கொரோனா காலத்திற்கான விசேஷ தேவ செய்தி

ஆண்டவரே யோவான் தன் சீஷர்களுக்கு ஜெபம் பண்ணப் போதித்தது போல, நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும்.   லூக்.11:1


     இசையை இசை கலைஞரிடமே கற்றுக் கொள்ள வேண்டும். வரலாற்றினை வரலாற்று ஆசிரியரிடமே கற்றுக் கொள்ள வேண்டும். அங்ஙனமே ஜெபத்தை, ஜெபத்தையே வாழ்வாக கொண்ட இயேசு கிறிஸ்துவிடம் மாத்திரமே கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர எந்த ஊழியர்களிடமும் அல்ல. எந்த உபவாச ஜெப கூடுகைகளை நடத்துபவரிடமிருந்தும் அல்ல. இங்கே இயேசு கிறிஸ்து தாமே, அவர் ஒரு இடத்தில் ஜெபம் பண்ணி முடித்த பின்பு திரும்பி வருகையில் அவரிடமே அவருடைய சீஷர்களில் ஒருவன் தனக்கு ஜெபத்தை போதிக்கும்படி கேட்கின்றான்.


     ஜெபம் என்பது கற்றுக்கொள்ள போதிக்கப்பட வேண்டியது மாத்திரமே. கல்வி கற்பதற்கு எல்லையேயில்லை. வாழ்நாள் பரியந்தம் கற்றுக் கொண்டேயிருக் கின்றோமே. அதுபோன்றே ஜெபத்தினை, போதனையாக கேட்டு அறிந்து வாழ்நாள் பரியந்தம் கற்றுக் கொள்ள வேண்டுமே. கல்வி கற்றவர்கள், கற்றுக் கொண்டபடிக்கே நடக்கின்றவர்களாகின்றனர். அவர்களைப் போன்றே ஜெபத்தை கற்றுக் கொள்பவர்களும் கற்றுக்கொண்டபடிக்கே வாழ்கின்றவர்களாகின்றனர். ஆண்டவர் தாமே கற்றுக் கொடுத்த ஜெபமானது கர்த்தருடைய ஜெபம் என்று யாவரும் அதனை அழைத்து வருகின்றோம். தன் வாழ்நாளிலே இயேசு கிறிஸ்து இந்த ஜெபத்தினை ஒரு போதும் ஜெபித்ததே கிடையாது. ஏனெனில் "எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்” என்று இயேசு கிறிஸ்து ஜெபிக்க வேண்டிய அவசியமே இல்லையே. அவர் பாவத்தினை அறியாதவராக இருக்கின்றவராயிற்றே. ஆகையினால் இது கர்த்தருடைய ஜெபம் அல்ல, இதனை சீஷர்களுடைய ஜெபம் மாத்திரமே என்று தான் அழைக்க வேண்டும்.


     ஒரு புதிய வீட்டை கட்ட விரும்பினால் எங்கேயாவது கட்டப்பட்டிருந்த ஒரு நவீன வீட்டை கண்டு அறிந்து வருவதில்லையா அது போன்றே ஜெபத்தை யாரிடம் கண்டு அறிந்து கற்றிட முடியும். ஜெபத்தையே வாழ்வாக கொண்டு, தன் பிதாவிடம் எப்பொழுதும் ஜெபித்து வாழ்ந்து காண்பித்த இயேசு கிறிஸ்துவினிடம் மாத்திரமே ஜெபத்தை கற்றுக் கொள்ள முடியும். இவ்வுலகில் அனைவருமே போதகர்களோ, விசுவாசிகளோ பிஷப்மார்களோ யாராயினும் அனைவரும் ஜெபத்தை கற்றுக் கொள்பவர்களே. இவர்களில் இவர் Prayer warrior இவர் ஜெபவீரர் என்று பலரை உதாரணமாக காண்பித்து வருகின்றோமே. அங்ஙனம் ஜெபவீரர் ஒருவரும் இப்பூலோகிலே எவரும் கிடையாது Prayer warrior என்ற வார்த்தை பதம் வேதத்திலே எங்குமே கிடையாது. இவ்வுலகிலே நாம் நாமே நமக்குள்ளே உருவாக்கிக் கொண்ட ஒரு சில விக்கிரகங்களே இவர்கள் ஆவர்.


     வேதத்திலே, எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள் என்றும், இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்றும் சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள் என்றுதான் வாசிக்கின்றோம். ஜெபத்திற்கு முடிவே கிடையாது. அது வாழ்நாள் பரியந்தம் கற்றுக் கொள்ளப்பட்டு அதிலே வாழ்கின்றவர்களாய் காணப்பட வேண்டும். ஜெபத்தை கற்றுக்கொள்ளவே தேவன் தம் மக்களுக்கு அடிக்கடி, வியாதி, துன்பங்கள், இழப்புகள், விபத்துக்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை அனுமதித்து வருகின்றார் என்பதை அறிந்திடுவோமாக. ஜெபத்தின் முக்கியமான ஷரத்து யாதெனில், மனிதர்களாகிய நம்மால் எதனையும் தன் மாம்சத்தில், சுயபெலத்தில், சுய ஞானம் அனுபவத்தினால் சாதிக்க முடியாது, யாவற்றிற்கும் தேவனையே நோக்கிப் பார்த்து அவரையே சார்ந்து வேண்டிக் கொள்வதே ஜெபமாகும். நம்முடைய சகல தேவைகளுக்காகவும் தேவனுடைய உதவி மட்டுமே தேவை என்று அறிந்தவர்களாய் வாழ்ந்திட வேண்டும் என்பதே ஜெபவாழ்வாகும். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் சித்தம் அல்ல பிதாவின் சித்தத்தை மட்டுமே இப்பூமியிலே செய்து முடிக்க பூமிக்கு இறங்கி வந்துள்ளார் என்று தானே வேதத்திலே வாசித்து அறிகின்றோம். ஜெபம் என்பது அவற்றினால் நம்முடைய பெலவீனங்களை குறைவுகளை ஒத்துக்கொள்வது மட்டுமே. ஆண்டவராகிய இயேசு இராமுழுவதும் ஜெபித்தார், அதிகாலையிலே அதிக இருட்டோடே எழுந்து மலைக்கு சென்று ஜெபித்தார். ஜெபித்து முடித்த விட்டு தம் ஊழியங்களை செய்தார். ஊழியங்களை செய்து முடித்த பின்பும் ஜெபிக்கச் சென்றார் என்று மாத்திரமே வாசிக்கின்றோம். மேலும் அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி வேண்டுதல் செய்தார் என்றும் அந்த ஜெபம் அவருக்கு உண்டாயிருந்த பயபக்தியினிமித்தமே கேட்கப்பட்டது என்றும் எபி.5:7யில் வாசிக்கின்றோமே. ஒரு சமயம் இயேசு கிறிஸ்து தாமே மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடு ஜெபித்தபோது அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது என்றும் அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி அவரைப் பலப்படுத்தினான் என்றும் லூக்.22யில் வாசிக்கின்றோமே. இவ்வளவாய் ஜெபிக்கும் ஜெபத்தினை கற்றுள்ளோமா? இல்லையே.


     இரா முழுவதும் (முழு இரவு ஜெபக்கூட்டத்தில் அல்ல) தனித்து ஜெபிக்கும் பழக்கம் இன்னும் நமக்குள்ளே வரவில்லையே. தினமும் அதிகாலையில் ஜெபிக்கும் பழக்கத்தினையும் கற்றிடவில்லையே. ஆண்டவர் ஜெபிக்கின்ற வேளையில் சீஷர்கள் தூக்க மயக்கத்தில் தான் இருந்து அவரோடு கூட ஜெபிக்கக் கூடாதவர்களாகவே தானே காணப்பட்டார்கள். ஆகையினால் ஆண்டவரைப் போன்று ஏராளமாய் ஜெபித்திட அவரிடம் மாத்திரமே ஜெபத்தை கற்றுக் கொள்வோமாக. இந்த ஜெபத்தை வேண்டிக் கொள்கின்றவர்களுக்கு மாத்திரமே அவர் போதிக்கின்றவராகவே காணப்படுகின்றார் என்றும் அறிந்திடுவோமாக.


     தாவீது ஜெபிக்கின்ற போது ஆண்டவரை கேள்வி கேட்க்கின்றவராகவும் காணப்பட்டாரே. ஆண்டவரை ஜெபத்தில் கேள்வி கேட்கக்கூடுமோ? ஜெபத்தினை கற்றுக் கொள்ளுவதினையே வாழ்க்கையாக கொண்டவர்கள் ஆண்டவரை கேள்வி கேட்கக் கூடும் என்பதே உண்மையும் ஆகும். சங்கீதம் 44யிலே தாவீது கேட்கின்றார் ஆண்டவரே விழித்துக் கொள்ளும், ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும் ஏன் உம்முடைய முகத்தை மறைத்துக் கொள்கின்றீர்? எங்கள் நெருக்கங்களில் ஏன் மறந்து விடுகின்றீர்? எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும் உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டு விடும் என்றும் ஜெபத்தில் கேள்வி கேட்கவில்லையா? இன்னும் கூட தாவீதின் ஜெபம் புலம்பலாகவும் காணப்பட்டதே. நாம் ஆண்டவரிடத்தில் ஜெபத்தில் கேள்வி கேட்பது தவறல்ல. ஆனால் ஆண்டவரை Challenge மட்டுமே செய்யக்கூடாது ஆண்டவரிடம் சவால் மட்டுமே விடக்கூடாது. ஆண்டவரே தம் ஜெபத்தில் பிதாவிடம் கேள்வி கேட்கவில்லையா, பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று சிலுவையில் தொங்குகையில் கேள்வி கேட்டிட்டாரே. அவருடைய ஜெபத்திற்கு பதிலும் மறுக்கப்பட்டதே. நாம் காயப்பட்டபோதும் ஜெபிக்க வேண்டும். நம் வேதனைகளிலும் நாம் ஜெபிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சந்தோஷ விஷயங்களிலும் அவரை நோக்கி ஜெபிக்க வேண்டும். அவர் எப்பொழுதுமே நம் ஜெபத்தை கேட்கின்றவராய் மட்டுமல்ல நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கின்றவராயுமிருக்கின்றார். நொறுங்குண்ட இருதய முள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங்.34:18) ஆண்டவரிடம் ஜெபத்தில் கேள்வி கேட்பது தவறு அல்ல. ஆனால் ஜெபத்தில் அவரிடம் சவால் விடுவதே தவறாகும். வசனத்தை, சத்தியத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்களே வசனத்திற்கு விரோதமாய் சவால் விடுகின்றவர்களாய் காணப்படுவார்கள்.


     கண்ணீரோடு விதைக்கிறவன் கெம்பீரத்தோடு அறுப்பான் என்று சங்.126:5யில் வாசிக்கின்றோமே. இது கண்ணீரோடு ஜெபிக்கின்ற ஜெபம் மாத்திரமே. நாம் பிறர்க்காகவும் ஜெபிக்கின்றவர்களாய் காணப்பட வேண்டும். பிறர்களுக்காக ஜெபிக்க நமக்கு நண்பர்கள் வேண்டுமே. நண்பர்களே இல்லாவிட்டால் நாம் ஒரு தனித்த தீவாக மாறிவிடுவோமே. ஆகையினால் நாம் விசுவாசிகளாய் துன்பப்படுகிற, துக்கங்களை அனுபவிக்கிற நண்பர்களை கொண்டவர்களாய் அறிந்தவர்களாய் அவர்களுக்காக ஜெபிக்கின்றவர்களாய் நாம் காணப்பட வேண்டுமே. ஒரு சகோதரன் ஒரு அடி தூரம் நம்மைவிட்டு விலகிபோனால் அவன் ஒரு அடி தூரம் பின்மாற்றமடைந்து விட்டான் என்பதே அதன் பொருள். பேதுரு தூரமாய் ஆண்டவரை விட்டு விலகிச் சென்றானே. நாமோ நம் நண்பர்களில் ஒருவனோ ஆண்டவரை விட்டு ஒரு அடி தூரம் கூட விலகிச் சென்றுவிடக் கூடாதே


    நாம் ஒரு சிறு பாவத்தை செய்யும் போது நம் சந்தோஷத்தை இழந்து விடுகின்றோம். இது நல்ல ஒரு அடையாளமே. ஆனால் உண்மையான ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரிய ஐக்கியத்தைவிட்டு பிரிந்து செல்லும் போது அவர்கள் சந்தோஷமுள்ளவர்களாய் காணப்பட முடியாதே. அவர்கள் நிச்சயமாய் தாவீது செய்த பாவ அறிக்கை ஜெபத்தை செய்திட வேண்டுமே. அப்பொழுது தானே தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாய் கண்டேன் என்றும் எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்தான் என்று ஆண்டவராலே சாட்சி பகரப்பட கூடும். தாவீது எங்ஙனம் பாவ அறிக்கை ஜெபத்தை செய்தான் :- சங்.32. நான் (பாவத்தை அறிக்கை செய்யாமல்) அடக்கி வைத்த மட்டும் நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சாரம் உஷ்ணகால வறட்சி போல வறண்டு போயிற்று. நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்று தாவீது ஏறெடுத்த ஜெபத்தை நாம் என்றைக்காவது ஜெபித்ததுண்டா? அல்லது இந்த ஜெபத்தை ஏறெடுக் கக்கூடாதபடிக்கு இவைகள் தேவையில்லை என்று கூறும் சாத்தானின் சத்தத்தினால் மயங்கிவிட்ட பரிசுத்தவான்களா? இதையும் தாண்டி ஜெபிக்கின்றவர்களாக உங்களை மாற்றிக் கொள்ள விரும்புகின்றீர்களா?


     சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள் என்று ஆண்டவர் கூறிய ஜெபங்களை ஏன் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. சோதனைகளே வராத அளவிற்கு நீங்கள் தேவ தூதர்களா?


     ஜெபிக்கின்ற வேளையில் சீஷர்கள் தூங்குகிறவர்களாக காணப்பட்டார்களே. அது அவர்களுக்கு பாவமே. தேவையான காரியங்களுக்கு தேவையான நேரங்களில் ஜெபியாமலிருப்பது பாவமே ஆகும். நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற் போனால் அது அவனுக்கு பாவமாயிருக்கும் என்று யாக்.4:17யில் வாசிக்கின்றோமே. ஜெபத்தை உதாசினப்படுத்துவது தேவனைச் சார்ந்திராதது தன் சுய நம்பிக்கை மாத்திரமே ஆகும். இது மிகவும் ஆபத்தானது. இது என்னால் கூடும் என்று அல்ல ஆண்டவரே இதிலே உம் உதவி தேவை என்று கேட்பதே ஜெபமாகும். ஒரு ஞானமுள்ள கிறிஸ்தவன், விசுவாசி, வளரும் விசுவாசி எப்பொழுதுமே தன்னிலே தான் அதிகமாய் ஜெபத்தை இன்னும் அதிகமாய் கற்றிட வேண்டும் என்று தாகத்தோடே காணப்படுவான். ஜெபத்தினை கற்றுக் கொள்ள விரும்பாதவன் தன்னிலே கொண்ட பெருமையினால் விசுவாசத்தினின்று விலகிச் செல்லுகிறவனாகவே காணப்படுவான். சோதனைக்குட்படாதபடி ஜெபிக்க ஆண்டவர் தாமே இருமுறை சீமோனே சீமோனே என்று பெயர் கூறி கற்பித்த பொழுது ஆண்டவர் பேதுருக்காய் அவனுடைய சோதனையில் ஜெயம் பெற ஜெபிக்கவில்லையே. அவன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கே அவனுக்காக ஜெபித்தார் என்று தானே வாசிக்கின்றோம். ஆனால் அவனோ தன்னை ஜெபத்திற்கு அர்ப்பணிக்காமல்தான் தன் சுய பெலத்தினால் ஆண்டவரோடு சிறைக்கும் செல்லத் தயார் என்றும், ஆண்டவருக்காக சாகவும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றும் ஆவிக்குரிய தற்பெருமையினாலே இவற்றினை கூறினான். ஆனால் ஜெபமின்மையினால் கேவலம் ஒரு வேலைக்காரிக்கு முன்பாக இரண்டு அல்ல, மூன்று முறை ஆண்டவரை மறுதலித்தும் விட்டானே.


   ஆகையால் தான் பரி.பவுல் 1தீமோ.4யில் கூறியபோது ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி பிற்காலங்களிலே மனசாட்சியிலே சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள் என்று எச்சரித்துள்ளார். ஆண்டவர் ஒரு போதும் தீமையை உருவாக்கவே இல்லை. ஆதியில் உலகை சிருஷ்டித்த போது யாவற்றையும் நல்லது என்றும், மிகவும் நல்லது என்று மட்டுமே கூறியுள்ளார்.


      ஆனால் ஆதியில் ஆதி தூதனான லூசிபர் தேவனுக்கு விரோதமாக எழும்பின் போது அவன் சர்ப்பமாக மாற்றப்பட்டான். அவன் யாவரையும் ஏமாற்றுகிறவனாக மாறினான். (Deceiver) பின்பு அவன் பிசாசானான், பின்பு சாத்தான் ஆனான் அவனோடு கூட ஒரு கூட்டம் தூதர்களும்  கைகோர்த்ததினால் அவர்களும் தள்ளப்பட்ட தூதர்களாக (Demons) மாற்றப்பட்டனர். ஆதாம், ஏவாளுக்குள் சாத்தான் புகுந்தான் என்றும், யூதாசுக்குள்ளும் சாத்தான் புகுந்தான் என்றும்  தானே வாசிக்கின்றோம். நாம் தேவனிடம் ஜெபத்தை கற்றுக்கொள்கின்றவர்களாய் மாத்திரமே காணப்பட்டு அவரை அண்டி ஜெபிக்கின்றவர்களாய் விழிப்புள்ளவர்களாய் காணப்படுவோமானால் சாத்தான் நமக்குள்ளே ஒரு போதும் புக முடியாது. தீமையும் நமக்கு நேரிடாது. ஒரு சிறிய தீமையும், பாவமே, அது சிறிய தீமை ஆனாலும் அதன் சம்பளம் மரணமே. தீமை நம்மனைவரையும் விரைவில் அழித்துவிடும். தேவனுடைய பரிசுத்தத்தோடு ஒப்பிடப்படுகையில் மாத்திரமே நம்முடைய தீமையின் மதிப்பு அளவிடப்படுகிறது என்ற உண்மையை அறிந்திடுவோமாக. தீமையை கொண்டவர்கள் அல்லது பாவங்களை அறிக்கை செய்யாதவர்களை ஆண்டவர் மாத்திரமே அன்னார்களை தம் இறுதிநாளில் நியாயஞ்செய்து தீர்ப்பு அளிக்கின்றவராயிருக்கின்றார். (வெளி 20:7-15) ஆகையினால் இந்நாட்களில் நம் எஞ்சிய வாழ்நாட்களை ஜெபத்தை கற்கின்றவர்களாகவே வாழ்ந்திடுவோமாக. கற்ற ஜெபவாழ்வில் ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்ந்திடுவோமாக. தீமை ஒருபோதும் நம்மை அணுகிடாது. தேவனே நம்மோடு இருந்து நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். குறைவுகளை, அறிவுரைகளை ஏற்றுக் கொள்பவனே ஞானவான் அவனே உண்மையும் உத்தமனுமான தேவனின் தாசன் ஆவான். தேவன் தாமே நம்மனைவரையும் இப்பிரபஞ்சத்திலிருந்து ஆவிக்குரிய மாய வாழ்விலிருந்து நம்மை மீட்டு வழி நடத்திடுவாராக. அவருக்காய் ஜெபத்தில் என்றும் எப்பொழுதும் அர்ப்பணித்தவர்களாய் நம்மை மாற்றி வாழ்ந்திடுவோமாக. ஆமென்.


சகோ. பிலிப்ஜெயசிங்


நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்,


தூத்துக்குடி மாவட்டம் (94875 47633)