பெண்கள் பகுதி
ஏற்ற துணை "ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்” ஆதி. 2:18
அன்பானவர்களே இன்று அநேகருடைய பேச்சும், சிந்தனையும் தனக்கு கிடைத்த புருஷன் ஏற்றதல்லவென்றும், தனக்கு கிடைத்த மனைவி ஏற்றதல்லவென்றும், நாங்கள் ஏமாந்துவிட்டோம், எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று புருஷனும், ஸ்தீரியும், அவர்கள் குடும்பங்களும் கூறுவதுண்டு. அதுபோன்று ஸ்தீரிகள் கூறுவது இந்த புருஷன் எனக்கு ஏற்றவனல்ல என்று. ஆனால் வேதத்தின்படி ஒருபோதும் புருஷன் ஸ்தீரிக்கு ஏற்றதாக கொடுக்கப்படவில்லை. ஸ்தீரி தான் புருஷனுக்கு ஏற்ற துணையாக உண்டாக்கப்பட்டாள் என்பதையும் நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். வேதம் கூறுகின்றது “தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்" என்றார் (ஆதி. 2:18). இன்னும் நாம் அந்த அதிகாரத்தை வாசிக்கும் போது ஸ்தீரியை (மனுஷி) தேவன் எப்படி உருவாக்கினார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது
. தேவன் முதலாவது மனுஷனை உண்டாக்கின்றார். பின்பு தான் மனுஷியை உருவாக்குகிறார். இதன் மூலம் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது புருஷனுக்கு தான் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவி புருஷனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பது. வேதம் கூறுகின்றது, "புருஷன் ஸ்தீரியிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்தீரியே புருஷனிலிருந்து தோன்றினவள் என்றும், புருஷன் ஸ்தீரிக்காக சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்தீரியே புருஷனுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள் என்றும், ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்தீரியில்லாமல், புருஷனுமில்லை , புருஷனில்லாமல் ஸ்தீரியுமில்லை, ஸ்தீரியானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்தீரியினால் தோன்றுகிறான். சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது. (1 கொரி. 11:8-12) ஆகவே ஸ்தீரியானவள் புருஷன் மேல் அதிகாரம் செலுத்தாமல் புருஷனுக்குக் கீழ்ப்படிந்து, நிபந்தனைக்குள்ளாக உட்பட்டிருக்க வேண்டும்.
"ஏற்ற” என்பதின் அர்த்தம் தகுந்த, பொருத்தமான உரிய என்பதாகும். "துணை” என்பதின் அர்த்தம் ஒரு செயலை நிறைவேற்றுவதற்கு உதவி புரிபவர் என்பதாகும். ஆனபடியினால் புருஷனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மனைவி எல்லாவிதத்திலும் பொருத்தமானவளும், தகுந்தவளும் உரியவருமே. ஆகையால் மனைவியானவளுக்கு தன் புருஷனைக் குறித்து போக்குச் சொல்ல கொஞ்சம் கூட இடமில்லை . அதுமட்டுமல்லாமல் புருஷன் தேவனுடைய சாயலும், மகிமையுமாயிருக்கிறபடியினால் (1 கொரி. 11:7) மனைவியானவள் புருஷனுக்குக் கொடுக்க வேண்டிய மகிமையும், கனத்தையும் நிச்சயமாக கொடுக்க வேண்டும் என்பதே. ஏற்ற துணை என்பதை குறித்து நாம் சிந்திப்போமானால்; அன்று ஒரு புருஷனுக்கு ஏற்ற துணையை கண்டுபிடிப்பது பெற்றோர்களும், உறவினர்களும், வேலைக்காரர்களும் இன்று தரகர்) தான். ஆனால் இன்று அதிகமானோர் ஏற்ற துணையை காதல் என்ற பருவத்தில் தானாகவே தேடிக் கண்டுபிடிக்கின்றனர். அதுபோன்று பெண்ணும் தன் அறியாத பருவத்தில் காதல் என்ற பெயரில் புருஷனை தெரிந்தெடுக்கின்றாள். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அன்றைய காலங்களில் அதிகமாக அரங்கேறுவதில்லை. ஆனால் இன்று அறியாத பருவத்தில் செல்லும் பிள்ளைகள் பேச்சிற்கு பெற்றோர் உடன்பட்டே ஆக வேண்டிய நிலமையிலுள்ளது. இந்த வாலிய பருவத்தில் பிள்ளைகள் எடுத்துக் கொள்ளும் தீர்மானம் தேவன் இணைத்தது என்று சொல்ல முடியுமா? முடியாது. இப்படிப்பட்ட திருமண வாழ்வுகள் நிலைநிற்கக்கூடியதாக அமைவதும் கடினம். அதுபோன்று தான் ஒரு புருஷன் தனக்கு துணையை கண்டுபிடித்து பெற்றோர் சம்மதத்துடன் எத்தனை ஆடம்பரமாகவும், மிகவும் உயர்மதிப்புள்ளவர்களாய் திருமண நிகழ்வுகளை நடத்தினாலும் அது ஆசீர்வாதமான குடும்ப வாழ்க்கையாய் அமையாது. அதுவும் அவனுக்கு ஏற்ற துணையென்று சொல்ல முடியாது. ஏனென்றால் காதல் வேறு, வாழ்க்கை வேறு, காதல் ஒருபோதும் வாழ்க்கையாகாது. அது திருப்தியில்லாததும், மனகசப்பும், பிரிதலுக்குமே வழி வகுக்கும். இப்படிப்பட்ட திருமணங்களை தேவன் இணைத்தது என்று வேதத்தின்படி சொல்ல முடியாது என்பதற்கு சிறந்த சான்றாக விளங்குவது; நியாயாதிபதி புத்தகம் 14 முதலுள்ள அதிகாரங்களில் சிம்சோன் குறித்து சிந்திக்கும்போது அறிய முடிகின்றது. சிம்சோன் ஒரு பெண்ணை கண்டு காதல் கொண்டு அவளை திருமணம் செய்ய விரும்பி தன் தாய் தந்தையினிடம் அனுமதி கேட்டு திருமணம் செய்ய போகிறான். ஆனால் அங்கு நடந்தது என்ன? அதன்பின்பு நடந்தது என்னவென்பதை நாம் வாசித்து நன்றாக புரிந்துகொள்ள முடியும். தேவன் சிம்சோனுக்கு ஏற்ற துணையை கொடுக்கவில்லை . அது அவன் தேடி கண்டுபிடித்தது. அதினிமித்தம் தான் அவன் குடும்ப வாழ்க்கை , மிகவும் மோசமான நிலமைக்கு தள்ளப்பட்டது. அவன் நிலமையும் மிகவும் கொடூரமாக மாறியது. அவனுக்குள்ளிருந்ததேவனுடைய ஆவி கூட அவனை விட்டு நீங்கிற்று என்பதை தான் அறிய முடிகின்றது. ஆகவே நாம் உணர்ந்து நம் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்ல கர்த்தர் கிருபை புரிவாராக
. அநேகர் தன் மகனுக்கு ஏற்ற துணையாக மிகுந்த ஐசுவரியத்தின் செல்வ செழிப்பும், பட்டங்களும், உயர்பதவிகளும், பெருமைகளும் இப்படிப்பட்டவைகளை கொண்ட குடும்பங்களில் மட்டுமே தேடுகின்றனர். அப்படியே பெண் வீட்டாரும் தேடுகின்றனர். மனுஷன் எப்படி தேடினாலும் தேவன் புருஷனுக்கு ஏற்ற துணையை தான் இணைக்கின்றார். அது நாம் விரும்பினபடியும் அமையலாம். அதற்கு மாறாகவும் அமையலாம். சிலர் தன் மகனுக்கு ஏற்ற துணையைக் தேடுவது வரதட்சணைக்காகவே பொன், பொருள், பணம், நிலம், கார், வீடு அல்லாமல் தேவன், உண்டாக்கின ஏற்ற துணையையல்ல. இப்படி தேடுவதினால் தோல்வியைக் கண்டவர்கள் அநேகர். ஆனாலும் தன் பாவத்தை உணராதவர்களாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்
. வேதத்திலே ஆபிரகாம் தன் மகனுக்கு எப்படி பெண் தேடினார் என்பதை குறித்து சிந்திப்போமானால் (ஆதி. 24)ஆபிரகாம் தன் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக தன் வேலைக்காரனை அழைத்து சில கட்டளைகளையும், உடன்படிக்கைகளையும், சொல்லி அனுப்பி விடுகிறார். ஆபிரகாம் இட்ட கட்டளை தன் மகனுக்கு வரதட்சணை வேண்டும் என்பதல்ல, இன்ன இடத்தில் பெண்கொள்ளாமல், என் தேசத்துக்கும், என் இனத்தாரிடத்திற்கும் போய் என்று சொல்லுவதுமன்றி கர்த்தரின் பேரில் உடன்படிக்கையும் செய்து அனுப்புகிறார். அந்த ஊழியக்காரனும் அதிக கூலி வாங்காமல் என்று எண்ணாமல் அவன் தேவனோடு உடன்படிக்கைச் செய்கிறான். ) நான் இந்த துரவண்டையிலே நிற்கிறேன். எந்த பெண் என் ஒட்டகங்களுக்கும், எனக்கும் துணை செய்கிறாளோ! அவள் தான் என் எஜமானின் மகனுக்கு நியமித்தவளாயிருக்க வேண்டும் என்பதே. கர்த்தர் ஆபிரகாமின் மகனுக்கு ஏற்ற துணையான பெண்ணை அந்த துரவண்டையில் அனுப்புகிறார். அந்த பெண்ணும் "துணை” என்ற வார்த்தைக்கு அர்த்தமாக அந்த இடத்தில் விளங்கினாள். அந்த பெண்ணின் நல்ல குணங்களைக் கண்டு அவள் நிச்சயமாக புருஷனுக்குக் கீழ்ப்படிந்து அவர் நிபந்தனைக்குள்ளாக இருப்பாள் என்பதை நன்கு அறிந்து திருமணத்திற்காக பெண் வீட்டாரிடத்தில் பேசுகின்றான். இந்த பெண் தேடும் படலம் எப்படி இருக்கின்றது. சிந்தித்து பாருங்கள். நம் குடும்பங்களில் இப்படியாக தான் நடக்கின்றதா? இப்படி நடக்கின்ற குடும்பங்கள் தான் ஆசீர்வாதமானது. சிலருடைய திருமண நிகழ்ச்சிகள் மிகவும் ஆடம்பரமாக நடக்கும். அதைவைத்து இவர்கள் குடும்ப வாழ்க்கையும் மிக சிறப்பாக இருக்குமென்று கணக்கு போடாதீர்கள். அந்த குடும்பத்திற்குள் தெய்வப் பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கையும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பது உண்மை
. குடும்ப வாழ்க்கையில் கஷ்டங்களும், நஷ்டங்களும், தோல்விகளும், வேதனைகளும், குறைவுகளும், மனகசப்புகளும், நிந்தைகளும், அவமானங்களும் நேரிடலாம். அப்படி நேரிடுவதினால் தேவன் இணைத்தது அல்லது புருஷனுக்கு கொடுக்கப்பட்ட துணை சரியில்லையென்று ஆகிவிடுமா? சிந்தித்துப்பாருங்கள். தேவன் புருஷனுக்கு ஏற்ற துணையை தான் உண்டாக்குவார். அது ஒருபோதும் தவறானதாக போய் விடாது. நாம் தான் அதை தவறானதாக கருதி குடும்ப வாழ்க்கையின் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் குறைத்துவிடுகின்றோம். அதற்கு காரணம் தெய்வ பயத்தோடு வசனத்திற்கு முழுமையாக கீழ்ப்படிய நம்மை அர்ப்பணிப்பதில்லை. இதனால் நம் தலைமுறைகளும் இப்படிப்பட்ட பாதிப்பிற்குள்ளாகவே காணப்படுகின்றார்கள். தேவன் ஒரு புருஷனின் உத்தமத்தை (அ) அவனுடைய மனதின் கிரியைக்கு தக்க வண்ணமாக தான் ஏற்ற துணையை உண்டாக்குவார். வேதம் கூறுகிறது, "புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு நீதி. 19:14) என்று. அதுபோன்று தான் ஸ்தீரியின் தகுதியின்படிக்கு புருஷனுக்கு ஏற்ற மனைவியாக கொடுக்கின்றார்.
அநேக புருஷர்கள் கூறுவதுண்டு, பக்கத்துவீட்டு புருஷனுக்கு அல்லது நண்பனுக்கு நல்ல மனைவி கிடைத்திருக்கிறார் என்று. அதுபோன்று ஸ்தீரிகள் கூறுவது பக்கத்து வீட்டுஸ்தீரிக்கு அல்லது தோழிக்கு நல்ல புருஷன் கிடைத்திருக்கிறார் என்று. இப்படியே மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதினால் எந்த பலனுமில்லை. மாறாக நாம் செய்ய வேண்டியது, நான் ஒரு நல்ல உத்தமனான புருஷனாக, காணப்பட வேண்டும் என்பதற்காக வசனத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அதுபோன்று ஒரு நல்ல மனைவியாக புருஷனுக்குக் கீழப்படிந்திருக்க ஸ்தீரியானவளும் வசனத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். இப்படி ஒருவருக்கொருவர் கீழ்ப்படிவதினால் தங்கள் தங்கள் குறைகளை சீர்படுத்தி தேவ வசனத்தின்படி குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற துணையாக ஸ்தீரியும்; புருஷன் தனக்கு கொடுக்கப்பட்ட துணை ஏற்ற துணை தான் என்பதை உணர்ந்து வாழ தேவன் தாமே கிருபை புரிவாராக ஆமென்
. சகோதரி. ஹெலன் ஷீன், கேரளா