சத்திய வெளிச்சம், மார்ச் 2020 - ஆசிரியர் மடல்

ஆசிரியர் மடல்....


வாசகர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள்!


லெந்து நாட்களுக்குள் கடந்து வந்து கொண்டிருக்கின்றோம். சாம்பற் புதன்கிழமை என்ற ஒரு நாளினையும் கொண்டாடியும் உள்ளோம். வேதத்திலே எந்த இடத்திலும் சாம்பற் புதன்கிழமை என்று எழுதப்படவில்லை. அப்போஸ்தலர்களும் இயேசுவின் சீஷர்களும் இதுபோன்ற லெந்து, தபசு என்ற சம்பவம் எதனையும் குறிப்பிட்டதும் இல்லை. பழைய ஏற்பாட்டிலும் இதனைக் காண முடியவில்லை. ஆனால் பிரபலமான திருச்சபைகளில் மாத்திரமே இது கொண்டாடப்பட்டு வருகின்றது. 40 நாட்கள் தபசு நாட்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாம்பற் புதன்கிழமை முதல் பெரிய வியாழன் வரையிலுமாக ஞாயிறு நீங்கலாக 40 நாட்கள் ஆகும். இந்நாட்களில் உபவாசம் என்பதை விட சுய வெறுப்பின் நாட்கள் என்றும் அறியப்படுகின்றது.


சாம்பல் என்பதினை எஸ்தர் புத்தகத்தில் (4:1) வாசிக்கின்றோம், மொர்தெகாய் சாம்பலை போட்டுக்கொண்டு துயரமுள்ளவனாய் வந்தான் என்று வாசிக்கின்றோம். தானியேலின் புத்தகத்திலும் (9:3) தானியேல் சாம்பலில் உட்கார்ந்து ஜெபித்தான் என்றும் வாசிக்கின்றோம். ஆபிரகாம் கூட தான் ஆண்டவரோடு பேசும் போது இதோ தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத் துணிந்தேன் என்றும் (ஆதி 18:27) கூறியுள்ளார். ஆகையினால் சாம்பல் என்பது துக்கத்தையும், தாழ்மையினையும் குறிப்பிடுகிறது. ஆகையினால் லெந்து நாட்கள் என்பதினால், இந்நாட்களிலாவது நாம் தாழ்மையினையும் சுயவெறுப்பையும் கற்றுக் கொள்ளவும், அதிலே பழகிக்கொள்ளத்தக்கதான வாய்ப்பும் கிடைக்கின்றது. இது ஒரு நல்ல விஷயமே. ஆனால் 40 நாட்களுக்கு மட்டும் தாழ்மைப்படுவது என்பது முறையாகாது. இதனைக் கற்று அறிந்து வாழ்நாள் பரியந்தமும் தாழ்மைப்படுவதுவே அவசியமாகும்.


இந்நாட்களில் அநேகர் மாம்ச உணவை ஒதுக்கிக் கொள்கின்றார்கள். தாடியுடன் காணப்பட விரும்புகின்றார்கள். பெண்கள் பூவைத்துக் கொள்வதில்லை. சிலர் இந்நாட்களில் மட்டும் சிகரெட், மற்றும் குடியை விலக்கிக் கொள்கின்றார்கள். சிலர் ஏதாவது குறிப்பிட்ட நாட்களில் ஒருவேளை சாப்பாட்டை விலக்கி உபவாசிக்க விரும்புகின்றார்கள். இவ்வகையான 40 நாட்களின் சுயவெறுப்பு ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த உயர்வினையும் அளித்திடாது என்பதே உண்மை


ஒரு இந்து நண்பர், தன் எதிராளி ஒருவரிடம் இவ்விதமாய் கூறினார், “நான் இப்பொழுது மலைக்குப் போக மாலைப் போட்டிருக்கிறேன். மலைக்குப் போய் வந்து உன்னை இரண்டில் ஒன்றை பார்த்திடுவேன் என்று எச்சரித்துள்ளார்”. இந்த நண்பனுக்கும் 40 நாட்களுக்கு மட்டும் லெந்து சுயவெறுப்பினை கடைபிடிக்கும் கிறிஸ்தவ நண்பன் ஒருவனுக்கும் என்ன வித்தியாசம் ஒன்றுமில்லையே. 40 நாட்கள் கழித்தபின் கிறிஸ்தவ நண்பன் குடிகாரன் என்ற பெயரைத்தானே அடையப் போகின்றான். இதில் ஆவிக்குரிய நன்மை எதுவும் இல்லையே. பின் எதற்கு 40 நாட்கள் மட்டும் சுயவெறுப்பு? சாம்பற் புதன்கிழமையினைத் தொடர்ந்து பெரிய வெள்ளிக்கிழமை, அதாவது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் வரை துக்கம் கொண்டாட விரும்புகின்றோம். இந்த 40 நாட்களிலாவது நாம் பாவங்களை வெறுக்கின்றவர்களாய் காணப்படுவது நல்ல விஷயமே. நம்முடைய எண்ணமெல்லாம், ஆண்டவர் பெரிய வெள்ளியன்று அனுபவிக்கப் போகின்ற பாடுகளை மட்டுமே கண்ணோக்கிப் பார்க்கின்றது. அவருடைய சரீரம் நிலத்தை உழுவதைபோன்று போர் சேவகர்களின் சவுக்கால் உழப்பட போகின்றதே என்று எண்ணி மாம்சம் உண்ணுவதை வெறுக்கின்றோம். இயேசுவின் முகம் மரண சாயலோடு சிலுவையில் காணப்பட போகின்றதை எண்ணி தலையில் பூ வைப்பதை வெறுக்கின்றோம். ஆண்டவர் வியாழன், வெள்ளி இருநாட்களிலும் எதனையும் புசிக்காமல் பட்டினியாய் விசாரிக்கப்பட்டாரே என்று எண்ணினவர்களாய் ஒரு நேர உணவை வெறுக்க விரும்புகின்றோம். இந்த துக்க அனுசரிப்பு எல்லாமே பெரிய வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தும் விடுகின்றது.


அருமையானவர்களே, ஆண்டவருடைய சிலுவை மரணத்தினால் ஒருவனும் இரட்சிப்பினை அடைந்திடுவது இல்லை என்பதே உண்மையிலும் உண்மையாகும். நம் பாவங்களுக்காக ஆண்டவர் சிலுவை மரணத்தினால் நமக்காக கிரையம் கொடுத்துள்ளார். நம்முடைய பாவங்கள் பேரில் நமக்கு கிடைக்கக்கூடிய தண்டனையினையும் ஆண்டவர் தாமே தன்னிலே ஏற்றுள்ளார் என்பது மட்டுமே உண்மை. ஆனால் ஆண்டவரின் மரணத்தினாலே நாம் இரட்சிப்பினை அடைவதில்லையே. நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்வதினால் இரட்சிப்பினை அடைந்திடுவதில்லை It is only Repentance. நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து ஆண்டவரோடு ஒப்புரவாகுதலினாலேயே Reconciliation, ஆண்டவர் அளிக்கும் இரட்சிப்பினை பெறுகின்றோம். ஒப்புரவாகுதல் 40 நாட்களுக்குத்தான் என்றால் அது ஒப்புரவாகுதலே அல்ல. ஒரு புருஷன் தன் மனைவியோடு 40 நாட்கள் மட்டுமே ஒப்புரவாகியிருந்து ஐக்கியப்பட்டிருந்தால் அது குடும்ப வாழ்வாகிவிடாதே. நிரந்தரமாய் மனைவியோடு ஐக்கியப்பட்டிருந்தால் தானே அது குடும்ப வாழ்வு ஆகும். அதுபோன்று, பெரிய வெள்ளிக்கிழமை வரைக்குமாக பாவ அறிக்கை செய்வதினால் சுயத்தை வெறுப்பதினால் அது ஒருபோதும் இரட்சிப்பு ஆகாதே. பெரிய வெள்ளிக் கிழமைக்கு பிறகு, ஒரு சந்தோஷமான விஷயம் காத்துக் கொண்டிருக்கிறதே. அவர் உயிரோடு எழுப்பப்படுகின்றாரே. அதுதான் ஈஸ்டர். உயிரோடு எழுந்திருந்துள்ள ஆண்டவரோடு உயிருள்ளவரை ஐக்கியம் கொண்டிருக்க வேண்டுமே. அதுதான் இரட்சிப்பு. 11 கொரி. 5:15 யில் வாசிக்கின்றது என்ன? “பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல் தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி அவர் எல்லாருக்காகவும் மரித்தார் ” என்பது தானே. 1 கொரி. 15:17 கூறுவது என்ன? கிறிஸ்து எழுந்திராவிட்டால் நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள் என்பது தானே.


சாம்பல் என்பது நம்முடைய பாவமான வாழ்க்கையையினையும் ஆண்டவருடைய மரணத்தையும் மட்டுமே குறிப்பிடுகிறது. ஆண்டவரின் உயிர்த்தெழுதலை குறிப்பிடவில்லையே. ஆண்டவர் மனிதனை மண்ணியிலிருந்து தான் உருவாக்கினார். ஆகவே மனிதனின் உடல் சாம்பலுக்கும் மண்ணுக்கும், குப்பைக்கும் மட்டுமே சமமாயிருக்கிறது. இந்த மண், சாம்பல், குப்பைக்கு ஒரு இரட்சகர் அவசியம் தேவையே, இரட்சகர் இல்லாமல் இந்த சாம்பல், மண்ணுக்கு மீட்பு கிடையாதே. ஆகையினால் மரித்து உயிரோடு எழுந்த ஆண்டவரோடு ஒப்புரவாகுதலையே நாம் நிச்சயமாய் கொண்டிட வேண்டுமே. இல்லாவிடில், நம்முடைய 40 நாட்களின் சுயவெறுப்பு, உபவாசம், பூ வை வெறுப்பது, மாம்சத்தை வெறுப்பது, தாடி வளர்ப்பது போன்ற அனைத்தும் விருதாகவே ஆகின்றது. இந்த 40 நாட்களின் பக்தி வெறும் வெளி வேஷமே ஆகும்.


பழைய ஏற்பாடு லேவியராகமத்திலே குஷ்டரோகத்தைப் பற்றி வாசிக்கின்றோம். குஷ்டரோகம் உள்ளவன் தீட்டுள்ளவன் என்றே ஆசாரியனால் அறிவிக்கப்படுகின்றான். அவன் மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவன் கிழிந்த வஸ்திரத்தை உடுத்தினவனாகயும், தன் தலையை மூடாதவனாயும், தன் தாடியை மூடிக்கொண்டும் தீட்டு தீட்டு என்று சத்தமிட்டுக் கொள்ள வேண்டும். பிறர் சத்தத்தைக் கேட்டு ஓடிப் போய் விடுவர். புதிய ஏற்பாட்டின் நம் நாட்களில் குஷ்டரோகம் பாவங்களுக்கு ஒப்பிடப்படுகிறது. பாவங்களை செய்தவன் தீட்டுப்பட்டவன் ஆகின்றான். பரிசுத்தர்களின் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்படுகின்றான். அதாவது பரலோகத்திற்கு தகுதியற்றவன் ஆகின்றான். நாம் யாவரும் பாவங்கள் நீங்கி சுத்தமாக வேண்டும். ஆண்டவர் வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்கினார், குஷ்டரோகிகளை சத்தமாக்கினார் என்றுதான் வேதத்திலே வாசிக்கின்றோம். ஆகையினால் சுத்தமாகாமல் பாவம் செய்து தீட்டுப்பட்டவன் ஒருவன், அதாவது குடிகாரன் ஒருவன், தனக்கு நிச்சயம் பரலோகம் உண்டு என்று தான் நினைக்கின்றபடி பரலோக வாசலிலே சென்றடையும் போது அவனால் பரிசுத்த சீயோனுக்குள் செல்லக்கூடாமல் தானே, தன்னைக் குறித்து தீட்டு தீட்டு என்ற சத்தம் போட்டிடுவான். ஒவ்வொருவரையும் பரலோகம் கொண்டு போய் சேர்த்திட உதவி செய்யும்படியாய் வருகின்ற அனைத்து தேவதூதர்களும் தீட்டு தீட்டு என்ற சத்தம் கேட்டதுமே அவனைவிட்டு ஓடி விடுவார்களே, பின் எப்படி பாவி ஒருவன், குடிகாரன் ஒருவன் பரலோகத்திற்குள் செல்லக்கூடும், கூடாதே.


அருமையானவர்களே கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று அறிந்திடுவோமாக. இது உலக தோற்றத்திற்கு முன்பாகவே குறிப்பிடப்பட்டதாகும். வெளி. 13:8 உலக தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்கத்தில் பேரெழுதப்பட்டிருத்தல் என்பதனை வாசிக்கின்றோமே. ஆதாம் ஏவாள் வாழ்ந்த காலத்தில் கூட அவர்கள் பாவம் செய்தபோது அவர்களை மீட்கும்படியாக அளிக்கப்பட்ட தேவவாக்கு "உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார்; நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று சிலுவை மரணம் அறிவிக்கப்பட்டுள்ளதே. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நாட்களிலும் சிமியோன் என்ற மனுஷனும் ஆவியில் நிறைந்து மரியாளை ஆசீர்வதிக்கையில் “உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப் போகும்” என்று தீர்க்கத்தரிசனமாய் கூறியுள்ளாரே. இவைகளெல்லாம் பாவிகளாகிய நம் ஒவ்வொருவருக்காகவும் தேவன் தாமே ஏற்படுத்தி, ஆதிகாலமாய் வகுத்த தம் அன்பின் திட்டம் மாத்திரமே ஆகும். ஆகையினால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் ஆண்டவர் நம்மேல் கொண்ட அன்பை மட்டுமே வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் கிரியையைத்தான் நிறைவேற்றி முடித்துள்ளேன் என்பதாகவே ஆண்டவர் சிலுவையிலே “முடிந்தது” என்று கூறினார். இது இரட்சிப்பு அல்ல. தேவன் நமக்கு அளிக்கும் இரட்சிப்பு அவருடைய உயிர்த்தெழுதலினாலேயே பூரணமடைகிறது.


ஆகையினால் தேவனுடைய இணையற்ற அன்பினாலே, சிலுவை மரணத்தினாலே நமக்கு இலவசமாய் அளிக்கப்படுகின்ற இரட்சிப்பினை அவருடைய உயிர்த்தெழுதலின் பண்டிகை நாளிலே நிறைவாய் பெறுகின்றோம் என்பதினையும் அறிந்தவர்களாய் மகிழ்ச்சியில் களிகூர்ந்திடுவோமாக. தீட்டு நீங்கி சுத்தமாக்கப்பட்டவர்களாய் ஈஸ்டர் பண்டிகையின் சகல ஆசீர்வாதங்களையும் நாம் நிறைவாய் பெற்றிடுவோமாக ஆமென்.


ஆசிரியர் , பிலிப்ஜெயசிங், சத்திய வெளிச்சம், நாசரேத்