தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்தித் திரிகிறான்.
I பேது. 5:8
இவ்வசனங்களை நாம் நன்கு அறிந்துள்ளோம். இதன் பேரில் பல செய்திகளையும் கேட்டும் உள்ளோம். ஜெபித்தும் உள்ளோம். ஆனால் நாம் இதுவரையிலும் அறிந்துள்ள படிக்கு எதிராளியாகிய பிசாசானவன், எந்த ஒரு வியாதி ரூபத்திலோ, அல்லது ஏதாவது பிரச்சனை ரூபத்திலோ எவனை விழுங்கலாமோ என்று சிங்கம்போல கெர்ச்சித்து சுற்றித் திரியவில்லை, என்பதே உண்மை . இவ்வசனத்தை எழுதிய பரி.பேதுரு ஒரு வியாதி அல்லது பிரச்சனை, பிசாசின் ரூபத்தில் வருவதாக எழுதவில்லை . தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள் என்று எழுதும் போது நாம் ஒரு வியாதிக்காக, பிரச்சனைக்காக தெளிந்த புத்தியாய் விழித்திருத்தல் அவசியமல்ல. பரி. பேதுரு குறிப்பிட்டுள்ளது "பெருமை” யாகிய பிசாசானவனே எவனை விழுங்கலாமோ என்று சிங்கம்போல கெர்ச்சித்து சுற்றித் திரிகிறான் என்று மட்டுமே கூறியுள்ளார் என்று அறிந்திடுவோமாக. தெளிந்த புத்தியாய் விழித்திருத்தல் என்பது மனத்தாழ்மையை எல்லாரிடமும் எல்லா இடங்களிலும் அணிந்து கொள்ளுங்கள் என்பது மட்டுமே ஆகும். பெருமையுள்ளவர்களுக்கு தேவனே எதிர்த்து நிற்கின்றார், தாழ்மையுள்ள வர்களுக்கோ தேவன் கிருபை அளிக்கிறார். ஒரு வியாதி வந்தால் மருத்துவரை அணுகி சுகமாக்கிவிடலாம், ஒரு பிரச்சனை வந்தால் நீதிமன்றம் வரையிலும் சென்று தீர்வு கண்டுவிடலாம். ஆனால் இங்கே பெருமையுள்ளவர்களுக்கு தேவன் தாமே எதிராக இருப்பாரானால், தேவனுக்கு எதிராக யார் சென்று தீர்வினை கண்டிடக் கூடும். ஒருக்காலும் கூடாதே. அதனால் தேவன் தாமே நமக்கு எதிரிடையாக வந்துவிடாதபடிக்கு தெளிந்த புத்தியுள்ளவர்களாய் தாழ்மையை அணிந்து தேவனுடைய கிருபையை அனுதினமும் பெற்றிட வேண்டுமே.
இந்த எச்சரிப்பை பரி. பேதுரு அவிசுவாசிகளுக்கு, உலகத்தாருக்கு எழுதவில்லை . வசனம் 9-யில் இவ்வுலகில் தானே சகோதரர்களிடத்திலே அதாவது விசுவாசிகள், ஊழிய சகோதரர்களிடத்திலே இப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறது என்றுதானே எழுதி எச்சரித்துள்ளார். ஆம் உண்மையில் இவைகள் இக்காலத்திலே பெருகியுள்ளனவே. சிங்கம் அநேகரை விழுங்கியும் விட்டதே.
எங்கும் சுற்றித்திரிந்து கொண்டிக்கும் பிசாசானவன் வேறு யாருமல்ல. அன்று பரலோகிலே, தூதர்களுக்குள்ளே (ஏசா.14) ஒருவன் நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன், என்று கூறியவனே ஆவான். அவன் மேகங்கள் மேல் ஏறுவது பெரியதல்ல, உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று தன்னில் தானே பெருமை கொண்டதினாலேயே அவன் வீழ்த்தப்பட்டான். அவன் தானே சிங்கம் போன்று இன்று எல்லா ஊழிய சகோதரர்களிடமும், அன்னார்களால் அறியக் கூடாத வகையில் அன்னார்களுக்குள் பெருமையை புகுத்து விடுகின்றான், தேவனையே அன்னார்களுக்கு எதிரியாக மாற்றமடையச் செய்து விடுகின்றான். தெளிந்த புத்தியுள்ளவர்களாய் எச்சரிக்கையாயிராத அனைத்து ஊழிய சகோதரர்களும் இன்று வீழ்த்தப்பட்டு வருகின்றதை அறியாதிருக்கின்றார்களே.
ஆண்டவர்தாமே ஆதாம் ஏவாளை சிருஷ்டித்து அவருடைய தோட்டத்திலே வைத்திருந்தார். தேவனுடைய பிரசன்னம், அபிஷேகம் எப்பொழுதும் நிறைவாயிருந்த ஏதேனிலேயே பிசாசானவன் நுழைந்து தெளிந்த புத்தியாய் எச்சரிக்கையாயிராத ஏவாளை பிரித்து, தேவனைப் போலாகிவிடலாம் என்று அவளுக்குள்ளே பெருமையை விதைத்திட்டானே. ஏவாளோ இதனுடைய பின் விளைவு என்னவாகும். தேவனுக்குத் தாழ்மையாய் கீழ்ப்படியாமற் போனான், என்ன சம்பவிக்கும் என்று கூட உணரக் கூடாமல், பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போன்று அவர்களை அன்று விழுங்கிவிட்டானே. தேவனுடைய பிரசன்னத்திலே பரலோகிலே இச்சம்பவம் நடைபெறப்படுமானால் இவ்வுலகிலே நம் வாழ்விலே நிறைவேறப்படாது என்று எண்ணுவோமானால் அது எத்தனை மதியீனமானதாகும்.
உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்று தேவனாலே சாட்சி பெற்ற யோபு பக்தனுக்கு ஏன் அத்தனை சோதனைகள், அழிவுகள், அவனுக்குள்ளே நிரந்தரமாய் குடியிருந்து வந்த பெருமையை வெளிப்படுத்தவே தேவன் அவனை சாத்தானால் சோதிக்கப்பட விட்டு விட்டார் என்று அறிந்திட வேண்டுமே. யோபு பக்தன் தன் சன்மார்க்க வாழ்வையே பெருமையாக எண்ணி வாழ்ந்து வந்துள்ளான். அவனுக்குள்ளே உள்ள ஆவிக்குரிய பெருமைகளை அவன் நண்பர்கள் சுட்டிக் காட்டியும் ஏற்றுக் கொள்ள மனமில்லையே. இறுதியாக 42:6யில் யோபு நான் என்னை அருவருத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்று பாவ அறிக்கை செய்த பின்பு தானே தாழ்மைப்பட்ட பின்பு தானே இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெற்றான்.
பரி. பேதுரு கூட தேவனுடைய சீஷனான ஆண்டவரோடு கூட 3 1/2 ஆண்டுகள் வாழ்ந்திருந்தும் தனக்குள்ளே குடியிருந்த பெருமை ஆணவத்தை அவன் ஆரம்பத்தில் அறியவில்லையே. ஆண்டவரையே எதிர்த்து பேச தைரியமுள்ளவனாயிருந்தான். தேவனைப் போல கடலில் நடக்க விரும்பினான். தேவன் அவனை எச்சரிக்கை செய்யாமலிருக்கவில்லை, நீ பிசாசாயிருக்கிறாய் என்று கூறவில்லையா. சாத்தான் உன்னை சோதித்து புடமிடயிருக்கிறான் என்றும் கூறி எச்சரிக்கை செய்யவில்லையா, அவனுக்குள்ளே உள்ள பெருமையை அவன்தானே உணரும்படியாக ஆண்டவரே விட்டு விட்டார். ஒரு வேலைக்காரிக்கு முன்பாக தேவனை அறியேன் என்று சத்தியம் பண்ணவும் சபிக்கவும் செய்தானே. பின்பு அவனாகவே மனஸ்தாபப்பட்டு அழுது தேவனோடு ஐக்கியமானான். யோவா. 21யில் தேவன்தாமே பேதுருவிடம் கூறியது யாது? நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உனக்கு இஷ்டமானதை நடப்பித்தாய். ஆனால் நீ ஆவியில் முதிர்வடையும்போது உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு கொண்டு போகப்படுவாய் என்று தாழ்மையை அணிந்து கொள்ளுதலை போதித்தாரே. மேலும் யோவானோடு உன்னை ஒப்பிடாதே, உனக்கு நியமித்த ஓட்டத்திலேயே பிறரோடு ஒப்பிடாமல் ஓடிட வேண்டும் என்றும் ஆண்டவர் தாமே அவனை எச்சரிக்கின்றாரே.
அருமையான ஊழிய சகோதரர்களே, ஐக்கிய விசுவாசிகளே உங்களுக்குள்ளே எவ்வளவாய் பெருமை காணப்படுகின்றது என்பதை எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா இல்லையே. அவரவர்களின் ஊழியங்களில் எவ்வளவாய் பெருமையாய், யாவும் பக்தியே என்றும், தங்களின் எல்லா தீர்மானங்களும் சரியானதே என்றும் எவ்வளவாய் உறுதியாய் நின்று சாதித்து வருகின்றீர்கள். எல்லா கூடுகைகளிலும் தங்களை தேவன் போன்று யாவர் முன்னிலையிலும் காண்பித்து காட்சியளிக்க தவறுவதில்லையே. இவைகள் யாவும் உங்கள் பெருமைக்கு அடுத்தவைகளே என்று கூறினால் ஒருநாளும் ஏற்றுக் கொள்வதில்லையே. ஒருபோதும் சிங்கம் கூறிவிட்டு வருவதில்லை. சிங்கம் முன் அகப்பட்டவன் ஒருபோதும் தப்பிப் பிழைத்ததும் இல்லையே. இன்று கேட்கின்ற சிங்க கெர்ச்சினையையாவது அறிந்து தாழ்மையை அணிந்துக் கொள்வோமாக. இவர்களுக்கே தேவன் தம் கிருபையை அளிக்கின்றார் என்றும் அறிந்திடுவோமாக
நோவாவுக்கு ஆரம்பத்தில் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. அக்காலத்தில் அவன் நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். தேவனோடு சஞ்சரிக்கிறவனாயும் காணப்பட்டான். அவன் ஒருவன் நிமித்தமாய் இன்று நாம் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றோம். அவன் மாத்திரம் இல்லாதிருந்தால் ஜலப்பிரளயத்தினால் ஒரு மனுஷராசியும் இல்லாமல் உலகம் முழுவதும் அழிக்கப்பட்டிருக்குமே. ஆனால் அப்படிப்பட்ட கிருபை பெற்ற நோவா, புதிய பூமியிலே திராட்சை தோட்டத்தை நாட்டினான், நன்றாய் விளைந்தது. செழிப்பைக் கண்டான், வெறிக்க குடித்தான், வஸ்திரம் விலகப் படுத்திருந்தான். இது பெருமையல்லவா, தன் சொந்தகுமாரனே ஒரு சபிக்கப்பட்ட சந்ததியாக மாற்றப்பட்டானே. கிருபை பெற்ற நோவாவுக்கு செழிப்பு பெருமையடையச் செய்ததே.
தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்து உன்னை பெரிய ஜாதியாக்குவேன். உனக்குள்ளே எல்லா ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று வாக்கு பெற்றிருந்தாலும் அநேக விஷயங்களில் தனக்குத்தானே பெருமையால் வாழ்ந்திடவில்லையா. தேவசித்தமில்லாமல் பஞ்சகாலத்தில் எகிப்துக்கு செல்லவில்லையா. தேவசித்தமில்லாமல் ஆகாரை மனைவியாக கொள்ளவில்லையே. பஞ்சம் ஏன் வந்தது, அந்நாட்களில் தேவன் கொடுத்த வாக்கை எண்ணி எங்கும் செல்லாமல் இருந்திருக்க வேண்டுமே. சோதனையில் தன் சுய வழியைத் தேடி எத்தனையாய் சாபமானான். இன்றுவரை இஸ்மவேலரால் எத்தனை துன்பங்கள் கஷ்டங்கள்.
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தான் என்று தேவனாலேயே சாட்சி பெற்றவன். அவனுக்கு அடுத்தாற்போல் இப்பூமியிலே மிகுந்த சாந்தகுணமுள்ளவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. வேறு எவரும் கிடையாது. மோசேயிடம் தேவன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவே பேசுகிறவராக காணப்பட்டார். ஆயிரக்கணக்கான அற்புதங்களை நடப்பித்தவன், 40 லட்சம் பேரை நடத்தினவன். ஏன் அவனுக்குள்ளே திடீரென்று கோபம் வந்தது. ஆண்டவர் எழுதிய கற்பலகைகளை உடைத்தது மட்டுமல்ல, காதேஸ் வனாந்தரத்திலே தண்ணீர் இல்லாதபோது, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் கன்மலையை இரண்டு தரம் அடித்ததின் பெருமைதான் என்ன? சிலுவையில் ஆண்டவர்தாமே ஒருமுறைதானே அறையப்பட வேண்டும். அது சீன் வனாந்தரத்திலே மோசே கன்மலையை அடித்து தண்ணீ ர் வரப்பண்ணினதில் நிறைவேறிற்று (யாத்.17) மறுபடியும் கன்மலையாகிய கிறிஸ்து அடிக்கப்பட வேண்டிய அவசியமில்லையே. அவரோடு பரிசுத்தாவியானவரின் துணையோடு என்றும் பேச வேண்டுமே. ஆனால் மோசேக்கு ஏன் அத்தனை கோபம், பெருமை. கன்மலையைப் பார்த்து பேச வேண்டிய நேரத்தில் ஏன் அதனை அடித்தார். இதனால் அவனும் அவன் அழைத்து வந்த அனைவரும் கானானுக்குள் பிரவேசிக்கக் கூடாமற் போயிற்றே. (எண்.20) பெருமையுள்ளவர்களை ஒருபோதும் தேவன் தம் ராஜ்யத்திலே சேர்ப்பதில்லையே. அன்னார்கள் அங்கே அழைத்து கொண்டு போகப்படுவார்களானால் தேவன் பரிசுத்தமடைவதில்லை என்றுதானே எழுதப்பட்டதை வ.12யில் வாசிக்கின்றோம். பெருமையாய் ஊழியம் செய்யும் ஒரு மனிதனால் அவன் சபையார் அனைவருமாய் ஒட்டு மொத்தமாய் பரலோகத்தை இழக்கின்றவர்களாகின்றார்களே. மோசேயின் பெருமையின் உச்சக்கட்டத்தை வசனம் 10யில் வாசிக்கின்றோமே. "கலகக்காரரே கேளுங்கள்? உங்களுக்கு இந்த கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமா” என்றாரே. நாங்கள் என்பவர்கள் யார்? யார்? இதுவரையிலும் அற்புதங்களை நடப்பித்தவர் யார்? தேவன் மாத்திரமே. ஆனால் இங்கே நாங்கள் என்று குறிப்பிடுவதின் பொருள் என்ன? லூசிபரின் எண்ணம் போன்று பேசப்பட்டு விட்டதே. பின் எப்படி கானான் பிரவேசம் கிடைக்கும். தேவன் என்றும் நீதிபரரே ஆவார்
ஒரு கிதியோனை அறிகின்றோம் (நியா.8) ஒரு சாதாரண விவசாயி (6:34) கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கினார். ஒரு மனுஷன் மேல் ஆவியானவர் இறங்கியதை முதல் முறையாக வேதத்திலே வாசிக்கின்றோம். இஸ்ரவேலலைர ஆளும்படியாக ஆண்டவர் இவனை அபிஷேகித்தார், 300 பேர்களைக் கொண்டு மீதியானியரை ஜெயித்து தேவன் ஜெயமடையச் செய்தார். இதைக் கண்ட இஸ்ரவேல் மக்கள் கிதியோனை நோக்கி, நீரும், உம்முடைய குமாரனும் உம்முடைய குமாரனின் குமாரனும் எங்களை ஆளக் கடவீர்கள் (நியா. 8:22) என்று கிதியோனை ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது கிதியோன் மிகவும் தாழ்மையாக நான் உங்களை ஆள மாட்டேன், என் குமாரனும் உங்களை ஆளமாட்டான். கர்த்தரே உங்களை ஆளுவாராக என்று அருமையாக பேசினவன் வசனம் 24யில் பின்பு கிதியோன் ஜனங்களோடு பேசினது என்ன? தேவன் தான் உங்களை ஆளுவார், ஆசீர்வதிப்பார், செழிப்பாக்கு வார். ஆனால் இப்பொழுது நீங்கள் உங்களிடம் உள்ள எல்லா பொன் உடைமைகளை எனக்குத் தாருங்கள் என்று தானே கேட்டான். அவன் கேட்டபடிக்கு ஜனங்கள் டன் கணக்கில் ஏராளமான பொன்னை அள்ளிக் கொடுத்தார்கள். அவற்றினாலே கிதியோன் தேவனை மறந்து தனக்கான ஒரு ஏபோத்தை உண்டாக்கினான். அதனை இஸ்ரவேலர் பின்பற்றி தேவனை விட்டு சோரம் போனார்கள். இது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று என்றுதானே அறிகின்றோம். இவனைப்போன்றே இன்று ஆவிக்குரிய உலகிலே ஊழியர்கள் தங்களுக்கான பொன்னைத்தானே, காணிக்கையாக பலவகைகளில் சம்பாதித்து வருகின்றார்கள். இது தற்பெருமையல்லவா. மோசேயினால் ஜனங்கள் அற்புதங்களை அனுபவித்தது உண்மைதான். தண்ணீர் குடித்தார்கள். ஆனால் அவன் கானான் செல்லவில்லையே. அதுபோன்றே இன்றும் எங்கும் அற்புதங்களை செழிப்பு ஆசீர்வாதங்களை ஜனங்கள் திரளாய் பெற்றிடலாம். ஆனால் சபை மன்றத் தலைவர் பரலோகம் செல்லவில்லையே. தேவன் அவர்களை நோக்கி நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை என்றுதானே கூறுகின்றார். பிசாசு விரட்டப்பட்டது உண்மை. தீர்க்கத்தரிசனங்களும் உண்மையான தாய் காணப்பட்டிருக்கலாம். ஆனால் தேவன் அற்புதங்களை நடப்பித்தவர்களை ஒருகாலமும் அறியவில்லையென்கின்றாரே.
சாமுவேலை அறிகின்றோம். 10 வயதில் தீர்க்கத்தரிசியானவன், தேவன் அவனை பெயர் சொல்லி அழைத்து கூப்பிட்டதும் உண்மையே. ஆசாரியனான ஏலியின் பிள்ளைகள் இருவர் நடப்பித்து வந்த துன்மார்க்கத்தனத்தை தேவன் சாமுவேலிடம் கூறினார், ஆனால் சாமுவேல் முதிர்வயதான போது தற்பெருமையினால் தகுதியற்ற தன் இரு குமாரர்களை ஆசாரியர்களாக நியமித்தானே. தேவன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லையே. சாமுவேலே, கடைசியான நியாயாதிபதியானான். பின்பு அவனால் நியமிக்கப்பட்ட முதல் அரசன் சவுலும் தேவ நியமித்தத்தின்படி செயல்படவில்லை. அவனுடைய ராஜ்யபாரம் பிடுங்கப்பட்டதே. பெருமை எத்தனையாய் சிங்கம் போல அனைவரையும் விழுங்கிக் கொண்டு வருகின்றதே. இதனை ஊழியர்கள் விசுவாசிகள் உணர்கின்றதில்லையே.
இந்த ஐக்கியம் எனக்கு எவ்வளவாய் துரோகம் செய்துள்ளது. இங்கே செல்வதே இல்லை, நினைத்தாலே வெறுப்பாயிருக்கிறது என்று கூறிவரும் சகோதரர்கள் தங்களிலுள்ள பெருமையை எப்பொழுது உணருவார்கள். சகோதரர்கள் ஒருவரையொருவர் எதிர்ப்படும் போது, ஹை என்று கூட கூற விரும்பாமல் ஒதுங்கி செல்கின்றார்களே. ஒரு சிரித்த முகத்தைக் கூட காண்பிக்க விரும்பாதவர்கள் பெருமையாளர்களே ஆவர். ஒரு ஊழியத்தின் தலைமையேற்று நடத்தி வருகின்றவர்கள் எங்கும் எந்த கூடுகைக்கும் சென்றாலும் அங்கே ஒரு தலைமையிடத்தை மட்டுமே ஆசிப்பது ஏன்? பெருமையல்லவா? தன் கையில் மைக் கிடைத்துவிட்டால் அனுமதிக்கப்படாமலே பேச பிரசங்கிக்க விரும்பி செயல்படுவது ஏன்? பெருமையல்லவா? ஆயத்தமில்லாமல் எங்கும் பிரசங்கிக்க விரும்புபவன் பெருமையாளன் மட்டுமே ஆவான். தான் ஒரு தலைமை ஊழியன் என்று அறியப்படாத இடங்களிலே கூடுகைகளிலே, தங்கள் ஜெபங்களிலே, அல்லது பேசப்படும் வாய்ப்புக்களிலே, அல்லேலூயா என்று பலமுறை கூறி மக்களிடையே தான் ஒரு தலைவன் என்று அடையாளப்படுத்துகின்றார்களே. இது பெருமையல்லவா. மோசே இருமுறை கன்மலையை அடித்ததைப் போன்று, அநேக ஊழியர்கள் தங்கள் ஜெபங்களை நிறைவு செய்யும் போது ஆமென், ஆமென், ஆமென் என்று 3 முறை கூறிவருவதின் நோக்கம் என்ன? அல்லது இடையிடையே அல்லேலூயா என்று 3 முறை கூறுவதின் நோக்கம் என்ன? தான் ஒரு அபிஷேகிக்கப்பட்டவன் என்று பிறர் முன்பாக காண்பிக்கும் நிலை தானேயாகும். இவையெல்லாம் பெருமைதானே. பிறரை விசாரிக்க தவறுகின்றவர்கள் யாவரும் பெருமையானவர்களே ஆவர். இவ்வகையான பெருமைகளிலிருந்து யாவரும் விடுபட விரும்புவதில்லையே. இவற்றினை பெருமையானவைகளாக ஏற்றுக் கொள்வதும் இல்லையே. பெருமையுள்ளவர்களை தேவன் ஒருபோதும் பரலோகில் கூட்டிச் சேர்ப்பதில்லையே. சேர்க்கப்படுவார்களானால் பரலோகம் அசுசிபடுமே. தேவனும் அசுத்தம் அடைவாரே
அருமையானவர்களே, புத்தாண்டிற்கு செல்லும் முன்பாக இப்பெருமையாகிய சிங்கத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள நம்மை நாமே தாழ்த்தி தேவனின் கிருபையை ஏராளமாய் பெற்றிடுவோமாக. உங்களுக்குள்ளே எவனாகிலும் பெரியவனாயிருக்க, முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் பணிவிடைக்காரனாக, ஊழியக்காரனாக இருக்கக்கடவன் என்று எழுதப்பட்டுள்ளதே (மத். 20:26,27). சகோதரர்களே ஒருவருக்கொருவர் தாழ்மையடைந்திடு வோமாக. புருஷர்மார்களே, மனைவிமார்களே ஒருவருக்கொருவர் தாழ்மையடைந்திடுவோமாக. இவர்களுக்கு மட்டுமே கிருபை அளிக்கப்படுகிறது. மாறாக காணிக்கைகளினால், உபவாச ஜெபங்களினால், பலவகையான ஊழியங்களினால் கிருபை பெருகிடுவதில்லை என்பதை அறிந்துணர்ந்திடுவோமாக. ஆமென்.
சகோ. பிலிப் ஜெயசிங். நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்