நாசரேத் ஜெப ஐக்கியம் 09/05/2020 ஆம் நாள் சனிக்கிழமை உபவாச ஜெப கூடுகையின் போது அளிக்கப்பட்ட தேவ செய்தி

நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல் தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படு கிறவைகளானதால், ஜென்ம சுபாவமான மனுஷனோ அவைகளை அறியமாட்டான். | கொரி.2:12-14.


THOUGHT FOR SPIRITUAL UNDERSTANDING


இன்று உலகிலே சர்வசாதாரணமாக காணப்படும் ஊழியர்கள், போதகர்கள் பெரும்பாலோர் தேவனுடைய வார்த்தைகளை அதன் ஆவிக்குரிய உட்க்கருத்துக்களோடு அறிந்திடாததினால், அவர்கள் தேவனைப் பற்றிய விபரங்களையும், அவருடைய ஆசீர்வாதமான வார்த்தைகளையும் அவருடைய அற்புதங்களையும் மட்டுமே உருக உருக பேசுகின்றவர்களாயிருக்கின்றார்கள்.


ஆனால் கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். சங்கீதம் 25:14.


(They knew facts but they had no excitement for the scriptures or for the Lord;


The key for the understanding the Bible is not education but obedience)


வேதாகம வார்த்தைகளைப் பற்றி அறிந்திடுவது கற்பதினால் அல்ல, வேதாகம வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதினாலேயே


“உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்கு கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்கு கிருபை கிடைப்பதற்கும் உம்முடைய வழியை எனக்கு அறிவியும்." யாத்.33:13 இதுவே 90 வயதான மோசேயின் ஜெபம்.


You can know about God, or you can know God


To know about God is to know His works


To know God intimately is to know His ways


தாவீதின் ஜெபம்


கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும். உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். சங்கீதம் 25:4


Moses asks to know God intimately


But all Israelits knew the works of God but - not the ways of God


அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை (அற்புதங்களை) இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். சங்கீதம் 103:7


இந்த (Lockdown) அடைக்கப்பட்ட நாட்களிலும் சனிக்கிழமைதோறும் நாசரேத் ஜெப ஐக்கியத்தில் நடைபெற்று வரும் உபவாச ஜெப வேளையின் போது விசேஷித்த தேவ செய்திகள் (Video Conference) காணொளி மூலம் அளிக்கப்பட்டு வருகின்றது. ஆவலுள்ள சகோதரர்கள் பலர் தங்களை இணைத்துக்கொண்டு பங்கேற்று ஆவிக்குரிய நன்மைகளை அடைந்து வருகின்றார்கள்.


09.05.2020ஆம் நாளன்று அளிக்கப்பட்ட தேவசெய்தியின் சுருக்கம் இப்பொழுது யாவருக்கும் அறிவிக்கப்படுகின்றது


உங்கள் மனம் புதிதாகிறதினாலே மருரூபமாகுங்கள்   ரோமர் 12:2


     ஒருவன் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும் போது மனந்திரும்பும் போது புது சிருஷ்டியாக மாறுகின்றார். பழையவைகள் அவரில் ஒழிந்து போய்விடுகின்றன. இது ஒருவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பமே. பரி.பேதுரு கூறுகின்றார் அவன் வளரும்படி புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்கின்றான். (1 பேதுரு 2:3) நல்ல நிலத்தில் விழுந்த விதை ஓங்கி வளருகிற பயிராகி பலன் தந்தது என்றும் இயேசு கூறியதை அறிகின்றோம். (மாற்கு 4:8) பரி. பவுல் கூறுகின்றார் அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாயிருக்க வேண்டும் என்றும் (எபேசியர் 4:15) யில் கூறியுள்ளார். ஆகையினால் ஒருவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை என்றும் கிறிஸ்துவுக்குள் வளர்கின்றதாகும் போது அது புது புது கனிகளைத் கொடுக்கிற கொடியாக ஆண்டவரோடு ஒட்டப்பட்டதாகவே காணப்படும். இன்னும் கூட வளருகின்றவர்களாகும்படிக்கு பரி.பவுல் கூறுகின்றார் உங்கள் மனம் புதிதாகிறதினால் மறுரூபமாகுங்கள் என்றும் அறை கூவல் விடுக்கின்றார்


        . இயேசுகிறிஸ்து இப்பூமியிலே அநேக அற்புதங்ளைச் செய்து வந்தார். அவ்வமயம் திரளான ஜனங்கள் அவரை சூழ நின்றார்கள். எருசலேமுக்கு பவனி போகும் போதும் திரளான கூட்டத்தார் ஓசன்னா என்று பாடி அவரைப் பின்சென்றார்கள். இந்த கூட்டம் அற்புதங்களுக்காக பின் செல்லும் கூட்டமாகும். ஆனால் இயேசு கிறிஸ்து தாமே தம்மோடு எப்பொழுதுமே இருக்கத்தக்கதாக ஒரு கூட்டத்தினரை ஏற்படுத்தி அவர்களை தம் சீஷர்கள் என்று அழைத்தார். அவர்களே இயேசுகிறிஸ்துவின் சீஷர்களின் கூட்டம். இன்னும் கூட ஆண்டவரோடு நெருக்கமாக ஒரு ஐக்கியத்தினை ஆண்டவர் தாமே ஏற்படுத்திக் கொண்டார். இவர்களே பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் ஆவர். இவ்விதமாகவே இன்றைய கிறிஸ்தவ உலகிலே மூன்று வகையான கூட்டத்தினர்கள் உள்ளனர். பெரிய கூட்டத்தார் அற்புதங்களுக்காக மாதாந்தர வாக்குத்தத்தங்களுக்காக குடும்ப ஆசீர்வாதங்களுக்காக, வியாபார விருத்திக்காக கூடும் கூட்டத்தார். இவர்களிடையே காணப்படும் அற்புதங்களெல்லாமே புனிதமானவைகளே. அவைகளை நேரில் கண்ட அப்பெருங்கூட்டத்தினரே அதற்கு சாட்சிகளாகவும் இருக்கின்றார்கள். ஆகவே அற்புதங்களை பொய்யானவைகள் என்று எங்கும் நிரூபிக்க கூடாதவைகளே ஆகும். இதற்கு அடுத்ததாக ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்ட கூட்டத்தார். இவர்களே பலவிதமான ஊழியங்களைச் செய்து வருபவர்கள், விசுவாசிகள், ஊழியக்காரர்கள், போதகர்கள் ஆவர். இன்னும் அடுத்தபடியாக ஆண்டவரோடு நெருக்கமாக கூடிக்கொண்டவர்கள். வேதத்திலே பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோராவர் இவர்களே ஆண்டவரோடு கூட மறுரூபமாகும் அனுபவம் கொள்ளும் கூட்டத்தார்


  .  அருமையான வாசகர்களே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அற்புதங்களையே நாடி, தீர்க்கத்தரிசனங்களையே நாடி, வாக்குத்தத்தத்தையே நாடி திரள் திரளாய் பெருங்கூட்டமாய் மாதத்தின் சில நாட்களை மட்டுமே சிறப்பாக கொண்டு கூடும் கூட்டத்தினராய் இருக்கின்றோமா? இவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சரியாய் அறிய விருப்பமற்றவர்களாவர். இவர்கள் தங்களது எல்லா தேவைகளுக்காகவும் வேண்டுதல்களுக்காகவும் உலக மனிதர்களை, ஊழியர்களை, போதகர்களை மட்டுமே நாடுவதே வழக்கமாயிருக்கின்றார்கள். இவர்களே பெரிய கூட்டத்தினராய் காணப்பட்டு வருகின்றார்கள். இவர்கள் விசாலமான பாதையிலே நடக்கின்ற கூட்டத்தினரே ஆவர். இவர்கள் இடுக்கமான வழியாய் நித்திய ஜீவனுக்குப் போகும் பாதையை அறியார்கள்.


     இரண்டாவது கூட்டத்தார் ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்டு பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்களாவர். இவர்களையே ஆண்டவர் தம் சீஷர்கள் என்று அழைக்கின்றார். இவர்கள் தங்கள் வாழ்க்கையை தேவனுக்கென்று அர்ப்பணித்தவர்களாவர். இவர்களின் கூட்டத்தில் நாம் காணப்படுகின்றோமா? இது ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பமே. ஆரம்பத்தில் நாம் தேவனுடைய சீடர்களைப் போன்றே நம் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றோம். (மத்.28:19) இதிலே இவர்கள் சிறு சிறு ஊழியங்களை செய்து கொண்டு அல்லது ஒரு சபையை எழுப்பி அவற்றிலே திருப்தி பட்டுக் கொண்டு தங்களுக்கு தாங்களே முடிவு செய்து ஆண்டவருக்காக பெரிய சாதனைகளை செய்து கொண்டிருப்பவர்களாக, ஆவிக்குரிய பெருமைகளில் நிலை கொண்டு விடுகின்றார்கள். இது ஆவிக்குரிய முதிர்ச்சியான வாழ்வாகவே ஆகாது. இவர்களைப் பார்த்து தான் பரி.பவுல் கூறுகின்றார் இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும் (Goodness) பிரியமும் (pleasing) பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று (absolute surrender to God's will) பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் என்று ரோமர் 12:2 யில் கூறுகின்றார்.


      இந்த மூன்றாவது வகையினராக பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய 3 சீஷர்கள் மாத்திரமே 12 சீஷர்களுள் பிரித்தெடுக்கப்பட்டவர்களாக ஆண்டவரோடே என்றும் காணப்பட்டுள்ளார்கள். இவர்களைப் போன்றே நாமும் ஆண்டவரோடு நெருக்கங்கொண்டுள்ள உள்ள வட்டத்தினரைப் போன்று வாழ்ந்திட நம் வாழ்க்கையை மாற்றியமைத்திடுவோமாக. இவர்களே நிருபங்களை எழுதுகின்றவர்களாகின்றனர். நாமும் நிருபங்களாகிவிட வேண்டுமே (11கொரி.3:3) வேதத்திலே இந்த 3 நபர்கள் கூறினதாக அவர்களின் பெயர்களோடு அநேக காரியங்களை வாசித்து அறிகின்றோம். மற்ற 9 பேர்கள் கூறியவைகள் யாவுமே அவர்களின் பெயரில்லாமல் சீஷர்கள் கூறினார்கள். சீஷர்கள் செய்தார்கள் என்று தானே வாசிக்கின்றோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய முக்கியமான வேலைகளுக்காக இந்த மூன்று பேர்களை மாத்திரமே தனித்து பிரித்தெடுத்து செயல்படுத்தினதை பல இடங்களில் வாசிக்கின்றோம்


        . ஒருமுறை ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு வீட்டிற்கு வருகையில் அவருடைய ஒரே குமாரத்தி மரித்து கிடக்கும் போது ஆண்டவர் தம் 9 சீடர்களையும் மற்றும் கூடினவர்களையும் வெளியேற்றிவிட்டு, யோவான், பேதுரு, யாக்கோபு ஆகிய மூவரையும் மட்டும் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு சென்று மரித்த பிள்ளையின் கையை பிடித்து பிள்ளையே எழுந்திரு என்று அவளை உயிரடையச் செய்தாரே.


     ஆண்டவராகிய இயேசு சிலுவைக்கு போகுமுன், தன்னிலே அதிகமாய் வியாகுலப்பட்டு கெத்சமனே தோட்டத்திற்கு ஜெபிக்கச் சென்றபோது, இந்த மூன்று சீஷர்களை மட்டுமே அழைத்து ஜெபிக்கச் சென்றார்.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்பூமியிலே தம் ஊழியங்களை நிறைவேற்றி முடிக்கின்ற போது புதிய ஏற்பாட்டின் யுகத்தை ஆரம்பிக்கச் செய்யும் வகைக்காய் இந்த மூன்று சீஷர்களையும் அழைத்து உயர்ந்த மலையின் மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டு போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார் என்றும் மாற்கு 9:2யில் வாசிக்கின்றோம். இந்த விசேஷமான அனுபவத்தை ஆண்டவர் திரளான கூட்டத்தார் முன்பில் செயல்படுத்தவில்லை. தம் சீஷர்கள் யாவரையும் ஒட்டுமொத்தமாயும் அழைத்து சென்று இந்த அனுபவத்தை கற்பிக்கவில்லை. இந்த மறுரூப அனுபவத்திற்கு இந்த 3 சீஷர்கள் மாத்திரமே நேரடியாக கண்ட சாட்சியினராவர். ஆனால் அற்புதங்களை மட்டுமே திரளான கூட்டத்தினர் காணும்படியாக செய்கின்றார். இந்த மேலான அனுபவத்தை மற்ற சீஷர்களுக்கும் கற்றுக் கொடுக்க விரும்பவில்லையென்றும் அறிகின்றோம். ஆதலால் இந்த மேலான அனுபவத்தை திரளான கூட்டத்தினரோ, 9 சீஷர்களோ எளிதில் உண்மையென்று அறிந்திட முடியாதே. இதனை ஆண்டவர் அவசியமானதாகவும் கருதிடாததினால் இதனை பிறர்க்கு அறிவிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளார். இந்த மறுரூப அனுபவத்தை யோவான் சுவிசேஷம் நீங்கலாக மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் வாசிக்கின்றோம். இந்த அனுபவத்தை உண்மையாய் தங்கள் வாழ்வில் கொண்டிட வேண்டும் என்று தாகமாயிருக்கின்ற ஆவிக்குரியவர்கள் மாத்திரமே இதனை அடைகின்றார்கள் என்று அறிந்திடுவோமாக


  . இந்த மறுரூப அனுபவத்தை பழைய ஏற்பாட்டிலும் அநேக இடங்களிலும் வாசிக்கின்றோம். பழைய ஏற்பாட்டின் அனுபவத்திற்கும் புதிய ஏற்பாட்டின் அனுபவத்திற்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், பழைய ஏற்பாட்டின் காலத்திலே எவருமே பிதாவாகிய தேவனை முகமுகமாய் தரிசித்ததில்லை. ஆனால் இந்த மறுரூபமலையிலே, இந்த 3 சீஷர்களும் பிதாவாகிய தேவனை இயேசு கிறிஸ்துவிலே முகமுகமாய் தரிசித்தார்கள். இவர்களோடு இதுவரையிலும் பிதாவை கண்டிராத எலியாவும், மோசேயும் பிதாவாகிய தேவனை இயேசு கிறிஸ்துவிலே முகமுகமாய் முதல் முறையாக கண்டதோடு முகமுகமாய் அவர்களோடு சம்பாஷிக்கவும் செய்தார்கள். ஆண்டவரின் முகம் சூரியனப் போல பிரகாசித்தது அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்றே


       யாத். 33:18 யிலே மோசே ஆண்டவரிடம் தனக்கு கிருபை உண்டாயிருக்குமானால் உம்முடைய மகிமையையாவது எனக்கு காண்பித்தருளும் என்று விண்ணப்பிக்கையில் அவனை கன்மலையின் வெடிப்பிலே வைத்து தன் முகம் காணப்படாது தன் பின்பக்கத்தை மட்டுமே காண்பாய் என்று தன்னை வெளிப்படுத்தினார். யாத்.34:29 யில் மோசே 40 நாட்கள் உபவாசித்து ஆண்டவருக்காக மலையின் உச்சியிலே காத்திருக்கையில் கூட அவர் தம் முகத்தை காட்டவில்லை. ஆனால் அவருடைய பிரசன்னம் மகிமையாய் எங்கும் காணப்பட்டதினால் மோசேயின் முகம் அவனை அறியாமலே பிரகாசம் அடைந்தது என்றும் வாசிக்கின்றோம்.


        எலியா, ஆகாப் யேசபேலுக்கு பயந்து தன் பிராணனை காக்க ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து தான் சாகவேண்டும் என்று வேண்டிய போது, தேவன் அவனுக்கு தூதனைக் கொண்டு போஜனம் கொடுத்த 40 நாட்கள் இரவு பகல் ஒரேப் என்னும் தேவனுடைய பர்வதம் வரைக்கும் நடக்கச் செய்தார் அவன் வந்து அங்கே ஒரு கெபிக்குள் தங்கினான். தேவன் அவனை மறுபடியும் அழைத்து அவனுக்கான சில பொறுப்புகளை கொடுக்க கர்த்தருக்கு முன்பாக பர்வதத்தில் நில் என்றார். அங்கே கர்த்தர் கடந்து வந்தார். கன்மலைகளை உடைக்கத்தக்கதான பலத்த பெருங்காற்று உண்டானது. அதிலே கர்த்தர் இருக்கவில்லை. பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்றுஅதிலும் கர்த்தர் இல்லை. பின்பு அக்கினி உண்டாயிற்று அதிலும் கர்த்தர் இல்லைஇவையெல்லாவற்றிற்கும் பின்பு மெல்லிய சத்தம் உண்டாயிற்று. அதுவே கர்த்தரின் சத்தம்ஆனால் எலியா தேவனைக் காண முடியவில்லையே.


        ஆனால் மறுரூபமலையிலே இவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவிலே தேவனைக் கண்டார்கள். நியாயப்பிரமாணங்களை மக்களுக்கு அளித்த மோசே அவற்றினை இயேசு கிறிஸ்துவிலே நிறைவு செய்தார். தீர்க்கத்தரிசிகளின் முதன்மையான எலியா தீர்க்கத்தரிசனங்களுக்கும் இயேசு கிறிஸ்துவிலே ஓர் நிறைவினை ஏற்படுத்தினார். புதிய ஏற்பாட்டின் தொடக்கமாக இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைக் குறித்தே மூவரும் அங்கே பேசலானார்கள். 3 சீஷர்கள் சாட்சியாக அதனைக் கண்டார்கள். எலியா, மோசே இவ்விருவருமே இப்பூமியிலே வாழ்ந்திருந்தாலும் மற்ற மக்களைப் போன்று பூமியில் மரித்து அடக்கம் செய்யப்படவில்லையே. மோசேயின் சடலத்தை தேவனே அடக்கம் செய்தார். எலியா மரிக்காமல் அக்னி இரத்தில் ஏறி பரலோகம் சென்றார். இவைகளின் இரண்டு அனுபவங்களுமே தேவனுடைய இரண்டாம் வருகையின் போது நடைபெறயிருக்கின்ற மறுரூப சம்பவங்களையே குறிப்பிடுகின்றதுஇதனை பரி. பேதுரு கூறுகையில் நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளை பின்பற்றுகிறவர்களாக அல்ல ஆண்டவருடைய மகத்துவத்தை கண்ணாரக் கண்டவர்களாகவே கிறிஸ்துவின் வல்லமையும் (இரண்டாம்) வருகையையும் அறிவிக்கின்றவராய் 11பேதுரு 1:16,17,18 யில் சாட்சியாய் அறிவித்துள்ளாரே. அவர்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கையில் உயரே வானத்திலிருந்து உன்னதமான மகிமையிலிருந்து அறிவிக்கப்பட்ட செய்தியாவது இவர் (இயேசு கிறிஸ்து) என்னுடைய நேசக்குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் இவருக்குச் செவி கொடுங்கள் என்பதே. அதோடு மட்டுமல்ல வசனம் 19யில் கூறுகின்றார் அதிக உறுதியான தீர்க்கத்தரிசன வசனமும் நமக்கு உண்டு. பொழுது விடிந்து விடிவெளி உதிக்குமளவும் இவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும் என்றும் அறிவித்துள்ளாரே. அதாவது தீர்க்கத்தரிசனங்களும், நியாயப்பிரமாணமும் நிறைவு பெற்று விட்டது. இனி இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளும் வேதத்தின் வசனங்கள் மாத்திரமே தீர்க்கத்தரிசனங்களாகும். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு மட்டுமே செவிகொடுங்கள் என்று இந்த மறுரூப அனுபவம் நமக்கு போதிக்கின்றது.


       இச்செய்தியினை மேலே கூறப்பட்ட 3வது கூட்டத்தினர் மாத்திரமே ஏற்றுள்ளனர். மற்ற இரு கூட்டத்தார்களும் வசனங்களை கேட்காமல் தீர்க்கத்தரிசிகளை நாடி ஓடுகின்றார்கள். இரண்டாவது கூட்டத்தினரிலுள்ள பல ஊழியங்களில் தங்களை தாங்களே தீர்க்கத்தரிசிகள் என்று அறிவித்துக் கொள்கின்றார்கள். தீர்க்கத்தரிசன வரம் பெற்றவர் என்று பலரை மேடையில் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்கள். ஆண்டவர் எவரையுமே தீர்க்கத்தரிசிகளாக ஏற்படுத்துவது இல்லை. வருடா வருடம் தீர்க்கத்தரிசனம் என்று தங்களையே தீர்க்கத்தரிசிகளாக ஏற்படுத்திக்கொண்டு தங்களுக்குள் யார் பெரியவர் என்று தங்களுக்குள்ளே போட்டிப் போட்டுக்கொண்டு அறிவித்தும் வருகின்றார்கள். திரளான கூட்டத்தாரும் முழுமையாய் அவர்களையும் தேவர்களாக நம்பியும் வருகின்றார்கள். இவர்கள் யாவரும் மடமையர்களே இவர்களெல்லாருமே மறுரூப அனுபவத்திற்கு எதிரானவர்களே. 3வது கூட்டத்தினரோடு சேர்க்கப்படாத வேறு இரு சீடர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு எம்மாவுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தாமே அவர்களுக்கு மறுரூபமாய் தரிசனமாகிய போது அவரை அவர்களால் உணரக்கூடாதவராயிருந்தார்களே. இதுதானே இரண்டாம் கூட்டத்தாரின் அனுபவம்.


தேவனுடைய இரண்டாம் வருகையின் போது எக்காளம் தொனிக்கையில் ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே 3ஆம் கூட்டத்தினராய் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோமே (1கொரி.15:52) அதற்கு ஆயத்தமாக இப்பொழுது தாமே நாம் நம் வாழ்விலே மகிமையின் மேல் மகிமையடையும் அனுபவத்திற்கும் மறுரூபபடுகிறவர்களாய் காணப்பட வேண்டுமே (11கொரி.3:18) இது நம்மால் முடியாதது ஆனால், நம் மனது ஆண்டவருக்குள்ளாக புதியதாக்கப்பட்டு வருகையிலே, நம்முடைய அற்பமான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக அவரே நம்மை மறுரூபப்படுத்துகின்றவராய் காணப்பட வேண்டுமே இது நம்மால் முடியாதது ஆனால், நம் மனது ஆண்டவருக்குள்ளாக புதியதாக்கப்பட்டு வருகையிலே, நம்முடைய அற்பமான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக அவரே நம்மை மறுரூபப்படுத்துகின்றவராய் இருக்கின்றாரே (பிலி.3:21)


     இந்த மறுரூப அனுபவம் கொண்டவர்களை எங்ஙனம் அறியக்கூடும் இவர்கள் யாவருமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே கடைசியாக கூறிய ஐந்து பிரதான கட்டளைகளை என்றுமே கைக்கொண்டவர்களாயிருப்பார்கள்.


     ஒருவரையொருவரின் பாதங்களை கழுவும் தாழ்மை குணமுள்ளவராயிருப்பார்கள்


      ஒருவரையொருவர் அதிகமாய் நேசிக்கிறவர்களாயிருப்பார்கள்


     தங்கள் இருதயங்களை எக்காலத்திலும் எல்லா சூழ்நிலைகளிலும், எவற்றிற்காகவும் கலங்கிடச் செய்யாமல் ஆண்டவர் பேரிலேயே முழு நம்பிக்கையுள்ளவர்களாய் காணப்படுவார்கள்.


 ஆண்டவரை உண்மையாய் நேசிக்கின்றவர்கள் அவர் கூறிய அனைத்து கட்டளைகளுக்கும் முற்றிலுமாய் கீழ்ப்படிந்தவர்களாயிருப்பார்கள்.


 செடியாகிய கிறிஸ்துவிலே கொடியாக என்றுமே அவரிலே நிலைத்திருக்கின்றவர்களாய் நிறைவான கனிகளை கொடுக்கிறவர்களாயிருப்பார்கள்.


      ஆண்டவர் தாமே இந்த மேலான மறுரூப அனுபவத்திற்கு ஏதுவாக நம்மை வளர்ந்திடச் செய்வாராக. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை முகமுகமாய் தரிசிக்க இருக்கின்ற நாம் அவருடைய கற்பனைகளை முழுமையாய் நம் வாழ்விலே செயல்படுத்திடுவோமாக. ஆண்டவர் தாமே நம்மனைவரையும் தம்முடைய நிருபங்களாக மாற்றி அமைத்திடுவாராக ஆமென்.


சகோ. பிலிப்ஜெயசிங்,


நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்.