அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்ப்படைந்தார்கள். வெளி.20:12
இந்த பெரிய வெள்ளை சிங்காசனம் நியாயஸ்தலம் முன்பாக மரித்தோராகிய மனந்திரும்பாதவர்களும் தேவனை அறியாதவர்களுமான சிறியோர் பெரியோர் சகல கோத்திரத்தார் சகல ஜாதியினர், மலைவாசிகள், காடு வனாந்தரங்களில் வாழ்ந்தோர் யாவருமாய் நிற்கின்ற கூட்டத்தார் முன்னிலையில் ஜீவபுஸ்தகம் என்றும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்படுகின்றது. அப்பொழுது அவர்கள் யாவரும் அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே தங்கள் தங்கள் கிரியைகளுக் குத்தக்கதாக நியாயத் தீர்ப்படைகின்றார்கள். இது மனந்திரும்பாதவர்களின் நியாயஸ்தலமாகும். இங்கே திறக்கப்படவிருக்கும் பெரிய புஸ்தகம் அன்னார்களின் கிரியைகளை காண்பிக்கும் புஸ்தகமாகும். (Book of works or deeds) இந்த நியாயஸ்தலத்திலே கிரியைகளின் புஸ்தகம் திறக்கப்பட்டு யாவருக்கும் விசேஷமாய் நற்கிரியைகளை செய்தவர்களும் நல்லவர்கள் என்று பெயர் பெற்றவர்களுமானவர்களும் ஏன் அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுகின்றார்கள் என்பதினை விளங்கிக் கொள்ளத்தக்கதாக அவர்களுக்கான கிரியைகளின் புஸ்தகம் திறக்கப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டு அதன்படிக்கே நியாயந்தீர்ப்படைகின்றார்கள்.
தேவன் நீதியுள்ளவர், பட்சபாதமில்லாமல் நியாயஞ்செய்கிறவர் விளக்கம் அளிக்கப்படாமல் எவரையும் நரகத்திற்கு தள்ளிவிடுகிறவர் அல்ல. யாவருடைய கிரியைகளையும் காண்பித்தப்பின்பே தங்களுக்கான தீர்ப்பினை 100% ஏற்றவர்களாகவே நரகாக்கினையில் பங்கடையச் செய்கின்றார் என்ற உண்மையை அறிந்திடுவோமாக.
இங்கே ஜீவ புஸ்தகமும் (Book of life) உண்டு இதனையும் திறந்து காண்பித்து கேட்க அவர்களுக்கு உரிமம் உண்டு. உலகத்தில் பிறக்கும் எல்லா மனிதர்களின் பெயர்களும் இந்த ஜீவ புஸ்தகத்திலே எழுதப்படுகின்றன. (சங்: 139 :16) ஆனால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் சிலுவையின் இரத்தினாலே இரட்சிக்கப்படாதவர்களின் பெயர்கள் இதிலே அடிக்கப்படுகின்றன.(வெளி: 3: 5) (Blotted out) ஆகையினால் நரகாக்கினைக்கு செல்லுகின்றவர்களுக்கு அன்னார்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்திலே அடிக் கப்பட்டுள்ளதை காணவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தங்கள் தங்கள் பெயர்கள் அடிக்கப்படாத நிலமையில் எழுதப்பட்டிருக்கக் காண்பவர்கள் மாத்திரமே நித்திய ஜீவனை பங்கடைவார்கள்.
தேவன் தம்முடைய ஒரே குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்திலே அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படான். விசுவாசியாதவனோ அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:15-18) இதுவே சத்தியமும் உண்மையுமாகும்.
ஏன் நற்கிரியைகளை செய்தவர்களும், நல்லவர் என்று பெயர் பெற்றவர்களும் ஏன் பரலோகம் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற காரணங்களை பரி.பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்திலே வாசித்து அறிந்திடலாமே.
ரோமர் 2 ஆம் அதிகாரம் முழுவதுமே இரட்சிக்கப்படுவதற்கான முறைமைகளை கூறவில்லை. மனந்திரும்பாதவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத பக்திமான்களின் வாழ்க்கையின் தராதரத்தினை அறிந்து அவர்கள் யார் எங்ஙனம் காணப்படுகின்றார்கள் என்பதினையே விளக்கி கூறுகின்றது. பொதுவாக தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு அவர்களை விட தாங்களே நல்லவர்கள் என்று தீர்ப்பு கூறுபவர்களே இந்நாட்களில் அதிகமாய் காணப்படுகின்றார்கள்.
2. ரோமர் 2 :4 யின் படிக்கு அன்றாடம் தேவனிடமிருந்து பெற்று வருகின்ற ஆசீர்வாதம், செழிப்பு, பணி உயர்வு, தீர்க்க ஆயுள், அற்புதங்களின் செழிப்பு, ஆடம்பரம், வசதி, நல்ல நல்ல வாய்ப்புக்கள், நல்ல வியாபாரம் விருத்தி இவைகள் எதுவும் அன்னார்களின் மனந்திரும்புதலுக்கு நடத்திடவில்லையே. செய்த ஊழியங்களை பிசாசினை விரட்டினவைகளை, நடப்பித்த அற்புதங்களை, அக்கிரம செய்கைகளே என்றும் நடப்பித்தவர்களை அக்கிரம செய்கைகாரர்களே உங்களை அறியேன் என்றுதானே ஆண்டவர் கூறியுள்ளார். மனந்திரும்பிட மாட்டார்களா என்று பொறுமையாய் காத்திருந்த ஆண்டவரின் பொறுமையை, தயவை, நீடிய சாந்தத்தை அசட்டைபண்ணியுள்ளார்களே.
3. ரோமர் 2:5 யின் படிக்கு இவ்வளவாய் சகாயம் கிடைத்திருந்தும், நன்மைகளை அனுபவித்திருந்தும் மனந்திரும்புதலை மட்டும் அடைந்திடாமல் செயல்பட்ட மன கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி நீதியான தீர்ப்பாகிய தேவ கோபாக்கினையை சொட்டு சொட்டாக, சிறிது சிறிதாக, பொழுதொரு வண்ணமாக தங்கள் மேலே குவித்துக் கொண்டார்களே. இந்த கோபாக்கினை குவித்துக்கொள்ள அவர்களை அன்றாடம் வழி நடத்தின ஊழியக்காரர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்களே. மனிதனின் நல்ல இரத்தம் ஓடும் தமனி (arteries) குழாயிலே கடினத்தன்மை காணப்படுமானால் அன்னாரை சீக்கிரமாய் அவனுடைய கல்லறைக்கு கொண்டு சென்று விடுவதைப் போன்று ஆவிக்குரிய கடினத்தினால் நரகாக்கினை அடைவது நிச்சயமல்லவா
4. ரோமர் 2:6-10 யின் படிக்கு அவர்களுடைய நற்கிரியைகள் யாவும் அவர்களின் தீமையான காரியங்களை விட அதிகமானது என்றும் அதனால் தீமையானவைகள் கருதப்படாமல் விட்டுவிடப்படலாமே என்றும் வாதாடலாம். மத்.19 அதிகாரத்தில் ஒரு வாலிபன் இயேசுவிடம் வந்து நல்ல போதகரே என்று அழைத்து நித்திய ஜீவனை அடைய எந்த நன்மையை செய்ய வேண்டும் என்று கேட்டார். தேவன் கூறிய பதில் என்ன தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே என்றார். மேலும் அவனிடம் அன்புகூர்ந்து ஒரு சிறு கட்டளையை கூறின போது அதனை செய்ய விரும்பாமல் நித்திய ஜீவனையே உதாசினப்படுத்திவிட்டானே. பின்பு குறைவாய் தீமைகளையும் நிறைவாய் நன்மைகளையும் செய்பவனை எப்படி எதனை நம்பி அவன் பரலோகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவான். பரலோகத்தினையும் தீமையினால் சாதிக்க சந்தர்ப்பமாகிவிடுமே. மேலும் இயேசு கிறிஸ்து ஒருவரே நல்லவர். அவர் நன்மை செய்பவராகவே சுற்றித்திரிந்தார் அவருடைய நன்மைகளை மனிதர்களின் நன்மைகளோடு ஒப்பிடக்கூடுமோ கூடாதே. தேவனைப்போன்று குருடனின் கண்களை திறக்கக்கூடுமோ. மரித்தவனை எழுப்பக்கூடுமோ, சப்பாணியை நடக்கச் செய்தாரே குருடனுக்கு பார்வை அளிக்கப்பட்டதே. தன் ஜீவனையை கொடுத்து மானிடருக்கு இரட்சிப்பினை அளித்துள்ளாரே. இந்த நன்மைகளை மனிதர்கள் எவரும் செய்யக்கூடாதே. பின் எப்படி நற்கிரியைகளை மேன்மை பாராட்டி நித்திய ஜீவனை வேண்டக்கூடும். கூடாதே. ஒவ்வொரு மனிதனுக்கும் இரட்சகர் அவசியமாய் தேவைப்படுகின்றதே. பின் எங்ஙனம் நல்ல மனிதனாக அறிய முடியும்.
5. ரோமர் 2:11 யின் படிக்கு தேவனிடத்தில் பட்சபாதமில்லையே. மனிதன் முகத்தைப் பார்த்து தீர்ப்பு சொல்லுகிறான். தேவனோ இருதயத்தையும் அதன் நோக்கத்தையும் பார்த்து தீர்ப்பு செய்கின்றார். ஒரு தகப்பன் தன் சிறு பையனை 10வது மாடி கட்டிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் கீழே காண்பிக்கின்றான். விலையுயர்ந்த கார்களும், மலிவான கார்களும், சிறிய டப்பா போன்று காணப்படுகிறது. 6 அடி உயரமான மனிதனும் 7 அடி உயரமான மனிதனும் வித்தியாசமின்றி சமமாக காணப்படுகின்றனர். ஆனால் கீழே இறங்கி சமீபமாய் காண்கையில் வித்தியாசங்களை துல்லியமாக காணமுடிகிறதே. தேவனுடைய பார்வையும் சமீபமாய் காண்கின்றதாகவே காணப்படுகின்றது. இருதயத்தினை துள்ளியமாக கண்டு (ஏசா.28:21) யில் வாசிக்கின்றோம்) அபூர்வமான கிரியைகளை செய்யவும் அபூர்வமான வேலையை நிறைவேற்றவும் அப்போது கோபங்கொண்டது போல கோபம் கொள்கின்றவராகின்றாரே. அன்று ஒரு நீதி இன்று நீதி என்பது இல்லையே
6. ரோமர் 2:12-15 யின் படிக்கு அவரவர்களுக்கு அளிக்கப்பட்ட வெளிச்சத்தின்படிக்கே நியாயத்தீர்க்கப்படுகின்றவர்களாவர். சுவிசேஷத்தை கேட்டவர்கள் கேட்க்காதவர்கள். கேட்டவர்கள் அவர்களுடைய மனந்திரும்பாத மனம், இருதயம் கடினத்தின்படிக்கு நீதியான தீர்ப்பினை பெறுவார்கள். சுவிசேஷத்தை ஒருமுறை கூட அறியாதவர்கள் அவர்களுடைய மனசாட்சியிலே குற்றமுண்டு, குற்றமல்லை என்று அறியப் படுகின்றார்களே. மேலும் தேவனுடைய இரக்கத்தை தயவை அதிகமாய் பெற்று நற்கிரியைகளை சோர்ந்து போகாமல் செய்பவர்கள், தேவன் நடப்பித்த முதல் அற்புதமாகிய (சங்.19:1) தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் வானங்களையும் தேவனுடைய கிரியைகளை வெளிப்படுத்தும் ஆகாய விரிவையும் காணும் போது அவற்றினாலே தேவனுடைய மகிமையையும், கனத்தையும், அழியாமையையும் அறிந்திடாதிருக்கக் கூடுமோ? கூடாதே
சாதாரண குடும்ப வாழ்விலே, நல்ல அரிசி இது என்றும், பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு போன்ற நல்லவைகளை அறிந்து கனத்துக்குரியதை மகிமையானவைகளை செய்ய அறிந்தவர்கள் எங்ஙனம் அழியாமையை நித்திய ஜீவனை) அறியாதிருக்கக் கூடும். அழியாமையை தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார் என்று 2:7 யில் வாசிக்கின்றோமே. ஆனால் மக்களோ கேள்விப்பட்டவைகளிலும் அறியப் பட்டவைகளிலும் வாழ்ந்திட பிரயாசப்படவில்லையே.
7. ரோமர் 2:16 யின் படிக்கு தேவன் நம்முடைய அந்தரங்களையும் மறைவானவைகளையும் குறித்து நியாயந்தீர்க்கின்றவராயிருக்கின்றாரே. மத்.10:26-27 யில் வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை. அறியப்படாத இரகசியமும் இல்லையென்றும் வாசிக்கின்றோமே. ஆகையினால் அந்நாளிலே தோண்டி எடுக்கப்படும் பழைய எலும்பு கூடுகளை காணுகையில் மறைவாக செய்து மறந்து போன, மூடிவைக்கப்பட்ட மன்னிக்கப்படாத பாவ இரகசியங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரக்காணும் போது வெட்கி தலைகுனிய நேரிடுமே. ரோமர் 8:1 யில் வாசிக்கின்றோம். ஆவியின் படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லையென்று வாசிக்கின்றோம். அதன்படிக்கு ஆவிக்குரியவர்களாக எந்த நியாயத்தீர்ப்பினையும் சந்திக்க ஆயத்தமாகியுள்ளேன் என்று உறுதிபட கூறுகின்றவர்களாய் காணப்பட வேண்டுமே. இந்த அனுபவத்தை கொண்டிராதவர்கள் எப்படி தேவனுடைய தண்டனைக்கு தப்பிக்கொள்ளக் கூடும். கூடாதே. ஆகையினால் தேவன் தாமே ஆலோசனையாக கூறியவற்றை மத்.5:20-26 யில் வாசிக்கின்றோமே. பலிபீடத்தினிடத்திலே காணிக்கை செலுத்த வருகையில் உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் அங்கே தானே உன் காணிக்கையை வைத்துவிட்டு முன்பு போய் உன் சகோதனோடே ஒப்புரவாகி பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து என்று தானே வாசிக்கின்றோம். மேலும் எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்திலே ஒப்புக்கொடுப்பதற்கு முன்பாகவே எதிராளியோடு வழியில் இருக்கும் போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்திவிடு என்று ஆண்டவர் கூறியதை வாசிக்கின்றோமே. அதனையே இப்பொழுது தானே வழியில்தானே செய்து விடுவோமானால் வெள்ளை சிங்காசன நியாயஸ்தலத்தை தவிர்த்துவிடலாமே. நியாயஸ்தலத்திலே I have settled out of court என்றும் அறியப்பட்டு விடுவோமே.
அருமையானவர்களே, ஆண்டவர் தாமே நம்மனைவரையும் நியாயஸ்தலத்திற்கு கொண்டு சென்று விடாதபடிக்கே நமக்காக சிலுவையிலே யாவற்றையும் செய்து முடித்து விட்டாரே இதனை அனுபவமாக கொண்டிராத பட்சம் வெள்ளை சிங்காச நியாயஸ்தலத்தை தவிர்த்து விட கூடாதே. இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் திட்டத்தினை அடைந்திடாமல் நியாயஸ்தலம் செல்லுகின்ற போது தேவன் தாமே நமக்கு விரோதமான ஆதாரங்கள் ஏராளமானவற்றை நிரூபித்து காண்பிக்கையில் எப்படி தப்பித்துக் கொள்ளக்கூடும்.
ஆண்டவருடைய தயவுள்ள இரக்கங்களுக்கு முடிவு சீக்கிரமாய் வருகின்றதே. நமது எதிர்பாராத மரணமே தேவனுடைய கிருபையை பெற்றிட முடியாதபடிக்கு நம் கணக்கினை முடித்து முத்திரை செய்து விடுமே. பின் எந்த வாய்ப்பும் நமக்கு கிட்டாதே. நமது முடிவு மிகவும் பரிதாபமாகி விடுமே. அறிந்தும் அறிவீனமாய் அழிவுக்கு நாமே சென்றடைந்திடுவோமே. ஆகையினால் இக்கிருபையின் நாட்களினை ஆதாயப்படுத்திக் கொண்டிடுவோமாக. ஆண்டவர் தாமே பிரதான ஆசாரியராய் நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகின்றவராயும் இருக்கின்றாரே. ஆமென்.
சகோ. பிலிப்ஜெயசிங்,
நாசரேத் ஜெப ஐக்கியம்,
நாசரேத். தூத்துக்குடி மாவட்டம்.