாணிகளாக காணப்பட்டு, தேவனுக்கு பயந்து ஒளிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதுவே நிர்வாணிகளுக்கான பலனாகியிருக்கிறது. பரம வாசஸ்தலத்திலே மரணம் என்பதே இல்லை


       Sin brings physical death எப்பொழுது ஆதிமக்கள் நிர்வாணிகளாக்கப்பட்டார்களோ அப்பொழுதே அவர்களின் சரீர பிரகாரமான மரண நாள் குறிப்பிடப்பட்டு விட்டது. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் மரிப்பது நிச்சயமே.


     பரம வாசஸ்தலத்திலே (ஏதேனிலே) விருட்சங்களின் கனிகளே அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது. ஆதி.2:16. ஆனால் எப்பொழுது பரம வாசஸ்தலத்தினை தரித் திருத்தலை விட்டு விலகிச் சென்றார்களோ அப்பொழுது முள்ளும், குருக்கும் பூமியிலே முளைக்கத் தொடங்கியது. கனிகளை உண்டு உயிர்வாழ்வதை விட்டு விட்டு வெளியின் பயிர்வகைகளைப் புசிக்கும் நிலை ஏற்பட்டது. (ஆதி.3:18) இதனால் தாவரங்களுக்கும் மரணம் சம்பவிக்கத் தொடங்கியது. தாவரங்களை அழிப்பதினாலேயே தானியங்களை கொய்தல் செய்ய முடிகின்றது


      நிர்வாணியாக்கப்பட்ட உலகிலே மனிதர்களைப்பற்றிய பயமும் அச்சமும் சகல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் உண்டாக ஆரம்பித்தது. (ஆதி.9:2) மிருகங்களும், பறவைகளும் மாம்ச பட்சினியாக மாற்றமடைந்தன. மனிதர்களுக்கும் இவைகள் ஆகாரமாயின. இதனால் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் மரணம் சம்பவிக்கத் தொடங்கியது. பரம வாசஸ்தலத்திலே சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும், ஓனாய், புலி, சிங்கம் ஆட்டுக்குட்டிகளோடு தங்கும் என்று ஏசா.11:7யில் வாசிக்கின்றோமே.


     தொடர்ந்து ஆதி குடும்பத்திலே சொந்த சகோதரன் கொலை செய்யப்பட்டதினால் குடும்பத்திலும் மரணம் நேரிடத் தொடங்கியதே. ஆனாலும் மனிதர்களிடையே எலியா, ஏனோக் போன்றோர் மரணத்தினை சந்திக்காமல் உயிரோடு பரமஸ்தலத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது வேறு விஷயமே. இவர்களைப் போன்றே நாமும் பரம வாசஸ்தலத்தின் வாசிகளாக வாழ்ந்திடவே நமது நிர்வாண நிலமையை உணர்ந்து அதனை தவிர்த்திடவே தேவன் நம் யாவரையும் அவரை பரலோக வாழ்வை இவ்வுலகிலேயே தரித்திட அழைக்கின்றார். இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகின்றவர் தேவனே (11கொரி.5:5)


     Sin brings emotional death, நிர்வாணமாகிய, பாவத்தின் சம்பளம் நமது மேலான உணர்ச்சி வயப்பட்ட தன்மைகளை அழித்து விடுகின்றது. நிர்வாணமாக்கப்பட்ட ஆதாம் ஏவாள் தேவனின் அன்றாட பிரசன்னம், சமுகம், உறவு, ஐக்கியம் இவற்றிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்களே. தேவனுடைய வாசஸ்தலத்திலிருந்தும் புறம்பாக்கப்பட்டு மறுபடியும் நுழைந்து விடாதபடிக்கு வழியை காவல் செய்ய சுடரொளி பட்டயம் நிறுவப்பட்டதே. ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக் கப்பட்டது போல ஒருவருடைய இயேசு கிறிஸ்து) கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.


    Sin brings spiritual death நிர்வாணம் நிரந்தரமான ஆக்கினை தீர்ப்பினை அளித்துள்ளதே. அன்றியும் ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறதே. ஆவிக்குரிய மரணம் நிரந்தரமான நித்திய மரணத்தையே அளிக்கின்றது. சரீர மரணம் நுழைவு வாயிலின் ஆரம்பம் மட்டுமே. ஆவிக்குரிய மரணம் நித்திய நரகாக்கினையே ஆகும். இத்தீர்ப்பு தேவனுடைய பரிசுத்தத்தினாலும், நீதியினாலும் மாத்திரமே அளிக்கப்படுகின்றது. மதச்சடங்காச்சாரங்களினாலும் மதக் கோட்பாடுகளினாலும், சமூக நல்வழி சேவைகளினாலும் இந்த ஆக்கினை தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடாது என்பதினையே அறிந்து உணர்ந்திடுவோமாக.


        நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் (யாத்.15:26)  Jehovah Rapha. The Lord who heals you. அடிமைத்தன எகிப்திலிருந்து விடுபட்டு வந்த இஸ்ரவேல் மக்களுக்கு அளிக்கப்பட்ட முதல் வாக்குத்தத்தம். (1st compound name after slavery) அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை . (சங்.105:37) இது ஆவிக்குரிய மரணவியாதியிலிருந்து சுகமடையச் செய்வதற்கான வாக்குத்தத்தம் மாத்திரமே. இதுவே தான் ஆண்ட வரின் தனிச்சிறப்பு அம்சமாகும். God's prerogative is to remove spiritual disease எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் என்பதே இதன் பொருள். எகிப்தியருக்கு ஆண்டவர் தலைவலி, கால்வலி, கேன்சர், இரத்த கொதிப்பு போன்ற வியாதிகளை அளிக்கவில்லையே. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக எகிப்தியர்கள் மீது மோசே மூலமாக ஆண்டவர் தாமே சுமத்திய 10 வாதைகளில் ஒன்றையும் வரப்பண்ணேன் என்பதே ஏகோவா ராஃபா ஆகும். இது பரம வாசஸ்தலம் செல்லுவதற்கான (கானான்) ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்ட ஆவிக்குரிய வியாதிகளே. இவைகள் ஆண்டவராலேயே உருவாக்கப்பட்டன. ஆண்டவரால் மாத்திரமே நிவிர்த்தி செய்யவும் கூடும். எந்த உலக மருத்துவர்களாலும் இதனை சுகப்படுத்தக் கூடாதே.


     ஆனால் இன்று கிறிஸ்தவ உலகிலே எங்கும் 99% ஊழியர்கள் போதகர்கள். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்பதை சரீர வியாதிகளுக்கும், உலக செழிப்பு ஆசீர்வாதங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றார்கள். இது எத்தனையான ஆவிக்குரிய மடமைத்தனமாகும். பரம வாசஸ்தலத்தை தரிப்பிக்கவே இவ்வாக் குத்தத்தம் அளிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை இன்றாவது அறிந்துணர்ந் திடுவோமாக. மனுமக்களின் தலைவலி, கால்வலி, கேன்சர் சுகமடைவதினால் ஆண்டவர் மனுமக்கள் பேரில் கொண்டுள்ள தேவ திட்டத்திற்கு என்ன லாபம். மருத்துவர்களால் சுகமடையக்கூடியவற்றை ஊழியர்கள் ஜெபித்ததினால் சுகமடைந் ததாக சாட்சிகள் பலவற்றை எழுதி ஊழியர்கள் தானே இலாபம் அடைகின்றார்கள். பரம வாசஸ்தலத்தை தரித்திடும் அனுபவத்தை யாரும் அறிந்திட்டதாக சாட்சி எதனையும் காணமுடியவில்லையே. சாத்தான் யோபுவைப் பற்றி தேவனிடம் கூறும் போது நீர் எல்லாவற்றிலும் யோபுவை ஆசீர்வதித்திருக்கிறீர். அதனால் தான் யோபு உம்மைத் தேடுகிறான் என்று கூறினான். இது சாத்தானின் கூத்து. ஆசீர்வாதம் சுகம், செழிப்பு இழக்கப்பட்டாலும் தேவனை உறுதியாய் பின்பற்றுவேன் என்பதே யோபுவின் பக்தியாயிருந்தது அதனைத்தானே நாமும் பெற்றிட வேண்டும்.


     Madam Gayan என்ற பக்தியுள்ள பெண்மணி விசுவாசத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டபொழுது “இந்த சிறையிலிருக்கும் ஒவ்வொரு செங்கலும் என் தேவனுடைய பிரசன்னத்தினால் வைரக்கல்லாய் மாறியிருக்கிறது” என்கிறார்


     Spurgen என்பவர் கூறும் போது "உபத்திரவத்தின் சூளையிலே தேவனின் வாக்குத்தத்தங்கள் ஒளி பெற்று விளங்கும்” என்றார். யோபுக்கு ஏற்பட்ட பாடுகளுக்கு காரணம் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் விளைவு தான். அது யோபுவுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் யோபுவுக்கு சற்று உற்சாகம் வந்திருக்குமே. நாம் நம் பாடுகளில் எப்படி வெற்றியோடு வேதனைகளை அனுபவிக்கின்றோமோ அதுவே சாத்தானுக்கு நாம் கொடுக்கும் அடிகளாகும்.


    ஆவிக்குரிய வியாதியிலிருந்து மீட்கப்பட வேதத்திலே காணப்படுகின்ற சில ஜெபங்கள்;


       எரேமியா ஜெபிக்கின்றார் 17:14 கர்த்தாவே என்னை குணமாக்கும் (ஆவிக்குரிய வியாதி அப்பொழுது குணமாவேன். என்னை இரட்சியும் அப்பொழுது இரட்சிக் கப்படுவேன் தேவரீரே என் துதி.


      ஏசாயா கூறுகின்றார் 57:18 அவர்கள் வழிகளை நான் பார்த்து (மனந்திரும்பின வழிகள்) அவர்களை குணமாக்குவேன் அவர்களை நடத்தி திரும்பவும் அவர்களுக்கும் அவர்களில் துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.


      தேவன் தாமே மோசேயிடம் கூறியது உபா.32:39 நான் நானே அவர் என்பதை இப்பொழுது பாருங்கள். நான் கொல்லுகிறேன். நான் உயிர்ப்பிக்கிறேன். நான் காயப்படுத்துகிறேன். நான் சொஸ்தப்படுத்துகிறேன் என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை என்று.


      தாவீது ஜெபிக்கின்றார் சங்.6:2ல் என் மேல் இரக்கமாயிரும். கர்த்தாவே நான் பெலனற்றுப் போனேன். என்னை குணமாக்கும் கர்த்தாவே என் எலும்புகள் நடுங்குகிறது (பாவ அறிக்கையின் போது எலும்புகள் நடுங்குகிறது என்கிறார்) பாவ அறிக்கையின் போது நம் எலும்புகள் நடுங்கின என்ற அனுபவம் எப்போதாவது நம்மிலே காணப்பட்டது உண்டா?


      பின்பும் தாவீது ஜெபிக்கின்றார். சங்.41:4. கர்த்தாவே என்மேல் இரக்கமாயிரும் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன். என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று.


          இவைகளை அறியும் போது சரீர வியாதிகளுக்காக நாம் ஜெபிக்கக்கூடாது என்று அல்ல. சரீர வியாதிகளுக்காக ஊழியர்களிடம் ஜெபிக்கச் செல்லக்கூடாது என்றும் அல்ல. ஆத்தும வியாதி சுகமடைவதினாலேயே மாத்திரம் நித்திய ஜீவனை அடைந்திடக்கூடும் என்று அறிந்திடுவோமாக. பரி.பவுல் கூறும் வார்த்தைகளை அறிந்திடுவோமே. கொலோ.2:9 தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீர பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது என்பதே சத்தியமும் உண்மையும் ஆகும். ஆத்தும இரட்சிப்பின் பரிபூரணத்திற்குள்ளே சகலவித சரீர சுகங்களும் அவருக்குள் நமக்காக இருக்கின்றன என்பதுதானே இதிலே கண்டறியும் உண்மை


  . ஆகையினால் நாம் பிரதானமாய் கவலைக்கொள்ள வேண்டியது பரம வாசஸ்தலத்தை தரித்துக் கொள்வதே. கலியாண வஸ்திரமில்லாதவனை ஆண்டவர் நரகாக்கினைக்குள் அனுப்பிடச் செய்தாரே. ஆனால் இன்று மக்கள் நிர்பாக்கியமுள்ளவனும் பரிதபிக்கப்படத்தக்கவனும் தரித்திரனும், குருடனும் நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல் நான் ஐசுவரியவானென்றும் திரவி சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால் உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண் வஸ்திரங்களை அவரிடத்தில் வாங்கிக்கொள் என்ற ஆலோசனையைத்தானே வெளி 3:17,18யில் வாசிக்கின்றோம்.


     அண்மையில் டிவியில் பிரசங்கிக்கும் அநேக ஊழியர்களின் செய்திகளை கேட்கையில் பலர் இவ்விதமாய் முடிவிலே ஜெபிக்கின்றவர்களாய் காணப்படுகின்றார்கள். இயேசுவின் நாமத்தினாலே வியாதியே ஓடிப்போ, பிசாசே நீங்கிப்போ. வியாதிப்பட்ட இடத்தில் கைவைத்து ஜெபிக்கும் யாவரும் சுகமடைவார்களாக. யாவருடைய பாவங்களும் மன்னிக்கப்படுவதாக ஆமென். வியாதிகளுக்காக ஜெபித்து, ஜெபித்து பழகினவர்கள் கடைசியில் மக்களின் பாவங்களையும் மன்னிக்கிறவர்களாக மாறுகின்றனர். மத்.10:1யிலே இயேசு கிறிஸ்து தம் 12 சீஷர்களுக்கு அசுத்த ஆவிகளைத் துரத்தவும் சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று தானே வாசிக்கின்றோம். பாவங்களை மன்னிக்க யார் அதிகாரம் கொடுத்தார். பாவங்களை மன்னிக்க மனுஷன் யார்? இது தேவ தூஷணம் அல்லவா மத்.28:18யிலே இயேசு அவர்களை நோக்கி வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகாரம் பெற்ற அவர் உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் அவர் நம்மோடுடனே கூட இருக்கிறேன் என்று தானே வாக்கு பண்ணியுள்ளார்.


      அருமையானவர்களே இந்த கூடாரத்திலே தவித்துக் கொண்டிருக்கிற நாம் இப்பொழுது தானே பரம வாசஸ்தலத்தை தரித்துக் கொள்ள மிகுந்த வாஞ்சையோடு காணப்படுவோமாக. பரலோக சிந்தையிலேயே வாழ்ந்து முடிக்க வாஞ்சையாய் இருந்திடுவோமாக. இந்த உலக கூடாரம் தற்காலிகமானதே. வாடகை வீடு போன்றதே. நம்முடைய நிரந்தர குடியிருப்பு பரம வாசஸ்தலமாகிய மோட்சமே ஒரு ஊழியர் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய வாடகை வீட்டை மாற்றிக் கொண்டிருப்பார். அவருடைய வீட்டிலே தான் அதிகமாய் நேசித்து வந்த தன் சிறுமகளுக்கு என்று ஒரு அறையை ஏற்படுத்தியிருந்தார். அதிலே அவள் நேர்த்தியான சித்திரங்கள் படங்களை கொண்டு அழகுபடுத்தியுமிருந்தாள். ஜன்னல்களுக்கு பலவர்ண நிறங்களில் மூடுதிரைகளும் பொருத்தப்பட்டிருந்தன. அவள் தேவ பக்தியுள்ளவளாயும் காணப்பட்டாள். ஒருநாள் திடீரென்று அவள் வியாதிப்பட்டு மரித்தும் விட்டாள். இதனை அவள் பெற்றோர்களால் தாங்கிக் கொள்ள கூடாததாயும் காணப்பட்டது. வருடங்கள் இரண்டு கடந்து போனது. வழக்கத்தின்படிக்கு வீட்டினை மாற்றிக் கொள்ளும் நாளும் வந்தது. அனைத்து வீட்டு சாமான்களும் வண்டியில் ஏற்றி வைக்கப்பட்டபின் கடைசியாக ஒருமுறை தன் வீட்டின் எல்லா அறைகளிலுமுள்ள அனைத்து பொருட்களும் எடுக்கப்பட்டனவா என்று கண்டறிய ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தார். இறுதியாக மரித்த தன் மகளின் அறையை காண்கையில் அவள் சேரித்து வைத்த பொருட்கள் அலங்கரித்துள்ள சித்திரங்கள், படங்கள் யாவற்றையும் ஒரு விசை கண்டு தன் அன்பின் மகளை அதிகமாய் நினைவு கூர்ந்தார், கலங்கினார். அவ்வமயம் அவருடைய மனதிலே அவள் இப்பொழுது எங்கு இருக்கிறாள் என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற எண்ணம் மேலோங்கிய போது அவர் பரம வாசஸ்தலத்தினை தரித்திருக்கத்தக்க வாஞ்சையை கொண்டிருந்தபடியால், தற்போது தன் மகள் மோட்சத்தின் பளிங்கு அறையிலே வாசஞ் செய்கின்றவளாக மாணிக்க கற்கள் பதித்த பாதையிலே நடக்கின்றவளாக தேவனோடும், தேவ தூதர்களோடு உலாவுகின்றதான காட்சியை மனதிலே கொண்டவராக மிகவும் மகிழ்ச்சியோடு அவளின் அறையை கண்டுவிட்டு வந்தாராம். இதுவே பரம வாசஸ்தலத்தினை தரித்திருத்தலின் அனுபவமாகும்.


      ஆம் அருமையானவர்களே, இக்காலத்து பாடுகள் யாவும் தற்காலிகமானதே. “ இலேசான உபத்திரவம்" ஆனால் "கனமகிமை” உபத்திரவம் சீக்கிரத்தில் நீங்கும். ஆனால் மகிமை நித்திய மகிமையே. பெரிய வெள்ளிக்கிழமைக்கு பின் உயிர்த் தெழுதலின் ஞாயிறு வருவது போன்று பாடுகளுக்கு பின்னால் மகிமையே வருகிறது.


     இதோ திருடனைப் போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான். அந்த சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் பரிசுத்த வான்களுடைய நீதிகளே ஆமென். (வெளி 16:15, 19:8)


         தேவன் தாமே நம் அனைவரையும் தம் மகிமையின் ஆசீர்வாதங்களால் நிறைத்து பரம வாசஸ்தலத்திற்கு ஏற்றவர்களாக வாழ வழி நடத்திடுவாராக. ஆமென்.


பிலிப் ஜெயசிங்,


நாசரேத் ஜெப ஐக்கியம்,


நாசரேத்.