"சத்திய வெளிச்சம்" மே மாதம் : 2020 - தேவ செய்தி (What we learn from Covid-19)

அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார்


நீங்களும்... எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.  (யோவான் 15:26,27)


     இயேசு கிறிஸ்து தாமே சிலுவைக்கு செல்லும் சில நாட்களுக்கு முன்பாகவே தம் வாயினாலேயே இவ்வாக்கியங்களை கூறியுள்ளார். ஏன் இதனைக் கூறினார் என்றால் (16:1) நாம் இவ்வுலகிலே இடறலடையாதபடிக்கே இவைகளைக் நமக்கு கூறியுள்ளார் என்றும் அவர் அறிவித்துள்ளார்


     ஆவிக்குரிய நம் வாழ்க்கையில் இது நம் யாவருக்கும் மிக மிக முக்கியமான கட்டளையும் கற்பனையும் ஆகும். இதனை மீறுபவர்கள் இடறல் அடைகிறவர்களாகவும் இடறல் செய்கிறவர்களாகவும் காணப்படுவார்கள் என்பதே உண்மை . ஏசாயா கூறுகின்றார் (ஏசாயா 4:15) அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். ஒசியா தீர்க்கன் கூறியுள்ளார் (ஓசியா 14:9) இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளை கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள். நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள். பாதகரோ வென்றால் அவைகளில் இடறி விழுவார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முதல் முதலாக சாத்தானானவன் சோதிக்கின்ற போது அவரை எப்படியாவது சிலுவைக்கு சென்று சுவிசேஷத்தை நிறைவேற்றிவிடச் செய்யாதபடிக்கு அவரை பரிசுத்த நகரத்திற்கு கொண்டு போய் தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி, நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும் (செத்து மடியும்), ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார். உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்று எழுதியிருக்கிறது என்பதாய் தவறுதலாய் அர்த்தங்கொள்ள சோதிக்கின்றான். தேவனோ சாத்தானை தம் வார்த்தையினாலே ஜெயித்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே கூறியும் உள்ளார். (மாற்கு 9:42) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப் போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்  என்பதுவேயாகும்.


     அருமையானவர்களே இந்த கோரோனாவினால் அடைபட்டிருக்கும் இந்நாட்களில் ஆண்டவர் தாமே கூறிய “சாட்சி" என்ற கட்டளையை சற்று கவனமாய் தியானிப்பது நலமாயும் ஏற்றதுமாயிருக்கும் என்று ஆண்டவருக்குள் நம்புகின்றேன். இயேசு கிறிஸ்து ஒருவருக்கே கனமும் மகிமையும் உண்டாவதாக.


     மேற்கண்ட வசனத்தில் (யோவான் 15:26,27) யார் யாரைக் குறித்து சாட்சி. அவர் என்பவர் யார்? பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும் பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளனே அவர். அவர் பரிசுத்தாவியானவரே. என்னைக்குறித்து என்பதில் எனக்கு என்பது யார்? இது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே ஆவார். இவ்வுலகிலே பரிசுத்தாவியானவர் நமக்குள்ளே வாசஞ் செய்கிறவராயிருந்தால் அவர் இயேசு கிறிஸ்துவை மட்டுமே சாட்சியாக அறிவிக்கின்றவராயிருப்பார். தேவனுடைய பிள்ளைகளாகிய நாமும், உண்மையான தேவனுடைய பிள்ளைகளாயிருப்போமானால் நாமும் இயேசு கிறிஸ்துவை மட்டுமே சாட்சியாக அறிவிக்கின்றவர்களாயிருப்போம்.  ஆவிக்குரிய இந்நாட்களில் எங்குமே இந்த சாட்சியை காணமுடியவில்லை, கேட்க முடியவில்லை யென்பதே உண்மையாகும். இன்று உலகமெங்கிலும் ஆவிக்குரிய செயற்பாடுகள் யாவுமே கோரோனாவினால் நடைபெறக்கூடாதவைகளாக முடக்கப்பட்டுள்ளதாக ஒரு தோற்றத்தை காண்பித்து வருகின்றது. இது ஒரு மாயமான தோற்றம் மட்டுமே. எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டு, ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு தேவனுடைய வார்த்தையின்படிக்கே இடித்து தகர்த்தப்பட்டு விட்டது. எருசலேம் நகரமும் அதன் கோட்டையுமாய் தகர்ந்து அழிக்கப்பட்டது. அது தோற்றத்தினால் அழிக்கப்பட்டிருந்தாலும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அடிமைகளாக்கப்பட்டிருந்தாலும் எஸ்றா, நெகேமியா, தானியேல் போன்ற நீதிமான்களின் உள்ளங்களிலே இடிக்கப்பட்ட தேவாலயமும், பரிசுத்த நகரமும் கட்டப்பட்டுக் கொண்டேதானிருந்தது. இன்று கொரோனாவினால் ஆவிக்குரிய செயற்பாடுகள் வெளித்தோற்றத்தின்படிக்கு முடக்கப்பட்டிருந்தாலும், நீதிமான்களின் உள்ளங்களில் அவைகள் முடக்கப்பட வில்லையே. முடக்கப்படவும் முடியாதே. ஆவிக்குரியவர்கள் இதனை அறிவார்கள்.


     இன்று நாம், இடித்து தகர்க்கப்பட்ட, முடக்கப்பட்ட ஆவிக்குரியவைகளையே திரும்ப எடுத்துக்கட்ட யாவருமாய் ஒருமித்து எழும்ப அழைக்கப்படுகின்றோம். அன்று கற்களால் கட்டப்பட்ட தேவாலயமும் எருசலேம் பரிசுத்த நகரமும் எழுப்பி கட்டப்பட்டது. ஆனால் இன்று, கற்களால் கட்டப்பட்ட எந்த ஆலயமும், கூடாரமும் இடிக்கப்படவில்லை . ஆனால் ஆவிக்குரிய ஆலயம் அவரவர்களுக்குள் இடிந்து கிடக்கிறது. இது கோரோனாவினால் அல்ல, அவைகள் ஏற்கனவே இடிந்துள்ளது. கோரோனா என்பது தேவனுடைய வருகையின் அடையாளம் மாத்திரமே. இக்கோரோனாவின் நாட்களிலாவது, ஆண்டவரின் வருகையின் சமீபத்தை அறிந்த பின்பாவது நம் ஆவிக்குரிய ஆலயத்தை கட்டி எழுப்ப இன்று நாம், எஸ்றா, நெகேமியா, தானியேல் போன்று எழும்ப வேண்டுமே.


     ஆவிக்குரிய சபைகளில், பரிசுத்தாவியானவர் ஒருவர் இருப்பாரானால் அவர் இயேசு கிறிஸ்துவை மட்டுமே சாட்சியாக அறிவிக்கின்றவராயிருப்பார். நீதிமான்களாக அறிவித்துக்கொள்ளும் நாமும், உண்மையாய் நீதிமான்களாயிருப்போமானால் நாமும் இயேசு கிறிஸ்துவை மட்டுமே சாட்சியாக அறிவிக்கின்றவர்களாய் இருப்போமே. ஆனால் இன்று நீதிமான்களாகிய எஸ்றா, நெகேமியா, தானியேல் போன்றவர்களை இந்நூற்றாண்டிலே எங்கும் காணமுடியவில்லையே. இந்த கோரோனாவின் அழைப்பு இவர்கள் போன்ற நீதிமான்களை உருவாக்கிடவே. இவர்களால் மட்டுமே இடித்து தகர்க்கப்பட்ட தேவனுடைய ஆவிக்குரிய ஆலயத்தை கட்டி எழுப்ப முடியும் என்பதை அறிந்துணர்ந்திடுவோமாக. இன்று அநேகர் தங்களைத் தாங்களே எஸ்றாக்களாக, நெகேமியாவாக, தானியேலாக அறிவித்து வருகின்றார்கள். இது மாயையே, எவரும் இடறல் அடைந்து விடக்கூடாது என்பதே தேவனுடைய இறுதிக்கட்டளையாகும்.


     இன்று உலகமெங்கிலும் கோரோனாவினால் அழிவு பெருகி வருகிறது. தேசங்களுக்கு ஷேமம் ஏற்பட 11நாளா.7:14யிலே வேதவசனம் இவ்விதமாய் கூறுகின்றது. என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபம் பண்ணி, என் முகத்தை தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால் அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன் என்பதாகும். இவ்வாக்கியத்திலே காணப்படுகின்ற நான்கு கட்டளைகளாவன


இயேசு கிறிஸ்துவின் நாமத்தினை தரித்தவர்கள் தங்களைத் தாழ்த்தி


இயேசு கிறிஸ்துவை நோக்கி ஜெபம் பண்ணி


இயேசு கிறிஸ்துவின் முகத்தை தேடி


தங்கள் பொல்லாத வழிகளை விட்டு இயேசு கிறிஸ்துவினிடம் திரும்பினால்


பரலோகத்திலிருக்கிற தேவன் இவற்றினை கண்டு இவையனைத்திலும் இயேசு கிறிஸ்துவை மட்டுமே சாட்சியாக அறிவிக்கப்பட்டதாக காணப்பட்டு அறியப்படுகின்ற போது


அன்னார்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது


அன்னார்களின் தேசங்கள் ஷேமத்தை பெறுகின்றது. ஆமென்.


     ஒரு தேசம் ஷேமத்தை பெறுவதற்கு மேற்கண்டவைகள் மட்டுமே தேவை. இவைகளினாலே இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஆவியானவரும் சாட்சியாக அறிவிக்கின்றார். நாமும் இயேசு கிறிஸ்தவை மட்டுமே சாட்சியாக அறிவிக்கின்றவர்களாயிருக்க வேண்டும். ஒரு தேசம் ஷேமம் பெறுவதற்கு மேற்கூறியவைகளுள் இந்நாட்களில் கொண்டாடப்பட்டு வரும் ஆராதனைக்கு இடமே இல்லையே. இது இக்காலத்திலே சுமார் கடந்த 15 ஆண்டுகளிலிருந்து தான் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாயையான இடறலுக்கான பக்தியின் வேஷம் மட்டுமே ஆகும். இந்தவிதமான ஆராதனை இவ்வுலகில் ஒழியும் வரை தேசங்கள் ஷேமம் அடைய முடியாதே. இயேசு கிறிஸ்துவை சாட்சியாக அறிவிக்கப்படும் வரையிலும் தேசங்கள் ஷேமம் அடையப் பெறாதே. இந்த சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றவர்கள் அல்லது தாமதிக்கின்றவர்களே இடறுதலை ஏற்படுத்துகின்றவர்கள் ஆவர் என்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தாழ்மையாய் அறிவித்துக் கொள்கின்றேன்.


     தாழ்மைப்படுதல் என்பது என்ன? இருதயத்தை கிழித்து, வஸ்திரங்களை அல்ல, தேவனுடைய சமுகத்தில் முகங்குப்புற விழுந்து கிடந்த யோவானைப் போன்று, மார்பினை அடித்துக் கொண்டு வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல் கிருபையை வேண்டிய ஆயக்காரனைப் போன்று, சீஷர்களின் பாதங்களைக் கழுவிய இயேசுவைப் போன்று, தைலக்குப்பியை உடைத்து இயேசுவின் பாதத்தில் பூசி, தலை மயிரினால் கண்ணீரால் நனைத்து துடைத்த மரியாளைப் போன்று, யார் இக்காலத்திலே தேவனுடைய சமுகத்தில் விழுந்து கிடக்கின்றார்கள். பரிசுத்த ஏசாயா கூட ஐயோ அதமானேன் நான் அசுத்த உதடுள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன் என்று கதறுகிறவனைப் போன்று யார் கதறுகின்றார்கள்? பரி. பவுல் தன்னுடைய 5வது வருட கிறிஸ்துவின் சேவைக்கு பின்பாகவே பரிசுத்தவான்கள் எல்லாரிலும் தான் சிறியவன் என்றும் (எபே.3:8) தனது12வது வருட சேவையின் போது தன்னை பாவிகளில் பிரதான பாவி யென்றும் (1தீமோ.1:15) தனது 25வது வருட கால சேவையின் போது தன்னை அகால பிறவி யென்றும் அறிவித்துள்ளாரே. அனுபவம் கூடும் போது  தாழ்மையின் தரம் கூடுகின்றதே. இவர்களைப் போன்று எந்த ஊழியக்காரன், போதகர், சபை முன்பில் திரளான கூட்டத்தில் தன்னைத் தானே தாழ்த்தி ஜெபித்தவர்களை இந்நாட்களில் காணக்கூடுமோ? ஆனால் தானியேல், எஸ்றா, நெகேமியா தங்களைத் தாழ்த்தி விழுந்து கிடந்தார்களே. தானியேல் 10:9யில் முகங்கவிழ்ந்து தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தாரே, யாருக்காக?


     இயேசு கிறிஸ்துவினை நோக்கி ஜெபித்தல் என்பதினை இயேசுகிறிஸ்து தாமே பிதாவை நோக்கி ஜெபித்ததை யோவான் 17ஆம் அதிகாரத்திலே வாசிக்கின்றோமே. கெத்சமனேயில் இரத்த வேர்வை வடிய ஜெபித்துள்ளாரே. பரி. பவுலும் அப். 20:9யிலே வெகு மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் கர்த்தரைச் சேவித்தேன் என்றும் (அப்.20:20) யில் இரவும் பகலும் 3 வருஷகாலமாய் ஜெபித்தேன் என்பதினையும் எபே.3:19யில் அனுக்கிரகம் வேண்டி எவ்வளவாய் ஜெபித்துள்ளார் என்பதினையும் வாசித்தறிகின்றோமே. இவ்விதமாய் ஜெபிக்கின்றவர்கள் யார் யார்? முழு இரவு ஜெபம் என்றும், உபவாச ஜெபம் என்றும் செய்து வருகின்றோமே. எஸ்தரைப் போன்று, தானியேல் எஸ்றா, நேகேமியா போன்று ஜெபித்துள்ளோமா இல்லையே. ஏதோ சில நிமிடங்கள் ஜெபித்து விட்டு ஜெபம் கேட்கப்பட்டதற்காக ஸ்தோத்திரம் என்று தானே கூறி ஜெபத்தை முடித்துக் கொள்கின்றோம். யோபு பக்தன் கூறுகின்றார் (யோபு 16:20) என் கண் தேவனை நோக்கி கண்ணீர் சொரிகிறது. தாவீது ஜெபிக்கின்றார் சங்.6:6 இரா முழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி என் கட்டிலை நனைக்கிறேன் என்றும் இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று என்றும் சங்.42:3ல் ஜெபித்துள்ளாரே, ஏரேமியா புலம்புகிறார் (9:1) என் ஜனமாகிய குமாரத்தி கொலை யுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும் பகலும் அழுவேன் என்றாரே. இவ்விதமாக ஜெபிக்கும் நீதிமான்களை இந்நாட்களில் காண முடிய வில்லையே


   பரிசுத்தாவியானவர் வரும் போது அவர் இயேசு கிறிஸ்துவை மட்டுமே அறிவிக்கின்றவராயிருக்கின்றார். இவர் என் நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று ஆவியானவர் புறாவைப் போல் இறங்கி இயேசு கிறிஸ்துவை மட்டுமே சாட்சியாக அறிவித்துள்ளாரே. யோவான் ஸ்நானகன்கூட இதோ உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி என்று இயேசு கிறிஸ்துவைத்தானே சுட்டிக் காண்பித்தார். ஆவியானவரின் கிரியைகளாகிய பற்பல அற்புதங்களைத் தானே இப்பொழுது எங்கும் மேடை மேடையாக அறிவிக்கப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவை எவரும் சாட்சியாக அறிவிக்க வில்லையே. பாஸ்டர் ஐயாவிடம் கூறினேன். சபையில் அறிவித்தேன் அற்புதம் அடைந்தேன் என்பது தானே. இக்காலத்து சாட்சிகள். ரூ. 5000/- காணிக்கை கொடுத்தேன் 5 லட்சம் வீடு கிடைத்தது. வியாபாரம் பெருக வியாபாரிகள் ஐக்கிய கூடுகைக்கு வாருங்கள் என்பது தானே இக்காலத்து ஊழியங்கள். இதனை எஸ்றா நெகேமியா, தானியேல் போன்றோர் செய்ய வில்லையே. எங்கும் ஊழியர்களின் நாமமேயல்லாமல் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படவில்லையே. ஊழியர்களின் ஜெபம் என்று சாட்சி பகரப்பட்டாலே, இயேசு கிறிஸ்துவின் மகிமை பறிக்கப்பட்டு விட்டது என்பது தானே உண்மை


     . தங்கள் பொல்லாத பாவங்கள், அக்கிரமங்களை யார் அறிக்கை செய்கின்றார்கள். பாவம் செய்யாத நீதிமானாகிய தானியேல், ஜனங்களின் பாவங்களை அக்கிரமங்களை நான் செய்ததாக தானியேல் பயங்கரமாய் வெளிப்படையாய் பாவங்களை அறிக்கை செய்தாரே. தாவீதின் பாவ அறிக்கையை நாம் நன்கு அறிவோமே. பாவங்கள் ஒவ்வொன்றாய் அறிக்கை செய்யப்பட வேண்டுமே. பொதுவான பாவ அறிக்கை பாவ அறிக்கையாகாதே. மாதக்கணக்காய் பாவ அறிக்கை செய்த பரிசுத்தர்கள் உண்டே. 100 பக்கங்களாக தங்கள் பாவங்களை ஞாபகப்படுத்தி எழுதி பாவங்களை ஒவ்வொன்றாய் அறிக்கை செய்த நீதிமான்கள் உண்டே. இன்று எந்த ஊழியக்காரர், போதகர் பிரசங்க மேடையிலே தன் மார்பினை அடித்து நானே பாவி என்று வெளிப்படையாய் சத்தமாய் ஜெபித்தவர்கள் எவரையும் இவ்வுலக மெங்கிலும் காணமுடியவில்லையே. எங்களிலும் பாவங்கள் இருந்தால் மன்னியுங்கள் என்று மாயக் கண்ணீரை ஜனங்கள் முன்பாக வடித்து ஜெபிக்கும் ஊழியர்களின் ஜெபம் பாவ அறிக்கை ஜெபமாகாதே. கண்ணீரை மட்டும் வடிப்பதும் பாவ அறிக்கையுமாகாது. பாவங்களை ஒவ்வொன்றாய் தன் வாயினால் அறிக்கை செய்து அதன் ஆக்கினையை இயேசு கிறிஸ்து தாமே தன்னில் ஏற்றுள்ளாரே என்று உண்மை வேதனையில் துடித்து இயேசு கிறிஸ்துவிடம் ஜெபித்து மன்னிப்பு கோறும் ஜெபம் மட்டுமே ஜெபமாகும். இவைகள் மட்டுமே மன்னிக்கப்படும். இதனையே தானியேல், எஸ்றா, நெகேமியா, ஏசாயா, ஏரேமியா போன்றோர் செய்தார்கள்.அவர்கள் ஜெபங்களையே பரலோகத்தின் தேவன் கேட்டுள்ளார்.


     நினிவே பட்டணம் எங்ஙனம் ஷேமம் அடைந்தது, நினிவேயின் ராஜா தன் சிங்காசனத்தை விட்டு எழுந்து தான் உடுத்தியிருந்த உடுப்பைப் கழற்றிப் போட்டு, இரட்டை உடுத்திக் கொண்டு, சாம்பலில் உட்கார்ந்தான். தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம் பண்ணினபடிக்கு மிருகங்களும் ஜனங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு தேவனை நோக்கி உரத்த சத்தமாய் கூப்பிடவும் அவரவர் தம் தம் பொல்லாத வழியையும் தம் தம் கைகளிலுள்ள கொடுமைகளையும் விட்டுத் திரும்பினார்களே. இது அல்லவா பாவ அறிக்கையின் ஜெபம். இதனை இக்காலத்திலே யார் ஜெபிக்கின்றார்கள். தாங்களும் ஜெபியாமல் மக்களையும் ஜெபிக்க வழி நடத்தாமல் யாவரையும் இடறலடையச்செய்யும் ஜெபத்தையும், பொதுவான பாவ அறிக்கையையும் செய்து, ஜனங்களை சந்தோஷப் படுத்தியும் திருப்தி படுத்தியும் அனுப்ப இவர்கள் தேவர்களா? ஆராதனை என்பது எதற்கு? யாரைப் பிரியப்படுத்த? ஜனங்களை மாயையான இடறலுக்காக வழியிலே திசை திருப்பத்தானே.. துதிகளில் மத்தியில் வாசம் செய்கிறவர், துதிகளில் பிரியம் கொள்பவர் என்று பரிதானங்களை அள்ளி கொடுக்கும் ஊழியர்கள் தானே. இன்று உலகமெங்கிலும் பெருகியுள்ளனர். பின்பு எப்படி தேசத்திற்கு ஷேமம் கிடைக்கும். தேசம் ஷேமம் அடைந்தாலும் இக்கூட்டத்தார் பலோகத்தினை அடையப் போவதில்லையே. தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு தேவனுக்கு பிரியமுண்டாக நம்மைத்தாமே பரிசுத்தமும் ஜீவபலியாக ஒப்புக் கொடுப்பதே நாம் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனையாகும். கைகளை தட்டுவது ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தலாகாதே.


     தேவனுடைய வருகை மிக சமீபமாகியுள்ளது. கொரோனாவே அதற்கு ஓர் அடையாளம். கொரோனா ஒழிய அல்ல தேவனுடைய வருகைக்கு ஆயத்தமாகவே நாம் இந்த அடைப்பட்ட நாட்களில் ஆண்டவரின் பாதங்களில் வீழ்ந்திடுவோமாக. ஆவியானவர் இயேசு கிறிஸ்துவுக்கே சாட்சி நாமும் அவரையே சாட்சியாக அறிவித்திடுவோமாக. அவரவர்களின் சபைக்கு சாட்சியாக அல்ல, அவரவர்களின் சபைத் தலைவர்களுக்கு சாட்சியாக அல்ல இயேசு கிறிஸ்துவுக்கே மட்டுமே அவருக்கு சாட்சியாகவே நம் அறிவிப்பதே நமது இலட்சியமாக வேண்டும். ஆண்டவர் அளிக்கும் 1000 அற்புதங்கள் அல்ல ஆண்டவர் அளிக்கும் தம் கிருபையே மேலானது. இயேசு கிறிஸ்துவின் கிருபையினை மட்டுமே இத்துன்ப நாட்களில் வேண்டிடுவோமாக


    இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே கனமும், துதியும், மகிமையும் உண்டாவதாக. ஆமென்.


பிலிப் ஜெயசிங்,


நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்.