தேவ செய்தி 2ஆம் பாகம்

பாவங்கள்


(தேவ செய்தி    சகோ. ஷூன் சைரஸ், கேரளா)


என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் மீறுதலையும் பாவங்களையும் தெரிவி (ஏசாயா 58:1)


தேவனுடைய வார்த்தைகளையும் அவருடைய கட்டளைகளையும் மீறுவதே பாவம். அன்பானவர்களே, பாவம் எப்படியெல்லாம் நம்மில்கடந்து வருகின்றது என்பதைக் குறித்து கடந்த சில மாதங்களாக சிந்தித்து வருகின்றோம். வசனத்தை கேட்கின்றவர்களாக மாத்திரம் இருந்து தங்களைத் தான் வஞ்சியாமல் அதை செய்கின்றவர்களாகவும் இருக்க வேண்டுமென்று யாக்கோபு தன்னுடைய நிரூபத்திலே கூறியிருக்கிறார்.


அன்பானவர்களே, கிறிஸ்தவர்களாகிய நாம் வசனம் கேட்கின்றவர்களாக காணப்படுகின்றோம். வேதத்தை கேட்பது நமக்கு மிகுந்த பிரியமாயிருக்கின்றது. தேவ செய்திகளையும் அவருடைய அதிசயங்களையும் பார்ப்பதற்காக ஜனம் விரைந்து செல்கின்றவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் எதற்காக இப்படி ஓடுகின்றனர். எப்படியாயினும் தங்களுக்குள்ளே பக்தி விருத்தியடைய வேண்டும். மற்றவர்கள் என்னை பக்தியுள்ளவனென்று சொல்ல வேண்டும். இப்படியே நாம் பரலோகம் சென்று விடலாம் என்ற சிந்தனையில் வாழ்கின்றனர். வசனத்தை கேட்பதற்காக மாத்திரம் ஓடுகின்றவர்கள் தங்களை வஞ்சிக்கின்றவர்களாக காணப்படுகின்றனர். இந்நாட்களில் ஜனத்திற்கு எப்படியெல்லாம் சுவிசேஷம் சொல்லப்படுகின்றது. சபைகளிலே கன்வென்ஷன், ஆவிக்குரிய கூடுகைகள் இன்னும் சுவிசேஷ பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் எத்தனையோ சானல்கள் இப்படியாய் எந்த நேரத்திலும் ஆவிக்குரிய செய்திகளை கேட்பதற்கான வழிகளில் தாராளமாய் இருக்கின்றன. விசுவாசிகள் இவைகளை அதிகமாய் விரும்பி கேட்கின்றனர்.


இவைகளுக்கெல்லாம் மேலாக நாள்தோறும் வேதம் வாசிக்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். எப்படியாயினும் ஜனம் வசனத்தை அதிகமாய்க் கேட்கின்றவர்களாகக் காணப்படுகின்றனர். இப்படியாய்க் கேட்கிற வசனங்கள் அல்லது செய்திகள் நிமித்தம் வாழ்க்கை சீர்படுத்தப்பட வேண்டும் என்பதனை இவர்கள் மறந்து விடுகின்றனர். இந்த வசனங்களின்படி வாழ்ந்தால்தான் நாம் நித்திய காலமாய்ப் பரலோகில் வாழ முடியும். வேதாகமம் என்ற ஜீவனுள்ள வார்த்தைகள் கிடைக்காத எத்தனையோ ஜனம் அழிந்து கொண்டிருக்கும் போது நம்மை அழைத்து வசனங்களைக் கேட்கவும் அதை புரிந்து கொள்ளவும் செய்கிறாரே. அவர் நம்மோடிருக்கும்படியாய் நம்மை அழைத்திருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படி கேட்கின்றவர்களாகிய நாம் ஏமாந்துவிடாதபடிக்கு நித்தியவாழ்வை இழந்து விடாதபடி ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.


அன்பானவர்களே, இயேசு இவ்வுலகத்தில் வந்து மற்றவர்களை (நம்மை) பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் மீட்பதற்காகவே அதாவது மற்றவர்களுக்காக தம்மை அர்ப்பணித்து வாழ்ந்து மாதிரியைக் காண்பித்துப் போனார். ஒவ்வொரு தனி மனிதனும் உலகத்தில் அனுப்பப்பட்டிருப்பது தமக்காக சுய நலமாய் வாழ்வதற்கல்ல, மாறாக திக்கற்றவர்களையும் ஒடுக்கப்படுகிறவர்களையும் விசாரிக்கவும் அவர்களின் வாழ்விற்கு தேவையான நன்மைகளை அளிப்பதற்காகவும் தானே. வசனத்தை கேட்கின்றவர்களாகிய நாம் அதனைக் கைக்கொண்டு நம்முடைய கிரியைகளினாலே மற்றவர்கள் தேவனிடத்தில் சேர்க்கப்படுவதற்காக வாழ வேண்டியது அவசியமாயிருக்கின்றது. ஏசா.66:2ல் கூறப்படுகின்றது சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். நம்மில் எத்தனை பேரிடத்தில் இந்த நடுக்கம், வசனத்தை குறித்ததான பயம் காணப்படுகின்றது. கேட்கின்ற வசனங்களை நாம் நிர்விசாரமாக காண்பதினால் தானே. அதன்படி செய்யவோ அதற்கு பயப்பட்டு தீமையை விட்டு விலகவோ மனிதர்களால் முடியவில்லை. தேவன் நம்மை நோக்கிப் பார்க்க வேண்டுமானால் இம்மைக்கும், மறுமைக்குரிய ஆசீர்வாதங்களை நாம் பெற வேண்டுமானால்வேத வசனங்களுக்கு கீழ்ப்படிகின்றவர்களாகவும், அதை செய்கின்றவர்களாகவும் காணப்பட வேண்டும்.


யாக்.1:25ல் பிரமாணத்தை மறக்கிறவனாயிராமல் அதை செய்கின்றவர் யாரென்று சொன்னால் அவன் சுயாதீன பிரமாணமாகிய பூரண பிரமாணத்தை உற்றுப்பார்க்கின்றவனாக இருக்க வேண்டும். நியாய பிரமானத்தின் பூரணமென்பது கிறிஸ்துவே. அவரையே உற்றுப்பார்த்து அவரிலே நிலை நிற்கிறவர்களால் மாத்திரமே தங்கள் செய்கைகளில் பாக்கியவான்களாயிருக்க முடியும். யாக்.2:18,20 சொல்கின்றது விசுவாசம் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்குமென்று நாம் கேட்கின்ற வசனங்களை குறித்ததான விசுவாசம் நம்முடைய தேவனிடம் நாம் வைத்துள்ள விசுவாசம். அது கிரியையில்லாததாயிருந்தால் அது மற்றவர்களுக்கு உதவுவதாக இல்லாவிட்டால் செத்ததாகத்தான் கணக்கிடப்படும். (யாக்.2:23) ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டதின் பின்னணியம் என்னவென்றால் அவன் தன்னுடைய ஏக புத்திரனை கடவுளுக்கு பலியாக அர்ப்பணிக்க துணிகிறான். இந்த கிரியையின் மூலமாகவே அவனுடைய விசுவாசம் உறுதி செய்யப்படுகின்றது.


இப்படியாய் வேதத்தில் அநேக இடங்களில் கிரியைகளினால் தான் விசுவாசம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது வசனத்தை கேட்கின்றவர்களாகி நாம் எப்படி செயல்படுகின்றோம். நம்முடைய விசுவாசம் எப்படியுள்ளது. தற்பரிசோதனை செய்து தேவனிடத்தில் திரும்புவோம். கேட்கின்றவர்களாக மாத்திரமல்ல, அதன்படி செய்கின்றவர்களாகவும் மாறுவோம். அதற்காக கர்த்தர் கிருபை புரிவாராக. ஆமென்.


சகோ . ஷீன் சைரஸ், கேரளா. Cell: 09447735981