சத்திய வெளிச்சம் - நவம்பர் மாதம் - ஆசிரியர் மடல்

                                                             சத்திய வெளிச்சம்


                  (A monthly magazine for Christian awareness and spiritual growth)


            (இது ஒரு மாதாந்திர பத்திரிக்கை. தமிழிலும், மலையாளத்திலும்                                                                ஒரே நேரத்தில் பிரசுரமாகிறது)


ஆசிரியர் மடல்....


கிறிஸ்தவுக்குள் அன்பார்ந்த வாசகர்களுக்கு,


    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள். 2019ஆம் ஆண்டு முற்றுபெற இன்னும் சில நாட்களே உள்ளன. 2020ஆம் புத்தாண்டினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தேவன்தாமே ஆபிரகாம் காலம் முதல், தம் தலைமுறையினர் வரைக்குமாக அவர் நமக்கு அளித்துள்ள உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை இந்நாட்களில் நினைவுகூறுவது மிகவும் அவசியமாய் காணப்படுகின்றது. ஆதி. 12:3யிலே தேவன் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணினது, பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்பதே. பின்னும் கர்த்தர் ஆதி 22:18யில் நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால் உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும். தாவீது கூறுகின்றார் (சங். 14:5) தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார். பரி. பவுல் கூறுகின்றபோது (ரோம. 4:16) நியாயப்பிரமாணத்தை சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்கு மாத்திரமல்ல ஆபிரகாமுடைய விசுவாசத்தை சார்ந்தவர்களான எல்லா சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கிறது. ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகள் அல்லவே. வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்த சந்ததி. அந்த சந்ததி கிறிஸ்துவே (ரோம. 9:7) விசுவாச மார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. விசுவாசமார்க்கத்தார் ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் (நிகழ்காலம்) (கலா. 3:7,9) என்பதாகும்


   . கர்த்தர் நம்மில் அன்பு கூர்ந்ததினாலும் நம் பிதாக்களுக்கு இட்ட ஆணையை காக்க வேண்டும் என்பதினாலும் நம் தேவனாகிய கர்த்தரே நம் தேவன் என்றும் அவரில் அன்புகூர்ந்து கற்பனைகளைக்கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்று மாத்திரமே அவர் அறியப்படுகின்றார் (உபா. 7:8,9). அன்று மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பழுதற்ற ஓர் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டார்கள். இன்று நாம், பாவமறியாத இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் மரணத்தினாலே, அவருடைய இரத்தத்தினாலே பாவங்களற கழுவப்பட்டு மீட்கப்படுகின்றோம். இந்த இரட்சிப்பினை நாம் மனந்திரும்புதல் மூலமாகவே கண்டடைந்து ஆபிரகாமின் சகல ஆசீர்வாதங்களுக்கு பாத்திரவான்களாகின்றோம். ஆகவேதான் இந்த மனந்திரும்புதலையே யோவான்ஸ்நானகன் அன்று மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான் (மத். 3:1) அதுமுதல் இயேசு கிறிஸ்துவும் மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார் என்று மத். 4:17யில் வாசிக்கின்றோம். ஆண்டவரைத் தொடர்ந்து 12 சீஷர்களும் புறப்பட்டுபோய் மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்தார்கள் என்றும் மத். 6:12யில் வாசிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு பின்பும் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு மனந்திரும்பி குணப்படுங்கள் என்று பிரசங்கிக்கப்பட்டு வந்துள்ளதை அப். 3:20ல் வாசிக்கின்றோம்


  நாளடைவில் இந்த மனந்திரும்புதல் பொறுப்பற்றத் தன்மையாய் மாறத் தொடங்கிவிட்டன. இன்று எங்கும் மனந்திரும்புதல் பிரசங்கிக்கப்படுவதேயில்லை. ஆனால் மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கை செய்ய அறிந்திருக்கின்றார்கள். ஆனால் மறுபடியும், மறுபடியும் அதே பாவங்களை செய்து விடுகின்றார்களே. அறிக்கையும் செய்து வருகின்றார்கள். இதற்கு காரணம் அன்புள்ள தேவனை நேசிப்பதை விட, பாவங்களில் தொடருவதையே அதிகமாய் நேசித்து விடுகின்றார்கள் என்பதே உண்மை . பாவங்களில் தொடராது இருக்க விருப்பமும் கொண்டுள்ளார்கள். ஆனால் அவர்களால் கூடாமல் போய்விடுகின்றதே. சொந்தமுயற்சியினால் பாவங்களில் ஜெயம் பெறுவது கூடாததே.


   உண்மையான மனந்திரும்புதல், Sorry வருந்துகிறேன் என்று கூறுவதோடு நின்றுவிடுவதில்லை, அதற்கு அப்பால் கடந்து வருந்துகிறேன் என்று அறிக்கை செய்வதுவே உண்மையான மனந்திரும்புதலாகும். இந்த மனந்திரும்புதலினால் வாழ்க்கையில் மாற்றமும் நம்முடைய நடவடிக்கைகளில் திருப்பமும் காணப்படுமே. பாவங்களினால் ஏற்படும் குற்ற உணர்வினை பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே இன்னும் அதிகமாய் உணர்வடையச் செய்கின்றவராய் காணப்படுவாரே. தேவனை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெருகவும் செய்யுமே. தேவனுக்கேற்ற துக்கம் மனந்திரும்புதலையே உண்டாக்கும். உண்மையான மனந்திரும்புதல் நம்மை இயேசு இரட்சகரோடு பிணைத்து இணைத்துவிடுகின்றது. உண்மையான பாவதுக்கம் நம்மை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தி விடும். உண்மையான மனந்திரும்புதல் எப்பொழுதும் தொடர் நிலமையிலேயே காணப்படும். பாவதுக்கம் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் வளர்ப்பிக்கின்றதாக அமையும். உண்மையான விசுவாசி தான் சாகும்வரை, இறுதிவரை பாவ அறிக்கை செய்கிறவனாகவே காணப்படுவான். உண்மையான மனந்திரும்புதல் பாவங்களை வெறுக்கச் செய்யும். அதன் பின்விளைவுகளை பொருட்படுத்தச் செய்யாது. ஆனால் மாயையான மனந்திரும்புதல், அரைகுறையான மனந்திரும்புதல், மனந்திரும்புதலினால் ஏற்படும் பின்விளைவுகளை ஏற்றுக்கொள்ள சம்மதிக்காது


 . தாவீதின் பாவ அறிக்கையின் உண்மைத் தன்மையை சங்கீதம் 51யில் கீழ்க்கண்டவாறு அறிகின்றோம்:


1. செய்த பாவங்களுக்கு துணை பெயரிட்டு அவைகளை ஒத்துக்கொண்டு அறிக்கை செய்கின்றான், என் அக்கிரமம், என் மீறுதல்கள், என் பாவங்கள் என்று


2 இவைகளுக்காக இரங்கும், கிருபையாயிரும் என்று இரக்கங்களுக்காக கெஞ்சுகின்றான்


3.    சாக்கு போக்கு எதுவும் தேடாமல் என் மீறுதலை அறிந்திருக்கிறேன். அவைகள் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் சத்திய வெளிச்சம் ai பாவஞ்செய்து அவர் கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன் என்று திறந்த உள்ளத்தோடு பாவ அறிக்கை செய்கின்றான்


4.   ஆண்டவரையே நோக்கி அபயமிடுகின்றான். நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும் நீர் நியாயந்தீர்க்கும் போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன் என்கிறார்


5.   தன்னை நொறுக்கும் என் இருதயத்தை நருங்குண்டதாக்கும். நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும் என்று தேவனுக்குத் தன்னை அர்ப்பணிக்கின்றான்.


6.   பாவ இருதயத்தை மாற்றிவிட்டு சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை தன் உள்ளத்திலே புதுப்பியும் என்று தான் கெஞ்சுகின்றான்.


7.  இழந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் திரும்பத் தாரும் என்றும் ஜெபிக்கின்றான்


8.     இனி சாட்சியாக வாழ்வேன், அவன் வாய் ஆண்டவரின் புகழை அறிவிக்கும் என்று மனந்திரும்புதலின் போது எடுத்த தீர்மானத்தை அறிக்கை செய்கின்றான்


9.   தன்னுடைய மனந்திரும்புதலின் மூலமாக சீயோன் பிரியப்படுவதாக, எருசலேமின் மதில்கள் மறுபடியும் கட்டப்படுவதாக என்று பிரார்த்தித்து தேவனை மகிமைப்படுத்துகின்றான்.


10.     தன் இரட்சணியத்தை (இரட்சிப்பை) திரும்பதாரும் என்று கேட்கவில்லை . அவன் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவன். இழந்த இரட்சணிய சந்தோஷத்தையே திரும்பத் தாரும் என்று வேண்டுகின்றான்


  . இதுவே உண்மையான மனந்திரும்புதலாகும். இவ்விதமான மனந்திரும்பின வாழ்வைக் கொண்டவர்கள் மாத்திரமே ஆபிரகாமின் சந்ததியாராவார்கள். இவர்களுக்கு மாத்திரம் வாக்குப்பண்ணப்பட்ட தேவனால் உடன்படிக்கை செய்யப்பட்ட ஆபிரகாமின் சகல ஆசீர்வாதங்களும் நிறைவாய் அளிக்கப்படுகின்றவைகளாகும்.


    ஆயக்காரனாகிய சகேயு இவ்விதமான பாவ அறிக்கை செய்கின்றபோது தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகின்றார்... இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்றும் இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே என்று தேவன் அங்கிகரிக்கின்றார். இவனைப் போன்றே நாம் யாவருமாய் ஆபிரகாமின் சந்ததியாரே என்று தேவனாலேயே சாட்சி பகறப்பட வேண்டாமா. அவசியம் தேவையே


      வேதத்திலே காணப்படுகின்றவைகளுள் உன்னதமான சிறப்புற்ற விஷயம் ஆயிரம் தலைமுறைக்கும் ஆண்டவர் காண்பிக்கும் இரக்கம், கிருபை, நீடியசாந்தம் மகாதயை இவைகளே ஆகும்.


    வேதத்திலே ஆச்சரியப்படுத்துகின்ற சிறந்த செய்தி ஆண்டவரின் பிறப்பு அல்ல. ஆண்டவரின் சிலுவை மரணமும் ஆண்டவரின் உயிர்த்தெழுதல் மட்டுமே ஆகும்


     வேதத்திலே காணப்படுகின்ற வெகு இனிமையான செய்தி கர்த்தரின் கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது என்பதாகும் (சங். 103:17)


     வேதத்திலே பிரதானமான நமக்கான வசனங்களாவது ரோமர் 8:26, 34 அந்தபடியே ஆவியானவரும் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றப்படி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.


    வேதத்திலே கீழ்த்தரமான காரியமாக அறிவிக்கப்பட்ட செய்தியாவது நியா. 21:25, 17:6 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை . அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்து வந்தான். ஆகையினால் அருமையானவர்களே மனந்திரும்புதலை தன்தன் பார்வைக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளாமல் தேவவசனத்தின்படிக்கும், தாவீதின் மனந்திரும்புதலின் படிக்கும் நம்மை நாமே அர்ப்பணித்து மனந்திரும்பிடுவோமாக.


  அருமையானவர்களே வருகிற புத்தாண்டுக்குள்ளே செல்வதற்கு முன்பாக இவ்வாண்டில் தானே, இந்நாட்களில்தானே மனந்திரும்பாதவர்கள், தாவீதைப் போன்று உண்மையான மனந்திரும்புதலை கைக்கொண்டிடுவோமாக. ஆபிரகாமின் புத்திரர்களாக மாறிடுவோமாக. ஆபிரகாமின் சகல ஆசீர்வாதங்களுக்கும் சொந்தக்காரர்களாக மாற்றிக் கொண்டிடுவோமாக. ஆமென்.


                                            ஆசிரியர்,   பிலிப்ஜெயசிங்