பாவங்கள்
என் ஜனத்திற்கு அவர்கள் மீறுதலையும் யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. ஏசாயா 58:1
அன்பானவர்களே,
தேவகற்பனைகளையும் அவருடைய சாபங்களையும் மீறுவதே பாவம். நம்முடைய வாழ்க்கையில் எப்படியெல்லாம் பாவம் கடந்து வருகின்றது என்பதைக் குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதமும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அல்லது நிவிர்த்தி அடைய செய்வதற்காக நாமெல்லாரும் மனந்திரும்ப வேண்டியது அவசியமாயிருக்கின்றது.
அப்.3:20ல் உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள் என்று பேதுரு சொல்லுவதுதான் இது. இதற்கு முந்தினபகுதியை நாம் பார்க்கும் போது இப்படியாகக் கூறுகிறார். உங்கள் பிதாக்கள் நீதிமானாகிய கிறிஸ்துவை கொலை செய்தார்கள். இது தீர்க்க தரிசனத்தில் நிறைவேறுதலாயிருந்தாலும் அவர்களுடைய அறியாமையின் நிமித்தமே இதனை செய்தார்கள் என்று குறிப்பிடபடுகின்றது. இப்படியான கொடிய பாவங்களினின்று விடுதலையடைவதற்காக மனந்திரும்புங்கள் என்று பேதுரு இங்கு கூறுகின்றார்
. ஒருவன் எதற்காக மனந்திரும்பவேண்டுமென்றால் பாவங்கள் நிவிர்த்தியாக்கப்பட அதாவது பாவங்கள் கழுவப்பட்டு பின்பு அதனை செய்யாமலிருக்க வேண்டும். என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் என்று சங்கீதம் 51:5ல் தாவீது சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு மனிதன் இவ்வுலகத்தில் பிறக்கும் போதே பாவம் அவனை சூழ்ந்திருக்கிறது என்பதை நாமுணரவேண்டும் அதை தொடர்ந்து பல வழியாக பாவங்களில் தேர்ச்சியடைகின்றபடியால், உலகம் தேவனுக்கு விரோதமான பாவங்களால் நிறைந்திருக்கின்றதே. எங்கு திரும்பினாலும் பாவம் பின் தொடருகின்றதே. இது ஒரு நோய் போல எல்லாரையும் பற்றியிருக்கின்றதே. இந்த பாவ நோயிலிருந்து முற்றிலும் குணப்பட வேண்டுமே. அதற்கான ஒரே வழி மனந்திரும்புதல் மட்டுமே. ஒருவன் மனந்திரும்பினால் தன்னுடைய உடையிலோ, சரீரத்திலோ, அலங்கரிப்பிலோ ஏற்படுத்தும் மாற்றமல்ல மாறாக உள்ளார்ந்த மனிதனில் தான் மாற்றம் காணப்பட வேண்டும். அது மட்டுமல்ல அவனுடைய கனிகளினாலே தான் நாம் அறிய அல்லது உணர முடியும். உண்மையாய் மனந்திரும்பினவர்கள் மெய்யாய் ஆவியின் கனிகளை கொடுக்கின்றவர்கள் ஆவார்கள்.
மனந்திரும்பினவர்கள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் சொல்லி கொள்கின்ற நாம் எப்படியாயிருக்கின்றோம். ஆவியின் கனிகளாகிய அன்பு சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இவைகள் காணப்படுகின்றதா? மனந்திரும்பி இந்த கனிகளையுடையவர்கள் மட்டுமே நித்திய வாழ்வை சுதந்தரிக்க முடியும். அன்பானவர்களே, நோய்களை குணப்படுத்த என்னென்னவோ செய்கின்றோமே. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடுகின்றோமே. இந்த பாவநோய் நம்மை விட்டு நீங்க இந்நாள் வரை ஏதாவது வைத்தியம் பார்த்தீர்களா. அதற்கான வழிமுறைகளை சிந்தித்தீர்களா. யாரிடமாவது விசாரித்தீர்களா. ஒருபோதும் இல்லையே. இவ்வுலகிலே மண்ணிற்கு சமர்ப்பிக்க வேண்டிய சரீரத்தை தான் நோய் கெடுக்கும். ஆனால் பாவமோ நித்திய வாழ்விற்கு போக வேண்டிய நம்முடைய ஆத்துமாவை அழிவுக்கு நேராக அக்கினிக்கு நேராக இழுத்து செல்லுமே சிந்தித்ததுண்டோ ? சரீரத்தை விட முக்கியமான ஆத்துமாவை அழிவினின்று காப்பாற்ற நாம் என்ன செய்கின்றோம். ஒருவேளை பாவங்களை மறைத்து இவ்வுலகிலே வாழ முடியும். ஆனால் வேதம் கூறுகிறது தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதி.28:13. எனவே மறைத்து வாழாமல் அறிக்கை செய்து விட்டு விடுவோம். பாவம் என்ற மிக பெரிய நோய் நிவிர்த்தி செய்யப்பட வேண்டுமானால் மனந்திரும்பியே ஆக வேண்டும்
. உலகத்தை ஒரு வேளை நம்மால் ஏமாற்ற முடியும். நாம் மனந்திரும்பினோம் என்ற போர்வையில் ஆராதனைகளிலும் அதற்கடுத்த காரியங்களிலும் ஒருவேளை தவறாமல் கலந்து கொள்ளலாம். வேஷங்களிலும், அலங்காரங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி மற்றவர்களை ஏமாற்றலாம். ஆனால் பாவம் நீங்கி குணப்பட வேண்டுமானால் யாருக்கு விரோதமாக பாவம் செய்யப்பட்டதோ நிகழ்த்தப்பட்டதோ அவரிடத்திலே அது அறிக்கை செய்யப்பட்ட பாவம் சின்னதானாலும் பெரியதானாலும் அறிக்கை செய்து விட்டுவிடப்பட வேண்டும். இல்லையேல் நம்மால் மனந்திரும்ப முடியாது
. அன்பான வாசகர்களே ஆவியின் கனிகளில்லாத வாழ்க்கை பாவ வாழ்க்கையே. நற்கனிகள் எல்லாம் கொடுக்கப்படவில்லையென்றால் மீட்பு கிடையாதே. ஏனென்றால் வேதம் கூறுகிறது. ஒருவன் ஒன்றில் தவறினாலும் அவன் எல்லாவற்றிலும் தவறினவனாவான் என்று. ஆகவே பூரணமாக பாவங்கள் கருகப்படவில்லையென்றால் மனந்திரும்ப முடியாதே. தேவனுடைய வசனங்களுக்கு முழுமையாகக் கீழ்ப்படியாமல் தங்களுக்கு சாதகமான சிலவற்றை மாத்திரம் கடைபிடித்து விட்டு மனம் திரும்பினோம் என்று சொல்லுபவர்கள் முடிவிலே (மரணத்திற்கு பிறகு) நித்திய ஜீவனை இழக்க வேண்டியதாயிருக்குமே. ஆகவே ஆவியின் கனிகளை கொடுப்பதற்கேற்ப மனந்திரும்பி நாம் ஆயத்தமாகக்கடவோம். தேவன் தாமே நம் அனைவருக்கும் கிருபை புரிவாராக. ஆமென்.
சகோ . ஷீன் சைரஸ், கேரளா. Cell: 09447735981