Sathiya Velicham - August 2020

ஆசிரியர் உரை


அன்பார்ந்த வாசகர்களுக்கு,


இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள்


     இம்மட்டும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மனைவரையும், சுகத்தோடும், பெலத்தோடும் காத்து வந்துள்ளார். அவர் ஒருவருக்கே கனமும் மகிமையும் உண்டாவதாக.


     ஆண்டவரோடு கூட சீஷர்கள் 3.5 % ஆண்டுகள் காலம் இருந்திருந்தாலும் இயேசு கிறிஸ்துவை அவர்கள் தேவனாக சரியானபடி அறியாதவர்களாகவே காணப்பட்டார்கள். அவர்களை ஆண்டவர் நான்கு தடவைகளில் அற்ப விசுவாசியே என்று கண்டிக்கவும் வேண்டிய நிலை ஏற்பட்டதை வேதத்திலே வாசிக்கின்றோம். (O Little Faith) ஆண்டவரால் செய்யப்பட்ட அநேக அற்புதங்களைக் கண்டிருந்தும், சீஷர்களின் விசுவாசம் அற்பமாகவே காணப்பட்டது. ஒரு சமயம் கடலிலே பயணம் செய்யும் போது இயேசுவும் சீஷர்களோடு இருந்தார் ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். காற்று பலமாய் வீசியது. கடல் கொந்தளித்தது, சீஷர்கள் பயந்தும் விட்டார்கள். இயேசுவை எழுப்பி மடிந்து போகப் போகிறது உமக்குக் கவலையில்லையா? என்று ஆண்டவரை சாந்தத்தோடு அல்ல சற்று கடினமான வார்த்தைகளாலே அவரைக் கேட்டார்கள். இயேசு எழுந்து காற்றையும், கடலையும் அதட்டி அமைதலை உண்டாக்கி சீஷர்களைப் பார்த்து அற்பவிசுவாசிகளே ஏன் பயப்பட்டீர்கள் என்று அவர்களைக் கேட்டார். (மத்.8:26)


    சீஷர்கள் இயேசுவோடு இருந்த மற்றொரு நாளில் என்னத்தை உண்போம், என்னத்தை உடுத்துவோம், என்னத்தை குடிப்போம் என்று கவலைப்பட்ட ஓர் நாளிலே இயேசு கிறிஸ்து தாமே சீஷர்களைப் பார்த்து அற்ப விசுவாசிகளே ஏன் கவலைப்பட்டீர்கள் என்று கேட்டார் (மத்தேயு 6:30). மற்றொரு நாளிலே பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று கூறியபோது அதன் சத்தியத்தை உணரக்கூடாத சீஷர்களைப் பார்த்து அற்பவிசுவாசிகளே ஏன் வீணான யோசனை பண்ணுகின்றீர்கள் என்றும் கேட்டார். (மத்.16:9) பேதுருவும் சீஷர்களும் படகில் செல்லும் போது நாலாம் ஜாமத்திலே இயேசு கடலில் மேல் நடந்து வருகிறதைக் கண்டு பயந்து அலறினார்கள். பின்பு அவர்கள் அவரை இயேசுதான் என்று அறிந்த போது பேதுரு தானும் கடலில் நடக்கிறேன் என்றான். சிறிது தூரம் மாத்திரமே நடந்தான். ஆனால் காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு பயந்து அமிழ்ந்து போகையில் ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டார். அப்பொழுது இயேசு தம் கரத்தை நீட்டி அவனைப் பிடித்து அற்ப விசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய் என்றார் (மத்.14:31) இந்த நான்கு வேளைகளிலும் சீஷர்கள் இயேசு கிறிஸ்துவோடு இருந்தும், அற்பவிசுவாசிகளாகவே காணப்பட்டார்கள்.


      எப்பொழுதெல்லாம் காணப்பட்டார்கள் என்று காணும் போது தங்களுக்கு அன்றாட தேவைப்படும் பணம், உடை ஆகாரம் விஷயங்களில் அற்ப விசுவாசியாக காணப்பட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை சத்தியங்களை சரியாக புரியாத நிலமையில் அற்பவிசுவாசிகளாக காணப்பட்டார்கள். எதிர்பாராத துக்கங்கள், துயரங்கள், போராட்டங்கள் வரும் போது அற்பவிசுவாசிகளாக காணப்பட்டார்கள் நான்காவதாக ஆண்டவரோடு கூட அவர் நடந்தபடிக்கே நடக்கக்கூடாதவர்களாக அற்பவிசுவாசிகளாக காணப்பட்டார்கள். ஐந்தாவது முறையாக, ஆண்டவர் தாமே நம் பாவத்தின் தண்டனைகளை அவர் கல்வாரியிலே ஏற்கப் போகும் செய்தியையும் நம் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழப்போகும் செய்தியையும் இயேசு தாமே சீஷர்களுக்கு அறிவிக்கின்றபோது பேதுரு இவைகள் சம்பவிக்கக்கூடாது என்று கூறியபோது இயேசு பேதுருவைப் பார்த்து பின்னாக போ, சாத்தானே தேவனுக்கேற்றவிதமாய் சிந்தி, மனுஷனுக்கு ஏற்றவிதமாய் சிந்தியாதே என்று அவனை கண்டித்தும் பேசியதை அறிகின்றோம். ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் இயேசுதாமே சீஷர்கள் மீது மனதுருகுகின்றவராகவே காணப்பட்டு ஒவ்வொரு முறையும் அவர்களை இரட்சிக்கிறார். விசேஷமாய் பேதுருவைப் பார்த்து உன் மூலம் என் சபையை கட்டுவேன். அதனை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லையென்றும் பரலோக ராஜ்யத்தின் திறவுகோலையும் அவரிடம் கொடுப்பேன் என்றுதானே வாக்குப் பண்ணினார்.


     அருமையானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் நம்மிலே எதிர்பார்க்கும் தன்மைகளை அறியாதபடிக்கு நாம் அவருக்கு பிரியமாயிருக்கக் கூடாது. ஏனோக் ஆண்டவரோடு சஞ்சரித்தான் என்று வாசிக்கின்றோம். ஆனால் அவர் சாகாமல் உயிரோடே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமுன் தேவனுக்குப் பிரியமானவன் என்று தேவனாலே சாட்சி பகரப்பட்டானே (எபி.11:5) ஆகையினாலே நாம் ஆண்டவருக்குள் சரியாகத் தான் இருக்கின்றோம். நம்முடைய ஊழியங்கள் யாவும் போதுமானவைகளே நாம் வாழும் வாழ்வும் போதுமானதே என்று எண்ணினவர்களாய் இருந்துவிடாதீர்கள். எச்சரிக்கையடைந்திடுவோமாக. நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயும் இருந்துவிடக்கூடாதே (யாக்.1:22) மற்றவர்களும் நம்மைப் பார்த்து நீங்கள் மிகவும் நல்லவர்கள். நீங்கள் உண்மையான ஊழியக்காரர்களே, உங்கள் செய்திகளெல்லாம் மிகவும் பிரயோஜனமானவைகளே என்று கூறி பிறரும் நம்மை வஞ்சித்துவிடக்கூடாதே (மாற்கு 13:5) யாக்.1:26 கூறுகின்றது தன்னைத்தானே பக்தியுள்ளவன் என்று எண்ணினால் அவனுடைய பக்தி வீணாயிருக்கும் என்று தானே. ஒருவன் தான் ஒன்றுமில்லாதிருந்தும் தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால் தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான் என்று கலா.6:3யில் வாகசிக்கின்றோமே. அப்படியே தனக்கடுத்தவனை வஞ்சித்து நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான் என்றும் ஞானி கூறியதை நீதி.26:19யில் வாசிக்கின்றோம்.


     இவைகளெல்லாம் நமக்கு திருஷ்டாந்தங்களாகவே எச்சரிப்புண்டாகும்படிக்கே எழுதப்பட்டும் இருக்கின்றன. கிறிஸ்தவர்கள், விசுவாசிகள் யாவருமே அவிசுவாசிகளால் உலகத்தாரர்களால் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றோம் என்பதை மறந்துவிடவே கூடாது. அவர்களெல்லாருமே ஒரு CCTVயைப் போன்றே நம் உண்மை வாழ்வை ஆதாரங்களாக கண்டு கொண்டு வருகின்றார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். ஏசா.18:4யில் வாசிக்கின்றோம். உஷ்ணமான வெயிலைப் போன்று பனி மேகத்தைப் போன்று தேவன் நம் யாவரையும் தம் வாசஸ்தலத்திலிருந்து மனுமக்கள் யாவரையும் கண்ணோக்கிப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். லாசரு வியாதிப்பட்டுள்ளான் என்று அறிந்திருந்தபோதிலும் அவன் மரித்து 3 நாட்கள் ஆகியிருந்தாலும் அந்தக் குடும்பத்தை தேவன் தம் வாசஸ்தலத்திலிருந்து கண்காணித்துக் கொண்டே தான் இருந்தார். ஆனால் இதனை அக்குடும்பத்தினர் அறிந்திடவில்லையே. சீஷர்களை அக்கரைக்கு போங்கள் என்று ஆண்டவர் தாமே அனுப்பிவிட்டபின்பும் அவர் மலைக்குச் சென்று ஜெபிக்கின்றவராகவே காணப்பட்டாலும் அங்கேயிருந்து தானே தம் சீஷர்களை கடலிலே அவர்கள் அல்லல் படுவதையெல்லாம் கண்டு கண்காணித்துக் கொண்டே தானே இருந்தார். ஆனால் ஏற்றவேளையிலே அவர்களை காத்துள்ளாரே. ஒரு வீட்டிலே ஒரு தகப்பனும் அவன் குழந்தையும் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கமாயிருந்தது. உயரமான சில இடங்களிலிருந்தும் குதிக்கக் கேட்கும் போதும் தகப்பனின் கரங்களில் தைரியமாய் அந்த குழந்தை குதித்து விடும். தகப்பனும் தன் கரங்களால் தன் குழந்தையை பிடித்தும் விடுவான். இவ்விதமாய் விளையாடுகின்ற போது ஒரு சமயம் வீட்டு மாடி படிக்கட்டின் மேலிருந்து கீழே தன் தகப்பனின் கரங்களில் குதிப்பதும் வழக்கமாயிருந்தது. ஒவ்வொரு சமயத்திலும் தகப்பன் குதி என்று கட்டளையிடும் போது மட்டுமே குழந்தை குதிக்கின்றதாயுமிருக்கும். ஒரு சமயம் இரவு வேளையிலே மாடிப்படிக்கட்டில் குழந்தை ஏறிவிட்டது. அவ்வமயம் மின்சாரம் திடீரென இல்லாது போனதால் இருட்டாகிவிட்டது. குழந்தை பயத்தில் அழத் தொடங்கிவிட்டான். தகப்பனோ குதி, குதி என்று கட்டளையிட்டும் குழந்தை தகப்பனின் கரங்களை காணக்கூடாததினால் கீழே குதியாமல் மிகவும் அதிகமாய் அழுதது. தகப்பனோ கண்டித்து குதி என்று அதட்டியதால் தகப்பனின் கரங்களை காணக்கூடாமலே குதித்து விட்டது. ஆனால் தகப்பனோ தன் குழந்தையை நன்கு கவனித்துள்ளபடியினாலேயே குதி என்று கட்டளையும் இட்டுள்ளார். குழந்தை மிக பத்திரமாக பாதுகாப்பாக தகப்பனின் கரங்களில் விழுந்துள்ளது. அதுபோன்றே கர்த்தர் தாமே தம் பிள்ளைகள் யாவரையும் தன் வாசஸ்தலத்திலேயிருந்து நம்மை ஒவ்வொரு நிமிஷமாய் கண்காணித்துக் கொண்டே வருகின்றார்.


      அவர் நம்மை அதிகமாய் நேசிக்கின்றவராயுமிருக்கின்றார். அவர் நம்மை நேசித்து நம்மேல் ஏன் கண்ணோக்கமாயிருக்கிறார்?. அவர் நம் ஒவ்வொருவரையும் தம் தம் விசேஷித்த திட்டத்திற்கென்றே திட்டமிட்டு அதை நிறைவேற்றிடச் செய்யவே நம்மீது கண்ணோக்கமாயிருக்கின்றார். ஆகையினால் நம்முடைய நோக்கமெல்லாம் அவர் சித்தம் செய்வது மட்டுமே என்று வாழ்ந்திட வேண்டும். அந்த (aim) குறிக்கோளையே நம் இலக்காக கொண்டு ஜெயம் பெற்றிட வேண்டுமே. அந்த குறியினை தவறவிட்டு விட்டு மையப்புள்ளியை விட்டு விட்டு அம்பு எய்கின்றவர்களாய் காணப்படுவோமானால் நாம் ஜெயம் பெறாமல் தோற்கடிக்கப்பட்டவர்கள் வரிசையில் காணப்பட்டுவிடுவோமே. பாவம் என்பது என்ன? தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிடாததும் தேவனுடைய கற்பனைகளையும், நியாயங்களையும் விட்டு அகன்று செல்வது மட்டுமே பாவங்களாகும். இவைகளின் பேரில் மாத்திரமே தேவன் நம் ஒவ்வொருவரிடம் கணக்கு கேட்கின்றவராயிருக்கின்றார். நாமும் இவைகளுக்கு கடைசி நாளில் கணக்கு ஒப்புவித்தல் மிக மிக அவசியமே என்றும் அறிந்திடுவோமாக. தானி.9:5 யில் தானியேல் இவ்விதமாய் பாவ அறிக்கை ஜெபம் செய்கின்றார். “நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமக்காரராயிருந்து துன்மார்க்கமாய் நடந்து, கலகம் பண்ணி உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்று போனோம்.” ஆண்டவர் நம்மை, அவருடைய திட்டத்தின்படிக்கு அழைக்கும் போது நம்மை "அவர் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னை துலக்கமான அம்பாக்கி என்னைத் தமது அம்பாறாத்தூணியிலே மூடிவைத்தார்” (ஏசாயா 49:2) என்பதினை ஆண்டவரே நம்மில் செய்கின்றவராயிருக்கின்றார். இது நம்முடைய பணி அல்லவே. God makes us as a polished shaft for His works) இஸ்ரவேல் மக்களுக்காக தேவன் தம் திட்டத்தை நிறைவேற்ற 80 ஆண்டுகளாக மோசேயை முன் ஆயத்தம் செய்துள்ளார். ஆனால் மோசே கூறிய பதில் என்ன? யாத்.3:11 மோசே தேவனை நோக்கி பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வரவும் நான் எம்மாத்திரம் என்றான். ஆனால் ஆண்டவர் அவனை விடவில்லையே அவனை தகுதியுள்ளவன் என்று கண்டு அவனுக்கான யாவற்றையும் தேவனே சமைத்து அவ்வப்போது தூதர்களின் மன்னாவினாலும் போஷித்தாரே. All dressed up for dinner.


       தேவன் தாமே நம்மேல் கண்ணோக்கமாயிருப்பதினால் நாமும் எந்தவிதமான முன் ஆயத்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லையே. தேவன் நம்மேல் கண்ணோக்கமாயிருப்பதை அறியாத ஊழியர்களே 5 ஆண்டு திட்டம், 10 ஆண்டு திட்டங்களை உருவாக்குகின்றவர் களாயிருக்கின்றார்களே. தீர்க்கத்தரிசியாகிய எலியா தேவன் கூறும் செய்திகளை மட்டுமே கூறுகின்றவனாகவும் தேவன் நடப்பிக்க கட்டளையிடும் செயல்களை மட்டுமே அவர் அறிவிக்கின்றபடிக்கே செயல்படுத்துகின்றவனாய் காணப்பட்டான். தேவனுடைய வார்த்தையின்படிக்கே 3 வருஷம் மழையில்லாமல் போயிற்று. ஆண்டவரோ அவனை கேரித் ஆற்றண்டையிலே ஒளித்துக் கொண்டிரு என்றார். அவனும் தேவனின் வார்த்தையின்படிக்கே ஒளித்துக் கொண்டான். எந்த முன் திட்டத்தையும் அவன் யோசிக்கவே இல்லை. மழையில்லாததினால் ஆற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. எலியா கலக்கமே அடையவே இல்லை. அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்ற யோசனைக்கே இடம் கொடுக்கவில்லை. தண்ணீரின் ஓட்டம் நின்றது. பள்ளத்தில் உள்ள கொஞ்ச நீரும் வற்றத் தொடங்கியது. கடைசியாக தண்ணீர் உள்ளங்கை அளவானது. அதையும் இன்று குடிக்கவும் நாளைக்கு குடிக்க தண்ணீர் இல்லை. அவனுக்கு எந்த முன் திட்டமும் கிடையாது ஆண்டவர் தம் வாசஸ்தலத்திலிருந்து அவர் மேல் கண்ணோக்கமாயிருக்கிறார் என்ற நம்பிக்கையிலே இருந்தார். மறுநாள் வந்தது. சாரிபாத் விதவை வீட்டிற்கு போக கர்த்தர் கட்டளையிட்டார். எலியா ஏன்? எப்படி? விதவையா என்று கூட எண்ணிடாமல் சாக இருக்கின்ற விதவையிடமே சென்று தண்ணீரையும் அதோடு அப்பத்தையும் கேட்கின்றான். பின் அங்கு நடந்த அதிசயம் நமக்கு தெரியுமே.


      அருமையானவர்களே, தேவன் தம் மக்களை ஒருபோதும் கைவிடவே மாட்டார். எந்த முன் திட்டமும் இல்லாமல் அவரையே நோக்கி சார்ந்திருப்பவர்களே ஆண்டவரின் சொந்தப்பிள்ளைகளாவார்கள். மற்றவர்களெல்லாருமே தம் தம் யோசனையின்படிக்கே தேவ ஊழியங்களை செய்ய கேட்க அழைக்கின்றவர்களாய் காணப்படுவார்கள். இந்த கோரோனா நாட்களில் ஆண்டவரை மட்டுமே சார்ந்து அவரின் கட்டளைகளுக்கும் சித்தங்களுக்கும் மட்டுமே கீழ்ப்படிந்திடுவோமாக. பறவைகளை போஷிக்கின்றவர் நம்மை போஷிப்பார். காட்டு புஷ்பங்களை உடுத்துவிப்பவர் நம்மையும் உடுத்துவிப்பார். தேவன் யோவானுக்கு கட்டளையிடும் போது ஒரு தூதனுக்குத் தான் எழுதச் செய்தார். ஆனால் அதனை 7 சபைகள் கேட்டார்கள். அவர்களில் காதுள்ளவன் மாத்திரமே கேட்கக்கடவன் என்றாரே. கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு அதற்கு கீழ்ப்படிந்து வாழ்கின்றவர்களே ஜெயம் கொள்கிறவர்களாவர். ஆமென் ஆண்டவர் தாமே நம் அனைவரையும் அவருக்கேற்ற பாத்திரங்களாக மாற்றி அவருக்காய் வாழ்ந்திட வழி நடத்தி ஆசீர்வதித்திடுவாராக.


சகோ. பிலிப்ஜெயசிங்,


நாசரேத் ஜெப ஐக்கியம்,


நாசரேத். தூத்துக்குடி மாவட்டம்.