தேவ செய்தி, மார்ச் 2020

“யோசுவா ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்“ (உபா: 34:19)


இஸ்ரவேல் மக்களை கானானுக்குள் செல்ல வழிநடத்தினவர்கள் மோசேயும், யோசுவாவுமே ஆவர். இவர்களுள் மோசே இஸ்ரவேல் மக்களை யோர்தானுக்கு இக்கரைக்கு மட்டுமாகவே கடந்து வரச்செய்து, தானும் கானானுக்குள் செல்லக்கூடாமல் மரித்தும் விட்டான். இனியும் மக்களை கானானுக்கு வழிநடத்திச் செல்ல யோசுவா நியமிக்கப்படுகின்றான். இதுவரையிலும் யோசுவா மோசேக்கு பணிவிடைக்காரனாகவே இருந்துள்ளார். இப்பொழுது மோசேயின் பணியினை தொடர்ச்சியாக யோசுவா கடைபிடித்து நடப்பிக்க தேவனுடைய கட்டளையின்படிக்கு மோசே யோசுவாவின் தலையின் மேல் தன் கைகளை வைத்து ஜெபிக்கையில் யோசுவா ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான் என்று வாசிக்கின்றோம். இதுவரையிலும் மோசே ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான் என்று வாசிக்க முடியவில்லை. சாலொமோன் கூட அவன் கேட்டுக் கொண்டபடிக்கு அவனுக்கு விசேஷித்த ஞானம் அளிக்கப்பட்டது என்று தானே அறிகின்றோம். ஆனால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்படவில்லையே. சிம்சோனை எடுத்துக் கொண்டால் அவன் கர்த்தருடைய ஆவியினால் நிறையப்பட்டான் என்று தானே வாசிக்கின்றோம். ஆனால் அவன் ஞானத்தினால் நிறையப்படவில்லையே.


மோசே பழைய ஏற்பாட்டின் தலைவனாயிருந்து, நியாயப்பிரமாணம் கற்பனைகளை கர்த்தரிடம் பெற்று மக்களுக்கு அளிக்கின்றான். ஆனால் யோசுவாவோ, புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பனையாயிருக்கின்றான். யோர்தானுக்கு அடுத்ததாக கானானின் சுதந்தரமே. இடையில் வனாந்தரம் எதுவும் இல்லை. ஆகவே இந்நாட்களில் வாழும் நாம் யாவருமே ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட வேண்டியது மிக மிக அவசியமாகின்றது. ஞானத்தின் ஆவியினாலே மாத்திரமே இக்காலத்து கள்ளப் போதகர்களையும், கள்ளத் தீர்க்கத்தரிசிகளையும் அடையாளம் காணக்கூடும் என்பதே உண்மையாகும். ஞானத்தின் ஆவியினாலேயே, உண்மையான இரட்சிப்பினை அடையப்பெற்றவர்களாயும் புத்தியுள்ள ஆவிக்குரிய வீட்டைக் கட்டுகிறவர்களாயும் தேவனுக்கு நன்மையும் பிரியமும் உண்டாகத்தக்கதான வழியிலே நடக்கிறவர்களாயுமிருப்பார்கள் என்பதே உண்மையும் சத்தியமுமாயிருக்கிறது. கானான் மாத்திரமே நமக்கு இலக்காக இருக்கிறது. (Next Stop from Jordan is Heaven)


மோசே இதுவரையிலும் இஸ்ரவேல் மக்களை கறவலாடுகளைப் போல, மெதுவாகவே நடப்பித்து ஒரு மந்தையை கூட்டிச் சேர்ப்பது போன்று நடத்தி வந்தான். ஆனால் இஸ்ரவேல் மக்களோ முறுமுறுக்கின்றவர்களாகவே வாக்குவாதம் செய்கின்றவர்களாகவே காணப்பட்டார்கள். ஆகையினால் அவர்கள் நேர்வழியாய் கானானுக்குள் செல்லக்கூடாமல் வனாந்தர மார்க்கமாய் 40 வருடங்களாக கடக்க வேண்டியதாயிற்று. மோசேயின் நாட்களில் ஜனங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட (Super natural) அற்புதங்களையே கண்டு அனுபவித்தார்கள். வானத்திலிருந்து வருடக் கணக்காக மன்னா பொழியப்பட்டது. பெருங்காற்று வீசி காடைகள் பெறப்பட்டன. சிவந்த சமுத்திரம் இரண்டாக பிளக்கப்பட்டு அவற்றினுடே மெதுவாகவே நடந்து கடந்து சென்றார்கள். அதற்கு துணையாக மேகஸ்தம்பம் அக்னிஸ்தம்பம் அவர்களை வழிநடத்தியது. பாறையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வந்தது. ஆனால் யோசுவாவின் நாட்களிலோ, சிவந்த சமுத்திரம் போன்று யோர்தான் குறுக்கிட்டாலும், தேவன் வேறுவிதமாகவே யோசுவாவை நடப்பிக்கச் செய்கின்றார். அதற்காக அவனுக்கு ஞானத்தின் ஆவி அவசியமாயிற்று. இருவரையும் ஆவியானவரே நடப்பித்தாலும் யோசுவா நடப்பிக்கப்பட்ட விதம் வெவ்வேறானதே. யோசுவா ஜனங்களை மெதுவாக நடப்பிக்காமல் தீவிரமாகவே நடப்பித்தான் என்று யோசு. 4:10 யில் வாசிக்கின்றோம். யோசுவாவின் நடவடிக்கைகள் எல்லாமே அதிரடியாகவே காணப்பட்டது. இரவோடு இரவாக கடந்து செல்லவும் நேரிட்டது. யோர்தானுக்கு அடுத்தபடியாகவுள்ளது கர்த்தர் வாக்குப்பண்ணின தேசமாகிய கானானாகும். கானானுக்குள் கால் பதித்த மாத்திரத்திலே யுத்தங்களை நடப்பிக்க வேண்டியதும் ஆயிற்று. சுமார் 31 யுத்தங்களை நடப்பித்தே கானானை சுதந்தரிக்கின்றான். (action oriented) ஆகவே அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டதினால் மோசே கடைபிடிக்காத கீழ்கண்ட காரியங்களை செயல்படுத்துகின்றான்.


உடன்படிக்கை பெட்டியை யோர்தானுக்கு நடுவாகவும், ஜனங்களுக்கு பின்பாகவும் நிற்கப் பண்ணினான். பெட்டியை சுமக்கின்ற லேவி புத்திரர்கள் பொறுமையாய் முறுமுறுப்பில்லாமல் சுமந்து நிற்கின்றார்கள்.


12 கோத்திரத்திற்கான கற்கள் நாட்டப்படும் வரையிலும் சுமந்து நிற்கின்றார்கள். யோர்தானை கடக்கப் பண்ணின சம்பவத்தினை பின்வரும் சந்ததிகளுக்கு ஞாபகார்த்தமாக அமைய கோத்திரத்திற்கு ஒரு கல்லாக 12 கற்களை எடுத்து வரச் செய்து தேவனின் அற்புத ஞாபகார்த்த அடையாளமாக பதிப்பிக்கின்றான்.


கானானுக்குள் பிரவேசித்த முதல் நாளில் தானே கருக்கான கத்திகளை உண்டாக்கி இரண்டாம் விசையாக இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணுவிக்கிறான். கானானுக்குள் வேதனையோடு நுழைகின்றார்கள். இவற்றிலும் மக்கள் முறுமுறுப்பில்லாமல் விருத்தசேதன வேதனையை சகிக்கின்றார்களே. விருத்தசேதனம் கூறுவது என்ன? தமக்கு வேதனையாயிருந்தாலும் நாம் யாவரும் தேவனுடைய மக்கள் மாத்திரமே என்பதாகும்.


மோசேயின் குறைவுகளை, ஒருபோதும் குறிப்பிட்டு யோசுவா கூறி ஜனங்களின் ஆதரவினை தனக்கு சாதகமாக பெருக்கிக் கொள்ளவில்லையே.


யோசுவா ஜனங்களை நோக்கி உங்களை பரிசுத்தம் பண்ணுங்கள் கர்த்தர் நாளைக்கு அற்புதம் செய்வார் என்பதே அவரின் அன்றாட போதனையாயிருந்தது.


யோசுவாவின் ஒவ்வொரு முயற்சியும் தேவன் அளித்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிப்பது மட்டுமே, கானானை அடைவது மட்டுமே.


அருமையானவர்களே நாம் வாழ்ந்து வரும் இந்நாட்கள் கானானுக்குள் சமீபமாயுள்ள காலம், கடைசி காலம், மெதுவாக செல்லும் நாட்களெல்லாம் கடந்து போய்விட்டன. தீவிரமாய் செயல்பட வேண்டிய நாட்களிலேயே இருக்கின்றோம். நமக்கு யுத்தங்கள், போராட்டங்கள், உபத்திரவங்கள் மட்டுமே உண்டு. உபத்திரவத்தின் வழியாகவே கானானுக்குள் பிரவேசிக்க வேண்டும். பாவ அரக்கர்களை விட்டு வைக்கக் கூடாது. சடிதியாய் இரவோடு இரவாக அழித்தே தீர வேண்டும். யோர்தான் என்பது மரண யோர்தான் அல்ல, யுத்தங்களின் ஆரம்பம், உபத்திரவங்களின் ஆரம்பம் மாத்திரமே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், நமக்கு வாக்குப் பண்ணுகிறார் ஏசா. 41:10 யின்படி நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன், என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன், நான் உனக்கு சகாயம் பண்ணுவேன் என்று அல்ல நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்பதே. பலப்படுத்தியென்றால் பலவீனப்படுத்தும் படியான போராட்டங்கள் உபத்திரவங்கள் உண்டு என்பதே ஆகும். ஆனால் திகைக்க வேண்டாம். ஆண்டவர் நம்மை பலப்படுத்தி தம் வலது கரத்தினாலே கடந்து வரச் செய்திடுவார் என்பதே உண்மையாகும். உபத்திரவங்களே கிடையாது. மேன்மேலும் ஆசீர்வாதமும் செழிப்பு மட்டுமே என்று கூறும் பொய்யான தீர்க்கத்தரிசனங்களை நம்பி மோசம் போய்விடாதீர்கள். ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டு போலியான ஊழியர்களை கண்டுக்கொள்ளுங்கள்.


உபத்திரவங்களில் சோதனைகளில் அகப்படும்போது அவற்றினை சந்தோஷமாய் எண்ணுங்கள் (யாக். 1:2) நம்முடைய விசுவாசம் உண்மையாயிருந்தால் நிச்சயமாய் மகிழ்ச்சியாயிருப்போம், சோர்ந்திடவே மாட்டோம். ஆண்டவர் பேதுருவிடம் கூறியபோது சாத்தான் உன்னை புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன் என்றுதானே கூறுகின்றார். பெரும்பாடுள்ள ஸ்திரீயைப் பார்த்தும், எரிகோ குருடனிடமும், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று தானே கூறினார். சோதனையின் காலங்களும் நாட்களும் நம்மை ஆண்டவரிடம் கிட்டிச் சேர்ந்திடவே செய்கின்றது என்றும் ஆண்டவரையே சார்ந்திடவே செய்கின்றது என்பதும் உண்மையே. உபத்திரவங்கள் இல்லையேல் ஆண்டவரிடம் அண்டிடுவது இல்லாமலே போகுமே


சோதனைகளும் உபத்திரவங்களும் ஞானத்தின் ஆவியின் நிறைவினால் நமக்கு பொறுமையையும் பொறுமையாய் சகித்தலையுமே கற்றுக் கொடுக்கிறது (யாக். 1:4) ஞானத்தினால் நிறையப்படாவிட்டால் பொறுமையை இழந்தவராய் ஆண்டவரை மறுதலிக்கின்றவர்களாய் மாறிவிடுவோமே. ஞானமே நமக்கு பொறுமையை கற்றுக் கொடுத்து நம்மை பூரணப்படுத்துகிறது. துன்பங்களை பொறுமையாய் சகிக்க விரும்பாதவன் தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதங்களையும், செழிப்பையும், நன்மைகளையும் பெறலாமென்று நினையாதிருப்பானாக என்பதினையே வாசித்து அறிகின்றோம். (யாக். 1:7) இவைகள் மட்டுமல்ல, பாடுகளுக்கு பின்பாக மட்டுமே மகிமைகளை அறிகின்றோம், அடைகின்றோம் (1 பேது.1:11). பாடுகள் இல்லையானால் மகிமையும் இல்லையே. ஆகையினால் (வ.13) மனதின் அறையை கட்டிக் கொண்டு தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட வேண்டுமே. தாவீது தீர்காயுசும், ஐசுவரியமும்,  முதிர் வயதுள்ளவனுமாயிருந்து மகிமையுள்ளவனாய் மரணமடைந்தான என்று 11 நாளா. 29:28 யில் வாசிக்கின்றோம். தீர்காயுளையும், முதிர்வயதினையும், ஐசுவரியமும் வெளிப்படையானது. வெளியிலிருந்தும் பெற்றுக் கொள்கின்றோம். ஆனால் மகிமையுள்ளவனாய் என்பது தேவனே நமக்குள்ளேயிருந்து அருளப்படுகின்றதாகும். இதனையடைய நாம் உபத்திரவங்களினுடே, பொறுமையாய், தேவன்பேரில் மாத்திரம் விசுவாசமாய் அவரையே சார்ந்து வாழ்ந்திட வேண்டும்.


உபத்திரவங்களை அனுமதிக்கின்ற ஆண்டவர் அவற்றிலே நாம் அமிழ்ந்து போய்விடச் செய்யமாட்டாரே. உனக்கு துணையாகவே இருக்கின்றேன் என்பதினையே கூறுகின்றார். நாம் நம்முடைய ரூ.2000 நோட் ஒன்றினை வங்கியில் செலுத்த கொடுக்கையில் வங்கி அதிகாரி அதனை ஆய்வு (Scan) செய்கின்றான். அவன் அதனை ஆய்வு செய்கின்ற போது நமக்கு பயம் எதுவும் ஏற்படுவதில்லையே. நமக்குத் தெரியும் இந்த நோட்டின் மதிப்பு, இது கள்ள நோட் அல்ல என்றும் உறுதியாய் தெரியும் போது நாம் கலங்குவது இல்லையே. இதுபோன்றே நாம் கவலையோ சோர்வினையோ அடைந்திடவே கூடாதே. நாம் ஆண்டவரையே சார்ந்திட வேண்டும், பற்றிட வேண்டும், இதுவே தேவனைப்பற்றும் விசுவாசமாகும்.


யோசேப்பின் சம்பவத்திலே யோசேப்பு, தன் சகோதரனாகிய பென்யமீனை தந்திரமாய் வரவழைத்து, அவனைப் பிடித்து இவன் அடிமையாக்கப்பட்டுள்ளான் என்று கூறியபோது, எவ்வளவு வேதனை மற்ற 10 சகோதரர்கள் பட்டார்கள். இந்த சம்பவத்திலே பென்யமீனுக்கு உபத்திரவத்தை கொடுத்தவர் ஒரே இரத்தினாலான, ஒரு தாய்க்குப் பிறந்த சகோதரன் யோசேப்பு தானே. பென்யமீனுக்கோ இதர சகோதரர்களுக்கோ யோசேப்பு யார் என்று தெரியாது. யோசேப்பு பென்யமீனை அடிமையாக்கியதில் அவனை யோசேப்பு கொடுமையாய் நடத்தவில்லையே. நடத்தவும் மாட்டாரே ஏன்? அவன் அவனுடைய சொந்த தம்பியாயிற்றே. இவ்விதமாகவே நம்மை நேசிக்கின்ற ஆண்டவரே நம்மை உபத்திரங்களுக்குள் உட்ப்படுத்துகின்றார். நம்மை அழித்துப் போடவே மாட்டாரே. நம்மீது அளவு கடந்த அன்பு உண்டே. இதனையே அவருடைய பிள்ளைகளாகிய நாம் அனுபவித்து வருகின்றோம். நாம் நம்முடைய உபத்திரவங்களை பொறுமையாய், சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவைகள் நம்மை பூரணமான வாழ்வுக்குள்ளே வழிநடத்துகின்றதாகும்.


பூரண வாழ்வுக்குள்ளே என்பது, லட்சாதிபதியாக, கோடீஸ்வரனாக நம்மை மாற்ற அல்ல, இச்சைக்கும் உலக கேட்டுக்கும் தப்பி ஆண்டவருடைய திவ்விய சுபாவத்திற்கு 100% பங்குள்ளவர்களாகிட வேண்டும் என்பதே (11 பேது. 1:4) அவர் நம்மை சோதனைகளுக்குள் உட்படுத்தி, புடமிட்டு பொன்னாக மாறப்பண்ணுவதே தேவனுடைய சித்தமும் திட்டமுமாயிருக்கிறது. தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட நாம் மண்ணின் வாசனையிலிருந்து பொன்னின் வாசனையை பெற்றிட வேண்டுமே. எபி. 12:10 யின்படிக்கு ஆண்டவருடைய பரிசுத்தத்தில் 100% பங்குள்ளவர்களாகிட வேண்டுமே. ஆண்டவரின் அடிச்சுவட்டில் நடந்து அவருடைய சாயலுக்கு ஒப்பாக நம் சுபாவங்களில் அவரைப் போன்று 100% பரிசுத்தமாகப்படுகின்றவர்கள் மாத்திரமே பரலோகிலே நித்திய காலமாய் அவரோடு வாழ்கின்றவர்களாகி விடுகின்றனர். 99% பரிசுத்தமடைந்திருந்தாலும், அவனை ஆண்டவர் அங்கிகரிப்பதில்லையே. அவர்கள் பரலோகத்தினை சுதந்தரிப்பதுமில்லையே. 


விதைக்கிறவன் உவமையில் நாம் கற்றுக் கொள்ளுகிறது என்ன? நல்ல நிலத்தில் விழுந்த விதை ஒன்று 30, 60, 100 ஆக பலன் கொடுத்தது என்றால் 30% பலன் பெற்றவனுக்கு 70% வேதனையும் நஷ்டம் தானே. ஆனால் இது நிரந்தரம் அல்ல. 60% பலன் பெற சமீபமாயிருக்கிறதே. 60% பலன் பெற்றிருந்தால் இதிலும் 40% வேதனையும் நஷ்டம் தானே. இதுவும் நிரந்தரம் அல்ல. 100% பலன் சமீபமாயுள்ளதே. ஆகவே ஒன்று 30, 60, 100 ஆக பலன் கொடுக்கும் என்பதினால் 100% தேவனுடைய திவ்விய சுபாவத்தையும் தேவனுடைய பரிசுத்ததையும் படிப்படையாய் அடைந்திடுவோமென்பதே உண்மை . அதனால் வேதனை சோதனை என்பது ஒரு பொருட்டே ஆகக் கூடாது என்பதனையே கற்றுக் கொள்கிறோம். முடிவிலே நாம் பரி. பவுலைப் போன்று நிருபங்களை எழுதக் கூடியவர்களாய், மாறிடுவோமே. பவுலைப் போன்றே ஓட்டத்தை முடித்தேன், நித்திய ஜீவனை பற்றிக்கொண்டேன் என்று பவுலுடனே நாமும் கூறிடலாமே ஆமென். இவ்வகையான வாழ்விற்காகவே தேவன் நம்மை அழைத்துள்ளார். ஆகையினால் ஞானத்தின் ஆவியினால் மட்டுமே நிறையப்பட நம்மை 100% அர்ப்பணித்திடுவோமாக. போலியான உலக கேட்டுக்கும் இச்சைக்கும் 1% கூட இல்லாமல் தப்பிடுவோமாக. 99% பரிசுத்தமுள்ளவனுக்கு நரகம் மட்டுமே நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் துன்பங்களை சகித்து பொன்னாய் விளங்கிடுவோமாக ஆமென்.


சகோ. பிலிப் ஜெயசிங்., நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்