சத்திய வெளிச்சம் - பெண்கள் பகுதி - ஜூன் மாதம் - 2020

பெண்கள் பகுதி


தேவபக்தியுள்ள  குடும்பம்


     அவன் தேவ பக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான். அப்.10:2


   இன்று கிறிஸ்தவ குடும்பங்களைக் குறித்து சிந்திப்போமானால் புருஷன்தேவக்தியுள்ளவனாக காணப்படும் குடும்பங்கள் மிகவும் குறைவாகத்தான் காணப்படுகின்றன. அது போன்று புருஷனும், வீட்டாரனைவரும் தேவபக்தியுள்ளவனாக, தேவனுக்குப் பயந்தவர்களாக காணப்படுவதும் மிகவும் குறைவு தான். இன்று கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்லுகின்றவர்கள் அல்லது கிறிஸ்துவை ஆராதிக்கின்றவர்கள் பெருகிக் கொண்டே வருகின்றார்கள் என்பதும் நாம் அறிந்த உண்மை . ஆனால் கிறிஸ்துவை ஆராதிக்கின்றவர்களில் அதிகமானவர்களிடம் தேவபக்தி தேவனுக்குப் பயப்படும் பயம் இவைகளிளெல்லாம் வெளி வேஷமாகவே மாறிவருகின்றது. இவர்களின் தேவபக்தி ஆராதனைகளிலும், சபைகளிலும், போதிக்கின்ற போதும், ஆராதனை நடத்துகின்றபோதும், பாடல்களை பாடும் போதும், வேதம் வாசிக்கின்ற போதும், ஜெபிக்கின்ற போதும், மட்டுமே காணப்படுகின்றது. குடும்ப வாழ்க்கையில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படுவதில்லை. சில புருஷர்கள் நினைப்பது என்னுடைய மனைவி தேவபக்தியுள்ளவளாக இருந்தால் போதும் நான் இப்படியே இருந்துவிட்டு போகிறேன் என்பார்கள். சில ஸ்திரீகள் நான் தேவபக்தியுள்ளவள் ஆகையால் நான் பரலோக ராஜ்யம் செல்லுவேன். புருஷன் இப்படியே இருக்கட்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. புருஷனை தேவபக்தியுள்ளவனாக தேவனுக்குப் பயப்படுகின்றவராக ஆதாயப்படுத்துவது ஸ்திரீகளின் கடமையாகும். அதுமட்டுமல்ல புருஷனோடே கூட தான் ஸ்திரீயானவளுக்கு நித்திய ராஜ்யத்தின் கிருபையைப் பெற்றுக் கொள்ள முடியும். (1பேதுரு.3:7) அப்படி இருக்கும் போது நிச்சயமாக புருஷனும் மனைவியும், பிள்ளைகளும் தேவபக்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.


      சில ஸ்திரீகள் புருஷனை விட்டு பிரிந்து வாழ்கின்ற போதும் தங்களை தேவபக்தியுள்ளவர்களாக காட்டிக் கொள்ளுகிறார்கள். புருஷனை விட்டு பிரிந்து வாழ்வதே தேவனுக்கு பிரியமில்லாத காரியம் (செயல்). அப்படியிருக்கும் போது அவர்களிடம் தேவபக்தி, தேவனுக்குப் பயப்படும் பயம் எப்படி காணப்படும் அதுபோன்று தான் மனைவியை தள்ளிவிட்டு வாழ்கின்ற புருஷனிடமும் குடும்பம் என்பது தேவன் இணைத்து அந்த குடும்பத்திலுள்ள அனைவரும் தேவபக்தியுள்ளவர்களாக தேவனுக்குப் பயப்பட வேண்டும் என்பதினையே நாம் சிந்திக்க எடுத்துக் கொண்ட வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது


            தேவபக்தி என்பது நம்பிக்கையும் மற்றும் உயர்ந்த மதிப்பும் வைத்திருப்பதே நாம் ஆராதிக்கின்ற தேவன் பேரில் நாம் நம்பிக்கையும், பற்றும், உயர்ந்த மதிப்பும் வைத்திருப்போமானால்; அவர் அடிசுவடை (பாதையை) நிச்சயமாக பின்பற்றுவோம் அப்படியாக தன் வாழ்க்கையில் பின்பற்றினவன் தான் கொர்நேலியு. அவன் மட்டும் தேவபக்தியுள்ளவனாக காணப்படாமல் தன் வீட்டாரனைவரோடும் அப்படியாக காணப்பட்டான் என்று அறிய முடிகின்றது. இயேசுவை வாழ்க்கையில் எப்படி பின்பற்றுவது என்றால் ஒரு உதாரணம் ஒருவன் தன் நாவை அடக்குவது. அப்படி அடக்காமல் தன் வாழ்க்கையில் காணப்படுவானால் அவன் இயேசுவை தன் வாழ்க்கையில் பின்பற்றாதவனே அப்படிப்பட்டவனிடம் காணப்படும் தேவபக்தி உண்மையானதா? அல்லது பிரயோஜனமானதா? வேதம் கூறுகின்றது உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும் (யாக்.1:26)


          இன்னும் நாம் கெர்நேலியு எப்படிப்பட்டவனாகயிருந்து தான தருமங்களைச் செய்து வந்தான் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகின்றது. கொர்நேலியு தேவ பக்தியுள்ளவனாய் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயப்படுகின்றவர்களாயும் காணப்பட்டு தான தருமங்களையும் அல்லது நன்மைகளை செய்து வந்தான். அந்த தான தருமங்கள் தான் தேவனுடைய சந்நிதியில் நினைப்பூட்டுதலாக சென்று சேர்ந்தது என்பதை நாம் நன்கு அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று அநேகர் நினப்பது தான தருமங்களைச் செய்வதும், அதிகமான காணிக்கைகளைக் கொடுப்பதும் ஊழியர்களை தாங்குவதும் பலவிதத்திலுள்ள நினைப்பூட்டுதல் காணிக்கைகளை கொடுப்பதும் இவைகளெல்லாவற்றினாலும் தேவனை பிரியப்படுத்தலாமென்றும், தேவபக்தியை வெளிகாட்டலாமென்றும், தேவனுடைய சந்நிதியில் நினைப்பூட்டுதலாக காணப்படுமென்றும்; ஆனால் கொர்நேலியுவைப் போன்று காணப்பட்டால் மட்டுமே நம்முடைய தருமங்கள், நன்மைகள் தேவ சந்நிதியில் நினைப்பூட்டுதலாக அல்லது பிரியமானதாக காணப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


    ஜெபம் பண்ணுவதைக் குறித்து நாம் பார்க்கும் போது கொர்நேலியு தேவபக்தியுள்ளவனாக தேவனுக்குப் பயப்படுகிறவனாக காணப்பட்டதினிமித்தம் தான் அவனுடைய ஜெபம் கேட்கப்பட்டது. இன்று அதிகமாக ஸ்திரீகள் தான் எப்பொழுதும் ஜெபம் பண்ணி கொண்டிருப்பார்கள். அவர்களில் எல்லோரும் தேவபக்தியும், தேவனுக்குப் பயப்படுகின்றவர்களும் அல்ல. புருஷர்களில் அதிகமானோர் எப்பொழுதும் ஜெபம் பண்ணிக்கொண்டிருப்பவர்கள் அல்ல. சில புருஷர்கள் சொல்லுவது என் மனைவி எப்பொழுதும் ஜெபித்தால் போதும் நான் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லையென்று. குடும்பம் என்றால் குடும்ப தலைவன் தான் கிறிஸ்துவோடு முழுமையான ஐக்கியம் கொண்டவராக அல்லது தொடர்பு கொண்டவராக இருக்க வேண்டும். அப்படி காணப்படும் போது மனைவி, பிள்ளைகளும் தேவனுக்குப் பயப்படுகின்றவராக தங்கள் செய்கைகளில் வசனத்திற்கு கீழ்ப்படிவார்கள் என்பது உண்மை . வேதாகமம் முழுவதும் வாசிக்கும் போதும் எங்கும்  தேவனோடு உள்ள காரியங்களில் புருஷர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்படுவதை தான் பார்க்க முடிகிறது


           கிறிஸ்துவின் ஐக்கியத்தில் நாம் குடும்பமாக எவ்வாறு வாழ வேண்டுமென்றால்; வேதம் கூறுகிறது நாம் அவபக்தியையம், லௌகிக இச்சைகளையும், வெறுத்து தெளிந்த புத்தியும், நீதியும், தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணி நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும் மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. (தீத்து 2:12,13) அப்படியாக நாம் வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுவோம். அதற்காக தான் நம்மை நற்கிரியைகளால் அலங்கரிக்க வேண்டும். ஸ்திரீகளின் அலங்கரிப்பு குறித்து வேதத்தில் கூறுகிறது; தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்க வேண்டும் (1தீமோத்.2:10) இந்த வசனத்தில் பார்க்கும் போது நற்கிரியைகள் தேவபக்திக்கேற்றதாய் வஸ்திரத்திலும், நாணத்திலும், தெளிந்த புத்தியிலும் காணப்பட வேண்டும் என்பதே. இவைகள் தான் ஒரு ஸ்திரீயின் அலங்கரிப்பாக காணப்பட வேண்டும். இவைகள் தான் நம்மை ஆனந்த பாக்கியத்திற்கு நேராய் வழி நடத்தும் என்பதை இந்நாட்களிலாவது நாம் அறிந்து கொள்ளுவோமாக. அநேகர் நினைப்பது ஆராதனைகளில் சென்று ஆராதித்தால் அல்லது சபைகளில் சென்று ஜெபித்தால் அல்லது இந்த ஊழியக்காரர் எனக்கு ஜெபித்தால் மட்டுமே ஜெபம் கேட்கப்படும் என்று. ஆதலால் இன்று ஆராதனைகளில் சென்று ஜெபிக்க முடியவில்லை. சபைகளில் சென்றுகூடி ஜெபிக்க முடியவில்லையே என்று சிந்திக்கின்றீர்களா? வேதம் கூறுகிறது பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம். ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து, அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவி கொடுப்பார் என்று (யோவான் 9:31) அப்படியாக தான் கொர்நேலியு தன் குடும்பத்தாரனைவரோடும் தேவபக்தியுள்ளவளாய் அவருக்கு சித்தமானதைச் செய்து வந்தான். தேவன் அவன் ஜெபத்தைக் கேட்டார். அதோடு பரிசுத்த ஆவியானவரின் இடைபடுதலும் அவனோடு கூட இருந்தது


           பிரியமானவர்களே, இந்நாட்களில் நாம் குடும்பமாக அவருடைய ஐக்கியத்தில் வாழ்கின்றோமா? சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய தேவபக்தி எப்படிப்பட்டதாக காணப்படுகின்றது? நம்முடைய தருமங்களும் ஜெபங்களும் தேவன் ஏற்றுக்கொள்ளுகின்ற தாக காணப்படுகின்றதா? நம் நினைவுகள் எப்படிபட்டதாக காணப்படுகின்றது? சிந்தித்து நாம் நம்மை சீர்திருத்தி ஆனந்த பாக்கியத்திற்கான எதிர்பார்ப்புகளுடன் காணப்பட தேவன் தாமே துணை புரிவாராக. ஆமென்.


சகோதரி. ஹெலன் ஷீன்,


கேரளா 09946301633