Editorial - August, 2019

ஆசிரியர் மடல்....,


கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த சத்திய வெளிச்சம் வாசகர்களுக்கு,


       இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். காலங்கள் வேகமாக உருண்டோடி போய்க் கொண்டிருக்கின்றன. கடந்தவைகள் கடந்தவைகளே. கடந்த காலங்கள் நமக்கு திரும்ப வரப்போவதே யில்லை. ஆகையினால் ஒவ்வொரு காலங்களையும், பிரயோஜன முள்ளதாக பயன்படுத்தி வருவோமானால், அதுவே தேவனுக்குப் பிரியமானதாயிருக்கிறது என்று எபி.13:16யில் வாசித்தறிகின்றோம். நன்மை செய்யவும், தான தர்மம் பண்ணவும் மறவாதீர்கள் இப்படிப் பட்டவைகள் தேவனுடைய பார்வையில் நாம் தேவனுக்கு செலுத்தும் பலிகளாகும் என்றும் இவைகளிலே தேவன் பிரியப்படுகின்றார் என்றும் எழுதப்பட்டுள்ளதை அறிகின்றோம். ஆனாலும் இதிலும் மேலானதாக கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க் கிலும் சர்வாங்க தகனங்களும், பலிகளும் கர்த்தருக்கு பிரியமாயிருக் குமோ? பலிகளைப் பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமமே என்று தானே 1சாமு.15:8யில் வாசிக்கின்றோம். ஆகையினால் நாம் நம்மு டைய வாழ்க்கையை, காலங்களை, நாட்களை தேவனுக்குப் பிரியமானதாக மாற்றி அமைத்திடவே தேவன் நம் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கின்றார். அதனால் நாம் தேவனுடைய வார்த்தைகளுக்கு, சத்தத்திற்கு செவிகொடுத்தும், அதன்படிக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து காட்டிடுவதே உத்தமமும் ஆகும் என்பதை அறிகின்றோம்.


       திவ்விய சீஷனாகிய யோவான் கடைசியாக பத்முதீவிலே வாசஞ் செய்யும் நாட்களில் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட விசேஷ பகுதியாக தேவனுடைய வசனத்தைக் குறித்தும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும் தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவிக் கின்ற போது இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும் இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிற வர்களும் பாக்கியவான்கள். காலம் சமீபமாயிருக்கிறது என்று நம் யாவரையும் எச்சரித்துள்ளார். மேலும் அவர் தனது முதல் மூன்று அதிகாரங்களிலே ஏழு முறையாக ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றும் எச்சரித்துள் ளார். சபைகள் என்பது நீங்களும் நானும், நாமுமே ஆகும். நம் இருதயமே தேவனுடைய ஆலயம். நமக்குள்ளே தேவன் வாசஞ்செய் கின்றார். இன்று உலகில் காணும் பிரபலமான சபைகள் எதுவும் இதிலே குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மை . இவற்றிலே குறிப்பிடப்பட்ட ஏழு சபைகள் என்பது இன்று நாம் வாழும் வாழ்க்கையின் ஏழு வகையான தராதரத்தினையே குறிப்பிட்டு இந்த ஏழு சபைகளிலே காதுள்ளவர்கள் கேட்கக்கடவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது என்பதை யும் அறிந்திடுவோமாக. இந்த ஏழு எச்சரிப்புக்களோடு வேதாகமம் நிறைவடைகின்றது. வெளிப்படுத்தின விசேஷம் 4ஆம் அதிகாரத்திற்கு பின்பு  22 ஆம் அதிகாரம் வரையிலும் சபை என்று எதுவும் குறிப்பிடப் படாமல் சபை என்ற வார்த்தை மறைந்திடுவதின் காரணம் என்ன? தேவனுடைய இரகசிய வருகையிலே பூமியிலிருந்து தேவனுடைய சபையாகிய நாம் தேவனோடு எடுத்துக்கொள்ளப்பட்டபின் பூமியிலே சபை என்பது கிடையாது என்பதே உண்மை . இரகசிய வருகையிலே சபை பூமியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டபின் பூமியிலே, பரலோகிலே நடைபெறயிருக்கின்ற சம்பவங்களையே திவ்விய யோவான் வெளிப்படுத்தின விசேஷம் 4ஆம் அதிகாரம் முதலாய் எழுதி நிறைவு செய்கின்றார். இவ்வதிகாரங்களிலே இரகசிய வருகைக்கு பின்பாக நடைபெறயிருக்கும் அந்திகிறிஸ்துவின் ஆட்சி, 1000 வருட கால ஆட்சி, உபத்திரவகாலம், மகா உபத்திரவகாலம் பற்றிய செய்திகள், இறுதியாக வலுசர்ப்பமாகிய சாத்தான் அக்கினி கடலிலே தள்ளப்படுதல், அதே சமயம் பரலோகத்திலே ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம், நித்திய நியாயத்தீர்ப்பு ஆகியவைகளை அறிகின்றோம். இவற்றிலே மனிதர்களாகிய நாம் எதுவும் செய்யக்கூடாது. ஆனால் சபையாக நாம் பூமியிலே காணப்படும் போது நாம் ஆண்டவருக்கு பிரியமுண்டாக அநேகவற்றை செய்யக்கூடுமே.


       தேவனுடைய இரகசிய வருகையிலே தேவனுடைய சபையாக எடுத்துக்கொள்ளப்படுவோர்களுக்கு, அதற்கு பின்பாக பூமியிலே நடைபெறயிருக்கும் சம்பவங்களைப் பற்றி அறிந்து, அதனை ஆராய்ச்சி செய்வதன் அவசியம் என்ன? 365 நாட்களும் 24 மணி நேரமும் இச்சம்பவங்களைப்பற்றி மட்டுமே கூறிவரும் டிவி சேனல் நமக்குத் தேவையா? உபத்திரவ காலம் பூமியிலே எப்படியாக இருந்தாலும் சபை இங்கு இல்லையே. மகா உபத்திரவ காலம், மிருகத்தின் ஆட்சி, 666 முத்திரைபற்றிய விபரங்கள் யாருக்குத் தேவை. இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மக்களுக்கு இது அவசியமே. அதனால் இரகசிய வருகையில் சபையாக எடுத்துக் கொள்ளப்பட அவசியமானவைகளைப் பற்றி மட்டுமே அறிவிக்கின்ற டி.வி. சேனல் கள், ஆராய்ச்சி கூடுகைகள் ஏன் இந்நாட்களில் அறிமுகப்படுத்தப் படுவதில்லை. உபத்திரவ கால துன்பங்களை கேட்டு அறிந்தால் தான் அதற்கு தப்பித்துக் கொள்ள வகைதேட அவசியமாகின்றதோ? இது தேவனுக்கு பிரியமில்லாததே ஆகும். உண்மையான தேவ அன்பினை அறிந்தவர்களுக்கு ஆண்டவரின் சத்தத்திற்கு செவி சாய்த்து வாழ்கின்றவர்களுக்கு இந்த பயமுறுத்துதல் தேவையில்லையே. இவைகளை அறிந்திடாமலே தேவனைப் பற்றியும் அவருடைய ராஜ்யத்தைப் பற்றியும் மட்டுமே அறிந்து வாழ்கின்றவர்கள் மட்டுமே தேவசபையின் மக்களாவர். தேவனுக்குப் பிரியமுண்டாக எங்ஙனம் வாழ வேண்டும் என்று பிரசங்கிக்கின்றவர்கள் எங்குமே இல்லையே.


       ஆனால் மாறாக இன்று உலகமெங்கிலும் பிரசங்கிக்கின்றவர் களெல்லாருமே, பெரும்பாலோர் வேறொரு இயேசுவையே, வேறொரு ஆவியையே, வேறொரு சுவிசேஷத்தையே பிரசங்கிக்கின்றார்கள்.


       இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்கும் போது, அவர் பாவங்களை மன்னிக்கிறவர் என்று மட்டுமே அறிவிக்கப்படுகின்றார். அவர் பாவங்களில் ஜெயம் உள்ள வாழ்க்கையை அளிக்கிறவர் அவர் நம் பாவங்களை மன்னித்து அவற்றினின்று நம்மை இரட்சிக்கிறவர் என்று பிரசங்கிப்பதில்லையே.


       ஆவி, அபிஷேகம் என்று பிரசங்கிக்கின்றவர்கள் ஆவியினால் சரீரங்கள் ஆடி நடுங்குவதையும், உதடு துடிப்பதையும் குதித்து நடனமாடுவதையும், வாய்விட்டு சிரிப்பதையும், சத்தமிடுவதையும், நாவு உளறி பேசுவதையே முக்கியப்படுத்துகின்றார்கள். ஆவியானவர் பரிசுத்தமானவர் Holy spirit அவர் அனைவரையும் பரிசுத்தமாக்குகின் றவர், பரிசுத்தமில்லாமல் அவரை தரிசிக்கக்கூடாது என்று பிரசங்கிப் பதில்லையே. (He is Holy spirit. He is not shaking spirit or noisy spirit)


       சுவிசேஷத்தை பிரசங்கிக்கின்றவர்களும் இவ்வளவு சீக்கிரமாய் வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி ஆச்சரியப்படுகி றேன் என்று பரி. பவுல் கலா.1:7யில் கூறியதைப் போன்று இயேசுவின் கிரியைகளைப் பற்றி மட்டுமே பிரசங்கிக்கின்றார்களே தவிர, இயேசு கிறிஸ்து தாமே பாவமே அறியாதவர். அவர் பரிசுத்தர் ஆவார். நமக் காகவே நம் பாவங்களையெல்லாம் தன்னிலே ஏற்று, பாவியானார் அவராலே நாம் பாவங்களிலிருந்து மீட்கப்படுகின்றோம், இரட்சிப் பினை அடைகின்றோம் என்றும் பிரசங்கிப்பதில்லையே. ஆண்டவரின் கிரியைகளாகிய இயேசு சுகமாக்குகிறார், இயேசு விடுவிக்கிறார், சப்பாணிகள் நடக்கிறார்கள், குருடர்கள் காண்கிறார்கள், என்று வேறொரு இயேசுவை மட்டுமே பிரசங்கிக்கின்றார்களே. இவர்கள் ஒருபோதும் தேவன் விரும்பும் சபையாக மாறிடுவதில்லையே. அதனால் இரகசிய வருகையிலும் கைவிடப்படுகின்றவர்களே ஆவர்.


       இன்று பெரும்பாலான ஊழியர்கள் உலகிலே உபத்திரவகாலம் தொடங்கி விட்டது என்றும் அந்தி கிறிஸ்துவின் அரசாட்சி ஆரம்பமாகி விட்டது என்றும் தவறுதலாய் பிரசங்கித்து வருகின்றார்கள். அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு இப்பொழுது தடை செய்யப்பட்டிருக் கிறது (Interim Stay) ஆனாலும் அவனுடைய கிரியைகள், அந்தி கிறிஸ்து வின் ஆவி, சாத்தானின் செயலின்படி சகல வல்லமையோடும், அடையாளங்களோடும், பொய்யான அற்புதங்களோடும் கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத் தோடும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை 11தெச.2 யில் வாசிக்கின்றோம். கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும், விசுவாச துரோகம் நேரிடும் மனுஷர்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கின்றவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகிவிடு என்று 11தீமோ.3யில் எழுதப் பட்டுள்ளதையும் வாசித்தறிந்திடுவோமாக.


       இயேசுகிறிஸ்து தாமே கூறிய போது நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும் என்பதாகும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள் வரைக்கும் ஜனங்கள் உபத்திரவங்களை காணவில்லையே. புசித்து, குடித்து, வெறித்து சந்தோஷித்த நாட்களில் தானே ஜலப்பிரளயம் வந்தது. மேலும் நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் போதும் ஜலபிரளயம் காணப்படவில்லையே. ஜனங்களின் பாவ சந்தோஷத்தினுடையே ஜலபிரளயம் உருவாகியது. இதுபோன்றே ஆண்டவரின் இரகசிய வருகை காணப்படும். உபத்திரவங்களுக்குள் அகப்படக்கூடாமலே தேவனுடைய சபையானது எடுத்துக்கொள்ளப்படும் என்பதே உண்மை.


       நோவா 120 வருடங்களாக பிரசங்கித்தும் ஜனங்கள் எவரும் மனந்திரும்பினதில்லை. இன்று மனந்திரும்புதலின் செய்தி கொடுக்கப்படுவதேயில்லை. அன்று நோவாவின் இரட்சிப்புக்கு, பேழை ஆயத்தமாக்கப்பட்டது போன்று இன்று மனுமக்களின் இரட்சிப்பு சிலுவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் அறிந்தும் அறியாத வர்களாகவே வாழ்ந்து வருகின்றார்களே. ஜனங்கள் அன்று போல் இன்றும் குடித்து, வெறித்து, புசித்து, கொண்டாடிவருகின்றார்களே. அன்று ஜலப்பிரளயம் வரும்வரை இருந்த நிலமையே இன்றும் மக்களிடையே தேவனுடைய இரகசிய வருகை (Rapture) வரை காணப்படுகின்றதாய் உள்ளதே. ஜலப்பிரளயம் வரும் முன்பே நோவா பேழைக்குள் நுழைந்துவிட்டதைப் போன்று நாமும் தேவனுடைய வருகைக்கு முன்பாக இரட்சிப்பை அடையப்பெற்றிடவேண்டும். ஆகவே இன்றே நாம் யாவருமாய் இரட்சிப்பாகிய பேழைக்குள் நுழைந்திடுவோமாக.


       அன்று தேவன் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திற்கு விசனமாயிருந்தது. இன்று கர்த்தர் விசனப்படாதிருக்க கூடுமோ? நோவா பேழைக்குள் சென்ற பின்பு தான் ஜலபிரளயம் உண்டாயிற்று. மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண் டன. 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின் மேல் பெருமழை பெய்தது. இவைகள் எதுவும் நோவாவை பாதிக்கவில்லையே. இது போன்றே உபத்திரவங்களை வருகையின் போது எடுக்கப்படும் சபை அனுபவித்திடாதே. மனந்திரும்பி வாழும் வாழ்வை மக்கள் பைத்தியம் என்று பரிகசித்தாலும் நாம் தேவனுடைய சத்தத்திற்கு வார்த்தை களுக்கு செவிசாய்த்தல் மட்டுமே தகும் என்பதை உறுதியாய் அறிந்து ஆண்டவரையே இன்று நாம் அண்டிடுவோமாக. இரட்சிப்பாகிய பேழைக்குள் நுழைந்திடுவோமாக. காதுள்ளவர்களாய்தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படிக்கே செய்கின்றவர்களாய் இரகசிய வருகையில் எடுக்கப்படும் சபையாக காணப்படுவோமாக. ஆமென்.


                                                        ஆசிரியர்