- பாவங்கள்
என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி (ஏசாயா 58:1)
தேவ கட்டளைகளையும் அவருடைய வார்த்தைகளையும் மீறுவதே பாவம். அன்பானவர்களே நம்முடைய வாழ்க்கையில் பாவம் எப்படியெல்லாம் கடந்து வருகின்றது என்பதைக் குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இம்மாதமும் ஏசா. 5-ல் கூறப்படுகின்ற சில பாவங்களைக் குறித்து நாம் சிந்திக்கப் போகின்றோம். வேதம் சொல்லுகின்றது, ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை, அவர் கரத்தின் செய்கைகளைச் சிந்திக்கிறதுமில்லை. ஏசா. 5:12). ஒரு கிரியையின் அடிப்படை என்பது சிந்தனையும் பார்வையும் தான். இவையில்லையேல் கிரியைகளே இல்லையே. இதில் கூட (சிந்தனையில்) தெய்வீகம் இல்லாத நிலமையில் தான் விசுவாசிகள் இருக்கிறார்கள் என்று தான் வேதம் கூறுகிறது. மறுமையின் நித்திய வாழ்வு பரலோகம், தேவனோடு சேரும் வாழ்வு. இவைகளுக்கடுத்த காரியங்களை விசுவாசிகள் பூரணமாக மறந்து விட்டார்கள். இசைகருவிகளினாலும், தன் கைத்தாள ஓசைகளினாலும், விருந்துகளிலும், ஆராதனைகளிலும் முக்கியத்துவம் கொடுக்கின்றவர்களாகவே காணப்படு கின்றார்கள். தேவசெயல்களை மறந்து விடுகின்றனர். 13-வது வசனம் கூறுகிறது என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப் போகிறார்கள் என்று. அதாவது வேதத்தைக் குறித்த அறிவில்லை, அதை கடைபிடிப்பதில்லை. அதின்படி நடக்க விரும்புவதுமில்லை. பிசாசின் செயல்களினால் இவ்வுலகத்திற்கொத்த வேஷம் அணிந்து கொண்டு சிறைப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். இயேசு மெய்யாகவே நம்மை விடுதலையாக்கியுள்ளார் என்பதை மறந்துவிட்டு உலக கவலைகளினால் பிசாசின் கிரியைகளில் அடிமைப்பட்டு போகின்றார்களே. உலகத்தில் ஆராதனை செய்கின்றவர்களுக்குக் கீழ்ப்படிகின்றனர். அவர்களுக்கு ஒத்துப் போகின்றனர். ஆனால் கர்த்தருக்கு ஆராதனை செய்கின்றோம் என்று சொல்லிவிட்டு அவருக்கோ, அவருடைய வார்த்தைக்கோ கீழ்ப்படிவதில்லை. பின் எதற்காக ஆராதனை என்கிறார்கள். நித்திய வாழ்விற்கு செல்வதற்காகவோ, அதற்கு நம்மை ஆயத்தப்படுத்தத் தக்க ஆவிக்குரிய போதனைகள், ஜீவனுள்ள வார்த்தைகள் எங்கேயும் பேசப்படுவதில்லையே. வசனமாகிய மன்னாவை பெற உணர முடியாமல் ஜனம் மாண்டு போகிறார்கள். திரளான கூட்டத்தார் வசனத்தை கேட்க முடியாத தாகத்தால் நாவறண்டு போகிறார்கள் ஏசா. 5:13). இப்படி ஆண்டவரை உண்மையாய் அறியாத ஜனங்கள் பெருகுகிறபடியினால் பாதாளம் தன்னை விரிவாக்கி தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்து அவர்கள் மகிமையும் அவர்கள் திரள்கூட்டமும் அவர்கள் ஆடம்பரமும் அவர்களில் களி கூறுகிறவர்களும் அதற்குள் இறங்கிப் போவார்கள் (5:14). ஆம் பிரியமானவர்களே இந்நாட்களில் பாதாளம் தான் நிறைக்கப்படுகின்றது. அநேகமான ஊழியங்கள் தேவனுக்கும், அவருடைய கற்பனைகளுக்கும் எதிராகத்தான் நடத்தப்படுகின்றன. சுய தீர்மானங்களையும் நவீன முறைகளையும் கையாளுகின்றவர்களாகத்தான் அநேகம் ஊழியர்கள் காணப்படுகின்றனர். இது பூரணமாக பாதாளத்தை விரிவாக்கின்றதாகத்தான் காணப்படுகின்றது. எனவே வசனத்தின்படி செயல்பட நம்மை ஜாக்கிரதையுள்ளவர்களாக காத்துக்கொள்வோம். ஏன் நாம் ஏமாறாமல் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றால்: வேதம் கூறுகிறது (5:16) சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார் என்று கூறப்படுகின்றது. நம் தேவன் பரிசுத்தரும், நீதியும் நியாயமுள்ள தேவன் ஆனபடியினால் நம் எல்லா கிரியைகளும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும். சிறியவனென்றோ, பெரியவனென்றோ, ஊழியக்காரனென்றோ வித்தியாசம் கிடையாது. தேவனுடைய நீதிக்கு முன்பாக நாம் நிற்கக் கூடுமோ? சிந்தியுங்கள். இப்போதே மனம் திரும்பி வேதவசனங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இவ்வுலகின் மகிமையோடு கூடிய திரள் கூட்டமும் ஆடம்பரங்களோடு காணப்படும் திரள் கூட்டமும் பாதாளத்தில் இறங்கிப் போவார்கள் ஏசா. 5:14) என்று எச்சரிக்கப்படுகின்றோம். உணர்ந்ததுண்டோ ? இல்லை இவ்வுலகின் அல்லது சபைகளின் மகிமைக்காக ஆடம்பரங்களுக்காக, அதிகாரங்களுக்காக, புகழுக்காக, பேர் பிரஸ்தாபத்திற்காக மாத்திரம் வாழ்ந்து வருகின்றோமா; பாதாளம் நமக்காக வாய் திறந்திருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்; இவ்வுலகில் களிகூறாமல் தேவனில் களிகூற நம்மை ஆயத்தப்படுத்துவோம். கர்த்தர் வருகை அதிசீக்கிரம் என்பதை மறந்து விடாதீர்கள். கர்த்தர் நம் அனைரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
. சகோ. ஷீன் சைரஸ், கேரளா. Cell: 09447735981