ஆசிரியர் உரை
அன்பார்ந்த வாசகர்களுக்கு,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாசகர்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் நாட்களும் வருடங்களும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நமது ஆயுளும் குறைவுபட்டுக் கொண்டே வருகின்றது. தேவன் நமக்குத் தந்து வருகின்ற தயவு இரக்கம், அன்பு, கிருபை ஆகியவற்றிற்காக நாம் அவற்றினை அறிந்து உணர்ந்து நன்றி செலுத்துகின்றவர்களாய் காணப்படுவோமாக. அது மாத்திரமே தேவனுக்கு மிகவும் பிரியமாயிற்று என்று அறிந்திடுவோம்.
இந்த கொரோனா காலத்திலே ஒரு முதியவர் ஒருவர் ஆஸ்பத்திரியிலே சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டிருந்தது. அவருடைய நுரையீரலிலே பிராணவாயு (oxygen) வின் அளவு குறைவுபட்டு காணப்பட்டதால் அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட வேண்டும். ஆகையினால் அதற்கு இவ்வளவு பணத்தினை உடனே செலுத்துங்கள் என்று அந்த மருத்துவர் அவரைக் கேட்டுள்ளார். உடனே அந்த முதியவர் தேம்பி, தேம்பி அதிகமாய் அழுதுகொண்டே இருந்தாராம். உடனே அந்த மருத்துவர் அவரைப் பார்த்து ஏன் அழுகின்றீர்கள்? ஆக்ஸிஜனுக்கு பணம் இல்லையா என்று கேட்டாராம். அதற்கு அந்த முதியவர் கூறிய பதில் மருத்துவரை அதிகமாய் உணரச் செய்ததாம். அந்த முதியவர் கூறியதாவது தனக்கு 80 வயதாகின்றது. இந்த 80 ஆண்டுகளாக என் தேவன் எனக்கு இலவசமாய் ஆக்ஸிஜனை கொடுத்து வந்துள்ளாரே. இதுவரையிலும் அவர் என்னிடம் பணம் கேட்டதில்லையே. ஆனால் இப்பொழுது ஒரு சில நாட்களுக்கான ஆக்ஸிஜனுக்கு இத்தனையான பணம் செலுத்த வேண்டியதுள்ளதே. தேவன் எவ்வளவாய் தன்னை நேசித்து இலவசமாய் தம் அன்பை காண்பித்துள்ளாரே அதன் மதிப்பினை நான் இதுவரையிலும் உணராது இருந்துவிட்டேனே என்று தேம்பி, தேம்பி அழுதாராம்.
ஆம் அருமையானவர்களே. தேவன் நம்மீது எவ்வளவாய் அன்புகூர்ந்து வருகின்றார் என்பதை அறிந்து ஆம் அருமையானவர்களே. தேவன் நம்மீது எவ்வளவாய் அன்புகூர்ந்து வருகின்றார் என்பதை அறிந்து அவருக்கு நன்றியுள்ளவர்களாய் வாழ்ந்திடுவோமாக. நம்மோடு பேசுகிற அன்புகூறுகிற தேவன் அந்தரங்கத்திலும் அந்தகாரமான இடத்திலும் பேசுகிற தேவன் அல்ல. விருதாவாக தன்னைத் தேடுகிறீர்கள் என்றும் அவர் ஒருபோதும் சொல்லுகிறவரும் அல்லவே, சொன்னதும் இல்லையே. அவர் எப்பொழுதுமே, நீதியையே பேசி யதார்த்தமாகவே பேசி வருகின்றார் என்பதைத்தான் ஏசா.45:19 யில் வாசிக்கின்றோம். அதுமட்டுமல்ல, அவர் ஒருபோதும் தம் ஜனங்களை தம் பிள்ளைகளை குலைத்தும் போடுவேன் என்றும் சொல்லாமல் அவர்களை இரட்சிக்கவே செய்வேன் என்று தானே கூறியுள்ளதையும் 11இரா.14:27 யில் வாசிக்கின்றோம். ஆகையினால் அவர் சொல்லாத காரியங்களுக்காக நாம் ஒருபோதும் பயப்படத் தேவை இல்லையே. ஆனால் அவர் கூறிவருகின்ற வார்த்தைகளுக்கு மட்டுமே நாம் நடுங்கி, செவிசாய்த்து கீழ்ப்படிந்து காணப்படுவோமாக. ஜெபத்திலே அவரிடத்தில் கேட்கிற அனைவருமே யாவற்றையும் பெற்றிடுகின்றார்களே. இதுதானே உண்மை (மத்.7:8)
அவராலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லையே (எரே.32:17) அவர் தம் பிள்ளைகள் மீது அளவிற்கு அடங்காத அன்பு கொண்டுள்ளபடியினாலே (1யோவான் 4:8) நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லையே. ஆண்டவரின் அன்பிலே பயம் இல்லையே. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளிவிட்டிடுமே (1யோவான் 4:18) ஆகையினால் அவர் நம் விஷயங்களில் தோல்வி அடைந்திடவே மாட்டாரே. அவர் எப்பொழுதும் நமக்காக பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியராயிருக்கின்றார் (எபி.4:15) அவர் எப்பொழுதும் எந்நிலமையிலும் நம்மோடு இருக்கின்றவராகவும் இருக்கின்றார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை. நம்மை ஒருபோதும் கைவிடுவதும் இல்லை .அவர் நம்மோடு கூட வருகின்றவராகவும் இருப்பதினால் நாம் ஒருபோதும் திகைக்கவும் பயப்படவும் வேண்டாம். (உபா.31:6) கர்த்தர் எப்பொழுதும் நமக்கு சகாயரே மனுஷன் நமக்கு என்ன செய்யக்கூடும் (எபி.13:5,6) ஒன்றும் கூடாதே.
இந்த நல்ல செய்தியை நாம் அனுபவித்தவர்களாக எங்கும் கூறுகிறவர்களாகவே காணப்படுவோமாக. ஒரு சமயம் ஒரு பிரதான சாலையிலே இரு வாகனங்கள் மோதிக் கொண்டன. அதிலே ஒன்று ஒரு டிரக் அதிலே ஏராளமான கோழி குஞ்சுகளை ஏற்றிக்கொண்டு வந்தது. விபத்தினாலே டிரக் கவிழ்ந்து அதிலே உள்ள கோழிகுஞ்சுகள் அனைத்தும் சிதறி ஓட ஆரம்பித்தன. அந்த ஓட்டுநர் அவற்றினை விரட்டி, விரட்டி, ஓடி ஓடி பிடிக்க பிரயாசப்பட்டும் முடியாமல் திகைத்து நிற்கின்றபோது ஒரு சாதாரண குடியானவன் தற்செயலாய் அங்கு வந்து யாவற்றையும் ஒரு விசை கண்டு, மெதுவாக அந்த ஓட்டுநரிடம் வந்து, ஏன் இவ்வளவு அதிகமாய் ஓடி ஓடி ஒன்றும் கைக்கூடாமல் திகைத்து நிற்கின்றீர். ஒரு சிறிய காரியத்தை மட்டுமே செய்தால் போதுமே என்று கூறி, அங்கு கோழிக்காக வைக்கப்பட்ட தீனி விதைகளை தூவிக்கொண்டே சென்ற போது எல்லா கோழிகளும், தானாக அவன் பின்பாகவே வந்து விதை தானியங்களை நன்கு சாப்பிடவும் செய்ததாம். இதுபோன்றே நாம் இந்நாட்களில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மட்டுமே தானியமாக வீசி மக்கள் யாவருக்கும் அறிவிக் கின்றவர்களாக காணப்பட வேண்டுமே. மாறாக ஓடி, ஓடி வேர்வை சிந்த உழைத்து, சேவை செய்வதினால் ஆத்துமாக்கள் ஆயத்தப்படுத்தப்படமாட்டார்களே. நாமே குன்றில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கைப் போன்று நம் வாழ்வினாலேயே, ஒளிவீசி, சாட்சியாய் வாழ்ந்திட வேண்டுமே. நம்முடைய வாழ்வின் சாட்சியே நம்முடைய அர்ப்பணிப்பின் குணாதிசயமே மற்றவர்களை சமாதானத்திற்குள்ளும் ஊக்கத்திற்குள்ளும் இரட்சிப்புக்குள்ளும் நேராக வழி நடத்திட செய்திடுமே. ஒரு கிறிஸ்தவ வியாபாரியை அறிவேன். அவர் பிறர் காண வியாபார நேரத்தில் வேதம் வாசிப்பார். இது போன்றவை வெளியரங்கமான தோற்றமே. இதனைக் காண்பவர்கள் இவர் ஒரு பக்திமான். ஆகையினால் இவரின் வியாபாரத்தில் உண்மை காணப்படும் என்று எண்ணுபவர்களை அதிகரிக்கச் செய்யவே இவர் பிறர்காண வேதம் வாசிக்கின்றார். இதனால் இவர் வியாபாரம் பெருகலாம். ஆனால் ஆத்துமாக்கள் இரட்சிப்புக்குள் வழி நடத்தப்படமாட்டார்களே. ஒரு சில கிறிஸ்தவ போதகர்களை அறிவேன். பிரசங்கிக்கும் போது தான் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழும்புவதாகவும் அப்பொழுது ஆண்டவர் தினமும் தரிசனம் அளிப்பதாகவும் கூறிடுவார். ஆனால் அவருடைய குணாதிசயத்தைக் கண்டால் துணிகரமாய் பொய் பேசி அநியாயத்தினை அதிகமாய் செய்கின்றவராக உள்ளாரே. ஒரு பிரபலமான மூத்த போதகரை அறிவேன். பொது இடத்திலே சத்தியமாய் என்று கூறி பொய்யை மெய்யாக கூறி சாதிப்பார். பின் தனிமையில் அவரிடம் கேட்டால் நான் தான் பொய் பேசுவேன் என்பது தங்களுக்குத்தான் ஏற்கனவே தெரியுமே. பின் ஏன் இதிலே சந்தேகம் என்று கூறிடுவார்.
அருமையானவர்களே, இக்காலத்திலே பக்தியின் வேஷம் அதிகமாய் பெருகி வருகின்ற காலமாயிருக்கிறது. அநேக ஊழியர்களும் பக்தியின் வேஷத்தையே தரித்தவர்களாயிருக்கின்றார்கள் என்பதை அறிந்திடுவோமாக. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்பூமியிலே வாழ்ந்து தம் ஊழியத்தை தொடங்குகையில் அவர் தனக்கென்று 12 சீஷர்களை தெரிந்தெடுத்துள்ளார். அவர்களுள் முதலாவது அழைக்கப்பட்டவர் பேதுரு அவர்களே. அவரை தேவன் என்னைப் பின்பற்றி வா என்று தான் கூறி அழைத்தார். அதுபோன்றே நான்கு சீஷர்களும் தங்கள் பணிகளை முற்றிலும் விட்டுவிட்டவர்களாக நிரந்தரமாகவே தேவனைப் பின்பற்ற அழைக்கப்பட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து என் பின்னேவாருங்கள் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றும் கூறினார். இப்படியாகவே இக்காலத்திலும் அநேக போதகர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். போதகர்களும் தங்கள் தங்கள் பணிகளை நிரந்தரமாய் விட்டவர்களாகவும் காணப்படலாம். ஆனால் எந்த சீஷனும் ஆண்டவரோடு இருந்த 3 1/2 வருட நாட்களில் மனுஷர்களை பிடித்தவர்களாக காணப்படவில்லையே. 3 1/2 வருட காலத்திற்கு பின்பு கூட தங்களில் யார் பெரியவன் என்று தானே கூறி வாக்குவாதம் பண்ணுகிறவர்களாக காணப்பட்டார்கள். இவர்கள் அனைவருமே உலக பணிகளை விட்டவர்கள் தான். ஆனால் ஒருவரும் இரட்சிக்கப்படவில்லையே. ஆண்டவர் அவர்களை அழைத்த போது யாவரும் ஒரு அதிகார அழைப்புக்குள்ளாகவே கடந்து வந்தவர்களாக காணப்பட்டார்கள். அந்நாட்களில் அநேகர் வேத பண்டிதர்களிடம் சீஷர்களாக மாணாக்கர்களாக அதிகாரத்தோடு அழைக்கப்படுவர். ரபி என்று போதகர்கள் அழைக்கப்பட்டனர். இதுபோன்றே இயேசு கிறிஸ்துவாகிய ரபி என்பவரிடம் போதகரிடம், மாணவர்களாக, சீடர்களாக அழைக்கப்பட்டவர்களே இந்த 12 சீஷர்கள் இவர்களைப் போன்றே இந்நாட்களில் பெரும்பாலான போதகர்கள் ஊழியங்களுக்குள் வந்துள்ளார்கள் என்பதை அறிந்திடுவோமாக.
என்னைப் பின்பற்றிவா என்று பேதுருவை முதலாவதாக அழைத்த ஆண்டவர் யோவான் 21 ஆம் அதிகாரத்திலே பேதுருவை மறுபடியும் என்னைப் பின்பற்றி வா என்று அழைக்கின்றார். இப்பொழுது முன்பு போன்று அதிகாரத்தோடு மாணாக்கனாக அல்ல அன்போடு, பாசத்தோடு என்னை நேசிக்கின்றாயா என்று மூன்று முறை கேட்டதோடு, அதனைக் கேட்ட பேதுரு மனங்கசந்து அழுகின்றான். அவனிடம் என்னைப் பின்பற்றிவா என்று அழைத்தார். இப்பொழுது ஆண்டவரை பின்பற்றி வர இயேசு மாம்சத்தில் இப்பூமியில் இல்லையே. ஆனால் ஆண்டவர் கூறியது என்ன? உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று தானே கூறினார். இப்பொழுது தான் பேதுரு உண்மையாய் தன்னை ஒரு ஊழியக்காரனாய் தேவனுக்காய் தன் ஜீவனையே அர்ப்பணிக்கின்றான். அப்பொழுதும் பேதுரு தேவனிடம், யோவானைக் குறித்து அவன் காரியம் என்ன என்று கேட்கையில் அவனைப் பற்றி உனக்கு எதற்கு நீ என்னைப் பின்பற்றி வா என்று தானே கூறினார். அவர் எந்த மனிதரையும் சார்ந்திடக் கூடாது என்றும், தேவனை மட்டுமே சார்ந்திட வேண்டும் என்று கூறியதோடு அவரும் அவனோடு கூட சதாகாலமும் இருக்கிறேன் என்றுதானே கூறினார். ஆகையினால் அருமையானவர்களே இக்காலத்து போதகர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். அவர்களின் அங்கியைக் கண்டு மயங்கியும் விடாதீர்கள். அவர்களில் 99% சதவீத போதகர்கள் இரட்சிக்கப்படாதவர்களே. அழைக்கப்பட்டது உண்மையே ஆனால் அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை காணக்கூடாதே. ஆண்டவர் கற்றுக் கொடுத்த ஜெபத்தை வாசிக்கத் தெரிந்தவர்கள் மாத்திரமே ஆவர் என்பதை அறிந்திடுவீர்களாக. வேதக்கல்லூரிகளில் கற்றதினால் ஞானிகளாக பிரசங்கின் றவர்களாகவும் காணப்படுவார்கள்.
ஆகையினால் அருமையானவர்களே இது கடைசிகாலம். இது தூங்கி விழிக்கிற காலம் அல்ல. இவ்வுலகிலே போராட்டங்களும், துன்பங்களும் அதிகம் உண்டு. ஆகையினால் தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தரித்துக்கொள்ளுங்கள் (எபே.6:13)
டாக்டர் ஜேம்ஸ் என்ற ஒரு மிஷனெரி தன் ஊழியத்தை முடித்துவிட்டு அடர்ந்த காட்டிற்குள்ளே தானே கட்டிருந்த ஒரு குடிசைக்குள்ளே நுழைந்த போது அங்கே ஒரு மிகப்பெரிய பாம்பு ஒன்று காணப்பட்டது. அது அவரை விழுங்கிவிடக் கூடும் என்ற அளவுக்கு பெரியதாய் காணப்பட்டது. தன்னுடைய கைதுப்பாக்கியிலே ஒரே ஒரு குண்டு மாத்திரமே இருந்தது. இந்த ஒரு குண்டினால் அதனை சாகடிக்கக்கூடாது என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். எனினும் வேறுவழியில்லாமல் அந்த ஒரே குண்டினால் அதன் தலை சுடப்பட்டது. அதன் தலை நசுக்கப்பட்டாலும் அது தன் வாலினால் அங்கும் இங்கும் பலமாய் வீசி அக்குடிசைக்குள்ளே இருந்த அனைத்து பொருட்களும் சிதறடிக்கப்பட்டனவாம். இதுபோன்றே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையிலே தன் ஜீவனாகிய ஒரே குண்டினாலே சாத்தானாகிய நம் சத்துருவின் தலையை நசுக்கிவிட்டாரே. இப்பொழுது அதன் தலை நசுக்கப்பட்ட நிலமையில் தன் வாலின் பெலத்தினால் ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் அதிகமாய் பிசாசானவனால் போராட்டங்களுக்குள்ளும், வேதனைகளுக்கும் தள்ளப்படுகின்றோம். சோர்ந்து போகிடவே வேண்டாம். அவன் தலை கிறிஸ்துவின் சிலுவையில் நசுக்கப்பட்டுள்ளதே அதனால் நாம் அவனால் கடிபடவும் மாட்டோம் அழிக்கப்படவும் மாட்டோம். அவனின் வாலின் பெலத்தினால் காணப்படும் துன்பங்களுக்கு கொஞ்சகாலம் மாத்திரமே உள்ளது. பின்பு அது செயலிழந்துவிடும் நாம் ஜெயம் பெற்றிடுவதே சீக்கிரமே. ஆமென்.
சகோ. பிலிப்ஜெயசிங்,
நாசரேத் ஜெப ஐக்கியம்,
நாசரேத் . தூத்துக்குடி மாவட்டம்.