பெண்கள் பகுதி : - மே மாதம் - "சத்திய வெளிச்சம்"

 நம் குடும்பத்திற்கும், தேசமனைத்திற்கும் பரிகாரியாகியகர்த்தர்


நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால் நான் எகிப்திருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். யாத்.16:26.


     அருமையானவர்களே, நாம் கடைசி காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதின் அடையாளமாக உலகமெங்கும் கொள்ளை நோய் பரவிக்கொண்ருக்கின்றது. இதனால் நாம் பலவிதமான மனநெருக்களிலும், சிலர் இந்த வியாதி நம் குடும்பங்களிலும் வந்து விடுமோ என பயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் மட்டும் தான் கொள்ளை நோயும், ஜலப்பிரளயமும், கொடுங்காற்றும், கடல் சீற்றத்தின் கொந்தளிப்பும் உண்டாயிருப்பதைக் குறித்து நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இந்நாட்களில் உலகமெங்கும் கொள்ளை நோய்ப் பரவினதின் காரணமாக மனிதனின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் தடைபட்டுவிட்டது. மட்டுமல்லாமல் ஆராதனைகளும் பண்டிகைகளும் தடைபட்டுவிட்டது. இதுவரை சம்பவிக்காத காரியமாக தான் ஆராதனைகளுக்கு தடை வந்திருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தேவன் ஆராதனையை விரும்புகின்றார் என்று ஊழியக்காரர் சொல்லி ஜனங்களை பல விதங்களில் ஆராதிக்க உற்சாகப்படுத்துகிறார்கள். ஜனங்களும் ஊழியக்காரர்கள் சொல்லுவது போன்று ஆராதிக்கின்றார்கள். தேவன் உங்கள் ஆராதனையில் பிரியப்படுகிறாரென்றால் ஏன் அவர் தடை செய்ய அனுமதிக்க வேண்டும். தேவன் அறியாமல் யாதொன்றும் நடக்க கூடுமா? கூடாதே. ஆகையால் ஊழியக்காரர்களே, ஜனங்களே இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள். இந்த உலகத்தின் ஆசீர்வாதத்திற்காக நடத்தப்படும் ஆராதனையை தேவன் வெறுக்கிறார். ஏனென்றால் பரிசுத்தமில்லாத கூடி வருதலாக காணப்படுகின்றது. பாவத்தைக் குறித்ததான சுவிசேஷம் உலமெங்கும் கூறப்படவில்லையே. இதன் காரணமாக தேவனுடைய கோபத்திற்கு உள்ளாகியிருக்கின்றோம் என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். வேதம் கூறுகின்றது அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல் அவர்கள் ஜீவனைக் கொள்ளை நோய்க்கு ஒப்புக்கொடுத்தார் என்று. (சங்.78:50) ஆனாலும் நம்முடைய தேவன் கோபித்தாலும் நாம் மனந்திரும்பி பாவத்தை உணர்ந்து அறிக்கைச் செய்து விட்டு விடும் போது அவர் தம்மேல் இரக்கத்தை காண்பித்து நம் குடும்பத்திற்கும், தேசத்திற்கும் பரிகாரியாகிய கர்த்தராயிருக்கின்றார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நாட்கள் நம்மை நினைவுகூறச் செய்வது ஆராதனைகளுக்கு அல்ல முக்கியத்துவம் கொடுப்பது, தேவன் நம் குடும்பங்களில் பரிகாரியாகிய கர்த்தராயிருக்க, அவருடைய வசனத்திற்குச் செவிகொடுத்து அதன்படி கீழ்ப்படிந்து பரிசுத்தமாக வாழ்வதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆலயத்திற்கு சென்று தேவனை ஆராதிப்பது மட்டுமல்ல, வேதம் கூறுகின்றது அப்படியிருக்க சகோதரரே நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமர் 12:1) இதை உணர்ந்து தேவனை ஆராதிக்க நாம் ஒவ்வொருவரும் ஆயத்தமாக வேண்டும்.


     கர்த்தர் நம் வாழ்க்கையில், குடும்பங்களில், தேசங்களில் பரிகாரியாகிய கர்த்தராக இருக்க வேண்டுமென்பதற்காக வேதத்தின்படி நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை நாம் சிந்திப்போம்.


i) அவர் சத்தத்தைகவனமாய்க் கேட்க வேண்டும்:


     எல்லாரும் சொல்லுவார்கள் நான் கர்த்தருடைய சத்தத்தை கேட்கிறேன் என்று கர்த்தருடைய சத்தம் என்பதை நாம் பல விதங்களில் கேட்கின்றோம். வேதம் வாசிப்பதன் மூலம், ஆலயத்தில் சென்று அருள் உரை கேட்பதின் மூலம், இன்னும் நற்செய்தி விழாவின்மூலம் TV, YouTube இப்படிப்பட்டவைகள் மூலம் கேட்கிறோம். ஆனால் இவைகளெல்லாவற்றிலும் கர்த்தருடைய சத்தியமான சத்தத்தைக் கேட்க முடியவில்லை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று சத்திய வசனத்தோடு கூட கொடுக்கப்படும் இலவச பரிசு பொருளாகிய ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்க முடிகின்றது. ஊழியர்களும் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்க விரும்புகின்றார்கள். இதனால் ஜனங்களிடமும், ஊழியக்காரர்களிடமும் சத்தியம் நிலை நிற்பதில்லை. இதனால் வேதம் கூறுவது போன்று தீர்க்கதரிசியும், ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள். என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று (எரே.23:11) ஆலயத்தில் பொல்லாப்புகள் பெருகிகொண்டே போனதினிமித்தம் கர்த்தர் ஆராதனைகளை வெறுத்து தடை செய்திருக்கிறார். ஆலயத்திற்குள் பிரிவினைகள், பகைகள், போட்டி மனப்பான்மைகள், உயர்ந்தவன் என மனமேட்டிமைகள், பதவி வெறி, பணவெறி சபைக்கு சபை தடைகள், முன்பு காலத்தில் ஒரு ஆலயத்திற்குள்ளே பல பிரிவினர்கள் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கப்பட்டு ஆராதனைகளை நடத்தி வந்த சபைகள் காணப்பட்டது. அன்று அவர்கள் ஆராதனை செய்தது தேவனுடைய சத்தத்தை கேட்பதற்காக. ஆனால் இன்று அந்த சபைகள் ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தமென்று பகை, பிரிவு அதிகரித்து நீதிமன்றம் வரை சென்று கொண்டிருக்கின்றது. ஜனங்கள் சத்தியத்தை கேட்பதை மறந்துவிட்டார்கள். வேதம் கூறுகிறது 'சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.' (யோவான் 18:37) நம்மிடத்தில் சத்தியம் நிலைக்கொண்டிருந்தால் மட்டுமே அவருடைய சத்தத்தை பல விதத்தில் கேட்கவும், உணரவும் முடியும் என்பதை நாம் நன்கு அறிய வேண்டும்.


ii) அவர் பார்வைக்கு செம்மையானதைச் செய்ய வேண்டும்.


     முதலாவது கர்த்தருடைய சத்தத்தைக் கவனமாய்க் கேட்க வேண்டும். அப்படி கேட்டவற்றை வேதம் கூறுவது போன்று 'கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு; அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்' (நீதி.3:3) என்பதின் பிரகாரம் நாம் செய்வோமானால் அவர் பார்வைக்கு செம்மையானதைச் செய்ய முடியும். இன்று மேய்ப்பர்களிடமும், மந்தையாகிய ஜனங்களிடமும் சத்தியம் நிலைக்கொண்டிராதபடியால் அவர்கள் செய்வதெல்லாம் கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானதாக இல்லை. சிலர் கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானதாக இருக்க வேண்டும் என்று மனுஷரை பிரியப்படுத்தும் விதமாகவும், அவர்கள் பார்வைக்கு நன்றாய்த் தோன்றும் விதத்தில் செய்வார்கள். இப்படிப்பட்ட காணிக்கைகளை அதிகமாக பார்க்க முடியும். அதுபோன்று நன்மை என்ற பெயரில் செய்வதையும் பார்க்க முடியும். ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சத்தியத்தின்படி (அவர் பார்வைக்கு) செம்மையானதைச் செய்வது மிக மிக கடினம். அதோடு அதிகமான நிந்தைகளையும், துன்பங்களையும் கடந்து செல்ல வேண்டிவரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சத்தியத்திற்கு உலகத்தில் விலை மதிப்பு) கிடையாது. சத்தியத்திற்கு தேவனிடத்திலிருந்து மட்டுமே மகிமை கிடைக்கும். அநேகர் கூறுவதுண்டு. நாங்கள் செய்வது தேவனுடைய பார்வையில் செம்மையானதாகத்தான் காணப்படுகின்றது என்று. ஒரு சிறிய காரியத்தை மட்டும் உங்களிடம் கேட்கிறேன். வேதம் கூறுகின்றது ஸ்தீரியானவள் ஜெபம் பண்ணுகிறபோதாவது, தீர்க்கத்தரிசனஞ் சொல்லுகிறபோதாவது தலையை மூடிக்கொள்ள வேண்டும் என்று (1கொரி.11:13) இது கட்டளை. இதற்கு நாம் கீழ்ப்படிந்தால் அது தேவனுடைய பார்வைக்கு செம்மையானதாக தோன்றும், அதுபோன்று சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம் தான் தேவனுடைய பார்வையில் செம்மையானது (1பேதுரு 3:4) அப்படி இருக்கும் போது நாம் ஆலயத்தில் ஸ்திரீகளில் எத்தனைப்பேர்கள் ஜெபம் பண்ணும் போது தலையை மூடிக்கொள்ளுகிறார்கள். இதுபோன்று இன்று ஆலயத்திலும், T.V. யிலும் கர்த்தருடைய வார்த்தையைக் கூறுவதுண்டே. ஆனால் எத்தனை பேர்கள் தலைமை மூடி கொள்ளுகிறார்கள். இங்கெல்லாம் ஸ்திரீகளின் அகம்பாவத்தை (நிர்விசாரம்) தானே காணமுடிகின்றது. இவர்களிடம் இருதயத்தில் மறைந்திருக்கின்ற குணங்கள் காணமுடியுமா? அப்படியே மனுஷனுடைய பார்வையில் காணப்பட்டாலும் அது தேவனுடைய பார்வையில் செம்மையானதாக காணக்கூடுமா? சிந்தித்துப் பாருங்கள். இன்று ஆராதனை முதல் போதனைகள் வரை; இன்னும் சொல்லப் போனால் ஆலயத்திற்குள் நடக்கின்ற எல்லாக் காரியத்திலும் செம்மையானதை காணமுடிகின்றதா? ஆலயத்தில் செய்யப்படுகின்ற அநேக காரியங்கள் மனுஷனை மட்டும் பிரியப்படுத்துவதாக தான் அதிகமாக காணமுடிகின்றது. ஆத்துமாவை நித்திய அழிவிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைகள் சபைக்குள் அதிகமாக காணமுடியாது என்பது உண்மை . ஆகவே இந்நாட்களிலாவது சத்தியத்தை உணர்ந்து பரிகாரியாகிய கர்த்தர் விரும்புவதை செய்ய நம்மை ஆயத்தப்படுத்துவோம்.


iii) அவர் கட்டளைகளுக்கு செவிக்கொடுக்கவேண்டும்:


     'கட்டளை' என்பது பிறப்பிக்கப்படுவது. கட்டளை பிறந்தால் நாம் நிச்சயமாக செவிக்கொடுத்தே ஆகவேண்டும். இன்று நாம் அனைவரும் உலகமெங்கும்) அரசாங்கத்தின் கட்டளைக்கு உட்பட்டு, அதாவது ஊரடங்கு என்ற கட்டளைக்கு செவிக்கொடுத்து வீட்டிலே முடங்கி கிடக்கின்றோம். நாம் உலகத்திலுள்ள கட்டளைகளுக்கு அதிகமாக கீழ்ப்படிய முயற்சி செய்வதில்லை என்பது உண்மை . துணிகரமாகவே தேவனுடைய கட்டளை ஆலயங்களிலும், குடும்பங்களிலும், ஊழியங்களிலும் மீறப்படுகின்றது என்பது உண்மை . வேதத்தில் ஆதிமனிதர்களாகிய ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கட்டளையை மீறினார்கள். இதனிமினித்தம் அது பாவமாக தோன்றியது. வேதம் கூறுகிறது மனைவிகள் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலும் கீழ்ப்படிய வேண்டுமென்றும் (எபேசியர் 5:24) புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்களென்றும், புருஷர்கள் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவரிகளில் அன்பு கூறவேண்டுமென்றும் (எபேசியர் 5:25,28) பிள்ளைகளே உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்களென்றும் (எபேசியர் 6:1) இப்படியாக எல்லோருக்கும் அநேக கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் நம்மில் அநேகர் இந்த  கட்டளைகளை மீறுகின்றவர்களாகவேகாணப்படுகின்றார்கள். இதனால் நாம் பாவம் செய்கின்றவர்களாக காணப்படுகின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வேதம் கூறுகிறது 'பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். (1சாமு.15:22) ஆகவே ஆராதனை, காணிக்கை செலுத்துதல், ஸ்தோத்திரபலியை செலுத்து தல் இவற்றைக் காட்டிலும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செவிக்கொடுத்தலே உகந்ததாகும் என்பதை நாம் இந்நாட்களிலாவது உணர்ந்து கொள்ளுவோமாக.


iv) அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொள்ள வேண்டும்:


     நியமங்கள், சட்டங்கள் எல்லாம் ஏற்றப்படுவதாகும். உலகமெங்கிலும் காணப்படுகின்ற அநேக சட்டங்களும், நியமங்களும் வேதாகமத்தின்படி ஏற்றப்பட்டதாகும். நாம் உலகத்தின் சட்ட திட்டங்களுக்கும் சபையின் சட்ட திட்டங்களுக்கும் நாம் பயப்பட்டு அவைகளை கைக்கொள்ளுவோம். ஆனால் அதிகமானோர் தெய்வ பயமில்லாத காரணத்தினால் தேவனின் சட்டங்களையும் நியமங்களையும் கைக்கொள்ளுவதே கிடையாது. வேதம் கூறுகிறது அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொள்ள வேண்டுமென்று. ஆனால் நாம் நம்முடைய வாழ்க்கையில் அநேக இடங்களில் தெரிந்தும், தெரியாமலும் தவறிவிடுகின்றோம் என்பது உண்மை . வேதம் கூறுகிறது புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள். புருஷன் மரித்த பின்பு புருஷனைப் பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். (ரோமர் 7:2) என்பதும் பெரியோர் முதல் சிறியோர் மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றும் எந்தப்புருஷனும் தன் வீட்டுக்குத் தானே அதிகாரியாயிருக்க வேண்டும் என்றார். (எஸ்தர் 1:20,22) இப்படியே பல நியமங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவைகள் கிறிஸ்துவை அறிந்த ஊழியக்காரர்கள் முதல் ஜனங்கள் வரையிலும் கைக்கொள்ளுவதில்லை. வேதம் கூறுகிறது 'என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறி நடந்தால், அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன் (சங்.89:31,32) என்கிறார். இன்று நம்முடைய மீறுதலினால் நாம் தண்டிக்கப்பட்டு உள்ளோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆனாலும் அவர் கிருபை நம்மை விட்டு விலகாமல் இருக்கிறது. ஏனென்றால் மறுபடியும் மனந்திரும்பி கனிகொடுக்கவே. இதை உணர்ந்து தேசத்தில் வந்திருக்கின்ற வாதையை விரட்டி அடிக்க நம் ஒவ்வொருவரும் பரிகாரியாகிய கர்த்தரிடம் சேர்வதற்காக  அவருடைய வசனமென்ற சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அதன்படி அவர் பார்வைக்கு செம்மையானதைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிக்கொடுத்து, அவர் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு தேவனுடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள நம்மை நாம் ஆயத்தப்படுத்துவோமாக. அதற்கு மற்றவர்களின் உதவியோ, கூடி ஆராதிப்பதோ அவசியமாக தோன்றவில்லை. அவசியமானது நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்ட சத்திய வசனமே. தேவன் தாமே இந்நாட்களில் அதற்கு உதவி புரிவாராக. ஆமென்.


சகோதரி. ஹெலன் ஷீன், கேரளா 09946301633