God's Message - 2nd Part

                                                             பாவங்கள்


என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி” (ஏசாயா 58:1)


   தேவ கற்பனைகளையும் அவருடைய வார்த்தைகளையும் மீறுவதே பாவம். அன்பானவர்களே நம்முடைய வாழ்க்கையில் பாவம் எப்படியெல்லாம் கடந்து வருகின்றது என்பதைக் குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதமும் நாம் தேவனுக்கு மாத்திரம் கீழ்ப்படிகின்றோமா இல்லை உலகத்தின் மேலும் ஆசை வைத்திருக்கின்றோமா? நம்முடைய ஊழியங்கள் எப்படியாயிருக்கின்றது. ஒரு எஜமானுக்குத்தான் ஊழியம் செய்கின்றோமா. இவைகள் நிமித்தம் நாம் எதை இழக்கின்றோம் என்பதைக் குறித்து சிந்திப்போம்.


     மத். 6:24 கூறுகிறது, " இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது என்று. அருமையானவர்களே இந்நாட்களில் ஏராளமானோர் தங்களை ஆவிக்குரியவர்களென்றும், தேவனுக்கடுத்தவர்களென்றும் கூறி நடக்கின்றனர். இவர்களுடைய இலட்சியங்களெல்லாம் இவ்வுலகின் செழிப்புதான். இவ்வுலகில் தங்கள் சாவு வரையிலும் துன்பங்கள், கஷ்டங்கள், நோய்கள், உபத்திரவங்கள் எதுவும் நெருங்காமல் செல்வம் வந்து சேர வேண்டும். சமூகங்களிலும், சபைகளிலும் அதிகாரங்கள் வந்து சேர வேண்டும். வாழ்வது தங்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், தங்கள் சபைகளுக்காகவும் மட்டும் தான். கடைசியில் எப்படியாவது தேவனோடு சேர வேண்டும் என்ற எண்ணம் எல்லாரிடமும் காணப்படுகின்றது.


  தேவ கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமல், பாரம்பரியங்களுக்காகவும் வாழ்ந்து விட்டு இதுவே ஆவிக்குரிய வாழ்க்கை என்று எண்ணுகிறவர்கள் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்கின்றர்களாகக் காணப்படுகின்றனர். வேதத்தில் தேவன் கூறுகிறார் எனக்காக இவ்வுலகிலே நீங்கள் எவைகளை இழக்கின்றீர்களோ மறுமையிலே அவைகளை நூறத்தனையாக பெறுவீர்கள் என்று. நித்திய ஜீவனையும் அடைவான். (மத். 19:29 இவ்வுலகில் இழக்க தயாராகாதவர்கள் மறுமையை அடைய முடியாது. ஒருவன் எதை நேசிக்கிறானோ அவனால் அதைதான் சேர்க்க முடியும். ஒருவன் பணத்தையும் இவ்வுலக சம்பத்துகளையும் நேசித்தால் அவனால் அதை சேர்க்க முடியும். ஆனால் இயேசுவையும், பிதாவையும் நேசிக்கின்றவர்களால் மட்டுமே அவரை சேர்த்துக் கொள்ள முடியும். ஒவ்வொருவருடைய மனதின் யோசனைகள் தான் அவர்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றதும், செயலாற்ற வைக்கின்றதும் ஆகும். உலகத்தையும் அதன் ஆசைகளையும், செல்வங்களையும் நேசித்து அதற்காக வாழ்கின்றவர்கள் ஒருபோதும் தேவனுக்கென்று வாழ முடியாது. இவ்வுலகத்தோடுள்ள பற்றுதலை கைவிட்டுவிட்டு தேவனுக்கேற்றவைகளை மற்றும் யோசித்து அதற்காக பாடுபடும் போது தேவனாகிய ஒருவருக்கே ஊழியம் செய்கின்றவர்களாக மாற முடியும்.


       மத். 6:24-ன்படி நாம் யாருக்கு ஊழியம் செய்கின்றோம் என்பதை இன்னும் ஆழமாக சிந்திக்கும் போது அநேகர் தேவனுக்கு செய்கின்ற ஊழியத்தில் உலகத்தின் ஊழியத்தையும் பூரணமாக கலப்படம் செய்து, இதுதான் தேவனுக்கு செய்யும் ஊழியம் என்று பேசி வருகின்றனர். இன்று காண்கின்ற ஆவிக்குரிய 14) 2019 வாழ்க்கையில் உலகம் எப்படியெல்லாம் கலக்கப்படுகின்றது என்பதற்கான சில உதாரணங்களை நாம் பார்ப்போம்.


     யோ. 15:7 நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, அது உங்ளுக்குச் செய்யப்படும். இது தேவகட்டளை. தேவனிடத்தில் நிலைத்திருக்கின்றோம் என்று சொல்லுகிறவர்கள், அதாவது தேவனுக்கென்று ஊழியம் செய்கின்றோம் என்று சொல்லுகின்ற எத்தனை பேர்களில் அவருடைய வார்த்தை நிலைநிற்கின்றது சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையை தவறாது கடைபிடித்து நடக்கின்றவர்கள் கேட்பதெல்லாம் தேவனுக்கடுத்தவைகளும், நித்திய வாழ்விற்கு நம்மை சேர்ப்பதற்கேற்றவைகளுமாயிருக்கும். அநேகர் இவ்வுலக ஆசீர்வாதங்களை கேட்டு அதனை அடைந்தும் வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை இவ்வுலகத்தோடு முடிவடைகின்றதாயிருக்கும். எத்தனைதான் இவ்வுலகில் சேர்த்தாலும் அது நிலையற்றதாகத்தான் காணப்படும். தேவனுடைய வார்த்தைகளை அறிந்தும், உணர்ந்தும் நாம் கேட்க கற்றுக் கொள்ள வேண்டும்


      இரண்டாவதாக கர்த்தருக்கு ஊழியம் செய்கின்றோம் என்று சொல்லி காணிக்கை வாங்குவதிலும் பணம் சம்பாதிப்பதற்கான நூதன யுக்திகளை கையாற்றுவதிலும் ஜனம் மிகவும் புத்தியும் தந்திரமுள்ளவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் இரு எஜமான்களுக்கு ஊழியம் செய்கின்றவர்கள். இத்தகையோர் நீங்கள் கேட்பது எல்லாம் அளிக்கப்படும் என்பதை மாத்திரம் லட்சியமாக வைத்து இவ்வுலகத்திற்கானவற்றை சம்பாதிக்கின்றனர். இங்கேயே தங்களுக்கென்றும் தங்கள் குடும்பம் சபை இவைகளுக்காகவும் சேர்த்து வருகின்றனர். "உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” மத். 6:21 என்று கூறப்படுகின்றது. உலகத்தை நேசித்து அதற்கானவற்றை சம்பாதித்துவிட்டு இருதயம் தேவனோடிருக்கிறது என்று சொல்லுவதில் பிரயோஜனமில்லை. ஏனென்றால் வசனத்தின்படி பொக்கிஷம் இருக்கிற இடத்தில் இருதயமும் இருக்கும் என்கிறதே. இப்படியானால் நாம் எந்த எஜமானுக்கு எப்படி ஊழியம் செய்கின்றோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டுமே


  . வேதத்தின் இரகசியங்களை இவ்வுலகத்தோடு ஒப்பிட்டு வாழ்ந்து ஏமாந்து விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்; ஒரே எஜமானாகிய தேவாதி தேவனுக்கே ஊழியம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம் நம் பொக்கிஷங்களை பரலோகிலே சேர்ப்போம். இதற்காக தேவன் கிருபை புரிவாராக. ஆமென்.


சகோ. ஷீன் சைரஸ், கேரளா . cell: 09447735981