God's Message July 2019

சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம் பண்ணுங்கள்.       ஏசாயா 8:13


                   நம் சேனைகளின் கர்த்தரை நாம் பரிசுத்தம் பண்ணக்கூடுமோ?


                   லேவி 10:3 கூறுகின்றது என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று தேவன் தாமே கூறிய சம்பவத்தில் அந்நிய அக்கினி பட்சிக்கப்பட்டதால் தேவன் பரிசுத்தர் என்று காண்பிக்கப்பட்டார். ஆசாரியன் தகுதியற்றவனாய் தூபவர்க்கத்தை தேவனிடம் கொண்டு வந்ததினால் அவன் செத்து மடிகையில் தேவனின் மகிமை வெளியாகினது. ஆனால் இக்காலத்திலே எல்லா ஆவிக்குரிய கூடுகைகளிலும் பேரின்ப பெருவிழாக்களிலும் ஆண்டவரை கைதட்டி மகிமைப்படுத்துங்கள் என்று அழைக்கும் கூற்று எங்கும் இன்று ஒரு வைரலாக பரவியுள்ளது. கைத்தட்டுதல் ஒருபோதும் தேவனை மகிமைப்படுத்தமுடியாது. சாபத்தீடானவைகளை திருடி, வஞ்சித்து வைத்த ஆகானைப் பார்த்து யோசுவா கூறுகின்றார். நீ செய்த பாவங்களை தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்து கர்த்தரை மகிமைப்படுத்து என்கிறார். இங்கே தேவ துரோகங்களை வெளிப்படுத்தி அறிக்கை செய்யும் போது தேவன் மகிமைப் படுகின்றார். பார்வோனின் சேனை சிவந்த சமுத்திரத்தில் மூழ்க்கடிக்கப்படுகையில் ராணுவத்தால் தேவன் மகிமைப்பட்டார். கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரால் பிடிக்கப்பட்டபோது கர்த்தரின் மகிமை இஸ்ரவேலரை விட்டு விலகிற்று என்று தானே வாசிக்கின்றோம். தாவீது ராஜா ஜெபிக்கையில் கர்த்தாவே மாட்சிமையும், வல்லமையும், மகிமையும், ஜெயமும், மகத்துவமும் உம்முடையவைகள் (நாளாகமம் 29:11) என்று ஜெபிக்கின்றார். ஏசாயா தீர்க்கத்தரிசி கூறுகின்ற போது (ஏசா 60:21) நீதிமான்கள் ஆண்டவரை மகிமைப்படுத்தும் படி அவர் கரங்களின் கிரியைகளுமாயிருக்கிறார்கள் என்று. ஆனால் இன்று பிரபலமான ஊழியர்கள், விசுவாசிகள் பலர் (யோவா.5:44) தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல் ஒருவரிலொருவர் மகிமையை ஏற்றுக் கொள்ளுகிறவர்களாயிருக் கிறார்கள் என்ற துக்கரமான செய்தியை இவ்வசனத்தில் வாசிக்கின்றோமே. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் நம்மை நாள்தோறும் ஆராய்ந்து பாவங்களற சுத்திகரிக்கையில் நமக்கு முன்பாக தேவன் பரிசுத்தமாக்கப்பட்டவராக நெருங்கி நெருங்கி வருகின்றார் என்ற உண்மையை  அறிந்துணர்ந்திடுவோமாக. ஆரோன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்கையில் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை அவன் சுமக்கின்றான் என்று தானே யாத்.28:38யில் வாசிக்கின்றோம். (Sin in Holy activities, sin in Holy things) அந்த ஸ்தலம் ஆண்டவரின் மகிமையினால் பரிசுத்தமாக்கப்படுகின்றது (யாத். 29:43) ஆகையால் மகிமையும், பரிசுத்தமும் ஆண்டவருடையது. அவர் மகா பரிசுத்தர். பாவமே அறியாதவர். அசுத்தத்தை அக்கினியாய் பட்சிக்கிறவர். அவரண்டையில் அசுத்தம், பாவம் எதுவும் நெருங்கிடக்கூடாதே. தேவன் ஒருபோதும் நீதிமானை துன்மார்க்கனோடு சங்கரிப்பதும் இல்லையே (ஆதி.18:25).


நாம் தேவனுக்கு மிகவும் பயப்படுகின்றோம். ஏன்? பாவங்களில் நிலைத்திருக்கும். பாவிகளுக்கு தேவன் அளிக்கும் நியாயத்தீர்ப்பு மிகவும் பயங்கரமானதே. ஆண்டவர் தம் நீதியை தம்முடைய பரிசுத்தத்திற்கு ஏற்பாகவே விளங்கப்பண்ணுகிறார் ஏசாயா கூறுகின்றார் 6:16ல் சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து பரிசுத்த முள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குகின்றார். ஆகையால் (ஏசாயா 8:13) சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம் பண்ணுங்கள். அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.


இன்று புறஜாதி மக்களால், தேவனை அறியாத ஜனங்களால் தேவன் ஒருபோதும் மகிமை கேடடைவதில்லையே. ஆண்டவரை அறிந்துள்ளேன், கண்டுள்ளேன் என்று கூறி ஊழியங்களை செய்து வரும் ஊழியர்களாலேயே, விசுவாசிகளாலேயே தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட்டு வருகின்றது. புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக தேவன் தம் நியாயத்தீர்ப்பினை வெளிப்படுத்துகையில் அவர்களினால் தேவன் பரிசுத்தம் பண்ணப்படுகிறார் என்றும் இதனால் கர்த்தரே தேவன் என்றும் புறஜாதியினர் அறிவார்கள் என்பதினை எசே.36:23யில் வாசிக்கின்றோம். இதுவே கர்த்தர் நேசிக்கும் பரிசுத்தம் ஆகும். (மல்.2:11) ஆகையால் கர்த்தர் பரிசுத்தராயி ருக்கிறது போல நாமும் அவருக்கேற்ற பரிசுத்தவான்களாய் மாற நாம் எச்சரிக்கை செய்யப்படுகின்றதையும் லேவி.20:26யில் வாசிக்கின்றோம். ஆனால் இக்கா லத்திலே, கிறிஸ்தவர்களுக்குள்ளே, விசுவாசிக்களுக்குள்ளே, ஊழியர்களுக்குள்ளே, ஆயர்களினால், பேராயர்களினால், பல பாஸ்டர்மார்களினால் ஆண்டவர் பரிசுத்த குறைச்சல் அடையப்பட்டவராகின்றார். அன்னார்களின் செய்கைகளுக்குத்தக்க நியாயத்தீர்ப்பு இப்பொழுது கிடைக்கப்பெறவில்லை. இதனால், ஊழியர்கள் செய்யும் பாவங்களை பாவங்கள் என்று அன்னார்கள் கருதுவதேயில்லை. தன் மனைவிகளை விட்டு பிரிந்து ஊழியங்களை செய்யும் ஊழியர்களே இன்று பிரபலமாகி வருகின் றார்கள். பொய்களை, தீமைகளை, உண்மைக்கும் நீதிக்கும் விரோதமானவைகளை தைரியமாய் செய்கின்றார்கள். குடியை, சாராயத்தை விட்டு விடாமல் தானும் பக்திமான் என்றும் எனக்கும் பரலோகம் உண்டு என்கிறார்களே. ஆலயத்திலே தேவனைப் போல காண்பித்தும் வருகின்றார்கள். தெய்வபயம் என்பதே இல்லை. வேசித்தன ஆவியிலிருந்து விடுதலையடையாது அந்நிய பாஷை பேசுகின்றார்களே.


இவர்கள் பிரசங்கிப்பது வேறொரு சுவிசேஷமே. இவர்கள் காண்பிப்பது வேறொரு இயேசுவையே என்று அறிந்திடுவோமாக. இந்த வகையான ஊழியக்காரர்கள் யாவருமே அந்திகிறிஸ்துவினால் பிடிக்கப்பட்டவர்களே ஆவர். வேதாகம சுவிசேஷம் என்பது என்ன? வேறொரு சுவிசேஷம் என்பதும் என்ன? (கலா. 1:6,7) வேதாகம சுவிசேஷத்திலே ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் உண்டு. இரண்டும் கலந்ததே சுவிசேஷம் ஆகும். நல்ல செய்தி, இயேசு பாவங்களை மன்னிக்கிறார். பாவிகளை இரட்சிக்கிறார் என்பதாகும். கெட்ட செய்தி நீங்கள் பாவிகள். உங்கள் தாய் உங்களை பாவத்தில் கர்ப்பம் தரித்திருக்கிறாள். நாம் யாவரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானோம் என்பதே. கேட்கிறவர்களுக்கு இது கெட்ட செய்தியாக தோன்றுகிறது. இதனை கேட்க மக்கள் விரும்புவதில்லை. இதனால் ஊழியர்கள் இதனை முக்கியப்படுத்துவதில்லை. இதுவே கெட்ட செய்தி. இந்த கெட்ட செய்தியே நல்ல செய்தியை பெற்றிடச் செய்கின்றது என்பதே உண்மை. இந்த கெட்ட செய்தியினாலேயே நல்ல செய்தியின் உண்மை தன்மையை நாம் அறிய ஊக்கமடைகின்றோம். இந்த கெட்ட செய்தியினால் அறிமுகப்படுத்தப்படாத எல்லா நல்ல செய்திகளே வேறொரு சுவிசேஷமாகும். இன்று சுவிசேஷம் கூறுவதற்கு பதிலாக நல்ல செய்திகள் மட்டுமே உலகமெங்கிலும் பிரசங்கிக்கப்பட்டு வருகின்றன. இயேசு குணமாக்குகிறார். இயேசு அற்புதங்கள் செய்கின்றார். இயேசு நல்லவர், இயேசுவின் இரக்கம், கிருபை, அன்பு, தயவு மட்டுமே சுவிசேஷம் என்று அறிவிக்கப்பட்டு வருகின்றது. இவைகள் சுவிசேஷம் ஆகாது. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்திகள் மட்டுமே. இந்த நல்ல செய்திகளை சுவிசேஷம் என்று கூறுவோமானால் அது வேறொரு சுவிசேஷமே. கிருபையை பெற்று இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்றவர்கள் இவ்வளவு சீக்கிரமாய் சுவிசேஷம் அல்லாத வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகின்றதைப் பற்றி ஆச்சரியப்படுகிறேன் என்று பரி. பவுல் கலா.1:6யில் கூறியுள்ளாரே. வேறொரு சுவிசேஷம் என்பது கிடையாது. இவர்கள் கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல என்றும், அவர் (பரி.பவுல்) பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனானாவது வேறொரு சுவிசேஷத்தை பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என்றுதானே வசனம் 7,8யில் பரி. பவுல் கூறியுள்ளார். பரி. பவுல் இதுவரையிலும் தம் வார்த்தையினால் எவரையும் சபித்தது இல்லை. ஆனால் வேறொரு சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் எந்த ஊழியக்காரனானாலும் அவன் சபிக்கப்படக்கடவன் என்று கூறியதால் சுவிசேஷம் பற்றி நாம் சரியாய் அறிந்திட வேண்டும்.


இன்று உலகமெங்கிலும் கெட்ட செய்தியாக கருதப்படும் பாவங்களை அறிக்கை செய்தல், பிறரோடு ஒப்புரவாகுதல், சத்துருவை சிநேகித்தல் இல்லாவிடில் நமக்கு நரகம் ஆக்கினை நியாயத்தீர்ப்பு நிச்சயம் உண்டு என்பதும், தேவசித்தம், தேவன் விரும்பும் பரிசுத்தம் பெறுதல் வேண்டும் என்பதும் கிரியைகளுக்கு தக்க பெலன் உண்டு என்பதும் போன்ற காரியங்களை யாரும் இன்று பிரசங்கிப்பதில்லையே. ஏன் இவைகளை கேட்க மக்கள் விரும்புவதில்லை. ஆண்டவர் இரக்கம் உள்ளவர், அன்பு உள்ளவர், கிருபை உள்ளவர் என்று ஆண்டவரின் மன உருக்கத்தை மட்டுமே உருகி உருகி பேசி உருகி உருகி ஜெபித்து மக்களை கவர்ச்சி செய்யும் ஊழியர்களே இன்று பெருகி வருகின்றார்கள். அவரவர்கள் மனம் உடைந்து தம் தம்மை தாழ்த்தி இருதயம் நொறுங்கி பாவங்களை ஒவ்வொன்றாய் அறிக்கை செய்யும் ஜெபங்களை மட்டுமே ஆண்டவர் கேட்கின்றவராயிருக்கிறார். ஆனால் இன்று பெரும்பாலான ஊழியர்கள் மக்களின் பாவங்களுக்காக அவர்களை அறிக்கை செய்ய அனுமதியாமல் மக்களின் சார்பில் தாங்களே உருக உருக கதறி உருகி உருகி ஜெபிக்கும் ஜெபத்தை எந்த ஊழியக்காரன் ஏறெடுத்தாலும் ஆண்டவர் அங்கிகரிப்பதில்லை. கேட்பதும் இல்லையென்பதே உண்மை . ஆனால் அவ்விதமாய் ஜெபித்த ஊழியர்களையே ஏற்றவர்களாய் மக்கள் அந்த ஊழியர்கள் மீது திருப்தியடைகின்றார்கள். இவர்களே கூலிக்கு மாரடிக்கிறவர்கள் ஆவர். இவர்கள் ஜெபித்து முடித்ததும் ஜெபங்கள் கேட்கப்பட்டது ஆண்டவர் பதில் அளிக்கின்றார் என்றும் அறிவிக்கப்படுமானால் இந்த உருக்கமான ஜெப விண்ணப்பங்களைக் கேட்டது கல்வாரியில் மரித்து உயிரோடெழுந்த கிறிஸ்து அல்ல என்றும் அற்புதங்களை மட்டும் செய்து கொண்டிருக்கும் வேறொரு கிறிஸ்துவையே இவர்கள் ஆராதிக்கின்றனர் என்ற உண்மையை அறிந்துணர்ந்திடுவோமாக. மனுஷரை பிரியப்படுத்துகிறவன் எவனும் தேவனுடைய ஊழியக்காரன் அல்லவே (கலா.1:10)


தேவன் தம்முடைய இறுதியான நியாயத்தீர்ப்பு நாளிலே இரண்டு சாட்சிகளை அழைக்கின்றார். சங்.50:4 உயர இருக்கும் வானத்தையும் பூமியையும் கூப்பிடுவார். அன்றைய நாளில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பலியினாலே அவரோடு உடன்படிக்கை பண்ணின அவருடைய பரிசுத்தவான்களை அவரோடு கூட்டுங்கள் என்பார். பரிசுத்தவான்களின் ஜெபங்கள், விண்ணப்பங்கள், பாவ அறிக்கைகள் நீதிமான்களின் கதறுதல், வேண்டுதல்கள், வானத்திலிருந்து சாட்சியாய் கேட்கப்பட்டு பதிலளிக்கும். ஆனால் துன்மார்க்கனின் செய்கைகளோ தரையிலிருந்து பூமியி லிருந்து கூப்பிடும். அவன் சிந்தப்பண்ணின சகோதரனின் இரத்தம் பூமியிலிருந்து கூப்பிடும். அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டு, தரையிலிருந்து பேசுவாய். உன் பேச்சு பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப் போல் தரையிலிருந்து முறுமுறுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும். ஏசா.29:4.  இவர்களே வேறொரு சுவிசேஷத்தை அறிவிக்கும் ஊழியர்களாவர்.


ஒரு மனிதன் தன் சபைபோதகரிடம் சென்று தான் அதிகமாய் நேசித்த தன் நாய் செத்து விட்டது அதற்கு அடக்க ஆராதனை செய்ய வேண்டும் என்று கேட்டானாம். அதற்கு அந்த ஆவிக்குரிய சபையின் போதகர் நாய்களுக்கெல்லாம் நான் ஆராதனை நடத்துவதில்லை . அதற்கான போதகர்கள் தெருவில் அதிகம் பேர் இருக்கின்றார்கள் அங்கே செல் என்றாராம். உடனே சரி என்று சொல்லி புறப்பட இருந்த அந்த மனிதன் எனக்கு குழந்தையில்லை, நாயையே குழந்தையாக இருந்தது. இதனை அடக்கம் செய்யும் ஊழியருக்கு 1 லட்சம் டாலர் கொடுக்க உள்ளேன். சரி வேறு போதகரிடம் போகிறேன் என்றானாம். இதனை கேட்ட இந்த போதகர் இவனிடம் நில், போகாதே உன் நாய் உன் குழந்தையாக இருந்தது, இது ஒரு கிறிஸ்தவ நாய் என்று ஏன் முதலில் என்னிடம் கூறவில்லை.  நான் ஆராதனை நடத்துகிறேன் என்று நடத்தினாராம். இவர்களே வேறொரு சுவிசேஷகர்களாவ.ர் இவர்கள் போன்றோரே வேறொரு சுவிசேஷத்தையும் வேறொரு இயேசுவையும் பிரசங்கிக்கின்றவர்களாவர். உலகமெங்கிலும் நாய்களின் ஆராதனையே மனந்திரும்பாத கிறிஸ்தவர்களிடையே இன்று சபைகளில் நடத்தப்படுகின்றன என்பதை அறிந்திடுவோமாக. இவர்கள் போன்றோரே இன்று உலகமெங்கிலும் பெருகி வருகின்றார்கள். இதுவே கடைசி நாட்களின் அடையாளமுமாகும்.


இப்படிப்பட்ட ஊழியங்களும் ஊழியர்களும் பெருகியுள்ள இக்காலத்தில், ஆண்டவரும் இக்காலத்திற்கு ஏற்ப தம் நியாயத்தீர்ப்பின் நீதியை மாற்றியுள்ளார் என்றோ , அவர் பட்சிக்கிற அக்கினி அல்ல பராமரிக்கிறவர் என்று அவரை அழைப்பதினாலேயோ சேனைகளின் தேவனாகிய கர்த்தர் மாறியுள்ளார். இது கிருபையின் காலம் என்று பேசப்படுவதை கேட்டு அருமையான சகோதர சகோதரிகளே வஞ்சிக்கப்பட்டுவிடாதீர்கள். தேவனின் ஆக்கினை தீர்ப்புக்கு எதிராக எவரும் நிற்க கூடாது என்ற தேவ நீதியை இன்றே உணர்ந்திடுவோமாக. நீதியை அறிந்தவர்களே என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே எனக்கு செவிகொடுங்கள் (ஏசாயா.51:7) தேவன் பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு நீதி, புதிய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு நீதி என்று தன்னை மாற்றிக் கொள்பவர் அல்ல. அவர் எக்காலத்திற்கும் மாறாதவரே அவர் நீதியிலும் உண்மையிலும் பயங்கரமானவரே அவரிடத்தில் பட்சபாதமில்லை . ஆகையால் இன்று தானே இயேசு கிறிஸ்துவை நம் சொந்த மூத்த சகோதரனாக பாவித்து அவரிடத்திலே கிட்டிச் சேர்ந்திடுவோமாக அவர் தம்மிடம் பாவியென்று தம்மை அறிக்கை செய்து வருவோரை ஒருபோதும் உதறி தள்ளிவிடுவதில்லையே. மனந்திரும்பும் ஒவ்வொருவர் மீதும் அவர் மிகவும் அதிகமாய் பிரியமுள்ளவராகவே இருக்கின்றார். அவரே நம் இரட்சகர். நம் தேவன். ஆமென்.


சகோ. பிலிப் ஜெயசிங்.         


நாசரேத்  ஜெப ஐக்கியம், நாசரேத்  628617,


தூத்துக்குடி மாவட்டம்