நாசரேத் ஜெப ஐக்கியத்தில் 23.05.2020ஆம் நாள் சனிக்கிழமை உபவாச ஜெபத்தினத்தன்று காணோளி மூலம் (Video Conference) அளிக்கப்பட்ட தேவசெய்தியின் முழுமை:-
அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். கொலோ . 2:10
அன்று பரி.பவுல் கொலோசேயர் சபையில் தம் விசுவாசிகள் சிலபேர் கிறிஸ்துவுக்குள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறார்கள் என்று அறிவிக்கின்றார். ஆதியில் தேவன் ஆதாம் ஏவாளை உருவாக்கி ஏதேனில் வைத்தபோது அவர்கள் பரிபூரணமுள்ளவர்களாகவே இருந்தார்கள். ஆனால் எப்பொழுது அவர்கள் பாவம் செய்து தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமற் போனார்களோ அப்பொழுது தானே தேவனுடைய பரிபூரண பிரசன்னத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். அதனால் பரிபூரணத்தை இழந்தார்கள். இழந்த பரிபூரணத்தை மக்கள் திரும்ப பெற்றிடுவதற்காகவே தேவன் தம்முடைய ஒரே குமாரனை இப்பூலோகத்திற்கு அனுப்பி, சிலுவையிலே நமக்காக பலியாக மரிக்கச் செய்தார். இன்று அவராலே நாம் தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாகவே பரிபூரணமடைந்து வாழ்கின்றவர்களாகவே காணப்பட எதிர்பார்க்கப்படுகின்றோம். (Let us go to His presence to be perfect)
மனிதன் தேவன் வெறுக்கின்ற பாவங்களில் ஈடுபடும் போது, பாவம் மனிதர்களை தேவனுடைய அன்பிலிருந்து பிரித்து விடுவதில்லை. தேவனுடைய பிரசன்னத்திலிருந்து தானே மக்களை பிரித்து விடுகின்றது. தேவன் ஒளியாயிருக்கின்றார். His presence is light. அவரில் எவ்வளவேனும் இருளில்லை . In His presence there is no sin. ஆனால் இன்று ஆவிக்குரிய உலகில் அநேகர் தாங்கள் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கின்றோம் என்று கூறி இருளில் நடக்கிற வர்களாயிருந்தால் அவர்கள் பொய் சொல்லுகிறவர் களாயிருக்கின்றார்கள். தாங்கள் செய்து வரும் பாவங்களை பாவங்கள் என்று உணர்வதே கிடையாது. உணரும் இருதயமும் அவர்களுக்கு இல்லை. இந்த உலகம், மனிதன் தன் சரீரத்தோடு அதனில் வாழ்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. சரீரம் அதில் வாழும் ஆன்மா (Soul) வுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மா தேவனுக்காகவே உருவாக் கப்பட்டுள்ளது. ஒருவன் சரீரத்தினால் பாவஞ்செய்யும் போது தேவனையே வேதனைப்படுத்துகின்றான். ஒருவன் கிறிஸ்தவனாக மாறும் போது அவன் ஒரு நல்ல இடத்திற்கு மட்டுமே வந்து சேருகின்றான். ஆனால் ஒருவன் இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியப்படும் போது தனி மனிதனான இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியங்கொண்டு தேவபிள்ளையாக மாறுகின்றான். அந்த தேவபிள்ளையே எப்பொழுதும் தேவனுக்கு கீழ்படிகின்றவனாயிருக்கின்றான். அவனே பரிபூரணமடைகின்றவனாயிருக்கின்றான்
பழைய ஏற்பாட்டின் காலத்திலே, தேவனுடைய பிரசன்னம் தேவனுடைய பெட்டியின் மூலமாய் (Ark) இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் எங்கும் தேவனுடைய பெட்டியை சுமந்து கொண்டு சென்றார்கள். அதனை சுமக்கின்றவர்கள் பிரித்தெடுக்கப்பட்டவர்களாக பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவே இருக்க கட்டளை பெற்றிருந்தார்கள். லேவியர்களே அதற்காக நியமிக் கப்பட்டிருந்தார்கள். மக்களும் பாவங்கள் செய்யாதபடி தங்களைக் காத்துக் கொண்டும் வந்தார்கள்.
தேவனுடைய பெட்டி சுமந்துகொண்டு செல்லப்படும் இடங்களிலெல்லாம் யுத்தக்களங்களிலும் வெற்றிக்கு மேல் வெற்றியையே கண்டார்கள். தேவனுடைய பெட்டி எப்பொழுதும் பரிசுத்தமானதே. பரிசுத்தத்திலேயே தேவபிரசன்னமும் உள்ளது. பாவங்களுக்கு எவ்வளவேனும் இடமில்லை வெளிச்சத்திற்குள் இருளுக்கு இடமே கிடையாது. ஆகையால் தேவ பிரசன்னம் (Ark) வெற்றியையே இஸ்ரவேல் மக்களுக்கு அளித்து வந்தது.
ஆனால் நாளடைவில் இஸ்ரவேல் மக்கள் தங்கள் பரிசுத்தத்தில் குறைவுபடத் தொடங்கின போது தேவபிரசன்னம் அவர்களுக்கு வெற்றியை அளிக்கவில்லை. இதனால் தேவனுடைய பெட்டியை எவரும் குறை சொல்லக்கூடாதே. ஆசாரியனான ஏலியின் புத்திரர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் வாழ்ந்து கொண்டு தேவனுடைய பெட்டியின் மூலம் வெற்றியை தொடர்ந்து பெற்றிடலாம் என்று எண்ணி செயல்பட்ட போது, யுத்தத்திலே தோல்வி கண்டு மடிந்தும் போனார்கள். தேவனுடைய பெட்டியும் பெலிஸ்தர்களால் கொண்டு போகப்பட்டது. தேவனுடைய மகிமை, பிரசன்னம் இஸ்ரவேலைவிட்டு நீங்கிப் போயிற்று என்றும் அறியப்பட்டுள்ளதே. (1சாமுவேல் 4:22) ஆனால் பரிசுத்தமுள்ள தேவனுடைய பெட்டி வைக்கப்பட்ட பெலிஸ்தரின் கோவிலிலே அங்குள்ள தாகோன் சிலை விழுந்து நொறுங்கியது. தேவனுடைய பெட்டியை அபகரித்த புறஜாதியினர் மூல வியாதியினால் வாதிக்கப்பட்டார்கள். அவர்களின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று. இதனால் பெலிஸ்தர் தங்கள் பூஜாசாரிகளையும், குறிசொல்லுகிறவர்களையும் அழைத்து அவர்களின் ஆலோசனைபடிக்கே தேவனுடைய பெட்டியை இஸ்ரவேலரிடத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தார்கள். தாங்கள் நினைத்தபடிக்கே சில சுரூபங்களையும் வைத்து இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமை செலுத்துகிறதாக எண்ணி நடப்பித்தார்கள். இவைகளினால் தேவன் மகிமைப் படக்கூடுமோ? கூடாதே பெலிஸ்தரில் சிலர் தேவனுடைய பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று காணத் துணிந்ததினால் 50070 பேர்கள் அந்த இடத்திலே செத்து மடிந்தார்கள். அதனால் பெலிஸ்தர்கள் பயந்து தேவனுடைய பெட்டியை கீரியாத்யாரீமின் மக்களிடம் அனுப்பிவைத்தார்கள். தேவனுடைய பெட்டி இஸ்ரவேலர்களால் சிலகாலம் மறக்கப்பட்டும் போயிற்று. தேவபிரசன்னம், தேவபரிசுத்தம் இல்லாமல் வாழக்கூடும் என்று சவுல் அரசன் கூட எண்ணிவிட்டான். (I நாளா.13:3) தேவபெட்டியை சிலகாலம் தாவீதும் மறந்துவிட்டான். இதுபோன்றே இக்காலத்திலே தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தம் எங்கும் மறக்கப்பட்டு வருகின்றது. பரிசுத்தத்தை எந்த ஊழியர்களும் இன்று பிரசங்கிப்பதே இல்லை. பாவங்களை செய்து கொண்டே ஊழியங்களை சிறப்பாக கொண்டாடவே விரும்புகின்றார்கள். யார் சொன்னது இவைகளெல்லாம் பாவங்கள் என்று கூறும் ஊழியர்களே இக்காலத்திலே அதிகம். பலவிதமான ஊழியங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இவைகளே தேவனுக்கு பரிசுத்தம் மகிமை என்று தேவனுக்கே பரிசுத்தத்தை போதிக்கும் ஊழியர்களே இந்நாட்களில் பெருகியுள்ளார்கள்.
அநேக ஆண்டுகளுக்கு பின்பு தேவனுடைய பெட்டியை பற்றி தாவீதுக்கு ஞாபகம் வர அதனை கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவர திட்டமிட்டான். கடந்த காலங்களினால் தாவீதுக்கு தேவ பெட்டியை எங்ஙனம் கையாள வேண்டும் என்பதையும் மறந்தும் விட்டான். இப்பொழுது தேவனுடைய கட்டளைகளை பற்றி தேவனிடம் விசாரியாமல் சகல அதிபதிகளோடு ஆலோசனை பண்ணி தன்னுடைய விருப்பப்படிக்கே அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின் மேல் தேவ பெட்டியை ஏற்றி தங்கள் முழு பலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும், பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள். இது எவ்வளவு பெரிய முட்டாள் தனமான காரியமாயிற்று.எனறு தாவீது உணர்ந்ததே இல்லையே. ஆண்டவருக்கு இவைகளெல்லாம் ஆராதனை ஆகிவிடக்கூடுமோ. இன்றைய நாட்களிலும் எல்லா ஆவிக்குரிய சபைகளிலும் இவ்விதமான ஆராதனைகளைத் தானே காண்கின்றோம். ஆராதனை நடத்துபவர் அடிக்கடி கூறும் சத்தம் "உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆராதியுங்கள்” தேவனுக்கான உள்ளம் இருந்தால் தானே. “முழு பெலத்தோடு கைதாளத்தோடு ஆராதியுங்கள்” இதைத்தானே தாவீது செய்தான். மேளங்களையும், கைத்தாளங்களையும், பூரிகைகளையும் தானே தங்கள் முழு பெலத்தோடு சேவிக்கச் செய்தான். இக்காலத்திலும் இசை கருவிகளையும், பாடல்களைத் தானே ஆராதிக்கின்றார்கள். இதனால் ஏற்பட்ட விளைவுதான் என்ன? இசை முழக்கத்தினால் மாடு மிரண்டது. தேவபிரசன்னம் (பெட்டி) சரிந்தது. தேவபிரசன்னத்தை கைபெலத்தினால், சரிந்த பெட்டியை தூக்கிவிடக்கூடுமோ. இதை தன் சுயபெலத்தால் தாங்கின ஊசா செத்து மடிந்தான். தேவபிரசன்னம் தகுதியற்றவர்களை சாகடிப்பது தேவ நீதிதானே! ஆனால் இக்காலத்திலே யாரும் மடியவில்லையென்பதற்காக, ஏறெடுக்கப்படும் விதவிதமான ஆட்டம், பாட்டம் யாவும் தேவன் விரும்பும் ஆராதனையாக ஆகிவிடுமோ? ஒருக்காலும் ஆகிவிடாதே. ஆனால் மக்கள் இதுபோன்ற ஆராதனையில் தானே இன்று மகிழ்ச்சியடைகின்றார்கள். ஊழியர்களும் மக்கள் விருப்பப்படிக்கே வித விதமாய் ஆராதனைகளை உருவாக்கிக் கொண்டே வருகின்றார்கள். தேவன் எது மட்டும் பொறுமையாயிருப்பார்? கொரோனா ஒரு நிறுத்தத்தை இப்பொழுது கொண்டு வந்துள்ளதே உணர்வடைவோர் உண்டோ ? மக்கள் ஆராதனையை அதிகமாய் விரும்புவதால், அநேக பிரசங்கிக்க வரம் பெற்ற உத்தம ஊழியர்கள் கூட இடையிடையே தனக்கும் ஆராதனை வரம் உண்டு என்று தன் தகுதிக்கு மிஞ்சி தேவனுக்குச் சித்தமில்லாமல் ஆராதனையை நடத்தி காண்பிக்கின்றார்கள். இது தேவனுடைய பார்வையில் பாவமே ஆகும். “உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்” “எல்லா அவயங்களுக்கும் ஒரே தொழில் இராதது போல (ரோமர் 12:3,4) பிரசங்கிப்பவன் பிரசங்கம் செய்வதிலேயே வளர்ந்து தேவனை மகிமைப்படுத்த வேண்டும். ஆராதனை நடத்துபவன், ஆராதனையிலேயே வளர்ந்து தேவனை மகிமைப்படுத்த வேண்டுமே தவிர அடுத்தவனின் ஊழியங்களை காப்பி செய்வது, தேவனுக்கு விரோதமான பாவமே ஆகும் என்பதை அறிந்திடுவோமாக.
கடந்த புத்தாண்டின் முதல் நாளிலே, ஆராதனைக்காக ஒரு ஆவிக்குரிய சபைக்குச் சென்றேன். அதிக எதிர்பார்த்தலோடு அதிக நேரத்திற்கு முன்பாகவே சென்றும் விட்டேன். நடு இரவிலே சபை நிரம்பிவிட்டது. ஆராதனையும் தொடங்கியது. பழைய வருடத்திற்கான செய்தியும் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்பார்த்து சென்ற எனக்கு பழைய வருட கடைசி செய்தி எனக்கு அதிக பிரயோஜனமாயிருக்கும் என்றும் என்னை தகுதிபடுத்தி புத்தாண்டிற்குள் புகுந்திடச் செய்யும் என்றும் அறியாத, அறிக்கை செய்யப்படாத பாவங்கள் குறைவுகள் அறிவிக்கப்பட்டு தெளிவுபட்டுவிடவேண்டும் என்றும் எதிர்பார்த்து காத்திருந்த போது, சபையிலே ஆராதனை பாடகனாக இருந்த ஒருவர் அந்த ஆண்டின் இறுதி செய்தியை கொடுக்கலானார். ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ளவர் ஒருவரே ஆண்டு இறுதி செய்தியை கொடுத்து சபையை பரிசுத்தப்படுத்தி புத்தாண்டுக்குள் புகுந்திடச் செய்யக்கூடுமே தவிர ஒரு பாடகன் எப்படி சபையை புத்தாண்டிற்குள் நடத்திட கூடும். இதனை அந்த சபையின் தலைமை போதகரே நடத்தியிருந்திருக்கலாமே. ஒரு அனுபவமற்றவன் எந்த தன் சொந்த அனுபவங்களை சாட்சியாக கூறி மக்களை மனந்திரும்பிடச் செய்யக்கூடும்? கூடாதே. அன்று பெரிய ஏமாற்றமே ஏற்பட்டது. ஏன் இந்த சபை ஆராதனைக்கு வந்தேன் என்று எண்ணி இடையிலே வெளியே வர பிரயாசப்பட்டேன். ஆவிக்குரிய உணர்வற்ற மந்த நிலமையிலேயே புத்தாண்டுக்குள் செல்கையில் எங்ஙனம் புத்தாண்டு வாக்குத்தத்தம் பிரயோஜனமாயிருக்கும். பல நாட்களுக்கு முன் அச்சடிக்கப்பட்ட புத்தாண்டின் வாக்குத்தத்தையாவது அந்த அனுபவமற்றவனைக் கொண்டு வாக்குத்தத்தை வாசித்து ஒரு பிரசங்கத்தை செய்திருக்கலாமே. இவைகள் போன்றவைகளே எங்கும் காணப்படுகின்றது. இதனை தேவன் எங்ஙனம் அங்கிகரிப்பார்?
வேதத்திலே ஆராதனை என்பது கீதவாத்தியங்களோடு முழக்கம் என்பதுவே என்று எங்கும் எழுதப்படவில்லையே. லூக்.2:37யிலே 84 வயதுள்ள ஒருவிதவை தேவாலயத்திலே இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணி ஆராதனை செய்து கொண்டிருந்தாள் என்று தானே வாசிக்கின்றோம். ஜெபத்தினாலும் ஆராதிக்கக்கூடுமே. யோவான் 11:32யிலே மரியாள் இயேசுவை கண்டவுடனே அவர் பாதத்தில் விழுந்து ஆராதித்தாள் என்று (ஆங்கில வேதாகமத்தில்) வாசிக்கின்றோம். ஆகையால் ஆராதனை என்பது வெளிப்படையானது அல்ல. உள்ளத்திலேயே செயல்படுத்தக்படக்கூடியதாகும் என்பதையும் அறிகின்றோம்.
ஊசாவின் திடீர் மரணம் தாவீதை உணர்வடையச் செய்தது தாவீதை உணர்வடையச்செய்யவே தேவன் ஊசாவை திடீரென்று மடியச் செய்தார். 3 மாதங்கள் சென்றதும் தாவீது தேவனுடைய பெட்டியைக் குறித்ததான பரிசுத்த நடவடிக்கைகள் பற்றி எண். 7ஆம் அதிகாரத்திலே தேவன் மோசேக்கு இட்ட கட்டளைகளை வாசித்து அறியலானான். 1நாளா.15:15 லேவி புத்திரரை பரிசுத்தப்படுத்தி ஆயத்தப்படுத்தினான். கர்த்தருடைய வார்த்தையின்படியே மோசே கற்பித்த பிரகாரம் தாவீது இப்பொழுது செயல்பட்டு லேவி புத்திரர்களைக்கொண்டு தோளிலே சுமக்கப்பண்ணி தேவனுடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்கு கொண்டு வந்தான். இப்பொழுது தான் தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக தேவ சித்தத்தை செய்தவனாக தேவனாலே சாட்சி பகரப்பட்டுள்ளான். பின்பு தாவீதின் நாட்களிலெல்லாம் பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்தமாக்கப்பட்ட லேவியர்களே தேவனுடைய பெட்டியை சுமக்கலானார்கள். யோசுவாவின் காலத்தில் விசேஷித்த வேளையின் போது மாத்திரமே யோர்தானை கடந்து எரிகோவினை மேற்கொள்ள வேண்டிய நேரத்தில் யோசுவா தேவனுடைய ஆசாரியர்களைக் கொண்டு தேவ பெட்டியை சுமக்கப்பண்ணினார்.
அருமையானவர்களே, கடைசி காலத்தில் நடைபெறும் சம்பவங்களைக் குறித்து பரி.பவுல் குறிப்பிடுகையில் (11தீமோத்.3) கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில் மனிதர்கள் தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. இந்த மாயையிலே பெண்களே அதிகமாய் வசப்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளாரே. இவைகள் தானே இந்நாட்களில் சம்பவித்து வருகின்றன என்பதனை அறிந்துணர்ந்திடுவோமாக. தேவன் விரும்பும் பரிசுத்தத்திற்கு விரோதமாக தாங்களே விதிமுறைகளை ஊழியர்களாக ஏற்படுத்தி வருகின்றார்கள். பரிசுத்த வாழ்வுக்கு ஆதாரமான மனந்திரும்புதலை எவர்களுமே போதிப்பதில்லையே. தேவன் எதிர்பார்க்கும் மனந்திரும்புதலை ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையிலும் கொண்டதுமில்லை. நடத்திடுவதுமில்லை. சாத்தானைப் போன்று (Half truth) பாதி சத்தியத்தையே தங்கள் சொந்தத்தில் எடுத்து போதிக்கின்றார்கள். (யோவா.8.44) இந்த வாழ்வினைத்தானே தாவீது ஆரம்பத்திலிருந்து ஊசாவின் நியாயத்தீர்ப்பு வரை கொண்டிருந்தான்.
தேவன் விரும்பும் மனந்திரும்புதலின் முறைதான் என்ன? வேதம் என்ன கூறுகின்றது? இப்பொழுதாவது முழுமையாய் அறிந்திடுவோமாக:
1) பூரண பரிசுத்தம் என்று கூறி வெளிப்படையாய் காண்பிக்கப்படும் அடையாளங்களை தவிர்த்து நற்கிரியைகளை தொடங்கினவர் அதை கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திடுவார் பிலி.1:5 என்று ஆண்டவரையே சார்ந்திடும் வாழ்வுக்கு அர்ப்பணித்திட வேண்டும். பாவங்களை செய்திடவே இல்லை என்ற வாழ்வைக் கொண்டிடக் கூடாதமையால், பாவங்கள் யாவற்றையும் உடனுக்குடன் அறிக்கை செய்து விட்டு விட்டு வாழும் வாழ்வை கொண்டிட வேண்டும். ஆரம்பம் தற்காலிகமானது ஆனால் முடிவோ நித்திய வாழ்வுக்கானதே என்று அறிந்திடுவோமாக. ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். பிலி.2:13 விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி.12:1) நாம் எப்பொழுதும் கடந்த நாட்களில் செய்த நம் குறைகளையே காண்கின்றோம். தேவனோ முடித்தவைகளையே காண்கின்றார். அநேகவற்றை நாம் உற்சாகமாய் ஆரம்பித்து இடையிலே தோல்வி கண்டிருக்கலாம் ஆனால் தேவனிடமோ அளவில்லா வல்லமையும் அளவில்லாத நமக்கானவைகளும் உண்டே. வேதாகம கல்லூரியிலே ஒரு மாணவனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கிறிஸ்தவ வாழ்விலே பிரதானமானது எது என்று கேட்கப்பட்டபோது ஒரு மாணவன் கூறினது We can walk away from yesterday. நேற்றைய நாளிலிருந்து விடுபட்டு வாழும் வாழ்க்கையே பிரதானமானது என்றானாம். ஆம் மிகவும் உண்மையானதே. இதுவே இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தின் சுருக்கமான ஷரத்தும் ஆகும். பரி.பவுல் அதுவரையிலும் சீஷர்களை துன்பப்படுத்தி வாழ்ந்தார். இயேசுவால் சந்திக்கப்பட்ட நாளிலிருந்து வேறு வாழ்வை கொண்டாரே. விபசாரத்தில் பிடிபட்ட பெண் இயேசுவை சந்தித்தபின் புதிய வாழ்வை தொடர்ந்தாளே. நாமும் இன்று பாவ அறிக்கை செய்யும் போது, நேற்றைய வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வாழ்ந்திட வேண்டுமே.
2) நாம் நமது பாவங்களை, செய்த துரோகங்களை தேவனிடமும், சகோதரர்களிடமும் அறிக்கை செய்யவேண்டுமே. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1யோவான் 1:9) பொதுவான பாவஅறிக்கை ஜெபம் ஆகாது. அநேக ஊழியர்கள் ஜெபிக்கும் ஜெபம் "அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னியும்” இது ஒருக்காலும் பாவ அறிக்கை ஜெபம் ஆகாது. எங்களிலே பாவங்கள் இருந்தால் மன்னியும் என்று ஜெபிப்பதும் பாவ அறிக்கை ஜெபம் ஆகாது. நாம் செய்த பாவங்களை ஒவ்வொன்றாய் வாயினால் அறிக்கை செய்ய வேண்டுமே. மேலும் யாக்.5:16 “உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு” என்று தானே வாசிக்கின்றோம். ஒவ்வொரு சகோதரரிடமும் குறைகளை அறிக்கை செய்து ஒப்புரவாகாத பட்சம் அவர்களின் ஜெபம் பாவ அறிக்கை ஜெபமாக ஏற்றுக்கொள்ளப்படாதே.
3) கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்து பாருங்கள். எபே.5:10-13 வெளிப்படையாய் தம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை கொண்டவர்களாகவே காணப்படவேண்டும். ஆவிக்குரிய பிரயோஜனமற்ற அந்தகார (இரகசிய) கிரியைகளுக்கு உடன்படக்கூடாது. அவைகளை வெளிப்படையாய் கடிந்து கொள்ள வேண்டும். இது மட்டுமல்ல வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கும் என்பதாகும். பொல்லாங்கு செய்கிறவன் ஒளியை (வெளிப்படையை) பகைக்கிறவனாகின்றான். பொதுவாக எந்த ஊழியக்காரர்களும் போதகர்களும் தங்களுடைய பாவங்களை வெளிப்படையாய் அறிக்கை செய்வதே இல்லை. இன்று நான் சத்தமாய் பேசிவிட்டேன். இன்று எரிச்சல் அடைந்துவிட்டேன், இன்று நான் கோபப்பட்டுவிட்டேன் என்று சபை ஊழியர் ஒருவர் ஜெபித்த ஜெபத்தை இதுவரையிலும் யாரும் கேட்டதில்லையே. பரி. பவுல் உலகமே கேட்க தான் பாவிகளில் பிரதான பாவி என்று தன்னை குறிப்பிடவில்லையா? தன்னை அகாலபிறவி என்றும் தன்னை வெளிப்படையாய் கூறவில்லையா. தன்னைத்தானே வெளிப்படையாய் பாவ அறிக்கை செய்யும் பழக்கமுடையவரே பரிசுத்தவானாவான். “சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு ஒளியினிடத்தில் வருகிறான்." (யோவான் 3:21) என்று தானே வாசிக்கின்றோம்.
4) தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் என்று பரி.பவுல் 11கொரி.5:18,19 கூறியுள்ளார். ஒப்புரவாகுதலின் ஊழியங்கள் மட்டுமல்ல, ஒப்புரவாகுதலின் உபதேசத்தையும் எங்களிடத்தில் ஒப்புக் கொடுத்தார் என்றும் அறிவித்துள்ளாரே. இந்நாட்களில் இந்த உபதேசத்தை ஊழியத்தை யாவரும் மறந்து விட்டார்களே.. களவு செய்யப்பட்டவைகள், திருடப்பட்டவைகள் திரும்ப செலுத்தப்பட வேண்டும் என்று பிசங்கிக்கப் படுவதில்லையே. சகேயு நாலத்தனையாய் செலுத்த முன் வந்தானே. காணிக்கையை செலுத்த வரும் போது உன் சகோதரனுக்கு உன்பேரில் குறை உண்டென்று நினைவு கூருவாயானால் காணிக்கையை வைத்துவிட்டு முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகிவிட்டு பின்பு வந்து காணிக்கையை செலுத்து என்றும் இயேசு தாமே கூறியுள்ளாரே. (மத். 5) ஜெபம் பண்ணும் போது ஒருவர் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால் பிதா தாமே உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி அந்த குறையை அவனுக்கு மன்னியுங்கள். மாற்கு 11:25 என்றும் துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்ப கொடுத்துவிட்டு என்று என்றும் எசே.33:15யில் வாசிக்கின்றோமே. இந்த ஒப்புரவாகுதலின் உபதேசம், ஊழியம் இல்லாத நிலமையில் தேவனுக்கு பிரியமாயிருக்கக்கூடுமோ தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தில் பரிபூரணத்தை அடையக்கூடுமோ? பரி. பவுல் கூட அப்.24:16யில் கூறியிருப்பது என்ன? இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனசாட்சியை உடையவனாயிருக்கிறேன் என்றும் கூறியுள்ளாரே.
சங்.86:9யில் ஆண்டவரே நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாக பணிந்து உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள் என்றல்லவா வாசிக்கின்றோம். உலகின் சகல ஜனங்களும், ஜாதிகளும் தேவனை மகிமைப்படுத்தவே உண்டாக்கப்பட்டுள்ளார்கள். தேவனை மகிமைப்படுத்துதல் என்றால் எப்படி? ஆண்டவருக்காக நல்ல பெரிய காரியங்களை செய்து சாதிப்பதினால் மட்டுமல்ல, நம் பாவங்களை வெளிப்படையாய் அறிக்கை செய்வதின் மூலமாயும் ஆண்டவரை மகிமைபடுத்துகின்றவர்களாயிருக்கின்றோமே. யோசுவா பாவஞ்செய்த ஆகானைப் பார்த்து கூறியது என்ன? (யோசுவா 7:19) மகனே நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து. அவருக்கு முன்பாக அறிக்கை பண்ணி நீ செய்ததை எனக்கு சொல்லு அதை எனக்கு ஒளிக்காதே என்று தானே கூறினார்.
அருமையானவர்களே, நாம் கிறிஸ்துவுக்குள்ளே பரிபூரணராகவேண்டுமானால் இவ்விதமாய் பாவ அறிக்கை செய்து மனந்திரும்பினவர்களாய் காணப்படவேண்டுமே. இதுவே நித்திய ஜீவனுக்கு அடுத்ததானதாகும். இவ்வாழ்க்கையினையே நாம் யாவரும் பற்றிடுவோமாக. ஆண்டவர் தாமே நம்மனைவரையும் பூரணப்படுத்திடுவாராக. ஆமென்.
சகோ. பிலிப்ஜெயசிங்,
நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்.