சத்திய வெளிச்சம் - மார்ச் 2020 - பெண்கள் பகுதி - தேவ செய்தி

பெண்கள் பகுதி


கர்த்தருக்குக் கீழ்ப்படிந்த குடும்பம்


நீ என் சொல்லுக்கு கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார் என்றார்    ஆதி. 22:18


கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே


கர்த்தருக்குள் கீழ்ப்படிதல் என்பது குடும்ப வாழ்க்கையில் மிக மிக முக்கியமான. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் என்று (எபே. 5:21) வேதம் கூறுகின்றது. புருஷனுக்கு கிறிஸ்து தலையாயிருக்கிறார் (1கொரி. 11:3). ஆகையால் புருஷன் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஸ்திரீக்கு புருஷன் தலையாயிருக்கிறார் (11:3). ஆகையால் புருஷனுக்கு எந்தக் காரியத்திலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (எபே.5:24). சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்படிய வேண்டும் (எபே. 5:23,24). பிள்ளைகள் பெற்றாருக்கு கர்த்தருக்குள் கீழ்ப்படிய வேண்டும். (எபே. 6:1) இப்படியாக ஒவ்வொருவரும் கர்த்தருக்கேற்கும்படி கீழ்ப்படியும் போதுகர்த்தர் நம் குடும்பங்களை ஆசீர்வதிப்பார் என்பது உண்மை . ஆனால் குடும்பங்களிலுள்ளவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதினால் வரும் நிலையை உணர்ந்து கொள்ளாதவர்களாகவே கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது உண்மை. ஆகையால் தான் ஜனங்கள் ஆசீர்வாதங்களுக்காக கர்த்தருக்குப் பலி (ஆராதனை) செலுத்துவதற்காய் மிகவும் விருப்பத்தோடு காணப்படுகின்றார்கள். ஜனங்கள் நினைப்பது இன்ன சபையில் சென்று ஆராதித்தால் மட்டுமே ஆசீர்வாதங்கள் கிடைக்குமென்றும் இன்னார் ஜெபித்தால் (அ) அந்த ஊழியக்காரரின் ஆராதனைக்கு சென்றால் மட்டும் தான் ஆசீர்வாதம் கிடைக்குமென்று தங்களையேவஞ்சிக்கின்றவர்களாக ஏமாற்றுகின்றவர்களாக, ஆசீர்வாத வெறி பிடித்து கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டே காணப்படுகின்றார்கள் என்பதும் உண்மை


.வேதம் கூறுகின்றது கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும், பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம் என்று (1 சாமு. 15:22) கூறுகின்றது. ஏன் இந்த வசனத்தை அறிந்தும் உணராமலிருக்கின்றீர்கள். சிந்தித்துப்பாருங்கள். நம்குடும்ப வாழ்க்கையிலும், சபைகளிலும் கர்த்தருடைய வசனத்திற்கும் கீழ்ப்படிவதை முக்கிய பங்காக எடுத்துக் கொள்ளாமலிருப்பதினால், முழுமையாகவே ஜனங்கள் தெய்வ பயம் அற்றவர்களாக காணப்படுகின்றார்கள் என்பதும் உண்மை


.நாம் சிந்திப்பதற்கு எடுத்துக் கொண்ட வசனத்தைக் குறித்து சிந்திப்போமானால், ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைக்கு அல்லது சொல்லுக்கு கீழ்ப்படிந்ததினால் மட்டுமே கர்த்தர் அவனுக்கு ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுகிறார் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். அதுவும் எப்படிப்பட்ட ஆசீர்வாதம் என்று பார்ப்போமானால் ஒரு தனி மனிதனுக்கோ, அல்லது அவன் குடும்பத்திற்கோ மட்டுமல்ல ஆபிரகாமின் சந்ததிக்குள் காணப்படுகின்ற சகல ஜாதிகளுக்கும் ஆசீர்வாதத்தைக் கொடுப்பதாக கர்த்தர் ஆணையிடுகிறார். அப்படியென்றால் நம் குடும்பம் முழுவதும் நம் தலைமுறைகள் முழுவதும், அதோடு சகல ஜனங்களும், இந்தசகல ஜனங்களும் என்று சொல்லும் போது இன்ன சபையென்று அல்ல, எல்லாகிறிஸ்தவ மக்களும் (கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அனைவரும்) ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதுதான் தேவனுடைய விருப்பம். ஆகவே தான் கிறிஸ்தவ ஜனங்கள் கர்த்தருடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். ஒரு பாடலில் இப்படியாக எழுதப்பட்டு அதை அநேகர் மிகவும் விருப்பத்துடன் பாடுவார்கள் (மலையாள பாடல்)


வருகிறது வருகிறது என்னுடைய அற்புதம் வருகிறது


ஆபிரகாம் ஆசீர்வதித்ததுபோல என்னுடைய ஆசீர்வாதம் வருகிறது என்று


உண்மையில் ஆபிரகாமின் ஆசீர்வாதம் வரும். ஆனால் ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்பட்டது எதினால் என்பதை நாம் அறிய வேண்டாமா? அதைக் குறித்து ஏன்ஜனங்களுக்கு உணர்த்தாமலிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆபிரகாமின் ஆசீர்வாதம் அவனுடைய குடும்பத்திற்கு மட்டும் உரியதல்ல என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய மக்கள் தங்கள் குடும்பம் மட்டும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த ஆசீர்வாதம் உலகத்திற்குரியது மட்டுமல்ல, நித்தியத்திற்குரியதுமே. சிலர் நினைப்பது ஐசுவரியம் என்பது மிகுந்த செல்வ செழிப்பு மட்டுமென்று. ஆனால் ஐசுவரியம் என்பது தயவு, பொறுமை, நீடிய சாந்தமும் அடங்கும் என்பதையும் (ரோம.2:4) நாம் அறிய வேண்டும்


ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாக கீழ்ப்படிந்திருந்தான் என்பதை வேதத்தின் மூலம் அநேக இடங்களில் வாசித்து அறிந்து கொள்ள முடிகின்றது. முதலாவது நாம் பார்க்கும் போது, கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கும் போ என்றார் (ஆதி. 12:1) அதுமட்டுமல்லாமல் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். (12:3) ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையாக கீழ்ப்படிந்து கர்த்தர் சொன்ன பிரகாரம் விட வேண்டியவற்றை விட்டு விட்டு ஏன், எதற்கு என்று கேட்காமல் கர்த்தர் காண்பித்த தேசத்திற்குப் போனான். கூடவே அவன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தாங்கள் சவதரித்த (சம்பாதித்த, தேடிக்கொண்ட)ஜனங்களையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டுப் போனான் (12:5). அவனோடே கூட போனவர்கள் ஒருவரும் ஆபிரகாமிடத்திலோ கர்த்தரிடத்திலோஏன், எதற்கு என்று கேட்காமல் தங்கள் எஜமானனாகிய ஆபிரகாமுக்கு கீழ்ப்படிந்து கூட போனார்கள் என்று அறிந்து உணர முடிகின்றது. அவர்கள் ஆபிரகாமுக்கு கீழ்ப்படிந்ததின் காரணம், அவர் உத்தமன், பரிசுத்தவான், நல்ல மேய்ப்பன், நல்ல வழிகாட்டி என்று தான். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது. தலையாயிருக்கிற புருஷன், போதகன், ஊழியக்காரன், மேய்ப்பன் இவர்கள் முதலாவது தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு செவி கொடுத்து அதன்படி  ஜனங்களையும், குடும்பத்தையும் வழிநடத்திய ஆபிரகாம் போன்று காணப்பட வேண்டும்.


இன்றைக்கு நாம் பார்க்கும் போது குடும்ப தலைவன், சபை தலைவன், சபை மூப்பர்கள் இப்படிப்பட்டவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது அதிகம் கிடையாது. தேவ சத்தத்திற்கு செவி கொடுக்காமல் அநேக கேள்விகளுடன் தான் காணப்படுகிறார்கள். ஆபிரகாமுக்கு பிள்ளை இல்லாதிருந்தது. கர்த்தர் அவனுக்கு பிள்ளையைக் கொடுத்தார். அவன் தேவன் தனக்கு சொல்லிருந்தபடியெல்லாம் செய்தான். ஆனாலும் அவன் வாழ்க்கையில் பல விதமான கசப்பான காரியங்களும், துக்கமான காரியங்களும், நெருக்கங்களும் காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தேவன் ஆபிரகாமை சோதித்தார் என்றும் அறிய முடிகிறது. அதுவும் தன்னுடைய ஒரே குமாரனாகிய ஈசாக்கை பலியிடும்படி சொல்லுகிறார். தேவன் ஆபிரகாமை நோக்கி, உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்தக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய் அங்கே நான் உனக்கக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். (ஆதி. 22:2) என்று வேதத்தில் பார்க்கின்றோம். இங்கும் ஆபிரகாம் தேவனிடத்தில் ஏன், எதற்கு எப்படி சாத்தியமாகும், நீர் தந்த ஒரே பிள்ளையாண்டவனல்லவா? என்று கூட கேள்விகளை கேட்காமல் கூடவே (காலதாமதம் கூட செய்யாமல்) கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான் என்பதை தான் நம்மால் உணர முடிகின்றது. நம்மை நாம் தற்பரிசோதனை செய்வோமாக. நமக்கு தேவன் இப்படிப்பட்ட சோதனைகளை தந்தால் அதை நம்மால் முறுமுறுப்பில்லாமல், ஏன் எதற்கு என்ற கேள்விகள் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாக தாமதமின்றி உடனே செயல்படுத்த முடியுமா? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ண ப்பட்டது. (கலா. 3:6) ஆபிரகாமிற்கு தெரியும் இந்த சோதனையிலிருந்து தேவன் நம்மை எப்படியாவது தப்பித்துக் கொள்ளுவார் என்று. இந்த ஆபிரகாமைப் போன்று நாமும் நம் வாழ்க்கையில் வரும் சோதனைகளை தாண்டி செல்ல வேண்டுமானால் நம்மிடத்தில் கர்த்தருக்குக் கீழ்ப்படியும் அனுபவமிருக்க வேண்டும். அப்பொழுது நம் குடும்பத்திலுள்ள அனைவரும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும் அனுபவத்தோடு காணப்படுவார்கள் என்பது உண்மை


இங்கு சாராள் தன் புருஷனை ஆண்டவனே என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தான் என்று வாசித்து அறிய முடிகின்றது (1பேது. 3:6) ஆபிரகாமிற்கு ஆசீர்வாதம் கிடைத்தது. அவன் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததினால் மட்டுமே. அதினிமித்தம்தான் மனைவியும், பிள்ளைகளும், சகோதரர்களும், சகல ஜனங்களும் ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள். ஆகவே கீழ்ப்படிதல் என்பது குடும்பத்திலுள்ள புருஷனுக்கு மிக மிக முக்கியமானதாகும். அப்பொழுது மனைவி, பிள்ளைகள் இப்படிப்பட்டவர்களும் கர்த்தருக்கேற்கும்படி கீழ்ப்படிவார்கள். அதோடு கூட உலக ஆசீர்வாதங்களையும், நித்தியமான ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள தேவன் தாமே நம்மனைவருக்கும் கிருபை புரிவாராக ஆமென்


சகோதரி. ஹெலன் ஷீன், கேரளா 09946301633