பாவங்கள்
என் ஜனத்திற்கு அவர்கள் மீறுதலையும் யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. ஏசாயா 58:1
அன்பானவர்களே
தேவனுடைய கற்பனைகளையும் அவருடைய வார்த்தைகளையும் மீறுவதே பாவம் நம்முடைய வாழ்க்கையில் பாவம் எப்படியெல்லாம் கடந்து வருகின்றது என்பதைக் குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதமும் எசேக்கியேல் 21:24 ன் படி உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும் உங்கள் செய்கைகளிலெல்லாம் உங்கள் பாவங்கள் தெரியவருகிறதினாலும் நீங்கள் உங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணுகிறீர்கள்; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே, ஆதலால் கைப்பிடியாய்ப் பிடிக்கப்படுவீர்கள் என்ற தேவவார்த்தையின்படி நாம் பாவத்திலே பிடிக்கப்படுவோம் என்பதைக் குறித்து சிந்திப்போம்.
இந்நாட்களில் மனிதர்கள் தற்பிரியர்களாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நான், என்னுடைய குடும்பம், என்னுடைய சமூகம், என்னுடைய சபை இப்படியாய் அது தொடர்கின்றது. இதினிமித்தம் ஒவ்வொருவருடைய சிந்தனை வட்டம் மிகவும் குறுகியதாக காணப்படுகின்றது. முற்காலங்களில் துரோகம் செய்கின்றவர்கள் மிகவும் குறைவாகத்தான் காணப்பட்டனர். ஏனென்றால் தெய்வ பயம் அவர்களில் காணப்பட்டது. மட்டுமல்ல மனசாட்சியின் காலத்திலும், நியாயப்பிரமாண காலத்திலும் தேவன் துரோகிகளை உடனுக்குடன் சிட்சித்து வந்தார். ஆனால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்நாட்கள் கிருபையின் காலங்களானபடியினால் இவர்களும் தங்கள் பாவங்களை உணர்ந்தவர்களாக மனந்திரும்பமாட்டார்களா என நமக்காக இரத்த சிந்திய எம் பெருமான் இயேசு நாதர் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்நாளை நீடித்து அளித்து காத்திருக்கிறார். அவருடைய நீடிய பொறுமையை அலட்சியமாய் எண்ணி, மனிதர்கள் தங்களுடைய சுய இஷ்டத்தின்படி தேவ வசனங்களை வளைத்து தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தன்னை தவிர மற்றனைவருக்கும் விரோதமாக சிந்தித்து செயலாற்றி துரோக செயல்களில் அறிந்தும், அறியாமலும் இறங்கி விடுகின்றனர். பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே துரோக சிந்தனைகள், சகோதரர்களுக்கிடையே ஏமாற்று செயல்கள் சபையிலும் சபைக்களுக்கு இடையிலும், ஊழியங்களிலும், ஊழியக்காரர்களிடையேயும் ஊழியங்களின் மூலம் விசுவாசிகளை ஏமாற்றுவது ஊழியங்களுக்கிடையில் போட்டி, பொறாமை, விரோதங்கள் இப்படியாய் துரோக செயல்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றது.
இக்காலத்தில் தேவன் உடனுக்குடன் தண்டிக்கவில்லை என்பதால் மிகுந்த ஆணவத்தோடு துணிந்து பாவங்களையும் துரோகங்களையும் செய்து வருகின்றனர். மனிதர்கள் செய்கின்ற எந்தவொரு காரியத்திலும் உண்மையில்லை. எல்லாமே மற்றவர்களுக்கு சூட்சியாகத்தான் செய்யப்படுகின்றது. அரசியலும், பிரிவினைகளும், காமங்களும், வெறிகூத்துகளும் சகைளிலே தலைவிரித்தாடுகின்றதே. இவையெல்லாம் தேவனுக்கு விரோதமான துரோகம் தானே. இவைகளைத்தான் எசேக்.21:24ல் தேவன் கூறுகிறார். உங்கள் துரோகங்கள் வெளிரங்கமாகிறதினாலும் உங்கள் செயல்களிலெல்லாம் உங்கள் பாவங்கள் தெரிகிறதினாலும் உங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணுகிறீர்கள். அதாவது கிருபையின் காலத்தில் வைக்கப்பட்டிருக்கிறவர்களாகிய நாம் கிருபையை மறுதலித்து வேத வசனங்களை மறுதலித்து மென்மேலும் துணிரமாக துரோகங்களையும் பாவங்களையும் அக்கிரமங்களயும் செய்வதினால் நாம் பாவங்களை தேவனால் நினைக்க செய்கின்றோம்.
தேவன் மனுமக்களுக்கு கிருபையளித்து பாவங்களை எண்ணவேண்டா மென்றிருந்தாலும் நம்முடைய எல்லா கிரியைகளிலும் அக்கிரமம் நிறைந்திருப்பதினால் தேவனுக்கு நினைப்பூட்டுகிறோம் என்று இங்கு கர்த்தர் சொல்லுகிறார். இப்படியாய்ச் சுயநலத்துக்காய் உலக இன்பங்களில் மூழ்கி வாழ்ந்து தன் சரீரத்திற்கு உட்பட மற்றவர்களுக்கும், தேவனுக்கும் துரோகம் செய்து வாழ்கின்றவர்களைப் பார்த்து தேவன் ஒரு எச்சரிப்பினை எசேக்கியேல் 21:24ல் கொடுக்கின்றார். இவைகளினிமித்தம் கைப்பிடியாய்ப்பிடிக்கப்படுவீர்கள் என்று
ஆம் பிரியமானவர்களே, இதனை உணர்ந்தால் நலமாயிருக்கும், நாம் பிடிக்கப்படுவோம், அகப்படுவோம், நித்திய வாழ்வை இழந்துவிடுவோம். முடிவில் ஏமாற்றமடைவோம் என்று தான் தேவன் இங்கு குறிப்பிடுகின்றார். எனவே நம் செயல்கள் ஒவ்வொன்றினையும் தேவ வசனங்களோடு ஒப்பிட்டு வாழ்ந்து தேவ கிருபை பெற்றவர்களாக வாழ நம்மை அர்ப்பணிப்போம். தேவன் தாமே கிருபையளிப்பாராக ஆமென்.
சகோ. ஷீன்சைரஸ், கேரளா . cell: 09447735981