பெண்கள் பகுதி
குடும்பம்
கர்த்தர் தழைக்கச் செய்யும் குடும்பங்கள்!!
"மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால் அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்'' யாத். 1:21
கிறிஸ்துவுக்குள் அருமையான சத்திய வெளிச்சம் வாசகர்களே நாம் அனைவரும் கர்த்தரின் பெரிதான கிருபையால் தழைக்கும்படி கர்த்தர் நம்மை மறுபடியும் இந்த புத்தாண்டில் பிரவேசிக்க ஒரு அவகாசம் கூட தந்திருக்கிறார். ஆகையால் அவருக்கு நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்மையே ஸ்தோத்திரப் பலியாக ஒப்புக் கொடுக்க தேவன் தாமே கிருபை அளிப்பாராக.
இன்றைய நாட்களைக் குறித்து நாம் சிந்திக்கும் போது முந்தின நாட்களை விட இன்றைய நாட்களில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் என்று சொல்லுகின்றவர்கள் அல்லது கிறிஸ்துவை ஆராதிக்கின்றவர்கள் பெருகி காணப்படுகின்றார்கள். அது போன்று உலகத்தில் பல விதத்தில் பாவ செயல்களும் பெருகி கொண்டே போகின்றது. ஜனம் மனசாட்சி இல்லாதவர்களாக தங்கள் கிரியைகளில் எல்லா இடங்களிலும் உண்மையில்லாதவர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றுகின்றவர்களாகவும், சதிக்கின்றவர்களாகவும், துரோகம் செய்கின்றவர்களாகவும், பொறாமை, போட்டி மனப்பாண்மை உள்ளவர்களாகவும், இப்படியே தேவநீதிக்கு மாறாக பாவம் செய்கின்றவர்களாகவேகாணப்படுகின்றார்கள் என்பது உண்மை. கிறிஸ்தவர்களென்றால் இயேசுவை தன் வாழ்க்கையில் காட்டுகின்றவர்களே. ஆனால் கிறிஸ்தவர்களுக்குள் தெய்வ பயமில்லாமையால் கிறிஸ்தவர்கள் பெருகுகிறது போன்று பாவமும் பெருகி வருகின்றது என்பது உண்மை . எல்லா சபைகளிலும் வாக்குத்தத்த வசனங்கள் என்ற பெயரில் ஆசீர்வாத வசனங்களை மட்டும் புத்தாண்டில் கொடுக்கின்ற காரணத்தினால், ஜனங்களும் ஆசீர்வாதத்தை மட்டுமே நம்பி கிறிஸ்துவை வாழ்க்கையில் காட்ட மறந்தவர்களாக, தெய்வ பயமில்லாதவர்களாக தங்கள் வாழ்க்கையை தொடருகின்றார்கள்.
இன்று அநேகர் கிறிஸ்துவை ஆராதிப்பதே உலக ஆசீர்வாதங்களுக்காக அல்லது செல்வ செழிப்பிற்காக மட்டுமே. அதற்காகவே ஜனங்கள் ஓடி தேடி அலைகின்றார்கள். எந்த சபையில் சென்றால் ஆசீர்வாதம் கிடைக்கும், எந்த ஆராதனையில் ஆசீர்வாதம், சுகம், சமாதானம் கிடைக்குமென்று, அதுபோன்று எந்த ஊழியக்காரரிடம் சென்று ஜெபித்தால் அல்லது தலையில் கைகளை வைத்தால் ஆசீர்வாதம் கிடைக்கும்மென்றும், எந்த இடத்தில் ஆசீர்வாத செய்தி கொடுக்கப்படுகின்றது என்றுதான் அலைகின்றார்கள். இவர்கள் தங்கள் நம்பிக்கையை ஊழியக்காரர்கள் மேலும், சபைகளின் மேலும் தான் வைத்திருக்கின்றார்கள். அதோடு சபைக்கும், ஊழியக்காரருக்கும் தான் மகிமையை செலுத்துகின்றார்கள். இதனால் ஜனம் தெய்வ பயமற்றவர்களாக பாவத்தில் தள்ளப்பட்டு விடுகின்றார்கள் என்பதும் உண்மை. இந்நாட்களில் வாக்குத்தத்த வசனங்களைக் கொடுக்கும் போது கர்த்தருக்குப் பயப்படுவதினால் மட்டுமே இந்த ஆசீர்வாத வசனங்கள் உங்களுக்கு பலன் தரும் என்று எச்சரிப்போடு ஊழியர்கள் போதித்தால் ஜனங்களும் கொஞ்சமாவது பாவ உணர்வை பெற்றவர்களாக தெய்வ பயத்தோடு வாழ வழிசெய்யுமே. அது தானே ஆசீர்வாதத்தின் முதல் படி. ஆகவே இனிவரும் நாட்களைக் கர்த்தர் காண கிருபை கிடைக்க சிந்தித்து மனந்திரும்பி தெய்வ பய்ததோடு ஊழியத்தை நிறைவேற்றி நீங்களும் மாதிரியைக் காண்பித்து நல்ல குடும்பங்களைக் கட்டுங்கள்.
தழைத்து, தழைக்கும் என்பது செழித்து, செழிக்கும் என்றும் குடும்பம், அமைப்பு முதலியவற்றை சிறப்புடன் வளர்த்தல் என்பனவாகும். ஒரு மரம் தழைத்து அல்லது சிறப்புடன் வளர்ந்தது என்றால் அதை குறித்து சிந்திக்கும் போது, இலை உதிர் காலத்திற்கு பின்பு மரங்கள் தழைக்கத் தொடங்கும். அப்படியென்றால் அந்த மரத்தின் பழைய பழுத்துப் போன, பலன் தராத இலைகள் அனைத்தும் தன்னை விட்டு நீக்கும் போது புதிய துளிர் வந்து தழைத்து பலன் தரும் விதத்தில் அல்லது மற்றவர்களுக்கு பிரயோஜப்படும் விதத்தில் அமையும். அதுமட்டுமல்லாமல் பல கொம்புகள் ஓங்கி வளரும் போது தான் மரம் தழைக்கும். இந்த மரத்தை அலங்கரிக்கும் விதத்தில் கொம்புகள் கனி தந்து காணப்படும். இப்படி அலங்கரித்த கொம்புகளோடு கூடிய தழைகள் மற்றவர்களுக்கு நிழலிடுகின்றதாக காணப்படும். அதோடு கொம்புகளில் ஆகாயத்து பறவைகளெல்லாம் கூடு கட்டும். அதோடு மரத்தின் செழிப்பின் மிகுதியினால் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் கூட ஆகாரம் (நன்மை) கிடைக்கும். இந்த மரம் தண்ணீர் ஓடும் ஊற்றினருகே நாட்டப்பட்டதினால் மட்டுமே செழிப்பாக வளர்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மரத்தைக் குறித்தான சிந்தனையை ஒரு குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்ப்போமானால் முதலாவது குடும்பம் கிறிஸ்துவாகிய ஜீவதண்ணீர் ஓடும் ஊற்றினருகே நாட்டப்பட்டதாக காணப்பட வேண்டும். அப்படியானால் எப்பொழுதும் பயந்திருக்கின்ற மனுஷன் பாக்கியவான் என்று சொல்லப்பட்ட வசனத்தின்படி (நீதி. 28:14)நாம் தெய்வ பயமுள்ளவர்களாக நம் செயல்களில் காணப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டிலும் தன் பழைய பாவச் செயல்களை விட்டு விட்டு புதிய துளிர் விட வேண்டும். அப்படி விடப்பட்ட துளிர் தழைத்து வளரும் போது அதினால் நாம் மற்றவர்களுக்கு நன்மை (ஆகாரம், பல விதத்திலுள்ள உதவி) கொடுக்கின்றவர்களாக உலகத்திலும், ஆத்மீகத்திலும் காணப்படுவோம். அதோடு நிழல் (ஆறுதல், பாதுகாப்பு, கருணை, இரக்கம்) கொடுக்கின்றவர்களாகவும் காணப்படுவோம். நம் குடும்பத்தை அலங்கரிப்பது என்பது ஆத்மீக கனிகள் (அன்பு, சந்தோஷம், சமாதானம்....) கொடுக்கின்றவர்களாகவும், உலகத்தில் மற்றவர்களுக்கு தங்கள் செழிப்பினால் நன்மை செய்கின்றவர்களாக காணப்படுவது தான். கர்த்தருக்குப் பயப்படாதவன் உலகத்தின் பெயர், புகழ், பெருமை இவற்றிற்காக நன்மை செய்கின்றான். அது பலன் அற்றதாகும்- கர்த்தருக்குப்பயப்படும் குடும்பம் மட்டுமே கர்த்தரால் தழைக்கச் செய்யும் குடும்பமேயாகும்
. கர்த்தர் குடும்பங்களை தழைக்கும்படி செய்திருக்கிறார். அந்த குடும்பங்கள் அனைத்துமே ஆதியில் கர்த்தருக்குப் பயப்பட்டு தங்கள் கிரியைகளில் உண்மையுள்ளவர்களாக தான் காணப்பட்டார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தங்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தது கர்த்தர் என்பதை மறந்து; தெய்வபயமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தங்கள் செழிப்பின்மேல் மட்டும் முழு நம்பிக்கையும் வைத்து, அதற்கு மகிமை கொடுத்து வாழ்கின்றார்கள். அதோடு தங்கள் செழிப்பின் மிகுதியால் தங்ள் இருதயத்தில் மேட்டிமை கொண்டு மற்றவர்களுக்கு நன்மை செய்வதையும் விட்டுவிட்டு; தங்ளுடைய கொம்புகளுக்காகவே மகிமையை சேர்ப்பதற்காக பணத்தை சம்பாதிக்கின்றார்கள். தங்களுடைய கொம்புகள் மற்ற மரத்தின் கெம்புகளைப்பார்க்கிலும் அதிகமாக வானளவாக உயர்ந்திருக்க வேண்டும்மற்றவர்கள் என் செழிப்பைக் குறித்தும் மகிமையைக் குறித்தும் புகழ்ந்து பேச வேண்டும் என்று சுயத்திற்காகவே பாடுபடுகின்றார்கள். ஆகவே கர்த்தர் அவர்களின் கொம்புகள் தழைத்தது போதும். இனி இவன் தழைக்க வேண்டாம் என்று நினைத்து கொம்புகளை வெட்டிப்போடுகிறார் அல்லது பட்டுப்போகச் செய்கின்றார். இதை குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் 31-ம் அதிகாரத்தில் வாசித்து உணர முடிகின்றது. "கொம்பு என்பது மக்கள். வேதம் கூறுகின்றது "துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்” என்று சங். 75:10. இன்று கர்த்தர் தழைக்கச் செய்த குடும்பங்கள் அமைப்புகள் கர்த்தருக்குப் பயப்படும் பயம் ஆதியிலுள்ளதை விட்டுவிட்டு செழிப்பின் மிகுதியால் பிள்ளைகளையும் குடும்பங்களையும், அமைப்புகளையும் சரியாக வளர்க்காமல் கர்த்தர் பட்டுப்போகச் செய்யும் நிலமையிலுள்ளது என்பது மிகவும் உண்மையானது. பெருமையுள்ளவர்களுக்கோ தேவன் எதிர்த்து நிற்கின்றார் (யாக். 4:6) என்ற வசனத்தின்படி குடும்பங்கள் பெருமையினால் வெட்டப்பட்டு வருகின்றது என்பதும் உண்மை
இனி நாம் வேதத்தில் கர்த்தர் தழைக்கச் செய்த குடும்பத்தைக் குறித்து சிந்திப்போமானால்; சிப்பிராள், பூவாள் என்ற ஸ்திரீகள் மருத்துவச்சிகளாக வேலைப்பார்த்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் வேலையிலும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு காணப்பட்டார்கள். (யாத். 1:21,17) இங்கு ராஜா (அ) எஜமான் ஒரு கட்டளையை பிறப்பிக்கின்றான். அந்த கட்டளை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது ஊழியக்காரனின் கடமை. அப்படிப்பட்ட மிகவும் கடினமான நிலமையில் தான் இந்த மருத்துவச்சிகள் காணப்படுகின்றார்கள். இங்கு ராஜாவின் கட்டளை என்னவென்றால் "எபிரெய ஸ்திரீகளுக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகளை கொன்றுப் போட வேண்டும்" என்பதே. (யாத். 1:16). இங்கு ராஜாவின் கட்டளை சிசு கொலை செய்ய வேண்டும் என்பதாகும். இது தேவநீதிக்கு அப்பாற்பட்ட கட்டளையாகும். ராஜாவின் கட்டளை தேவநீதிக்கு புறம்பானதா? இல்லையா? என்பதை உணர வேண்டுமானால் தேவ ஞானம் நமக்கு வேண்டும். தேவஞானம் எப்படி கிடைக்கும். வேதம் கூறுகின்றது, "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதி.9:10) என்று. அவ்வாறு மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்பட்டு தங்கள் தொழில் உண்மையுள்ளவர்களாக காணப்பட்டதினால் அந்த மகா பெரிய பாவத்தைச் செய்யாமலிருக்க கர்த்தர் ஞானத்தைக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் ராஜாவின் கட்டளை மீறினால் நிச்சயமாக அவன் தண்டனைக்கு பாத்திரவான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்பட்டதினால் ராஜா அவர்களிடம் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டபோது, மருத்துவச்சிகளால் ராஜாவின் தண்டனைக்கு தப்பும் விதத்தில் தேவன் அவர்களுக்கு ஞானமாய் பதில் சொல்ல அவர்கள் வாயோடே கூட இருந்தார் என்பதை நம்மால் அறிய முடிகின்றதே. மருவத்துவச்சிகள் ராஜாவிற்கு சொன்ன பதில் என்ன? எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப் போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள் (யாத். 1:19).
ஆம் பிரியமானவர்களே கிறிஸ்தவர்களென்றால் நாம் நல்ல பலமுள்ளவர்கள். அப்படிப்பட்ட ஜாதியாக இருக்கும் போது நாம் கர்த்தருக்குப் பயப்பட்டால் கர்த்தர் இந்த மருத்துவச்சிகளுக்கும், எபிரெய ஸ்திரீகளுக்கும் நன்மை செய்தகர்த்தர் நமக்கும் நன்மைச் செய்வார் என்பது அதிக நிச்சயமே. மருத்துவச்சிகள் எதினால் நன்மையைப் பெற்றார்கள்? எதினால் அவர்கள் குடும்பங்களை கர்த்தர் தழைக்கும்படி செய்தார் என்பதை அறிந்த ஜனமே, ஊழியக்காரர்களே, குடும்பங்களே கர்த்தருக்குப் பயப்படுதலை வாழ்க்கையில் காட்டுங்கள், மற்றவர்களுக்கு கர்த்தருக்குப் பயப்படுதலை போதியுங்கள்.
ஆசீர்வாதத்திற்கும் இந்த உலகத்தின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காக மட்டும் இயேசுவை ஆராதிக்க ஓடி அலையாதிருங்கள். இன்று அநேகர் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள ஓடுவது: T.V வாங்கினால் அதோடு ஒரு பரிசு பொருள் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட பரிசு பொருளுக்காக மட்டுமே. T.V வாங்கும் போது கடைக்காரன் அறிவித்த பரிசு பொருளைக் கொடுப்பது நிச்சயம் - அதற்காக T.V வாங்காமல் கடைக்காரனிடம் பரிசு பொருளை மட்டும் இலவசமாய் தாருங்கள் என்று கேட்பது சரியானதா? சிந்தியுங்கள். ஆகவே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும். (மத். 6:33). மனுஷர் கட்டளைக்கு பயப்படாமல் தேவநீதிக்குப் பயப்படுங்கள். ஆசீர்வாதம் இந்த உலகத்தில் தேவை. ஆனால் அதைவிட முக்கியம் கர்த்தருக்குப் பயப்படுதல் என்பதை உணருங்கள்.
வேதம் கூறுகின்றது, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (சங். 34:9) என்றும், இதோ கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான் (சங். 128:4) என்றும் கூறப்படுகின்றதே. ஆகையால் குடும்பத்தை கர்த்தர் தழைக்கச் செய்யும்படி அவருக்குப் பயப்படும் பயத்தை இந்த புத்தாண்டின் தேவ சத்தமாக காதில் தொனிக்கப்பட்டதாகவும், இருதயத்தில் விருத்தசேதனம் பெற்றவர்களாகவும் வாழ தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபைச் செய்வாராக ஆமென்
சகோதரி. ஹெலன் ஷீன், கேரளா