இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். (மாற்கு 14:8)
A Sense of Abandon
மார்த்தாள், மரியாள், லாசரு இவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அதிகமாய் நேசித்தார்கள். இயேசு கிறிஸ்துவும் இக்குடும்பத்தை அதிகமாய் நேசித்தார். மரியாளோ ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து ஆண்டவர் கூறும் வார்த்தைகளையே கேட்கும் நல்லபங்கையே தன் வாழ்நாட்களில் ஒரே பங்காக கொண்டிருந்தாள். மார்த்தாளைப் போன்று ஆண்டவருக்காக சேவை செய்வதே பிரதானமானது என்று மரியாள் கருதியது கிடையாது. அதனால் ஆண்டவர் தாமே கூறி வந்த சகல செய்திகளையும் கேட்டு அறிந்து ஆண்டவர் இவ்வுலகத்திற்கு வந்ததான நோக்கத்தையும் அவர் மரித்து உயிர்த்தெழுந்தவராக செல்ல இருக்கின்றார் போன்ற சத்தியங்களையெல்லாம் நன்கு உணர்ந்தவளாக தனக்கு கிடைத்த தகுந்த வாய்ப்பின் போது இதனை விட்டுவிடலாகாது. இதனை விட்டுவிட்டால் வாய்ப்பு எதுவும் இனி கிட்டாது என்று நன்கு அறிந்தவளாக, தனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பின் நாளில் தானே, தன்னால் எவ்வளவு கூடுமோ அத்தனை அளவாய் தன்னால் இயன்றதை (Maximum) விலையேறப்பெற்ற நளதம் என்றும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியை கொண்டுவந்து அதை உடைத்து அந்ததைலத்தை சீமோன் வீட்டிற்கு விருந்துக்கு வந்த இயேசு கிறிஸ்துவின் தலையின் மேல் ஊற்றினாள். பொதுவாக வாசனை திரவியத்தை தெளிப்பது தான் (Spray) வழக்கம். ஊற்றிவிடுவது வழக்கமே கிடையாது. முற்றிலுமாய் ஊற்றிவிட்டால் என்பது பின்பு உபயோகிக்கும் வாய்ப்பு இல்லையென்பதுவே உண்மை. ஆகவே தான் இது தன்னால் இயன்றதாக முற்றிலுமாய் ஆண்டவரின் சிரசின்மேல் ஊற்றிவிட்டாள். இவ்வுலக வாழ்விலே, நமக்கு அருமையானவர் ஒருவர் இறந்திருக்கும் போது அவருடைய சரீரத்திலே வாசனைதைலத்தை தெளித்து தெளித்து முற்றிலுமாக காலி செய்திடுவது தானே நம் வழக்கம். இனி அந்த உடலை காணப்போவது இல்லை. ஆகையாலே மிச்ச மீதியில்லாமல் தெளித்து விடுகின்றோம். அது போன்றே மரியாள் ஆண்டவர் உயிரோடு இருக்கும் போதே செய்து முடித்து விட்டாள். இதன் உட்க்கருத்தினை உலகமக்கள் எவரும் புரியவே முடியாது. ஆனால் இயேசு கிறிஸ்துவோ இதனை அறிந்தவராக தான் அடக்கம் செய்யப்படுவதற்கு எத்தனமாக என் சரீரத்தில் தைலம் பூச முந்திக் கொண்டாள் என்றும் இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே சொல்லுகிறேன் என்று இயேசு தாமே கூறியுள்ளாரே. ஆண்டவர் உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையிலே மகதலேனா மரியாளும் பரிமளதைலத்தையும், சுகந்த வர்க்கத்தையும் எடுத்து வந்து ஆண்டவரின் சரீரத்திற்கு பக்குவம் செய்ய வந்தாள். ஆனால் அதனை பூச ஆண்டவரின் சரீரம் கல்லறையிலே இல்லை. அவர் உயிர்த்தெழுந்து விட்டார். ஆனால் லாசருவின் சகோதரி மரியாளோ தைலத்தை ஊற்ற ஆண்டவர் உயிரோடு இருக்கும் போதே முந்திக்கொண்டாளே. எத்தனை அருமையான சுவிசேஷம் நற்செய்தி இதனை ஆண்டவரும் அதிகமாய் பாராட்டினாரே.
அருமையானவர்களே இந்த லெந்து நாட்களிலே, நாம் துக்கமுகமாய், உபவாசத்தோடு, சுயவெறுப்போடு காணப்படுவதினை ஆண்டவர் ஒருபோதும் பாராட்டுவதில்லை. உயிர்த்தெழுதலை அறிந்திடாத மரியாள் அவர் உயிரோடு இருக்கும் போதே ஆண்டவரின் சிரசின்மேல் தைலத்தை ஊற்ற முந்திக்கொண்டாளே. ஆனால் நாம் இப்பொழுது உலக சரித்திர பிரகாரமாகவும் ஆண்டவர் சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்துள்ளதை அறிந்திருந்தும், ஆண்டவர் இப்பொழுதும் மரித்துக் கொண்டிருக்கின்றார் என்று எண்ணினவர்களாக தெருதெருவாய் கடந்து மரித்தவர்களின் பாடல்களை பாடிக்கொண்டும் அல்லது இந்த 40 நாட்களில் மட்டுமே துக்கமுகமாய், சுயவெறுப்பாய் வாழ்வதும், இந்நாட்களில் மரித்ததை கூறும் வேதவாக்கியங்களை கூறி ஜெபித்துக் கொண்டு வருவதை ஆண்டவர் ஒருபோதும் பாராட்ட போவதில்லையே. இன்னார்களெல்லாம் பவனியில் வந்துள்ளார்கள். இவர் இல்லாவிட்டால் இவ்வாண்டு இப்பவனி நடந்திருக்காது என்று உலகமக்கள் பாராட்டுவார்கள். மரித்த சுவிசேஷத்தை ஆண்டுதோறும் செய்வதில் என்ன பிரயோஜனம். உயிரோடிருக்கும் ஆண்டவருக்கு அடக்கம் செய்யப்பட்டபின் செய்யப்படக்கூடிய உயிர்த்தெழுதலுக்கான சுவிசேஷத்தை செய்வதில் எதனை நாம் முந்திக் கொண்டு வருகின்றோம். நாம் மரித்த ஆண்டவரின் பிள்ளைகளா, தலை, தாடி, மொட்டையடித்து தைலம் பூசிக்கொள்வதா? அல்லது உயிரோடிருக்கிற ஆண்டவரின் பிள்ளைகளாக, உலகமெங்கிலும் உயிருள்ள ஆண்டவரை நினைவுகூறும்படியாக உயிர்த்தெழுந்த சுவிசேஷத்தினை செய்ய எதிலில் முந்திக்கொள்கின்றோம். ஒன்றுமில்லையே. "பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி” நிதானிக்க வேண்டும் என்று பரி. பவுல் ||கொரி. 5:15யில் கூறியுள்ளதை அறிவீர்களா? "கிறிஸ்து எழுந்திராவிட்டால்...... நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்" என்று பரி. பவுல் மறுபடியும் கூறியதை கொரி. 5:17யில் வாசித்தறியவில்லையா? நீங்கள் மரித்த கிறிஸ்துவை பின்பற்றும் கிறிஸ்தவர்களா? அல்லது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை பின்பற்றும் கிறிஸ்தவர்களா?
வேதத்திலே பழைய ஏற்பாட்டின் காலத்திலே ஆண்டவர் இப்பூமியில் மனிதனாக பிறக்கும் முன்பே ஆண்டவரின் உயிர்த்தெழுதலைக் குறித்தும் ஆண்டவரின் முதலாம், இரண்டாம் வருகையினைக் குறித்தும் வேதாகம புருஷர்கள் பாடிய பாடல்களையும் கூறிய செய்திகளை அறிவீர்களா? அவர்களின் வரிசையிலே யாவற்றையும் அறிந்து ஆண்டவரின் இரண்டாம் வருகையினை எதிர்பார்க்கும் நாம் எதனை நம்மால் இயன்றதை முழுமையாய் செய்ய முந்திக் கொள்கின்றோம்? ஆண்டவர் நம்மை பாராட்டும்படியாக எதனை செய்து வருகின்றோம்?
மோசே பிறப்பதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து வந்த யோபு பக்தன் யோபு 19:25யில் கூறியதாவது : “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளாரே. ஆண்டவர் பூமியில் பிறக்கும் முன்பே என் மீட்பர், இரட்சகர் மரித்து உயிரோடிருக்கிறார் என்றும், அவருடைய 2ஆம் வருகையின் நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் கூறியதினால் அவர் மரியாளையும் முந்திக் கொண்டாரே. நாம் அனுசரித்து வரும் லெந்து நாட்களின் துக்கத்தை விழாவாக கொண்டாடவில்லையே
. இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு எருசலேமில் குடியிருக்கையில், 500 ஆண்டுகளாக ரோமர்களால் அடிமைப்பட்டு நெருக்கப்படும் நாட்களில் சகரியா தீர்க்கத்தரிசி தோன்றி சகரியா 9:9 முதல் கூறுகின்றாரே சீயோன் குமாரத்தியே மிகவும் களிகூரு எருசலேம் குமாரத்தியே கெம்பீரி. இதோ உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும், தாழ்மையுள்ளவரும் கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். ...... நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை பண்ணுவேன் என்றும் கூறியதின் பொருள் என்ன? சிலுவையின் இரத்தத்தினாலே அவர் நம்மை இரட்சிக்கிறார் என்றும் இதோ உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார் என்றும் கூறியது ஆண்டவரின் இரண்டாம் வருகைக்குப் பின்பாக அவர் நித்திய ராஜாவாக பூமியை அரசாள்வார் என்றும் நாமும் அவரோடு அரசாள்வோமே. இது எத்தனையான நம்பிக்கை. இவரும் மரியாளை முந்திக்கொண்டாரே. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதும் தன் சங்கீதங்களிலே இவ்விதமாய் பாடியுள்ளாரே. சங்கீதம்68:11. "ஆண்டவர் வசனம் தந்தார். அதைப்பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி' ஆண்டவர் யாருக்கு வசனம் கொடுத்தார். மகதலேனா மரியாளுக்குத்தானே, என்ன வசனம்? யோவான் 20:17"இயேசு அவளை நோக்கி, என்னைத் தொடாதே நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்திற்குப் போய் நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். “மகதலேனா மரியாள் போய் தான் கர்த்தரைக் கண்டதையும் அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷர்களுக்கு அறிவித்தாள்.” இந்த செய்தியினைத்தானே நாம் கூறவேண்டும். இதனைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதியாயுள்ளது என்றும் தாவீதினினால் எங்ஙனம் அறிவிக்க முடிந்தது. இந்த செய்தியின் முக்கியம் என்ன? இயேசு கிறிஸ்து பூமியிலே இருந்த நாட்களில் சீஷர்களை ஊழியக்காரர்கள் என்று கூறியவர் யோவான் 15:15யிலே சிநேகிதர்கள் என்று அழைக்கத் தொடங்கினார். ஆனால் அவர் உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களை சகோதர்கள் என்றும் தன்னைத்தானே மூத்த சகோதரனாக அறிவித்துள்ளாரே. மனந்திரும்பினவர்கள் யாவரும் ஆண்டவரின் குடும்பத்தில் ஒருவராகவும் ஆண்டவர் மூத்த சகோதரராகவும் நாம் யாவரும் சகோதர்களாகவும் அவரைப் போன்று சகலவற்றிலும் (Christlike) அவருக்கு ஒப்பாக மாறிட வேண்டும் என்பதே செய்தியாகும். இதனையே, உண்மையான சீஷர்கள் மிகுதியாய் இந்நாட்களில் அறிவித்தும் வருகின்றார்கள். நாமும் இந்த செய்தியினைத்தானே அறிவிக்கின்றவர்களாய் இந்நாட்களில் காணப்பட வேண்டும். இதனை எக்காலத்திலும் கூறிவிடக் கூடுமே. கொரோனாவாலும் தடுத்திடக் கூடாதே. ஆனால் லெந்து காலத்து மரண செய்தியை கூறுகின்றவர்களைத்தானே கொரோனா இவ்வாண்டில் தடுத்துள்ளது. இனி லெந்து காலம் வர 365 நாட்கள் (மறுவருடம்) ஆகுமே. ஆனால் உயிர்த்தெழுதலின் செய்தியை 365 நாட்களிலும் கூற முடிகின்றதே. நம் ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை ஆண்டவரின் மரணத்தையா அல்லது உயிர்த்தெழுதலையா, எதனை அறிவிக்கின்றதாக உள்ளது?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உவமைகளாக கூறுகின்ற போது 100 ஆடுகளில் ஒன்று தவறிப்போகும் போது அது அறியாமையில் சென்றபடியினால் அது வழியினையும் அறியாததினால் அதன் மேய்ப்பனே நேரில் சென்று காடு, மலை, கல், முள் இடங்களையெல்லாம் கடந்து கண்டுபிடித்து அதனை தன் தோளில் சுமந்து சேர்க்கின்றார். இதுவே அன்னார்களின் இரட்சிப்பு. ஆனால் கெட்டகுமாரனின் உவமையிலே, தகப்பன் தன் மகனைத் தேடிச் செல்வதே கிடையாது. அவன் எல்லா சத்தியங்களையும் உண்மையினையும் அறிந்து துணிகரமாய் நியாயம் பேசுகின்றவனாய் தன் பங்கை முந்திப்பெற்று அழிகின்றான். அவனை ஆண்டவர் பன்றி தவிடு தின்னும் காலம் வரைக்கும் கைவிட்டுவிடுகின்றார். அவனாக புத்திதெளிந்து திரும்பி வருவானேயானால் மாத்திரமே அவனைத் தன் தகப்பன் எதிர்பார்த்து ஓடிச்சென்று அழைத்து கொழுத்ததை அடித்து விருந்தும் செய்கின்றார். சத்தியத்தை அறிந்து மனப்பூர்வமாய் உயிர்த்தெழுந்த ஆண்டவரை மூத்த சகோதரனாக ஏற்று தானும் கிறிஸ்துவின் சாயலில் வாழ்கின்றவனை மட்டுமே அவர் தம் வீட்டில் சேர்க்கின்றவராயிருக்கின்றார். பாவங்களை விட்டுவிட மனமில்லாத கிறிஸ்தவனை எந்தலெந்து கால ஊழியங்களும், ஆண்டவரின் மரண செய்திகளும் உயிர்ப்பிக்கமாட்டாதே. பன்றியும் அதன் தவிடு மாத்திரமே அவர்களின் உணவாகிவிடும். ஆண்டவர் தாமே நம் அனைவரையும் புத்தியில் தெளியப்பண்ணுவாராக. உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் நம்மனைவரோடும் இருப்பதாக. ஆமென்
. சகோ. பிலிப் ஜெயசிங்,
நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்
.தூத்துக்குடி மாவட்டம் (9487547633)