ஆசிரியர் உரை
கிறிஸ்துவுக்குள் அருமையான வாசகர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.
இன்று உலகமெங்கிலும் விசேஷமாய் இந்த கொரோனா அடைப்பு (Lockdown) நாட்களிலே ஆலயங்கள் மூடப்பட்டிருந்தாலும் எங்கும் செய்யப்படுகின்ற ஊழியங்கள் நிறுத்தப்படவே இல்லையே. உண்மையாய் கூறினால் எங்கும் ஊழியர்களும், ஊழியங்களும் பெருகி வந்த வண்ணமாகவே உள்ளன என்பதை நாம் அறிந்துள்ளோம். கொரோனாவால் ஊழியங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற தவறான வதந்தியையே பிரபலமான ஊழியர்கள், தலைவர்கள் கூறி வந்தனர். தேவன் ஏற்படுத்திய ஊழியங்களை, உண்மையான ஆன்மீக வாழ்வை எதுவும் எவரும் தடைசெய்யமுடியாதே. தடை செய்யப்பட்டுள்ளன என்பார்களானால் அன்னார்கள் இதுவரை செய்து வந்த ஊழியங்கள் தேவசித்தத்தின் படிக்கு தேவ ஆவியானவரால் நடத்தப்பட்டவைகள் அல்லவே என்பதை புரிந்திடுவோமாக. மனுஷர்களால் கட்டப்பட்ட ஆலயங்களின் கதவுகள் தான் சிலகாலம் மூடப்பட்டிருந்தன. பரலோகத்தின் கதவுகளை யாரால் மூடக்கூடும்? எங்களது நாசரேத் ஜெப ஐக்கியத்திலும் நடைபெற்று வரும் சனிக்கிழமை உபவாச ஜெபம் இந்த கொரோனா காலத்தில் ஒரு நாளும் தடைபடவில்லையே. காணொளி மூலம் வழக்கமாக 10 பேர்களாக கூடும் ஐக்கியம். 30 பேர்களாக ஐக்கியப்பட்டு ஜெபிக்க முடிகிறதே.
கொரோனா காரணம் காட்டி, ஊழியங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று பிரபலமான ஊழியர்கள் கூறும் கூற்று 100% தவறானதே. ஊழியர்கள் சபை மக்களோடு முகமுகமாய் ஐக்கியம் கொள்ள முடியவில்லை என்பது மட்டுமே உண்மை . இக்காலத்து ஊழியங்களை தடைசெய்வது சாத்தானின் திட்டமும், நோக்கமும் அல்லவே அல்ல. ஏனெனில் இக்காலத்து அனைத்து ஊழியங்களும் சாத்தானுக்கு மிக மிக பிரியமானவைகளே. அவைகளை பெருகச் செய்வானே தவிர, ஒருபோதும் குறைவுபடச் செய்யவே மாட்டான். ஆலய கதவுகள் மூடப்படுவது அது சாத்தானுக்கு ஒரு பொருட்டே கிடையாது. கதவுகள் மூடப்பட்ட நாட்களில் கொரோனாவை காரணம் காட்டி தனக்கு பிரியமான பற்பல வகைகளில் ஊழியங்களை 100 மடங்கு பெருகச் செய்வதே சாத்தானின் தீவிரமான திட்டமும் நோக்கமும் ஆகும். அவைகளும் காணப்பட்டு வருகின்றனவே.
கிறிஸ்துவுக்குள் அன்பான வாசகர்களே குழப்பம் அடைந்திட வேண்டாம். சற்று பொறுமையாய் ஆத்திரமடையாமல், ஜெபத்தோடும், கேட்டு அறியும் வாஞ்சையோடும் தொடர்ந்து வாசியுங்கள்.
கொரோனாவுக்கு முந்தைய நாட்களில் 100 நாட்கள் உபவாசம் 200 நாட்கள் உபவாசம் என்று கேட்டதுண்டா? தினமும் 3-4 மணி நேர ஜெபவேளை என்று முன்பு கேட்டதுண்டா?. ஒவ்வொரு ஸ்தாபனத்தார்களின் செய்திகளும் உலகமெங்கிலும் இப்பொழுது 24 மணி நேரமும் டிவியின் காணொளி மூலம் காணப்பட்டும் கேட்கப்பட்டும் வளர்ந்து விரிவடைந்ததை முன்பு அறிந்ததுண்டா? இவைகளை தடைசெய்வதினால் ஆண்ட வருக்கு எந்த பாதிப்பும் இல்லையே. சாத்தானுக்கு பிரியமானதாக இதுவரையிலும் செய்யப்பட்டு வந்த ஊழியங்கள் இப்பொழுது பல மடங்கு உலகமெங்கிலும் பரவியுள்ளது. இது அவனுக்கு ஏற்பட்ட பெரிய சாதனை தானே.
ஆண்டவர் மோசேயிடம் கூறியது என்ன?
உபா.1:38 “உனக்கு முன்பாக நிற்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான் அவனைத் திடப்படுத்து, அவனே அதை இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாய் பங்கிடுவான்”
இதுவரையிலும் மோசேயை ஆண்டவர் தானும் காபிரியேல் தூதன் மூலமாயும் பலமுறை சந்தித்தார், பலமுறை, பல அற்புத அடையாங்களையும் செய்ய கட்டளையிட்டார். அதன்படிக்கு மோசேயும் தினமும் அற்புத அடையாளங்களையே செய்து காண்பித்து 40 லட்சம் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேச அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து 40 வருட காலமாய் வனாந்தரத்திலே செழிப்பாய் நடத்தி வந்தான். என்ன பிரயோஜனம்? அற்புதங்களை நடப்பித்த மோசேயும் அற்புதங்களையே தினமும் வாழ்வாக கொண்ட இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கானான் பிரவேசிக்க முடியவில்லையே. கடைசிவரையிலும் வணங்காகழுத் துள்ளவர்களாக வனாந்தரத் திலே செத்து மடிந்துள்ளார்களே. இதே அற்புத அடையாள ஆசீர்வாத செழிப்பு ஊழியங்களைத்தானே இக்காலத்து ஊழியர்களில் 99.9% செய்து வருகின்றார்கள். சாத்தானுக்கு நல்லதாகவே தெரியும் இவர்களில் ஒருவரும் கானான் (மோட்சம்) போய் சேர்வதில்லை என்று. ஆகையினால் அவன் இக்காலத்து ஊழியங்களை ஆயிரம் மடங்கு பெருகிட செய்வதே அவனுடைய பிரதான திட்டமாகும். அதனையே வெற்றிகரமாக நடப்பித்து கொண்டேயிருக்கின்றான்.
இங்கே ஆண்டவர் மோசேயிடம் கூறியது, யோசுவாவை திடப்படுத்து, தைரியப்படுத்து, ஊக்கப்படுத்து என்று மாத்திரமே. அற்புதங்களை தினமும் நடப்பிப்பேன் என்று கூறவில்லையே. மோசேயின் அற்புத ஊழியம் நிறைவடைகிறது. "No Unnecessary Miracles" தேவதூதன் அவ்வப்போது பேச வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். திடமனதாய் மக்களின் கரங்களை யுத்தங்களை நடப்பிக்க பெலப்படுத்தி முன்னேறச் செய். கற்பனைளை விட்டு விலகாதிருக்கச் செய், பரிசுத்தத்திற்கு எதிராக செயல்படாதிருக்கவும் கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும் தெரியப்படுத்து பின்பு யோசுவாவே கானானை இஸ்ரவேலருக்கு "சுதந்தரமாகப் பங்கிடுவான்" என்பதே ஆண்டவரின் கட்டளை
ஆனால் இன்று மோசேயின் அற்புத ஊழியங்களே எங்கும் காணப்படுகின்றபோது, கானானை சுதந்தரமாய் பங்கிட்டு கொடுக்கும் யோசுவாவின் ஊழியங்களை எங்கும் காண முடியவில்லையே. அப்படியானால் எவர்களுடைய செய்திகளைத் தான் கேட்பது என்ற எண்ணமும், சந்தேகமும் இப்பொழுது வருகின்றதா? எவர்களுடைய செய்தி களில் இது கடைசி காலமாயிருக்கிறது. அதனால் எச்சரிக்கையாயும், ஜாக் கிரதையாயுமிருங்கள் என்று அறிவிக்கப்படுகின்ற செய்திகளையே அதிகமாய் கேட்க ஆசைப்படுங்கள் என்று தாழ்மையாய் வேண்டிக்கொள்கின்றேன். இப்பொழுது மோசேயின் ஊழியங்கள் அவசியமல்ல யோசுவாவின் கானானை பங்கிட்டு அடையச் செய்திடும் செய்திகளே இப்பொழுது அவசரமாய் தேவை. ஏனெனில் 1யோவான் 2:18யில் வாசிக்கின்றது என்ன? பிள்ளைகளே இது கடைசி காலமாயிருக்கிறது. அந்திக் கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திகிறிஸ்துக்கள் இருக்கிறார்கள் அதினாலே இது கடைசிக் காலமென்று அறிகிறோம். இந்நாட்களில் அந்திக் கிறிஸ்துவின் ஆவியினாலேயே அனைத்து ஊழியர்களும் நடத்தப்படுகின்றார்கள் என்பதை அறிந்திடாமல், அபிஷேகம் அபிஷேகம் என்றும் ஆவியானவர் பேசுகின்றார் என்றும் கூறி கானானுக்குள் பிரவேசிக்கச் செய்யும் செய்திகளை, சத்தியங்களை கூறுவதில்லையே. அபிஷேகம், ஞானஸ்நானம் என்பதைத்தானே முக்கியப்படுத்து கின்றார்கள். இவைகள் பரலோகத்தை அடைந்திடச் செய்யாதே.
இந்நாட்களில் மக்கள் யாவருமே மோசேயின் ஊழியங்களையே விரும்புகின்றனர். ஆகையினால் அனைத்து ஊழியர்களும் மக்களின் இருதயம் நோவக்கூடாது அவர்களிடம் எப்பொழுதும் ஆறுதலாகவே பேசி அவர்கள் எப்பொழூதும் தங்களையே சார்ந்திருக்கிறவர்களாய் அவர்களை காத்துக் கொள்ளவேண்டும் என்று கூறி கூவி ஊழியங்களை நடப்பித்து வருகின்றார்கள். சாத்தானுக்கும் மோசேயின் அற்புத செழிப்பு ஊழியங்களை தொடர்ந்து உலகமெங்கிலும் நடப்பிப்பதில் தான் அதிக ஈடுபாடு. அதனால் எந்த கொரோனா வந்தாலும் தனக்கான ஊழியர்களை அதிகமதிகமாய் எங்கும் எழுப்பி பெருகச் செய்து கொண்டேயிருக்கின்றான். மோசேயின் ஊழியங்களைச் செய்யவே அநேக ஊழியர்கள் எங்கும் இந்நாட்களில் எழும்பிக் கொண்டேயிருக்கிறார்கள். யாவருக்கும் தேவைக்கு மிஞ்சின வருமானமும் கிடைக்கும் என்பதையும் யாவரும் அறிவர். மோசே காலத்தில் ஒருவரும் பட்டினியாயிருந்ததில்லையே. மோசேயின் ஊழியத்தினால் மக்களை எளிதில் கவர்ந்திட முடியும் என்பதையும் யாவரும் அறிவர். அதனால் தான் சாத்தானின் அறிவுரைபடிக்கு ரூ.5000 கொடுத்தால் ஒரு பங்காளராகிவிடலாம், ரூ.10000 கொடுத்தால் டிவியில் குடும்பத்துடன் காட்சி அளித்திடலாம். ஆலய பணியின் ஒரு செங்கல் இத்தனை தொகை ஒரு தூணுக்கு இத்தனை தொகை என்று, ஜெப கோபுரங்களை, பாபேல் கோபுரங்களைப் போன்று கட்ட ஆரம்பித்து விடுகின்றார்கள். ஏதேனிலிருந்து மக்கள் விரட்டப்பட்டார்கள், பாபேலில் மக்கள் சிதறடிக்கப் பட்டார்கள் என்பது தானே உண்மை . ஜெப கோபுரத் திட்டத்தினாலேயே மக்களை நேரடியாக தேவனிடம் வேண்டிடச் செய்திடாதபடி தங்களிடமே 24 மணி நேரம் ஜெபம் என்று தக்க வைத்துக் கொள்ளவே பெரியதாய் விரும்புகின்றார்கள். சாத்தானுக்கும் ஜெபகோபுர ஜெப ஊழியம் மிகவும் சந்தோஷமே ஏனெனில், யாருக்கும் யுத்தம் செய்ய தெரியாது, துன்பம், கஷ்டம் வந்தால் ஜெபகோபுரத்திற்குள் ஒழிந்து கொள்வதில் பழகிடுவார்கள். இதனையே மக்களும் விரும்புகின்றார்கள். கானானை சுதந்தரமாய் பங்கடையச் செய்யாதிருக்கச் செய்வதே சாத்தானின் கடைசிகால திட்டமாயிருக்கிறது. இதனை மக்களும் அறிந்திடவில்லையே.
ஏழு வருட உபத்திரவ காலம், ஆயிர வருட அரசாட்சி அந்தி கிறிஸ்துவின் ராஜ்யம் என்று வேதபண்டிதர்கள் பலவற்றை பேசினாலும் யோவான் கூறுகின்றார் இப்பொழுதே அந்திகிறிஸ்துக்களின் அரசாட்சி நிலவி வருகின்றதை நிழலாட்டமாய் வெளிப்படுத்தல் 6 ஆம் அதிகாரத்திலே 4 குதிரைகளைக் குறித்து வாசிக்கின்றோம்.
முதல் குதிரை வெள்ளைக்குதிரை இதிலே அந்தி கிறிஸ்துவே ஏறி வருகின்றான். இதுவே கடைசி காலம். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் மனந்திரும்பாமல் இரட்சிக்கப்படாமல் இயேசுவை மறுதலிக்கின்றவர்களுக்கு நியாயத்தீர்ப்பு அளிக்கப்படுவதையே இந்த வெள்ளக்குதிரை காண்பிக்கின்றது. இன்று தேவனை மறுதலித்தவர்களாய் அநேகர் நியாயத்தீர்ப்பு அடையபெற்று மரிக்கின்றார்களே. வியாதிகளில் சாகின்றார்களே. கொலை செய்யப்படுகின்றார்களே. எங்கும் மரணம் கொலை செய்திகள் பெருகி வரும் காலமாயிருக்கிறதே. தானி.9:27யில் அருவருப்பான செட்டைகளோடு பாழாக்குகிறவன் வந்து இறங்குவான். நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழக்குகிறவன் மேல் தீருமட்டும் சொரியும் என்பதைத்தானே வாசிக் கின்றோம். அதன்படிக்கே தற்போது, கொரோனாவால் வெட்டுக்கிளிகளால் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள் அந்திகிறிஸ்துக்கள் நமக்குள்ள இப்பொழுது உலாவிக் கொண்டேயிருக்கிறான் என்பது தானே உண்மை
2ஆம் குதிரை சிவப்பான குதிரை இதிலே வரும் அந்தி கிறிஸ்து இரத்தத்தை சிந்தச் செய்கின்றான். சிகப்பு என்பது இரத்தமும் யுத்தமுமாகும். அநேக கிறிஸ்தவர்கள் முகமதியர்களால், இந்து தீவிரவாதிகளால் கொலை செய்யப்படுகிறார்கள். சீனா, இந்தியா யுத்தம் அநேக வீரர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இன்றும் பாலஸ்தீனாவிலே யுத்தங்கள். அங்காங்கே நிறத்தின் அடிப்படையில் கொலைகள், போலீஸ் அஜாரகக்தினால் கொலைகள், கற்பழிப்பு, விபத்துக்கள் இன்னும் ஏராளமானவற்றை இக்கடைசி நாட்களில் அந்திகிறிஸ்துவின் ஆட்சி தொடக்க நாட்களிலே அனுபவிக் கின்றோமே.
3 ஆம் குதிரை கறுப்பு குதிரை. இது பஞ்சத்தை குறிப்பிடுகிறது. கொரோனா நாட்களில் எத்தனை ஏழை எளியவர்கள் ஒரு நேர உணவு இன்றி மரிக்கின்றார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளிகள் எத்தனை பேர் மரிக்கின்றார்கள். வேலை இல்லை, வருமானம் இல்லை, ஆகாரம் தட்டுப்பாடு அநேக சபை ஊழியர்கள் பசி பட்டினி, மக்களையும், ஸ்தாபனங்களை நம்பி வந்த மிஷனெரிகள் பசியில் வாடுகின்றார்கள். இதுவும் அந்தி கிறிஸ்துவின் ஆளுகையின் ஆரம்பமே.
4 ஆம் குதிரை மங்கின நிறமுள்ள பச்சை குதிரை. பச்சை என்பது மரணமே. கொரோனாவினால் அமெரிக்கா, இந்தியாவில் அதிக பட்ச மரணங்களை காண்கின்றோம். வெளி.8:12யின் படிக்கு உலக மக்களுள் பூமியில் மூன்றிலொரு பங்கு மக்கள் செத்து மடிகின்றார்களே. இதுவும் அந்திகிறிஸ்துவின் ஆளுகையே.
மக்களிடம் மனந்திரும்புதலை எங்கும் காணமுடியவில்லையே. எங்கும் மனந்திரும்புதலின் செய்திகளை கேட்க முடியவில்லையே. பிரபலமான பெரிய ஊழியர்களெல்லாருமே தற்போது சற்று மாறி தங்கள் செய்திகளில் 98% ஆசீர்வாத செழிப்பு செய்திகளை கூறிவிட்டு 2% மனந்திரும்புதலின் செய்திகளை கூறினால் போதுமானதா? இதனை தேவன் அங்கிகரிப்பதில்லையே. இதுவும் சாத்தானின் ஆலோசனையே. எங்களுக்கும் மனந்திரும்புதலின் செய்தி கொடுக்கத் தெரியும் என்று கூறுபவர்களே இந்த 2% செய்திகளை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இன்னும் பல நவீன ஊழியர்கள் மனந்திரும்புதலையும், செழிப்பு, ஆசீர்வாத செய்திகளையும் சேர்த்து கொடுத்து விட்டு ஆவியானவரின் முழு ஆளுகைக்கு விட்டுவிடாமல் மக்களைப் பிரியப்படுத்தியே தீரவேண்டும் என்ற மாம்ச சிந்தையோடு முடிவிலே ஜெபித்து நிறைவு செய்கின்ற போது மனந்திரும்புதலில் எச்சரிப்புச் செய்திகளை முக்கியப்படுத்தி விடாமல், அதனை மக்கள் பொருட்படுத்தாதிருக்கும் வண்ணமாய் செழிப்பு, ஆசீர்வாதம், கிருபை ஆகியவற்றை முக்கியப்படுத்தி அற்புதங்களுக்காக மட்டுமே போராடி ஜெபித்து கூடுகையை நிறைவு செய்வதையே வழக்கமாக கொள்கின்றனர். முன்பெல்லாம் எல்லா எழுப்புதல் கூடுகைகளிலும் "அர்ப்பணிப்புக்கான மேடை அழைப்பு' (ALTER CALL) நடைபெற்றனவே, இப்பொழுது அவைககள் எங்கே சென்றுவிட்டன? இதனால் மக்களும் மனந்திரும்புதலின் செய்தியை மறந்து, அற்புதம் ஆசீர்வாதங்களை பெற்றவர்களாகவே சென்று விடுகின்றனர். 100% மனந்திரும்புதலின் செய்திகளை கொடுக்கும் கூடுகைகளுக்கு மக்கள் செல்ல விரும்பவதே இல்லையே. ஏதோ, இரக்கத்தையும் அன்பையும், கிருபைபையும் பேசினால் தான் மக்கள் மனந் திரும்புவார்கள் என எண்ணுகின்றவர்கள், கூறுகிறவர்கள் சாத்தானின் ஏஜென்டுகளே ஆவர். தேவன் பரிசுத்தர் அவர் துணிந்து பாவஞ்செய்து வருகின்ற கிறிஸ்தவர்களை அரோசிக்கின்றார். ஒளிக்கும், இருளுக்கும் சம்பந்தம், இணக்கம் இல்லை. பேலியாளிக்கும் விசுவாசிக்கும் ஐக்கியம் இல்லை. யாவரோடும் நல் மனம் பொருந்து, பிறரை, சத்துருக்களை நேசி, அநியாயமாய் சம்பாதித்ததை திரும்ப செலுத்து, களவாடியதை திரும்ப கொடு. பழைய ஏற்பாட்டின் ஆகானையும் கேயாசியையும் புதிய ஏற்பாட்டின் அனனியா, சப்பிராளையும் சாட்சியாக யார் இந்நாட்களில் பிரசங் கிக்கிறார்கள். ஒருவரும் இல்லையே.
ஒரு ஊழியர் தன் நண்பரிடம் பலமுறை சுவிசேஷத்தை கூறியும் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள மறுத்து No என்று கூறிக்கொண்டே வந்துள்ளார். அநேக நாட்கள் கழித்து ஆஸ்பத்திரியில் அவர் சிகிட்சையில் இருந்த போது அவனுடைய வீட்டார் அந்த ஊழியரை ஜெபிக்க அழைத்தார்கள். ஊழியர் மறுபடியும் அந்த நண்பனைப் பார்த்து ஆண்டவரை ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்ட போது அவர் கூறிய பதில் இது வரையிலும் நான் No என்றே கூறினேன். இப்பொழுதும் Yes என்று கூறுவேனோ என்று சந்தேகிக்கின்றேன் என்றானாம். இவனைப் போன்ற பக்தியே இன்று எங்கும் காணப்படுகிறது. குடிகாரன், ஒழுங்காய் குடிப்பான் ஆலயத்திற்கும் ஒழுங்காய் செல்வான். ஆலய போதகரும் ஆலயத்திலிருந்து யாவரையும் ஆசீர்வதிக்கின்றோம். சமாதானத்தோடே போய் வாருங்கள் என்பதைத்தானே எங்கும் கேட்கின்றோம். வியாபாரி, அநியாய வியாபாரம் செய்வான் பொய் பேசி மக்களிடம் நலிந்த பொருளை ஏமாற்றி விற்கின்றான். அவனுக்கும் பரலோகம் உண்டு என்று கூறும் சாத்தானின் வார்த்தையை மட்டுமே நம்புகின்றான். அவன் விரும்பிச் செல்வது அவனைச் செழிக்கச் செய்யும் செய்திகளை மட்டுமே கொடுத்து வரும் ஊழியக்காரனிடம் மாத்திரமே
அருமையானவர்களே, எல்லா ஊழியங்களையும் நேசித்து பற்பல ஊழியர்களிடம் செல்பவர்களே எங்கேயும் செல்லுங்கள், எங்கும் செய்திகளைக் கேளுங்கள். அதிகமதிகமான உபவாசங்களை கைக்கொள்ளுங்கள். அற்புதங்களை அதிகமாய் பெற்று அனுபவியுங்கள். காணிக்கைகளை தாராளமாயும் ஏராளமாயும் கொடுங்கள். ஆனால் (சங்.32:5யின் படிக்கு) நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுகிறேன் என்று உண்மையாய் ஜெபித்து ஜெயம் பெற விரும்புவோர்களை மட்டுமே வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மகா கிருபையு முள்ளவரான தேவனாகிய நீர் அவர்களை மன்னித்து கைவிடமாட்டீர் இரட்சிப்பீர் என்பதே உண்மையும் சத்தியமுமாகும். இன்றே தீர்மானிப்போம் செழிப்பு ஆசீர்வாதம் + நரகமா? அல்லது பாடு, துன்பம், பாவ மன்னிப்பு + மோட்சமா? இதுவே கடைசிகாலம். எங்கும் அந்திகிறிஸ்துவின் ஊழியங்களே வஞ்சிக்கப்படாதிருந்திடு வோமாக ஆமென்.
சகோ. பிலிப்ஜெயசிங், நாசரேத்
ஜெப ஐக்கியம், நாசரேத்.
தூத்துக்குடி மாவட்டம்.