பாவங்கள்
"என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி" (ஏசாயா 58:1)
அன்பானவர்களே
தேவனுடைய வார்த்தைகளையும், அவருடைய கற்பனைகளையும் மீறுவதே பாவம். நம் வாழ்க்கையில் பாவம் எப்படியெல்லாம் வருகிறது என்பதைக் குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதவும் பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான் என்றும் நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம் என்பதை குறித்து சிந்திப்போம்
1யோவான் 3:4-ல் இப்படி நாம் பார்க்கின்றோம், மீறுதலினிமித்தம் தான் பாவம் உலகத்தில் வந்தது என்பதை நாம் ஆதி. 3:17-ல் பார்க்க முடிகின்றது. இங்கும் தேவன் ஆதாமிற்கு அளித்த கட்டளையை அவன் மீறினதினாலே பாவம் பிறக்கின்றது. நியாயத்தையும் நீதியையும் நடப்பிக்கின்ற பிரமாணம் நம்முடைய பரிசுத்த வேதாகமம் தான். ஆகவே இதில் கூறப்படும் கற்பனைகளையும் கட்டளைகளையும், உபதேசங்களையும், நியாயப்பிரமாணமாக கருதலாம். வசனங்களை மீறி நடப்பது இதற்கு கீழ்ப்படியாமலிப்பது பாவம். பிள்ளைகளே உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள். இது நியாயம் என்றும், உங்களுக்கு நன்மையுண்டாவதற்கு பூமியிலே உங்கள் வாழ்நாட்கள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பயைாயிருக்கிறது. (எபே. 6:1,2) என்று பரிசுத்த வேதாகமத்தில் கூறப்படுகின்றதே. அநேகம் பிள்ளைகளால் இந்த வசனத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிய முடியவில்லையே. காரணம் என்ன? கனம் பண்ணுதல் எப்படியென்று இவர்களுக்கு தெரியாது. பெற்றோருடைய சொல் கேளாதது வேதத்தின்படி பாவமாக கணக்கிடப்படுகின்றது. பெற்றோரின் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படியாமலிருந்து விட்டு அது நியாயம் என்று சொல்லுகின்றவர்கள்; பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்பது தேவ கட்டளையாக வேதத்தில் கூறப்படுகின்றதே. இதனை மீறுவதே கட்டாயம் பாவம்
பெற்றோரின் சொல்லிற்கு எதிர்பேச்சோ, முறுமுறுப்போ இல்லாமல் அதனை முழுமனதோடு செய்து முடிப்பதே கனம் பண்ணுதலாக காணப்படுகின்றது. அப்படி முழு மனதில்லாமல் செய்வது கீழ்ப்படிதலாகும். ஆனால் கனம் பண்ணுதலாகாது. இன்னும் வேதத்திலே தன் சகோதரனை பகைக்கிற எவனும் மனுஷ கொலைப்பாதகன் (1யோவா. 3:15) என்று வேதம் கூறுகிறதே. இந்நாட்களில் எங்கு பார்த்தாலும் சகோதரர்களுக்கிடையே பகையை மட்டும் தானே காண முடிகிறது. அப்படியானால் அநேகரும் கொலைபாதகர்களாகத்தானே காணப்படுகின்றனர். இந்த பிரமாணம் மீறப்படுவதினாலே மனிதன் பாவத்துக்குள்ளாகிறான்.
மத். 5:23,24 நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையை செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து என்று காணப்படுகின்றது. இவ்வசனத்தை அநேகர் நினைப்பது எனக்கு யாரிடத்திலும் பகையோ, விரோதமோ, கோபமோ, இல்லையே. பின்பு நான் யாரிடத்தில் போய் ஒப்புரவாக வேண்டும் என்று. அன்பானவர்களே 23-வது வசனத்தை சரியாக வாசித்து சிந்திப்போமானால் மற்றவர்களுக்கு நம்மிடத்தில் குறைவுண்டு என்று தான் காண்கின்றோம். நமக்கு யாரிடத்திலாவது என்றல்ல, அதாவது மற்றவர் யாருக்காவது நம்மிடத்தில் பகையோ, கோபமோ உண்டு என்றால் அதைப் போய் நாம் ஒப்புரவாக வேண்டும் இல்லையென்றால் நாம் செலுத்துகின்ற காணிக்கைகளும், ஏறெடுக்கின்ற பலிகளும் கர்த்தருடைய சன்னதியில் அங்கிகரிக்கப்படாதே. மற்றவர்களுக்கு உரியவற்றை, அவர்களுக்கு விருப்பமில்லாமல் பெற்றுக் கொள்ள முயற்சிப்பது, மற்றவர்களுக்கு மனக்கசப்பையும், கஷ்டத்தையும் உருவாக்கலாம். இப்படிப்பட்டவைகளை பொருட்படுத்தாமல் நான் கர்த்தருக்காக அதிகமாய் கொடுக்கிறவர் அல்லது நாங்கள் குடும்பமாக கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோமென்றும் இவ்வுலகத்தின் ஆசீர்வாதங்களால் நிறைந்திருக்கிறார் என்றும் எண்ணி ஒப்புரவாகாமல் காணிக்கைகளையும் செலுத்தி வந்தால் அது கற்பனைக்கு விரோதமானதாகவும், காணப்படும். இதுவும் பாவமாகத்தான் கணக்கிடப்படும்.
மத். 5:37 உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் என்கிறது. பொய்யாய்ப் பேசுவதும், முன்பு பேசினதை மாற்றி பேசுவதும் அவர்கள் மாறினார்கள் என்று சொல்லி நாம் மாற்றி பேசுவதும், நான்தான் நீதியுள்ளவன், உலகத்தில் உயர்ந்த அந்தஸ்து எனக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற மேட்டிமையோடு பேசுவோமானால் இவையெல்லாம் தேவகற்பனைகளுக்கு புறம்பானதாகையால் பாவம் என்பதை மறந்து விடாதீர்கள். 39 -ம் வசனம் சொல்லுகிறது, தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். 40-ல் உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றிருக்கின்றவனுக்கு உன் அங்கியையும் விட்டு விடு என்கிறது. இங்கெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டிய நீதி கவிழ்க்கப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. இந்நிலமையிலும் அவர்களிடம் காண்பிக்கின்ற தயவை தான் கருணை என்றழைக்கப்படுகின்றது.
இயேசு தன்னை அடித்தவர்களையும், சிலுவையில் அறைந்தவர்களையும், துப்பினவர்களையும், தூஷித்தவர்களையும் மனப்பூர்வமாய் மன்னித்து, கருணை காண்பித்தது போன்று நாமும் செய்யவில்லையென்றால் அதற்கு நாம் முற்படவில்லையென்றால் நாம் முழுமையாக வசன விரோதிகளாக கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படாதவர்களாகத்தான் காணப்படுவோம். கருணை காண்பிக்க முடியவில்லையென்றால் நாம் பாவிகளாகத் தான் இருக்கின்றோம் என்பதை மறந்து விட கூடாது. ஆகவே வேத வசனங்களுக்கும் கற்பனைகளுக்கும் கீழ்ப்பட்டு பாவங்களை விட்டு விலகுவோம். கர்த்தர் கிருபை புரிவாராக. ஆமென்.
சகோ. ஷீன் சைரஸ், கேரளா. Cell: 09447735981