உங்கள் நாட்களும் உங்கள் பிள்ளைகளின் நாட்களும் பூமியின் மேல் வானம் இருக்கும் நாட்களைப் போல அநேகமாயிருக்கும்படி (வாழ்ந்து கொள்வீர்களாக)
. உபா. 11:18
Your days on earth shall be like the days of heaven upon earth, Being heavenly minded on earth
பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் (எபே. 1:3) ஆகையினால் எவ்வளவு அதிகமாய் ஆவிக்குரிய சிந்தையோடு பூமியிலே வாழ்கின்றோமோ அவ்வளவு அதிகமாய் நாம் தேவனுடைய திட்டங்களை நம் வாழ்க்கையிலே செய்து முடிக்கின்றவர்களாக காணப்படுவோம். தானியேல் ஒரு அடிமையாக, ஒரு கைதியாகவேபாபிலோனிலே அடைக்கப்பட்டிருந்தான். அவனோடு கூட அவனுடைய சகல இனத்தார்களும், அவன் தேசத்து சகல ஜனங்களும் கைதிகளாக இருந்தார்கள். யாவருக்கும் உணவு பாபிலோனிலே அன்னார்களின் வழக்கப்படிக்கு அளிக்கப்பட்டது. அவற்றினை தானியேலின் சகல ஜனங்களும், இனத்தார்களும் சாப்பிட்டார்கள். ஆனால் தானியேலோ ஆவிக்குரிய சிந்தையோடு மாத்திரமே காணப்பட்டதினால் ராஜாவின் போஜனத்தினால் தன்னைக் கறைப்படுத்திக் கொள்ள மனமில்லாமல், தன் சொந்த ஜனங்கள், இனத்தார்களைப் போன்று காணப்படாமல், அவர்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டு, தேவனுடைய சித்தமும், தேவனுடைய திட்டமும் தன்னிலே என்றும் காணப்படும்படியாக வாழ்ந்து காட்டினானே. பரலோக தேவனின் சிந்தையையே தன்னில் கொண்டிருந்தானே. ராஜாவின் போஜனத்தை ராஜாவின் கட்டளையை தான் ஒரு கைதியாக இருந்தும், ராஜாவின் கோபம், வைராக்கியம் அவரின் அதிகாரம் சகலவற்றையும் அறிந்திருந்தும் ஏற்றுக் கொள்ளவில்லையே. அதனால் ஏற்படும் பின்விளைவுகளை தான் நன்கு அறிந்திருந்தும்தேவனை மட்டுமே பிரியப்படுத்த வாழ்ந்து காட்டினானே. அதனால் அவன் சிங்க கெபிக்குள்ளும் அவன் நண்பர்கள் அக்கினி சூளைக்குள்ளும் போடப்பட்டார்களே. தேவன் அவற்றிற்குள் அவர்கள் சென்றுவிடாதபடிக்கு சூழ்நிலையை மாற்றிக் கொடுக்கவில்லையே. அக்கினிக்குள்ளும், சிங்ககெபிக்குள்ளும் தள்ளிப்போடப்பட தேவன் அனுமதி அளித்துள்ளாரே. ஏன் பரலோகம் பூமியின் மேல் இருக்கும் நாட்களைப்போன்று தேவன் அவற்றினை நிரூபித்து காண்பித்தாரே. தேவனே நேரடியாக தம் பிள்ளைகளோடு பரலோகில் உலவுவது போன்று, அக்கினிக்குள் உலாவினாரே. தேவன் தாமே தம் தூதனுக்கு கட்டளையிட்டு சிங்கங்களின் வாய்களை கட்டிப் போட்டாரே. இவைகளல்லவா பரலோகத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள். ஆனால் இன்று இந்நாட்களில் விசுவாசிகள், ஊழியர்கள் ஜெபித்து, உபவாசித்து அக்கினி சம்பவமோ, சிங்கக் கெபியோ இல்லாதவைகளாக மாற்றிட தம் விருப்பங்களுக்கு ஏற்ப ஆண்டவர் மாற்றித் தர வேண்டும் என்றே போராடி வருகின்றார்களே. சங். 63:3,4 யிலே வாசிக்கின்றது யாது? ஜீவனைப்பார்க்கிலும், என் ஜீவனுள்ள மட்டும், நான் உம்மைத் துதித்து உமது நாமத்தைச் சொல்லி கையெடுப்பேன் என்பதை அதன் ஆவிக்குரிய கருத்தினை தம்தம் இஷ்டப்படிக்கு மாற்றிக்கொண்டு, ஜீவனுள்ள மட்டும் என்பதை, வயதாகி, சாகும் வரையிலும் ஆண்டவருக்காக எந்த சாதனைகளையும் செய்யாமல் அவரைத் துதிப்பேன் என்று மட்டுமே கருதி வருகின்றனர். இதன் ஆவிக்குரிய பொருள் யாதெனின் தம் ஜீவனைப் பார்க்கிலும், ஜீவனையே தத்தம் செய்யும் சூழ்நிலை ஏற்படினும் தானியேலைப் போன்று ஆண்டவரையே மகிமைப்படுத்துவேன் என்பதாகும்
. "உமது நாமத்தைச் சொல்லி கையெடுப்பேன்” என்பதினையும் இன்று, விசுவாசிகள், ஊழியர்கள், இயேசுவின் நாமத்தை தவறான காரியங்களுக்காகவே பயன்படுத்தி வருகின்றார்களே. தேவனுடைய நாமம் என்பது திருத்துவ தேவனைச் சார்ந்ததாகும். திருத்துவ தேவனுக்கான கனத்தை மட்டுமே அவருடைய நாமத்திற்கு அளிக்க வேண்டுமே. ஆனால் இன்று அவைகளுக்கு மாறாக, பிசாசுகளை விரட்டவும், உலக காரியங்கள், ஆசீர்வாதங்கள் பெறவும், சரீர நோய்கள் நீங்கவும் மட்டுமே அவருடைய நாமம் பயன்படுத்தப்பட்டு வருகின்றதே. மக்கள் ஆவிக்குரிய சிந்தையிலிருந்து கிறிஸ்துவின் சிந்தையிலிருந்து விலகி, விலகி போகின்றார்களே. இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளை விரட்டுவதும் நோய்களிலிருந்து நீங்கப்பெறுவதும் அவசியமே. ஆனால் அவைகள் மட்டுமே ஆவிக்குரிய வாழ்வாகிடக் கூடாதே. இதனை மட்டுமே ஆவிக்குரிய வாழ்வாக ஊழியர்கள் நடப்பித்து தாங்களும் வஞ்சிக்கப்பட்டும் மக்களையும் வஞ்சித்தும் வருகின்றார்களே. இதனை ஆண்டவருடைய ஒரு சம்பவத்தினாலே விளக்கிக் கூற விரும்புகின்றேன்
:ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தான் கெத்செமனேக்கு செல்லும் முன்பு லூக். 22:36யில் வாசிக்கின்றோம். இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன். பட்டயம் இல்லாதன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன் என்று கூறினபோது, சீஷர்கள் கூறினார்கள், ஆண்டவரே இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அதற்கு அவர் போதும் என்றார். பின்பு ஒலிவமலைக்கு புறப்பட்டு போனார்கள். ஆனால் பின்பு சம்பவித்தது யாது? மத். 26:51பேதுரு தான் வைத்திருந்த பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு. பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் என்று கூறுவதின் காரணம் என்ன? பட்டயத்தை பெற்றுக் கொள்ளச் செய்தவரும் ஆண்டவரே, மற்றும் பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தால் மடிந்து போவான் என்று கூறியதும் ஆண்டவர்தானே. இதுபோன்றே பட்டயமாகிய இயேசுவின் நாமத்தை தம் சீஷர்களுக்கு அளித்தவர் இயேசுகிறிஸ்து தாமே ஆவார். ஆனால் இயேசுகிறிஸ்து கெத்செமனேயில் ஜெபித்த ஜெபம் என்ன? ஆகிலும் என் சித்தம் அல்ல உம் சித்தமே ஆகக்கடவது என்பது மட்டுமே ஆகும். இயேசுவின் நாமத்தை தம் தம் சித்தப்படி விருப்பப்படி உபயோகிப்பது அல்ல. தேவனை மகிமைப்படுத்துகின்ற விதமாகவே அவருடைய நாமத்தை பயன்படுத்த வேண்டுமே. பட்டயத்திற்கு பதிலாக தேவனுடைய வார்த்தையே மேலானது என்ற கருத்தினை இயேசு தம் சீஷர்களுக்கு அன்று இச்சம்பவத்தினால் உணர்த்தி அளித்துள்ளாரே. இயேசுவின் நாமத்தை விட தேவனுடைய வாயின் வார்த்தைகளையே நாம் மேன்மைப்படுத்த வேண்டுமே. மத். 26:53யில் வாசிப்பது யாதெனில் நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால் அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை (அதாவது 12000 தூதர்களை) என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படி செய்வேனாகில் தேவசித்தம், சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றாரே. இன்று மக்கள் இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி தேவசித்தம் செய்யாமல் தங்களையே தேவனாக காண்பித்து தங்களையே மேன்மைப்படுத்தி வருகின்றார்களே. இப்படியாக காணப்படும் நாட்கள் எப்படி பூமியின் மேல் வானம் (பரலோகம்) இருக்கும் நாட்களைப் போல காணப்படும். பட்டயத்தை விட தேவனுடைய வார்த்தைகளையே தேவனுடைய வாக்குத்தத்தங்களையே வாழ்வின் அனுபவமாக கொண்டிடுவோமாக. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதப்பட்டுள்ளதே. தேவன் தம்முடைய வார்த்தையினாலேயே தானே யாவற்றையும் சிருஷ்டித்தார். ஏசா. 55:11யில் அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். அது என்னிடத்தில் வெறுமையாய் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் என்றல்லவா வாசிக்கின்றோம். நூற்றுக்கதிபதி தேவனிடம் கேட்கும்போது, அவர் தன் வீட்டிற்கு வர வேண்டும் என்று கூட அவசியமல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று கூறவில்லையா(மத். 8:8)
. இன்று மக்கள், கிறிஸ்துவின் சிந்தையில் காணப்படவில்லையே. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையே முக்கியப்படுத்தி மக்களைத் தங்கள் வசம் கவர்ச்சித்து வருகின்றார்களே. பழைய ஏற்பாட்டின் நாட்களிலே தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை மட்டுமே அளித்துள்ளார். ஆனால் புதிய ஏற்பாட்டின் இந்நாட்களில் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை மட்டுமே அதிகமாய் முக்கியப்படுத்த வேண்டுமே. கிறிஸ்துவின் சிந்தையே நம்மில் கொண்டிட வேண்டுமே. மாறாக உலக ஆசீர்வாதங்களை, உலக செழிப்பை மட்டுமே பிரசங்கிக்கின்றவர்கள். பழைய ஏற்பாட்டின் ஊழியர்களாய் மாறிவிடுகின்றவர்கள், இஸ்ரவேலர்களாகின்றனர். இயேசு கிறிஸ்துவின் ஊழியர்களாகி விட மாட்டார்களே. இவர்கள் மோசேயின் ஊழியர்களே ஆவர். இவர்கள் கிறிஸ்தவர்களும் அல்லவே. தேவன்தாமே நம்மேல் கொண்டுள்ள தேவதிட்டங்களையும் செய்து முடிக்க அருகதையற்றவர்களாகிவிடுகின்றோமே. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும் பட்சத்தில் உலகப்பிரகாரமான சகல ஆசீர்வாதங்களும் செழிப்புக்களும் தானமாய், இலவசமாய் கேட்கப்படாமலே, கூடவே கொடுக்கப்படுமே. வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று அறிந்திடுவோமாக.
ஆண்டவர் உலகப்பிரகாரமான அற்புதங்களை நமக்கு இவ்வுலகிலே செய்வது உண்மையே. ஆனால் அவைகளைப் பெற்று அனுபவித்து குடும்பத்தோடு தூங்குவதற்கு அல்ல. எலியா சூரைச் செடியின் கீழ் படுத்துக் கிடந்தான். தேவன் அவனுக்கு அற்புதமாய் தழலிலே சுடப்பட்ட அடையினையும் தண்ணீரையும் கொடுத்தார். அவன் அதனை சாப்பிட்டுக் கொண்டு மறுபடியும் படுத்துக் கொண்டான். ஆனால் தேவன் அவற்றினை படுத்து தூங்குவதற்கு அற்புதங்களைச் செய்யவில்லையே. மறுபடியும் அவனுக்கு அற்புதங்களைச் செய்து, தூங்குகிற அவனைத் தட்டி எழுப்பி நீ பண்ண வேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்று தேவசித்தம் செய்து முடிக்க அழைத்தாரே. இதனைத் தானே நாமும் நம் வாழ்வில் செய்ய வேண்டும். இயேசு கிறிஸ்துவும் தாம் உயிர்த்தெழுந்தபின்பு தன் கையினாலேயே கரி நெருப்பிலே சுட்டு சமைத்த மீனையும், அப்பத்தையும் கடற்கரையிலே வைத்து சீஷர்களைப் பார்த்து வாருங்கள், போஜனம் பண்ணுங்கள் என்று காலை விருந்துக்கு அழைக்கவில்லையா. காலை விருந்தை அளித்துவிட்டு மறுபடியும் மீன்களை பிடிக்க தங்கள் பழைய தொழிலுக்குப் போங்கள் என்று அற்புதங்களை செய்யவில்லையே. பேதுருவைப் பார்த்து ஆண்டவர் தாமே மூன்று முறையாக என் ஆடுகளை மேய்ப்பாயாக. என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றும் அடுத்தவனை பற்றி எதனையும் கேட்க விரும்பாதே (யோவானைப் பற்றி) பிறனுடைய எந்த ஊழியத்தைப்போன்றும் நீ பின்பற்றாதே என்பதாகும் “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன நீ என்னைப் பின்பற்றி வா" என்று தானே கூறினார். இன்று ஊழியர்கள் இயேசுவைப் பின்பற்றுவதில்லையே. பிரபலமான இதர ஊழியர்களை பின்பற்றி அவர்கள் பாணியிலேயே பேச, பிரசங்கிக்க விரும்பி செய்து வருகின்றார்களே. தன்னைக் குறித்ததான தேவசித்தத்தை தன் வாழ்விலே செய்து முடிக்க தங்களை அர்பணிக்கிறதில்லையே
. சீமோன் வீட்டிலே சீமோன் கொடுத்த விருந்து உபசரிப்பை தேவன் பாராட்டவில்லையே. பாவியான ஒரு ஸ்தீரியின் ஆராதனையினையே தேவன் பாராட்டினார். இயேசு கிறிஸ்து தாமே மேசியா என்பதினை தம் 12 சீஷர்களுக்கும் தம் பெற்றோர்களுக்கும் அறிவிக்கவில்லையே. சமாரியா பெண்ணிடம் தானே தம்மை வெளிப்படுத்தினார். உயிர்த்தெழுந்த இயேசு, தாம் உயிர்த்தெழுந்த செய்தியை தம் சீஷர்கள் அப்போஸ்தலர்கள் ஒருவருக்கும் முதலாவதாக அறிவிக்காமல், 7 பிசாசுகள் பிடித்து விரட்டப்பட்ட ஒரு ஸ்தீரியிடம் தானே தம்மை வெளிப்படுத்தினார். ஆகையினால் பிரபலமான ஊழியர்கள் பலர் கைவிடப்படும் நிலமையினையே காண்கின்றோம்
. ஏசா. 5:14யின் மூலம் ஏசாயா தீர்க்கத்தரிசி இக்காலத்து நம் ஊழியர்களுக்கு, விசுவாசிகளுக்கு அளிக்கும் எச்சரிப்பு யாதெனில்:- இவர்களுக்குத் தான் நரகம் (பாதாளம்) இவ்வகையான பாவங்களை செய்பவர்களுக்கே, மனந்திரும்பாதவர்களுக்கே நரகம். அவர்களை நரகம் தன்னிலே பெற்று தம் வாயை மூடிக்கொள்ளும் என்று எண்ணி வாழ்ந்து பிரசங்கித்து வரும், அன்பின் சகோதரர்களே, ஊழியர்களே, விசுவாசிகளே, வாயை மூடிக்கொண்ட பாதாளம் (நரகம்) தம் வாயை ஆவென்று விரிவாய் திறக்கும் நாள் சமீபமாயிருக்கிறது. நரகம் இப்பொழுது தன் வாயை விரிவாய் திறக்காது, புத்தியற்ற 5 கன்னிகைகள் பரலோக வாசல் வரை சென்று அதன் வாசலை தட்டிய போது தான் பரலோகம் தன் வாயினை திறக்கவில்லை . நரகமே அவர்களுக்காக தம் வாயினை திறந்துள்ளது என்று கடைசி நிமிடத்தில் தானே அறிகின்றார்கள். அதனைப் போன்றே நாங்களே மகிமையான ஊழியங்களை செய்து வருகின்றோம் என்று வாக்கியத்திற்கு வாக்கியம் மக்களை கைத்தட்டச் செய்து போலியான மகிமையை செலுத்தச் செய்து பழக்கி வருகின்றவர்கள் அனைவருமே, உலகமெங்கிலும் எங்களுக்கு கிளை சபைகள் உண்டு என்று தங்கள் மகிமையினையே பிரஸ்தாபப்படுத்துகின்ற ஊழியர்களே. தாங்களே செழிப்புள்ளவர்கள் தங்களிடம் மட்டுமே ஆடம்பரமான வாத்திய கருவிகள் உள்ளன. தாங்களே ஆரம்பரமான ஆடைகளை அணியத் தகுதியுள்ளவர்கள், தங்கள் ஊழிய மேடைகளே கண்காணா ஆடம்பரமான ஒளி ஒலி அமைப்புக்களை கொண்டது என்று அறிவித்து வரும் ஊழியர்களே, தங்களிடம் மாத்திரமே திரளான ஜனங்கள் உண்டு என்றும் தங்களாலே மட்டுமே இத்தனை திரளான கூட்டத்தைக் கூட்ட முடியும் என்று பெருமிதம் கொள்ளும் ஊழியச் செல்வந்தர்களே. தங்கள் தங்கள் ஆராதனைகளே மிகச்சிறந்தது. தங்களாலேயே இத்தனைத் திரளாய் மக்களை களிகூறப்பண்ண முடியும், நடனமாடச் செய்ய முடியும், ஆர்ப்பரிக்கச் செய்ய முடியும், 12 மணி நேர ஆராதனை 24 மணி நேர ஆராதனை என்றெல்லாம் களிகூறுதலை செய்து காண்பிக்கக்கூடும் என்று உலக சாதனை புரிபவர்களே. பெரிய பெரிய பாரம்பரிய திருச்சபைகளிலும் தங்களை தாங்களே தேவர்களாக காண்பித்து வரும் ஆயர்களே, பேராயர்களே. ஏசாயா தீர்க்கத்தரிசி கூறும் வார்த்தைகளை கவனமாய் வாசித்து அறியுங்கள். உங்கள் பாணியில் நரகம் உங்களுக்காக தம் வாயைத் திறக்கவில்லை. நீங்கள் யாவரும் மனந்திரும்பி ஆவிக்குரிய கிறிஸ்துவின் சிந்தையிலேயே காணப்பட வேண்டும் என்று இரக்கமுள்ளவராய் ஆண்டவர்தாமே நரகத்தின் வாயினை திறவாதிருக்கச் செய்து வருகின்றான். ஆனால் உங்களது தருணம் நிறைவடையும் போது, "அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது. அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும் அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப் போவார்கள்" இவ்வகை ஊழியர்களையும், ஊழியங்களையும், நரகத்திலே தள்ளிப்போடுவதினாலே சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார் என்றெல்லவா ஏசாயா தீர்க்கத்தரிசி எச்சரிக்கின்றார்
. அருமையானவர்களே நம் நாட்களும் நம் பிள்ளைகளின் நாட்களும் பூமியின்மேல் பரலோகம் இருக்கும் நாட்களைப் போன்று சதாகாலமாய்கிறிஸ்துவின் சிந்தையிலேயே, கிறிஸ்துவின் அடிசுவட்டிலேயே நடந்து கிறிஸ்துவின் வார்த்தைகளாலேயே வாழ்ந்து தேவசித்தம் மட்டுமே செய்திடுவோமாக ஆமென். தேவனே நமக்காக இருக்கின்றார், நம் மத்தியிலேயேயும் இருக்கின்றார் ஆமென்
சகோ. பிலிப் ஜெயசிங். நாசரேத் ஜெபஐக்கியம், நாசரேத்.