தேவ செய்தி - செப்டம்பர் மாதம்

ஆவியானவரும் தமது பெலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியா னவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். (ரோமர் 8:26)


இந்த வசனத்தை வாசித்து அறிந்தவர்கள் யாவருமே இதன் பொருளை இதுவரை சரியாய் உணர்ந்ததில்லை என்று தான் எண்ணுகின்றேன். ஏனெனில் இதனை வாசித் தவர்கள் புரிந்து கொண்டது, ஆவியானவர் நம் சரீர சுகவீனங்களில் பெலவீனங்களில், உலகப்பிரகாரமான குறைவுகளில் நமக்கு உதவிசெய்கின்றார் என்பதுவே. இது முற்றி லும் தவறானதே. நம்முடைய சரீர சுகவீனங்களுக்காக, பெலவீனங்களுக்காக உலகப் பிரகாரமான நம் தேவைகளுக்காக ஏன் ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுக்க ளோடு நமக்காக வேண்டுதல் செய்யவேண்டும். ஒரே ஒரு வார்த்தையினால், நம் அனைத்து சரீர பெலவீனங்களையும் ஆவியானவரால் மாற்றிவிட முடியுமே. பின் ஏன் அவர் நமக்காக வேண்டுதல் செய்து கொண்டேயிருக்க வேண்டும். இந்த வசனத்தின் உண்மையான பொருள், we are unable to pray, we don't know how to pray. நமக்கு ஜெபிக்கத் தெரியவில்லையென்பது மட்டுமே. அதுவே நமது பெலவீனம். ஜெபம் என்பது எங்ஙனம் என்பதை முறையாக கற்று, வேண்டிய பிரகாரமாக ஆண்டவரை அறிந்து வேண்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கின்றார். ஜெபத்திலே நாம் கேட்கும் ஒவ்வொரு தேவை களையும் ஆவியானவர் தேவனிடம் சுமந்து கொண்டு போய் அதற்காக வேண்டுதல் செய்கின்றார் என்றும் நாம் எண்ணிக் கொண்டிருப்போமானால், அதுவும் முற்றிலும் தவறானதே. ஆவியானவர் ஒரு செய்தி கொண்டு செல்லும் தபால்காரர் அல்ல. ஆனால் அடுத்த வசனம் (27) ஆவியானவர் ஆவியின் சிந்தை (Spiritual mind) ஐ அறிந்து தேவனுடைய சித்தத்தின்படிக்கு, மனந்திரும்பி, நீதிமான்களாக்கப்பட்ட பரிசுத்த வான்களுக்காக மட்டுமே ஆவியானவர் வேண்டுதல் செய்கின்றார் என்பது தான் உண்மையாகும். பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக் கொள்கிறவன் எவனும் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வருகின்றான். (யோவா.6:45). நம் யாவருக்கும் ஜெபிக்கத் தெரியும், ஜெபிக்கத் தெரியாதவர்கள் யாருமே கிடையாது. ஒரு தகப்பனிடம் ஒரு குழந்தை பேசுவது கேட்பது தான் ஜெபம் என்று யாவரும் அறிவோம். தேவைகளுக் காக ஏறெடுக்கும் ஜெபம் (petition Prayer) நன்றி கூறும் ஜெபம் (thanks giving prayer) ஆராதனை ஜெபம் (worship prayer) 2,3 பேர் அவருடைய நாமத்தில் கூடி ஜெபிப்பது (prayer of agreement) மன்றாட்டு ஜெபம் (intercessory prayer) இது பிறருக்கான ஜெபம் போன்ற எல்லா ஜெபங்களையும் நாம் நன்றாக அறிந்துள்ளோம். பிறர் ஒருவருடைய தேவைக்காக மன்றாட்டு ஜெபம் செய்கின்றோம் என எடுத்துக் கொள்வோம். ஒருவ ருக்கு அவசியமாய் ரூ. 10 லட்சம் தேவை, அதற்காக ஜெபிக்கின்றோம். ஆனால் ஆவியானவருக்கு மட்டுமே தெரியும் அவன் இன்னும் சில நாட்களில் மரித்து விடு வான் என்று. அப்படியானால் ரூ. 10 லட்சத்திற்கான நம்முடைய மன்றாட்டு ஜெபம் கேட்கப்படுமா? நிச்சயமாய் கேட்கப்படாதே. பின் எப்படி ஆவியானவர் அவனுக்காக விண்ணப்பம் செய்வார். கூடாதே. நீங்கள் கேட்டுக் கொள்கிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லையே என்று இயேசு கிறிஸ்து தாமே தம் சீஷர்களிடமே கூறுகின்றார். (மாற்கு 10:38) ஒரு சமயம் சீஷர்கள் இயேசு கிறிஸ்துவிடம் யோவான் தன் சீஷர்களுக்கு ஜெபம் பண்ண போதித்தது போல் எங்களுக்கும்போதியும் என்று கேட்டபோது எப்படி ஜெபம் இருக்க வேண்டும் என்று தான் கர்த்தருடைய ஜெபத்தை நமக்கு போதனையாக கொடுத்தார். (லூக்.11) ஆகையால் கர்த்தருடைய ஜெபம் (Lord's Prayer) நமது ஜெபமாக மாறிவிடக்கூடாது. இந்த ஜெபத்திலே பிதாவே என்று தான் முதல் முதலாவதாக அழைக்கின்றோம். ஆகையினால் நம்முடைய வேண்டுதல் ஜெபம் எதுவாயினும் பிதாவிடம் மாத்திரமே ஏறெடுக்கப்பட வேண்டும். சீஷர்கள் இயேசு கிறிஸ்துவிடம் பிதாவை எங்களுக்குக் காண்பியுங்கள் என்று கேட்ட போது இயேசு கூறியது என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். அவர் பிதாவிலும் பிதா அவரிலும் இருக்கிறதை விசுவாசிக்கிறதில்லையா. அப்படியில்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்து தாமே செய்து காண்பிக்கும் கிரியைகளினிமித்தமாவது கிரியைகளாகிய அற்புதங்கள் நிமித்தமாவது அவரை நம்புங்கள் என்றும் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தகிரியைகளை அற்புதங்களை செய்து வருகிறார் என்று கூறியதை யோ.14 யில் வாசிக்கின்றோம். மேலும் வசனம் 12யில் பிதாவும் இயேசு கிறிஸ்துவும் ஒன்றாயிருக்கிறதை விசுவாசிக்கிறவன், இயேசு கிறிஸ்து தாமே இவ்வுலகில் செய்த கிரியைகளை, அற்புதங்களை செய்வான். இவைகளைப் பார்க் கிலும் பெரிய கிரியைகளையும்செய்வான். வச.14யில் என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் என்று கூறியதும், அற்புதங்களை செய் வான் என்பது மட்டுமே ஆகும். இதில் ஆண்டவர் கூறியது ஜெபத்தைக் குறித்து பேசப்படவில்லையென்பதை நாம் அறிந்திட வேண்டும். ஆண்டவர் உயிர்த்தெழுந் தபின் சீஷர்களாகிய பேதுருவும் யோவானும் ஆலயத்திற்கு வரும் போது அலங்கார வாசலண்டையில் சப்பாணியாய் பிறந்த ஒருவன் வழக்கம் போல் பிச்சைக் கேட்டான். அப்பொழுது அவர்கள் அவனிடம் தங்களிடம் வெள்ளியும் பொன்னும் இல்லை என்னி டத்தில் உள்ளதை தருக்கிறேன் என்று கூறி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட என்றுகூறி கிரியையை நடப்பித்தான். யோவானும் பேதுருவும் இவனுக்காக ஜெபித்ததாக இல்லையே. ஜெபம் இல்லாமல் தாங்கள் விசுவாசித்த இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அற்புதங்களை செய்யக்கூடும் என்பதை அறிகின்றோம். நம்முடைய சகல விண்ணப்பங்களும் வேண்டுதல்களும் உலக காரியங்களுக்காக அல்ல உலக தேவைகளுக்காகவும் அல்ல நித்திய ஜீவன் வரைக்கும் நிலைத்திருக்கிற காரியங்களுக்காக கிரியைகளை, அற்புதத்தை நடப்பியுங்கள். அதை இயேசு கிறிஸ்து அளிப்பார் என்பதையே (யோ.6:27) யில் வாசிக்கின்றோம். மாற்கு 10யில் ஒரு வாலிபன் ஐசுவரியவான் ஓடிவந்து, முழங்கால் படியிட்டு நித்திய ஜீவனை சுதந்தரிக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் ஜெபித் தான். அதற்காக உலக காரியங்களுக்காக சரீர தேவைகளுக்காக ஜெபிக்கக்கூடாது என்று அல்ல. ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். தேவனுடைய சமாதானம் உங்கள் இருதயங் களையும் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும் என்பதே ஜெபத்தின் பதிலாகும். (பிலி.4:6) யோவான் ஸ்நானகன் கூறுகின்றார் (யோ.3:27) பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ள மாட்டான் என்பதே. நாம் இதுவரையிலும் உபவாச கூடுகைகளில் முழு இரவு ஜெபங்களில் மணிக்கணக்காக ஜெபித்திருக்கிறோம். ஆனால் யோ.16:24 கூறுகின்றது. இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை (வ.23) நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள் வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். (யோ.15:16) நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ அதனை நீங்கள் கனி கொடுக்கத்தக்கதாக, கனி நிலைத்திருக்கச்செய்ய கொடுப்பார். யோ.16:16 நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காக நான் பிதாவை வேண்டிக் கொள்வேன் என்றே இயேசு கிறிஸ்து கூறுகின்றார். ஆகையினால் நாம் ஜெபத்தின் மூலம் எதனையாவது பெற்றிட வேண்டுமானால் நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருந்தாக வேண்டும். (1யோ.1:3) ஆகையினால் கற்பனைகளை கைக்கொண்டு ஆண்டவருக்கு பிரியமானவைகளையே செய்தால் வேண்டிக் கொள்கிறதெதுவோ அவராலே பெற்றுக்கொள்ளப்படும். (1யோ.3:22) தேவனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் நாம் கேட்டவைகளை பெற்றுக் கொண்டோம் என்று அறிகின்றோம். 1யோ.5:15, கேளுங்கள், தட்டுங்கள், தேடுங்கள் என்ற வசனத் திலே நாம் கேட்க்கும் போது, தேடும் போது, தட்டும்போது ஆண்டவர் நமக்குத் தர விரும்புவது பரிசுத்தாவியானவரையே. அவர் பரிசுத்தாவியானவரை நம்மோடு எப்போதும் இருக்கச் செய்கிறார் என்று தான் வாசிக்கின்றோம். இதுவே ஜெபத்தினால் கிடைக்கக்கூடியது. அதுவே நமக்கு எப்பொழுதும் நன்மையாகவே (சகலவற்றோடு) இருக்கும் என்பதே (மத்.7:7, லூக்.11:13) உலக காரியங்களை அஞ்ஞானிகள் நாடித் தேடுகின்றார்கள். இவைகளெல்லாம் நமக்கு தேவையென்பதை நம் பரமபிதா ஏற்க னவே அறிந்திருக்கிறார். முதலாவது தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் தேடும்போது இவைகளெல்லாம் நமக்கு கேளாமலே கூடவே கொடுக்கப்படும் என் பதை மத்.6யில் வாசிக்கின்றோம். அஞ்ஞானிகளைப் போல் அல்லாமல் பிதாவை நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று பிதா அறிந்திருக்கிறார். மத்.6:8.


ஆண்டவர் தாமே பிரியமாய் தருகின்ற 10 காரியங்களை கேட்கின்ற அவருடைய பிள்ளைகளின் ஜெபம் கீழ்க்கண்டவாரே காணப்படும்.


ஆண்டவரே உம்மை மகிமைப்படுத்த என்னை உபயோகியும்.


என்னுடைய பாவங்களை மன்னியும்


உம்மை எனக்கு வெளிப்படுத்தும்


உம்முடைய ஞானத்தை எனக்குத்தாரும்


நான் உமக்கு கீழ்ப்படிகிறதை இன்னும் பெலப்படுத்தும்


உம்முடைய அன்பை பிரஸ்தாபப்படுத்த எனக்கு உதவும்


தெளிந்த நல் ஆவியை என் இருதயத்தில் பிரகாசிப்பிக்கச்செய்யும்


உம்முடைய சமாதானத்தை கண்டடையச் செய்யும்


என் இருதயத்தை உம் இருதயம் போன்று மாற்றும்


என் சிந்தனைகளை கிறிஸ்துவின் சிந்தையாக மாற்றும்.


நம்முடைய ஜெபத்திற்கு பதில் வரக்கூடாதபடிக்கு தடை செய்கின்ற 10 காரியங்கள்


இருதயத்தில் அக்கிரம் சிந்தை கொண்டிருந்தால் தேவன் செவிகொடார். (சங்.66:18)


வேதத்தை கேளாதபடி செவியை விலக்குகிறவனுடைய ஜெபம் அருவருப்பானது. (நீதி. 28:9)


பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார். (1பேதுரு 5:5)


மாயக்காரரைப்போல் வீணாக வார்த்தைகளை அலப்புகிறவர்களின் ஜெபம் கேட்கப்படுகிறதில்லை . (மத்.6:5)


விசுவாசமில்லாத ஜெபம் தேவனுக்குப் பிரியப்படாதே (எபி.11:6)


புருஷன் மனைவியோடு, மனைவி புருஷனோடு ஐக்கியப்படாது ஜெபிக்கும் ஜெபம் தடைபடுமே. (1பேதுரு 3:7)


விண்ணப்பம் செய்தும் சண்டையும் யுத்தமும் செய்கிறதினால் நீங்கள் சிந்திக்கிறதில்லை (யாக்.4:2)


இச்சையாய் நிறைவேற்ற தகாதவிதமாய் விண்ணப்பம் செய்கிறதினால் பெற்றுக் கொள்கிறதில்லை . (யாக்.4:3)


ஒருவர்மேல் உங்களுக்கு யாதொரு குறையிருக்குமேயானால் அதனை ஒப்புரவாகாத பட்சம் உங்கள் ஜெபம் கேட்கப்படாதே. (மாற்கு 11:25)


பரிசேயர், வேதபாரகர் என்பவர்களின் நீதியைக் காட்டிலும் நம்முடைய நீதி (Rightousness) அதிகமாயிராவிட்டால் நம் ஜெபம் கேட்கப்படாதே. மத்.5:20


கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள் என்றுதான் சங்.29:2யில் கூறுகின்றது. நாம் ஏறெடுக்கிற எந்த ஜெபமாயினும், அது கேட்கப்படாமல் போகிறதில்லை என்பதை மட்டுமே அறிந்திட வேண்டும். தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருந்து அவருடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் நமக்கு செவி கொடுக்கிறார் என்றும் அறிந்திருந்தால் நாம் கேட்டவைகளை பெற்றுக்கொண்டோம் என்று அறியவேண்டியது அவசியமே. (1யோ.5:14,15)


பரலோகத்தின் காசோலை ஒன்று நம் பெயருக்கு அதில் பெரிதான தொகை ஒன்றும் எண்ணால், எழுத்தால் எழுதப்படுகிறது (இதுவே நாம் ஜெபத்தில் நமக்காக எதிர்பார்த் தவைகள்) ஆனால் இந்த காசோலையை இயேசு கிறிஸ்து கையொப்பம் செய்ய வேண்டும். (இயேசுவின் நாமம்) இயேசுவின் நாமத்தினால் கையெழுத்துடன் எழுதப்பட்ட காசோலை பரலோக வங்கியில் (பிதாவின் கணக்கில்) அங்கிகரிக்கப் படுகிறது. இதுவே ஜெபமாகும். இயேசு கிறிஸ்து நம்முடைய உண்மையையும் உத்தமத்தையும் நம்பி காசோலையில் கையொப்பம் இடுகின்றார். நாம் அவர் நம்பிக்கைக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் சிந்தையை அறியாமல் நாம் அவரிடம் வேண்டுதல் செய்துவிடக்கூடாது. அது ஆண்டவரை காயப்படுத்திவிடுமே. தேவனுடைய சித்தத்தை அறியாவிட்டால் ஆண்டவரின் சித்தத்தை அறிவதற்காவது, ஆண்டவரை வேண்டிட வேண்டுமே. ஜெபம் என்பது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அளித்துள்ள சொத்து, சுதந்தரமே. இதுவே பரலோகத்தின் வாசலின் திறவுகோலும் ஆகும். ஜெபம் தம் பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் அதிகாரமும் ஆகும். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர் களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும் ஆகையினால் ஜெபத்திலே அதிகாரத்தையும் நித்திய ஜீவனுக்கடுத்த போஜனத்தையும் (ஆசீர்வாதங்களை) நிறைவாய் பெற்றிடுவோமாக ஆமென்.


         சகோ. பிலிப் ஜெயசிங். நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத்