கடைசி கால இந்நாட்களில், ஜெபத்தைப்பற்றிய முக்கிய செய்தி - URGENT CALL

கடைசி கால இந்நாட்களில், அவசியமாய் அறியப்பட வேண்டிய முக்கியமான தேவ செய்தி -


27.06.2020 சனிக்கிழமை இரவு உபவாச ஜெப நேரத்தின் போது நாசரேத் ஜெப ஐக்கியத்திலிருந்து காணொளி மூலம் அளிக்கப்பட்ட தேவ செய்தி


    கடந்த வார உபவாச ஜெபவேளையின் போது ஜெபம், ஜெபவாழ்க்கை என்பது போதிக்கப்பட வேண்டியது மட்டுமே என்றும் அதனால் நாம் யாவருமே நம் வாழ்நாள் பரியந்தமும் ஜெபத்தினைக் கற்று அதிலே வளருகின்றவர்களாய் காணப்பட வேண்டும் என்ற தேவசெய்தியினை கேட்டுள்ளோம். அதனை கேட்டு வாசித்து அறிந்தவர்கள் அநேகர் கற்கின்றவர்களாய் மாறி வருகின்றார்கள் என்பதை அறிந்து மிகுந்த சந்தோஷம் அடைகின்றேன். நானும் இதனை கற்றுக் கொள்கின்றவனாகவே ஆவிக்குரிய என் வாழ்விலே மிகுந்த சமாதானத்தை கொண்டுள்ளவனாய் காணப்படுகின்றேன். ஏனெனில் கற்பிக்கின்றவர் பரிசுத்தாவியானவரும், இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளாகிய வேதாகமம் மட்டுமே. இதனை மனிதர்கள் எவரும் போதிக்க முடியாது அதனால் ஆண்டவர் ஒருவருக்கே நம் நன்றியையும், கனத்தையும், மகிமையினையும் செலுத்துகின்றவர்களாய் காணப்படுவோமாக. 


     ஆனால் இந்நாட்களில் ஊழியர்கள், போதகர்கள், ஜெபத்தினை கற்றுக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை அறிவுரைகளை வழங்காதபடி, ஜெப ஆவியை ஊற்றும், விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றும் ஜெபவீரர்களாக, வீராங்கனைகளாக மாற்றும் என்று பொதுவாக ஜெபித்து மக்களை கற்றுக்கொள்ளும் பாதையினின்று திசை திருப்பி விடுகின்றார்கள். உலகிலே பரிசுத்த ஆவி, அசுத்த ஆவி ஆகிய இவ்விரு ஆவிகள் மட்டுமே உள்ளன. வேறு ஆவி எதுவும் கிடையாதே . இதனால் மக்கள் ஜெபத்தினை கற்றுக் கொள்ளாமல் அன்னார்களை தங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை ஊழியர்களை நாடும் வழக்கத்தை மட்டுமே கொண்டுள்ளார்கள். இவ்வழக்கத்தினைத்தான் ரோம கத்தோலிக்கர்கள், இயேசுவின் தாயாகிய மரியாளிடம் ஜெபித்து இயேசுவிடமிருந்து பெற்று தரும்படியாக வேண்டுதல் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். இம்முறை வேதத்திற்கு விரோதமானதே.


   தேவன் மனிதர்களை இப்பூமியிலே உருவாக்கினதின் நோக்கம் அன்னார்களை ஜெபவீராங்கனைகளாக மாற்ற அல்ல பிதாவின் சித்தப்படிக்கே மக்களை தேவன் விரும்பும், பரிசுத்தவான்களாக நீதிமான்களாக மாற்றுவது மாத்திரமே என்பதினை அறிந்திடுவோமாக. இதனையே வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் முழுவதிலும் வாசிக்கின்றோம்.


    உபா.33:3 கூறுகின்றது :      மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள் என்பதுவே.


     வேதத்திலே தேவன் பரிசுத்தர் என்றும் தேவராஜ்யம் பரிசுத்தமானது என்றும் பரலோகமே பரிசுத்தத்தினால் நிறைந்துள்ளது என்றும் மூன்று இடங்களிலே மட்டுமே வாசிக்கின்றோம்.


1. கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக. நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு உங்களை மற்ற ஜனங்களை விட்டு பிரித்தெடுத்தேன். (லேவி. 20:26)


2. ஏசாயா தீர்க்கத்தரிசி பரலோகத்தை நோக்கிப் மேலே பார்த்தபோது அங்கே சேராபீன்கள் பறந்து கெண்டு ஒருவரையொருவர் நோக்கி, சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டு சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் (பரலோகத்தில்) அசைந்து ஆலயம் புகையினால் நிறைந்தது (ஏசா.6:3,4) என்று கூறியுள்ளார்.


3. திவ்ய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்திலே அவன் பரலோகத்தினை தன் தரிசனத்திலே காண்கையில் அங்கே உள்ள ஜீவன்கள் “அவைகள் இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று இரவும், பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன என்று வெளி.4:8யில் வாசிக்கின்றோம்.


     ஆகையினால் பரிசுத்தத்தை மட்டுமே கொண்டுள்ள தேவாதி தேவன் மக்கள் அனைவரையும் பரிசுத்தவான்களாக, ஆண்டவரின் நீதியை (Righteousness) பெற்ற நீதிமான்களாக மாற்றமடைந்திட மட்டுமே அழைக்கின்றார். அதற்கு ஆரம்பமாக மக்கள் மனந்திரும்பி கழுவப்பட வேண்டும். கழுவப்பட்டவர்கள் மாத்திரமே பரிசுத்தவான்களாய், நீதிமான்களாய் மாற்றமடைய முடியும். ஆனால் இக்காலத்து 99.9% போதகர்கள், ஊழியர்கள் இதனை எக்காலத்திலும் பிரசங்கிப்பதில்லை. மாறாக தேவனுடைய சித்தத்திற்கும், விருப்பத்திற்கும் விரோதமாக கேட்காமலே தேவன் தம் மக்களுக்கு அவசியமாய் அளித்துவரும் ஆசீர்வாதங்களையே தங்களுடைய ஜெபத்தினால் மக்களுக்கு அள்ளித் தருவதைப் போன்று ஜெபித்து ஒரு மாயத்தை ஏற்படுத்திக் கொள்வதையே தங்கள் தங்கள் ஊழியங்களாக கொண்டுள்ளார்கள். இதனால் இக்காலத்திலே எல்லா (TV) டிவி சேனல்களிலும் 24 மணி நேரமும், 365 நாட்களிலும் செழிப்பின் ஜெபத்தையும், வாக்குத்தத்தத்தின் பிரசங்கத்தினை மட்டுமே காண்கின்றோம். மக்களும் இதனைத்தான் அதிகமாய் விரும்புகின்றார்கள். இதற்காக எவ்வளவு பணத்தையும் காணிக்கையாக கொடுக்கவும் இருக்கின்றார்கள்.


     இவ்வகையான ஆசீர்வாத, செழிப்பின் உபதேசத்தை இயேசுவின் சீஷர்களோ, பரி.பவுல் எழுதிய தன்னுடைய 14 நிருபங்களிலோ எழுதினதாக வேதத்திலே வாசிக்க முடியவில்லையே. மாறாக பரி. பவுல் தன்னுடைய உபதேசமாக மனந்திரும்பின கொரிந்து சபையினரை குறித்து எழுதுகையில் (1கொரி.6:11) ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும், கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள் என்று தானே எழுதியுள்ளார்.


     பின்னும் கூட 11கொரி.7:1யினை எழுதுகையில் பிரியமானவர்களே, மாம்சத்திலும், ஆவியிலும், உண்டான அசுசியும் நீங்க நம்மை சுத்திகரித்துக் கொண்டு பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் என்றும் ஆலோசனை அளிக்கின்றார். மேலும் மனுமக்களை தேவன் தாமே அழைத்ததின் பிரதானமான நோக்கமாதெனில் என்று பரி.பவுல் எழுதும் போது தன்னுடைய முதல் நிருபத்திலே ரோமர் 1:2யில் தேவ பிரியரும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது என்று தானே எழுதியுள்ளார். மேலும் அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல் தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார் என்று 11தீமோத்.1:9யில் (we are saved to a holy calling) எழுதி தேவனுடைய சித்தத்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.


   பரிசுத்தவான்களாய் மாற்றமடைவதும் நீதிமான்களாய் மாற்றமடைவதும் மனிதர்களாகிய நம்மால் கூடாதவைகளே. இவற்றினை செய்து நிறைவேற்றுகின்றவர் தேவன் ஒருவரே. மனுமக்களாகிய நம்மால், நம்முடைய எந்த கிரியைகளினாலும் இதனை அடைந்திடவே முடியாது என்பதே உண்மை . இது தேவன் நமக்கு அளிக்கும், இலவசமான கிருபையினால் மாத்திரமே ஆகும் என்பதாகும். இதனையே பரி. பவுல் எழுதுகையில் இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் பலியிடப்பட்டதினாலே அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் என்றும் பரிசுத்தமாக் கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப் படுத்தியிருக்கிறார் என்றும் எபி.10:10,14யில் குறிப்பிட்டுள்ளார்.


     இதனையே வேதத்திலே பழைய ஏற்பாட்டிலும் பல இடங்களில் வாசிக்கின்றோம். எசேக்கியா மக்களுக்காக விண்ணப்பிக்கையில் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும் கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்று விண்ணப்பிக்கின்றார். 11நாளா.30:19


 தேவனுடைய கிருபையே, மனந்திரும்பினவர்களை தேவனுக்கேற்ற பரிசுத்தத்திற்குள்ளும் நீதிக்குள்ளும் வழி நடத்திச் செல்லுகின்றது. இது எவ்வித கிரியைகளினாலும் அல்லவே. ஆகையினால் மக்கள் செய்து வரும் பற்பல கிரியைகளாகிய ஊழியங்கள், ஜெபங்கள், மேற்கொள்ளும் உபவாசங்கள். வேதவாசிப்புகள் அளித்து வரும் காணிக்கைகள், ஆராதனைகள் எதுவுமே மக்களை பரிசுத்தவான்களாய் நீதிமான்களாய் மாற்றிட கூடாதே. இவைகளை மனந்திரும் பாதவர்கள் கூட அதிக அளவில் செய்து சாதித்திட கூடுமே. ஆகையினால் தான் யோபு பக்தன் கூறுகின்றார் (15:14) மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்று கூறியுள்ளார்.


   அருமையானவர்களே ஆகையினால் பாவங்களற மனந்திரும்பின் பின்பு தேவனுக்கேற்ற பரிசுத்தவான்களாக அவருக்குள் நீதிமான்களாக பூரண மாற்றம் அடைவதற்கு தேவனுடைய கிருபையே நமக்கு உதவுகின்றது. இக்கிருபையினை நாம் விசுவாசத்திலேயே தேவனிடமிருந்து பெற்றுக்கொள்கின்றோம். விசுவாசத்தினாலே இரட்சிப்பினை அடைவதைப் போன்றே விசுவாசத்தினாலே ஆண்டவரின் கிருபையின் மேல் கிருபையினை பெறுகின்றோம். தேவன் நம்முடைய கிரியைகளைப் பார்த்து கிருபையினை அளிக்கின்றவர் அல்ல. மோசே, நோவா போன்றோர்களுக்கு தேவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது என்று தானே வாசிக்கின்றோம். இதனைக் குறித்து பரி.பவுல் கலா.5:4யில் குறிப்பிடுகையில் நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டு பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள் என்று எழுதியுள்ளார். அந்நாட்களில் யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தினை கைக்கொள்வதினால் தேவ கிருபையில் நிலைத்திருக்கக்கூடும் என்று எண்ணினார்கள் ஆனால் அவர்களுக்கு அது கூடாததாயிற்று. அதுபோன்றே இந்நாட்களில் நியாயப்பிரமாணங்கள் இல்லை ஆனால் அதற்குப் பதிலாக சபையினரால் ஏற்படுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டு பிரமாணங்களாக மக்களால் அறிவிக்கப்படுகின்றவைகளே, ஜெபங்கள், வேதவாசிப்பு ஒழுங்குகள், உபவாச கூடுகைகள், ஆலய ஆராதனைகள், ஆலய சடங்காச்சாரங்கள் மற்றும் செலுத்தப்படும் காணிக்கை வகைகளாகும். இதுவே இக்காலத்து பிரமாணங்களும் கிரியைகளுமாகும். இவற்றினால் தேவனுடைய கிருபையை பெற்றிடக் கூடாதே. இவைகளனைத்தினையும், மனந்திரும்பாத அவிசுவாசி ஒருவன் நேர்த்தியாய் செய்து நிறைவேற்றிடக் கூடுமே இதனை யோனா தீர்க்கத்தரிசி எழுதுகையில் (யோனா 2:8) பொய்யான மாயையைப் பற்றிக் கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள் என்று எழுதியுள்ளார். இதனையே பரி. பவுல் கலாத்தியருக்கு எழுதுகையில் (1:6) உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோன்றே இந்நாட்களில், நம்முடைய ஜெபம், வேதவாசிப்பு, உபவாசம் ஆராதனை போன்றவற்றினால் தேவனுடைய கிருபையினை அடைந்திடலாம் என்று இக்காலத்து போதகர்கள், ஊழியர்கள் பிரசங்கித்து வருவது, வேறொரு அறியப்படாத சுவிசேஷமே என்று அறிந்திடக்கூடுமே. மேலும் பரி.பவுல் குறிப்பிடுகையில் வேறொரு சுவிசேஷம் என்பது கிடையாது. இது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தை புரட்ட மனதாயிருக் கிறார்களேயல்லாமல் வேறல்ல என்றும் இவ்விதமான வேறொரு சுவிசேஷத்தை வானத்திலிருந்து ஒரு தூதனே இறங்கி வந்து இதனைப் போதித்தாலும் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என்று தானே மிகக் கண்டிப்பாய் நம்மை எச்சரித்துள்ளார் என்பதை சத்தியமாய் அறிந்திடுவோமாக.


      ஆகையினால் பரிசுத்தவான்களாய் நீதிமான்களாய் மாற்றமடைவது தேவனுடைய கரத்திலேயே இருக்கின்றன. இவற்றினை தேவனே உண்மையாய் மனந்திரும்பி பாவங்களற கழுவப்பட்ட தம் பிள்ளைகள் அனைவருக்கும் பட்சபாதமின்றி அதிகமதிகமாய் அளிக்கின்றவராயிருக்கின்றார். ஆகையினால் ஆவிக்குரிய வாழ்விலே அடிப்படையாக, அஸ்திபாரமாக உள்ள மனந்திரும்புதலையே நாம் நன்கு கற்று அறிந்து செயல்படுத்திட வேண்டும். இவைகள் மனந்திரும்புதலுக்கான கிரியைகளே. கிரியைகள் இல்லாமல் மனந்திரும்புதலை செய்திடக் கூடாதே. இவற்றின் அடிப்படையிலேயே, ஆண்டவர் அளிக்கும் பாவமன்னிப்பு, இரட்சிப்பினை விசுவாசத்தினாலே நாம் பெற்றுவிடுகின்றோம். தேவன் சிலுவையிலே நமக்காக சம்பாதித்த பாவமன்னிப்பு, இரட்சிப்பு இவ்வுலகின் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. நம் பாவங்களுக்கான நமக்கான தண்டனையை ஆண்டவர் தாமே தன் சொந்த சரீரத்திலே ஏற்றுள்ளார் என்று இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் பாவமன்னிப்பு தண்டனையின்றி இலவசமாய் அளிக்கப்படுகிறது. ஆனால் நாம் செய்த பாவங்களுக்காக நம்மை பாவி என்று ஏற்று அவற்றினை அறிக்கை செய்யாதபடிக்கு கழுவப் பட்டவர்களாகிவிட கூடாதே. கெட்ட குமாரன், புத்தி தெளிந்து பன்றியை விட்டு பழைய வாழ்வை விட்டு எழுந்து, தகப்பன் வீடு நோக்கி நடந்து வருவதை அவன் செய்த பாவ அறிக்கையாகும். அப்பொழுது அவன் செய்த பாவ அறிக்கை ஜெபமானது “இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்று வைத்துக்கொள்ளும் என்று மனதிற்குள் சொல்லி ஜெபித்து எழுந்து நடந்து தகப்பன் வீட்டிற்கு வந்தானே. இந்த கிரியைகள் இல்லாமல் இருந்திருந்தால் அவன் பன்றி கூட்டத்தில் தானே இருந்து சாக வேண்டும். அவன் தகப்பன் அவனைத் தேடிச் செல்லப்போவதில்லையே. ஆனால் காணாமற் போன ஆட்டைத் தேடி மேய்ப்பனே சென்றார் என்பது தேவன் நமக்காக பரலோகத்தை விட்டு பூலோகத்தில் வந்து பிறந்ததாகும். காணாமற்போன ஆடு அறிவற்றது, திரும்பி வர வழி அறியாது அதனால் தப்பிச்சென்ற ஆடு தேடப்பட்டது. ஆனால் மனிதர்களோ, நன்மை தீமை அறியும் பழத்தை சாப்பிட்ட ஆதிமக்களின் பின்வாரிசுக்களே அவர்களுக்கு தீமை என்பது நன்றாகவே தெரியும். தன் நிர்வாணத்தை மறைக்க அத்தி இலை ஆடையை அணியவும் தெரியும். ஆண்டவரின் சத்தம் கேட்கையில் பயந்து ஒளியவும் தெரியும். ஆனால் ஆதாம் ஏவாள் பாவம் செய்த போது அன்புள்ள தேவன் அவனைத் தேடிவந்து, அத்தியிலை ஆடையை மாற்றி தோல் ஆடையை அணியச் செய்தாரே. இதுபோன்றே புதிய ஏற்பாட்டிலே இயேசுவை மறுதலித்து, பின்வாங்கி மீன் பிடிக்கச் சென்ற பேதுருவைத் தேடி அதிகாலையிலே இயேசு கடற்கரைக்குச் சென்றதோடு, பசியில் வெறுமையில் உள்ள அவர்களுக்கு கடற்கரையிலேயே தன் கையினால் நெருப்பை உண்டாக்கி ஆகாரத்தை உண்டு பண்ணி பேதுருவை புசிக்கச் செய்தாரே. இது தானே தேவன் அளிக்கும் கிருபை.


     மேலும் ஜெபத்தினைக் குறித்து கற்றுக்கொள்ளப்பட வேண்டியதாவது


      சீஷர்கள் ஆண்டவரிடம் தங்களுக்கு ஜெபிக்கவேண்டிய முறைமையை கற்றுத் தாரும் என்று கேட்டுக்கொண்டபோது, தேவன் தாமே கற்பித்த ஜெபத்திலே ஒரு பெரிய அதிகாரிக்கு எழுதப்படும் ஒரு மனுவிலே அவரை அழைத்து குறிப்பிடுவது போன்று (Salutation) ஆண்டவரை ஜெபத்திலே ஆரம்ப அழைப்பாக வேண்டும் போது பரலோகத்தில் சதாகாலமாய்வாசஞ்செய்யும், சர்வ வல்லமையும், சர்வ அதிகாரமும் உடையவராய் அண்ட சராசரங்கள் அனைத்தினையும் உண்டாக்கின தேவனே, என்று அழைத்து நாம் முதலில் அவரை, அவருடைய நாமத்தை கண்ணியமாய் (exalting) ஆராதிக்க வேண்டும் (Hallowed be thy name)


   இரண்டாவதாக ஆண்டவரின் பரலோக ஆளுகை, அரசாட்சி, நம்மீதும் செயல்படுத்தப்பட வேண்டிக் கொள்ள வேண்டும்.


       மூன்றாவதாக பரலோகிலே ஆண்டவரின் சித்தம் ஆதிகாலமாய் நடைபெறுவதைப் போன்று இப்பூலோகிலும் ஆண்டவரின் சித்தம் மட்டுமே நம்மீது நிறைவேறிட வேண்டும் என்று நம்மை உண்மையாய் ஆண்டவருக்கு அர்ப்பணித்து ஜெபித்திட வேண்டும்


     அதற்கு பின்பாக, நமக்கு தேவையான அன்றன்றுள்ளவற்றிற்காக ஜெபித்திட வேண்டும்   இதுவே பொதுவான ஆரம்ப ஜெபம் மாத்திரமே ஆகும்.


         அதற்கு பின்பாக நாம் ஜெபிக்க வேண்டிய ஜெபம் தனிப்பட்ட ஜெபமாகும் (personal) இதிலே மன்னிப்பு, சோதனை, இரட்சிப்பு என்ற வார்த்தைகள் குறித்ததான விண்ணப்பங்கள் இடம் பெறும். இவற்றினை எங்ஙனம் ஜெபித்தல் வேண்டும் என்பதினை தாவீதின் ஜெபத்திலே நாம் கற்றுக்கொள்ளக்கூடுமே. (சங்கீதம் 51) இது தாவீதின் தனித்த ஜெபம் (personal) பொதுவான ஜெபம் அல்ல


முதலாவதாக தேவனுடைய கிருபையினால், இரக்கங்களினால் தன் பாவங்களை சுத்திகரிக்க தாவீது வேண்டுகிறான்


அவன் செய்த பாவங்கள் யாவற்றையும் நன்றாகவே அறிவேன் என்றும்


அவைகள் அவன் கண்களுக்கு முன்பாக நிலை நிற்கிறது என்ற உண்மையை அறிக்கை செய்கின்றான்.


அவன் செய்த பாவங்கள் யாவும் தேவனுக்கு விரோதமானவைகளே என்றும் வெளிப்படையாய் ஒத்துக்கொள்கின்றான்.


பாதிக்கப்பட்ட பத்சேபாள் அவள் கணவன் அவர்களுக்கான பரிகாரத்தை விட (Deserves) தேவனிடமிருந்து வரக்கூடிய மீட்புக்காகவே (Desires) வாக்குத்தத்தங்களைக் கொண்டு தேவனை மட்டுமே நோக்கிப் பார்க்கின்றான்.


அவர் அளித்த வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி தேவனுக்கு முன்பாக தன்னைத்தானே அதிகமாய் தாழ்த்துகின்றான்.


ஆண்டவரின் இரக்கங்களிலான இரட்சிப்பினையே வேண்டுகின்றான்.


தான் செய்த பாவங்களின் கொடுமையை நினைத்து தம் முகத்தை மறைத்திடாதேயும் என்றும் ஆண்டவரிடம் கெஞ்சுகிறான்.


ஒரு நீதிபதிக்கு முன்பாக நிற்பதை போன்று அறிந்து நீதியையும் பரிசுத்தத்தையும் வேண்டுகின்றான். (வசனம் 4)


தான் பூர்வீகமாகவே பாவ சுபாவமுள்ளவனே என்றும் (வசனம் 5) தன் உண்மைத் தன்மையை அறிக்கை செய்கின்றான்.


இனி ஞானமாய் நடப்பேன் (வசனம் 6) என்றும் உறுதி அளிக்கின்றான்.


தேவன் மன்னிப்பாரானால் பனியைப் போல வெண்மையாய் சுத்தமாவேன் (வசனம் 7)


பாவபாரத்தினால் நொறுங்கிப்போன தன் எலும்புகள் பெலனடையும்,


தன் ஆத்மா களிகூறும்


அவனிலுள்ள தேவனின் ஆவி புதுப்பிக்கப்பட்ட புது ஆவியாய் மாற்றமடையும்


இழந்து போன இரட்சிப்பின் சந்தோஷம் திரும்பப் பெறும் என்றும்


இரத்தப்பழியிலிருந்து மீட்டு எடுத்து விடும் என்றும் ஜெபிக்கின்றான்.


அதன் பின் தன் வாழ்வு ஆண்டவருக்கு சாட்சியாகவே காணப்படும் என்றும்,


தொடர்ந்து தேவன் விரும்பும் பலியாகிய நொறுங்குண்ட ஆவியை உடையவனாகவும் நறுங்குண்ட இருதயத்தை உடையவனாகவே இருந்து வாழ்வேன் என்றும் உறுதி அளிக்கின்றான்


       இந்த ஜெபத்தையே நாம் நம் வாழ்நாள் பரியந்தம் செய்கிறவர்களாய் காணப்பட நாம் அதனை கற்றுக்கொள்ள வேண்டுமே. இந்த வகையான ஜெபம் மாத்திரமே தேவனுக்கு பிரியமானதாயும், அவரால் அங்கிகரிக்கப்பட்டதாயும் அமைந்திடும் என்பதே உண்மையும் ஆகும்.


      அருமையானவர்களே இதுபோன்றே ஜெபித்திட நாம் கற்றுக்கெள்ள வேண்டுமே. இவற்றினாலேயே நாம் ஆண்டவரின் கிருபையினாலும் இரக்கங்களினாலும் பரிசுத்தவான்களாய், நீதிமான்களாய் மாற்றமடைந்திட கூடுமே. தேவனுடைய வசனத்தையே தியானித்து அதற்கு நடுங்கி கீழ்ப்படிகிறவர்களாகவே என்றும் வாழ்ந்திட வேண்டும். எஸ்றா தான் அகாவா நதியண்டையில் நடத்தின உபவாச கூடுகையில், தீர்க்கத்தரிசிகளை நாடி தேடி அழைத்து கூட்டவில்லை. அற்புதங்களை செய்து காண்பிக்கின்ற வரம் பெற்றவர்களை நாடி தேடி அழைத்து கூட்டவில்லை. தேவனுடைய வசனத்திற்கு நடுங்குகிற மக்கள் யாராயினும் அவர்களை மட்டுமே கூட்டி உபவாச ஜெபத்தை நடத்தி தேசங்களின் அக்கிரமங்களுக்கும் குற்றங்ளுக்கும் அருவருப்புகளுக்கும் உள்ளானோம் என்றும் அதனால் தேவனின் கோபத்திலிருந்து தப்புவியும் என்று மட்டுமே கெஞ்சுதலாய் விண்ணப்பம் செய்து அதற்கான விடுதலையினையும் ஆண்டவரிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டான். எஸ்றா: 9:4 இவ்வகையான ஜெபங்களை உலகமெங்கிலும் காணமுடியவில்லையே. மக்கள் ஜெபத்தை கற்றுக்கொள்ளவில்லையே. பின் எப்படி தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தவான்களாக நீதிமான்களாக மாறிடக்கூடும்.


     தாவீதின் ஜெபத்தில் அதன் மையப்பகுதியாக சங்.51:17ஆம் வசனமே இடம் பெற்றுள்ளது. "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். தேவனே நொறுங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” என்பதாகும்.


        தேவனுடைய கரம் உலகின் சகலவற்றையும் சிருஷ்டித்திருந்தாலும் “ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்.” ஏசா.66:2 என்றும் நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவராகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார் (ஏசா.57:15) உன்னதத்திலும், பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான் பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும் நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் என்றுதானே கூறியுள்ளார்.


      ஆகையினால் உன்னதமான பரிசுத்த தேவன் யாரை நோக்கிப் பார்க்கின்றார், யாரிடம் வாசஞ்செய்கின்றார் யாருடைய ஜெபத்தினை அவர் புறக்கணியார் என்பதனை மேற்கூறப்பட்ட 3 வசனங்களில் வாசித்து அறிகின்றோம். இவ்வசனங்களுக்கு நடுங்கி செவி சாய்க்கின்றவர்களே தேவன் அழைக்கும் பரிசுத்தவான்களாய், நீதிமான்களாய் மாறிடுவார்கள் என்பதே உண்மையும், சத்தியமும் ஆகும் இதனையே நம்மனைவரும் நம் வாழ்வாக கொண்டிடுவோமாக   ஆமென்.


உங்களுக்கு நன்மை உண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள் ஏசா: 3: 10


கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. சங்: 34: 15


நீதிமான்கள் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு.....:சங்: 34: 16


நீதிமானைப்  பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். சங்: 34: 21


அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல்....: யோபு: 36: 7


நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். (Awards): நீதி: 13: 21


 


பிலிப் ஜெயசிங்,


நாசரேத் ஜெப ஐக்கியம், 


நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்


(Mob: 9487547633)