ஆசிரியர் உரை
கிறிஸ்துவுக்குள் அருமையான வாசகர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள்.
கொரோனா கிரிமி அனைவரையும் பயமுறுத்தி வருகின்றது. இதுவரையிலும் அறியப்பட்டிராத சம்பவங்களை அறிந்து வருகின்றோம். ஆப்பிரிக்கா நாட்டிலே 60க்கும் மேற்பட்ட பேராயர்கள் 30க்கும் மேற்பட்ட முதிர்ந்த ஆயர்கள் கொரோனாவால் மரித்து விட்டார்கள். அமெரிக்கா உலக அளவில் பெரிய சாவை எதிர்கொண்டிருந்தாலும், அதிபர் டிரம்ப், தைரியமாய், தனித்து நின்று கொண்டிருப்பதை காணமுடிகின்றதே. உண்மையான தேவனுடைய பிள்ளைகள் எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தைரியமாய் இருக்கின்றவர்களாகவே காணப்படுவார்கள்.
தனிமைப்பட்டு இருங்கள், தனித்து இருங்கள், வீட்டிற்குள்ளே இருங்கள் என்று அறிவிக்கப்பட்டதினால், ஆலயங்களில் ஆராதனைகள் நிறுத்தப்பட்டன. சபைகள் கூடவில்லை . திறப்பின் வாசல் போன்ற மாதாந்தர கூடுகைகளும் கூட்டப்படவில்லை. ஆராதனைகள் இல்லாததினால் சபைமக்கள் அதிகமாய் கஷ்டப்பட்டு வருகின்றார்கள் என்று சபை போதகர்கள் தான் அதிகமாய் பேசியும் வருகின்றார்கள். சபை மக்களை கவனிக்க யாரும் இல்லையே என்று சபைத் தலைவர்கள் தான் துடித்தும் காணப்படுகின்றார்கள். காணொளி மூலம் சபை மக்களை ஆறுதல்படுத்தியும் வருகின்றார்கள். சீக்கிரம் கூடிவிடுவோம், சீக்கிரம் வழக்கமான ஆராதனைகள் தொடங்கப்பட்டு விடும், தடைசட்டம் நீக்கப்பட்ட பின் பெரிய எழுப்புதல் உண்டாகி விடும் என்றெல்லாம் தலைவர்கள் கூவி கூவி அறிவிக்கின்றார்கள்.
அருமையானவர்களே! யார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்? யார் யாரை தனிமைப்படுத்தக் கூடும்? தனிமைப்படுத்தப்பட்டால் யார், யாருக்கு ஆபத்து? உண்மையான தேவனுடைய பிள்ளைகளை எவருமே எவ்விதத்திலும் தனிமைப்படுத்த முடியாதே. தேவனோடு என்றும் ஐக்கியம் கொண்டு வாழ்பவர்களை தேவனுடைய சமுகத்திலே எப்பொழுதும் காணப்படும் வாழ்வைக் கொண்டவர்களை யார் தனிமைப்படுத்தக்கூடும்? எவராலும் கூடாதே. தனிமைப்படுத்தப்பட்டவர்களாக கருதப்படுவர்கள் எவருமே தேவனுடைய பிள்ளைகளாகவே இருக்க முடியாது. அவர்கள் மனந்திரும்பினவர்களும் அல்ல. மனந்திரும்பாமலே அவர்கள் தங்களை தாங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இது வரையிலும் நாடகமாடினவர்கள் மாத்திரமே. தனிமைப்படுத்தப்பட்டவர்களாக கருதுகின்றவர்களுக்கு தேவனுடைய சமுகம், தேவனுடைய பிரசன்னம் அவரவர்களுடைய ஆலயங்களில், சபைகளில் மட்டுமே உள்ளது. ஆகையால் தான் ஆலயம், சபை மூடப்பட்டு விட்டதால் இவர்களே தனிமைப்படுத்தப்பட்டவர்களாகி விடுகின்றனர். இவர்களை மேய்த்து வந்த போதகர்களும் மந்தையில்லாத வெறுமையான கூடாரங்களின், அல்லது ஆலயங்களின் சொந்தக்காரராகி விடுகின்றனர். மந்தையில்லாததினால் அதன் போதகர்களும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்.
சாத்தான் எவனை விழுங்கலாமென்று கெர்ச்சிக்கிற சிங்கம் போல சுற்றி சுற்றி வகைதேடி வருகின்றான். (1பேதுரு 5:8) காட்டிலே சிங்கம் எருமை கூட்டத்தை விரட்டிச் செல்கையில், ஏதாவது ஒன்றினை கூட்டத்தினின்று தனிமைப்படுத்தி விடும். பின்பு அதனை கடித்து கொன்று தனக்கு இரையாக்கிக் கொள்ளும். இதனைப் போன்றே, தேவனைவிட்டு பிரிந்து தனித்து வாழ்பவனையே சாத்தான் அவனை தனக்கு எளிதில் இரையாக்கிக் கொள்ளுகின்றான். இயேசு கிறிஸ்து இவ்வுலகிலே வாழ்ந்த போது தன்னைச் சுற்றி 12 சீஷர்கள் இருந்தார்கள். அவர்களிலே ஒருவன் யூதாஸ். அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தான். ஆகையினால் அவனுக்குள்ளே பிசாசு புகுந்தான். அவன் இயேசு கிறிஸ்துவோடு இருந்து கொண்டே கிறிஸ்துவின் விரோதிகளோடு ஐக்கியம் கொண்டான். 30 வெள்ளிக்காசுக்கு எதிரிகளோடு உடன்படிக்கையும் செய்து கொண்டான். இயேசுவை விரோதிகளிடம் காட்டிக்கொடுக்க ஏற்ற சமயம் பார்த்துக் கொண்டே இருந்தான். ஆனால் அவன் வாயிலே முத்தம் இருந்தது. போதகரே என்று வாழ்த்தும் வாழ்த்துதலும் அவன் வாயில் இருந்தது. முடிவிலே அவனாகவே தான் தனிமைப்படுத்தப்பட்டதால் நாண்டு கொண்டு தன் ஆக்கினையை அடையப் பெற்றான். இயேசு கிறிஸ்துவோடு என்றும் காணப்படுவேன் சாவிலும் பிரியமாட்டேன் என்று கூறிய பேதுரு, இயேசு கிறிஸ்து கைது செய்யப்படும் போது அவரை விட்டு விட்டு தனித்து தூரமாய் பின் சென்றானே. இயேசு கிறிஸ்துவோடு இதுவரையிலும் இருந்த பேதுரு கிறிஸ்துவின் பாடுகளோடு இணைந்து இருக்க முடியவில்லையே. அதனால் ஆபத்து அவனுக்குத்தானே வந்தது. ஆண்டவரை அறியேன் என்று, சத்தியம் பண்ணவும் அவரை சபிக்கவும் செய்தானே. ஆனாலும் ஆண்டவர் அவன் பேரில் அன்பு கொண்டு அவனை மீட்டுக்கொண்டார். மற்றுமொரு சீஷனாகிய யோவான் இயேசுகிறிஸ்து விசாரிக்கப்படுகையில் பிரதான ஆசாரியனின் விசாரணை மண்டபத்திலே தானும் இணைந்து நுழைந்து கொண்டானே. (யோவான் 18:15) தனிமைப்படுத்தப்படாதவனாய் சிலுவையின் அடிவாரத்திலே இறுதிவரையிலும் காணப்பட்டதினால் இயேசுவின் தாயை கவனிக்கும் பொறுப்பினை ஏற்க வேண்டியதாயிற்றே. இது ஆண்டவருக்கு மிகுந்த சமாதானத்தை கொடுத்ததே.
அருமையானவர்களே, உண்மையான தேவனுடைய பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படவே மாட்டார்கள். அவர்களை தனிமைப்படுத்தவும் முடியாது. பரி. பவுல் கூறுவதைப் போன்று எதுவும் அவரை கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிக்கக்கூடாதே. மரணமோ, எதுவானாலும் பரி. பவுலை பிரித்து விடக் கூடாமல் ஆண்டவராடே ஐக்கியம் கொண்ருக்கச் செய்ததே. இதே ஐக்கியத்தினை நாம் இன்று கொண்டிருக்கின்றோமா? தனிமைப்படுத்தப்படுவோமானால் நமக்குத்தான் ஆபத்து. சாவது நிச்சயம். மரணபள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர். அவருடைய கோலும் தடியும் என்னைத் தேற்றும். அவருடைய கோல் வழி தப்பி சென்று விடாதபடி என்னைப் பிடித்துக் கொள்ளும் எனக்கான சகலவற்றையும் எனக்கு அளிக்கும். அவருடைய தடி என் சத்துருக்களை என்னை விட்டு விரட்டி என்னைப் பாதுகாத்துக் கொள்ளும் என்பதுதானே. தேவனைத் தன்னோடு கொண்டுள்ளவர்களின் ஆசீர்வாதம்.
யோனா தீர்க்கத்தரிசி தேவனுடைய சித்தம் செய்யாமல் தனித்தவனாய் ஓட நினைக்கையில் தேவனுடைய கரம் அவனை தொடர்ந்து பற்றிக் கொண்டதே. அஞ்ஞானியான கப்பல் தலைவன் தூங்கிக் கொண்டிருந்த யோனாவை எழுப்பி ஜெபிக்க கேட்டுக் கொண்டானே. எத்தனை பரிதாபமான அனுபவம். யோனா கேட்டுக் கொண்டபடிக்கு சமுத்திரத்திலே அவன் வீசப்பட்டாலும் அவனுக்கான ஒரு மீனை ஆண்டவர் ஆயத்தம் செய்தாரே. கடலின் ஆழத்திலே கடல் பாசியின் நெருக்கத்திலே கண்ணைத் திறக்கக் கூடாதவனாய், முழங்கால் கூட போடக் கூடாதவனாய் மீன் வயிற்றின் குடல் நாற்றத்திற்குள்ளேயிருந்து ஜெபித்த யோனாவின் ஜெபத்தை ஆண்டவர் கேட்டாரே. தேவன் அவனை தனித்து விடவில்லையே. தேவனுடைய கரம் அவனோடிருந்ததே. 3 இரவு 3 பகல் காலம் கழிந்த பின் தேவனால் பயன்படுத்தப்பட்டானே. ஆகையினால் அருமையானவர்களே, சௌகரிகமான நாட்கள் வரும் என்று எதிர்பாராதீர்கள். ஏமாற்றமே அடைவீர்கள். தேவன் தம்முடைய பிள்ளைகளே ஒருபோதும் கைவிடவே மாட்டார். உலகத்தின் முடிவுபரியந்தம் அவர் நம்மோடு இருப்பேன் என்று பொய்யுரையாத தேவன் நமக்கு வாக்குபண்ணியுள்ளாரே. அவர் இவ்வுலகிலே நமக்கு முன்பாக நடந்து போகின்றவராகவே இருக்கின்றார். நாம் அவருடைய அடிச்சுவட்டிலே நடந்து சென்றிடுவோமாக. படகிலே சென்ற சீஷர்கள் அலைகளையும், காற்றையும் கண்டு பயந்தார்கள். அற்ப விசுவாசமே நமக்கு காணப்படலாம். ஆனால் ஆண்டவரோ நம்மோடு கப்பலின் அடிவாரத்திலே படுத்து இருக்கின்றாரே. அன்று சீஷர்கள் யூதர்களுக்கு பயந்து அறையை பூட்டிக் கொண்டு அடைபட்டு கிடந்தார்கள். சனிக்கிழமை முழுவதும் இருட்டாய் காணப்பட்டது, நம்பிக்கை அற்றது போல காணப்பட்டது. ஆனால் ஞாயிறு அதிகாலை, கல்லறையின் கல் புரட்டப்பட்டதே. இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தாரே. நம்மை எல்லாரையும் எல்லா பயத்திலிருந்தும் மீட்டாரே. உலகமெங்கும் செல்லும் தைரியம். ஆவியின் நிறைவு நமக்கு அளிக்கப்பட்டதே. உலகின் சகல அதிகாரங்களையும் அடிமையாக்கும் அதிகாரம் நமக்கு அளிக்கப்பட்டதே தேவனுடைய புத்திரர்களாய் ராஜ்யங்களின் சுதந்தரவாளிகளாய் நம்மை அழைப்பித்துள்ளாரே. அவருக்கே மகிமையும், கனமும் உண்டாவதாக. ஆமென்.
சகோ. பிலிப் ஜெயசிங்
ஆசிரியர், சத்திய வெளிச்சம்,
நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்.
"கோரானா" "Covid-19"
நம் அரசின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தடுவோம்
சமீக இடை வெளியை நமக்கு நாமே நடைமுறை படுத்திடுவோம்
நம் கைகளை அவ்வப்போது கழுவிட மறவாதிருப்போம்,
நன்றி ..............ஆசிரியர்