சத்திய வெளிச்சம் (A monthly magazine for Christian awareness and spiritual growth)
(இது ஒரு மாதாந்திர பத்திரிக்கை. தமிழிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் பிரசுரமாகிறது)
ஆசிரியர் மடல்....
அன்பான வாசகர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள். புதிய வருடம் தொடங்கி, இரண்டாம் மாதத்திற்குள் நுழைந்தும் விட்டோம். வருட வாக்குத்தத்தங்களாக, ஏராளமான வாக்குத்தத்தங்களை பெற்றிருப்பீர்கள். ஒவ்வொரு சபைகளிலும் வெவ்வேறு ஊழியர்களால் வெவ்வேறு வாக்குத்தத்தங்களை கூறியிருக்கின்றார்கள். அந்த வசனங்கள் அழகான வடிவமைப்பிலே அதிக செலவும் செய்யப்பட்டு கொடுக்கவும்பட்டிருக்கும். ஆசீர்வாத வாக்குத்தத்த கூட்டங்கள், குடும்ப ஆசீர்வாத வாக்குத்தத்த கூட்டங்கள் என்று வகைவகையாக கூடுகைகள் நிறைவேறி முடிந்து, ஒரு அமைதியான மாதமே பெப்ரவரி மாதமாகும். விதவிதமான வாக்குத்தத்தங்களை பெற்ற நீங்கள் ஒருவிதமான மகிழ்ச்சிக்குள் வந்து அடைந்திருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். அருமையானவர்களே, இப்படிப்பட்டதான வாக்குத்தத்த கூடுகைகளை, வேதத்திலே, எங்கேயாவது வாசித்து அறியக்கூடுமா? வேதப் பரிசுத்தர்கள் எங்கேயாவது இப்படிப்பட்டதான மாத வாக்குத்தத்தங்கள், வருட வாக்குத்தத்தங்கள் என்று கூறியுள்ளார்களா? இல்லையே. பின் எப்படி இது தற்போது ஒரு புதுமையான காரியங்களாக உலகமெங்கிலும் காணப்பட்டு வருகின்றன. உண்மையான ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் வேதம் முழுவதுமே சொந்தமும் அன்னார்களின் சொத்துமாயிருக்கிறது. நமக்குத் தேவையான வாக்குத்தத்தங்கள், ஏராளமாயும் தாராளாயும் வேதத்திலே உள்ளன. ஆனால் தற்போது அவைகளை திறந்து, வாசித்து, தியானித்து சொந்தமாக்கிக் கொள்ளும் பழக்கத்தைவிட்டு விட்டோம். இன்னும் சிறு பிள்ளைகளைப் போன்று யாராவது ஊட்டி விடமாட்டார்களா என்று சிறு பிள்ளைகளின் பழக்கத்தையே இன்னும் விரும்பி வருகின்றோம். என்னதான் இருந்தாலும் ஊட்டிக்கொடுத்து சாப்பிடுவதில் ஒரு பாசம் மட்டுமே வெளிப்படையாய் காணக்கூடும். ஆனால் வயிறு எளிதில் நிறையாதே. சத்துள்ள ஆரோக்கியமான ஆகாரங்களை தேடி தேடி சாப்பிடுவதை விட்டு விட்டு ஊட்டிவிடும் ஆகாரம் அதிக போஷாக்கை கொண்டிடக் கூடாதே. மேலும் ஊட்டி விடும் பழக்கம் சிறுவர்களுக்கு மட்டுமே ஏற்றதும் ஆகும். ஆனால் பெரியவர்களுக்கு யாரைக் கொண்டாவது ஊட்டிவிடக் கூடுமோ? கூடாதே. ஆனால் வாக்குத்தத்தங்களை மட்டுமே ஊட்டிவிடும் கூடுகைகளுக்கு பெரியவர்களாகிய யாவரும் ஓடி ஓடிப் போகின்றார்களே. இவைகள் அவர்களுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கக்கூடுமோ. கூடாதே. அருமையானவர்களே நான் வாக்குத்தத்த கூடுகைகளுக்கு விரோதியானவன் அல்ல. வாசகர்களை சத்தியத்திலும், வெளிச்சத்திலும் வழி காண்பிப்பதே எனது கடமையாகும். வேதத்திலுள்ள வசனங்கள் வாக்குத்தத்தங்கள் எந்தெந்த வகை சூழ்நிலைகளில் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதை அறிந்திருந்தால் மட்டுமே. அவைகளை நாம் பிரயோஜனப் படுத்திவிடக் கூடும் என்பதை அறிந்துணர்ந்திடுவோமாக. ஒரு சில கீழ்க்கண்ட வாக்குத்தத்த வசனங்களுக்கு அதன் உண்மையான நிலைபாடினை அறிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். 1கொரி.1023 கூறுகின்றது உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், இது வாக்குத்தத்தம் அல்ல பரிசுத்த பவுல் தன்னுடைய 2வது ஊழியப் பயணத்திலே கொரிந்து சபை மக்களுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தொழுது கெள்ளுகிற அனைவருக்குமாக எழுதப்பட்ட அறிவுரையாகும். முதல் 11 வசனங்களை வாசிப்போமானால் இஸ்ரவேல் மக்கள் கடந்து வந்த சோதனைகளைப் பற்றி பரி.பவுல் எழுதுகின்றார் அவைகள் யாவும் எங்ஙனம் மேற்கொள்ளப்பட்டன என்பதைப் பற்றியும் எழுதுகின்றார். இவைகளை வாசிக்கின்ற நமக்கு ஆண்டவர் பேரில் ஒரு நம்பிக்கையும் விசுவாசமும் ஏற்படுகிறது. இதனைத் தவறுதலாக ஒரு வாக்குத்தத்தமாக கொள்வோமானால் அல்லது இந்த வசனத்தின்படிக்கு நமக்கு மிஞ்சின சோதனை வரவே வராது என்று அர்த்தம் கொள்வோமானால் அது மிக மிகத் தவறானதே. 11கொரி.1:8,9யினை வாசிப்போமானால் பரி.பவுல் கூறுகின்றார் தப்பிப் பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப் போகத்தக்கதாக எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று என்று எழுதியுள்ளாரே. 10ஆம் வசனத்திலே அவர் தேவனையே நம்பியிருந்தார் என்பதைத்தான் நாம் அறிந்து ஆண்டவரையே சார்ந்திட வேண்டுமே, தவிர ஊழியர்கள் கூறினார்கள் அது வாக்குத்தத்தம் என எண்ணுவோமானால் சாத்தான் நம்மை எளிதில் வஞ்சித்து ஜெயித்திடுவானே. நீதி.22:6யினை வாசிப்போமானால் பிள்ளைகளை நடக்க வேண்டிய வழிகளில் நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்பது வாக்குத்தத்தம் அல்ல. அது ஒரு பழமொழி. நீதிமொழிகளின் புஸ்தகம் முழுவதுமே பழமொழிகள் மாத்திரமே. இப்புத்தகம் ஒரு சன்மார்க்க இலக்கிய தொடராகும். உலக ஞானிகளுக்காக ஞானத்திற்காக எழுதப்பட்ட வார்த்தைகளே. நம் பிள்ளைகளை நாம் ஆண்டவரிடம் மாத்திரமே ஒப்படைக்க வேண்டும். நம் அறிவுரைகள் நம் முன் அனுபவங்கள் குறைவானதே ஆகும். நிறைவான தேவனிடமே நம் பிள்ளைகளை ஒப்படைத்திடுவோமாக. சங்.37:4இல் தாவீது கூறுகின்றார் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் என்பதும் பொதுவான வாக்குத்தத்தம் அல்ல. தாவீது கூறும் போது ஏன் நீதிமான்கள் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஏன் துன்மார்க்கர்கள் செழித்தோங்குகிறார்கள் என்பதற்கு காரணமாக தம் மக்களை உற்சாகப்படுத்துகின்ற வகையிலேயே தாவீது இதனை எழுதியுள்ளார். நாம் எப்பொழுதுமே இக்காலத்து பாடுகளைக் கண்டல்ல. நித்திய கால சுக வாழ்வை எண்ணியே மனமகிழ்ச்சியாகவே இவ்வுலகில் வாழ்ந்திட வேண்டும் என்பதினையே அறிந்திட வேண்டுமே. 3) ஆபகூக் 1:5யிலே ஆபகூக் கூறுகின்றார் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள். விபரிக்கப்பட்டாலும் விசுவாசியாத ஒருகிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன் என்பது ஆண்டவர் தம் பிள்ளைகளுக்கு அளிக்கும் ஆசீர்வாதமான வாக்குத்தத்தம் அல்ல இது தம் பிள்ளைகளுக்கான எச்சரிப்பின் சத்தம். தம் பிள்ளைகளை கண்டித்து திருத்துவதற்காக கொடுக்கப்பட்ட முன்னேற்பாட்டின் சத்தம். இது தம் பிள்ளைகள் பேரில் வரக்கூடிய நியாயத்தீர்ப்பாயிருக்கிறது. வாக்குத்தத்தம் அல்ல. ஆச்சரியப்படத்தக்க வகையில் புறஜாதிகள் எழும்புவார்கள் என்பதேயாகும். இது ஆபகூக் தீர்க்கதரிசனமாய் கண்டபாரம். இதனை தவறுதலாய் வாக்குத்தத்தங்களாக கொண்டு ஒரு லட்சம் கிடைக்கும் ஒரு கோடி கிடைக்கும் ஆச்சரியமான வீடு கிடைக்கும் என்று கூறும் ஊழியங்களின் மனித வாக்குத்தத்தங்களை கேட்டு ஏமாற்றமடைந்து விடாதீர்கள். பரி.பவுல் கூட கூறுகின்றார் பிலி.4:13 எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு என்று கூறும் போது நாம் எதனையும் செய்து சாதித்து விடலாம் என்பது அதன் பொருள் அல்ல, அந்த வசனத்தின் முதல் பகுதியை வாசிக்கையில் என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே என்று தான் கூறுகின்றார். எப்பொழுது பெலப்படுத்தப்படுகின்றோம்? பெலவீனப்படுத்தும்படியான இடுக்கண்கள், பாரங்கள் நம்மேல் விழும்போது நாம் தேவனுடைய பெலத்தினாலே யாவற்றையும் செய்து முடிக்க பெலன் கிடைக்கின்றது என்பதே உண்மை . இதனால் எந்த துன்பங்களையும், தாங்கிக் கொள்ள பெலன் கிடைக்கின்றது என்பதினையே பரி.பவுல் கூறுகின்றார். இவ்விதமாய் அநேக வசனங்களை வாக்குத்தத்தங்கள் என்று எண்ணிக் கொண்டு அதன் உட்பொருளை விளங்கிக் கொள்ளக் கூடாதபடிக்கு சாத்தானானவன் பிரகாசமான நம் மனக்கண்களை குருடாக்கிவிடுகின்றானே. நம் ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே அவர் உண்மையும் உள்ளவரே. அவர் தம் பிள்ளைகளின் ஜெபசத்தங்களை எப்பொழுதுமே கேட்கின்றவரே. ஏதோ வாக்குத்தத்தங்களை அவர் கூறியதாக உரிமை பாராட்டி ஆண்டவரிடமிருந்து எதனையும் பெற்று விடலாம் என்ற சாத்தானின் யோசனைகளை விட்டு விடுவோமாக. தாவீது கூறுகின்றான் சங்.18:6யில் எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டு அபயமிட்டேன் - என் சத்தத்தை கேட்டார் - என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய் அவர் செவிகளில் ஏறிற்று. சங்.6:8யில் கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார் என்று கூறுகின்றாரே. யோனாவின் சம்பவத்திலே யோனாவின் ஜெபத்தை அவன் மீன் வயிற்றிலிருந்து வேண்டிக் கொண்டதை கர்த்தர் கேட்டாரே. யாத்.2:24யில் வாசிக்கின்றோம். தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு அவர்களை நினைவு கூர்ந்தாரே. வசனம் 3:7யில் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன். அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களைக் கொண்டு போய் சேர்க்க இறங்கினேன். அவர்களை ஒடுக்குகிற ஒடுக்கு தலையும் கண்டேன் என்பதாக ஆண்டவர் பேசவில்லையா. மனிதர்கள் வேண்டிக் கொள்ளும் சப்தங்கள் மட்டுமல்ல. ஆபேலின் இரத்தம் என்னைக் கூப்பிடுகிறது என்றும் தேவன் கூறவில்லையா. நாம் அநியாயமாய் அனுபவிக்கும் நம் காயங்களும் தேவனைக் கூப்பிடுமே. சங்.9:12 இரத்தப்பழிகளைக் குறித்து அவர் விசாரணை செய்யும் போது அவைகளை நினைக்கிறார். சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடு தலை மறவார் என்று கூறப்பட்டுள்ளதே. சங்.72:12ல் கூறுகின்றது கூப்பிடுகிற எளியவனுக்கும் அவர் இறங்கி எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார் என்று எழுதப்பட்டுள்ளதே. எரிகோ வழியிலே இருந்து கூப்பிட்ட குருடனின் சத்தத்தை தேவன் கேட்கவில்லையா? சீஷர்கள் கூப்பிடாதே என்று அதட்டிய போதிலும் தேவன் அவனை அழைத்து வரச் செய்தாரே. அருமையானவர்களே, நாம் ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்களை நன்மைகளை பெற வாக்குத்தத்தங்கள் அவசியமே இல்லை. நாம் அவருடைய பிள்ளைகளாயிருந்து நமக்கு நேரிடுகிற எந்த சூழ்நிலைகளிலும் அவர் நம் பெருமூச்சைக்கூட கேட்டு இறங்குகிறவராயிருக்கின்றாரே. இப்புதிய மாதத்திலே வாக்குத்தத்தங்களை நம்ப வேண்டாம் வாக்குத்தத்தங்களை அள்ளிக் கொடுத்தமனிதர்களையும் நம்ப வேண்டாம். நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டு விடுங்கள். எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம். ஏசா.9:22. மகன் தன் தகப்பனிடம் யாதொன்றையும் கேட்க வாக்குத்தத்தம் தேவையானதா? பிச்சைக்காரனுக்கும் வேலைக்காரனுக்கும் வாக்குத்தத்தம் தேவை. வாக்குப்படி கூலி கேட்பான். இறங்கும்படி பிச்சையும் கேட்பான். நாமோ தேவனுடைய பிள்ளைகளாகவே அவரையே கிட்டிச் சேர்ந்திடுவோமாக. அவருடைய சகல ஆசீர்வாதங்களும் நம்முடையதே ஆமென். ஆசிரியர் பிலிப் ஜெயசிங்