பெண்கள் பகுதி
கீழ்ப்படியுங்கள்
நற்குணசாலி யார்? "அந்தப் பட்டணத்தார் மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.” அப். 17:11
நற்குணசாலி என்பது ஒருவர் அல்லது குடும்பத்திலுள்ளவர்கள் நற்குணங்களால் அலங்கரிக்கப்பட்டு உலகத்தில் சாட்சிகளாக வாழ்வது தான். இன்றையக் காலக்கட்டத்தில் நாம் நற்குணசாலிகளாக வாழ வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் உலகம் மிகவும் மாய்மாலமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசுத்த குலைச்சலான காரியங்களில் ஈடுபடுவதைத்தான் அதிகமாக காண முடிகின்றது. வேதம் வாசிக்கின்றவர்களும், தியானிக்கின்றவர்களும் அதிகம் காணப்பட்டது அன்றைய காலம். அவர்களில் சிலருக்கு வேத வசனங்களின் ஆழங்களை ஆராய்ந்து வர முடிந்தது என்பதும் உண்மை . ஆனால் இன்றையக் காலக்கட்டத்தில் தினந்தோறும் வேதம் வாசிப்பதற்காக பலவேத வாசிப்பு திட்டங்களும், தியான புத்தகங்களும், தியான குறிப்புகளும் அதிகமாக வெளி வந்த போதிலும் தினந்தோறும் வேதம் வாசித்து தியானிக்கின்றவர்கள் அதிகம் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். வாசிக்கின்றவர்களிலும் அதிகமானோர் கடமைக்காக தான் வாசிக்கின்றார்கள். வேத வசனங்களை ஆத்துமா வாஞ்சையோடு மனப்பூர்வமாய் வாசித்து அல்லது கேட்டு இப்படியிருக்கின்றதா? என்று ஆராய்ந்து பார்க்கின்றவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்பதும் உண்மை
. இன்று காலத்தின் வளர்ச்சிக்கேற்ப வேதத்தை வாசிப்பதற்கு கூட அநேகருக்கு நேரம் கிடையாது. அப்படி வாசித்தாலும் ஆராய்ந்து பார்ப்பதே கூட கிடையாது. வசனத்தை குறித்து யார் என்ன சொன்னாலும் அதை ஆராய்ந்து பார்க்காமலே அப்படியிருக்கலாம் என்று நினைப்பவர்கள் தான் அறிவியல் வளர்ச்சிகேற்ப மக்கள் பெரியோர் முதல் பிள்ளைகள் வரை) அனைவரும் நேரத்தை Whatsapp, YouTube, Facebook இப்படிப்பட்டவற்றிலுள்ள சில அருவருப்புகளிலே முக்கியத்துவம் கொடுத்து தங்கள் வாழ்க்கையையும், பிறர் வாழ்க்கையையும் சீர்குலைக்கின்றவர்களாக காணப் படுகின்றார்கள். அநேகருடைய குடும்ப வாழ்க்கையும் இந்த ஆப்புகளினால் தகர்ந்து போவதாக காணப்படுகின்றது. ஆனால் அதற்கே அடிமைப்பட்டு வாழ்வது பாவம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஆப்புகளில் அடிமைப்பட்டவர்களுக்காக நாம் ஜெபித்து கொள்ளுவோமாக. நாம்வேத வசனங்களை தினம்தோறும் வாசித்து நாம் இருக்கின்ற பட்டணத்திலுள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து சிந்திப்போமாக.
நாம் நற்குணசாலிகளாக நம் பட்டணத்தில் விளங்க என்ன செய்ய வேண்டும்
:நாம் சிந்திப்பதற்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் அந்த பட்டணத்தார் என்ன செய்தார்கள் என்று மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
1. வசனத்தை மனோ வாஞ்சையாய் வாசிப்பதும், கேட்பதும்
2. மனோ வாஞ்சையாய் வசனத்தை வாசிப்பதோடோ, கேட்பதோடோ மட்டும் இருந்து விடாமல் வசனத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
3. வசனத்தை ஏற்றுக்கொள்ளுவது மட்டுமல்ல நாம் முடிவு பரியந்தமும் நிலைநிற்க வேண்டுமானால் வசனம் இப்படி இருக்கின்றதா என்று தேடி தேடி வாசித்து அறிந்து கொள்ள வேண்டும்
4. அப்படி தேடி வாசித்து அறிந்து கொண்டோம் என்று அப்படியே இருந்துவிடாமல் அந்த வசனங்களை மாம்ச சிந்தையோடுயல்ல ஆவிக்குரிய சிந்தையோடு தினந்தோறும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தினந்தோறும் ஆராய்ந்து பார்ப்பதினால் மட்டுமே நம்முடைய கிரியைகளை தினந்தோறும் வேத வசனங்களின்படி சீர்திருத்த முடியும். அப்படி யார் யார் ஆராய்ந்து பார்க்கிறவர்களாய் தங்கள் வாழ்க்கையில் கிரியை நடப்பிக்கின்றார்களோ அவர்களே அந்த பட்டணத்திலுள்ளவர்களைப் பார்க்கிலும் அல்லது அந்த சபையிலுள்ளவர்களைப் பார்க்கிலும் அல்லது கிறிஸ்தவம் என்ற போர்வைக்குள் மட்டும் வாழ்கின் றவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலியாக வாழ முடியும். இப்படியாக வேத வசனங்களை கைக்கொண்டு நடப்பது மிகவும் கடினம். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் அநேக போராட்டங்களோடு தான் கடந்து போயிருக்கின்றார்கள்
இன்று அநேகர் வசனத்தை மனோ வாஞ்சையாய் வாசிக்கவும் கேட்கவும் செய்யலாம். ஆனால் விதைக்கிறவனைக் குறித்து இயேசு மத்.13ல் சொன்ன உவமையில் கூறப்பட்டதின்படியே அவர்கள் இருதயம் பண்படுத்தப்படாமல் காணப்படுகின்ற நிலமாக இருப்பதினால் வசனமாகிய விதை வழியருகே விழுந்த விதைக்கு சமமாக காணப்படுகின்றது. ஆகவே இவர்கள் இருதயம் பாரம்பரியத்திற்கும், பலவிதமான பண்டிகைகளுக்கும் தன் சபை மற்ற சபையைக் காட்டிலும் கட்டிடத்தில் சிறப்பாக அமைய வேண்டுமென்றும், பதவி பெயர், புகழ் இவைகள் நமக்கு அதிகமாக கிடைக்க வேண்டுமென்றும் மட்டுமே விரும்புவார்கள். இவர்களுடைய ஆத்மாவைக் குறித்தும் மற்றவர்கள் ஆத்மாவைக் குறித்தும் எந்த பாரமும் கிடையாது.
இன்னும் சிலர் வசனத்தை மனோ வாஞ்சையாய் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புவார்கள். ஏற்றும் கொள்ளுவார்கள். ஆனால் அவர்கள் இருதயம் மண்ணில்லாத கற்பாறையானதாக காணப்படுவதால் தங்கள் சபை என்ன சொல்லுகிறதோ அதை சார்ந்து தான் வசனத்தை ஏற்றுக்கொள்ளுவார்கள். சபை சடங்காச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அதை மட்டும் முக்கியப்படுத்துவார்கள் ஆசீர்வாதத்திற்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் அதில் மட்டும் நிலைத்திருப்பார்கள். வேதம் கூறுகின்றது முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்று (மத்.24:13) முடிவுபரியந்தம் நிலைநிற்க சங்கீதக்காரன் கூறுவது போன்று முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி (வசனத்தின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன் என்று (சங்.119:112) அப்படியே நாம் காணப்பட்டால் மட்டுமே நமக்குள் வேரிலுள்ளவர்களாய் முடிவுபரியந்தமும் நிலைநிற்க முடியும் இப்படிப்பட்ட அனுபவம் இந்த கற்பாறை போன்ற இருதயமுள்ளவர்களிடம் காணப்படாமலிருப்பதால் அவர்களால் பலன் கொடுக்க முடியாது.
சிலர் வசனத்தை மனோ வாஞ்சையாய் ஏற்றுக் கொண்டும் காணப்படுவார்கள். ஆனால் இவர்கள் இருதயம் முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்ட விதை போன்று காணப்படும். இவர்கள் வசனத்தை அறிவார்கள். ஆனால் இவர்கள் இருதயம் வசனம் இப்படி இருக்கின்றதா? என்று ஆராய்ந்து பார்க்கவே செய்யாது. அவர்கள் உலக ஆசீர்வாதங்களுக்கும் எப்படி ஐசுவரியத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற மாம்ச சிந்தனைக்கு வசனத்தை வளைத்து ஒடித்து பேசி தாங்களும் உலக ஐசுவரியத்தின் மயக்கத்தில் விழுந்து, ஜனங்களையும் அதில் தள்ளிவிடுவார்கள். இப்படிப்பட்ட ஜனங்களிடமும், போதிக்கிறவர்களிடமும் எப்படி சத்தியத்தைச் சொல்லி புரியவைத்தாலும், அவர்கள் சத்தியத்தை ஆராய்ந்து பார்க்க மனதில்லாமல் மாம்ச இச்சைக்கேற்றபடியே புரிந்து வைத்துக்கொள்ளுவார்கள் இவர்கள் லட்சியம் வேத வசனங்களால் உலகத்திலுள்ளவைகளை தேடிடுவது தான். ஆகையால் இவர்களிடமும் நற்குணசாலிகளுக்கான பலன் இல்லாமற் போகிறது.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ வசனத்தை அனுதினமும் வாசித்தும், கேட்டும் உணர்ந்து கொள்ளுவதற்கேற்ற பண்படுத்தப்பட்ட நிலமாக எப்பொழுதும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு ஜாக்கிரதையோடு விழித்திருப்பான். இல்லாவிட்டால் பொல்லாங்கன் வந்து உலக ஐசுவரியத்தையும், சத்தியத்திற்கு மாறுபாடான காரியங்களையும் சொல்லி விதையை அழித்துப் போடுவான். நல்ல நிலத்தில் விழுந்த விதை மாம்ச சிந்தையோடு வசனத்தை ஆராய்ந்து பார்க்காமல் ஆவிக்குரிய சிந்தையோடே ஆராய்ந்து பார்ப்பார்கள். அவன் வசனத்தை அனுதினமும் ஆராய்ந்து பார்ப்பதினால் பாவங்களைக் குறித்ததான உணர்வோடு காணப்படுவார்கள். யார் வசனத்தைக் குறித்து பேசினாலும் வேதவாக்கியங்கள் இப்படி இருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்ப்பார்கள் எந்த சபையின் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். பரி. பவுல் கூறுவது போன்று நான் ஒருவருக்கே அடிமைப் படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள் ளும்படிக்கு என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். 1கொரி. 9:19 என்பது போன்று காணப்படுவார்கள். அது மட்டுமல்ல கிறிஸ்துவின் பிரமாணத்துக்குட்பட்டவனாயிருப் பான். (1கொரி.9:20) எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். (1கொரி. 9:22) என்பது போலவும் காணப்படுவார்கள். இவர்களால் மட்டுமே நற்குணசாலிகளாக வாழ முடியும். அதோடு முடிவுபரியந்தமும் நிலைநின்றும், பலன் கொடுக்கவும் முடியும்.
இந்த நல்ல நிலத்தில் விழுந்த விதைபோன்று நாமும் வசனத்தைக் கேட்கிறவனும், ஆராய்ந்து உணருகிறவனுமாயிருந்து நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் கொடுப்போமாக. சில வசனங்களுக்கு மட்டும் கீழ்ப்படிவது பலன் தராது என்பதையும் நாம் அறிவோமாக. பூரணமாக நாம் வசனத்தை தன் வாழ்க்கையில் உட்கொண்டு பரிசுத்தமாக வாழ கர்த்தர் தாமே இந்த துன்பமும் சஞ்சலமும் கெடுதிகளும் உபத்திரமும் நிறைந்த காலத்தில் நம்மனைவருக்கும் உதவி செய்வாராக ஆமென்.
சகோ. ஹெலன்ஹீன், கேரளா. cell: 9947301633