JANUARY - 2020 ஆம் ஆண்டிற்கான வாக்குத்தத்தம்
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து, பயப்படாதே நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்....ஏசா. 41 .13
சத்திய வெளிச்சம்
(இது ஒரு மாதாந்திர கிறிஸ்தவ ஆவிக்குரிய விழிப்புணர்வையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் பத்திரிக்கை. இது தமிழிலும், மலையாள மொழியிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து பிரசுரமாகின்றது)
ஜனவரி மாத இதழ்
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன். II தீமோ . 1:12
ஆசிரியர் மடல்....
கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த வாசகர்களுக்கு,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள். இம்மட்டும் கர்த்தர் நமக்கு உதவி செய்திருக்கிறார். The Lord has helped us till now. இம்மட்டும் என்கின்றபோது 2019 ஆம் ஆண்டின் இறுதிவரை என்பதாகும். இது ஒரு கைகாட்டி (Hand Post) மரம் போன்று கடந்து வந்த காலத்தை குறிப்பிடுகிறது. கடந்த நாட்களில் நாம் கண்ணீ ர், துக்கம், ஏமாற்றம், சோர்பு, வியாதி, நஷ்டம் மட்டுமல்லாமல் சந்தோஷம், இலாபம், உயர்வு, ஆசீர்வாதம், விடுதலை, வெற்றி போன்றவற்றினுடேயும் கடந்து வந்துள்ளோம். இம்மட்டும் என்பது ஒரு முடிவு அல்ல. இது இன்னும் கடந்து செல்ல வேண்டிய நாட்களையும் 2020 ஆம் ஆண்டினையும் குறிப்பிடுகிறது. இம்மட்டும் என்பதினால், இனிவரும் நாட்களிலும் அதே சோர்பு, துக்கம், இழப்பு, மற்றும் சந்தோஷம், மகிழ்ச்சி, உயர்வு, இலாபம் என்பவற்றின் தொடர்ச்சியினையே குறிப்பிட்டும் அறிவிக்கின்றதாகும். ஆகையினால் இம்மட்டும் உதவி செய்தவர் இனிவரும் நாட்களிலும் 2020 ஆம் ஆண்டு முழுவதிற்கும் அவர் உதவி செய்கின்றவராகவே இருக்கின்றார் என்பதே உண்மையாகும். கர்த்தர் உங்கள் முன்னே போவார், இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார் ஏசா. 52: 12. அவர் நம் எபெனேசராயிருக்கிறார். ஆகையினால் நாம் தீவிரித்துப் புறப்படுவதுமில்லை . ஓடிப் போகிறவர்கள் போல் ஓடிப் போவதுமில்லை . அவர் அந்தரங்கமாய் நம்மைப் பார்த்து வெளியரங்கமாய்ப் பலனளிக்கின்றவராயிருக்கின்றார் (மத். 6:4). 2020 வருடத்தின் சகல நாட்களிலும் "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து பயப்படாதே நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்'' என்பதே ஏசா. 41:13) அவர் நமக்கு அளித்திருக்கும் வாக்கு ஆகும். கர்த்தர் உங்களைக் காக்கிறவர் 2020 ஆம் ஆண்டிலே கர்த்தர் உங்கள் வலது பக்கத்திலே உங்களுக்கு நிழலாயிருக்கின்றார் (சங். 121:5)
. அவர் அல்பாவும் ஓமேகாவுமானவர், 2019 ஆம் ஆண்டு மட்டுமல்ல 2020 ஆம் ஆண்டிலும் நித்தியகாலமாய் நமக்கு முன்னே சென்றுள்ளார். முன்பு இரவிலே அக்னி ஸ்தம்பமாய் நடத்தினவர் 2020 ஆம் ஆண்டிலே மேகஸ்தம்பமாய் நமக்கு முன்னே செல்கின்றார். 2020 ஆம் ஆண்டிலே யோர்தானை கடந்தாக வேண்டும். 2020 ஆம் ஆண்டிலே கானானுக்குள்ளும் பிரவேசித்தாக வேண்டும். யோர்தான் என்பது மரணம் என்பது அல்லவே அல்ல. கானான் என்பதும் பரலோகம் என்பதும் அல்லவே அல்ல. யோர்தான் என்பது ஆக அரகானிலுன். கா நமது சுயத்திற்கு சுயநலவாழ்விற்கு மரணத்தை அளிக்கின்றதேயாகும். (death to self life) நமது சுயம், மாம்சம், சுயவிருப்பம் ஆகியவற்றினை அழித்து கடந்து வருவதே யோர்தானைக் கடக்கின்றதாகும். அதுபோன்றே கானான் என்பதும், சுயத்தினை ஜெயித்து மாம்சம் இச்சை ஆகியவை அறவே இல்லாத இடமாக மாற்றி அதிலே வாழ்ந்திடுவதே கானானின் வாழ்வாகும். கானானிலே சுயம், மாம்சம், இச்சை போன்ற அநேக அரக்கர்கள் உண்டு. அவர்களை அழித்து ஜெயிக்க வேண்டுமே. யோசுவா கானானிலுள்ள எல்லா அரக்கர்களையும் அழித்து, ஜெயித்து தானே அதனை சுதந்தரித்தான். கானான் என்பது பரலோகம் என்போமானால், பரலோகிலே அரக்கர்கள் கிடையாதே.
அருமையானவர்களே, இஸ்ரவேலின் முழு ராணுவத்தினையும் யுத்தவீரர்களான தாவீதின் சகோதரர்களையும் சவுல் ராஜாவையும் பயந்து நடுங்கச் செய்த கோலியாத் பெரியவனா? மாம்ச இச்சை, விபசாரம் பெரியதா? யாவரும் சொல்லுவோம் கோலியாத் பிரச்சனை தான் மிக மிகப் பெரியது என்று. ஆனால் கோலியாத்தை ஜெயித்த தாவீது பத்சேபாளிடம் தோற்றது எப்படி? எப்படி பத்சேபாள் கோலியாத்தை விட பெரிய பிரச்சனையாக விளங்கினாள். கோலியாத்தை ஜெயித்த தாவீது கானானுக்குள்ளே மாம்ச இச்சையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டானே. பழைய ஏற்பாட்டின் காலத்திலெல்லாம் ஜெயம் பெற்று வந்தது கோலியாத் போன்ற பிரச்சனைகள் மட்டுமே. புதிய ஏற்பாட்டின் இக்காலத்திலே கோலியாத்தைப் போன்ற அரக்கர்கள் கிடையாது. பத்சேபாள் போன்ற, இச்சை, மாம்ச இச்சை, விபசாரம், ஜீவனத்தின் பெருமை ஆகியவைகளை நாம் ஜெயித்தாக வேண்டுமே. தாவீது பத்சேபாளுடன் விபசாரம் செய்துவிட்டு, அவள் கணவனையும் கொலை செய்து விட்டு 9 மாத காலமாக எந்த தேவபயமும், பாவ உணர்வும் இல்லாமல் எப்படி அவனால் இராஜ்யபாரம் செய்ய முடிந்தது. ஆண்டவராகிய இயேசு தாமே நம்மைப் பார்த்து மோசேயின் நியாயப்பிரமாணங்களையும், 10 கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கூறவில்லை. “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" (யோசு. 14:15) என்று தானே கூறியுள்ளார். ஆண்டவரின் கற்பனைகள் தான் என்ன? ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறவன் அவளோடு விபசாரம் செய்தவனாகின்றான். ஒரு சகோதரனை வீணனே என்று கூறுபவன் எரிநரகத்திற்கு பாத்திரனாயிருக்கின்றான். ஒன்றுக்கும் கவலைப்படாதே. எல்லாவற்றிற்கும் ஸ்தோத்திரம் செலுத்து. யாவரோடும் நல்மனம் பொருந்து. சத்துருவை சிநேகி, என்பவைகள் போன்றவைகளே இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளாகும். பழைய ஏற்பாட்டின் கற்பனைகளெல்லாம் வெளிப்படையானவைகளே, வெளியரங்கமானவைகளே. ஆனால் புதிய ஏற்பாட்டின் ஆண்டவரின் கற்பனைகளெல்லாம், மனது இருதயம் சம்பந்தப்பட்டவைகளே. இருதயத்திற்குள்ளேயிருந்து வருகின்றவைகளே ஒருவனைத் தீட்டுப்படுத்தும் என்றுதானே வாசிக்கின்றோம். பிரசங்கி கூறுகின்றார் 7:9ல் மூடரின் நெஞ்சிலே (heart) கோபம் குடிகொள்ளும்
. 2019 ஆம் ஆண்டினை கடந்து வந்த நாம் 2020 ஆம் ஆண்டிலே பாவங்களிலே ஜெயம் பெற்றவர்களாய் கடந்து செல்ல வேண்டுமே. யோகா போன்ற பயிற்சிகள், இச்சையை, பாவ உணர்வுகளை அடக்குகின்றதாகவே அமையுமே தவிர ஜெயம் பெறச் செய்திடாதே. பரி. பவுல் கூறுகின்றது போன்று பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்பட்டிராமல் புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்துவின் கிருபைக்குக் கீழ்பட்டிருப்போமானால் பாவம் நம்மை மேற்கொள்ளக் கூடாதே (ரோம. 6:14). எபிரேயர் 13:9யில் வாசித்து அறிகின்றோம். பலவிதமான அந்நிய போதனைகளால் அலப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினால் முயற்சி செய்கிறதினால் அல்ல, கிருபையினாலேயே இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள் என்பதாகும். "அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது' என்றுதானே எபே. 4:30,31யில் வாசிக்கின்றோம்
. 2020 ஆம் இந்த ஆண்டிலே, நம்மிலே விசுவாசத்தை துவக்கினவரும், முடிக்கின்றவருமான இயேசுவையே நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே ஓடக்கடவோமாக (எபி. 12:1) நாம் சில பாவங்களிலே விழுந்திருந்தாலும் சில விஷயங்களில் தோல்வி கண்டிருந்தாலும் கீழே விழுந்து கிடக்க வேண்டாம். இப்புதிய வருடத்திலே எழுந்திடுவோமாக. எழுந்து நின்றிடவும் வேண்டாம். ஓடிடுவோமாக. நமக்கு முன்னே இவ்வுலகிலே வாழ்ந்து முடித்துச் சென்ற இயேசுவையே நோக்கியவாறு ஓடிடுவோமாக. அவர் நம்மோடு இவ்வருட முழுவதிலும் இருப்பேன் என்றும் வாக்கு பண்ணியுள்ளாரே. பரிசுத்தாவியானவரும் நமக்குள்ளே வாசஞ்செய்து நம் பெலவீனங்களிலேயும் நம்மை நடத்துகின்றவராயிருக்கின்றாரே.
2020ஆண்டிலே இயேசுவையே பற்றிடுவோமாக, முன்னேறிடுவோமாக. நமக்கான ஓட்டத்தை நன்றாய் ஓடி முடித்திடுவோமாக.
Hold on, press on, and finish well. (11 தீமோ . 4:9-14)
கன்னனாகிய அலெக்சந்தர் தீயவனாக தொடங்கி தீயவனாகவே வாழ்ந்து முடித்துள்ளார். (1 தீமோ. 1:20)
தேமா நல்லவனாக வாழ்வை தொடங்கினான், தீயவனாக முடித்துள்ளான்
.மாற்கு தீயவனாக வந்தான், நல்லவனாக வாழ்வை முடித்துள்ளான்.
ஆனால் லூக்காவோ நல்லவனாகவே வந்தான், நல்லவனாகவே வாழ்வை முடித்துள்ளான்.
இவர்கள் யாவரையும் அறிந்தவர்களாய் இயேசுவை மாத்திரமே மாதிரியாக கொண்டு 2020 ஆம் ஆண்டிலே அவரையே நோக்கிப் பார்த்தவர்களாக அவருடைய அடிச்சுவட்டிலே நடந்து பயணித்து சகலவற்றிலும் நம் வாழ்விலே பிரகாசமடைந்திடுவோமாக. இப்புத்தாண்டிலே நாம் எதிலும் தோற்றுப் போகவே மாட்டோம். எல்லாவற்றிலும் ஜெயம் மாத்திரமே என்று அறிந்துணர்ந்திடுவோமாக.
"அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை " (சங். 34:5) என்பதே ஆமென்.
ஆசிரியர்
பிலிப் ஜெயசிங், நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்.
ஜனவரி 2020 மாதத்திற்கான தேவ செய்தி
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் II தீமோ. 1:12
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இம்மட்டும் காத்தவராக எபெனேசராக மாத்திரமல்ல இனிமேலும் அந்நாள் மட்டும், முடிவு கால பரியந்தமும் நம்மைக் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கின்றார். ஆனால் இதிலே ஒரு நிபந்தனை, நாம் ஆண்டவரிடம் கொடுத்தவைகளை அல்ல, ஒப்புக் கொடுத்தவைகளையே அவர் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கின்றார் என்றுதான் பரி. பவுல் கூறியிருக்கின்றார். கொடுக்கப்படுகின்றவைகள் வேறு, ஒப்புக் கொடுக்கப்படுகின்றவைகளும் வேறு என்பதே உண்மை . Giving or Committing. கொடுத்ததை நாம் திரும்பப் பெற்றால் அது ஒப்புக் கொடுத்தலாகாது. எதிர்பார்த்து கொடுப்பதும், கொடுத்தது மாத்திரமே. பிரதிபலன் எதிர்பாராது கொடுப்பது ஒப்புக்கொடுப்பதாகும். ரூ. 5000 காணிக்கை கொடுத்தால் 50 லட்சம் பெறுமதியான வீடு கிடைத்தது என்ற சாட்சிகளின்படி கொடுக்கப்பட்ட தொகைகளெல்லாம் ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளாகாது. இவைகளை தேவன் பாதுகாத்துக் கொள்வது என்பது அர்த்தமற்றதாகும். ஆபிரகாம் சோதிக்கப்பட்ட போது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். இதுவே ஒப்புக்கொடுத்தலாகும். தேவன் ஈசாக்கை பாதுகாத்து பலுகிப் பெருக வல்லவராயிருந்தார்.
என்ன கிடைக்கும் என்று பிரதிபலன் அறிந்து கொடுப்பதும் ஒப்புக்கொடுத்தலாகாது. சவுல் இஸ்ரவேலிலே ராஜாவாயிருந்தபோது கோலியாத் என்ற ஒரு பெலிஸ்தன் தன்னோடு யுத்தம் செய்ய இஸ்ரவேல் சேனைகளை எதிர்த்து சவால் விட்டான். அவ்வமையம் தாவீது தன் சகோதரர்களைப் பார்க்க இந்த யுத்த களத்திற்கு வந்தான். இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாய் அவன் தேவதூஷணமாய் பேசிய வார்த்தைகளை கேட்டான். அப்பொழுது அங்கே, அவனை ஜெயிக்கிறவனுக்கு பிரதிபலனாக சவுல் ராஜா கொடுக்கப் போகின்றவைகளை பற்றி பரவலாக பேசப்பட்டது. ஆனால் தாவீதோ பிரதிபலன் எதிர்பாராது தேவனுக்கு மகிமையாய் செயல்பட்டு கோலியாத்தை ஜெயித்தான். தாவீது தன்னையே தேவனுக்கு மகிமையாக ஒப்புக்கொடுத்தான். அதனால் இஸ்ரவேலின் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துக் கொண்டார்கள்
. எகிப்தின் ராஜா எபிரெயரின் ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்று போட உத்தரவு பிறப்பித்திருந்தபோது மோசேயின் தாய், மோசேயை 3 மாதம் மட்டுமே ஒளித்து வைத்து வளர்த்து விட்டு பின்பு ஒளித்து வைக்க கூடாமல் தேவனையே நம்பினவளாக நாணல் பெட்டியில் அக்குழந்தையை வைத்து நைல் நதியில் விட்டு விட்டாள். ஆனால் தேவனோ அவனை பாதுகாக்க வல்லவராயிருந்து பார்வோனின் அரண்மனையிலேயே அவனை வளர்க்கச் செய்தார்.
அன்னாள் தனக்கு குழந்தை பேறு இல்லாததினால், தேவனிடம் பல வருடங்களாக குழந்தைக்காக வேண்டி வந்தாள். ஒரு வருடத்திலே அவள் தேவனிடம் பொருத்தனையோடு ஜெபித்தாள். தனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கும் பட்சத்தில் அவனை தேவனுக்காகவே கொடுத்து விடுவதாக ஒப்புக் கொண்டாள். அதன்படிக்கே பிள்ளை பிறந்து அவன் பால்குடி மறந்ததும் அவனை தன் பொருத்தனைப்படிக்கே தேவனிடமே ஆலயத்திலே ஒப்புக் கொடுத்தாள். அவனே சாமுவேல் தீர்க்கத்தரிசியாயிருந்து சவுல், தாவீதை ராஜாவாக அபிஷேகித்தான் என்று அறிகின்றோம். இதுவே ஒப்புக் கொடுத்தலாகும்.
சாமுவேல் ஆலயத்திலே பணிவிடை செய்யத் தொடங்கிய நாட்களிலே தேவன் சாமுவேலை பெயர் சொல்லி அழைத்து அவனிடம் ஆசாரியனான ஏலியின் நிர்விசார ஊழியங்களைப் பற்றியும், ஏலியின் குமாரர்கள் செய்து வந்துள்ள பாவங்களின் நிமித்தம் அவர்களுக்கு விரோதமாய் நியாயத்தீர்ப்பு செய்யப்போவதையும் அறிவித்தார். இதனைக் கேட்டு அறிந்த ஏலி தன் குமாரர்களை சீர்படுத்த முயற்சிக்காமல் கர்த்தர் அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்று உதாசினப்படுத்தி விட்டான். அதனால் ஏலிக்கும் அவன் இரு குமாரர்களுக்கும் தேவன் தம் பாதுகாப்பினை விலக்கிக் கொண்டாரே, மூன்று பேரும் மரணம் அடைந்தார்கள். இன்று அநேகர் தங்கள் காரியங்களை தேவனிடம் ஒப்புக் கொடுப்பதில்லை. தாங்களாகவே சுயமாய் திட்டமிட்டு, தங்கள் ஞானமே, யோசனையே சிறந்தது என்று எண்ணினவர்களாய் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அவற்றிலே ஏதாவது பின்னடைவு ஏற்படும்போது, தேவன் தம் சித்தப்படிச் செய்வாராக என்றோ, ஏலியைப் போன்று தேவன் நலமானதை செய்வாராக என்று கூறுவது மடமைத்தனம் ஆகும். இதனை அறியாது தங்களையே வஞ்சித்துக் கொள்கின்றார்கள் என்பதை அறிந்திடுவோமாக. இவர்கள் போன்றோரை தேவன் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுவதும் தவறானதே ஆகும்.
தேவனிடம் ஒப்புக்கொடுக்கும் அனுபவத்தை கொண்டிடாமல் தேவன் அவராக செய்வார் என்று எதிர்பார்ப்பதும் தவறானதே என்றும் அறிந்திடுவோமாக. மார்த்தாள், மரியாள், லாசரு விஷயத்தில், லாசரு வியாதியாயிருந்தான், அப்பொழுது உம் சிநேகிதனாகிய லாசரு என்ற செய்தியை இரண்டு மைல் தொலையிலுள்ள இயேசுவிடம் ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினார்கள். செய்தியை மட்டுமே அனுப்பி விடும் செயல் ஒப்புக் கொடுக்கும் செயலாகாது. ஆண்டவர் தாமாகவே முன் வந்து வேண்டியவைகளை எல்லாம் செய்வார் என்று எதிர்பார்ப்பதும் தவறானதே என்பதையும் அறிந்திடுவோமாக. அதற்கு பின் லாசரு மரணம் அடைந்துவிட்டான். அப்பொழுதும் மார்த்தாள் மரியாள் இந்த செய்தியை ஆண்டவரிடம் கூற ஏற்பாடு செய்யவில்லை. ஆண்டவரை அழைக்கவும் இல்லை. பின்பு லாசரு அடக்கம் செய்யப்பட்டான். அப்பொழுதும் அவர்கள் ஆண்டவரை அழைக்கவில்லை. ஆண்டவர் அவராகவே செய்வார் என்று மார்த்தாள் மரியாள் தங்களிலே கொண்டிருந்த எண்ணம், எதிர்பார்த்ததை முறியடித்து ஆண்டவரிடம் ஒப்புக் கொடுக்கும் தன்மையை அன்னார்கள் புரிந்து கொள்ளச் செய்யும்படியாகவே ஆண்டவர் மேலும் தாமதமாய் நான்கு நாட்கள் தங்கிவிட்டு பின்புதானே வந்தார். ஆண்டவரிடம் முழு விசுவாசம் கொண்டிராத மார்த்தாள் மரியாளிடம் ஆண்டவர் அவனை எங்கே வைத்தீர்கள், கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார். ஆனால் அவர்களோ ஆண்டவரை தேவனாக இன்னும் அறியவில்லை. வீணான வார்த்தைகளை பதிலாக பேசுகின்றார்கள். அதன்பின்பு இயேசு அவளை நோக்கி, நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் என்றார். அதனையும் அவர்கள் புரியவில்லை. புரிந்திருந்தால் அவர்கள் தங்களை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்திருக்கும் அனுபவத்தை பெற்றிருப்பார்களே. பின்பு தேவன் லாசருவை உயிரோடே எழும்பச் செய்தார். அதனால் மார்த்தாள் மரியாளும் இன்னும் யூதர்களில் அநேகர் இயேசுவிடம் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
ஆதியிலே தேவன் பூமியை உருவாக்கிய போது, பூமியிலே மனிதர்கள் தங்கள் இஷ்டம்போல் வாழ வேண்டும் என்று எண்ணி பூமியிலே மக்களை உருவாக்கவில்லை. ஆகையினால் தான் சீஷர்கள் இயேசுவிடம் தங்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுக்க கேட்டபோது தேவன் தாமே கூறியது உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். பரலோகிலே யாவும் தேவனுடைய சித்தப்படியே நடைபெற்று வருகின்றது. அதுபோன்றே பூமியிலேயும் தேவனுடைய சித்தம் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்ற உண்மையை நாம் அறிந்திட வேண்டுமே. ஆனால் இன்று உலகிலே சுயசித்தம் சுயவிருப்பம் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனைத் தான் ஆதியிலே சாத்தான் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் சுயசித்தத்தை செய்ய ஆதிமக்களுக்கு கற்றுக் கொடுத்தான். இதனால் பாவம் உலகிலே நுழைந்தது. ஆதாம் ஏவாள் ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
இயேசு கிறிஸ்து தாமே கூறுகின்றார், என் சித்தப்படியல்ல என்னை அனுப்பினவருடைய சித்தத்தை செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று கூறியதை யோவா. 6:38யில் வாசிக்கின்றோம். அதுமட்டுமல்ல நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது என்றும் கூறியதை யோவா. 4:34யில் வாசிக்கின்றோம். அவரைப் போன்றே ஆண்டவருடைய சித்தத்தை மட்டுமே செய்கிறவன் எவனா அவனே தேவனுக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கின்றான் என்று இயேசு தாமே கூறியதை மாற். 3:35யில் வாசிக்கின்றோம்
. அருமையானவர்களே நாம் நம்மை நம்முடைமைகளை ஆண்டவருக்கே ஒப்புக்கொடுத்தவர்களாக அவருடைய சித்தத்தை மட்டுமே இப்பூமியிலே நிறைவேற்றுகிறவர்களாக காணப்படுவோமாக. யாரோ ஒருவர் நம் தேசத்திற்கு வந்து தங்களை ஒப்புக் கொடுத்தவர்களாக இயேசுவின் சுவிசேஷத்தை அறிவித்ததினாலே நாம் இன்று கிறிஸ்தவர்களாயிருக்கின்றோம். சீகன்பால் அவர்கள் தன்னையே தமிழ்நாட்டிற்கு வந்து அர்ப்பணித்து ஒப்புக்கொடுத்து , தமிழைக் கற்று தமிழ் இலக்கணத்தை எழுதியுள்ளார், தமிழிலே வேதாகமத்தையும் எழுதி நம் கைகளில் கொடுத்துள்ளார். அவர் தனது 24 வயதிலே இந்தியா வந்தார். 12 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். 36வது வயதிலே மரித்தும் விட்டார். ஆனால் அவர் ஒப்புக் கொடுத்தவைகளோ இன்னும் நம்மிடையே இருந்து நம்மை தேவனுடையவர்களாக மாற்றியமைத்து வருகின்றதே. இதனையல்லவா நமது வாழ்வாக நாம் கொண்டிட வேண்டும். ஊழியத்துக்கு கொடுப்பவரை அல்ல, ஊழியத்திற்கு ஒப்புக் கொடுப்பவரையே தேவன் விரும்புகின்றார்.
ஆண்டவருக்காக தம்மை ஒப்புக் கொடுத்தவர்களே தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறார்கள். அவர்களே தேவனுடைய பண்ணையும் தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறார்கள் என்று அறிந்திடுவோமாக (1 கொரி. 3:9) இவர்களே கிறிஸ்துவை கிறிஸ்துவின் வார்த்தைகளை அஸ்திபாரமாக போடுகிறவர்களாவர். ஆனாலும் அந்த அஸ்திபாரத்தின் மேல் கட்டப்படுகின்றவைகள் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மற்றும் மரம், புல், வைக்கோல் ஆகியவற்றுள் எவைகளொன்றினாலும் கட்டி எழுப்பக்கூடும். இவைகளும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளாக தேவசித்தத்தின்படிக்கே தெரிந்தெடுக்கப் பட்டபடிக்கே கட்டி எழுப்ப வேண்டுமே. ஆனால் இன்று ஊழியர்கள், விசுவாசிகள் தரம் வாய்ந்த தை தெரிந்தெடுக்காமல் (quality) பெரிதான அளவினையையே (quantity) தெரிந்தெடுக்க விரும்புகின்றவர்களா யிருக்கின்றார்கள். பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் ஆகியவற்றினால் கட்ட வேண்டுமானால் அதற்கு அதிக பாடுகள், அதிக செலவுகள் ஆகும். ஆனால் மரம், புல், வைக்கோல் ஆகியவற்றினால் கட்ட வேண்டுமானால் வெகு எளிதில் பெரிதாக கட்டிவிடலாம், குறைவான செலவு மாத்திரமே ஆகும். பெரிய சபையாக எழுப்ப வேண்டும், பெரிய கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்று விரும்புகின்றவர்களே இன்று அதிகம். கூட்டப்படுகின்ற மக்களின் தரத்தினை கவனத்தில் கொள்கிறதில்லை. ஏதோ விதவிதமான மக்கள் விரும்பும் ஆசீர்வாதமான செய்திகளை மட்டுமே கூற வேண்டும் என்பதே ஊழியர்களின் நோக்கமாகின்றது. மக்கள் தொகை குறைந்து விடக் கூடாது, கூடிக் கொண்டே வர கவர்ச்சியாக எதனையெல்லாம் அறிமுகப்படுத்தலாம் என்பதினையே நோக்கமாக கொள்கின்றார்கள். இவைகளெல்லாம் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியங்கள் அல்லவே. பொன்னால் வெள்ளியால் கட்டுகின்றவர்கள் பொன் வெள்ளியின் தரம் கூடுகின்ற வகையிலே கவனம் செலுத்துகின்றவர்களாவர். அதனால் பெருங்கூட்டத்தை எதிர்பார்க்க முடியாதே. சகல ஊழியங்களும் அதன் வேலைபாட்டினை நாளானது விளங்கப்பண்ணும். அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும் அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். ஒருவன் கட்டினது நிலைத்தால் கட்டின ஊழியக்காரன், விசுவாசி அதன் கூலியை பெறுவான், அவன் கட்டினது வெந்து போனால் அவன் நஷ்டமடைவான். ஆனால் அந்த ஊழியக்காரனோ விசுவாசியோ, அவன் மாத்திரமே இரட்சிக்கப்பட்டவனாவான். சபை மக்கள் அல்லது கூடின கூட்டத்தார் யாவரும் அக்னியில் அழிந்து போய் விடுவார்களே. ஒரு பெரிய சபையிலே 50000 பேர்கள் கூடினாலும் அவர்கள் அக்கினியினால் பரிசோதிக்கப்படும்போது வெந்து போனால் அவன் செய்த அனைத்து ஊழியங்களும் நஷ்மடையும். 50000 பேரும் இழக்கப்பட்டு போவர். ஆனால் அவன் மாத்திரமே அக்கினிக்கு தப்பினவன் போல் எந்த வெகுமதியும் இல்லாமல் தலைகுனிந்து நிற்கின்றவனாவான். அவன் குடும்பம் கூட அவனோடே காணப்படாதே. இந்நிலமையே இன்று எங்கும் காணப்படுகின்றன. எச்சரிக்கையாயிருப்போமாக, பொன், வெள்ளியினை சுத்திகரிப்பதைப் போன்ற சுத்திகரிப்பு செய்திகள் கொடுக்கப்படுகின்ற சபைகள் மட்டுமே கடைசி நாளிலே நிலைநிற்கும். மரம், புல், வைக்கோல் போன்ற பெருங்கூட்ட சபைகள் ஒன்றுமில்லாமல் சாம்பலாகிவிடுமே. யோபு பக்தன் சொல்வதைப் போன்று அவர் சோதித்தபின் நாம் பொன்னாக விளங்குவோமாக. ஆமென்.
சகோ. பிலிப் ஜெயசிங்.
நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்.
(Mob: No. 9487547633) email: philipjeyasingh@gmail.com