God's Message - Ladies Section

                                                             பெண்கள் பகுதி


                                                    கீழ்ப்படியுங்கள்


                                        தேவனுக்கு முன்பாக நீதியுள்ள குடும்பம்


"அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்" லூக். 1:6


       அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். எத்தனையோ கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுகளை மிகவும் ஆடம்பரமான விழாவாக, மகிழ்ச்சியோடு குடும்பமாக கொண்டாடி வருகின்றோம். ஆனாலும் குடும்பத்திலுள்ளவர்கள் (புருஷன், மனைவி, பிள்ளைகள்) கிறிஸ்து எதற்காக இந்த உலகத்தில் பிறந்தாரென்றும், அவர் குடும்பத்தை குறித்து என்ன சித்தம் கொண்டுள்ளார் என்பதையும் நாம் இன்னும் அறியாதவர்களாகவே பாரம்பரியமான சடங்குகளுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருகின்றோம் என்பதல்லவா உண்மை . இந்த கிறிஸ்மஸ் விழா நாளின் போதாவது நம் குடும்பம் தேவனுக்கு முன்பதாக எப்படி காணப்பட வேண்டும் என்பதை நாம் அறிந்து உணர வேண்டியது அவசியம்.


      முதலாவது நம்முடைய குடும்பங்களின் நிலமையைக் குறித்து சிந்தித்து பாருங்கள். எத்தனையோ வருட பாரம்பரியகிறிஸ்தவ குடும்பத்திலுள்ளவர்களாகவும், சிலர் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்திலில்லாதவர்களாகவும் காணப்படுகின்றோம். அனுதினமும் வேதம் வாசிக்கின்றோம், தியானிக்கின்றோம், போதிக்கின்றோம், ஜெபிக்கின்றோம். இப்படிப்பட்டவர்களாய்க் காணப்பட்டாலும் கூட உங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் வேதத்தின்படி கற்பனைகளுக்கும், நியமங்களுக்கும் உட்கொண்டு தேவனுக்கு முன்பாக கீழ்ப்படிந்து இன்று வரை குற்றமற்றவர்களாய் நடந்து நீதியுள்ளவர்களாக வாழ முடிகின்றதா? குடும்பத்திலுள்ள தகப்பன் தாய் புருஷன், மனைவி) இவர்கள் கீழ்ப்படிந்தால் தானே பிள்ளைகளும் அது கண்டு பின்பற்றுவார்கள். புருஷனும் மனைவியும் கர்த்தரிட்ட கற்பனைகளையும், நியமங்களையும் அறியாதவர்களாக உலகத்தின் நீதிக்கு ஏற்ற பிரகாரம் நடந்து கொண்டால், எப்படி தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக காணப்பட முடியும். தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக காணப்படுகின்றவர்களே பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பார்கள் என்பது உண்மை . இன்று கிறிஸ்தவர்களில் அநேகர் சபைக்கு முன்பாக, போதகர்கள், ஊழியக்காரர்கள், விசுவாசிகள் இவர்களுக்கு முன்பாக குற்றமற்றவர்களைப் போன்று நடந்துக் கொள்ளுவார்கள். இப்படி நடந்து கொள்ளுகின்றவர்கள் நாங்கள் தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களென்றும், பரிசுத்தவான்களென்றும், குற்றமற்றவர்களென்றும் தங்கள் நடத்தையிலும், சிந்தனையிலும் காட்டிக் கொள்ளுவார்கள்


         நான் என்னுடைய சிந்தனையை உங்கள் முன்பு வைக்க விரும்புகிறேன். "ஒருவன் ஒரு சபையை மட்டும் சார்ந்தவனாக வேதத்திலுள்ள எந்த காரியத்தைக் குறித்து சிந்தித்தாலும் அவன் சிந்தனை அவன் சபையின் கற்பனைகளுக்கும், நியமங்களுக்கும் உட்ப்பட்டதாகவே காணப்படும் என்பது உண்மை . ஒரு மனிதன் (அ) மனுஷி கிறிஸ்துவின் மெய்யான விடுதலையைப் பெற்றவனாக காணப்பட்டால் அவன் சிந்தனை வேதாகமத்தை கிறிஸ்துவை) உட்கொண்டதாக இருக்கும். அவன் ஒரு சபையை சார்ந்தவனாக இருந்தாலும், அவன் அந்த சபையின் கற்பனைகளுக்கும், நியமங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட வசனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தேவனுடைய கற்பனைகளுக்கும் நியமங்களுக்கும் உட்பட்டு குற்றமற்றவனாக நடந்து தேவனுடைய நீதியை நிலைநாட்ட தனக்குள்ளே போராடுகின்றவனாக காணப்படுவான். தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவனாக நடந்துக் கொள்ள விரும்புகின்றவன், மற்றவர்கள் பார்வையில் அற்பமாகவும், கனவீனனாகவும் காணப்படலாம். ஆனால் அவன் தேவனுக்கு உகந்தவனாக, கனம் பெற்றவனாக காணப்படுவான் என்பது உண்மை . மனிதனுடைய முகத்தைப் பார்த்து மனிதனே கணக்கீடுவான். ஆனால் கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கின்றார் (1சாமு. 16:7) என்பதை நாம் உணர வேண்டும்.


   பவுல் கூறுவதுபோன்று ஒருவன் கிறிஸ்துவின் பிரமாணத்தினால் கட்டப்பட்டவனாக இருந்தால், அவன் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருப்பான். அப்படி காணப்படுகிறவனால்தான் யூதனையும் நியாயப்பிரமாணமுள்ளவனையும், இல்லாதவனையும், பலவீனரையும், ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும் (1 கொரி. 9:20,21,22). அப்படிப்பட்டவர்களால் மட்டுமே "சகல” கற்பனைகளையும், நியமங்களையும் உட்கொண்டு தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் நடந்து, நீதியுள்ளவர்களாக முடிவுபரியந்தம் வாழ முடியும் என்பது உண்மை . அப்படியாக வாழ்ந்த குடும்பம் தான் சகரியா, எலிசபெத்து. அவர்கள் குடும்ப வழ்க்கையில் கஷ்டங்களும், நிந்தனைகளும், அவமானங்களும் நேரிட்டது. அப்படியிருந்தும் அவர்கள் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும், நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாய் முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறார்கள். அப்படி காணப்பட்டதினிமித்தம் கர்த்தர் அவர்களுக்கு உலகத்தில் ஏற்பட்ட நிந்தையை, அவமானத்தை போக்க ஒரு குமாரனை வயது சென்ற நாட்களிலும் (அ) இனி நடக்காது என்று நினைக்கின்றபோது அந்த காரியத்தை நடப்பிக்க கிருபை செய்கின்றார். எலிசபெத் தெளிந்தபுத்தியோடு விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்ததால், பிள்ளைப்பேற்றினால் இரட்சிப்பின் பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டாள் (1 தீமோ. 2:15) என்பதை நாம் அறிந்து உணர வேண்டும்.


கர்த்தரிட்ட கற்பனைகளும், நியமங்களும் என்னவென்பதைக் குறித்து சிந்திப்போம்:


     ஒரு புருஷன் வேதாகமத்தின்படி எப்படி காணப்பட வேண்டும் என்பதைக் குறித்து முதலாவது அறிந்து உணருவோம்.


> புருஷர்களுக்கு தலையாக இருப்பது கிறிஸ்து என்பதை உணர்ந்து கிறிஸ்துவின் அடிசுவட்டை முழுமையாக பின்பற்ற வேண்டும். (1 கொரி. 11:3)


> புருஷன் தேவனுடைய சாயலும், மகிமையுமாயிருக்கிறான் என்பதை ஒவ்வொரு புருஷனும் உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும் (1 கொரி. 11:7).


> எந்த புருஷனும் தன் வீட்டிற்கு தானே அதிகாரியாக இருக்க வேண்டும் (எஸ். 1:22). > புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு மகிமை தராது; அது அவமானம் என்பதை உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும் (1 கொரி. 11:14)


> உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்க வேண்டும் (ரோ. 7:22)


> புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள் என்ற வசனத்தின்படி நடந்துக் கொள்ள வேண்டும். (எபே. 5:25)


> புருஷர்கள் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாக பாவித்து அன்பு கூர வேண்டும். மனைவியில் அன்பு கூறுகிறவன் தன்னில் தான் அன்பு கூறுகிறவன் என்பதை உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும். (எபே. 5:29)


மனுஷன் (புருஷன்) தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டு தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருக்க வேண்டும். எபே. 5:31)


> மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையைக் கண்டடைவான் என்ற வசனத்தின்படி மனைவி வெறுக்கப்பட வேண்டியவள் அல்ல, தீமையைத் தருபவளும் அல்ல என்பதை உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும் (நீதி. 18:22).


> எனக்கு கிடைத்த மனைவி எல்லாவற்றிலும் ஏற்ற துணை தான் என்பதை மனப்பூர்வமாக (அ) திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் (ஆதி. 2:18). > மனைவியானவள் பெலவீனபாண்டம்தான் என்பதை உணர்ந்து அவர்கள் முன்பு விவேகமாய் நடந்துக் கொள்ள வேண்டும் (1 பேது. 3:7)


> புருஷனுக்கு துணையை தானாக தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டாம். அது நம் தகுதிக்கேற்ப தேவன் நமக்கு கொடுக்கும் ஈவு (தானம்) என்பதை உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும். நீதி. 19:14).


> அதுபோன்று மிகுந்த ஆஸ்தியுள்ள வீட்டிலிருந்து (அ) மிகுந்த அந்தஸ்துள்ள வீட்டிலுலிருந்து பெண் கொள்ளுவதின் மூலம் அதிக வரதட்சணை கிடைக்கும் என்ற சிந்தனையை விட்டு விட்டு; வேதத்தின்படி வீடும் ஆஸ்தியும் ஒரு புருஷனுக்கு பிதாக்கள் வைக்கும் சுதந்திரம். அதுதான் உரிமையுள்ள சம்பத்து. மனைவியைத்தான் கர்த்தர் புருஷனுக்கு தானமாக (ஈவு) அருளுவார். அல்லாமல் வரதட்சணை அல்ல என்பதை உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும். (நீதி. 19:14).


> நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான் என்ற வசனத்தின்படி எப்பொழுதும் கர்த்தரிடத்திலிருந்து தயை பெற்றுக் கொள்ள தகுதியுள்ளவனாக தன் செயல்களில் நடந்துக் கொள்ள வேண்டும். (நீதி. 12:2).


> இச்சக வார்த்தைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை (புருஷன்) விலக்கிக் காத்துக் கொள்ளுமாறு நடந்துக் கொள்ள வேண்டும். (நீதி. 4:4).


> ஸ்திரீயைப் பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டு பண்ணும். அதினால் புருஷன் ஆக்கினையடையும் வழிக்கு எச்சரிக்கையாய் நடந்துக் கொள்ள வேண்டும். (நீதி. 16:34).


ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படி செய்கிறவன் தன் ஆத்துமாவை கெடுத்துப் போடுகிறான். ஆகையால் தன் ஆத்துமாவை கெடுத்துப் போடும் வழிகளில் நடந்து கொள்ளாமலிருக்க வேண்டும். (நீதி. 6:32).


> பிறனுடைய மனைவியைத் தொடுகிறவன் ஆக்கினைத் தீர்ப்பிற்கு உட்படுவான் என்பதை உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும். (நீதி. 6:25). > போஜன பிரியராயிருக்க கூடாது. (நீதி. 23:2).


> அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாக்க கீழப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்க வேண்டும். (இது ஊழியக்காரனுக்கு மட்டுமல்ல, புருஷர்களுக்கும் உரியதே.) (1 தீமோ. 3:3,4)


. > துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமலிருக்க வேண்டும். எபே. 5:18)


> புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிடக் கூடாது (1 கொரி. 7:11)


> புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும் (1 கொரி. 7:3)


. இப்படியாக புருஷர்களுக்கான கற்பனைகளும், சட்டங்களும் வேதாகமத்தின்படி இவைகள் மட்டுமல்ல, இன்னும் பலதும் அடங்கும். இனி ஸ்திரீகளைக் குறித்து சொல்லப்பட்டவைகளை காண்போம்.


+ மனைவிகளே, கர்த்தருக்கு கீழ்ப்படிகிறது போல உங்கள் சொந்த புருஷருக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பது சட்டமே. (எபே. 5:22,24).


+ ஸ்திரீகள் பொன்னாபரணங்களையும், உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதல், மயிரைப் பின்னி அலங்கரிப்பு இப்படிப்பட்ட புறம்பான அலங்கரிப்பு மட்டுமாக காணப்படாமல், தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரிக்க வேண்டும். புறம்பான அலங்கரிப்பு அழிந்து போகும். ஆனால் புருஷனுக்குக் கீழ்ப்படிந்து அலங்கரிக்கும் உள்ளான அலங்கரிப்பு அழியாத நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க வழி செய்யும் என்பதை நாம் உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும். (1பேது. 3:3-5).


+ புருஷனுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும் (1 கொரி. 7:3).


+ புருஷனோடே கூட நித்திய ஜீவனாகிய கிருபையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை ஸ்திரீயானவள் உணர்ந்து கொண்டவளாக பிரிந்து போகாமல் புருஷனோடே கூட வாழ வேண்டும் (1 பேது. 3:7).


+ புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள். புருஷன் மரித்த பின்பு புருஷனைப் பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள் என்ற தின்படி உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும் (ரோம. 7:2).


+ ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம் பண்ணினால் விபசாரியென்னப்படுவாள் என்பதை உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும். (ரோ.7:3) + மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக் கூடாது (1கொரி. 7:10) + மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி என்பதை உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும். (1 கொரி. 7:4). * புருஷன் மரித்த பிறகு உத்தம விதவையாக வாழ முடியாத இளம் விதவைகள் விவாகம் பண்ண லாம் (1 தீமோ . 5:14).


+ ஸ்திரீகள் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாய் நடந்துக் கொள்ள வேண்டும். (1 தீமோ. 3:11).


+ தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும், நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவோம் என்பதை உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும் (1 தீமோ. 2:15).


* ஸ்திரீயானவள் தன் ஜனத்தையும், தன் தகப்பன் வீட்டையும் மறந்து விட வேண்டும். (சங். 45:10,11).


+ உபதேசம் பண்ண வும், புருஷன் மேல் அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு கர்த்தர் அதிகாரம் கொடுக்கவில்லையென்பதை நன்கு அறிந்து உணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும் (1 தீமோ. 2:12).


+ ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருக்க வேண்டும் 1தீமோ. 2:11).


+ எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம் பண்ண வேண்டும் (எஸ். 1:20,21).


+ ஸ்திரீகள் புருஷரை தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ண க்கூடாது (எஸ்.1:12-18)


. இவைகள் மட்டுமல்ல இன்னும் அநேக காரியங்கள் அடங்கும். இந்த கற்பனைகளின்படியேயும், நியமங்களின்படியேயும் நடந்து கொள்ளுவது மனுஷரை போத்தியப்படுவத்துவதாக அமையாமல் தேவனுக்கு முன்பாக நீதியுள்ளதாக, குற்றமற்றதாக நடந்துக் கொள்ள, ஒவ்வொரு குடும்பமும் முயற்சி செய்யும் போது தேவன் தாமே நம்மை எல்லாவற்றிலும் ஆசீர்வாதமாகவும், சமாதானமாகவும் வழிநடத்துவார். நாம் சிந்தித்த வசனத்தில் மூல காரணமாக விளக்கும் வார்த்தை யென்னவென்றால் "சகல" என்பதாகும். ஆகவே ஒரு சிலவற்றில் மட்டும் கீழ்ப்படுவது என்பதல்ல. முழுமையாகவே நாம் கீழ்ப்படிய அர்ப்பணிக்கும் போது தான் கிறிஸ்து பிறப்பின் நோக்கமும், பண்டிகையும் அர்த்தமுள்ளதாக காணப்படும். இல்லாவிட்டால் பண்டிகை வெறும் சடங்காசாரமாக மாறி வீணாய்ப் போய் விடும். ஆகவே கிறிஸ்தவ ஜனங்களே உணர்ந்து தேவனுக்குப் பிரியமாய் வாழ அவரிடத்திலிருந்து தயை பெறுகின்றவர்களாகி அநுதினமும் காணப்பட தேவன் தாமே கிருபை புரிவாராக ஆமென்.


சகோதரி. ஹெலன் ஷீன், கேரளா