தேவனின் அநாதி சிநேகமும், இரக்கத்தில் ஐசுவரியமும், அநாதிகால காருணியங்களுமே உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் தம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப் பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானமாகும். 1கொரி.2:7.
இந்த தேவஞானத்தின்படிக்கு உலகம் உண்டாவதற்கு முன்பாகவே ஏற்படுத்தப்பட்டு மறைக்கப்பட்ட இரகசியமாவது; கிறிஸ்துவானவர் நமக்குள்ளே இருப்பதுவே அந்த இரகசியம். (Christ is in us) கொலோ.1:27
தேவன் ஏற்படுத்தினது நமக்குள்ளே கிறிஸ்து. ஆனால் மனிதர்கள் ஏற்படுத்தினது கிறிஸ்துவுக்குள்ளே நாம் (we are in Christ)
பரி. பவுல் கூறியதைப் போன்று அந்த மறைக்கப்பட்ட இரகசியமான தேவஞானத்தைப் பற்றியே சில விளக்கத்தை இப்போது தெரிவிக்கின்றேன். உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பே, ஆதிமக்கள் உருவாக்கப்படும் முன்பே கிறிஸ்து கடைசிகாலத்து மக்களுக்கென்றே ஒரு திட்டத்தை தேவன் தாமே ஏற்படுத்தி அதனை இரகசியமாய் அநாதி காலமாய் மறைத்து வைத்திருந்தார். அதுவே தேவனின் தேவ அன்பின் ஐசுவரியமாகும். ஆண்டவருக்கு ஏற்கனவே நன்கு தெரியும். தாம் உருவாக்கப்போகின்ற ஆதிமக்கள் ஆதாம் ஏவாள், சாத்தானின் வார்த்தைக்கு கீழ்ப்படிவார்கள் அதனால் பூமி சாபமாகும். ஆதிமக்கள் ஏதேனைவிட்டு விரட்டப்படுவார்கள். பின்பும் அக்கிரமம் பூமியிலே பெருகும். அதனால் பூமி ஒருநாள் ஜலபிரளயத்தினால் அழிக்கப்படும் என்பதெல்லாம் தேவனுக்கு உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பாகவே அறியப்பட்டிருந்தாலும் பின் ஏன் தேவன் ஆதாம், ஏவாளை படைத்தார்? என்று நம்மிலே எண்ணங்கள் தோன்றக்கூடும். இதிலே தேவ இரகசியம் ஒன்றும் மறைந்துள்ளது. அது தான் தேவனின் அநாதி சிநேகமும் அநாதிகால காருணியங்களே ஆகும். அந்த அன்பே, ஜீவ நதியாக மக்களிடையே பழைய ஏற்பாட்டின்கால முடிவு வரை ஓடி ஆண்டவருக்கான ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி ஆண்டவரை பரிசுத்த ஸ்தலத்திலே சந்தோஷிப்பிக்கும் (சங்.46:4) என்பதாகும்.
தேவன் சிருஷ்டித்த வானம், ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவும் உயிரற்றவைகளே இதற்கு மேலானதாக உயிருள்ளவைகளாக தாவரங்களை உண்டாக்கினார். இவைகளுக்கும் மேலானதாக சிருஷ்டிக்கப்பட்ட உயிருள்ள மிருகங்களும் சகல ஜீவராசிகளும் ஆகும். இவற்றிற்கும் மேலாகவே மனிதர்கள் தேவனின் சாயலிலே உருவாக்கப்பட்டார்கள். மனிதர்கள் மாத்திரமே இதர எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலாக சுதந்தர ரீதியாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வகையான சுதந்திரம் மனுமக்களுக்கு அளிக்கப்பட்டது. ஒன்று நல்லது கெட்டது எது என்று தீர்மானிக்கும் சுதந்திரம், இரண்டாவது தன் கருத்தினை அல்லது தனக்குள்ளதை சுதந்தரமாய் பேசும் உரிமம். மற்ற சிருஷ்டிகளெல்லாம் சுதந்தரமற்ற ரோபோக்களாகவே உள்ளன. ஆகவே தான் ஆதாம், ஏவாள் தேவனுடைய வார்த்தைகளை மீறி நடப்பார்கள் என்று அறிந்திருந்தும் பூமியை அவர்களுக்கு குத்தகையாக கொடுத்து உலகிலே அவர்களை ஆண்டு கொள்ள அனுமதித்தார். ஆனால் மறைக்கப்பட்ட தேவ இரகசியமானது தேவனுடைய அளவுகடந்த அன்பு. அதுவே தேவன் தம்முடைய ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவை இப்பூமிக்கு அனுப்புவது என்பதே மறைக்கப்பட்ட தேவ ஞானத்தின் இரகசியமாகும். இந்த இரகசியத்தை பழைய ஏற்பாட்டின் முழுவதிலுமே இதனை நிழலாட்டமாய் காணமுடிகின்றது. பழைய ஏற்பாட்டு தீர்க்கத்தரிசிகள் யாவருமே இதனை தீர்க்கத்தரிசனமாயும் கூறியும் உள்ளார்கள்.
தேவன் ஆதிமக்களை உருவாக்கியபோது அவர்களை ஜீவ ஆத்துமாவாக்கி அவர்களை ஏதேனிலே கொண்டு வந்து விட்டார். பலுகி பெருகி பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி ஆண்டுகொள்ளுங்கள் என்று தானே கூறி அவர்களை ஆசீர்வதித்தார். சகல நாட்களும் அவர்களுக்கு நல்ல நாட்களாகவே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் தங்களுக்குள்ள சுதந்தரத்தை தவறான வழியிலே நடப்பித்து ஒரு நாள் தேவனுடைய வார்த்தையை மீறினார்கள். அந்த நாள் அவர்களுக்கு ஆத்துமாவிலே மரண நாளாயிற்று. பூமியும் சபிக்கப்பட்டது. அவர்கள் அதிக வருத்தத்தோடே அதன் பலனை புசிக்க வேண்டியதாயிற்று. தேவனோடுள்ள ஐக்கியம் துண்டிக்கப்பட்டது. ஜீவ ஆத்துமாவானவன் மண்ணுக்குரியவனானான்.தேவன் அவர்களை அடக்கி ஆள்வது தேவதிட்டமல்ல. அவர்களாகவே தேவனைச் சார்ந்து தேவதிட்டத்தின்படி நடக்க வேண்டும் என்பதனையே தேவன் விரும்பினார். அங்ஙனம் வாழ்கின்றவர்கள் மாத்திரமே தேவனை உடையவர்களும் தேவனின் ஜனங்களும் ஆவர். பூமியிலே அக்கிரமம் பெருகுகையில், அல்லது மக்கள் மத்தியில் தேவனுக்கு விரோதமான துணிகரமான பாவங்களை காணும் போது தேவன் பட்சிக்கிற அக்கினியாகவே காணப்பட்டுள்ளார். ஏனெனில் அவர் மகா பரிசுத்தர். God of Most Holy தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தேவ ஊழியக்காரர்களுக்கு விரோதமாய் ஜனங்கள் எழும்பிய போது 14700 பேர் அழிக்கப்பட்டார்கள் எண்:16:49, சோதோமிலும், கொமோராவிலும் அக்கிரமமும் பாவமும் பெருகி காணப்பட்ட போது தேவன் வானத்திலிருநது கந்தகத்தையும் அக்கினியையும் இறங்கப்பண்ணி இரு பட்டணத்து ஜனங்களையும் அழித்தார் ஆதி: 19:24 யோனா நாட்களில் அக்கிரமம் பெருகியிருநத நினிவே பட்டணத்தை தேவன் அழிக்க நினைக்கையில் ராஜாக்கள் முதலாய் மிருகங்கள் வரை மனந்திரும்பினதால் அந்த பட்டணம் அழிவிலிருந்து காக்கப்பட்டது. நோவா நாட்களில் பூமியிலே அக்கிரமம் பெருகியுள்ளது என்று தேவன் கண்டோது பூமியின் சகல ஜீவராசிகளையும் ஜலப்பிரளயத்தினால் அழிக்க திட்டமிட்டபொழுதிலும் அவர்களுள் தன் விருப்பப்படி வாழ்ந்த நோவாவை அவர்தாமே ஏற்பாடு செய்த ஒரு பேழையினிமித்தம் காப்பாற்றி ஒரு குடும்பத்தை தனக்காக ஏற்படுத்திக்கொண்டார். இதுவே தேவனின் அன்பின் நதியின் ஓட்டம் ஆகும். அவர்களை மறுபடியும் பலுகி பெருகி பூமியை நிரப்ப ஆசீர்வதித்தார். தேவன் ஆசீர்வதித்தபடியே ஜனங்கள் பூமியிலே பலுகி பெருகியபோது தங்கள் வழக்கத்தின்படிக்கே தேவனை மறந்து தங்களுக்குள்ளே அநேக விக்கிரகங்களை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனாலும் தேவன் தம்முடைய அன்பின் ஒரு நதியை ஓடச் செய்தவராக விக்கிரகங்கள் நிறைந்த பட்டணத்திலிருந்து ஒரு குடும்பத்தை, ஆபிரகாமை அழைத்து அவனை தேவனுக்கென்று ஒரு ஜாதியாக ஏற்படுத்தி அவனை ஆசீர்வதித்து, அவனை ஆசீர்வதிக்கையில் அவனுக்குள் உலகத்தின் எல்லா ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஒரு வாக்குத்தத்ததையும் கொடுத்து தம் அன்பின் நதியை பல கிளைகளாக ஓட வகை செய்கின்றார். சகல ஜனங்களுக்குள்ளும் அந்த ஆபிரகாமின் வம்சமே பூமியிலே தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட இஸ்ரவேலர் ஆனார்கள். இவர்களை ஆசீர்வதித்தது மட்டுமல்லாமல் இப்பூமியிலே அவர்களுக்கான ஒரு தேசத்தையும் வாக்குபண்ணினார். இந்த இஸ்ரவேலர்களும் தேவனை விட்டு விலகினபடியால் அவர்கள் யாவரும் எகிப்திலே அடிமையாக்கப்பட்டார்கள். பின்பு தங்களுக்கு வந்த உபத்திரவங்களினால், அவர்களின் முற்பிதாக்களின் தேவனை நோக்கி கூக்கிரலிட்டார்கள். கூக்குரலை கேட்ட தேவன் பூமியில் இறங்கி, ஏற்கனவே தான் ஆயத்தம் செய்து வைத்த மோசேயை தம் ஜனங்களை மீட்கும் பணிக்கு அழைக்கின்றார், ஆனால் மோசேயோ சாக்கு போக்கு கூறிய போது, அவன் மீது கோபங்கொண்டு வலுகட்டாயமாய் அழைத்தார். அவன் மூலம் தம் மக்களை மீட்க ஒரு அன்பின் திட்டத்தை வகுத்தளித்தார். அவரவர்கள் குடும்பத்துக்கு தக்கதாக ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியினை தெரிந்தெடுத்து அதனைக் பஸ்கா பலியாக கொன்று அதன் இரத்தத்தை அவரவர்களின் வீட்டு நிலைக்கால்களில் பூசக் கட்டளையிட்டார். தேவன் ஏற்படுத்தும் கட்டளைகள் ஒருபோதும் கடினமானவைகளும் அல்ல. ஆனால் இக்கட்டு காலமாயிருந்ததினால் இஸ்ரவேல் மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ள 100% உண்மையாய் மோசேயின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார்கள். தேவனுடைய திட்டமும் 100% வெற்றியடைந்தது. எல்லா மக்களும் விடுதலையாகி சிவந்த சமுத்திரத்தையும் கடந்து கானானுக்கு பயணித்தார்கள். ஆனாலும் வழியிலே மறுபடியும் வழக்கப்படிக்கு தங்களுடைய கீழ்ப்படியாமையினாலும், கானானின் பயணம் கடினமாக்கப்பட்டது. எகிப்திலிருந்து புறப்படும் போது 100% கீழ்ப்படிந்தார்கள். 100% பயணம் இலகுவாயும் அற்புதமாயும் காணப்பட்டது. தேவனுடைய நோக்கம் எகிப்திலிருந்து விடுபடுவது மட்டுமல்ல அவர்களை கானானை சுதந்தரிக்கச் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
அதனால் இஸ்ரவேல் மக்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகவே வனாந்தரத்திலே மோசே மூலமாக 10 கற்பனைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கொடுத்தால் அதனைக் கைக்கொண்டாவது இஸ்ரவேலர் தேவனுக்கு ஏற்றவர்களாக வாழக்கூடும் என்பதாக ஏற்படுத்தினார். ஆனால் அதுவும் தோல்வியிலே முடிந்தது. அநேக வாதைகளையினையும் அவர்கள் மீது வரச்செய்து அவர்களை திருத்திவிட முயற்சித்தார், செவிகொடாமையிலிருந்து மனந்திரும்பச் செய்ய - லேவி: 26:24, வாதை அனுப்பப்பட்டது, துர்ச்செய்தியை பரப்பினதற்காக - எண்: 14:37, வாதை அனுப்பப்பட்டது, வேசி்த்தனம் புரிந்தமைக்காக - எண்: 25:9, வாதை அனுப்பப்பட்டது. ஆனால் எதிலும் அவர்கள் தேவன் பிரியங் கொள்ளும்படியாய் நடந்து கொள்ளவில்லை. ஏசாயா, ஏரேமியா, எலியா, எலிசா போன்ற தீரக்கத்தரிசிகளைக் கொண்டும் எச்சரித்தும் திருந்தவே இல்லை. தீர்க்கத்தரிசிகளையே ஒழித்துகட்ட வழி செய்தார்கள் இறுதியாக தம்முடைய அநாதி தீர்மானத்தின்படிக்கே இஸ்ரவேலரின் வம்சா வழியிலே யூதா கோத்திரத்திலே தேவனாகிய பிதா தாமே தன் ஏக புதல்வனாகிய இயேசு கிறிஸ்துவை இப்பூமியிலே பாலகனாக பிறக்கச் செய்தார். பாவமறியாதவராகிய இவர் பாவம் நிறைந்த மக்கள் மத்தியில் எங்ஙனம் இப்பூமியிலே வாழ வேண்டும் என்பதையும் மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்தும் காட்டினார். கற்பனைகளுக்குப் பதிலாக தேவ சத்தியங்களையும் போதித்தார். ஆனால் அவருடைய சொந்த ஜனமோ அவரையும் அவருடைய உபதேசத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார்கள். இதுவே தேவனால் மறைக்கப்பட்ட இரகசியம் ஆகும். இது தற்போது வெளிரங்கமானது. ஏசா: 53: 10 யின் படிக்கு அவருடைய ஆத்மா தன்னை குற்ற நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்த போது ஒரு புது சந்ததியை தன் கண் முன்னே காண்கின்றார் சிலுவையிலே அவர் தன் ஆத்ம வருத்தத்தை அளித்ததினாலே அதன் பலனாலே நம்முடைய வருத்தத்தின் பலனிலிருந்து மீட்கப்படுகின்றோம். மூன்றாம் நாளிலே தேவன் உயிர்த்தெழுந்தவராக பாவங்களையும் சாத்தானையும் 100% ஜெயித்து வெற்றி சிறந்தார். தேவனோடுள்ள நம்முடைய இழந்த ஐக்கியம் புதுப்பிக்கப்பட்டுள்ளதே.
பிதாவின் சிநேகத்தின் இரகசியமோ (ஏசா.53:10). கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார். அவருடைய ஆத்மா தன்னை (உலக சகல மக்களுக்காக) குற்ற நிவாரண பலியாக ஒப்புக்கொடுக்கும் போது அவர் தமது சந்ததியை கண்டு நீடித்த நாளாயிருப்பார் என்பதாகும். இதன்படிக்கே கிறிஸ்து உலகமக்கள் யாவருக்காகவும் பஸ்கா பலியாக தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்து தம் இரத்தம் யாவற்றையும் பாவநிவாரண பலியாக சிந்தினார். இந்த இரத்தத்தினாலேயே யாவருக்கும் பாவமன்னிப்பு இலவசமாய் அளிக்கப்படுகிறது. யூதா வம்சம் இஸ்ரவேலர் என்பது தேவன் விரும்பும் தேவனுடைய சந்ததி என்று ஒரு மாதிரியை அடையாளப்படுத்தி காண்பிக்கின்றது மாத்திரமே. ஆனால் புதிய உடன்படிக்கை யின்படிக்கு உலகமக்கள் யாராயிருந்தாலும் கிறிஸ்துவினுடைய வர்களானால் அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாராயும் வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறார்கள் என்பதே தேவனுடைய அநாதி கால அன்பின் திட்டமாகும். (கலா.3:29) ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளாவர். (கலா.3:7) பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு ஆதி. 12:2யில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் இப்புது உடன்படிக்கையினால் நிறைவேறுகின்றது. ஆகவே இன்று இந்த நாள் துக்க நாள் அல்ல மகிழ்ச்சியின் நாளே. ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாயின் வேதனையை யார் அறிவார்கள்?, அவளுடைய அழுகையின் கதறுதலை வேதனையை யார் அறிவார்கள்.? பிறந்த குழந்தையின் அழுகையின் சத்தம் யாவற்றையும் மறக்கச் செய்துவிடுகின்றதே.
இயேசுகிறிஸ்து மாம்சத்திலே இவ்வுலகிலே ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்த போது அவர் எங்ஙனம் பழுதற்ற ஆட்டுக்குட்டியாக நம் யாவருக்காகவும் பலியானார்? இது இலேசான காரியமோ?. அல்லவே அல்ல. அவர் கெத்சமனேயில் ஜெபித்த போது எவ்வளவாய் வியாகுலப்பட்டார். இரத்த வேர்வை சிந்தியதே. மூன்று முறையாக இந்த வேதனையின் பாதை வேண்டாம் என கேட்டும் பிதா, தன் குமாரனின் ஜெபத்தை கேட்க மறுத்துவிட்டாரே. மனுமக்கள் மீது பிதா தாமே கொண்டுள்ள தம் அநாதி கால சிநேகத்தை தன் சொந்த குமாரனின் இரத்த கிரையம் மூலம் காண்பிப்பத்தில் பிதாவாகிய தேவன் அவ்வளவு கண்டிப்பாக இருந்தாரே. இயேசு கிறிஸ்துவுக்காக நியமிக்கப்பட்ட தியாக பலியின் விளைவு, போர்ச்சேவகர்களின் சித்ரவதை மட்டுமல்ல, சுமக்கக்கூடாத பாரமான சிலுவை மரத்தினை தள்ளாடி தள்ளாடி சுமப்பது மட்டுமல்ல, கொல்கதா மலையிலே கொடுக்கப்பட்ட சிலுவை பாடுகள் மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். இவ்வேதனைகளையும் கடந்து சாத்தானுக்கும், பாவிகளுக்குமான அக்னி நரகம் வரை தான் செல்ல வேண்டும் என்பதையும் கைவிடப்பட்டவர்களின் நரக அக்னி மண்டபத்தையும் கடந்து செல்ல வேண்டும் என்பதையும், இதுவரையிலும் பிதாவின் மார்பிலே சாய்ந்து வளர்ந்த செல்லக்குமாரன் பிதாவினால் கைவிடப்பட்டவராக, சகல உலக மக்களின் பாவங்களையும் தன்னிலே சுமக்கின்ற போது பாவங்களை பார்க்கக்கூடாத பரிசுத்தமான பிதா, எவ்வளவு கோபாக்கினையோடு பாவிகள் மேல் சினங்கொள்வார் என்பதனையும் அத்தன்மையாய் தான் மனுமக்களின் பாவங்களை சுமக்கும் போது பிதாவினால் தான் வெறுக்கப்பட போகிறார் என்பதனையும் அறிந்தவராகவே தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார். உலகின் சகல மக்களின் பாவங்களையும் தன் மீது சுமந்து கொண்டருந்த தன் ஒரே பேறான குமாரனை கண்ட போது அவரை, தன் மகன் தானே என்று கூட பாராமல், பாவங்களை சுமந்த ஒரு பாவியாக கருதி தம் முகத்தை குமாரனுக்கு மறைந்து கொண்டதினால், தகப்பன் என்ற வார்த்தையை மறந்து என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று சிலுவையில் இயேசு கிறிஸ்து தாமே கதற நேரிட்டதே.
இவ்வளவாய் தேவனுடைய அன்பு செய்யப்பட்டுள்ளதே. ஆனால் இந்த தியாக அன்பின் ஆழம், அகலம் இன்று எவராலும் அறியப்பட வில்லையே. மக்கள் ஆதிகால முதலாய் வாழ்ந்த மனிதர்களைப் போன்றே முரடாட்டமுள்ளவர்களாய், வணங்கா கழுத்துள்ளவர்களாய், முறுமுறுக்கின்றவர்களாய் பாவங்களிலே வாழ்ந்து கொண்டு கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் என்று எவ்வளவு துணிச்சலாய் பேசி சாதித்து வருகின்றார்களே. பிதாவாகிய தேவன் தன் குமாரனை இவ்வளவாய் பாடுகளுக்குள் உட்ப்படுத்தி பாவமன்னிப்பை ஏற்படுத்தியிருக்கும் போது, தன் குமாரனைனே பூமிக்கு, அனுப்பி மக்கள் எங்ஙனம் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்ந்து காண்பித்திருக்கும் போது மக்கள் ஏன் அதனை ஏற்றுக் கொள்கிறதில்லை? அப்படியானால் கீழ்ப்படியாதவர்கள் மேல் தேவ கோபாக்கினை எவ்வளவு அதிகமாய் இருக்கும் என்றும் அன்னார்களுக்கு இரக்கமற்ற ஆக்கினை அளிக்க இருப்பது தேவ நீதியே என்பதையாவது இப்போதாவது அறிவார்களா? இல்லையே.
அன்று மோசேயின் வார்த்தைக்கு 100% கீழ்ப்படிந்த மக்கள் 100% எகிப்திலிருந்து விடுவிக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் யோசுவா, காலேப் நீங்கலாக வனாந்தரத்திலே செத்து மடிந்தார்களே. கானான் போய் சேரவில்லையே. அதுபோன்றே உலகிலுள்ள சகல மக்களுக்காகவும் இரத்தம் சிந்தி பாவமன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், அனைவரும் பரலோகம் செல்வதில்லையே. விசாலமான உலக பாவ வாழ்வை விட்டு விட்டு தேவபயத்தோடு தேவ சி்த்தத்தை மட்டுமே செய்து தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக வாழும் பாதையை தெரிந்தெடுத்துக் கொள்வதில்லையே.
கிறிஸ்து நமக்குள்ளே வாழ்வதே, ஆதிகால முதலாய் தேவதிட்டமாயுள்ளது. இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள், தேவ சத்தியங்களின் படி நடந்து இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் தங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமே. இவர்களுக்குள்ளேயே கிறிஸ்து வாழ்கின்றவராகின்றார். புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்தம் என்ன.? இம்மானுவேல் என்பது தானே. இம்மானுவேல் என்பது தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதுதானே அதன் பொருள். மத்தேயு சுவிசேஷத்தின் கடைசி வசனம் மத்: 28:20 யில் அவர் சகல நாட்களிலும் நம்மோடு இருக்கிறேன் என்பதுதானே. நாம் அவரோடு என்பது அல்லவே அல்ல. சகேயுவிடம் ஆண்டவர் கூறியது என்ன? சகேயுவே நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று தானே கிறிஸ்து கேட்டார். கிறிஸ்துவை தன் வீட்டிற்குள்ளே ஏற்றுக்கொண்டதினாலே அவன் அன்று முதல் ஆபிரகாமின் குமாரனானானே. கிறிஸ்து நமக்குள்ளே வாழ்ந்தால் கிறிஸ்து யார்? வியாதிகளை சுகமாக்கிறவர், பிசாசை விரட்ட அதிகாரமுள்ளவர். சகல ஜசுவரியங்களின் உரிமையாளர். இவர் நமக்குள்ளே இருந்தால், சகல அதிகாரமும், சுகமும், ஐசுவரியமும் நமக்கு சொந்தமாக உண்டே இவற்றினை தேடி நாம் வெளியே செல்ல வேண்டியதில்லையே. மனிதர்களை ஊழியர்களை நாட வேண்டியதில்லையே. நாமே சகலவற்றிலும் குறைவில்லாதவர்களே. இதுவே அநாதிகாலமாய் தேவன் ஏற்படுத்தின மறைத்து வைக்கப்பட்ட அன்பின் திட்டமாகும். சகல அதிகாரத்தையும் உடையவர்களாகிய நாம் தேவனை நமக்குள்ளே இருக்கச் செய்திருக்கச் செய்திருக்கும் போது, சகலமும் நம்முடையதாதிருக்க நமக்கான தேவைகளுக்காக அவரிடம் கெஞ்ச வேண்டிய நிலமை இல்லையே, ஆனால் பிறருடைய தேவைகளுக்காக மட்டுமே நாம் கெஞ்சி ஜெபித்திடலாமே. ஆனால் நம் சுய விருப்பங்களுக்காக வருந்தி அல்லது உபவாசித்து ஜெபிக்கும் நிலை ஏற்படுமானால் ஆண்டவர் நமக்குள்ளே இல்லை என்பது தானே உண்மை . அதனால் தான் ஊழியர்கள், விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் நாம் வாழ நம்மை அழைக்கின்றார்கள். இது முதல் தரமான வாழ்வாக மாட்டாதே. கிறிஸ்து நமக்குள்ளே நிரந்தரமாக வாழ்வதற்கான உபதேசங்களை இக்காலத்து ஊழியர்கள் எவரும் போதிப்பதில்லையே. அவ்வப்போது கிறிஸ்துவை வரவழைப்பதாக கைதட்ட கூறுகின்றார்களே. அதுமட்டுமல்லாமல் ஆவியானவர் வந்து கொண்டிருக்கின்றார், இறங்கிக் கொண்டிருக்கின்றார் என்று தானே பொய்யாய் கூறி நம்பச் செய்கின்றார்கள். நான் மனந்திரும்பின நாட்களில் என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் பல நாட்களாய் ஒவ்வொன்றாய் பாவ அறிக்கை செய்தபோது ஆவியானவர் என்னிலே அவராகவே நிறைவாய் குடிகொள்ள ஆரம்பித்தாரே. நான் புது சிருஷ்டியானேன். பழைய சுபாவம் என்னைவிட்டு நீங்கியது. அவர் என்னிலே எந்த பாவ அசுசியாதொன்றையும் கண்டு என்னை விட்டு சென்று விடாதபடிக்கு என்னைத்தானே தாழ்த்தி தினமும் அவரோடு ஒப்புரவாகிக் கொள்வதே என்னுடைய அன்றாட தியானமும் ஜெபமுமாய் என் வாழ்வாக உள்ளது. ஆவியானவரே எனக்குள் இறங்கி வாரும் என்று காத்திருப்பு ஜெபம் செய்ததே கிடையாது. ஆகையினால் இந்தகிருபையின் நாட்களிலே நாம் ஆண்டவரின் மேன்மையான அன்பு, தியாகம் அறிந்து அவரை நாம் 100% நமக்குள் ஏற்றுக் கொண்டவர்களாக நாளுக்கு நாள் வளர்ந்திடுவோமாக. கிறிஸ்துவின் சகல சுபாவத்தினையினையும் கொண்டவர்களாயிருக்க பிரயாசப்பட்டுக் கொண்டேயிருப் போமானால். நாமும் ஆண்டவரின் குடும்பத்தில் ஒருவராயிருப்போமே. இயேசுகிறிஸ்து நம் மூத்த சகோதரனும் ஆவார். "சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்" வெளி: 7:15 நம் வாழ்வு முற்றிலும் அவருடையதாகுமே. "கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" யாத்: 14:14. இந்த மேலான வாழ்வையினையே நாம் முற்றிலுமாய் அடைந்திடுவோமாக. ஆமென்.
சகோ.பிலிப் ஜெயசிங்,
ஆசிரியர், சத்திய வெளிச்சம்
நாசரேத் ஜெப ஐக்கியம்,
நாசரேத், 628 617
தூத்துக்குடி மாவட்டம்.
( கைபேசி : 9487547633 )