பாவங்கள்
என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. ஏசாயா 58:1
அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தைகளையும் அவருடைய கற்பனைகளையும் மீறுவதே பாவம். நம் வாழ்க்கையில் பாவம் எப்படியெல்லாம் கடந்து வருகின்றது என்பதைக் குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதமும் கண்களினாலே மனிதன் எப்படியாய்ப் பாவம் செய்கிறானென்றும் மிகவும் சீக்கிரமாய் எளிதாக நம்மில் கடந்து வருகின்ற ஒரு பாவம் கண்ணின் வழியாய் வருகின்றது என்பதையும் குறித்து நாம் சிந்திக்க போகின்றோம்.
கர்த்தருக்குள் பிரியமானவர்களே, மத்.6:22 கூறுகிறது, கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது. உன் கண் தெளிவாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். 23-ல் உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும் என்றும் கூறுகின்றது. இருட்டு எனப்படும் போது அது மனிதனுக்கு பயத்தை கொடுக்கிறதாயும் வாழ்க்கையின் பிரகாசத்தை மறைக்கின்றதாயும் மனிதனின் அறிவீனத்தை குறிக்கின்றதாயும் , முன்னேற்றத்தை தடை செய்கின்றதாயும் வேதாமத்தின் பொருளை உணரமுடியாத ஆவிக்குரிய இரகசியங்களை கண்டுகொள்ள தடைவிதிக்கின்றதாயும், பாதாளத்தின் அடையாளமாயும், மடமையின் சின்னமாயும், இப்படி எத்தகைய நன்மைக்கும் தடையானதாகவும் கருதலாம். பிரகாசமானது வரும் போது இருளானது மறைந்து விடுகிறது. கண்களினால் நாம் இவ்வுலகத்தில் அனைத்தையும் பார்க்கின்றோம். இந்த பார்வையானது சரியானதாக இருந்தால் நம் வாழ்க்கை வெளிச்சம் நிறைந்ததாக காணப்படும். அப்படியானால் நம் வாழ்வின் லட்சியம் பரலோகமாகத்தான் இருக்கும். நாம் தேவ நீதியை செயலாற்றுகின்றவர்களாக இருப்போம். தேவ வசனங்களின் செயலாக்கமும், ஆவியின் கனிகளும் நம்மில் காணப்படும். உலகத்தைக் குறித்தான கவலைகள் நம்மில் இருக்காது. இப்படியாய் பரிசுத்தமும் இயேசுவுக்கடுத்தான காரியங்களையும் நம்மால் காண்பிக்க முடியும். இது நம் கண்கள் நேராய்க் நோக்கினால் மட்டும் தான் சாத்தியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
லூக்கா 11:34லும் கண்ணைக் குறித்தும் அதன் பார்வையைக் குறித்தும் காண்கின்றோம். அருமையானவர்களே நம் பார்வை எப்படியானது என்று சற்று சிந்திப்போமா. முதற்பார்வை பாவமல்ல என்று கூறுவர். ஆனால் இரண்டாம், மூன்றம் பார்வைகள் பாவமே. முதல் பார்வையால் ஈர்க்கப்பட்டுத்தான் இரண்டாம் பார்வை நடக்கிறது. முதல் பார்வையில் இச்சையென்ற பாவம் ஈர்க்கப்படாவிட்டால் இரண்டாவது நாம் பார்க்கமாட்டோம். நம் வாழ்வில் எத்தனையோ காரியங்கள் ஒரு பார்வையோடு முடிந்துள்ளன. ஆனால் சிலவற்றை மீண்டும், மீண்டும் பார்க்க ஆசைப்படுகின்றோம். அதில் இச்சை கொள்ளுகின்றேம். அது நம்மை பாவத்துக்குள்ளாக்கி இருட்டுக்கு நேராக வழி நடத்துகின்றது. மண் தொடங்கி மாளிகை வரையிலும் விண் துவங்கி நிறங்கள் வரையிலும் மழலையின் வாகனம் முதல், மாவிமானங்கள் வரை, சிறு மீன் துவங்கி, சுறாமீன் வரையிலும், ஓட்டை காலணா துவங்கி பலகோடி பணம் வரையிலும் மனித இச்சை மாறவுமில்லை , அது குறைவதுமில்லை. காரணமென்ன எல்லாம் பலமுறை பார்க்கப்படுகின்றன. ஊடகங்கள் வழியாவது அடைந்தே தீர வேண்டுமென்ற ஆத்திரத்தோடும், இச்சையோடும் அனைத்தையும் மனிதன் நெருங்குகின்றான். பார்வையில் காந்த தன்மையை வைத்துக் கொண்டே செயல்படுகின்றனர். கண்களும், கன்ணிமைகளும் அலங்கரிக்கப் படுகின்றன. சித்திரங்கள் தீட்டப்படுகின்றன. அனைத்தும் இவ்வுலகை கவருவதற்கே இப்படிப்பட்டவைகள் சரீரத்தையும் அதன் சிந்தைகளையும் இருளுக்கு நேராய் அழைத்து செல்கின்றது. இச்சைகளை தூண்டிவிட்டு பாவத்தை பருகவைக்கிறது.
நம் பார்வைகள் நேராய் மூளைக்கு சென்று அங்கிருந்து இச்சையாகவும், தீய சிந்தனைகளாகவும் வெளிவருகின்றன. பரலோகத்திற்கேற்ற சிந்தனைகள் மனிதர்களில் துளியும் இல்லையே. சிந்தியுங்கள். நாம் சரியாக பார்க்கின்றோமா? இந்நாட்களில் ஊடகங்களில் பெருகின்ற விளம்பரமெல்லாம் இச்சையை கூட்டுகின்றதாக, வயதிற்கேற்ப உணர்வுகளை தவறான வழிக்கு நடத்துகின்றதாயிருக்கின்றதே. பார்ப்பது தவறல்ல. பார்த்துவிட்டு அதை ஆராய்ந்து சரியெது, தவறெது என்பதை நிதானித்தறிவதே மிக கடினமானது. இதற்காக நம்மை பக்குவப்படுத்த வேண்டும். ஆதி மனிதர்களான ஆதாமும், ஏவாளும் பாவத்திற்குள்ளானது கண்களின் இச்சையினால் தானே. (ஆதி.3:6-ல்) புசிப்புக்கு நல்லதும் பார்வைக்கு இச்சிக்கப்படத்தக்க தமாயிருந்ததென்று வாசிக்கின்றோம். உலகின் முதல் பாவம் தேவனுடைய கட்டளையின் மீறுதலினால் வந்ததும் பார்வைதான் அதற்கு காரணமாக இருந்தது என்பதை நாமுணர வேண்டும். இன்றும் நம்முடைய வாழ்வின் பாவங்களில் மிக மிக முக்கிய பங்கு பார்வையினால் தான் வருகின்றது என்பதை மறுக்க முடியாது. நீதி.4:25 கூறுகிறது 'உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது. உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய் பார்க்கக்கடவது என்று. நீதி.23:26 கூறுகின்றது உன் கண் என் வழிகளை நோக்குவதாக என்று. இவ்வுலகத்தின் படைப்புகள் அனைத்துமே தேவனுக்குரியவைகள் அவைகளை நாம் பார்க்கும் போது கர்த்தருடைய செயலின் வழிகளை தான் நாமுணரவேண்டும். அல்லாமல் அதன்மேல் இச்சைக்கொள்ளக்கூடாது.
தேவனுடைய வழிகளை நாம் நோக்கினால் நிச்சயமாக பரலோகம் செல்வோம். நம்முடைய கண்களை அதற்காக ஆயத்தப்படுத்துவோம். வாழ்க்கையை ஒளியாக மாற்றி மறுமையில் நித்திய வாழ்வைசுதந்தரிப்போம். அதற்காக கர்த்தரின் பாதம் சரணடைவோம். உலகத்தை தாக்கின மகா வியாதிலிருந்து நம்மை காத்தாரே. பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவாகுவோம். பரமன் பாதம் சேர நம்மை ஆயத்தப்படுத்துவோம்.
சகோ. ஷீன் சைரஸ், கேரளா. cell: 09447735981