தேவ செய்தி பெப்ரவரி 2020

கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிகக் கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார். யோவான் 15:2


கனிகளைக் கொடுங்கள், ஆவிக்குரிய கனிகளைக் கொடுங்கள் அவர் கனிகளைத் தேடிவந்தார், கனிகளைப் பெற்றுக் கொள்ளும்படியாக தம் ஊழியர்களை அனுப்பினார் என்றெல்லாம் வசனங்களை வேதத்திலே வாசிக்கின்றோம். பரி.பவுல். கொலோ.1:10யிலே அப்பட்டணத்து பரிசுத்தவான்களுக்காக விண்ணப்பிக்கையில் சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளை தந்து கர்த்தருக்கு பிரியமுண்டாக நடந்து எல்லா வல்லமையினாலும் பெலப்படவுமே விண்ணப்பிக்கின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்கனிகளை கொடுக்கும்படியாக நம்மைக் கேட்கையில், கனிகளை கொடுப்பதற்கான வழி முறைகளை 1,2,3 என்று எதுவும் கூறவில்லையே. மேலும் அதிக கனிகளை கொடுக்கும்படியாக இப்படியெல்லாம் செய்திடுங்கள், ஜெபியுங்கள், பிரசங்கியுங்கள், காணிக்கைகளை கொடுங்கள், உபவாசியுங்கள், ஊழியர்களைத் தாங்குங்கள் என்றும் எந்த வகை முறைமைகளையும் அவர்தெரிவிக்கவில்லையே. ஆனால் அவர் கூறியது இரண்டு வார்த்தைகள் மட்டுமே என்னில் நிலைத்திருங்கள் அவரில் நிலைத்திராவிட்டால் கனிகொடுக்கமாட்டீர்கள். கொடியானது திராட்சை செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய் கனி கொடுக்க மாட்டாது. ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். கனி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிகக்கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும்செய்யக்கூடாது. மிகுந்தகனிகளைக் கொடுப்பதினால் பிதா மகிமைப்படுவார். அவர்கள் ஆண்டவருடைய சீஷர்களாயிருப்பார்கள். கனி கொடுக்காத கொடிகள் எல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே கோடப்படும் என்பவைகளையும் வேதத்திலே வாசிக்கின்றோம். இவ்வசனங்களினால் நாம் அறிந்து கொள்வது திராட்சை செடி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிடுகிறது. கொடிகள் என்பது கிறிஸ்துவோடு கூட ஒட்டப்படுபவர்கள் அதாவது கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவர்களே.


இன்று ஆண்டவரிடத்திலிருந்து பெறுகின்ற நன்மைகளையே கனிகளாக அறியப்பட்டு வருகின்றன. பெறப்படுகின்ற நன்மைகளைக் கொண்டே ஆண்டவருக்கும், பலாமரம், மாமரம் என்பது போன்று பெயரினை சூட்டி விடுகின்றார்கள். சுகமாக்குகிற இயேசு, விடுவிக்கிற இயேசு, நடத்துகிற இயேசு, குருடன் காண்கிறான், சப்பாணி நடக்கிறான் என்று ஆண்டவருக்கு பலவிதமான பெயர்களும் சூட்டப்பட்டு அப்பெயரின் பேரிலே தங்கள் தங்கள் ஊழியங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வருவதை உலகமெங்கிலும் அதிகமாய் காண்கின்றோம். கனிகள் நம்முடையது அல்ல என்றோ, அவரையல்லாமல் கனிகள் காணப்படமுடியாது என்பதினை எவரும் யோசித்து கூறிடுவதில்லையே. ஆண்டவரோடு ஒட்டப்படாவிட்டால் இந்தகனிகள் ஏது? கனிகள் முக்கியமா? ஒட்டப்படுதல் முக்கியமா? இன்று உலகமெங்கிலும் கனிகளை குறித்து மட்டுமே பிரசங்கித்து வருன்றார்களே. ஒட்டப்பட்டு வாழும் வாழ்க்கையைக் குறித்து எவரும் பேசுவதில்லையே. எவர்களும் தானாய் கனி கொடுப்பதில்லை. ஒட்டப்பட்டிருப்பார்களானால் நிச்சயமாக கனிகள் நிறைந்து காணப்படுமே. ஒட்டப்பட்டிருக்கையில் கொடிகளுக்கு எந்த பிரயாசமும் தேவையில்லையே.


ஆனால் இன்று ஆவிக்குரிய உலகிலே கிறிஸ்துவோடு ஒட்டப்பட்டு வாழும் வாழ்க்கை என்பதினை 100% முழுமையாய்மறைத்து கனிகளை மட்டுமே. அதாவது கிறிஸ்து இல்லாமல் கனிகளை உற்பத்தி செய்து காண்பிக்கவே அதிகமாய் விரும்புகின்றார்கள். மிகுதியான கனிகளை எப்படி எப்படியெல்லாம் உற்பத்தி செய்வது என்பதினையே இன்று நிரூபித்தும் வருகின்றார்கள். எப்படி பேசினால், எதை பேசினால் மக்களின் கூட்டம் அதிகப்படும். பெருகியிருக்கும் கூட்டத்தை சமாளிக்க எவ்வகையான கனிகளை எவ்வளவு சீக்கிரமாய் உற்பத்தி செய்து கொடுக்கக்கூடும் என்பதினையே சாதனைகளாக கொண்டு நிரூபித்தும் வருகின்றார்கள் என்பதேஉண்மை . ஆனால் ஆண்டவரோடு ஒட்டப்படும் வாழ்க்கையே இல்லாமல் எப்படி கனிகளை மட்டுமே அதிகமாய் பெருக்கி காண்பிக்க முடிகின்றது? இக்கனிகளால் யாருக்கு நன்மை. இக்கனிகளை சாப்பிடுகிற மக்கள் எவ்வளவுகாலம் எப்படி வாழ்கின்றார்கள் இக்கனிகள் ஆரோக்கியமானவைகளா என்பதை யாரும் அறிவார்களா? இல்லையே.


இன்று ஆவிக்குரிய உலகிலே ஆண்டவரோடு ஒட்டப்படாதவர்களின் வாழ்க்கையிலே காண்கின்ற கனிகள் எல்லாமே Hybrid வகைகளைச் சார்ந்தது. நவீன விஞ்ஞான நுட்பத்தின் படிக்கு உற்பத்தியாக்கப்பட்ட கனிகளே. சீராய்டு ஊசி செலுத்தப்பட்டு சீக்கிரமாய் அதிக மாம்ச எடையோடு வளர்க்கப்படும் பிராய்லர் கோழி வகைகளே. இன்னும் கூட விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படாமல் Tissue culture மூலம் நுண்ணிய உயிர் செல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பழமரங்களே ஆகும். இவைகள் தாவர வகைகளைச் சார்ந்தது அல்ல செல் மூலம் வளர்க்கப்பட்ட மரங்களிலிருந்து பெறப்படும் கனிகள் மிருக வகை குடும்பத்தின் கனிகள். இவ்வகையான கனிகள் அனைத்துமே உடலுக்கு உயிருக்கு ஆபத்தை கொடுக்க கூடியவைகளே.


இன்று ஊழியர்கள் மக்களின் ஆன்மீக ஆரோக்கியத்தைக் குறித்து கவலைப்படுவதே இல்லை. கனிகளை மட்டுமே ஏராளமாய் அள்ளிக் கொடுக்கவேண்டும். எல்லா மக்களும் நிரம்ப பெற்றுச் செல்ல வேண்டும். பெறுகின்ற அளவிற்கு தக்க காணிக்கைகளையும் அள்ளி கொடுக்கவேண்டும். இவைகளே இன்றைய ஊழியங்களின் நிலமை. கொடிகள் செடியில் ஒட்டப்பட்டிருக்குமானால், உடனே கனிகள் வருவதில்லை . அடிமரத்திலிருந்து அல்லது செடியிலிருந்து சகலவித சத்துக்களையும், சாரத்தையும் கொடிக்கு அனுப்பிவைக்கிறது. இவ்வகை சத்துக்களால் இளந்துளிர் கொடியில் தோன்றுகிறது. துளிருக்குள்ளேயிருந்து பூ மொட்டு உருவாகி பூவாக மலர்கிறது. பூ வளர்ந்து அதிலே கனி உருவாகிறது. கனி பெருகத்தக்கதாக அதோடு கூட விதைகளும் பழங்களில் உருவாகின்றது. ஆனால் இன்று எந்த கொடியும் செடியின் எந்த சுபாவத்தையும் குணத்தையும் பெற்றிடாமல் நேரடியாக கனியை பெற்றுத் தருவது மிகவும் ஆபத்தானதாகும். இயேசுகிறிஸ்துவினுடைய சுபாவங்களை பெற்றிடாமல் அதனைப் பெறுவதற்கான செய்திகளை கொடுக்காமல் ஆண்டவரின் கனிகளாகிய அற்புதங்களை மட்டுமே பிரசங்கிக்கப்படுகின்றபடியினால் இவைகள் ஆரோக்கியத்திற்கு அடுத்தவைகளே அல்ல. நல்ல மரமாகிய ஆண்டவரோடு ஒட்டப்பட்ட வாழ்க்கைமட்டுமே போதும் என்றுயார் கருத்தில் கொள்கின்றார்கள்? இல்லையே. நல்லமரம் நல்லகனிகளையே கொடுக்கும். நல்லமரம் கெட்ட கனிகளை கொடுக்க மாட்டாதே. ஆனால் இன்று முட்செடிகளில் நல்ல கனிகளை பறிப்பது பற்றியே பிரசங்கிக்கப்பட்டு வருகின்றது. முட்செடிகளில் திராட்சப்பழங்களையும் முட்பூண்டுகளில் அத்திப்பாங்களையும் பறிக்கிறார்களா? இப்போது Hybrid மூலம் நவீன விஞ்ஞானம் மூலம் பறிக்கக்கூடும் என்பதினை ஊழியர்கள் நிரூபித்து வருகின்றார்கள். ஆனால் இந்த கனிகளால் உயிருக்கு ஆபத்து மட்டுமே வரும் என்பதை எவரும் அறிந்திடவில்லையே.


ஆண்டவரோடு ஒட்டப்படாமலேயே கனிகளை மட்டுமே வெளிப்படுத்திக் காண்பிக்கும் மக்களின் வாழ்க்கையாவது :-


இன்றுயாவருக்கும் பரலோகம் போக வேண்டும், நரகம் செல்லக்கூடாது என்பது பொதுவான விருப்பம். ஆகவே தினமும் நரகத்திற்கு பயந்து தங்கள் தங்கள் பாவங்களை தேவசமூகம், ஆலய பிரகாரம் வந்து பணிந்து, குனிந்து, விழுந்தும் கூட அறிக்கை செய்யும் பழக்கம் கொண்டிருக்கின்றார்கள். நல்லது ஆனால் பாவங்களை அறிக்கை செய்துவிட்டு செய்த யாவற்றையும் மறந்தவர்களாக திரும்பத் தன் தன் வழியே சென்று விடுகின்றார்களே. குடிகாரர்கள் ஒழுங்காக குடிக்கச் சென்றுவிடுகின்றார்கள். புகைபிடிப்பதை விட்டு விடமாட்டார்கள். ஏன் இப்படி வாழ்கிறீர்கள் என்று கேட்டால் வேதத்திலே ஆதாரம் உண்டா என்று பல நியாயங்களைப் பேசுகின்றார்கள். இவர்களுக்கு இவைகள் பாவங்களே என்று நன்றாக அறிந்திருந்தும் இவர்கள் துணிந்து பாவங்களில் வாழ விரும்புகின்றார்கள். கெட்ட வார்த்தைகளை தாராளமாய் பேசுகின்றார்கள். ஆனால் ஆலயத்திற்கு சரயான நேரத்தில் போய் விழுந்து ஜெபிக்கவும் செய்கின்றார்கள். தாங்கள் செய்தவைகளுக்காக ஆண்டவரிடம் மட்டும் மன்னிப்பையும் கேட்கத் தவறவே மாட்டார்கள். ஆனால் அறிக்கை செய்தவைகளை மறந்தபடியே தன் பழைய வாழ்க்கையை விட்டிடவே மாட்டார்கள். இவர்கள் ஊழியங்ளையும் செய்வார்கள். கூட்டங்களையும் முன்னின்று நடத்துவார்கள். பாடல்களையும் ஊக்கமாய் படிப்பார்கள். முழு இரவு ஜெபங்களிலும் பங்கு பெறுவார்கள். ஊழியர்கள் பலரையும் தாங்குபவர்களாயிருப்பார்கள். ஆனால் அரசியலில் முக்கிய பங்காளர்களாயும் இருப்பார்கள். தன் கட்சி தன் குழு, என்று தவறாமல் தனக்கானவைகளை மட்டுமே சாதித்து காண்பிக்க விரும்புவார்கள். தேவைப்படும் இடங்களில் கெட்ட வார்த்தைகளையும் தூஷணங்களையும் பேசத் தவறமாட்டார்கள் தன் கட்சிக்காக உயிரையும் கொடுக்க முன் வருவார்கள். வீட்டில் அல்லது பிறரோடு ஆத்திரப்பட்டு, எரிச்சலோடு செயல்படுவார்கள். தேவைப்பட்டால் அடிதடிக்கும் போவார்கள். இடத்திற்கு இடமாக தகுந்த வார்த்தைகளை கூறுவதாக எண்ணி இன்னொரு முகத்தை காண்பிக்க வேண்டுமா என்று சவால் விடுகிறவர்களாயும் இருப்பார்கள். பக்திமான்களோடு சேர்ந்துதாங்களும் பக்திமான்களே என்று காண்பிப்பார்கள். துன்மார்க்களோடும் தங்கள் தொடர்பை வைத்துக் கொள்வார்கள். கேட்டால் ஆத்திரத்திற்கு உதவும் என்பார்கள். இப்படிப்பட்டவர்களே தேவனோடு ஒட்டப்படாமல் கனிகளை தரும் மக்கள் ஆவர். இவர்களை இங்ஙனம் வாழச் செய்வது நவீன ஊழியக்காரர்களே. இவர்களையும் ஊழியக்காரர்களையும் ஒருபோதும் திருத்தவே முடியாது. திருந்திடவே விரும்பமாட்டார்கள். ஏன் பொறுமை ஏன் நீடிய சாந்தம், ஏன் தயவு. ஏன் தாழ்மை, ஏன் மன்னிப்பு, ஏன் ஒப்புரவாகுதல், ஏன் அன்பு என்பதனையே கொள்கையாக கொண்டிருப்பார்கள். இவ்வுலக பழக்க வழக்கங்களில் தீவிரமாயிருப்பார்கள். பரிசுத்தம் என்பதினை அறியமாட்டார்கள். தேவனுக்கான பூரணசித்தம், தேவனுக்கு விருப்பம் போன்றவற்றை அறிந்திடவே விரும்ப மாட்டார்கள். இவ்வுலகிலே பெருமையினையும், பெயரினையும் பெற எவ்வளவு பணம்வேண்டுமானால் செலவு செய்வார்கள். மாம்ச இச்சையோடு பெண்களோடு பேசுவதை நிறுத்தமாட்டார்கள். இடையிடையே sexual மாம்ச இச்சையை தூண்டும் வார்த்தைகளை பேச விருப்பமுள்ளவர்களாயிருப்பார்கள். ஆலயங்களில் தேவனைப் போல ஆராதனை செய்வார்கள். ஆனால் கூடுகைகளில் ஒரு ரௌடியைப் போல அங்கியைத் தூக்கி மடித்துக் கட்டி வந்து பார் என்று சவால் விடுவார்கள். அநியாயஞ் செய்வதில் துக்கப்படவேமாட்டார்கள். துணிந்து பிறர்க்கு துரோகமும் செய்வார்கள். தாராளமாய் இடத்துக்கு இடம் மாறி பொய்யும் பேசுவார்கள். லஞ்சம் கொடுப்பது பாவம் அல்ல என்பார்கள். இரட்டை கணக்கு காண்பிப்பதில் கிள்ளாடிகளாயிருப்பார்கள். ஆலயத்தில் மட்டுமே பரிசுத்தவான்களாக நாடகமாடுவார்கள். பலர் பாராட்டும் விதமாய் பிரசங்கம் செய்வதில் வல்லவர்களாயும் இருப்பார்கள். நாள், நட்சத்திரம் பார்ப்பது பாவம் அல்ல என்பார்கள். ஜாதி வித்தியாசம் காண்பவர்களாயிருப்பார்கள். ஆண்டவருடைய நாமத்தையும் வீணிலே பயன்படுத்துவார்கள். சத்தியமும் செய்வார்கள். இது தேவதூஷணம் என்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.


1தெச.5:22,23யின் படிக்கு பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆவி, ஆத்துமா, சரீரம் பரிசுத்தமாய் காக்கப்பட வேண்டும் என்பதை அறிந்தும் செயல்படுத்தமாட்டார்கள். நீதி.20:6 கூறுகிறது மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள். உண்மையான மனுஷனைக் கண்டுப்பிடிப்பவன் யார்? நீதி.22:24யின் படிக்கு கோபக்காரனுக்குத் தோழனாயிராதே. உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே என்பது தங்களுக்கானதல்ல என்பார்கள். எங்கும் எதிலும் போஜனப்பிரியராயிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களே ஆண்டவரோடு ஒட்டப்பட்ட வாழ்க்கையின் அனுபவமில்லாமல் கனிகளை மட்டுமே முக்கியப்படுத்துகிறவர்களாவார்கள். இதுவே இக்காலத்து நவீன ஆவிக்குரிய உலகமாகும். இவ்வுலகிலே வாழ்ந்து, இவ்வகையான நவீன கனிகளைப் பெற்று அதனையே சாட்சியாக அறிவித்து வாழ்கின்றவர்கள். தேவனால் அங்கிகரிக்கப்படாதவர்களே ஆவர். இவர்கள் யாவரும் வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படுவார்களே.


ஆனால் ஆண்டவரோடு உள்ள ஐக்கியம், ஆண்டவரோடு சஞ்சரித்தல் போன்ற காரியங்களில் விருப்பமுடையவர்களே தேவனோடு ஒட்டப்பட்டவராயும் நிலைத்திருக்கிறவர்களாயும் இருப்பார்கள். தேவசித்தம் செய்வதையே அதனைக் கண்டுபிடிப்பதையே வாழ்வாக கொண்டிருப்பார்கள். பரி.பவுல் கூறுகின்றார். 1கொரி.2:2 இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் என்று. சிலுவை என்பதிலேயே ஆண்டவரின் அன்பு, விடுதலை, இரட்சிப்பு, பரலோக பாக்கியம் உள்ளது. கனிகள் எவைகளிலும் இவைகள் கிடையாதே. சிலுவையை பிரசங்கிப்பவனே கனிகளையும் உடையவனாயிருப்பான். சிலுவையல்லாமல் கனிகளை பிரசங்கிக்கக்கூடுமோ? இவர்கள் சிலுவைக்கு பகைஞர்கள் என்றும் இவர்கள்வேறு விதமாய் நடக்கின்றவர்கள் என்றும் பரி.பவுல் கண்ணீரோடு கூறுகின்றதை பிலி.3:18யில் வாசிக்கின்றோம்.


அருமையானவர்களே நாம் இவ்வுலகத்திற்கு உரியவர்கள் அல்ல உலகம் நம்மை பகைத்தாக வேண்டும். நம்முடைய குடியிருப்போ பரலோகமே. பரி. பேதுரு கூறுகின்றார் 1பேதுரு.2:9 நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரிய கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் என்று கூறியபடிக்கு நாம் ஆண்டவருடைய புண்ணியங்களை மட்டுமே கனிகளையல்ல அறிவிக்கின்றவர்களாயிருக்கின்றோமா இப்படிப்பட்டவர்களே ஆண்டவருடைய சொந்த ஜனம் எனப்படுவார்கள். இவர்களே பரலோகிலே ராஜரீகமான ஆசாரியகூட்டமாய் காணப்படுவார்கள். இவ்வகையான பாக்கியவான்களாகவே நம்மனைவரையும் ஆண்டவர் தாமே மாற்றிடுவாராக. இக்காலத்து நவீன ஆவிக்குரிய உலக வாழ்விலிருந்த நம்மை மீட்டிடுவாராக. ஆமென்.


சகோ. பிலிப் ஜெயசிங்,  நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்