பாவங்கள்
என் ஜனத்திற்கு அவர்கள் மீறுதலையும் யாக்கோபு வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. ஏசாயா 52:1
தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாகவும் அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாகவும் செய்யப்படுவதே பாவம். நம்முடைய வாழ்வில் பாவம் எப்படியெல்லாம் கடந்து வருகின்றது என்பதை குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதமும் கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவை யாராக அங்கீகரிக்கின்றோம் இதில் நாம் எப்படி பாவம் செய்கின்றோம் என்பதைக் குறித்து சிந்திக்கப்போகின்றோம்.
அன்பானவர்களே, நாமனைவரும் கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் தான் வாழ்ந்து வருகின்றோம். கிறிஸ்துவில் அரிய பெரிய செயல்களை பல கண்டவர்களாகவும் அவருக்காக பெரிய ஆலயங்களையும் ஆசரிப்புக் கூடாரங்களையும் கட்டி ஆராதிக்கின்றவர்களாகவும் காணப்படுகின்றோம். கிறிஸ்துவை நாம் யாராக அங்கீகரித்து ஆராதிக்கின்றோம்? அவரை நாம் நம்முடைய வாழ்க்கையில் எதற்காக பயன்படுத்துகின்றோம். இயேசு நாதருடைய செயல்பாடுகளில் நமக்கு தேவையானவற்றை மாத்திரம் அல்லது நமக்கு சாதகமானதை மாத்திரம் பிடித்துக்கொண்டு அவரை ஆராதிக்கின்றோமா, இல்லை அவருடைய செயல்களை கற்பனைகளை முழுமையாய் கடைபிடித்து கொண்டுஅவருக்கு ஆராதனை செய்கின்றோமா? அவரை நம் வாழ்வில் எந்த நிலையில் ஏற்றுக்கொண்டுள்ளோம் சிந்தியுங்கள். சற்று கவனியுங்கள். இயேசு உலகத்தில் வந்ததின் நோக்கம் ஒன்று மட்டுமே இந்நாட்களில் அதை தவிர மீதமுள்ள அவருடைய செயல்கள் அனைத்தையுமே உட்கொண்டவர்களாக அவரை ஆராதிக்கின்றனர். உலகபிரகாரமாக ஓரிரு எடுத்துக்காட்டுக்களை நாம் பார்க்கலாம்.
1. இயேசு நோயாளிகளை விடுதலையாக்குகின்றார்
இந்த செயலை மட்டும் குறிக்கோளாக கொண்டு நடத்தப்படுகின்ற ஆராதனைகளும், ஊழியங்களும் ஏராளம். இப்படிப்பட்டோர்களை தேடி நாடி ஓடி செல்கின்ற விசுவாசிகளும் ஏராளம். தங்கள் நோய்களை குணமாக்க மட்டும் இயேசு போதுமென்றால் நோயே இல்லாத ஒரு நபருக்கு இயேசுவால் என்ன பலன். இந்த ஊழியக்காரர்கள் நோயில்லாதவனுக்கு தேவையில்லையே. அப்படியானால் நோயில்லாத ஒருவன் எப்படி இயேசுவினிடத்தில் வர முடியும் சிந்தியுங்கள்.
2. இயேசு கடன்தொல்லை கஷ்டங்களை மாற்றுகிறவர்
அநேக ஊழியர்களும், ஊழியங்களும் தங்கள் ஆராதனைகளுக்கு அழைப்பு விடுக்கும் போது நீங்கள் கடன் தொல்லையால் வாடுகின்றீர்களா எங்கள் ஆராதனைக்கு வாருங்கள் இயேசு உங்கள் கடனை தீர்க்கின்றார். இதை நம்பி சென்று தங்கள் வறுமையிலும், எளிமையிலும் இருந்து உள்ளதை எடுத்து சென்று அவ்வூழியரையும் அவருடைய ஊழியத்தையும் தாங்குகின்றனர். இப்படிப்பட்ட எளியவர்களை ஏமாற்றுவதற்காகவே அவ்வூழியர்கள் சில சாட்சிகளையும் ஆயத்தம் செய்து வைத்திருப்பார்கள். இந்த சாட்சிகள் கூறுவார்கள். நான் இந்த ஊழியத்திற்கு ரூபாய்5000/- காணிக்கை கொடுத்தேன். இவர்கள் ஜெபம் பண்ணினார்கள். நான் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள வீட்டைக் கட்டினேன், கார் வாங்கினேன், ஏராளம் பணம் சம்பாதித்தேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏழைகளை, கடனாளிகளை மயக்குகின்றனர். அன்பானவர்களை இவ்வூழியங்களைக் குறித்து சிந்தியுங்கள். கடனே இல்லாத ஒருவன் இயேசுவினிடத்தில் எதற்காக வர வேண்டும் என்று சிந்திக்கலாமல்லவா? எனக்கு கடன் எதுவுமில்லையே பின்பு நான் எதற்காக கிறிஸ்தவனாக வேண்டும் என்று இவர்கள் கிறிஸ்துவினிடத்தில் வர வேண்டாமா சிந்தியுங்கள்.
3. இயேசு பசியாற்றுகின்றவர் (போஜனம் கொடுக்கின்றவர்)
ஏதாவது சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கத்தோடு ஆராதனைகளுக்கும், கூடுகைகளுக்கும் வருகின்றவர்கள் ஏராளம். இயேசுவின் செய்தி கேட்க வந்தவர்களுக்கு பசித்த போது அவர் பகிர்ந்தளித்தார். மறுநாளிலும் ஏராளமானோர் கூடிவந்தார்களே. இவர்கள் போதனையை கேட்க வரவில்லை. அற்புதத்தை காண வந்தார்கள் என்று அவர் கூறினாரே. இங்கு நாம் பார்க்க வேண்டியது உலகத்தில் மேன்மைான சாப்பாடுள்ள ஒருவன் எனக்கு பசியில்லையே பின்பு நான் எதற்காக கிறிஸ்துவினிடத்தில் வரவேண்டுமென்று கேட்டால் ஊழியக்காரரின் பதில் என்ன சிந்தியுங்கள். இவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமே. இப்படி அநேக காரியங்களை நம்மால் பார்க்க முடியும். இவைகளில் ஒன்றும் படாதவர்கள் அநேகர். இவர்களும் இயேசுவை ஏற்றுக் கொண்டு பரலோகம் செல்ல வேண்டுமே. அப்படியானால் இந்த இயேசு யார்? அவரால் நமக்கு என்ன பலன் அடைய முடியும் எல்லாராலும் இயேசுவை அங்கிகரிப்பதற்கு அவரிடத்தில் என்ன விசேஷம் உண்டு என்பதை நாம் அறிந்து உணர வேண்டுமே.
அன்பானவர்களே 1தீமோத்தேயு 1:15 கூறுகிறது பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது என்று பரி.பவுல் கூறுகிறார் இங்கு நாம் பார்க்க வேண்டியது உலகத்திலுள்ள எல்லாராலும் கிறிஸ்துவை அங்கீகரிப்பதற்கான ஒரே காரணம் தான் காணப்படுகின்றது. அது அவர் பாவிகளை இரட்சிக்க வந்தார் என்பதே. இதை தவிர அதாவது ஒவ்வொரு மனிதனும் பாவத்தில் வாழ்கின்றான் என்பதை உணர்த்துவதை தவிர மீதமுள்ள எல்லாவற்றையும் இன்று ஊழியங்களாக செய்து வருகின்றனர். இது மிகவும் கவலையளிக்கின்றதே. கிறிஸ்தவர்கள் யாரிடமும் பாவத்தை குறித்த உண்ர்வு காணப்படவில்லையே. எந்த ஊழியக்காரனும் யாருடைய பாவத்தைக் குறித்தும் எச்சரித்துணர்த்துவதில்லையே. எல்லாரும் கிறிஸ்துவை ஏற்று கொள்வதற்கு இது தானே உண்மையும் அங்கீகாரமும் உள்ள வார்த்தை இதனை சொல்ல இந்நாட்களில் ஊழியர்கள் எழும்ப வேண்டுமே.
ஏன் எல்லாருடைய பாவத்தைக் குறித்தும் சொல்ல ஊழியக்காரர்கள் தயங்குகின்றனர். ஒருவனுடைய பாவம் எச்சரிக்ப்பட்டால் ஒருவேனை அவன் சபைக்கு வருவதை நிறுத்திவிடுவானோ, வசூல் குறைந்துவிடுமோ என்ற பயத்தினால் பாவங்களை எச்சரியாமல் ஊழியங்களை செய்பவர்களே சிந்தியுங்கள். இப்படிப்பட்ட ஆத்துமாக்களின் கணக்கு உங்களிடம் கேட்கப்படும் நாள் வரும் அது மிகவும் சமீபமாயிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். லூக்.5:32ல் நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன் என்று இயேசு தாமே கூறியுள்ளார். மாற்கு 2:17ல் இயேசு பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
அருமையானவர்களே, ஒருவனுடைய பாவம் உணர்த்தப்படாதவரைக்கும் அவன் பாவி என்பதை உணரமாட்டானே. பாவத்தை உணருகிறவன் மனந்திரும்புவானே இப்படியாய் இயேசுவை பூரணமாக மக்களுக்கு தெரிவிக்க ஏற்ற வார்த்தையை கூறாமலிருப்பது பாவம் என்பதை நாமறிந்துணர வேண்டும். இந்த கொடியதான பாவத்திலிருந்து ஊழியக்காரர்களாகிய நாம் இரட்சிப்படைய வேண்டுமே. அதற்காக நம்மை ஆயத்தப்படுத்துவோம். கர்த்தர் பெலனளிப்பாராக. ஆமென்.
சகோ. ஷீன் சைரஸ், கேரளா.
cell: 09447735981