கொரோனா காலத்து விழிப்புணர்வின் தேவ செய்தி ஜூலை 2020

ஆசிரியர் உரை


அருமையான வாசகர்களுக்கு, என் அன்பின் வாழ்த்துக்கள்.


     சத்திய வெளிச்சம் என்ற பத்திரிக்கையை ஆவலோடு எதிர்பார்த்து அதனைப்பெற்று ஆசையாய் வாசித்து வருகின்றவர்கள் அநேகராயிருக்கின்றீர்கள். அதனைப்பற்றிய சில விமர்சனங்களையும் அநேகர் என்னோடு நேரடியாயும் தொலைபேசியிலும் பேசிவருகின்றீர்கள். இதனை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். பத்திரிக்கையில் வருகின்ற எந்த விஷயங்கள் பற்றியும் என்னோடு எப்பொழுதும் பேசிக்கொள்ளலாம். குறைவுகளையும் வேண்டப்படும் சீர்த்திருத்தங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ள எப்பொழுதும் ஆவலாய் இருக்கின்றேன். பத்திரிக்கையின் எந்த பகுதியாவது தங்களுக்கு பிரயோஜனமாயிருந்தது என்று கேள்விப்படுகையில் அதனைவிட நான் அடையும் சந்தோஷம் வேறு எதிலும் எனக்கு இல்லை என்பதுவே உண்மையாயிருக்கிறது. இதனை மாதந்தோறும் எழுதுவதற்காக என்னைத்தானே அதிகமதிகமாய் கிறிஸ்துவுக்குள் ஆயத்தம் செய்து கொண்டு வருகின்றபடியினால் எனக்கும் இப்பத்திரிக்கை மாதந்தோறும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை அளித்து வருகின்றது. நானும் மாதந்தோறும் ஆண்டவருக்குள் வளருகின்றவனாகவும் காணப்படுகின்றேன். தேவன் ஒருவருக்கே கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.


     இந்த கொரோனா அடைபட்ட காலத்திலே, அநேக ஊழியர்கள், தங்கள் தங்கள் வாராந்த செய்திகளை யுடியூப் (youtube) மூலம் உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றார்கள். அவற்றினை உலகமெங்கிலும் உள்ளவர்கள் வீட்டில் இருந்துக் கொண்டே யாவற்றையும் கேட்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது. இவற்றினை கேட்கின்றவர்கள் ஆவிக்குரிய நன்மைகளை அடையப்பெறுகின்றார்களோ, இல்லையோ, ஆனால் நல்ல ஒரு ஆவிக்குரிய பொழுதுபோக்கு ஏற்படுகின்றது. வீணாக சினிமா, சீரியல், அரசியல் இவைகளில் நேரத்தை செலவிடாதபடி, கிறிஸ்தவ பொழுதுபோக்கு சிறப்பாகவே நடைபெற்று வருகின்றது. ஆனால் ஆவிக்குரிய சிந்தையோடு, ஆவிக்குரிய கண்ணோட்டத்தோடு இவற்றினைக் காண்கையில், கேட்கையில் அநேக ஊழியர்களின் ஆவிக்குரிய போலியான தராதரம் வெளிப்படையாய் எளிதில் அறிப்படுகின்றது. இவைகளும் நன்மைக்கே.


    நாகரிகமான இந்நாட்களில், பட்டணங்கள்தோறும், வாலிபர்கள் பெண்கள் விதவிதமான ஆடைகளை அணிந்து சுற்றித்திரிந்து வருவதைக் கண்டு வருகின்றோம். ஆண்களைக் கண்டால் சிறுவர் முதல் பெரியவர் வரை 1/2  பேண்ட் 3/4 பேண்ட் என்று அணிகின்றார்கள். பெண்களும் பலவிதமான பேண்ட்டுகளை அணிகின்றார்கள். அநேக இடங்களில் ஆடையின் சிலப்பகுதிகள் வெட்டப்பட்டு அல்லது கிழிக்கப்பட்டு காணப்படுகின்றன. இதுவே நவீன நாகரிகம் ஆகும். மேல் ஆடையைக் கண்டால், கை நீளமாயும், கை இல்லாமலும் பலவிதங்களில் ஆடைகள் காணப்படுகின்றன. இவற்றினை அதிக மாடல் வடிவங்களில் அணிகின்றவர்கள் அதிகமாய் படித்தவர்களும், அதிகமாய் பணம் ஐசுவரியம் வசதி படைத்தவர்களே உபயோகித்து வருகின்றார்கள். இவ்வகையான ஆடைகளை அணிந்து ஆலயங்களுக்கும் ஒழுங்காய் செல்லுகின்றார்கள். நவீன மொழி நடையில் ஹாய் (Hi) என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ளுகின்றார்கள். போதகர்களையும் (Hi) ஹாய் என்றும் அறிமுகம் செய்து கொள்ளுகின்றார்கள். இதனை நவீன போதகர்கள் அதிகமாய் கண்டுக்கொள்வதுமில்லை, அநேக போதகர்களும் இவ்வகையான மக்களுக்கு இணையாக தாங்களும் குறைந்தவர்கள் அல்ல என்று காண்பிக்கும் விதமாய் தாங்களும் விநோதமானவர்களாய் மேடைகளில் காட்சி அளித்து வருகின்றார்கள். ஐந்து நாட்கள் விசேஷ கூடுகைகள் என்றால் ஐந்து நாட்களிலும் ஐந்து விதமான ஆடைகளையே அணிந்து (நாடக மேடைக்கு வருவது போன்று) வருகின்றார்கள். இவ்வகையினராய் தோன்றும் ஊழியர்களின் வாயிலிருந்து வரும் தேவ செய்திகளும், இவ்வகையான நவீன பாணிகளிலேயே அளிக்கப்பட்டு வருவதையே இந்நாட்களில் எங்கும் காணப்படுகின்றன. இவைகளையே இக்காலத்து எழுப்புதல் என்றும் எல்லா ஊழியர்களும் திருப்தியாய் கொண்டுள்ளார்கள். ஆனால் ஆவிக்குரிய சிந்தையை மட்டுமே கொண்ட ஆவிக்குரியவர்கள் இவற்றினையெல்லாம் கண்டு, கேட்டு, இவற்றினூடே நிறுவியுள்ள ஆவிக்குரிய மாய உலகை அறியமுடிகின்றது. இவற்றினை இக்கொரோனா காலம் உலகுக்கு வெளியாக்கும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.


     பரி. பவுல் ரோமாபுரியாருக்கு எழுதுகையில் (13:14) துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். கிறிஸ்துவை தரித்துக் கொள்வதில் மாம்சத்திற்கு 1% கூட இடமே கிடையாது என்பதே உண்மை . அநேகர் அணியும் ஜூன்ஸ் பேட்டைப் போல, சில அழுக்கு போன்ற கறைகளையும், சில இடங்களில் கிழித்துக் கொண்டும் அணிவதைப் போன்று கிறிஸ்துவை ஒரு சில கறைகளோடும் கீறல்களோடும் அணிந்துக் கொள்ளக்கூடாதே, இடத்துக்கு இடம், நேரத்திற்கு நேரம், மாடலுக்கு மாடலாய் அணியும் ஆடையைப் போன்று கிறிஸ்துவை தரிக்கலாகாதே. கிறிஸ்துவை அறிவிக்கவும் கூடாதே . இச்சைக்கு உடலைப் பேணுவிதமாய், இயேசு கிறிஸ்துவை கொண்டிடக் கூடாதே. பரி.பவுல் கூறுகின்ற இயேசு கிறிஸ்து தலையிலிருந்து பாதம் வரை (Head to foot) தரிப்பித்துக் கொள்ளும் கிறிஸ்து மட்டுமே ஆவர். வாரத்தின் சில நாட்களில் மட்டுமல்ல ஞாயிறு மட்டுமல்ல எல்லா நாட்களிலும் எல்லா இடங்களிலும் இயேசு கிறிஸ்துவை 100% தரித்தவர்களாய் காணப்பட வேண்டுமே. இடத்துக்கு இடம் மாற்றி கிறிஸ்துவை காண்பிக்கக் கூடாதே.


   ஆடைகளே நமக்காக உருவாக்கப்பட்டனவே தவிர நாம் ஆடைகளுக்காக உருவாக்கப்படவில்லையே. இதுபோன்றே இயேசு கிறிஸ்துவை முழுமையாய் நாம் தரித்துக் கொள்ள வேண்டுமே தவிர நமக்கு ஏற்றவிதமாய் இயேசு கிறிஸ்துவை மாற்றியமைத்து தரிப்பிக்கலாகாதே. மாற்றியமைப்போமானால் இதுவே தேவ தூஷணமும் ஆகும் என்பதை அறிந்திடுவோமாக. சர்வ அதிகாரத்தையும் சர்வலோகத்தையும் படைத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த வைராக்கியத்தை இடத்துக்கு இடம், வைபவத்திற்கு வைபவம் மாற்றி அமைத்திடக் கூடுமோ? அங்ஙனம் மாற்றியமைக்க நவீன கிறிஸ்தவர்களுக்கு சுதந்தரம் அளிக்கப்பட்டுள்ளதோ? தேவாதி தேவனின் பரிசுத்த வாழ்வையே மாற்றியமைத்து காண்பிக்கக் கூடுமோ. சாத்தான்தான் இடத்திற்கு இடம் இயேசு கிறிஸ்துவை மாற்றிக் காண்பிக்க முற்பட்டான், அவற்றிலே சாத்தானை இயேசு கிறிஸ்து ஜெயித்து காண்பித்தாரே. இயேசு கிறிஸ்து பசியாயிருக்கையில் கற்களை அப்பங்களாக மாற்றி அற்புதம் செய்ய வேண்டினான். மலை உச்சிக்கு அழைத்துக் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் காண்பித்து ஏன் இவற்றிற்காக சிலுவைக்கு செல்ல வேண்டும் இஷ்டமானபடிக்கு இதன் மகிமையையினையும் தருகிறேன் என்று கூறினானே. தேவாலயத்து உப்பரிகைக்கு கொண்டு சென்று வேதவாக்குப்படிக்கு தூதர்கள் கையேந்துவார்கள் என்று கூறி கீழே குதிக்க கேட்டுக் கொண்டானே. இடத்துக்கு இடம் இயேசு கிறிஸ்துவை சாத்தானால் மாற்றிவிட முடியவில்லையே. ஆனால் இன்று இயேசு கிறிஸ்துவை தேவ ஊழியர்கள் இடத்திற்கு இடம் மாற்றிவிடுகின்றார்களே. இது எங்ஙனம் ஆகின்றது. இவர்கள் எல்லாரும் மாற்றி காண்பிப்பது இயேசு கிறிஸ்துவின் சாயலினைக் கொண்ட சாத்தான் மாத்திரமே என்பதே உண்மை . நவநாகரிகமாக இன்று ஆடம்பர மக்கள் ஒருவரையொருவர் காணும் போது, Hi ஹை என்கின்றதைப் போன்றே இன்று அநேக தேவ ஊழியர்கள் இயேசுகிறிஸ்துவின் சாயலைக் கொண்ட சாத்தானையே Hi ஹை என்றும் தலையாகிய கிறிஸ்துவின் பெயரில் கொண்ட போலி சபையினையும் காணும் போது ஹை சர்ச் ஹை சபையே என்றும் அழைப்பது வழக்கமாகி வருகிறது. வேதத்திலே எதிலாவது யாரையாவது, யாராவது Hi ஹை என்று அழைத்ததுண்டோ? சீஷர்களில் யாராவது ஹை என்று அழைத்ததுண்டா? இதனையே youtube-யில் அதிகமாக காண்கின்றோமே. இதனைக் கண்டாவது போலியான சபைகளையும் கிறிஸ்துவை போலியாக தரிப்பித்துக் கொண்ட சபைகளின் போதகர்களையும் கண்டிடக் கூடுமே. மறு ஜென்மம் அல்லது மறுபடியும் பிறத்தல் (Born Again) என்பது சமூக வழி முறை மாற்றம் என்பதில் (Cultural Change) அல்ல, இந்த பூலோக சமூக வழி முறை மாற்றம் தேவனுடைய ஆயிர வருட கால அரசாட்சிக்கு பின்பாக புதிய வானம் புதிய பூமியினை ஏற்படுத்தி அதிலே பரிசுத்தவான்கள் குடியேற்றப்படும் போது மாத்திரமே நடைபெறும். (வெளி: 22:1). இன்றைய நாட்களில் காணப்படும் சமூக நடை முறை மாற்றம் தேவனால் அனுமதிக்கப் பட்டதல்ல. இது 100 % மாம்சத்தில் உருவாகியதே. எக்காலத்திலும் லூக்: 24:47 யின் படிக்கு எங்கும்  மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும், எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.. இவையல்லாமல் எதுவானாலும் அது சாத்தானை மாத்திரமே மகிமைப் படுத்துகின்றதாக ஆகும் என எச்சரிக்கை செய்யப்படுகின்றோம்.


     If Jesus Christ is not the Lord of all, then He is not the Lord at all. எல்லாவற்றிலும் கிறிஸ்துவை பரிசுத்தராய் காண்பிக்கக்கூடாவிடில், அங்கே ஆராதிக்கப்படும் இயேசு கிறிஸ்து தேவனாக அங்கு இல்லை என்பதே உண்மை   அவரை எவராலும் மாற்றிக் கொள்ளக் கூடாது. மாற்றிடக் கூடுமானால் அவர் தேவனே அல்ல என்பதே உண்மை


. இக்கொரோனா காலக்கட்டத்திலே அநேகருக்குள்ளே ஒரு விதமான தொற்றுநோயின் பயம் ஏற்பட்டுள்ளது. அநேக காரியங்களில் கோபம் ஏவுகின்றது. மருத்துவர்கள் பேரில் அதிகாரிகள் பேரில் நம்பிக்கை குறைந்து காணப்படுகின்றது. அநேகருக்குள்ளே விசுவாசம் நம்பிக்கை குறைவுபட தொடங்கியுள்ளது. மக்கள் அநேகர் சுயநலபிரியராய் மாறத் தொடங்கியுள்ளனர். சிலர் அறிவீனராய் நடக்கின்றார்கள், பொதுவாக ஜெபம், ஐக்கியம் கூடுகை ஆராதனை குறைவுபட்டுள்ளது. இவற்றினூடே இக்காலத்தினை மக்களின் பெலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பும் அநேக போலி ஊழியர்கள் கிறிஸ்துவை முழுமையாய் தரித்துக் கொள்ளாதவர்களாய் மாய்மாலமான பரவசமூட்டும் பக்தியை உருவாக்க முற்படுகின்றார்கள். (Hypochondriac) விதவிதமான அநேக கூடுகைகளை நடத்த முற்படுகின்றார்கள். ஜனங்களை கவர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையோடு தீவிரித்து செயல்படுகின்றவர்களாய் காணப்படுகின்றார்கள். இவையெல்லாமே தேவனால் அவருடைய சித்தத்தின்படி உருவாக்கப் படுகின் றவைகளே அல்ல என்பதை அறிந்திடுவோமாக. பாவங்களை கண்டித்து போதிக்காத சபைகளே போலியான சபைகள் ஆகும். தேவன் விரும்பும் அவருடைய நிகரற்ற பரிசுத்த வாழ்வை அறிவிக்காத சபைகளே போலியான சபைகளாகும். இவையாவுமே சாத்தானாலே கொரோனாவோடு கூட உருவாக்கப்படுகின்றவைகளே என்பதை ஆவிக்குரியவர்களாய் அறிந்திடுவோமாக. இக்காலத்து எழுச்சி இது கொரோனா காலத்து நவீன எழுப்புதல் மட்டுமே. இது தற்காலிகமானதே.


     கொரோனா காலத்து ஊழியர்களெல்லாருமே யாவற்றிலும் மக்களுக்குள்ளே மேன்மை பாராட்டுதலையே போதித்து வருகின்றார்கள். நல்ல காலம் வரும், நல்ல நேரம் வரும், சீக்கிரம் துன்பம் மாறும், மகிழ்ச்சி சந்தோஷம் நிறைவாய் வரும் என்று யாவரையும் மேன்மைபடுத்தியே ஜெபிக்கின்றார்கள். பிரசங்கிக்கின்றார்கள். வெளிப்படையாய் காணும் போது இவற்றிலே என்ன தவறு? ஏன் இவைகளை கூறக் கூடாது என போலியாய் வாழ விரும்புகிறவர்கள் கேட்கலாம்?


      ஒரு கிறிஸ்தவ தியானக் கூடுகையின் நிறைவு நாளின் போது ஒரு நண்பன், இதர நண்பர்களை தான் அளிக்க விரும்பும் ஒரு விருந்துக்கு வரும்படி ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே முதலாவதாக ஒரு ஆரம்ப ஜெபத்திற்கு பின்பாக ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. அக்கூடுகையை நடத்தினவர் யாவரையும் நோக்கி விருந்து அளிக்கின்றரின் அன்பை பாராட்டும் நோக்கோடு ஒரு கேள்வியை கேட்டார். எது மேன்மையான அன்பு? என்று கேட்டார். அனைவருமே கூறியது பிரதிபலன் எதிர்பாராது காண்பிக்கும் அன்பே மேன்மையானது என்றனர். ஏனெனில் விருந்தை அளிக்கும் நண்பர் பிரதிபலன் எதிர்பாராது கொடுக்கும் விருந்தாயிருந்ததினால் யாவரும் அன்னாரை மேன்மை பாராட்டுகிற விதமாகவே கூறினார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் மாத்திரம் எதையும் கூறவில்லை. அக்கூடுகையின் தலைவர் அவனிடம் ஏதாவது கூறு என்று வற்புறுத்தினார். இறுதியாக தன் பதிலாக அந்தநபர் கூறியது. மேன்மையான அன்பின் செயல் என்பது சத்தியமே, அதாவது பாவத்தைப் பற்றிய சத்தியம். பாவத்தின் பின் விளைவினை சத்தியமாக அறிவிப்பதே மேன்மையான அன்பு என்று கூறினான். பாவம் ஒருவனை நித்திய நரகாக்கினைக்கு கொண்டு செல்லும் இந்த சத்தியத்தை கூறி ஒருவனை நல்வழிப்படுத்துவதே அன்னார் பேரில் கொள்ளும் மேன்மையான அன்பு. இது நிரந்தர நல் வாழ்வை அளிக்கின்றது. ஆனால் இந்த விருந்து நிரந்தரமான அன்பு அல்ல என்றானாம். இதனைக் கேட்ட யாவரும் அவன் பேரில் முறுமுறுப்பை காண்பித்தார்களாம். ஆனால் அத்தலைவர் இதுவே சத்தியம். இதுவே மேன்மையான அன்பு என்று ஜெபித்தாராம். (யோவான் 8:32) சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.


     பரி. பவுல் 1கொரி.5:6யில் கூறியது என்ன "நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல, கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?” ஒரு சிறிய பாவம், ஒரு சிறிய வேஷம், ஒரு சிறிய நடிப்பு முழு சபையையே புளிப்பாக்கி அழித்து விடுமே. மேன்மைபாராட்டுதல் நல்லது அல்லவே அல்ல என்பதே உண்மை. உணர்த்தப்படுகின்ற அறிவிக்கப்படுகின்ற இந்த புளிப்பாகிய சிறு பாவத்தை ஒத்துக்கொள்வதே உண்மை அன்பு. யார் இதனை ஏற்றுக்கொள்வர்? ஒருவரும் இல்லையே. இக்கொரோனா காலத்தில் பிரசங்கிக்கின்றவர்கள் நித்திய ஜீவனுக்கு அடுத்ததான செய்திகளை அளித்திடாமல் மக்களை எவ்வகையிலும் நோகப்பண்ணிவிடாமல் மாறாக மேன்மைக்கு அடுத்ததான ஆறுதலின் செய்திகளையும், ஆராதனையினையும், ஜெபங்களை மட்டுமே எங்கும் 24 மணி நேரமும் எல்லா சேனல்களிலும் எல்லா சபைகளிலுமிருந்து கேட்கப்படுகின்றன. கிறிஸ்துவை முழுமையாய் தரித்துக் கொள்ள விரும்பாத போதகர்களே நாடக மேடைகளில் வலம் வருகின்றார்கள். பாரம்பரிய பாடல்களும் கேட்கப்படுகின்றன. இவைகள் யாவுமே போலியான மேன்மை பாராட்டுதல் மட்டுமே ஆகும்


       கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் (கொரோனா காலத்திலும்) நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார். (சங் :1) கர்த்தர் தாமே வாசகர்கள் யாவரையும் ஆவிக்குரிய சிந்தையை மாத்திரமே கொண்டவர்களாக மாற்றி நித்திய அன்பு கொண்டவர்களாக சகலவற்றிலும் ஆசீர்வதித்திடுவாராக. ஆமென்.


சகோ. பிலிப்ஜெயசிங்,


நாசரேத் ஜெப ஐக்கியம்,


நாசரேத். தூத்துக்குடி மாவட்டம்.