30/05/2020 சனிக்கிழமை இரவு உபவாச ஜெப வேளையின் போது காணொளி மூலம் அளிக்கப் பட்ட தேவ செய்தி:-
ஆசிரியர் உரை
கிறிஸ்துவுக்குள் அன்பான வாசகர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள்
. இந்த கொரோனா அடைப்பட்ட நாட்களிலும் தேவன் தாமே நம்மனைவரோடும் கூட இருந்து நம்மை பாதுகாத்து வழிநடத்தி வருகின்றமைக்கு நம் தேவாதி தேவன் ஒருவருக்கே நன்றியையும், கனத்தையும் மகிமையையும் செலுத்துகின்றேன்.
இந்த ஜூன் மாத புதிய கல்வி ஆண்டிற்குள்ளே நாம் யாவரும் புகுந்துள்ளோம். தேவன் தாமே, உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் உங்கள் பேரப்பிள்ளைகளையும் அபரிதமாக ஆசீர்வதித்து தம் சித்தத்தின்படிக்கே மேன்மையான வழிகளிலே யாவரையும் வழி நடத்திச் சென்றிடவும் ஊக்கமாய் ஜெபித்து வருகின்றேன். புதிய கல்வி ஆண்டிற்கான சகல தேவைகளையும் தேவன் தாமே அற்புதமாய் அளித்து யாவரையும் வழி நடத்திடவும் அவர் நல்லவரும், வல்லவரும், உண்மையுள்ளவருமாய் இருக்கின்றாரே அவருக்கே ஸ்தோத்திரமும், மகிமையும் உண்டாவதாக.
உலகமெங்கிலும், அதிகமான சாவு, அழிவு, துக்கம், பயம், காணப்பட்டிருந்தாலும் கொரோனாவாகிய சாத்தான் எவனை விழுங்கலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கம் போல தன் வாயைத் திறந்து பயமுறுத்தி வந்தாலும், அவனின் கோரப்பற்களுக்குள்ளே சிக்கிக்கொள்ளாமல் பாதுகாத்து, சாத்தானால் விழுங்கப்படாத பரிசுத்தவான்களுள் ஒருவராக நம்மை இம்மட்டும் காத்தமைக்காக சகலவற்றின்மேலும் அதிகாரமுள்ள தேவனுக்கே கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக. இன்னும் வரும் சகல நாட்களிலும் அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்" உபா.28:10 என்பதாகும்.
இப்பொதும் தேவ ஆலோசனையாக மிக மிக முக்கியமான ஒரு தேவ எச்சரிப்பினை யாவருக்கும் அறிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். தேவன் தாமே இவற்றிலே அதிகமாய் மகிமைப்படுவாராக.
ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்
: கலா:5:16 யிலேஇவ்விதமாய் வாசிக்கின்றோம் "பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால் ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள். அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” அநேகர் இந்நாட்களில் ஆண்டவருக்கு முன்பாக பரிசுத்தமாக வாழ்ந்து காட்ட, தங்கள் தங்கள் மாம்ச இச்சையை (ஆசைகளை) நிறைவேற்றாதிருக்க பல சரீர, மாம்ச பிரகாரமான முயற்சிகளை செய்து, அநேக நாட்களுக்குப்பின் அவற்றிலே தோல்வியை மட்டுமே சந்தித்து வருகின்றார்கள். மாம்ச முயற்சியினால் எடுக்கப்படும் சகலமும் தோல்வியிலேயே முடிக்கின்றதாகின்றது. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது (1தீமோ.4:8) மாம்ச உணவை சில நாட்களில் வெறுத்து வாழ்ந்திடலாம், தாடி வளர்த்து சுயவெறுப்பினை நிறைவேற்ற பிரயாசப்படலாம், நகையை வெறுத்து காண்பித்திடலாம். வெண்ணுடையை அணிந்திடலாம். அநேக சமயங்களில் உபவாசித்திடலாம். ஒழுங்காக தசமபாகமும் செலுத்திடலாம். இவைகளினால் உங்கள் உள்ளம் நிரந்தரமான சாந்தி, அமைதியினை அடைந்திடாதே. ஏனெனில் இவையாவும் மாமிச முயற்சிகளே பரி.பவுல் கூறும் ஆலோசனை என்ன? ஆவிக்கேற்றபடி மாத்திரம் நடந்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் எவ்வித சரீர முயற்சியினாலும் செயல்படாமல் சகல மாம்ச இச்சையையும் நிறைவேற்றாதிருப்பீர்கள் என்பதே உண்மையும் சத்தியமும் ஆகும்.
ஆண்டவர் மனுமக்களை உருவாக்கும் போது அவரவர்களுக்குள்ளே பலவிதமான உணர்வுகளை இயற்கையாகவே ஏற்படுத்தி அனுமதித்து வைத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் பசி, தாகம் என்ற உணர்வு உண்டு, வாழ்வில் முன்னேறும்படியான உணர்வு, ஓய்வு எடுக்க அவசியமான உணர்வு பாலுணர்வு, நல்ல நல்ல சாதனைகளை செயல்படுத்தும் உணர்வு இன்னும் பல உணர்வுகளை தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயல்பாகவே அனுமதித்து வைத்துள்ளார். இவைகளை ஆவிக்கேற்றபடி நடத்தி செயல்படுத்திட வேண்டும் என்பதே தேவனுடைய பரிசுத்த சித்தமும், திட்டமும் ஆகும். ஆனால் மனுமக்களாகிய நாம் ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளாமல் மாம்ச முறைகளில் செயல்படுத்துகையில் மாம்ச இச்சைகளில் விழுந்து விடுகின்றோம். பசிக்கு ஆகாரம் கொண்டிடாமல் பெருந்தீனிக்கு ஆசைப்பட்டு விடுகின்றோம். தாகத்திற்கு தேவையான தண்ணீரைக் குடிக்காமல், குடிவெறிக்கு அடிமையாகிவிடுகின்றோம். நேரத்தை நல்ல முறையில் செலவழிக்க விரும்பாமல், புகைத்து, புகையை ஊதி நேரத்தை கழிக்க விரும்புகின்றோம். பாலுணர்வை முறைப்படி செயல்படுத்திவிடாமல் எந்த பெண்களைக் கண்டாலும் இச்சையாய் பேசி நெருங்கி விடுகின்றோம். ஓய்வு, தூக்கம் சுகாதாரத்திற்கு அவசியமே ஆனால் சோம்பேறியாக எப்பொழுதும் படுக்கையில் காணப்படுகின்றோமே. ஒரு சபையின் தலைமைபோதகர் தன் சபைக்கு இவ்விதமான ஒரு அறிவிப்பைக் கொடுத்தார். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சபைமக்கள் எவரும் அவருக்கு ஜெப விண்ணப்பம் எதுவும் அன்னாருக்கு அனுப்பக்கூடாது அது அவர் ஓய்வு எடுக்கும் நேரமாம். மேலும் சிறிது பொழுது போக்கு (Recreation) அவசியமே. ஆனால் வரம்பு மீறி அநேக ஒழுக்கக் கேடுகளில் நடந்து கொள்கின்றோமே. (Debauchery) அவசியமல்லாதவற்றை, முன்னறிந்து, அவற்றினை தவிர்க்க விரும்பாமல் செயல்படுத்தி விடுகின்றோமே.
தாவீது, பத்சேபாள் விஷயத்தை காண்கையில், அவ்விருவருமே முன்னறிந்து தவிர்க்க விரும்பாமல் செயல்பட்டுள்ளதாகவே அறிகின்றேன். தாவீதின் வீரர்கள் யுத்தக் களத்தில் இருக்கும் போது யுத்த வீரனான தாவீது ஏன் ஓய்வு எடுக்க உப்பரிகைக்கு வந்தான், அரண்மனை அருகிலுள்ள பலரின் வீடுகளை உப்பரிகையிலிருந்து காணக்கூடும் என்பதினை தாவீது முன் அறிந்ததில்லையோ? மேற்கூரை இல்லாத குளியலறையினை சமீபமாயுள்ள அரண்மனை வாழும் அரசன் மற்றும் மக்கள் காணக்கூடும் என்பதை பத்சேபாள் முன் அறிந்ததில்லையோ? பொதுவாக பெண்கள் குளிக்க அவசியப்படுவது சூதகஸ்திரி தன் சரீரத்திலுள்ள உதிர ஊறல் நிற்கும் போது (லேவி.12:5, 15:19) இங்கே பத்சேபாள் பிறர் கண்ணில் காணப்படும்படியாக குளித்தது. தன்னில் உதிர ஊறல் நின்றதினையும் தான் ஆணோடு இணைய தயாராயிருக்கின்றாள் என்பதினையே வெளிப்படுத்த ஏதுவாயிற்றே. இச்செயல்களெல்லாம் முன்னறிந்து தவிர்க்க விரும்பாமல் செயல்படுத்தப்பட்டவைகளே. இவற்றினாலேயே இவரும் பாவஞ்செய்தார்கள். இவர்கள் இருவரும் ஆவிக்கேற்றபடி நடக்கவில்லையே. இவர்கள் போன்றே விசுவாசிகள், ஊழியர்கள், கிறிஸ்தவர்கள் அநேக விஷயங்களில் ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளாததினால், மாம்ச இச்சையில் மூழ்கி காணப்படுகின்றார்கள். இவையனைத்தினையும் பரிசுத்த தேவன் அருவருக்கும் பாவங்களே என்பதினையும் எவரும் ஆவிக்கேற்றபடி சிந்திக்கிறதில்லை. மாம்ச இச்சையில் வாழ்ந்து கொண்டே தங்களை ஆவிக்குரியவர்களாக காண்பிக்கின்றவர்களே இன்று அதிகம். அநேக போதகர்கள் குடிக்கும் வேசித்தனத்திற்கும் அடிமையாயிருந்து கொண்டே வழக்கமான தங்கள் ஊழியங்களிலும் தங்களை தேவர்களாக காண்பித்துக் கொள்கின்றார்களே. இவர்கள் போன்றோர்கள் இரண்டத்தனையான நரக தண்டனை அடையப் போவதே நிச்சயமாகும். ஆவிக்கேற்றபடி நடவாததற்கான ஒரு தண்டனை, மாம்ச இச்சையை நிறைவேற்றினதற்கான மற்றொரு தண்டனை. இவர்கள் மனப்பூர்வமாய் முன்னறிந்து, தவிர்க்க விரும்பாமல் செய்தவற்றிற்காக தேவகோபாக்கினையினின்று தப்பிடவே முடியாது என்பதே உண்மையாகும்.
ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுதல் என்பது ஒருநாளில் ஒரு நேரத்தில் மட்டும் நடந்து கொள்வது அல்ல. இக்காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில் மட்டுமே ஆவிக்கேற்றபடி யாவரும் நடந்து கொள்ள விரும்புகின்றார்கள். இன்னும் சிலர் லெந்து நாட்களில் மட்டும் நடந்து கொள்கின்றார்கள். விசேஷமாக இந்நாட்களில் அநேகர் இக்கொரோனாவினால், ஆவிக்கேற்றபடி நடக்கலாகின்றார்கள். இது நிரந்தரமானவைகள் அல்லவே. தேவன் இவற்றிலே பிரியங் கொள்ளவே மாட்டாரே. இந்நாட்களில் தினமும் எல்லா டிவி சேனல்களிலும் பிரசங்கங்கள், ஜெபத்திற்கான அழைப்புகள் மிக அதிகமாக வந்த வண்ணம் உள்ளன. மக்கள் எல்லாருமே ஒருவிதமான பக்திக்குள்ளே தள்ளப்படுகின்றார்கள். சபைத்தலைவர்களும் விதவிதமான ஊழியங்களை Youtube மூலம் அடிக்கடி, வார இறுதி, வார ஆரம்பம், வாரத்தின் நடுவில் என்று செய்திகளை அளித்து வருகின்றார்கள். மக்களும் பயனடைந்துள்ளார்கள் என்று அறிவித்தும் வருகின்றார்கள். ஆனால் தேவ செய்திகளை கேட்டவர்கள், காணொளி ஜெபங்களில் பங்கு பெற்றவர்கள் ஆவிக்கேற்றபடி நடக்கின்றவர்களாக மாற்றமடைந்திட வேண்டுமே ஆனால் காணமுடியவில்லையே - இந்நாட்களில் மட்டும் மாம்ச இச்சைகளை நிறைவேற்றிடாது காணப்பட்டுவிடக்கூடாதே. ஆவிக்குரியவர்களாக நடந்து கொள்ளுதல் என்பது moment by moment பரிசுத்தாவியானவரின் முழு ஆளுகைக்குள் ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு விஷயத்திலும் எல்லா காரியங்களிலும் ஒவ்வொரு நாட்களிலும் ஒப்படைத்தவர்களாய் வாழ்ந்து காணப்பட வேண்டுமே.
நம் வாழ்க்கையாகிய மோட்டார் காரிலே, நம்மாம்சமே, ஒட்டுநரின் இருக்கையினை பற்றி பிடித்து வாகனத்தை ஒட்டிடக் கூடாதே. ஆவியானவரே எங்கும், எதிலும் வழி நடத்திச் சென்றிட வேண்டுமே. அப்பொழுது தானே மாம்ச இச்சைகளை நிறைவேற்றாதிருப்போம் என்பதே உண்மையும் சத்தியமாகும்.
இக்காலத்திலே ஓர் விசித்திரமான மாம்ச இச்சையை ஆவிக்குரியதாக எண்ணி செயல்படுத்தும் விசுவாசிகள், ஊழியர்கள் எங்கும் பெருகி காணப்படுகின்றார்கள். வாட்ஸ்அப் (Whatsapp) யினை கையில் எடுத்துக் கொண்டு அனைவருக்கும் ஒரு வசனத்தை தினந்தோறும், வாரந்தோறும் பலவர்ண வடிவங்களோடு அனுப்பி வைப்பது ஆவிக்குரிய செயல் ஆகாது என்பதினை ஊழியர்கள், விசுவாசிகள் உணர்வார்களாக. இது ஒரு விதமான விசித்திரமான நவீன மாம்ச இச்சையின் செயல்பாடு மாத்திரமே ஆகும். தினமும் ஒரு வசனத்தை அனுப்புவதினால் அல்லது தனக்கு அனுப்பப்பட்ட வசனத்தை பிறர்க்கு அனுப்புவது (forward) ஆவிக்குரிய செயலாகாது என்றும் இஃது சாத்தானால் ஏற்படுத்தப்பட்ட வஞ்சக ஊழியமே என்றும் அறிந்திடுவோமாக. ஏன்? எப்படி? கூறுகின்றீர்கள் என்று சந்தேகங்கள் எழும்பலாம்.
அருமையானவர்களே, வசனங்களை தினந்தோறும் பிறருக்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டவர்களே உங்கள் மனசாட்சியை கேட்டு பதில் கூறுங்கள். தேவசித்தத்தின்படி செய்து வருகின்றீர்களா? தேவன் இந்த வசனத்தின் மூலம் உங்களோடு பேசினாரா? இந்த வசனத்தை வைத்து எவ்வளவு நேரம் தியானித்து ஜெபித்துள்ளீர்கள். பிறருக்கு அனுப்ப ஆண்டவர் உணர்த்தினாரா? நேற்று அனுப்பின வசனத்தை உங்களால் நினைவு கூற முடியுமா? அல்லது மனப்பாடமாய் கூறமுடியுமா? தினந்தோறும் மன்னா அனுப்புகின்றீர்களே. அதனை நீங்கள் பொறுக்கி சாப்பிட்டுள்ளீர்களா? அதன் மூலம் நீங்கள் பெற்ற சத்து சாரத்தினை சாட்சியாக கூற முடியுமா? ஏன் இந்த மாம்சமான மாயமாலமான விளம்பர ஊழியம், தினந்தோறும் ஆசீர்வாதமான வார்த்தைகளை மட்டுமே உங்கள் ஆண்டவர் உங்களோடு தினந்தோறும் கூறுகின்றவரா? அந்த ஆண்டவருக்கு நீங்கள் என்ன பெயர் சூட்டுவீர்கள், அருள்நாதரா? அல்லது ஆசீர்வாத வாக்கு நாதரா?
அருமையானவர்களே Whatsapp ஊழியஞ் செய்ய விரும்புவோர்களே. இந்நாட்களில் அரசியல் காமடிகள், மற்றும் சுகாதார டிப்ஸ்களை அஞ்ஞானிகள் அநேகருக்கு அனுப்பி வரும் வழக்கத்தைப் போன்று தானே, வேதவசனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன இவற்றினை அவசியமாய் செய்யுங்கள் வேத வசனங்ளைத் தானே அனுப்புகின்றீர்கள். ஆனால் பிலேயாமை போன்று அவன் மாம்சத்தில் செய்ய விரும்பின ஊழியத்தினை நீங்கள் செய்துவிடாதீர்கள். அவன் வெட்டப்பட்டு மரித்தான். ஆண்டவர் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசின வார்த்தைகளை மட்டுமே ஆண்டவரின் உத்தரவு பேரில் அனுப்புங்கள். பிறர் அனுப்பும் வசனத்தை forward திருப்பி அனுப்பும் ஊழியத்தை தயவு செய்து நிறுத்துங்கள். இவ்வூழியத்தினால் நீங்கள் பரிசுத்தவான்களாய் மாறிட முடியாது. இந்த வசனங்களே நியாயத்தீர்ப்பு நாளில் உங்களுக்கு எதிரிடையாக சாட்சி கூறிட நேரிடும். அப்பொழுது உங்களது நிலமை முன்னிலமையைக் காட்டிலும் உங்களது பின் நிலமை மிக மோசமாயிருக்கும் என்பதே உண்மை . சாக்கு போக்கு கூறி தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிடவே முடியாது
. அன்று எரிகோவின் கோட்டை விசுவாசத்தினாலேயே வீழ்த்தப்பட்டது ஆனால் இன்று ஆராதனையை அதிகமாய் விரும்பும் மாம்ச ஊழியர்கள் துதியினால் விழுந்தது என்று கூறி யாவரையும் மடமையாக்குகின்றார்கள். அன்று யோசுவா தேவனின் வார்த்தைப்படிக்கே விசுவாச வீரர்களாய் ஜனங்களை ஆயத்தப்படுத்து முன் தான் கர்த்தரின் சேனையின் அதிபதியை நேரில் சந்தித்தான். அவருக்கு முன்பாக தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்து கொண்டான். ஆண்டவரிடம் அடியேனுக்கு சொல்லுகிற தேவ வாக்கு என்ன என்று கேட்டான். கால்களிலிருக்கிற பாதரட்சைகளை கழற்றி அந்த இடத்தை பரிசுத்த பூமியாக்கினான். இது அல்லவா ஆராதனை நாயகனின் (Worship Leader) குணாதிசயம். தேவனை நேரடியாக சந்திக்கும் இடமே ஆராதனையின் இடம், தேவ கட்டளை பெறும் இடமே ஆராதனையின் இடம். அங்கே யோசுவாவுக்கு அளிக்கப்பட்ட தேவ கட்டளைகள் என்ன? விசுவாச வீரர்களாய் எரிகோ பட்டணத்தை ஆறு நாட்கள் சுற்றி நடந்து வர வேண்டும். ஏழாவது நாளில் ஏழு முறை சுற்றி நடந்து வர வேண்டும். இது பிறர் பார்வைக்கு பைத்தியமான செயலே. இந்த விசுவாச ஜெப பயணமே எரிகோவின் கோட்டையை விழப்பண்ணிற்று. தேவன் கூறியபடிக்கு சுவிசேஷமாகிய எக்காளத்தை ஊதப்பண்ணினான். இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷ எக்காளம் மாத்திரமே இக்காலத்து நவீன கிறிஸ்தவ மாம்ச கோட்டைகளை வீழ்த்திடும் என்பதினை அறிந்திடுவோமாக. மாமிச கிறிஸ்தவ பக்தி கோட்டையை தகர்க்க விசுவாசவீரர்களாய் அன்று அவர்கள் சுற்றி சுற்றி நடந்து வந்தது போன்று நாமும் இன்று ஜெபித்திடுவோமாக. மாறாக விருதாவாக whatsapp அனுப்பும் வார்த்தைகள் சாத்தானை சிரித்து உற்சாகப்படுத்திடுமே. மேலும் இடித்து தகர்க்கப்பட்ட மாம்ச கிறிஸ்தவ கோட்டைகளை புதுப்பித்து அந்த அஸ்திபாரத்திலே ஆவிக்குரிய மாளிகைகளாக கட்டும் விசுவாசிகளாக ஊழியக்காரர்களாக நாம் காணப்படுவோமானால் யோசு.6:26 கூறுவது என்ன? "இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாக சபிக்கப்பட்டிருக்கக்கடவன். அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிற போது தன் மூத்த குமாரனையும் அதின் வாசல்களை வைக்கிற போது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்."
அருமையானவர்களே, இக்கொரோனா காலம் ஒரு நல்ல கிருபையின் காலம். இதனை ஆண்டவருக்காய் ஆவிக்குரியவர்களாய் ஆவிக்கேற்றபடி நடந்து காத்திடுவோமாக. கண்ட கண்ட செய்திகளையெல்லாம் கண்டு கேட்டு, மனிதர்களை மட்டுமே நோக்கிப் பார்த்து வாழும் மாக்களாய் மாறிடாதபடி எச்சரிக்கையடைந்திடுவோமாக. "விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.”
கி.மு. 95-55ஆம் ஆண்டிலே டிக்ரானேஷ் என்ற அரசன் ரோமேனியாவை ஆண்டுவந்தான். அவன் ராஜ்யம் ரோமர்களால் பிடிக்கப்பட்டப்போது அந்த அரசனும், அவனது அழகிய மனைவியும் அவனது அழகு பிள்ளைகளும் கைதாகப்பட்டு, ரோமபடைத்தலைவன் முன்பாக நிறுத்தப்பட்டு மரணத்திற்கு நியமிக்கப்படுகையில் டிக்ரானேஷ் அரசன் ரோம தளபதியிடம், அழுது விழுந்து, பணிந்து கெஞ்சி கேட்டது தன்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள். சித்திரவதை செய்யுங்கள், இஷ்டப்படி துண்டித்துக் கொல்லுங்கள். ஆனால் என் மனைவி பிள்ளைகளை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள் என்று அழுது கெஞ்சி பிரார்த்தித்தான். ரோம தளபதியோ அழுகையின் கெஞ்சுதலைக் கேட்டு இரங்கி யாவரையும் மரணத்தண்டனையிலிருந்து விடுவித்தான். அவர்கள் விடுதலைப் பெற்று திரும்பி செல்கையில் டிக்ரானேஷ் தன் மனைவியிடம் கேட்டான். ரோமர் அரசு மாளிகையின் அழகை பார்த்தாயா? அவள் இல்லையென்றாள். பின்னும் அவன் ரோம தளபதியின் பொன் சிங்காசனத்தைப் பார்த்தாயா? இல்லையென்றாள். பின்னும் அவன் ரோம நியாயஸ்தலத்தின் அறையின் சுவற்றிலுள்ள தங்க தகடு பதிப்பித்தலை பார்த்தாயா? என்றும் கேட்டான். அவள் இல்லையென்றாள். பின் எதனைப் பார்த்தாய் என்று கேட்ட போது அவள் கூறிய பதில் தனக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் உயிர்பிச்சைக் கேட்டு தன்னைத் தானே சாக ஒப்புக் கொடுத்து கெஞ்சி, கதறி, அழுது, புரண்ட உங்கள் முகத்தை மட்டுமே நோக்கிப் பார்த்தவளாக இருந்தேன் என்றாளாம்.
ஆம் அருமையானவர்களே இந்நாட்களில் TV சேனல்களின் செய்திகளை அதிகமாய் அளித்து கொண்டு வரும் ஊழியர்களின் முகபாவனங்களையும் அன்னார்கள் வடிக்கும் கண்ணீரையே பார்க்காமல் நம்மெல்லாருக்காகவும் தன் ஜீவனையே சிலுவையிலே ஒப்புக்கொடுத்து நம் பாவங்களையும், தண்டனையினையும் தன்னிலே ஏற்று இரத்தம் சிந்தி மரித்த இயேசுவின் திரு முகத்தினை மட்டுமே நோக்கிப் பார்த்து அவர் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே ஓடி அனுதினமும் ஆவிக்குரியவர்களாக வாழ்ந்திடுவோமாக. அப்பொழுது மாத்திரமே மாம்ச இச்சைகளை நாம் நிறைவேற்றாதிருக்கிறவர்களாகக் காணப்படுவோம் என்பதே தேவன் நமக்கு அளிக்கும் நல் ஆசீர்வாதமாகும். இவ்வாழ்க்கையினையே நம்மனைவருக்கும் ஆண்டவர் தாமே அளித்திடுவாராக. ஆமென்.
சகோ. பிலிப்ஜெயசிங்,
நாசரேத் ஜெப ஐக்கியம்,
நாசரேத். தூத்துக்குடி மாவட்டம்.