பெண்கள் பகுதி
கீழ்ப்படியுங்கள்
ஸ்திரீயானவள் கற்றுக்கொள்ளக்கடவள்
“ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.” 1தீமோத்.2:1
எல்லா மனுஷனும் தன் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கற்றுக்கொள்ளுகிறவனாகத் தான் காணப்படுகிறான். தான் சிறுவயதாய் இருக்கும் போது தாய் தகப்பனிடம் கற்றுக்கொள்ளுகிறான். இப்படியாக ஒவ்வொரு வயதிற்கேற்ப கற்றுக்கொண்டவனாகவே வளர்ந்து வருகின்றான். இதுபோன்று ஆசிரியர் நண்பர்கள், தோழிகள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் இன்னும் சமூகத்தினர் இப்படி எல்லார் மூலமும் கற்றுக்கொள்ளுகின்றனர். இந்த கற்றுக்கொள்ளுதலின் போது அவன் (அல்லது) அவள் நன்மையை மட்டுமல்ல தீமையும் கற்றுக் கொள்ளுகின்றனர். நாம் சிந்திப்பதற்கு எடுத்துக்கொண்ட வசனத்தில் ஸ்திரீயானவள் எப்படி கற்றுக்கொள்ள வேண்டும். யாரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதம் மிக தெளிவாக நமக்கு கற்றுக்கொடுக்கின்றது. இன்னும் நாம் கற்றுக்கொள்ளுதலைக் குறித்துப் பார்க்கும் போது அநேக புத்தகங்கள் மூலமும் கற்றுக்கொள்ளுகிறோம்.
நமக்கு வேதாகமம் கற்றுக்கொடுக்கின்றதாகவே காணப்படுகின்றது. வேதாகமத்தில் வருகின்ற எல்லா சம்பவங்களும் வாழ்க்கைக்கு தேவையானவற்றையும் நன்மை, தீமை இன்னதென்றும் கற்றுக்கொடுக்கின்றது. சிலர் கற்றுக்கொண்டவர்களாகவும், சிலர் கற்றுக்கொள்ள மனதில்லாதவர்களாகவும் வாழ்ந்து வருகின்றோம்
.ஸ்திரீயானவள் எப்படி கற்றுக்கொள்ளக்கடவள் :
வேதம் கூறுகிறது ஸ்தீரியானவள் அடக்கமுடையவளாயிருந்தும், அமைதலோடும் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அதோடு எல்லாவற்றிலும் அப்படியாக இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறது. சிலர் நினைப்பது சில காரியங்களை மட்டும் கற்றுக்கொண்டால் மட்டும் போதுமானது. மற்றவைகளெல்லாம் நமக்கு நன்றாக தெரியுமே என்று. ஆனால் அப்படியல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அடக்கம் என்பதின் அர்த்தம் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மை. அல்லது குணம் என்பது தான் பொருள். இந்த தன்மை மறைந்திருப்பது, பணிவு, பொறுமை, அன்பு, அமைதல், சாந்தம் இப்படிப்பட்டவைகள். ஸ்திரீகளில் அநேகரிடம் இந்த தன்மைகள் இருப்பதில்லை என்பதும் உண்மை . குடும்பத்திலும் மற்ற இடங்களிலும் சபைகளிலும் ஸ்திரீகள் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ளும் தன்மையைத்தான் வெளிப்படுத்து கின்றார்கள். இதனால் கற்றுக்கொள்ளும் மனபக்குவமும் இல்லை என்பதும் உண்மை . ஸ்திரீகளாகிய நாம் முதன்மைப்படுத்திக்கொள்ளும் தீய குணங்களால் குடும்பத்தில் காணப்படாமல் கற்றுக்கொள்ளும் தன்மையுள்ளவர்களாக வாழ்க்கை முழுவதும் வேதாகமத்தின் மூலம் கற்றுக்கொள்ளுகிறவர்களாக காணப்பட தான் தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கின்றார் என்பதை நாம் அறிவோமாக.
யாரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்?
வேதம் கூறுகிறது. அவர்கள் (ஸ்திரீகள்) ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள் என்று. 1கொரி.14:35. நாம் யாரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் வேதாகமம் நமக்கு தெளிவாக கூறுவதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் அநேகர் புருஷனிடத்தில் கற்றுக்கொள்ளுவதை அதிகமாக விரும்புவதில்லை. சிலர் மற்றவர்களிடமும், சபை போதகர்களிடமும் விருப்பமுள்ள ஊழியக்காரர்களிடமும் தான் கற்றுக்கொள்ள விருப்பம் கொண்டு அவர்களிடம் நேரிட்டும் தொலைபேசி மூலமும், Whatsapp மூலமும் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். இன்னும் புருஷனுக்கு கற்பிக்கின்றவராக இருக்கதான் விரும்புகின்றனர். ஸ்திரீகளில் அநேகருக்கு புருஷன் செய்யும் எல்லாக் காரியங்களிலும் திருப்தி இல்லை. ஒரு சிலருக்கு சில காரியங்களில் திருப்தி காணப்படுகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலை காரணமாக அமைவதால் புருஷனிடம் கற்றுக்கொள்ள ஸ்திரீகள் விரும்பாமல்; புருஷனுக்கு கற்றுக்கொடுக்க உபதேசம் பண்ண விரும்புகின்றவர்களாக காணப்படுகின்றோம் என்பதும் உண்மை . இது தேவனுக்கு விரோதமான பாவம் என்பதை நாம் இந்நாட்களில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் மாணவர்களாய் வகுப்பறையில் கற்றுக்கொள்ள இருக்கும் போது சில ஒழுங்கு முறைமைகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுது தான் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களிடம் வரும். அப்பொழுது ஆசிரியர் கற்றுக்கொடுக்கின்றவைகள் பலன் கொடுப்பதாக அமையும். வகுப்பறைக்குள் மிகவும் தேவை அடக்கம், அமைதல் நிலவிய சூழ்நிலை தான். இது மாணவர்களிடம் காணப்படாமலிருந்தால் ஆசிரியர் எதைக் கற்றுக்கொடுத்தாலும் புரியாதவைகளாகவும் எதிர்த்துப் பேசுகின்றவர்களாகவும் தான் இருக்க முடியும். சிலவேளையில் ஆசிரியர் கற்றுக்கொடுப்பவை தவறுதலாகவும், புரியாதவைகளாகவும் இருக்கலாம். ஆனால் மாணவர்களாகிய நம்மிடத்தில் கற்றுக்கொள்ளும் மனபக்குவமிருந்தால் அந்த தவறுதலுகளையும் கூட ஆசிரியரிடம் கேட்டு சரி செய்துக் கொள்ளலாம். புரியாதவைகளையும் கேட்டு புரியும் படி செய்துக் கொள்ளலாம். இதற்கு அடக்கமும், அமைதலும் மிக அவசியமாகும் அப்படி காணப்பட்டால் மட்டுமே கற்றுக் கொள்ளுபவைகள் எதிர்காலத்தில் மகிமையைத் தேடி தரும் அல்லாமல் ஆசிரியரிடமும் எதிர்த்துப் பேசுகின்றவர்களாகவும், அவர்கள் கற்பிக்கின்றவைகளை உதாசினப்படுத்துவோமானால் நம்முடைய எதிர்கால கல்வி அல்லது வாழ்க்கையின் மகிமை சிறப்பாக அமைய வழி செய்யுமா? சிந்தித்துப் பாருங்கள் நாம் ஆசிரியரிடமிருந்து கோபத்தையும் எதிர்ப்பையும் தானே சம்பாதித்துக் கொள்ள முடியும்.
அதுபோன்று நம் குடும்ப வாழ்க்கையும் ஒரு வகுப்பறை தான் நாமும் குடும்பத்தில் அடக்கமும், அமைதலும் உள்ள சூழ்நிலையில் தான் காணப்பட வேண்டும். அப்படி காணப்பட்டால் மட்டுமே புருஷனிடமிருந்து கற்றுக்கொள்ளும் மனபக்குவம் நமக்கு கிடைக்கும். புருஷன் கற்றுக்கொடுப்பவை சில வேளைகளில் நமக்கு விருப்பமில்லாததாகவும், தவறாகவும், புரியாததாகவும் கசப்பைத் தருவதாகவும் கூட இருக்கலாம். ஆனால் நாம் குடும்ப வாழ்க்கையில் நல்ல பலனை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் புருஷனிடத்திலிருந்து அடக்கத்தோடும், அமைதலோடும் கற்றுக்கொள்ளக்கடவர்களாக காணப்பட வேண்டும். விருப்பமில்லாதவைகளை புருஷனிடம் கேட்டு இருவரும் பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதுபோன்று புரியாதவைகளையும், தவறுகளை புருஷனிடம் அமைதலோடு கேட்டு திருத்திக் கொள்ள வழி செய்யலாம். இப்படியாக பணிவோடு சாந்தத்தோடு குடும்ப வாழ்க்கையில் கற்றுக் கொள்ளுகின்றவர்களாக காணப்படுவோமானால் புருஷனோடே கூட நித்திய ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளலாம். அதுவே நமக்கு கற்றுக்கொள்ளுவதினால் கிடைக்கும் எதிர்கால பலனாகும் என்பதை நாம் அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் புருஷனிடமிருந்து கற்றுக் கொள்ளாமல் எதிர்க்கின்றவராக காணப் படுவோமானால் புருஷனிடமிருந்து தயை பெற்றுக் கொள்ளமுடியாது. அன்பை பெற்றுக் கொள்ளுவதற்கு பதிலாக கோபமும், சண்டையும் தான் பிறக்கும். கற்றுக் கொள்ள விருப்பமில்லாத ஸ்திரீகள் எதிர்த்துப் பேசுகின்றவர்களாகவும், வீராப்புடன் பேசுகின்றவர்களாகவும், புருஷனிடம் எல்லாக் காரியத்தையும் மறைத்து பொய்ப்பேசுகின்றவர்களாகவும், புருஷன் என்ன செய்தாலும் விருப்பப்படாதவர்களாக தான் காணப்படுவார் என்பதும் உண்மை . கற்றுக்கொள்ளவிரும்பாதவர்களிடம் தான் பிரிந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். சில ஸ்திரீகள் சொல்லுவதுண்டு நான் புருஷனுக்கு நல்ல மனைவியென்று. சிலர் மற்ற ஸ்திரீகளைப் பார்த்தும் சொல்லுவதுண்டு. இவள் நல்ல மனைவி ஆகையால் தான் இந்த துஷ்ட மனிதனோடு அல்லது துன்மார்க்கமாக வாழ்கின்ற இந்த புருஷனோடு இவள் சகித்து வாழுகின்றாள் என்று. இப்படி பல விதத்தில் சொல்லுவார்கள். சகித்து வாழ்வது பெரிய காரியம் தான். ஆனால் அவரை ஆதாயப்படுத்திக் கொள்ள முடிந்ததா? என்பதுதான் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பவை. ஆகவே நாம் வேதத்தை கற்றுக்கொண்டவர்களாய்க் காணப்பட்டு அதன்படி புருஷனிடமிருந்து கற்றுக்கொள்ளுகிறவர்களாக புருஷனை நாம் ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் வேதாகமத்திலிருந்து ஒரு சில ஸ்திரீகளின் கற்றுக் கொள்ளும் முறைமையைப் பார்ப்போம். குணசாலி என்று புகழப்பட்ட ரூத் தன் வாழ்க்கை பயணத்தில் அநேக கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வந்தவள். அவள் தன் புருஷனை இளம் வயதிலே இழந்தாள். பின்பு தன் மாமியாகிய நகோமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள். அவள் மாமி கற்பித்தபடியே நடந்து கொண்டது மட்டுமல்ல, மாமியிடமும் கற்றுக் கொள்ளுகிறவளாக காணப்பட்டாள். அதினிமித்தம் அவளுக்கு ஒரு உறவு முறையான போவாசின் கண்களில் தயை கிடைக்க கர்த்தர் கிருபை கொடுத்தார். அவள் போவாசின் வயல்வெளியில் சென்றும் போவாசு கற்பித்தபடியே நடந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளுகிறவளாகவும் காணப்பட்டாள். இதினிமித்தம் கர்த்தர் போவாசின் கண்களில் ரூத்தை மனைவியாக்கிக்கொள்ள கிருபை கிடைக்கச் செய்தார். இப்படியாக துவண்டு போன அவளுடைய வாழ்க்கை துளிர்விட்டது. அதன்பிறகும் அவள் புருஷனிடமிருந்து கற்றுக்கொள்ளுகிற ஸ்திரீயாக காணப்பட்டாள். அவள் புருஷனே அவளை குணசாலியானஸ்திரீ என்று கண்டு கொண்டான். ரூத்தை குறித்து வேதத்தில் வாசிக்கும் போது அவள் அடக்கத்தோடும், அமைதலோடும், அன்புள்ளவளாகவும், பகிர்ந்து கொடுக்கிறவளாகவும் அலைந்து திரியாதவளாகவும் காணப்படுவதை புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த குணங்களுடன் தான் கற்றுக்கொள்ள ஆயத்தமுள்ளவர்களாக நாமும் காணப்பட வேண்டும்.
எஸ்தர் என்ற ராஜஸ்திரீயைக் குறித்து பார்க்கும் போது அவள் வளர்ப்பு தகப்பனிடம் கற்றுக்கொள்ளுகிறவளாக காணப்பட்டாள். பின்பு தன்னுடைய ராஜாவின் கண்களில் தயை கிடைப்பதற்காக கற்றுக்கொள்ளுகிறவளாக காணப்படுவதையும் நம்மால் வாசித்து அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் ராஜாவின் கண்களில் தயைகிடைத்து தான் ராஜஸ்திரீயாக பட்டம் சூடிய பிறகும் அவள் தன் யூத குலத்தை இரட்சிப்பதற்காக கற்றுக்கொள்ளுகிறவளாக காணப்பட்டார். அடக்கத்தோடு அமைதலோடு ராஜாவினிடத்தில் பிரவேசித்து தன் விண்ணப்பத்தைச் சொல்லி யூதகுலத்தையும் இரட்சித்து கொள்ள வழி செய்தாள். ஸ்திரீகளாகிய நாம் அறிந்து உணர வேண்டியது நாம் புருஷனிடம் கற்றுக்கொள்ளுகிறவர்களாக அமைதலோடும், அடக்கத்தோடும் காணப்பட வேண்டும். அப்பொழுது புருஷனை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். நம்முடைய குடும்ப வாழ்க்கையும் பலவிதமான நெருக்கங்களின் மத்தியிலும் கர்த்தருடைய மெய்யான சமாதானத்தை பெற்றவர்களாகவும் பரலோக ராஜ்யத்தை எதிர்நோக்கி வாழ்கின்றவர்களாகவும் காணப்படலாம் என்பதும் சத்தியம். அதற்கு தேவன் தாமே கிருபைபுரிவாராக ஆமென்.
சகோ. ஹெலன்ஷீன், கேரளா. Cell: 9947301633